முன்னுரை
எல்லாம்வல்ல பரம்பொருள் எம்பெருமான் முருகன் திருவருளால்
அடியேனுடைய 82 ஆம் அகவை நிறைநாளன்று வெளியாகவிருக்கிறது,
"மகேந்திரபுரப்பரணி " என்னும் செந்திப்பதி புரக்கும் செவ்வேளின் சீரிய
வரலாற்றுப்புராணமாம் பரணிக்காப்பியம். ஒவ்வொரு ஆண்டும் முருக
வழியிலே சிறந்த சான்றோர் ஒருவர் , இந்த ஆண்டு இதைப்பாட்டுங்கள்"
என்று தலைப்பைக் கூறுவார். அதையே முருகன் வாயமொழியாகக்
கொண்டு, நானும் முருகன் பெருமை பேசுவேன். இந்த ஆண்டும் ,எனது
மாணவனும், சிவபக்தவிலாசம்" என்னும் அமைப்பின் ஆக்கத்தலைவனுமான
ஜி .சேகர் . கொடுத்த தலைப்பு , "பரணி பாடுங்கள்" என்பது.
அதையொட்டியே நானும் திருச்செந்தூர் முருகனின் பெருமைகளை,
இந்நூல் வாயிலாகப் பேசலாம் என்ற எண்ணத்திலும், முருகன் பெருமையை
எங்கும்,எதிலும்,எப்படியும், படைக்கலாம்" என்ற உயர் நோக்கத்துடன் இந்த
நூலைத் தொடங்கினேன்; நூலின் பெருமை முருகன்; நூலின் யாப்பு முருகு ;
நூலின் வருணனை சரவணம்; நூலின் கருத்து முருகன்; என்று மனத்தில்
கொண்டு படைக்க முனைந்தேன்; படைத்தேன், என்று சொல்வதைவிட
படைக்கவைத்தான் ஆறுமுகன் என்பதே உண்மை.
பரணிக்காப்பியம்
பரணி நாள் தோன்றித் தரணி ஆளும் வீரதீரமாமன்னன் மீது
பாடப்படுவது பரணி என்பாரும் உண்டு.
பரணி என்னும் விண்மீன் காளிக்கும், இயமனுக்கும் உரிய விண்மீன்
ஆகும் . அதனால் போர்பற்றிப்பாடும் இவ்விலக்கியம் வெற்றிபெறும்
மன்னன் புகழ் பாடும் இவ்விலக்கியம் "பரணி" எனப்பெயர் பெறுதல் மரபு
என்பாரும் உண்டு.
96 வகைப்பிரபந்த நூல்களிலே பரணியும் அடங்கும்.
சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
தொல்காப்பியர் இதனை,"யானைமறம் " என்று புறத்திணையில்
சுட்டிக்காட்டுகிறார்.
"பன்னிருபாட்டியல் " என்ற இலக்கண நூல்
வஞ்சி மலைந்த உழிஞை முற்றி,
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே "
( பன்னிருபாட்டியல் -240)
என்று விளக்குகிறது.
"இலக்கணவிளக்கம் " என்ற நூல் ,
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி "
(இலக்கண விளக்கம்- 839)
என்று ஆயிரம் யானைகளைப் போரில் வீழ்த்துபவன் மீது பாடுவதே
பரணி இலக்கியம் என்று கூறுகிறது.
பன்னிருபாட்டியல் பரணியின் இலக்கணத்தையும் வகுக்கிறது.
யானை சாய்த்த அடுகளத்து அல்லது
யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே"
என்று கூறிய அந்நூல்
அவ்யானை எழுநூறாகும் என்றும் கணக்கிடுகிறது.
ஏழ்தலை பெய்த நூறுடை இபமே
அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே"
என்று கூறுகிறது.
இவைகளில் இருந்து நாம் எடுத்துக்கொளவது யானைகளைப்
போர்க்களத்தில் வீழ்த்துபவன் ;சிறப்பாக ஆயிரத்திற்குமேல்
வீழ்த்துபவன் பரணிக்காப்பியத்தின் தலைமகன் ஆவான்.
பரணிக்காப்பிய வளர்ச்சி
சங்க காலத்தில் வளர்ந்த இலக்கியங்களிலே பரணி எங்கும்
தலைப்படவில்லை; ஆங்காங்கு சிற்சில குறிப்புகள் காணப்படுகின்றன .
சிற்றிலக்கிய வளர்ச்சிக்காலத்தே காணப்படுவது பரணி.
காலத்தால் மூத்தது ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி எனலாம்.
சிறப்புமிக்க பரணி சயங் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகும்.
மன்னர்களில் சோழர்கள் மீதுதான் நிறைய பரணிகள் பாடப்பட்டுள்ளன.
பிற்காலத்தில் யானை வீழ்த்தல் என்பதை விடுத்து வெற்றி நோக்கத்தையே
கொண்டு சீனப்பரணி,வங்கப்பரணி என பலபல பாடப்பட்டுள்ளன.
கூறப்பட்டுள்ள செய்திகள் ஆராய்ச்சி முன்னுரை அன்று.
அறிமுகமுன்னுரையே ஆகும். அந்த வரிசையில் மகேந்திரபுரப்பரணி
என்ற இந்நூலும் புராண வரலாற்றின் அடிப்படையில் பரணி இலக்கணம்
ஒத்து, முன்னோர் வகுத்த வழிமுறை நின்று பாடப்பட்டுள்ளது.
இந்நூலுக்கு " கந்தபுராணமே முழுவழிகாட்டி . அதன் அடிப்படையில்
ஆயிரக்கணக்கான யானைகளை வீழ்த்திய முருகனும், வீரவாகுவும்
ஆற்றிய வீரதீரச்செயல்கள் பாடப்பட்டுள்ளன.
பரணிக்களம்
போர்க்களமே பரணிக்களம் ; ஆயினும் நாம் பார்க்க இருப்பது
பரணி இலக்கியத்தில் சில காட்சிகள்; சில கற்பனைகள்; சில
தமிழ்நடைகள் முதலில் காளி கோயில் அங்கு நடைபெறும் அஞ்சத்தக்க
நிகழ்ச்சிகள்; அதிலும் அழகு இழைந்தோடும் அற்புதக்கருத்துக்கள்.
இங்கு அச்சம் ஒருபுறம் எனில் அறம் மறுபுறம் அரவணைக்கிறது.
அச்சமும்,அறமும்
"பலியான தலையெல்லாம்
புனிதவேதம் பணிந்துரைக்கும்;
தனியான தண்ணுடலோ
தாள்பணிந்து தான்வணங்கும்.
இப்பாடலில் காளிதேவிக்குத் தாமே தன்னைப் பலி கொடுக்கிறான்
அவ்வீரன். வெட்டிய தலை பலிபீடத்திலிருந்து கீழே விழுந்து, வாயாலே
நான்மறையை ஓதுகிறது; வெட்டுண்ட உடலோ உருண்டுபோய்
அன்னையின் பாதங்களை வணங்குகிறது. அச்சவுணர்வும், அறத்தாக்கமும்
பளிச்சிடுகிறது..
சிவக்கருணை
"தேம்பியழும் குரல்கேட்டுத்
தேடியருள் நீங்காது"
இவ்வரிகள் சிவபெருமானின் காதை வருணிக்கிறது. உலகத்திலே
துன்புற்றுத் துயர் தாளாமல் தேம்பித்தேம்பி அழுவோரின் குரலைக்
கேட்ட காது , குரல் வந்த திசையிலே சென்று அருளாம் கருணையைப்
பொழியும்; அப்படிக்காக்கிறார் உலகை.
யானைகளின் அணிவகுப்பு
இருபடைகளிலும் யானைகள் நிறைந்திருந்தன; அண்ட கோளங்களில்
இருந்தெல்லாம் நால்வகைப்படைகளையும் நிறைத்திருந்தான் சூரபன்மன்.
போருக்குச்செல்லும் போர்ப்படைகளில் முதன்மையாகச் செல்லும்
யானைப்படை இலக்கிய நூல்களின் முதலில் பாடப்படும் பாயிரம் "
போன்றதாக விளங்கிற்று என்பது ஒரு அழகு வருணனை. இதோ பாடல்
ஆயிரமாம் ஆயிரமாம்
அணைகளின் அணிவகுப்பு;
பாயிரமாம் நூல்முதல்போல்
காய்கருமைக் காளமேகம்.
அஞ்சுமுகக்கணை
ஆறுமுகனின் போர்க்களத்திலே இருபடை வீரர்களும் சிறப்பாகவே போர்
புரிகின்றனர்; ஒரு அரக்கவீரன் ஒருகணையில் ஐந்து செயல்
ஆற்றுமளவில் பூதர்களைக் குறிவைத்து அம்பினை எய்கிறான். அது
பகைப்புலம் சென்று,ஒருகணை பகைவன் ஒருவன் தோளை துணிக்கிறது
அடுத்து மற்றஒருவனின் காலை வீழ்த்துகிறது; மேலும் சென்று, ஒருவனது
தலையைச் சீவுகிறது;மற்றொருவன் கை வாளை வீழ்த்தி,வலிமைமிக்க
கரத்தையும் வீழ்த்துகிறது' எல்லாவற்றிற்கும் மேலாக பகைப்பூதர்களின்
வாழ்நாளின் கடைநாளாக ஆக்கி, அந்நாளையும் வீழ்த்துகிறது; வீரம்
நயம், சுவை கலந்த பாடல் இதோ ...
தோளைத் துணித்தது அஞ்சுவாளி;
தாளைத் தலையையும் துணித்தது;
வாளை , வண்கரத்தை வெட்டியது;
நாளைத் துணித்தது பூதருக்கே.
மகேந்திரபுரப்பரணி
அடியேனது ஊராகிய கன்னியாகுடியையே பாடிவந்த நான் முருகன்
வீற்றிருக்கும் பதிகளைப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.
அந்த வகையில் செந்திப்பதிபுரக்கும் செவ்வேளின் சீரிய பெருமை
தாங்கி , அவனாற்றிய போரினை முதன்மைப்படுத்தி, அதனைப் பரணி
என்னும் சிற்றிலக்கிய வகையில் நிலை நிறுத்திட எண்ணிணேன்ல்
முருகனும் பேரருள் புரிந்தான்;"மகேந்திரபுரப்பரணி" மலர்ந்தது.
மகேந்திரம் சூரபன்மனின் தலைநகர் ஆகும். அந்நகரை வென்று,
ஆணவச்சூரனையும் வென்று, அரக்கர்களையும் அழித்துவென்று
,போரினிலே ஆயிரம் ஆயிரம் யானைகளையும் வீழ்த்திய வேலவனின்
வெற்றிப்பாடலே பரணியாகும். மகேந்திரபுர நாட்டை. நாட்டுடையோனை
வென்ற பரணி மகேந்திரபுரப்பரணி ஆகும்.
இந்நூலுக்கு முதன்மை வழிகாட்டி சயங்கொண்டாரின்
கலிங்கத்துப்பரணியே ஆகும்; தக்கயாகப் பரணியையும் துணை
கொண்டேன்; மேலாக முருகனருளை மனம் கொண்டேன்; இவ்வாண்டு
என்னால் முடியாதோ? என ஏங்கிநின்ற என்னை எழுப்பி ஊக்கமும்
ஆக்கமும் கொடுத்தவர் எம்பெருமான் முருகனே ஆவர்; இரவிலும்.
பகலிலும்,கனவிலும் எனக்கு நற்றமிழ்க்கவிதை பலப்பல வழங்கி
அருள்பாலித்த அம்முருகன் நினைத்தாலே உடல் சிலிர்க்கும்; அப்படி
ஆப்படி என்னை ஊக்குவித்தார் சுப்பிரமணியக்கடவுள்.
அவர் மட்டுமா? எனது வீட்டார், அதிலும் குறிப்பாக எனது இரண்டு
பெண்கள், சைவசித்தாந்த வகுப்பு மாணவச்சான்றோர்கள் ஆகியவர்கள்
அளித்த ஊக்கம் இரவுப்பகலாய் இப்பணியில் ஆழ்த்தியது;ஐம்புலன்களும்
எதிரணியாகச் செயல் படும்; காலும்,கையும் கட்டளையை உதாசீனப்
படுத்தும்; ஆயினும் இது பணி ; இது கடன்; இது எல்லாவற்றிற்கும் மேலானது;
என்ற நினைக்கவைத்த நீள்கழலுக்கு என்ன கைம்மாறு செய்யப்
போகிறேனோ? தெரியவில்லை;
எப்பொழுதும்போல இவ்வாண்டும் சிவாசார்யார் போற்றல், ஓதுவா
மூர்த்திகள் போற்றல் போன்றவற்றையும் இதோ தொடங்கிவிட்டேன்.
எல்லாம் நான்கே நடைபெற நன்முருகனே வழிகாட்டுவான்" என்றெண்ணி
அவனையே மீண்டும் போற்றுகிறேன்.
நன்றியே நமசிவாயம்
இப்பணியில் என்னை விடாது ஈடுபடுத்திவரும் எல்லாம்வல்ல
எம்பெருமான் முருகனுக்கு என்றும் அடிமைப்படலே நன்றி.
இவ்விழாவை.நூல்வெளியீட்டை நடத்திக்கொடுக்க மனமுவந்து
ஏற்றுக்கொண்ட வி.ஜி.பி. குழுமதத்தலைவரும், உலகத்தமிழ்
மன்றத்தலைவரும், உயர்ந்த நோக்கத்தில் தனது வாழ்நாளை அமைத்துக்
கொண்டவரும், பல்வேறு நலநிகழ்ச்சிகளின் தந்தையாய் விளங்குபவருமான
வி.ஜி.பி.குழுமத்தலைவர்.டாகடர், வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கு என்
மனமார்ந்த நன்றி. இந்நூலுக்கு நல்லணிந்துரை வழங்கி அளித்துவரும்,
வி.ஜி.சந்தோசம் அய்யா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவருமான
மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவரும், எனது
நண்பருமான முனைவர்.கோ.சத்தியமூர்த்தி அய்யா அவர்களுக்கும் எமத
மனமார்ந்த நன்றி. நூலைப்பற்றிப்பேச வந்து.வெகுவாக ஆய்வு
செய்தவர்கள் மூவரும் எனது மாணவர்கள் என்று சொல்வதில் ஒரு
கர்வம் வருகிறது; என்ன தமிழ்! எப்படிப்பட்ட தமிழ்! சிந்திக்கத்தூண்டும்
விந்தைமிகு பேச்சு; எதோ சொல்லிவிட்டாரே வந்தோம்" என்றில்லாமல்
நன்கு உள்நுழைந்து ஆய்ந்து கருத்துக்களை வழங்கிய திரு.இரத்தினசாமி,
திரு.சுந்தர், திருமதி.கல்யாணி ஆகிய மூன்று இயல் இசை,நாடகத்தமிழ்
உள்ளங்களுக்கு எனது ஆசி கலந்த நன்றி.
திருநிறைச்செல்வர் பட்டம் பெற்ற மாதுபுரீஸ்வர சிவாசார்யார் அவர்கட்கும்,
திருமுறைச்செல்வர் பட்டம் பெற்ற ஓதுவாமூர்த்திகளுக்கும் என் மனமார்ந்த
நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் ஒவ்வொரு ஆண்டும் எனது நூலை
நன்முறையில் அச்சிட்டு அழகுற வழங்கும் திரு.அருண்குமார் அவர்கட்கும்
எனது நன்றி.எப்பொழுதும்போல் இவ்வாண்டும் அகன்ற அவை,அழகு
இருக்கைகள், நல்லவுணவு வழங்கிய வி பைவ் ஹோட்டல் ஐந்து பங்கு
தாரர்களுக்கும்,மெத்த நன்றிகள்;
'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக