புதன், 6 மே, 2026

திருதணிகைக் கோவை ...3.

                                                           14.  இரவுக்குறி . 

  பகற்பொழுதில்  தோழி  குறிப்பிட்ட  புனச்சோலையிடத்தில்   தலைவியோடு,

கலந்து,இன்பம்    அனுபவித்த   தலைமகன்,  தோழியால்    பகல்குறி  

விலக்கப்பட்ட பின்,  தோழியால்  வலியுறுத்தப்பட்ட  திருமணம்  புரிதல்  ஒரு 

முறை;அதனை    ஏற்காத    தலைவன்,  அதனால்  இற்செறிக்கப்பட்ட    தலைவி...

இந்நிலையில் தலைவன்   தோழியை  நாடி, இரவில்  தலைவியைச்    சந்திக்க 

வாய்ப்பு    வேண்டுவான்;  இவ்விரவுக்குறி   முப்பது  மூன்று   துறைகளைக் 

கொண்டது.

                                        14. 1. இரவுக்குறி    வேண்டல்.

                                                           கொளு .

இரவில்   புணரும்  இனிமை   நினைந்து,

பெருமுலைப்    பாங்கியிடம்    பரிவு    வேண்டியது.

பொருள் ;--   இரவினில்  கூடும்   புணர்வின்   இனிமை  நினைந்து,

பெருத்த மார்பகத்தை  உடைய   தோழியிடம்  உதவிட   இரக்கம்   காட்டுமாறு 

வேண்டியது.

                                                            பாடல் --146.

தேவர்க்கும்     அரக்கர்க்கும்    மருந்து  தீந்தமிழ்க்    கமுது;

காவல்      கடிவேல்;  கருமேகத்    தணிகைக்   குன்றுடையான் 

நாவலூர்   நல்லருவி   மரங்கள்  சொல்கிளி   நிறைந்து,

மேவிடம்  மேன்மை   விருந்தினன் ;  மன்னிருள்   மின்னிடையே!

                                                            பொருள்.

   தேவர்களைக்   காத்து, வெஞ்சிறை  மீட்டுப்   பகைவர்களான  அரக்கர்களை 

அழித்துக் காத்ததால்   மருந்தானான்;

  அரக்கர்களை   அழித்தாலும்  அவர்களுக்கு    கருணை   புரிந்ததால்  மருந்து 

ஆனான்.

  இனிமைவாய்ந்த    தமிழ்மொழிக்கோ   அமுதம்   ஆனான்;  அவனது  

காவல்  சிறப்பினைப்     பாதுகாப்பது   அவன் கரத்தில் உள்ள  வீரமிக்க  வேல் 

ஆகும்.கருணையை  மேகம்போல்   வழங்கும்  முருகன்    தணிகை   என்னும் 

குன்றிலே   அமர்ந்தவன்;கருமேகங்கள்  தங்கி மழையைப்  பொழியும்  

தணிகைக் குன்றிலே   வீற்றிருப்பவன்.

      அக்குன்றிலே    உள்ள  நல்ல சிற்றூர்;  அருவிகளும், வளமான  மரங்களும்,

நம்மோடு   உரையாடும்   கிளிகளும் நிறைந்து,  வளத்தைப்பெருக்கும்  நல்ல  

ஊர்;  உமது    சிற்றூர்;  இவ்வூருக்கு  மதிப்புமிகு  விருந்தினன்   ஆக   நான் 

வந்துள்ளேன்;  இருளிலும்  மின்னும்  சிறிதாய் கொண்ட   தோழியே!  என்னை 

ஏற்று,  உனது    தலைவியிடம்  என்னைப்பற்றிச்    சொல்வாயா?  என்று 

தோழியிடம்    தலைவன்  வேண்டினான்.

விளக்கம்;--- மருந்து =   நோய்  தீர்ப்பது ;தேவர்களின்   நோய்  [அரக்கர் செயல்]

                           அரக்கர்களின்   நோய் =  தீமை   மாறி  நல்லடி  சேர்தல் .

2  கருமேகம்  =  மழைபொழிய விரும்பும் நிலை; கருணை  பொழிய  விரும்பும் 

                                    குன்றத்தான் 

3 . சொல்கிளி  =  மழலையாய்ப்  பேசும் கிளி .

மெய்ப்பாடு --------  பெருமிதம்.

        பயன் ------------ இரவுக்குறி   நேர்வித்தல் .

                              14.2. வழி  அருமை   கூறி   மறுத்தல் .

                                                கொளு .

இரவு      வருதல்    விரும்பி      உரைத்திட ,

அருமை    வழியுரைத்து  மறுத்தாள்   பாங்கி.

பொருள்;---   இரவுக்குறி   வருத்தலகேட்ட  தலைவனிடம்,  தோழி.

செல்ல   முடியா   வழிநிலைமை   விளக்கி, உரைத்தது.

                                               பாடல்--147.

முள்ளொடு      கல்லும்,  முனைமுறி   சில்லும்    முளைப்பூண்டுமே 

செல்வழி    சீறும்     காற்று,  நில்லாமழை,    நிறைபள்ளமும் ,

வல்லிருள்   வழிக்குகை,  வடிவேலன்     தணிகைச்     சிற்றூர் 

இல்லாத    பற்றினால்   வழுக்கிடும் ;  நல்லவ !  நாடற்க .

                                                பொருள் .

   தலைவ !   வடிவேலனின்   திருத்தணிகை   மலையிலே    அமைந்த  மிகு 

உயரத்தில்  உள்ள   எம்மூருக்குச்    செல்லும் வழியெங்கும்  முட்செடிகள்

காலில்  குத்தும்;வழிநிறைந்த  கற்களும்,முனை முறிந்துபோன  சிறு சிறு 

சில்லும்  காலைக்  கடிக்கும்; பாதையில்   முளைத்துள்ள  முள்ளுள்ள  

செடிகளின்  இலைகள்   காலில்  பட்டால் அரிக்கும்; மேலும்   வழியெங்கும் 

மழைக்காற்று   சீறும் ; விடாது    மழை  கொட்டிக்கொண்டே   இருக்கும்;

அந்த    நீர்   தேங்கிப்  பாரிய பள்ளங்கள்   உருவாகிக்    கீழே   விழவைக்கும்;

கடும் இருட்டில்  செல்வதால்   வழி   குகைக்குள்    செல்வதுபோல்   இருக்கும்;

நடப்போர்  கால்கள்  பற்று  இல்லாது  நடந்தால்   வழுக்கும்   பாறைகளில் 

வழுக்கி விழுந்திடுவோம்;  இப்படிப்பட்ட  வழியில்    நல்ல    தலைவனே!

இங்கு    வராதே!  என்று  தடுத்து  நிறுத்தினாள்   தலைவனைத்  தோழி.

விளக்கம்;--  1 . சில்லும் =   சிறு சிறு  உடைந்த  கற்கள் .

2 . பூண்டு  =  ஒருவகைச்செடி .

3 . பற்று  =   பிடிப்பு.

 மெய்ப்பாடு  -------  இளிவரல் .

     பயன் ---------------இரவுக்குறி  மறுத்தல் .

                              14.3. நின்று நெஞ்சுடைதல் 

                                                 கொளு .

இரவுக்    குறிதனை   விலக்கிய    பாங்கி 

தரவினால்   தலைவன்  தன்நெஞ்சு     உடைதல் .

பொருள்;--   தோழி.  இரவுக்குறி  இடையீட்டை  எடுத்துச்சொல்லி  விலக்கவும் 

மனம்   பொறாத   தலைவன்  மணமடைந்து  வருந்துதல்.

                                              பாடல்--  148.

பிறப்புறு   ஊமையைப்     பைந்தமிழ்   பாடவைத்த    பரமன்,

சிறப்புறு   சீர்த்தணிகைக்   குன்றின்   முடிநுனித்    தேனடை 

குறைக்கால்   விரும்பும்   வேடிக்கை  நிலைபோன்ற ,  நெஞ்சமே!

சிறைக்கனி, நறவிதழ்   உறவிற்கு     நானும்    அழுவேன்  .

                                                பொருள்.

  பிறப்பால்   ஊமையாய்ப்    பிறந்த  குமரகுருபரனைத்     தன்னருளால்  

கந்தர்கலிவெண்பா"  பாடவைத்த   மாமுருகன், அமைதியென்னும் 

சிறப்புவேண்டி  அணைந்தமர்ந்த  தணிகை    மலைக்குன்றின்  கூம்பன்ன 

சிகரத்தின்    உச்சியில்   உருவான     தேனடையை,விரும்பும்   காலில்லா 

ஒருவன்போல,  வேடிக்கை நிலைக்கு   ஆளான   நெஞ்சமே! 

கச்சையால்   சிறைப்பட்ட   மார்பகத்தையும், தேன்பொழினிக்கும் இதழையும் 

சுவைத்து,உறவுகொள்ள  விரும்புகின்ற   நானும்    இயலாமையினால் 

உன்னைப்போலவே    அழுகிறேன்'  என்று   புலம்பினான்.

விளக்கம்....1  ஊமை  =  வாய்திறந்து    பேச    இயலாதவன்.

2 . முடிநுனி  =  மலைச்சிகரத்தின்  கூம்பு  முனை.

3 .  குறைக்கால்  =  காலில்லா  [சிதைந்த கால் ]


சனி, 14 மார்ச், 2026

திருத்தணிகைக்கோவை .2

                                                            9.  நடுங்க    நாட்டம் .  

  தலைவி    அஞ்சும்படியாகச்    சிலநிகழ்வுகளைக்  கூறி,அவளின்  இன்பக் 

கூடலைத்    தோழி   அறிதல். ஒரு துறையைக்  கொண்டது.

                                                     9.1. விலங்கு   ஒன்றால் வியப்புரை .

                                                                    கொளு.

சிற்றிடைப்    பாங்கி  அச்சத்தால்   அறிந்தது.

பொருள்;----   பாங்கி,  தலைவியை    அச்சுறுத்தி, அவளது   கூட்டம்  உணர்ந்தது.

                                                        பாடல்--71.

மாதங்கம்    முன்வரத்       தீதினை   உணர்வள்ளி   வேதனைத் 

தாதவிழ்    தண்மலராய்த்     தணிகை   தானணை  நிலைபோல் 

பேதை    முன்வரு  பேர்யானை   பேரம்பு   பற்றும்   தலைவன் 

சீதம்தளிர்    சிந்தனை   படைத்துச்   செங்குணம்     அறிந்தாள் .

                                                           பொருள் 

   தன்னை  விட்டு,  விலகிச்செல்லும்   வள்ளியைத்   தன்னருகே   வரவும்,

தன்னோடிணையவும், முருகன்,  மனத்திலே   அண்ணனை  நினைக்க,

விநாயகப்பெருமான்,  அஞ்சவைக்கும்   தோற்றத்தில்   யானையாக 

வள்ளிமுன்  வர, அஞ்சிநடுங்கிய   வள்ளி, ஓடிச்சென்று, வேடனாகிய ,

வேதத்தலைவனாகிய  தணிகையானை  இதழை விரித்து,  வண்டின் 

வாய்க்கு  வரமளிக்கும்  மலர்போல  அப்படியே   தழுவிக்கொண்டாள்.

அதே   தன்மையில்  

    தலைவியின்  முனை வரும்  பெரிய    யானையைக்   கண்டு, அஞ்சிட,

அங்குவந்த    தலைவனோ  வில்லினைப்பற்றி  விடுத்தான்   பேரம்பை .

மனா  அமைதி பெற்ற  தலைவி,  மனம் குளிர்ந்து, நல்ல அறிவோடு,

தானும்,  தலைவனும்   கூடிய   நன்நிகழ்வுகளை  அப்படியே  தோழியிடம் 

கூறினாள் ;

       இங்கு   மனநிலையை  மாற்ற.  தணிக்கையானும்,  தோழியும் 

கடைப்பிடித்த   அச்சமாக்கும்  உணர்வுகள்  ஒன்றையொன்று 

விசேடிக்கின்றன.

விளக்கம்......1.  வேதனை  = இதற்கு  மூன்று பொருள்.

                           1.  வள்ளியடைந்த   துன்பத்தோடு [வேதனை=துன்பம்]

                           2.  வேத ,மறை  வடிவில்  விளங்கும்  முருகனை.

                           3.  வேடனை   என்பது  விகாரத்தால்  வேதனை  என்றாகியது.

2.   பேர்யானை =  பெருமை மிக்க  விநாயகராம்  யானை.

3.   சீதம்தளிர்  =  நல்ல  குளிர்ந்த  தன்மைகள்  துளிர்விடும்   செய்திகள்.

4.  செங்குணம்  =   தலைவியின்   செம்மை  வாய்ந்த  களவு   ஒழுக்கங்கள்.

    மெய்ப்பாடு...........    நகை 

               பயன்..............   நடுங்க நாடிக்  கரவுநாடி   உணர்தல்.

                                                நடுங்க நாட்டம்   முற்றிற்று.

                                                      10.  மடற்றிறம் .

தோழியிடம்     தலைவன்   தன்காதலை    எடுத்துரைத்தபின்னும்,   அது 

நிறைவேறாது   ஆமையின்  மடல்   ஏறுதலைத்    தலைவன் மேற்கொள்வான்.

   இது  தலைவன்   தன  காதலை   நிறைவேற்றிக்கொள்ளக்   கையாளும் 

ஒரு வழியாகும். காதல் நிறைவேறாத  நிலையில்  இறந்துபடும்   சூழலில் 

தலைவன்  இதனைக்    கையில்  எடுப்பான்.  ஒன்பது   துறைகள்   கொண்டது.

                                                   மடலேறல் 

        பனைமரத்தின்   மட்டை   ஓரத்தே     அமைந்த  கூர்மையான   கருக்கால் 

அமைத்த  ஒருகுதிரையை அமைப்பான;  ஒருதுணியில்  தன்   காதலியின் 

பெயரை,உருவத்தை  எழுதி,  அதனில்    தன்பெயரையும்   எழுதிக்   கையில் 

எடுத்துக்கொள்வான்;  உடல்   முழுவதும்   சாமபலைப்   பூசிக்கொண்டு, 

எருக்கு     மாலையை  அணிந்துகொள்வான்;  "  இந்த  பிம்பத்தில்   உள்ள 

தலைவியால்    நான்    இறந்துபடப்போகிறேன் "   என்று  

 பறையடித்துக்கொண்டு தெருவில்  சுற்றுவான்.  

ஆண்கள்  மட்டுமே    மடலேறுவர்;   பெண்கள்   மடலேறுவது  இல்லை.

                                                10.1.  ஆற்றாது    உரைத்தல்.

                                                            கொளு .

பெரும்பேற்றன்   அருமலையன்   சரிந்து,

இருளான   இயலாமை    எடுத்துரைத்தது.

பொருள்;---   தணிக்கை  மலையானின்   அருள்பெற்றவன், 

மலைநாட்டுத்தலைவன்,  காதலால்  மனம்  உடைந்து, தனது  இயலாமையை 

எண்ணி   வருந்திக்கூறியது.

                                                பாடல்--  72.

தணிகை     மணியகத்  தணியழகுப்    பெண்டீர்!  தளர்ந்த,

தணிகையான்   தவிமனம்   காத்தருள்   வள்ளிபோல்   மாறீரோ   !

பணிந்த     பின்னும்   பாசமிலீர்!  விணிலவு   வெறுத்தீரே!

இனியருள்   கனிவிலை   எனிலென்   சனியுடல்     சாயும் .

                                                பொருள் 

      திருத்தணிகை   மலையில்    வாழும்   ஒளிமிகுந்த  மனமும்,  அணிகள் 

வியக்கும்    அழகும்   கொண்ட    பெண்களே!  வள்ளிமலையிலே  தனது 

காதலை   ஏற்காது  விளங்கிய   வள்ளியை   நினைந்து   வாடி  வதங்கிய 

தணிகையான்   தவிக்கும்   மனதைக்கண்டு, அவன்மீது,   தானும் 

காதல்  பார்வை   செலுத்திய    வள்ளியம்மைபோல்    மாற   மாட்டீரோ?

    நாளும்   உங்களைப்   பணிந்து  நிற்கிறேன்;   என்மீது    அன்பில்லாது 

விளங்குகிறீர்களே!  மனத்தில்   ஆசையைத்  தூண்டும்   விண்ணிலவை 

வெறுக்கிறீர்களே !  இனியும்   தங்களது   கனிவுற்ற   அருள்  என்மீது 

செலுத்தவில்லையென்றால்  எனது  இந்த   மோசமான  உடல்   மண்ணில் 

சாய்ந்துவிடும்!  என்று   மன   ஆற்றாமையை  வெளிக்காட்டினான் 

தலைவன்.

விளக்கம்;---  1.  தவிமனம்  =  காதல்  கைகூடாத  காலை, தவித்த  முருகனின் 

                                                           மனம்.   வினைத்தொகை.

2.  பாசமிலீர்!  =   அன்பு   செலுத்தாதவர்களே! பணிந்து  போற்றியபின்னும் 

                                   பாசம்   வரவில்லையே!

3 .  விணிலவு  =     வானில்   உதிக்கும்   நிலவு.  விண் +  நிலவு.  தொகுத்தல் 

                                    விகாரம்.

4.  சனியுடல்  =  இழிவான துன்பம்   தரும்   இவ்வுடல் .

 மெய்ப்பாடு .....அழுகை.

         பயன் ........   ஆற்றாமை   உரைத்தல்,

                                                10.2. உலகின்மேல்  வைத்து  உரைத்தல்.

                                                                           கொளு .

மனமிழந்து  மடலேறுவான்  மன்நிலை  விளக்க,

உலகியல்   கூறி    உபாயம்   தேடியது.

பொருள்;---    மடலேறுவதை   மனதளவில் முடிவு செய்த  தலைவன் 

உலகியல்   கருத்துக்களைக்   காட்டி,  மடலேறத்துணிந்தது.

                                            பாடல்--73.

தணிகையான்      திருநீறும்,  தந்தையான்   தரிக்கும்   எருக்கும் 

அணிந்தயான்   பனைமடல்   பரியில்     படம்தாங்கி   ஊர்வேன் ;

பிணிதந்து,   பேதலுறக்   கனியால்,   வலையால்    பிணித்தோர்

பணிகாதல்   பங்கமாம்;   பேருலகு   மணிவழி     மாள்வேன் .

                                                பொருள் 

  காதல்   என்னும்  தீராத  நோயைத்  தந்து, அறிவு  மயங்கித்   தடுமாறத் 

தமது  கனிபோன்ற   மார்பகத்தால்  இன்பமும்,  கண்களென்னும்   வலையால் 

மயக்கமும்   அளித்துப்    பிணிநோய்  போலப்    பழகியவர்களின்   காதல் 

என்னும்  பணிவு மனம்  தொடர்பினைக்   கைவிட்டுவிட,  எம்மனோர்க்கு,

இந்நிலவுலகு   காட்டும்  ஒளிமிகுந்த  வழியை,

         நல்லருள்புரியும்     திருத்தணிகையான்  திருநீற்றை   மேனியெல்லாம் 

பூசிக்கொண்டு,  அவன்   தந்தையாகிய   சிவபெருமான்   அணியும்  எருக்க 

மலர்மாலைகளை   அணிந்துகொண்டு, பனைமரத்துமட்டைகளின்  கருக்கால் 

உருவாக்கப்பட்ட   குதிரைமீது,அமர்ந்தபடிக்க   கையிலே  காதலியின்  உருவம் 

வரைந்த   கொடியை  ஏந்திக்கொண்டு, அவள்பெயரும்,என்பெயரு ம் 

எழுதி ஏந்தியபடி  வீதிகளில்   ஊர்ந்துவந்து   உயிரை   விடுவேன்'  அப்படியே 

இறந்துபடுவேன்" எனத்   தலைவன்    தான்  மடலேறுவதை, உலகில்  நடக்கும் 

நிகழ்வில்  ஏற்றிக்   கூறுகிறான்.

விளக்கம்;----1.  பனைமடல்  = பனைமரத்து  மட்டையின்  ஓரக்கருக்கு 

2.   படம்  தாங்கி  =  தலைவியின்  ஓவியத்தைக்  கையில்  பிடித்தபடி 

3.  கனி ==  மார்பகமாகிய  மாங்கனி.   வலை =  கண்ணாகிய  வலைவீச்சு.

                                                      10.3.தன்     துணிபு   உரைத்தல் .

                                                                    கொளு .

தானும்   மடலேறும்   தருணம்  வந்துற்றது;

மானுமே    காரணம்,  மலைநாடன்   உரைத்தது.

பொருள்  ;----  நல்முடிவு  கூறாத  பெண்ணால்  யானும்    மடலேறத் 

துணிந்துவிட்டேன்"  எனத்   தலைவன்   கூறியது.

                                                 பாடல்--74.

பொன்னெனப்    போற்றினேன்;  பூவெனச்    சூடினேன் ;  பாராதவள் 

தண்பாதம்   பணிந்தேன்;  என்னுள்ளம்  ஏற்காத   விண்கொடியாள் ,

மண்தணிகை   மனவள்ளி   மலர்ந்த      காதல்   மலையில்,  

புண்மடல்   பூவெருக்குப்      பண்ணிசைத்துப்    பாடவும்    வைத்தாள் .

                                                பொருள்.

    தணிகை   மன்னன்  மனதில்  குடிகொண்ட   வள்ளி   வந்தமர்ந்த   காதல் 

மலையில், தோன்றிய  தலைவியை   நானும் பொன்போலப்   போற்றினேன்;

பூப்போல  மென்மையாகத்    தலையில்  அவளைச்   சூடிக்கொண்டேன்;

அவளது   குளிர்ச்சிமிக்க   கால்களைப்  பணிந்தேன்; இப்படிப்பலப்பல  

புரிந்தும்  என்  காதலை   ஏற்காத விண்ணகக்கொடி   போன்றவளினால் 

தாழ்வளிக்கும்   மடலேறுதலை  .எருக்க   மலரணிந்தும், எமது  காதல் 

ஊரார்  நன்கறியவும், கொடியும்,  ஓவியமும்  தாங்க வைத்துவிட்டாள் .

என்  செய்வேன்!  அந்தோ!  என  அங்கலாய்த்தான் தலைவன்.

விளக்கம்;---  1.  பாராதவள்  =  பலபலப்    போற்றியும்   என்னை  நோக்காதவள்.

2.  விண்கொடி  =  வானமலர்க்  கொடி .  மிக   உயரத்தில்  சென்றுவிட்டாள் 

                                     எனும்  பொருள் பட.

3.மண் தணிகை  = உலகமாகிய  தணிகை  மன்னன் ; உருவகம்.  

                                                  10.4.மடலேறும் வகை உரைத்தல் 

                                                                கொளு .

வெற்றிமகன்    தொற்றிய   மடலாம்   கூற்றின் 

பொற்பை   வகையை   உற்றோர்  கேட்கவே.

பொருள்;---   வீரனாகிய  என்மனத்தைச்  சிதறவைத்த  மடலேறுதல்  என்ற 

கொடுமையை, வகையைச்   சான்றோரே!  கேட்பீர்!  என  மாதா;பற்றிய 

நிலையைத்   தலைவன்   உரைத்தான் .

                                                  பாடல்...75.

பரிசாய்க்        காதலாய்ப்    பாங்கிருவர்   பெருங்கருணைப்    பார்வைக் 

குரிசில்      தணிகைக்    கொற்றவன்   மலையில்   குளிர்தெருவில் 

எரிமனச்      சிறியோன்       எனைக்கவர்   எழிலை     எழுதி

எருக்கணி    மடலேறித்      திரிவேன்;   வரும்சா    வறிவீர்  !   

                                                         பொருள் 

   இந்திரனால்   சூரனை  வென்ற   போர்ப்பரிசாக   அளிக்கப்பட்ட  

தெய்வயானையும்,  காதலித்து,  வள்ளிமலையில்   ஆடிப்பாடிய   வள்ளிப் 

பிராட்டியும்,  இருபக்கமும்   அருள்பொழியும்  கருணைப் பார்வை  கொண்ட 

தோற்றத்துடன் நிற்க,நடுவே  பெருங்கருணைக்   கொற்றவன்  நின்றருளும் 

தணிகைமலை   நாட்டின்   குளிர்  வீசும்   தெருக்களிலே,

       காதல்  கூடாததால்   தவிக்கும்  மனம்  கொண்ட  எனது   ஓவியம் ,பெயர் 

எழுதி, என்   மனம்  கவர்ந்தவளின்   ஓவியம்,பெயர்  எழுதி, அதனைக் 

கொடிபோலக்  கையில்  பிடித்துக்கொண்டும்,  உடலெல்லாம்  சாம்பல் 

பூசிக்கொண்டும்,  எருக்கம்பூ  மாலை   அணிந்துகொண்டும் ,சுற்றி  சுற்றி 

வருவேன்;  கூடவே   எனது   சாவும்   வரும்;  சான்றோரே ஃ  இதனை 

அறியுங்கள்!   என்று  கூவினான்  தலைவன். 

விளக்கம்.....1.  அன்பும்,காதலும்   கொண்ட  இரண்டு  கன்னியரோடு 

விளங்குகின்ற  கருணைக்கடவுள்  தணிகை   மலையில்   நான் படும் 

துயர்  ஏற்புடைத்தா?  என்ற  பொருளும் ,

    குளிர்  தெருவில்  மடலேறுவதால்   என்மனமும்   குளிரடையும்;   எனது 

காதலும்   நிறைவேறும் , என்ற பொருளும்  உட்கிடக்கை.

2.   பரிசாக  =  இந்திரன்  வெற்றிப்   பரிசாக  அளித்த   அவனது   மகள் 

                             தேவயானை.

3.  காதலாய்  =   வள்ளிமலையிலே   கண்ட  குற  வள்ளியை   ஆடிப்பாடி 

                                 மணந்து   கொண்டது.

4.   எழிலை  =    அழகே  உருவான   எனது  காதல்   தலைவியை 

5.  மடல் =   பனைமர  மட்டையின்   ஓரக்கருக்கால்   உருவாக்கப்  பட்ட 

                       குதிரை;  அதன்மீது   பவனி   வந்தால்  அக்கருக்கினால்  உயிர் 

                       போகும்.

மெய்ப்பாடு.........   இளிவரல் 

            பயன்  .......     ஆற்றாமை  உரைத்தல் .

                                                    10.5.  அருளால்   அரிதென   விலக்கல் .

                                                                 கொளு .

அருளுடை    மன்னன் நீ;  இருள்செயல்   புரியாய்;

சிறுமை    தவிர்ப்பாய்!   நறுந்தோழி   நவின்றனள்.

பொருள்;---    உலக   உயிர்களின் மீது  பேரன்பும், கருணையும்   கொண்ட 

மன்னவன்  நீ.  ஒருபோதும்   பிற உயிர்களுக்கும்  தீங்கு   செய்ய  மாட்டாய்!

அதேபோன்ற   உயர்செயல்  காக்க,  மடலேறுதல்  என்னும்  தீய  செயலை 

நீக்கிவிட்டுப்  பெருமை  பெறுவாய்!  என்று  தோழி  அன்போடு  கூறினாள் .

                                                                   பாடல் -- 76.

சேவலும்,     மயிலும்,    அன்னமும்,   பிறவும்  அருளுறும்  

காவல்மலை த்     தணிகைச்   சேவடி   போற்றிவாழ்   தலைவா!

வாவல் ,  அன்றில்  போன்றன   வாழ்குடில்  கலைத்துச்    சிதைத்து,

வாவல்    மனைக்காய்   வளப்பனை   மடல்வெட்டல்   நலமோ ?

                                                    பொருள் .

      சேவல்,மயில்,  அன்னப்பறவை.போன்ற  பறவைகளுக்கு,  அடைக்கலம் 

கொடுத்தும்,  அன்புகாட்டியும் ,அவைகளுக்கும்,  அவை போன்றவனுகட்கும்,

காவலாகவும்,  கருணையாகவும்   விளங்குகின்ற  திருத்தணிகை   முருகனின் 

சேவடியைப்   போற்றிவாழும்  மலைநாடனே !  

      வெளவால் , அன்றில்  போன்ற  பறவைகள்   தத்தம்   குஞ்சுகளோடு   கூடு 

கட்டி,  அன்பொடு வாழும்   பனைமரத்தினை,  மட்டைகளை   வெட்டி, வீழ்த்தி,

ஆவலுற்ற   காதல்  மனை  அடைய , மடல்    கருக்கால் குதிரை  உருவாக்க 

முனைதல்  அன்பாகுமோ?  கருணையாகுமோ? அவற்றை   விடு !  

மடலேறுதலை  அறவே   நீக்குவாயாக"  என அன்பு கொண்ட தோழி   

மடலேறுதலை    நீக்கினாள் .

விளக்கம்  1. வாழ்குடில்  =   பறவைகள்  வாழ்கின்ற  கூடுகள் .

2.  மடல்  வெட்டல்  =  மட்டைக்காக  மரத்தையே   வெட்டுதல் 

3. சிதைத்து =  ஆவல்  =   சிதைத்து  வாவல்   என உடம்படு  மெய்ப்புணர்ச்சி .

                                               10.6. மொழிநடை  எழுதல்  அரிதென   விலக்கல் .

                                                                   கொளு .

மேனித்     தடங்கள்   மேன்மையாய்    வரையினும்,

ஞான    நுட்பம்   வரைய    வியலா.

பொருள்;----   மடலேறும்  போது   நீ    தாங்கி   நிற்கும்   ஓவியத்தில் 

தலைவியின்   அங்கங்களை  அழகுபட   வரையலாம்;   ஆனால் 

அம்மேனி   அவயவங்களின்   கருணைத்தன்மையை,  ஞான  நுட்பத்தை 

உன்னால்  படைக்க   இயலாது;  என்று   தோழி   தலைவனிடம்  கூறினாள் .

                                                    பாடல்----77.

எட்டுக்குடி     ஏந்தல்,   தொட்டணை   கச்சிமண்    சிவலிங்கம் ,

மட்டில்லா     ஞானத்     தணிகை   மதிநுட்ப   வெளிப்பாடு;

தொட்டிலால்,    தாய்மை,   கட்டிலால்,   பேரின்பமும்   சுட்டிடினும்,

நுட்ப,      மொழிநடை  முகம்கண்  படைப்பாயோ  படத்தில் ?

                                                  பொருள் 

  எட்டுக்குடி   என்னும்   தலத்தில்   வீற்றருளும்  ஆறுமுகன்  சிற்பியின் 

உள்ளத்து உறைந்த   படைப்பென்பர்;  ஓடிவரும்  மிகவேக   ஆற்று 

நீரோட்டத்திலிருந்து   தான்படைத்த  மண்  சிவலிங்கத்தைக்   காக்கத் 

தன்   மார்புறது   தழுவிக்   கொண்ட  காஞ்சி   காமாட்சி  அன்னையின் 

அருமணல்   படைப்பிற்கு   மாற்றும்  உண்டோ?  அளவேயில்லாத   ஞான 

நன்னிலையில்   அமைந்த  திருத்தணிகையான்   அமைந்த  கோலம் 

போன்று  ஞான   மதி  நுட்பங்கள்   சேர்ந்து   உருவானவை   அல்லவா!

          தொட்டிலைப்   படைத்தால்   அது தாய்மையைக்   குறிக்கும்   எனலாம்;

அதில்   தாய்மையின்  கருணை,இரக்கம்  இன்னன  வெளிப்படுத்துமா?

கட்டிலைப்   படைத்தால்  அது   பேரின்பத்தை  வெளிப்படுத்தும்;  ஆனால் 

அப்படம்   இன்பநுட்பத்தை   வெளிப்படுத்துமோ?  இவைபோல 

     தலைவியின்   மொழி  இனிமையை, அன்ன   நடையை, முகக்கருணையை 

கண்ணின்  இரக்கத்தை  நீ எழுதும்   படத்தில்  உன்னால்   வெளிக் கொணர 

முடியுமோ?  இயலாது .  எனத்   தோழி  மடல்  ஏறுதலைத்   தடுக்கும்  முறையில் 

இவ்வாறு  கூறினாள் .

விளக்கம்;---- 1.  எட்டுக்குடி  =  முருகனது   திருக்கோயில்களில்   இதுவும்  ஒன்று.

                                                             சோழநாடு;  திரு வாரூர்   அருகே   அமைந்துள்ளது.

2.  கச்சிமண்  =  காஞ்சிபுரம்     ஆற்றுமண்.  காமாட்சி அன்னையின்  சிவபூசை .

3.  படத்தில்   =  மடலேறும்பொழுது   நீ   வைத்திருக்கும்  கொடிப்பட   ஓவியம்.

மெய்ப்பாடு..........   நகை.

         பயன்  .............. மடல்  விலக்குதல் .

                                                   10.8. உடம்படாது  விலக்கல் .

                                                                      கொளு .

பெருவேல்    மலைய !   உறுதுயர்     விடுக;

கருமடல்    நீக்குக;  திருவாக்கு    தோழி.

பொருள்;----   வீரவேல்  தாங்கிய  மலைநாடனே ! உனது   துயரை   நீக்கு!

மடலேறும்  தொழிலை  மற . நீக்கு.  எனத்தோழி   கூறினாள் .

                                                       பாடல்---78.

எட்டவல்    லிளம் மலர்    என்சொல்லால்   இன்முகம்    காட்டவும்,

தட்டவும்   வல்லாள்  ;    துட்டமடல்    விட்டிடு ;  வருவதெதிர் !

சுட்ட    கனியால்      பட்டமரம்   பணிவோடு,  மற்றைநாள் 

பெற்றவர்    பற்றியுரை  பற்றிடாத    தணிகை    போன்றே.

                                                    பொருள்.

     நாவல் மரதமர்ந்த   வேலன் ,அவ்வழி  களைப்போடு   வந்த   அவ்வையிடம் 

கனிகள்  பறித்துப்போடவா!  பாட்டி!   எனக்கேட்க,  பாட்டியும்  போடு! 

என்றதும்,    சுட்ட  பழம்  போடவா?  சுடாத  பழம்   போடவா? எனக்கேட்டதும்,

பழத்தில்  சுட்டது, சுடாதது   என்றெல்லாம்   இருக்கிறதா?  என்று  சிரித்தபடி,

எனக்குச்சுடாத   பழமே போடு! என்றாள் .  வேலன் ஆகிய   வேடன்  மரத்தை 

உலுக்கினான்;  நாவற்பழங்கள்   பொல  பொல   என மண்ணில்   தரையில் 

விழுந்தன;அவ்வையோ     அவைகளைப்  பொறுக்கினால் ;  மண்   ஒட்டி 

இருந்ததால்   மண்  போகுமாறு  வாயால்   ஊதினாள் ;  மரத்தமர்ந்த   வேலன் 

என்ன   பாட்டி!  பழம்   சுடுகிறதா ?  எனக்கேட்க,   அவ்வை   அப்படியே 

மலைத்துப்போனாள் ;  யாரப்பா நீ!  பட்டமரத்தைப்    பதம்   பார்த்தவன்! 

எனக்கேட்க, தணிகை  முருகன்   வெளிவர  அவ்வை   பேரருள்   பெற்றாள் ;

அவ்வைக்கும்   முருகனுக்கும்  அன்பு வளர்ந்தது;   அதே   அன்பைபயன்படுத்தி 

பழத்தால்  சினம்கொண்டு    தனியே  மலைமீதமர்ந்த  முருகனிடம்   தவற்றை 

உணர்த்திப்  பெற்றோருடன்   செல்க"  என்றவழி  தணிகை  மாமுருகன்  

அதனை  ஏற்காது  பழனி,மலையிலேயே   தங்கியதுபோல 

    அன்பினால்    அடையக்கூடிய   அன்பு  கொண்ட   என்னுடைய   இளந்தலைவி 

உனது  துயரைச்  சொல்லி,  உன்  காதலைச்   சொன்னால்   அதை   ஏற்கவும் 

செய்வாள்;  மறுக்கவும்   செய்வாள்;  அதை அப்புறம்   பார்க்கலாம்;

இப்பொழுது   இந்த   மடலேறுதலை   உடன்   கைவிடுவாயாக;  எனத்தோழி 

தலைவனிடம்  வேண்டுகோள்   விடுத்தாள் .

விளக்கம்..1.இளம் மலர் = இளமையும்,அழகும்   வாய்ந்த  மலர்போன்ற  தலைவி.

2.  துட்டமடல்  =  துன்பம்  விளைவிக்கும்   மடலேறுதல் .

3.  பட்டமரம்  =  முதுமை  அடைந்துவிட்ட   அவ்வைப்பாட்டி .

                                                   10.9. உடம்பட்டு   விலக்கல் .

                                                                       கொளு .

குவிமுலைச்  சிற்றிடை   நல்லாள் என்கருத்து 

செவிகொண்டு,  என்மனம்   தன்மனம்   என்பவள்.

பொருள்;---தலைவனே!  குவிந்த   மார்பகமும்,  சிற்றிடையையும்   உள்ள 

நல்லவளாகிய   என் தோழி  என்கருத்தைச்   செவியில்   வாங்கினால் 

அக்கருத்தையே    தன்   கருத்தாகக் கொண்டவள்;  எனது  

 மனவெண்ணத்தையே   தனது   மனவெண்ணமாகக்  கொண்டவள்; 

ஆதலின்   நீ  வருந்தாதே ! நான்   சொல்வதைக்  கேட்பாள்"  எனக்கூறி 

மடலேறுதலைத்   தடுத்தாள் .   

                                                பாடல்---79.

அரக்கரை     அழிப்பதில்   தன்னைப்   போலவே   எண்ணமுற்ற 

வரக்கருணைச்     சிக்கல்  தணிகையான்   வேல்வழங்   கன்னைபோல் 

உரத்தொளி   சிந்தனை  ஒன்றிய  திறத்தவள்   கருத்தை 

அறத்ததே  அஃதெனக்    குகந்ததே  என்றேற்பாள்   தலைவி .

                                                  பொருள் 

    அறமற்ற   செயல்கள்   புரியும்   அரக்கர்   கூட்டத்தை   அழிப்பதில்  

அன்னையைப்   போலவே   மனம்  கொண்டவன்  தன்னைச்சார்ந்தோருக்கு  

கருணையாக   வரங்களை    வழங்கும்  தணிகையான்   சிக்கல்   சிங்கார 

வேலன் " என  நன்குணர்ந்த    அன்னை  பராசக்தி  ,தான்   தவமிருந்து 

பெற்ற  வேலாயுதத்தை மகனுக்கு வழங்கிய  அன்னை போல,

         என்   தலைவியும்   என்னோடு  ஒன்றியவள்;   எங்கள்   இருவர் 

மனதிலும்  ஒளிர்கின்ற  சிந்தனை  ஒன்றிருக்கும்; தகுதி  வாய்ந்த 

தோழியின் [என்னுடைய]  கருத்து   அறத்தன்மை   வாய்ந்தது,  அக்கருத்து 

என்கருத்தே  ஆகும்"  என்று   ஏற்பவன்   என்  தலைவி.  ஆதலின்   நீ 

துயரடையாதே;மடலேறுவதைக்   கைவிடு!  என   அவனது   திறத்திற்கு 

உடன்பட்டு   மடலை   விலக்கினாள் .

விளக்கம்;-----  1. சிக்கல்  =  முருகன்  குடியிருக்கும்   தலங்களில்   ஒன்று.

                                                        நாகப்பட்டினம்   அருகே   உள்ளது.

2. வேல்வழங்கல்  =  கந்த  சஷ்டிக்   காலத்தில்  சூரனை  வதைக்க    அன்னை 

                                         வேல்   வழங்கல்"  என்னும்  நிகழ்ச்சி  சிக்கலில் 

                                         மிகச்சிறப்பாய்  நடக்கும்   திருவிழா.

3.  ஒன்றிய   திறத்தவள்  =  நானும்,என்   தோழியும்  மாறுபடாத   ஒன்றிய 

                                                       நோக்கு  கொண்டவர்கள்.

                                      மடல்   திறம்   முற்றிற்று .

                                    11.  குறை  நயப்புக்  கூறல்.

      தலைவன்   மடலேறுதலை  விலக்குமாறு  கூறிய   தோழி, அவனது 

குறையைத்  தலைவியிடம்   சொல்ல,ஒப்புக்கொண்டாள் .  அதன்படி,

தலைவனின்   குறையைத்   தலைவியிடம்  தோழி எடுத்துக் கூறுதல் .

எட்டுத்துறைகள் கொண்டது.

                                                11.1. குறிப்பறிதல் .

                                                              கொளு .

மான்விழி    மங்கையின்    தேன்மனக்   குறிப்பை,

கூன்நிலா     நெற்றியாள்    கூர்ந்து   கண்டது.

பொருள்;----    மானின்  விழிபோன்ற  கண்ணுடைய  தலைவியின் 

மனத்திலே   ஊரும்   தேனன்ன   காத்தற்குறிப்பை,  அவள்  தலைவனை 

விரும்பும்  எண்ணத்தை ப்     பிறைநிலவன்ன   நெற்றியை    உடைய   தோழி 

அறிந்து  கொள்ள  முயற்சித்தது. 

                                                        பாடல்---80.

செந்தழல்    செவ்வேட  மந்தமாருதம்  சிந்தை   புகுந்த   

விந்தை    விரிகுழல்    வள்ளியிடம்   அறிந்த   இகுளை

பைந்தமிழ்த்     தணிகைப்       பசுஞ்சோலை    மன்னனால்    மயங்கி

நைந்த,   நல்லின்ப    நிகழ்வை   நானறிந்தேன்   நல்லவளே  !

                                                 பொருள்.

     நல்ல   என்  தலைவியே!  பைந்தமிழ்   போல   இனிமையும்,  அருளும் 

கொண்ட   திருத்தணிகை  வளம்மிக்க    சோலையிலே   சந்தித்த  

தலைவனிடத்தில்   மயங்கி, அன்புற்று,  உறவும்  கொண்டு,  நல்லின்பத்தில் 

ஒன்றிய   நிகழ்வை,

     வள்ளிமலையிலே   வந்த   நெற்றிக்கண்   தீப்பிழம்பில்    அவதரித்த  

தணிகையான்   வேடனாகத்   தென்றல்  காற்றாக   வந்துநிநின்றவன் 

வழியில்   மனமெல்லாம்   நிறைந்து விளங்க,,   அங்கு நடந்த   விந்தைமிகு 

நிகழ்ச்சிகளை   வள்ளியிடம்   கேட்டறிந்த  அவளது  தோழி   இகுளை   போன்று,

          நானும்   உனது  முகக்குறிப்பால்   அறிந்துகொண்டேன். எனத்   தோழி 

தலைவியிடம்   கூறினாள் .

விளக்கம் ;--   1. செந்தழல்   =  சிவபெருமானின்  நெற்றிக்கண்   தீச்சுடரில் 

                                                            அவதரித்தவன் ;

                                                           செந்தீ   போன்று   ஒளிர்பவன்   என்றும்                                                                                     கொள்ளலாம்.

2 . மந்த  மாருதம்  =  மென்மையாக  வீசும்  காற்று;  தென்றல்  காற்று.

3 . பைந்தமிழ்த்தணிகை  =  உருவகம்.

                                                     11.2.  மென்மொழியால்   கூறல்.

                                                                      கொளு .

தலைவனின்     தளர்வைத்     தளிரிள   மென்மையாள் 

தானறியத்    தன்மை     தழுவிக்  கூறியது.

பொருள்;----   தலைவியின்   இன்முகம்  காணாது   தவித்து த் 

தளர்ச்சி  அடைந்த  தன்மையை,மிக மிகப்   பக்குவமாகவும்,

மென்மையாகவும்    தலைவியின்  மனம்   ஏற்கும்  வகையிலும் 

தோழி   சொன்னாள் .

                                                  பாடல்---81 .

பேதலித்த    பித்தறு      பித்தாகி ப்     புகலிடம்  வேண்டி 

நாத!நாத!   நவிலும்  அருணன்   நாடிய    தணிகை;

காதலின்      கலிமகன்   கையுறை  கசிமனம்  கண்காண் 

சூதசோலை    பித்தாகி  நிற்கின்றான்  யாதுரை  நேரிழை !

                                               பொருள் 

  ஈடுபாடு    மிகமிக  நிறைந்து   பெண்கள்  காலடியில்   கிடந்து,

காமப்பித்தனாகி    அலைந்த   காலை,  

  அப்பித்தும்   பற்றும்    அறவே    வெறுத்து, புதிய   பித்து   ஒன்றைப் 

பற்றிக்கொண்டு, அதுவே    தனது    புகலிடம்   இறைவா!  இறைவா!

முருகா!  முருகா!  எனக்கதறி ,  அழுது, புரண்ட  அருணகிரி  நாடி 

அடைந்த    திருத்தணிகைத்   திருமுருகன்   போன்று,

        நின்னையே   விரும்பிய  பாவம் செய்த  தலைவன், கையிலே 

பூந்தழையாடை ,  கண்ணிலே   ஏக்கம்,  நொந்துபோன   மனம்,

இவற்றுடன் நமது  மாமரங்கள்  நிறைந்த  தினைப்புனச்    சோலையைக் 

கண்கள்   வெறித்துப்  பார்க்கப்  பித்து பிடித்தவன்போல்  அங்கேயே 

நிற்கின்றான்; அழகிய   தலைவியே!  அவனுக்கு   நான்    யாது   சொல்ல?

என்று  தோழி    தலைவியிடம்   வினவினாள் .

விளக்கம்;---- 1.பேதலித்த பித்தறு   =  பெண்களிடம்  ஆசையுற்ற  மனப்பித்து  நீங்க.

2 . பித்தாகி  =  [முதற்பகுதி]  முருகனின்   மீது   அளவிலாப்   பத்தியுற்று 

                            [ இரண்டாம் பகுதி]  தலைவியிடம்   அளவிலாக  காதலுற்று.

3 . அருணன்  =  அருணகிரியார் 

4 . கலிமகன்  =  பாவம் செய்த  மகன்.

5 . சூதசோலை  =  மாமரச்சோலை .

                                              11.3.விரவிக்கூறல் .

                                                        கொளு .

தண்தலைவி    மென்மனம்    தளராத    நிலையில்,

வன்மொழியும்    மென்மொழியும்  விரவி   உரைத்தனள் .

பொருள்;--   தலைவனது    குறையைத்   தலைவனிடம்   கூறும்பொழுது,

தலைவியின்  மென்மனம்   வருந்தி வாடாத   தன்மையில்  வன்மையும்,

மென்மையும்   கலந்து, கூறினாள் .

                                               பாடல்---82.

சூரனவன்    மாண்டான்;  பதுமையே   கார்மயில்  சேவலாய்,

வீரத்        தணிகையடி   வாழ்கிறான்'    என்றுரை  செய்திபோல் 

மாறனை  வென்றோன்  மலர்மரம்  மகிழ்கிளி   மனைக்கே 

நாறுகனி   நன்கூட்டும்  நிலைதளர் நின்றான்; நீ காணின் ?

                                                பொருள் 

    பதுமகோமளையே    உன்கணவன்  சூரபதுமன்   போரிலே   மாண்டுவிட்டான்;

ஆனால்   அவன்  மயிலாகவும்,சேவலாகவும்,  திருத்தணிகை   முருகன்  

 காலடியில்   நிலைபெற்றுவிட்டான்"  என்று  அழிவும்,ஆக்கமும்   கலந்த 

செய்தியைக்    கண்டோர்  உரைத்ததுபோல,

         தோழி   தலைவியிடம்   நமது    தலைவன்   நமது  

 தினைப்புனச்சோலையிலே மலர்ந்து குலுங்கும்  மரத்தினிலே  மகிழ்ச்சியாக 

அமர்ந்திருந்தன   ஆண்  கிளியும் ,பெண்கிளியும் ;ஆண்கிளி   பெண் கிளியின் 

வாயில்  பழங்களை   ஊட்டிவிட்டுக்   கொண்டிருந்தது;  இக்காட்சியைக்  கண்ட 

தலைவன்   அப்படியே  நிலை  தளர்ந்து,நடக்கமுடியாமல், தன்னிலையை 

நினைந்து  சோகமாய்   நின்றான்; இக்காட்சியை   நீ   பார்த்திருந்தால் 

உயிரையே   விட்டிருக்கக்கூடும் ; எனத்    தலைவன்  மீது  அன்பு  காட்டவேண்டி 

அவன்   குறையை  எடுத்துச்சொன்னாள் .இங்கு   கிளிகளின்  மகிழ்வுச்செயல் 

கண்டு  தலைவன்  தளர்ந்தது மென்மை   தழுவியது;    அக்காட்சியைத்  

தலைவி   கண்டிருந்தால்   உயிரையே   விட்டிருப்பாள்"என்பது  வன்மை 

தழுவியது.

விளக்கம்----1.  வீரத்தணிகை  =  போரிலே    சூரனை   அழித்த  வீரன்;                                                        தணிகையில்   வீற்றிருக்கும்  மாமுருகன்.

2.  மாறனை  வென்றோன்  =  அழகு, காதல், நளினம்  போன்றவற்றால் 

                                                            மன் மதனை வென்ற  தலைவன்.

3.  மனைக்கே  =  மனையாளான   பெண்  கிளிக்கே .

4.  நீ    காணின்   என்ற  சொல்   முடியாமல்   வினாவை  எழுப்புகிறது.

    மனம்   தாள  மாட்டாய்;  இறந்து படுவாய்;  எனத்   தலைவியின்  இளகிய 

மனத்தை  மறைத்துக்கூறுகிறது.

                                               11. 4. அறியாள்    போறல் .

                                                                கொளு .

தொட்டுக்       காட்டியதை    ஏலாது,

தொடாத    ஒன்றைத்    தொட்டது.

பொருள் ;--  தலைவனது   வாட்டம்   உரைத்த ,    தோழியின் சொல்லை, 

ஏற்காதவள்   போலப்    பொதுவான  புதுச்செய்தியைத்  தலைவி  விவரித்தாள்.

                                               பாடல்--83.

தணிகைக்    காவலன்    அணிவேலன்     மணிமார்பன்   உலகின் 

பிணியான    பேரரக்கன்   வீழ்த்தி,   நனியூர்திக்    கொடியாய்த் 

தனியருள்    தவழாறு,   குணக்குன்று,  மணச்சோலை   சூழ்ந்த,

இனியவன்   கனிவால்   வையகம்   வாழட்டும்   என்னவளே !

                                               பொருள் 

  எனது   இனிய    தோழியே!  திருத்தணிகையின்    காவலனாயும், 

மணியணிகள்    அணிந்த    மார்பிலே   எப்பொழுதும்   வேலாயுதத்தை 

அணியாக,அரும்பொருளாக  வெற்றிதரும்  அன்னை  அன்புப்பரிசாக 

அணிந்திருப்பவனும் ,  

         உலகத்தை   அடக்கி,   ஆண்டு, துன்பப்படுத்தி   வந்த  பிணியான 

பெருவரங்களைப்   பெற்ற  சூரபன்மன்   என்ற  பேரரக்கனை    அழித்து,

அவன்மீது  கொண்ட கருணையால்  இருகூறான   அவனை ஊர்தி 

மயிலாகவும்,  கொடிச்சேவலாயும்   கொண்டவன்;  அவனது   அருளும்,

புகழும், உலகெங்கும்  பரந்துள்ளது .  தவழ்ந்து   ஓடும்   ஆற்றுநீர் 

நிலைகளிலும், உயர்ந்த  வளங்களைப்   பெற்ற   மலைகளிலும், மணம்மிக்க 

சாலைகளிலும்,  கடலலைகளிலும்   சூழ்ந்து நின்று  விளங்கும்  இனிய 

புகழுடையவன்   அருளும்   அருளால்   இவ்வையகம்   நன்கு   வாழட்டும்!

என்று ,  தோழிக்கு  விடையிறுத்தாள் .

விளக்கம்;--   தலைவனது   குறையைக்   கூறிய   தோழிக்கு, இது  நேரிடையான 

விடையன்று; ஏற்போம்:"  ஏற்கமாட்டோம்:"  எனச்சொல்ல வேண்டும்; அதை 

விடுத்து,   முருகன்  புகழ் பாடும்   பொதுப்பொருளைக்   கூறினாள் ;

        இங்கு    உட்பொருளாக,  சிலேடைப்பொருளாகத்   தலைவியின்   உள்ளம் 

வெளிவருகிறது.

உலகின்   பிணி  =  தலைவனின்  பிரிவுத்துயர்;

பேரரக்கன்  =  பிரிவால்   துயருறும்   மனம் 

வீழ்த்தி  ==   அழித்து{  மாற்றி]

அருள்,மயில்,சேவல்  =  ஏற்றுக்கொண்டு,  சோலை, நிலம்  சுற்றிவரும்   உலா.

தனியருள் =  தலைவனுக்கு   மட்டுமே   சுரக்கின்ற  அமுத  ஊற்று.

ஆறு,குன்று,  சோலை   சூழ்ந்த  இனியவன்=    ஆற்று  நிலைகளிலும்,

மலைகளிலும், சோலைகளிலும்   சுற்றிச்சுற்றி  வந்து  அனுபவிக்கும்  இனிமை 

கனிவால் =  கனிவாக   அமையட்டும்;

வையகம்   வாழட்டும்=   உலகில்  இனிய   வாழ்வு   உனக்கு [தலைவனுக்கு]

அமையட்டும்.

   என்பதால்   தலைவனின்   குறையை   யாம்   போக்குவோம்"  என்று  கூறுகிறாள். 

                                                11.வஞ்சித்து   உரைத்தல் .

                                                        கொளு .

மனத்துள்    கொண்டதை   மறைத்துத்   தலைவி,

குணக்குன்றோன்   கழல்புகழ்  தோழிக்குக்    கூறியது.

பொருள்;---   மனத்திலே   நிறைந்திருக்கும்    தலைவன்  மீதுள்ள   பற்றை 

மறைத்தபடி,  மறைநாயகன்  தணிகை   மாமுருகன்   புகழைத்  தோழிக்குக் 

கூறியது.

                                                 பாடல்---84.

தணிகைமலை      யன்ன     கயிலையில்   தன்னை    மதியாது,

மணிமுடி     நான்கால்   மமதைப்    பிரமனை,   மறைப்பொருள்

பணிவும்    அறியா    அணிச்சிறை    பரமன்  விடுத்தபின்

கணிதொழில்   பெற்றும் , குடிலைக்குக்   காலடி   போற்றிநின்றான்.

                                                பொருள். 

  திருத்தணிகை  மலைபோன்ற   பெருமையும்,கொண்ட   கயிலை   மலையில் 

அமர்ந்திருந்த    தன்னை   வந்து வணங்காமலும்,  போற்றாமலும்,  தனது 

தந்தையை  வணங்கச்சென்ற   பிரமன்;நான்குதலைகள்   உடையவன்   என்ற 

கர்வம்   கொண்டவன்; அவனது   மமதை   போக்கிட,   அவனை   அழைத்த  

முருகன்   அவனிடம்,   பார்க்கும்   தொழில்   கேட்டார்;  படைப்புத்   தொழில் 

என மீண்டும்   மமதை  காட்டினான்   பிரமன்;  படைப்பை   எதன்   

அடிப்படையில்   செய்கிறீர்?  என வினவ,  வேதம்' என்றான். எங்கே 

வேதம்  கூறுங்கள்!  என்றதும்,  அவன்   ஓம்"  என்ற   பிரணவத்தை   முதலில் 

கூறினான்; முருகனோ   சற்று நில்லுங்கள:  இப்பிரணவத்தின்  பொருள்   யாது?

கூறுங்கள் !  என்றிட   குழப்பம்,அச்சம்,   இவற்றால்  மயங்கிய   பிரமன் 

பொருள்  தெரியாது   விழித்தான்;   அதனால்  சினமுற்ற    முருகன்  

மறைப்பொருள் அறியாத   நீர்  படைப்புத்   தொழில் செய்தல்   கூடாது;

நீவிர்   இருக்கவேண்டிய இடம்  சிறையே  என  அவரது   தலையில்  ஒரு 

குட்டு   குடிச்சிறையில்   அடைத்தார். பிறகு,  தந்தை   சொற்படி  விடுத்தார்;

படைப்புத்   தொழிலாற்றவும்  அனுமதி   வழங்கினார்; தனது   கர்வமெல்லாம் 

இழந்த பிரமனோ  சிவபெருமானுக்கு  பிரணவோபதேசம்   அருளிய  மேன்மை 

அறிந்து,   தானும்   அவ்வுபதேசம்   பெறவேண்டும்   என்று  முருகனின்  காலடி 

வணங்கியபடி   நிற்கின்றான்; என்று முருகனின்   பெருமையைத்  தலைவி 

தோழியிடம்   கூறினாள் .

விளக்கம்;---   தலைவி    தன்மனத்தில்    உள்ள காதலைத்  தெரிவிக்காமல் 

முருகன் பெருமையாகப்  ப்ரும்மதேவன்   காத்துக்கிடப்பதை   விவரித்தாள்;

      முதலில்   சிறைமீட்பும்,  படைப்புத்தொழிலும்   பெற்ற   பிரமன் 

குடிலை  உபதேசம்  பெற  விரும்பியதைப்   போலத்   தலைவனும்   தோழன் 

வழியிலே   தலைவியோடு  கூடிய   தலைவன், 

குடிலை   உபதேசம்  பெற நிற்கும்   பிரமனைப்போலத்   தோழியின்  

உதவியால்  தலைவியைச்  சேர்வதற்கு  நினைக்கிறானோ!  என்பது 

உட்பொருள்.

                                             11.6. புலந்து  கூறல்.

                                                         கொளு .

வெளிப்படை   விடுத்து,  வன்மைச்   சொற்களால் 

தலைவியிடம்   புலந்து  உரைத்தாள்   தோழி.

பொருள்; --   வெளிப்படையாகப்   பேசாமல்,  மறைத்துப்   பேசும்,

தலைவியின்  நிலையை, ஏற்காத    தோழி,  மிகுந்த துயருடன்  கூறிய 

செய்தி.

                                              பாடல்---85.

வஞ்சகம்     அழித்து,   வாய்மையை    ஏற்கும்   வளத்தணிகைக்  

கஞ்சமலர்ச்    சோலையின்  அஞ்சுகமே!    நெஞ்சுறு  சொல்லை 

வஞ்சமில்லா   வஞ்சிகளிடம்  உரைப்பாய்;  வஞ்ச     மாம்நான் 

கெஞ்சுசொல்    கேளாதே!   கொள்ளாதே!  மஞ்சிலா   மதியாகு! 

                                                பொருள். 

    வஞ்சகம்   நிறைந்த   அரக்கரை   அழித்து,  நல்லோர்களின்  முனிவர்களின் 

போற்றுதலை   ஏற்று   மகிழும்   திருத்தணிகையின்   வளம் மிக்க  தாமரைச் 

சோலையிலே   உலவுகின்ற  அழகுக் கிளி போன்ற   என் தோழியே!

உனது   மனத்திலே   தோன்றும்  உண்மையான  நற்செய்திகளை, உன்னோடு 

பழகும்   உனது   அன்புமிக்க   தோழியரிடம்   உரைத்து  மகிழ்வாய்!

 வஞ்சகம்  கொண்ட   உன் தோழியான   நான்    உன்னை வணங்கி, உரைக்கும் 

சொல்லின்  நன்மை   தீமைகளிராய்ந்துபார்!  அப்படியே   ஏற்காதே! மனத்துள் 

கொள்ளாதே! மேகம்  விலகிய   நிலவுபோல  உன்மதி  நிலவட்டும்! என்று,

தலைவியோடு   புலந்து [வெறுத்து]  தோழி கூறினாள் .

விளக்கம்;--- 1.  வஞ்சகம்=  தீய அரக்கர்களின்   பொய்மையான   போற்றுதல்.

2.  வாய்மை  =  முனிவர்கள்,சான்றோர்கள்  போற்றும்  போற்றல்.

3. மஞ்சிலா  =  மஞ்சு =மேகம் . சூழாத  .

                                                    11. 7.வன்மொழியாற்கூறல் .

படநாகப்   பேரல்குல்   மடமானே! மனம்கொள்;

மடலேற   முடிவுற்றான்  வன்மொழி   பகர்ந்தாள் .

பொருள்;  ---   நாகத்தின் படம்போன்ற   பேரல்குல் உடைய  மடமான்  

போன்றவளே! தலைவன்    மடலேற முடிவு செய்துள்ளான்" வன்மை  மிக்க 

இதை  நீஉணர்க!  என்று   தோழி  தலைவியிடம்   கூறினாள் .

                                               பாடல்---86.

தணிகைப்    பேராளன்   அணிநீறு   மேனியில்    பூசிக்கொண்டு,

மணியொளிர்   மதிமுகத்     துணிஓவியம்   கையில்  ஏந்தித் ,

துணிவோடு   தெருவில்  வருவதற்கு  முன்னின்ற     தேனோ !

பனைமடல்    பார்வையோ?  பாவையே!  பதறும்     பாவிமனம்.

                                             பொருள் 

     திருத்தணிகையில்   வாழும்  பேரருளைக்கொண்டவனாகிய  மாமுருகன் 

அணிகின்ற  திருநீற்றை   உடல்முழுவதும்    பூசிக்கொண்டு,  மணிபோல் 

ஒளிர்விடும்  மதிபோல்   காட்சிதரும்  உனது முகத்தை  ஒருதுணியில்  

ஓவியமாக    வரைந்து,  அதனை ஒருகொடிபோல்   கையிலே   தாங்கிக் 

கொண்டு, தனது  பெருமை,  கல்வி  போன்றவற்றை விலக்கிவிட்டுத் 

துணிவோடு   நம்மூர்த்தெருக்களில்   வந்து நிற்பதற்குக்   காரணம்  என்னவோ?

முன்  நிற்கவைத்தது   தேனாகிய   நீ தானோ? ஏறி   அமர்ந்த   பனைமடல் 

குதிரையைக்  காண்போர்   உனது  காதல்  பற்றிப்  பேசும்  பார்வையாக   அது 

அமையுமோ?  அழகிய   என் தோழியே!  என்மனம்   படாத   பாடு   படுகிறது;

இதனை  விலக்கி   அவன்மீது   அன்பு செலுத்துவாயாக! எனத்  தோழி 

வேண்டினாள்.

விளக்கம்.....  1.  பேராளன்  = அடுத்தவர்கள் மீது   பேரருள்  புரிபவன்; அவனூரில் 

                                அருளற்று   நீ   விளங்குகிறாய்! என்பது   உட்பொருள்.

2.  முன்னின்ற   தேனோ?  =  காரணம்   முன்னின்ற   அப்படத்தில்   உள்ள 

                                                         நீதானோ?  என்றும் ,  இனிமை வாய்ந்த   தேனான  நீ                                                          கடுமை  மிக்கவளாக   மாறலாமோ ? என்பதும்                                                                     பொருள்.

3.  பார்வையோ?    =  பார்வைப்பொருள்;   மடல்  என்பது   ஊரார்   அறியும் 

                                           காட்சிப்பொருள்  ஆகுமே!

                                                      11. மனத்தொடு   நேர்தல் .

                                                                கொளு .

ஆற்றான்    தலைவன்   அங்கது    உணர்ந்து 

காற்றாய்க்   கலக்கக்  கனிமொழி  நேர்ந்தாள் .

பொருள்;---   தனது  பிரிவினால், மிகுந்த துயருற்று   வருந்தும்   தலைவன்  மீது 

கருணை கொன்ட   தலைவி, மனம்  எனும்   காற்றால்   அவனோடு   கலக்க,

மனதில்  முடிவுற்றாள் .

                                                     பாடல்-- 87.

ஒருபோதும்  பிரியாத  குறமகள்  கொண்ட  விருப்பத்

திருத்தணிகைச்      சோலை  கருப்பத்தில்   உருவான  பெருமை,

மறக்க,     மறைக்கவும்   வல்லேன்;  மனக்கதவே!   தாள்திற!

பெருங்காதல்     ஆரிதயம்   பேசிடு!   அருமகன் ; என்றாள் .

                                                பொருள். 

        தன்னைவிட்டு    ஒருபோதும்   பிரிந்து   செல்லாத  முருகனையே    விரும்பிப் 

பைஞ்சேவடி   போற்றும்   குறவள்ளியைப்   பிரியாத   முருகனின்  

 திருத்தணிகைச்      சோலை   நடுவே   உருவான எங்களது    காதலை   நான் 

ஒருபோதும்   மறக்கவும்  மாட்டேன்;   மறைக்கவும்  மாட்டேன்; எனது   இனிய 

மனமே!   உனது   வாயிற்கதவைத்    திறப்பாய்!  வெளியே   வந்து   பறந்துபோய் 

எனது   இனிய   தலைவனை   நாடி,  யான் கொண்ட   காதலின்  தொன்மை,

பெருமை  ,அவன்மீது  பற்றுக்கொண்ட   என்  உள்ளம்   பற்றியெல்லாம் 

விரிவாக   எடுத்துரைத்து,  அவனது     ஆற்றாமையைப்   போக்கிடு!

என்று   தனது   மனதிடம்    சொல்பவள்போல்  தலைவன்  அறியச்சொன்னாள் 

தலைவி.

விளக்கம்....1  கருப்பத்தில்  =   சோலை   நடுவே  .காதல்   உருவாக்கிய   இடம்.

2.  பெருமை =  பெருமை  மிக்கதாகிய   காதல் .

3.   ஆரிதயம்  =   அருமை+   இதயம்=   தலைவன்  மீது   கொண்ட  காதலை 

                                  மறைத்திருக்கும்   மனம்.

மெய்ப்பாடு --------  அச்சம்.    

           பயன் ----------   குறைநேர்தல்.

                                                12.சேட்படை .

  தலைவனது   குறையைப்   போக்கிடத்   தலைவியோடு   உரையாடும்  தோழி 

தலைவனிடம்   தலைவியின் பெருமையையும், அவளை   அடைதல்  

எளிதாகாமையையும் தலைவனிடம்  விளக்கி, புணர்ச்சியோடு   நில்லாது 

மணம்  கொள்ளல்  இன்றியமையாதது   பற்றியும்  விரிவாக  எடுத்துரைத்தல்.

 தலைவியின்   அருகு   தவிர்த்து,  வெகு தொலைவில்  தலைவனை   நிறுத்துதல்.

இருபத்தாறு   துறைகளைக்    கொண்டது.

     தலைவன்  கூறுகின்ற   செய்திகளுக்கும்,  செயல்களுக்கும்  வெகு தொலைவு 

காட்டி  மறுப்பு  உரைத்து,   அவனை   வரைவு  வற்புறுத்தல்.

                                         12. 1 . தழை கொண்டு சேறல்  .

                                                          கொளு .

மலராள்    மனமது     மலர்ந்தபின்  மகிழ்வுடன் 

மலராடைக்   கையன்   நலம்காண   நாடியது.

பொருள்;----   இலக்குமியன்ன   தலைவி  மனம்  குழைந்து   உடன்பாடு  காட்டிட,

மகிழ்வுற்ற தலைவன்   கையிலே   தழையாடையை  ஏந்தியவண்ணம்  தோழி 

முன்   சென்றுநின்றான்.

                                              பாடல்---88.

காட்டு    மலரையும்,     விண்ணாட்டு   மலரையும்    ஏற்றவன் 

வேட்டுவக்       குலத்தணிகைத்      தோட்டத்தில்   சூட்டிதழ்     ஆடை,

வாட்டுள       வளவில்லன்     கூட்டுடன்   வாடிநான்   நிற்கிறேன்;

பாட்டுத்தமிழ்    மெல்லீர்!    வாட்டிதயம்     போக்கிட    முன்வாரீர்! 

                                           பொருள் 

      வள்ளிமலைக்காட்டிலே      அவதரித்த வள்ளியம்மையையும்,  தேவவுலகில் 

அவதரித்த  தெய்வயானையையும்,  தனது   இரு  சக்திகளாக  மணந்து  ஏற்றுக் 

கொண்டவன், வேட்டுவர்கள்  நிறைந்து   வாழ்கின்ற  திருத்தணிகை   மலைத் 

தோட்டத்தில்   மலர்ந்த    மலர்களால்   கட்டப்பட்ட   தழையாடையைக் 

கையில்   ஏந்தியபடி,  வாடும்   உள்ளத்துடன், மன்மதன்   வாட்டி வதைக்க,

அருகே   நிற்கவும், மிகுந்த துயருடன்   நிற்கிறேன் ;  இனியதமிழ்ப்பாட்டுபோல 

மென்மையும்,நன்மையும்  கொண்ட  பெண்களே!  எனது    துயரைப்போக்க 

என்முன்   வாருங்கள்!  பூந்தாழையாடையை    ஏற்றுக்  கொள்ளுங்கள்!

என்று,   தலைவன்  தோழியிடம்   வேண்டினான்.

விளக்கம்;-----   1.  காட்டுமலர் =  வள்ளிமலை  வள்ளி.

2.  விண்ணாட்டுமலர்  =  தெய்வயானை .

3 .  சூட்டிதழ்   =  மலரிதழ்களால்   கட்டப்பட்ட   தழையாடை 

4 .  வளவில்லன்  .  நன்மை  அளிக்கின்ற வில்லை [மலரம்பு பொருத்திய கரும்பு 

                                     வில்]  உடையவன்.

                                                12. 2. சந்தனத்தழை   தகாதென்று   மறுத்தல் .

                                                                கொளு .


அழகுறு     தலைவியின்     பழகுறு   உரிமையான் 

விழையவே   வேற்கண்ணாள்  விரைந்து  விலக்கியது .

பொருள்;---   குறையைப்   போக்கி, நிறைமனம்  பெற்றபின்   தலைவன் 

தொடர்ந்து  வந்துநிற்க,த்  தோழி   அவனைத்    தடுத்து  நிறுத்தி   விலக்கினாள் .

                                                 பாடல்--89.

மாலைமலை,    மாலைமதி,   மாலைக்குறம்,  மாலைக்கிரி 

மாலை       ஆதவத்     திருத் தணிகை   மலையான்       நாட்டினில் ,

மாலயன்  போன்ற   மலர்வண்ணம்  விடுத்து,    மாசுபடு ,

கோலச்    சந்தனத்தழை    குலப்பெயர்   கெடுக்கும்; ஏலோம் !

                                               பொருள் .  

    திருத்தணிகையில்   வீற்றிருக்கும்  முருகனுக்கு   அரக்கனாகிய    தாரகன் 

தோல்வியுற்று    அழிந்து  வெற்றி  மாலையாக  மாறினான்.நிலவுபோன்ற 

முகம்கொண்ட    தேவயானை  மாலையானாள் ;  குறவள்ளியும்  

 மாலையானாள் ;   திருப்புகழ்  பாடிய   அருணகிரி  அளித்த   தமிழ்    மாலை 

எப்பொழுதும்   அவன் கழுத்தில்  அணியாக   விளங்குகிறது.

    மாலைநேரச்சூரியன்போல்    ஒளிர்விடும்   திருத்தணிகை  மலையான் 

நாட்டில்    வாழும்  குலமக்கள்   நாங்கள்; எமது   குல   வழக்கத்தின்படி 

திருமால் போன்ற    வண்ணமலர்  கருங்குவளையே   ஏற்போம்;  பிரமன் 

போன்ற வண்ணம் கொண்ட   தாமரை  போன்றவற்றையும்   ஏற்போம்;

அழகுமிகுந்த   சந்தனத் தழையை   நாங்கள்    அணிந்தால்   உற்றார் 

ஊரார்   பழி சொல்வார்கள்; குடிப்பெயர்   கெட்டுவிடும்;   ஆதலின்  நீ   தரும் 

இந்த   சந்தனத்   தழையாடையை    ஏற்கமாட்டோம்"  என்று கூறி,  அதனை 

ஏற்க    மறுத்துவிட்டாள். தோழி.

விளக்கம்.--1  மாலைமலை  =  மலையாகிய   தாரகன்  போரில்   தோற்று,

விழு ந்து  வெற்றி மாலையானான்.

மாலை மதி  =   மாலைநேரத்து  நிலவுபோல்  முகம்கொண்ட   தெய்வயானை 

                               வெற்றிப்பரிசாக  மண   மாலையானாள் .

மாலைக்குறம்  =  வள்ளிமலைக்  குறத்தி   முருகனால்   காதலிக்கப் பெற்று 

                                     மனையாள்  ஆனாள் .

மாலைக்கிரி  =  தமிழ்மாலை  புனைந்த    அருணகிரியின்    தமிழும் 

                                 முருகனுக்கு    மாலை  ஆயிற்று.

2.  மாலயன் =   திருமால்  அயன்   திருமால்  வண்ணம்   கருநீலம்.  குவளைமலர்.

                            பிரமன்     வெண்மை    தாமரை  போன்றன.

                                               12.3. நிலத்தின்மை   கூறி மறுத்தல் .

                                                                 கொளு .

வியன்தார்     வேந்தே!   விரும்பிநீ   கொணர்இத்தழை 

அயல்தழை;   ஏலார்      எம்மனோர்   என்றாள் .

பொருள்;----  மலர்மாலை  அணிந்த  மன்னனே! நீ   விருப்பமுடன்   கொண்டு  

வந்த   இத்தழையாடை   எம்ம லையில் மலர்ந்ததல்ல;  வேறு நிலத்து  

மலர்ந்து  உருவான தழையாடைகளை   எளிதில்   கண்ட   எம்மக்கள் 

ஏற்கவும்  மாட்டார்;  அணித்தலையும்   விரும்பார்;  ஆதலின்   இது  எம்மால் 

ஏற்கத்தக்கது  அன்று" என்றால்  தோழி.

                                            பாடல்---90 .

அறமற்ற     வரக்கர்   கூட்டம்   அழிந்த   மகேந்திரப்போர் ,

அறப்போரிலே    அழிந்தோர்க்    கிரக்கம் கருணைத்   திறமுற்று,

மறத்தலைவன்    மீளமைதி  குறைச்சினம்   தணிந்திட நின்றதால்

 குறத்தியர்  கொள்ளார்  குன்றயல்பூ;  குலப்பழி  கொள்ளோம்.

                                                   பொருள் 

   அறமற்று  விளங்கிய   சூரன் முதலிய   அரக்கர்  கூட்டத்தை  முருகக் கடவுள் 

மகேந்திரபுரப்போரிலே   அழித்தார்;  அப்போரில்    அழிந்த   

ஆன்மாக்களுக்காக   இரங்கிக்  கருணைத்திறன்   கொண்டவர் ;  வீரத்தின் 

விளைநிலம்;  அதிலிருந்து    மீள, அமைதி  வேண்டி,  குறையாக    விளங்கிய 

சினம்"  என்னும்   எண்ணம்  தணிந்திட,  இம்மலையில்    வந்துநின்றார்;

அதனால்  தணிகை   மலை   இனப்பெயர்பெற்ற   இங்கு  வாழும்  குறவர் 

கூட்டம்,   குறத்தியார் கூட்டம்  ஒருபோதும்   இம்மலை  அல்லாத   இடத்தில் 

மலர்ந்த     மலர்களை   ஒருபோதும்   அணியவும்   மாட்டார்;    அணியவும் 

விடமாட்டார்; ஆதலின்   தலைவனே!   நீகொண்டுவந்த இப்பூந்தழையை

நாங்கள்  ஏற்கமாட்டோம்; என்று  பிறநிலத்து   மலராடை   ஏற்காத  

 தன்மையை  விளக்கி, தழையாடை  பெறுவதைத்   தவிர்த்தாள்   தோழி.

விளக்கம்;----- 1.  மகேந்திரப்போர்  =   சூரனையும்,  அவனது   கூட்டத்தையும் 

                                   அழிக்க,  முருகன்  அவர்மீது  தொடுத்த போர்.

2.  மீளமைதி  =  சினத்திலிருந்தும், அரக்கரழி   செயலிலிருந்தும்   மீண்டுவர 

                                அமைதி   வேண்டி   அமர்ந்த தணிகை  மலை.

3 . குறைச்சினம் =  குறைவினை   வழங்கும்   சினம்   என்ற  கொல்லி.

4 .  குன்றயல்  பூ  =  தணிகை  மலையை  விட்டு  வேறு   மலையில்   மலரும்   பூ.

                                                12. 4.  நினைவு  அறிவு கூறி   மறுத்தல் .

                                                            கொளு .

மலரணி     தலைவி     மனமறிந்தே    மலரணி 

நலமே  கொள்வோம்;  இல்லெனில்   ஏலோம் .

பொருள் ;----   தலைவனே!  நீ  விரும்பிக்   கொணர்ந்த   இததழை  ஆடையை 

மலர்களை   அணியாக   அணிந்துள்ள   தலைவி, அறிந்து,ஏற்க!  என்றவழியே 

ஏற்போம்;  தலைவியின்  அனுமதி   கிடைக்கவில்லையெனில்   கையுறை 

வாங்க மாட்டோம் "  என்று தலைவனிடம்   தோழி  கூறினாள் .

                                                பாடல்--91 .

கற்பகம்,    காட்டு      மல்லி,     பொற்பிரு   பக்கமும்     பூத்த வன் ,

நற்றணிகை    அற்புதத்     தழையே    ஆயினும்,  சிற்றிடை 

இற்றிட   விளமுலை   ஏற்றிட   உற்றவள்   உரைப்பின்   

பெற்றிடுவோம்;    பற்றிலாள்     பகர்சொல்    பற்றாகும்    அறிநீ.

                                                பொருள் 

   விண்ணாட்டிலே    தோன்றிய  கற்பகமலராம்   தேவயானையையும்,  

வள்ளிமலைக்    காட்டிலே    அவதரித்த  காட்டுப்பூ    வெள்ளியையும் 

தனது   இருபக்கங்களிலும்   மனைவியராய்  அமர்த்திக்கொண்டவன்;

அவனது மலை   தணிகை ஆகும்;   அத் தணிகைச்     சோலையில்   மலர்ந்த 

மலர்த்தழை   ஆயினும்,  இளமை விம்மல் கொண்டு. பருத்த  முலைகளின் 

சுமையால்  இற்றுவிழும்  அளவு  தோய்ந்த   சிறிய   இடையை   உற்றவள்,

வாய்  திறந்து   தழை ஆடையைப்   பெறுக"   என்றுரைத்தாலேயே   நாங்கள் 

அவ்வாடையைப்   பெற்றிடுவோம்;  பற்றியில்லாதவள்   சொல்கின்ற 

சொல்லிலே   தான்  பற்று  வெளிப்படும்;  இதனை    நீ    அறிவாயாக"  என்று 

தலைவிக்கு   மலராடை  கொடுக்கவந்த   தலைவனைத்  தடுத்து,  அதனை 

ஏற்காமல்   திருப்பி    அனுப்பினாள்   தோழி.

விளக்கம்------1.  கற்பகம்  =  விண்ணுலகில்   மலரும்  மலர்;  அதனிடம்   எதைக் 

                                                         கேட்டாலும்  உடன்   வழங்கும்.

2.  அற்புதத்தழை  =  தணிகைச்   சோலையில்  மலர்ந்த  தழை;  ஏனைய 

                                          மலைகளைக்    காட்டிலும்  முருகனது  மலையில் 

                                          தோன்றியதால்    அற்புதம்   ஆயிற்று.

3.  உற்றவள்  =   உனது    தலைவி;   நீ  காணவந்த   தலைவி.

                                               12. 5.  படைத்து   மொழியால்    மறுத்தல் .

                                                            கொளு .

மென்மேலும்   மிளிர்தழை   மன்மகன் கொண்டுவரத் 

தன்மனக்    கருத்தால்  தடுத்தே   உரைத்தனள் .

பொருள்;  நற்பூக்கள்  மிளிரும்   தழையாடையை மேலும்மேலும் 

கொண்டுவந்தான்   தலைவன். அதைத்   தடுப்பதற்கான   காரணங்களைத் 

தானே   உருவாக்கிக்கொண்டு, தழையாடையைப்    பெறாமல்  விளக்கமும் 

அளித்தாள்    தோழி.

                                                பாடல்--92.

புதுப்பூச்     சந்தனம்   பூத்ததோ    பொதிகையில் ; பூவழகி

மதுவனத்   தணிகை;  மற்றவர்  கண்கள்  மலர்வினாவாம்;  

இதுவுந்தன்   அன்பெனின்     அதுவும்   குறையாகும் ;   ஆதலின்,

பதுமம்,   நீலோத்பலம் ,  பனியிதழ்  பற்றிவா!  பற்றுவோம். 

                                                பொருள் 

     தலைவனே!   நீ  கையில்   கொண்டுவந்திருக்கும்   இப்பூவாடை, பூந்தழை ,

பொதிகைமலையில்  பூத்துக்குலுங்கும்   சந்தனமலர்களால்   கட்டப்பட்டது;

தலைவி   வீற்றிருக்கும்   இடமோ  தேன் நிறைந்த  மலர்கள்  நிறைந்த  

 சோலையை   உடைய   திருத்தணிகை  மலையாகும். நீ தரும்   சந்தனத் 

தழையாடையை   அணிந்தால்   இவ்வூரில்   உள்ளவர்கள்   வியந்து  

பார்ப்பார்கள்;  இம்மலர்   எங்கிருந்து  வந்தது?  எப்படி   வந்தது? 

என்ற   வினாக்கள்   எழும்;    இவ்வாடை  உன்னன்பு  மிகுதியால்   தரப்படுவது 

ஆயினும்   இங்கும்   ஒரு குறை   எழுகிறது. ஆகவே,  வேறிடத்துப்  பிறக்கும் 

இம்மலர்களை  விட்டுவிட்டுத்     தணிகையில்   சரவணப்பொய்கையில் 

எழுகன்னியரால்  உருவாக்கப்பட்ட   தாமரை,  ஏழுமுனிவர்களால்  

தோற்றுவிக்கப்பட்ட  கருங்குவளை  மலர்களால்    ஆன   ஆடைகளை 

எடுத்துவா!  அப்பொழுது   அவைகளை  ஏற்க  முனைகிறேன்"   என்று 

தோழி  தானே    ஒரு காரணத்தை உருவாக்கிக் கொண்டு,  தழையாடை 

பெறுவதைத்  தவிர்த்தாள் .

விளக்கம்----- 1 . மதுவனம்  =  தேன்பொழியும்   மலர்கள்  நிறைந்த  சோலை.

2.  மலர்வினாவாம்  =    ஊரார்    கண்களில்   தோன்றும்   கேள்வி?

                                               மலர்=  தோன்றுகின்ற  வினா =  கேள்வி.                                                                                     வினைத்தொகை.

3.   நீலோத்பலம்   =   தத்பவ   வடசொல்;  கருங்குவளை  மலர்.

                                                12 . 6.  நாண்   உரைத்து  மறுத்தல் .

                                                                  கொளு .

தலைமாலை   கலைகாணின்    நிலைகுலை    நாணுவாள் .

பொருள்;--     அழகே    உருவான   இந்த   உயர்ந்த    தழையாடையை   அணிந்து 

கொள்ளத் தலைவி    மிகுந்த வெட்கம்    உறுவாள்"  ஆதலின்    இதனை   ஏற்க 

விருப்பம் இல்லை"   என்று  தோழி   மறுத்தாள் .

                                               பாடல்---93.

நக்கீரர்     படைப்பூ       நல்லருணப்    புகழ்ப்பூ   விரும்பி,

மக்கிமடி    மலர்ப்பூ    விரும்பாத்      தணிகை       மலையில் 

வெக்கமடை  வியன்பூ  வெறுத்தே    ஒதுக்கும்   வினையால் 

வெக்கம்      தொடும்   விரியிதழை  விரும்பாள் ;  விட்டிடுக  .

                                            பொருள் 

     தமிழ்ச்சங்க   மாப்புலவர்    நக்கீரர்    பாடிய   திருமுருகாற்றுப்படை  என்ற 

நல்மாலையையும் ,  அருணகிரிநாதர்   பாடிய  திருப்புகழ்  என்னும்  நல் 

மாலையையும்  விரும்பி அணிகின்ற  திருத்தணிகைக்    குமரன்  

ஒருநாளுக்குள்ளேயே   தோன்றி,அழியும்   மலர்மாலைகளை    விரும்புவது  

இல்லை. அப்படிப்பட்ட   தணிகை   மலையில்   வாழும்   தலைவி,  சிறுமியாய் 

விளையாடும்   காலத்திலேயே  தன்   கழுத்தில்   மலர்மாலையை   யாரேனும் 

அணிவித்தால்   வெட்கமுற்று   வெறுத்து,  அதனை    அப்படியே   நீக்கி 

விடுவாள்.  இந்த  குணம்  அப்படியே  வளர்ந்தது; இன்றோ  நீ   தருகின்ற 

இம்மலராடையானது,  வெட்கமாய்  மறைத்திருக்கும்   இடை ,அல்குல்   மேல் 

படுவதை,  ஒருபோதும்   விரும்பமாட்டாள்;  தலைவா!  இச்செயலை   நீ 

'நிறுத்திவிடு !  இதனை  யாம்  பெறமாட்டோம்; என்று  மறுத்துரைத்தாள் .

விளக்கம்;     ----1.  படைப்பூ  =  ஆற்றுப்படை   என்னும்  நூலாகிய  மாலை.

2.   புகழ்ப்பூ  =  திருப்புகழ்    என்னும்   பாமாலை.

3.   வெக்கம்  தொடும்  =  வெக்கம்  =  மறைத்துப்    பாதுகாப்போடு   விளங்கும் 

                                                   பகுதி. இடை ,அல்குல்  போன்றன.

                                                   தொடும்=   அவ்வவயங்களின் மீது   உராயும்.

                                                12.  7. இசையாமை  கூறி    மறுத்தல் .

                                                                கொளு .

தொல்குடி  நற்பெருமை   துவண்டிடும்    இச்செயல் 

நல்லவ !   நாம்கொளோம்   என்றே   மறுத்தாள் .

பொருள்;---  குற்றமற்ற   புகழ்  உடையது   எமது  பழமை வாய்ந்த  குடியாகும்.

அதன்பெருமையைக்  குலைக்கும்  செயலை  நாங்கள்   செய்யமாட்டோம்;

தலைவனே!   நீத்தாரும்  இம்மலராடையை   நாம்   பெறமாட்டோம்"  என்று 

தோழி   மறுத்தாள் .

                                                 பாடல்----94. 

காட்டுப்பூ    சூடும்    கானக்குறவர்  கருணைத்    தணிகைத் 

தோட்டப்    பூவரளி ,  தூமல்லி,  முல்லை  சூடலாமோ?

ஏட்டாலும்,    பாட்டாலும் ,  போற்றிப்    புனைகின்ற   மாசில்கூட்டக்   

காட்டுக்     குலத்தவர்  கண்ணியம்  களையோம் ;  கொள்ளோம்.

                                                பொருள் .

  காட்டிலே     வாழும்   குறவர்களான   நாங்கள்  கள்ளி,  முள்ளி,  வேங்கை 

போன்ற    காட்டுமலர்களையே   தலையில்    சூட்டிக்கொள்வோம்; 

எண்கள்  மீது    கருணைகொண்டு    காக்கின்ற  கடவுள்   திருத்தணிகையில் 

வீற்றிருக்கும்   முருகன்   அணிவதற்காக   அமைக்கப்பட்ட    தோட்டத்தில் 

மலர்கின்ற   செவ்வரளி, மல்லிகை,முல்லை   போன்ற  தெய்வீக    மலர்களைச் 

சூட்டிக்கொள்ள  நிணைக்கலாமோ ? 

    தொன்மையைப்  போற்றுகின்ற    ஏடுகளும்,  புதுமையைப்   போற்றுகின்ற 

பாடல்களும்   அழகாக்கப் புனைகின்ற  குற்றமற்ற   கூட்டத்தினர்   விதிகளை 

மீறார்;  கண்ணியத்தைக்  காப்பவர்கள்;  அதனால்   ஆறுமுகக்கடவுளுக்கு  

உரிய  மலர்களை   அணிய  மாட்டோம்;    அதுபோலவே   எமது  குலப்  

பெருமைக்கு   இழிவுதரும்   செயலையும்   செய்ய மாட்டோம்; இறைவனது 

பெருமைமிக்க   மலர்களால்   உருவாக்கப்பட்ட   இம்மலராடையையும் 

நாங்கள்   ஒருபோதும்   வாங்க மாட்டோம்'  எனத்தோழி   தழையாடையைப் 

பெற    மறுத்து  விட்டாள் .

விளக்கம்  1.  காட்டுப்பூ  =  காட்டில்    தானாக வளர்ந்து  மலரும்  காட்டுப்பூக்கள்.

2.  ஏட்டாலும்  =  தொன்மை    வாய்ந்த    ஏட்டுச்சுவடிகள் 

3.  பாட்டாலும்  =  புதுமை    வாய்ந்த  பாடல்கள்.

                                               12.  8.  செவ்வியிலள் என்று மறுத்தல் .

                                                                 கொளு .

மென்பிணை    அன்புடைப்     பக்குவம் 

தன்னுள்ளம்     அறியாள்       என்றாள் .

பொருள் ;---  மென்மையாகிய   குணம்கொண்ட    மான்போன்ற   தலைவி,

அன்பு,   ஆர்வம்  கொண்ட   பக்குவதைத்   தனது   உள்ளத்திலே   கொள்ளாதவள் 

ஆதலின்   இத்தழையை  ஏற்கவில்லை   நான்,   என்று  மறுத்தாள்   தோழி.

                                                   பாடல்---95.

உலகியல்     பல்கலை     உணரவள்ளி ;  சிலவும்     அறியா 

நலமங்கை   உளமார்ந்து   நல்லருள்    புரியும்    தணிகை 

வளச்சோலை   வாழிவள்   வளவீடு   தாண்டாதத்      தன்மையால் 

குளக்குடி    தவளையாய்க்    கல்லாத   பக்குவம்      கொண்டனள்.

                                                பொருள்.

    காட்டிலே   வேடரோடு   வேடராய்ச்     சுற்றித்திரிந்த  வள்ளிப்பிராட்டியார் 

உலகியல்   அனுபவம்  வாய்ந்தவர்; விண்ணகப்    பொன்னரண்மனையிலே  

வாழ்ந்த  நல்லபெண்    தேவயானையோ   உலகறியாத  வெள்ளையுள்ள 

மங்கை.  இவ்விருவரையும் விரும்பி  மணந்துகொண்டு   பேரருள்   புரியும்,

திருத்தணிகை  முருகனது  மலைச்சோலையில்    வாழ்கின்ற   நமது    தலைவி,

வீட்டைவிட்டு   வெளியே  செல்லாத  தன்மை  உடையவள்; 

      குளத்திலே   குடிகொண்ட   தவளை   குளத்தையே   உலகம்  என  

 நினைப்பது போல  இவளும் உலகறியாது,  இன்பத்துன்ப   வாழ்வுப்  பக்குவம் 

தெரியாமல்    வாழ்ந்துவிட்டாள் ; 

         தலைவா!   நீஎன்னிடம்   குறைபோக்க   வந்ததையும்,  நான்    அதற்கு 

வழி   நேர்ந்ததையும்   அவள்  அறியாள் ;  ஆதலின்   அவளறியாது    

இத்தழையை     ஏற்கமாட்டேன்"   என்று  தோழி மறுத்துக்கூறினாள் 

விளக்கம்; 1 .   உலகியல்  =  உலகத்தார்   நடக்கும்  முறை,  நல்லது,

                                                        கெட்டது ,  போன்ற நிகழ்வுகள்.

2.  சிலவும்  =  வள்ளிப்பிராட்டியார்   கற்றதில்    சிலவற்றைக்   கூட  இந்திரன் 

                            மகள்  அறிந்ததில்லை.

3.  கல்லாத  =  கல்வி   கற்றிருப்பினும்   உலக  நடத்தைகளைக்   கல்லாத 

4.   பக்குவம் =  மக்களின்   உள்ளங்களை   உணர்தல், நல்லது   கெட்டது  

                               உணர்தல்,  சினம்,  சீற்றம்   போன்றன   தோன்றுங்கால் 

                               கலந்துகொள்ளும்  பரிபக்குவம்.

                                               12. 9 .  காப்புடைத்தென்று   மறுத்தல் .

                                                            கொளு .

காவல்சூழ்    இடமிது;  காலம்   தாழ்த்தாதே;

பொருள்;------    தலைவனே!   தலைவி   வாழும்   இப்பகுதியில்  காவல்  வலிமை 

கொண்டது; நீ   விரைவில்   வெளியேறு!"   என்று  தலைவனை  

விலகிச்செல்லுமாறு   விரைவு    படுத்தினாள்   தோழி.

                                                     பாடல்-  96.

வில்வேடர்     முள்வேலிக்     காப்பாளர்,    ஐயன்மார்    வந்திடுவர் ;

நல்லவரே!    சென்றிடுக!   தணிகை   கேட்ட     வள்ளிசொல்,

தொல்சினத்     தாய்க்குணம்;    கொல்வில்லார்      மூர்க்கர்,  உடன்பிறந்தார், 

நல்லூர்     நான்குகாதம்;     வல்லிருள் ;   சென்றிடுக!    விரைந்தாள் .

                                                       பொருள்.

          நல்லவரே!    என்னை    நாடிவந்த   திருத்தணிகை  மாமுருகா!   என்னைச் 

சுற்றிலும்   வில்வேல்     தாங்கிய  முள்வேலி   போன்ற   காப்பாளர்கள்  

சூழ்ந்து உள்ளனர்;   அவர்கள்   என்  உடன்பிறப்பாளர்கள்;   என்னைக்காக்க 

எந்நேரமும்   வந்திடுவார்;  தாங்கள்    அவர்கள்    கண்ணில்    படாது   உடனே 

சென்றுவிடுக !   என்று  வள்ளிமலையில் முருகனை   விரைந்தனுப்பிய    

 வள்ளியின்    சொல் போல,

       இங்கும்  தோழியானவள்    தலைவனைப்   பார்த்து,  தலைவ !   எங்களைக்

காணாத    நற்றாய், அவளுக்கே  உடைய   தொன்றுதொட்டு   வந்த சினத்தோடு 

எங்களைத்   திட்டுவாள்;    வில்லையும்,   வேலையும்  எப்பொழுதும்  

 கைக்கொண்ட  மூர்க்க  குணம்   கொண்ட  எமது   உடன்பிறப்பாளர்கள்,

எம்மைச்சுற்றிக்   காவல்  காப்பர்;   உங்களூரோ   இம்மலையைச்    சார்ந்து 

இருக்கவில்லை;  நான்குகாத    தூரம்   தொலைவில்    உள்ளது;  ஆதவன் 

மறைந்துவிட்டான்;    இருள்  சூழ்ந்துவிட்டது; இனிமேலும்  இங்கு   நின்று 

துன்பப்படாதீர்கள்!  உடனே   சென்றுவிடுங்கள்!  எனத்    தோழி   அவனை 

அவ்விடம்    விட்டு    அகலுமாறு    வற்புறுத்தினாள் ; 

விளக்கம்;--- 1 .முள்வேலி  =  மூங்கில்   மரக்குச்சிகளால்   முள்ளோடு  

கட்டப்பட்ட    வேலி   பயிரைக்  காப்பதுபோல  தலைவியை   உடன்பிறந்தார் 

காப்பார்கள்.

2. தொல்சினம்  =  வழி வழி  வரும்   நற்றாயின்  அளவுகடந்த  சினம்.

3 . நான்கு  காதம்  =  நெடுந்தொலைவு;  செல்லும் வழியின்   தொலைவு 

                                          நான்கு    காதம் ;  காதம் =  நீட்டலளவை.

                                                12. 10. நீயே   கூறென்று   மறுத்தல் .

                                                                 கொளு .

அச்சம்   விரட்டும்;   அஞ்சுகத்திடம்    சொல்ல;

ஆதலின்   நீயே    அன்பினைக்   கூறிடு .

பொருள்;----   தலைவனே!  உனது   குறைபோக்கும்    செய்தியைத்  

தலைவியிடம்    கூற  எனக்கு    அச்சமாக   இருக்கிறது;    ஆதலின் 

உன்மன  எழுச்சிகளை  நீயே   சென்று  எடுத்துக்கூறுவாயாக "

என்று  தோழி   தலைவனிடம்  கூறினாள் .

                                                பாடல்---97.

செக்கர்   வானச்     செந்தீத்தழற்      செல்வனின்   சீர்த்தணிகை

மக்கள்    போற்றும்   மதியொளிர்   சோலையில்   மனமிசைந்து 

அக்கறை    கொண்டு  அன்புடன்   அரும்பலா    ஊட்டுமந்தி 

இக்குறை   தவிர்த்து,  ஏற்றிடுக    என்னை   என்றுரைக்க.

                                                பொருள் 

     அந்திவானம்போல்    செந்நிறமுற்ற   முகத்தில்   தோன்றிய  நெற்றிக்கண் 

தழற்சுடரில்     அவதரித்த   செல்வமகனின்    திருத்தணிகைச்சோலையில் 

மக்கள்   மகிழ்வுடன்  போற்றும்    குளிர்மதி   தவழும்  சோலையில், 

அன்பும்,அக்கறையும்   கொண்டு,  பலாப்பழத்தைப் பிளந்து,  சுளைகளை 

எடுத்துத்  தனது  காதலிக்கு   ஊட்டும்,   மந்தியின்   மகிழ்ச்சி  மிக்க  

சோலையில்,  வீற்றிருக்கும்    தலைவியை    நீயே    சென்று  பார்   தலைவா!

உன்மனக்குறையை     அவளிடம்   பேசு!  உன்னை    ஏற்குமாறு  கெஞ்சு!

என்று    தோழி    தலைவனிடம்   கூறினாள் .

விளக்கம் ;-    மந்தி    உயிர்வாழ்வதற்குத்     தேவையான  பலாச்சுளையைக் 

கடுவன்   கொடுத்து   மகிழ்வித்தாற்போல   நீயும்  நல்ல   சொற்களைக்கூறி 

அவளை     மகிழ்விப்பாயாக"   என்னும்   உள்ளுறையும்   உள்ளது.

1.  செந்தீத்தழல்   =   நெற்றிக்கண்ணில்   சிறு  பொறிச்சுடர் ; பெருந்தழல் ;

2.  மதியொளிர்  =  குளிர்ச்சிமிக்க    மதி    தவழும்  மனமகிழ்   சோலை.

3.  அரும்பலா  =  பலாப்பழத்தைப்    பிளந்து  உரித்து  எடுக்கப்பட்ட   சுளை;

                                                12. 11. குலமுறை   கூறி   மறுத்தல் .

                                                              கொளு .

வளமருதத்     தலைவ !  குலம்தாழ்    குறிஞ்சி,

நிலத்தோர்   யாமோர்    இழிகுலம்; பொருந்தா.  

பொருள்;-   செலவமும்  புகழும் மிக்க  மருத  நிலத்தலைவ!  யாம்    

குறிஞ்சிநிலத்    தாழ்   குலத்தவர் ; பொருந்தாது;  போய்விடு !   எனத் 

தோழி  தாழ்வு   நிலைக்காட்டி  மறுத்தல் .

                                                பாடல்-- 98.

கனிகள்       கலைகள்      பிணியிலா     மணிநிலம்     மருதம்; 

அணியாகும்    நனிபுகழ்;    தணிகை   ஞானக்    குறிஞ்சியோ,

தனிக்கை    தடுமாறும்   வனச்சீயக்    கணம்காண்   சித்தூராம்;

இணையின்பத்     துணைத்தூண்   பிணையாகிக்     கூட்டா;  பிரித்திடும்.

                                                   பொருள். 

   தலைவ !    கனிவகைகள்,கலைஉயர்வுகள்,  நிறைந்து,  நோயற்று   மிகநல்ல 

மாநிலமாக    விளங்குவது    உங்களது    மருதநிலம்; புகழினை   அணியாகக் 

கொண்டது  மருதம்;  ஆனால்   ஞானம்   விளைவிக்கும்   ஞானக்குறிஞ்சியாக 

விளங்கும்    தணிகை   மலையில் , சீறிவரும்   சினக்கூட்டங்களைக்    கண்டு,

அஞ்சிநடுங்கும்   யானைக்கூட்டங்கள்   சூழ்ந்த   மிகச்சிறிய  ஊர்;  சித்து 

என்னும்   முருகன்  குடிகொண்ட ஊர்   எமது  குக்கிராமம்.  உயர்ந்த  

உம்மையும்,  தாழ்ந்த    தலைவியையும், இன்பவழி   இணைக்கின்ற  

துணையாக   நிற்கும்  அன்புத்தூண்  உயர்வு  தாழ்வு   மாறுபாட்டால் 

இணைக்காது;  பிரித்தே   வழி வகுக்கும்;     ஆதலின்   நீ    சென்று விடு! 

என    மருத்துக்கூறிவிட்டாள்   தோழி.

விளக்கம்;--   மாயேயமாகிய   மருதநிலத்தலைவன்,  சித்தாகிய  

குறிஞ்சிநிலத்தலைவி   இணைதல்   இயலா;   என்கிறாள்   தோழி.

                                                 12. 12.  நகையாடி   மறுத்தல் .

                                                                    கொளு .

மலர்த்தழை      ஏற்காது    மறுத்துரைத்    தோழி 

நலத்தகு     சிரிப்பால்    வளத்தன    உரைத்தது.

பொருள்;---    தலைவன்   தழையாடை  ஏந்திவர,  அதுகண்ட   தோழி, 

சிரிப்புடன்   அவனது    வீரத்தைக்  கேலி   செய்தது.

                                                பாடல்---99.

வீரவாகு   வீரத்தை   வியன்களம்     கண்டு    வியந்து ,

சூரதச     சதமுகன்    போர்புரி   அவலம்  கண்ட   

ஆறுமுகத்    தணிகை    ஐங்கை    அலறி    வீழம்பையன்,

சீர்மான்    சூரம்பு   சாராத  வீரமும்   தருமேநகை.

                                                பொருள் 

      போர்க்களத்தே    அரக்கர்   கூட்டத்தை     அழித்துநொறுக்கிய   வீரவாகுவின் 

வீரத்தைக்கண்டு   வியந்த   தணிகை     ஆறுமுகன்,    அதே  காலத்தில்  சூரப்  

படைவீரர்களான    தசமுகனும்,   நூறுமுகனும்   போரிட வழியின்றித் 

தோற்றோடி  மடிந்து போன   அவலத்தையும்   கண்டு, வியந்து  

சிரித்ததைப்போல,   

    தோழியும், தனது   ஐயன்மார்கள்   ஓரம்பு    விட்டாலும், அலறியபடி  நிலத்தில் 

வீழும்  வீரத்தன்மையையும்,

நமது   தலைவன்   மென்மையான   ஓர்  மானின்மீது   அம்பு செலுத்த,  

அவ்வம்பு  மானின்  மீது  படாததாலே  தப்பித்து   ஓடுமழகையும் மனதிலே 

நினைந்து   சிரித்தாள்;  ஆச்சிரிப்பாலேயே   அவன்   கொணர்ந்த  தழை 

ஆடையையும்   வாங்காது   மறுத்துவிட்டாள்.

விளக்கம்;--- 1 . தச  =  பத்து   முகங்கள்  கொண்டவன்.

2.  சதமுகன்  =  நூறுமுகங்களைக்   கொண்டவன்.

3,  வீழம்பையன்  = வீழ்+   அம்பு+    ஐயன்.  ஐயன் =உடன்பிறந்தார் 

4.  சாராத  =   மானை   வீழ்த்தாத .

                                                12. 13.  இரக்கத்தோடு   மறுத்தல் .

                                                            கொளு .

கையுறை    ஏலேன்   கலங்கிய   மன த்தாய்! 

மையலுறும்   மனத்தினை ; மதிநலம்   பெறுக .

பொருள்;----   மயக்கத்தில்    மயங்கியுள்ள   உன்னிடமிருந்து 

இம்மலராடையை   யான்   பெற்றுக்கொள்ளேன்;என்று  தழையை 

வாங்க   மறுத்துக்கூறினாள் .

                                                  பாடல்--100 

வேல்குத்தி,   விரிதீ     சுமந்து ,  பால்பழக்       காவடிகள் 

வேல்வேல்    குரலாலே   வெம்பாவ   வினைதீரத்     தணிகை 

வேலவனைப்  போற்றுவோர்  பெற்றிடும்  காதல்   மையலால் 

சீல    மனத்தழையை  ஏலேனே    கோலத்தோழி    சொன்னாள் .

                                                பொருள் .

   தணிகை   மாமுருகன்  மீது   பக்தி   கொண்டவர்கள், உடலெல்லாம் 

வேலைக்   குத்திக்கொண்டு   காவடி எடுப்பர்;  தீச்சட்டியைச்   சுமந்து 

கோயிலைச்சுற்றுவர்;  பால்,பழம்,  பன்னீர்  போன்ற   பொருட்களைக்  கொண்ட 

காவடிகள்  தாங்கி  ஊரெல்லாம்   சுற்றுவர்; எங்கும்   வேல்"வேல்"  என்று 

கத்தியபடியே   ஓடுவர்;     ஆடுவர்;  தமது    பாவவினைகளை   இவ்வழியே 

மாற்றிக்கொள்ள   முனைவர்;  ஒருவித  மயக்கத்திலே  நிலைப்பார்.

அம்மயக்கம்போல   தலைவனே!    நீயும்   அயர்ந்துபோய்   தலைவி  மீது 

மயக்கமுற்று, உனது  நல்ல   மனதை   வெளிப்படுத்தும்   இத்தழையாடையை 

ஏந்தி  வந்துள்ளாய்!  நிலைத்தன்மை   இல்லாத   நிலையில்   இவ்வாடையை 

நான்   ஏற்கமாட்டேன்" என்று  மறுத்துக்கூறிவிட்டாள் .

விளக்கம்;-----1. விரி தீ =  அக்கினிச்சட்டி;தீச்சட்டி .

2.  சீல   மனத்தழை   =  சீல  =  நல்ல பண்புள்ள   மனத்தழை =  மனத்தால் 

                                               நீ   கொடுக்கும்    இத்தழையாடை . காதல்மயக்கப் 

                                               பண்பு மீக்கூறும்   மயக்கம் கொண்ட  மனதோடு  தரும் 

                                               தழையாடை.

                                                 12.  14. சிறப்பின்மை  கூறி    மறுத்தல் .

                                                                  கொளு .

பைந்துழாய்ப்,  பவளப்    பாதமல்லி  பற்றாத 

செந்தணிகை  சேர்த்திடின்    ஐயமாம்   பெறோம் .

பொருள்;---   தலைவா!  நீ  கையேந்துவந்துள்ள  மலராடையில்  எமது 

தணிகையில்    மலராத  துளசி,பவழமல்லி   போன்றனவும்    காணப் 

படுவதால்  எம்மக்கள்  ஐயப்படுவர்;  ஆதலின்   இதனை   ஏற்கமாட்டோம்"

என்று தோழி  மறுத்துவிட்டாள்.

                                                பாடல்--101.

கருங்குவளை,  அருந்தாமரை ,  மல்லி,   முல்லை   மலரும் 

திருத்தணிகைச்     சோலையில்,   இருப்பில்லாக்    குறும்பூ   ஐயம்;

வருத்தமும்      வாட்டும்  வளங்காண்போர்  கருத்தும்   கசடாக்கும்; 

நிருதனே!    நறுவாடை   நாம்கொள்ளோம் ;  நலச்சீலம்   காக்க.

                                                  பொருள் .

    எழுகன்னியரால்   உருவாக்கப்பட்ட   நீலோத்பலம்  என்னும்   குவளைமலர்.

சரவனத்தில் மலரும்   நல்லதாமரைமலர்,  மல்லிகை,  முல்லை  போன்ற 

தெய்வீகமலர்கள்   மலர்ந்து விளங்கும்  திருத்தணிகைச்   சோலையில்  மலராத,

உருவாகாத    சிறு சிறு  மலர்கள் இங்கு   வளர்வதில்லை; அந்தமலர்களால்  

 ஆன   தழையாடையை   நாங்கள்   அணிந்துகொண்டால், இம்மலைவாழ் 

மக்கள் மனதில்  ஐயம்   தோன்றும்; அதனால்  துன்பம்   தோன்றும்; அழகிய 

நீ  தந்த    ஆடைகளின்  வளத்தைக்   காண்பவர்கள்  பழி  பேசுவார்கள்; 

காண்போர்   கருத்தெல்லாம்  கசபையே    வழங்கும்.  அதனால் 

மன்னனே!  நீ தந்த   நறுமணத்   தழையாடையை  நாம்  ஏற்றுக்  கொள்ள 

- மாட்டோம்"  எமது குலத்தின்  பண்பு காக்க  ஏற்கமாட்டோம்"  எனத்தோழி 

மறுத்து.அதனைப்பெறவில்லை.

விளக்கம்  ----- 1.இருப்பில்லா  =  விளையாத, தோன்றாத  

2.  குறும்பூ  =  சிறிய இதழ் கள் கொண்ட   சிறுமலர்.

3.  வளம்  காண்பார் =  தழையாடையின்   அழகு, வண்ணம் போன்றவற்றின் 

                                               மேன்மையும் ,வேலைப்பாடும்  காண்பவர்.

                                                12.  15.  இளமை   கூறி மறுத்தல் .

                                                                 கொளு .

விளையாட்டுப்   பருவம்;  கலையறியா  உளமே.

பொருள் ;---   தோழியரோடு   மணலிலும்,சாலையிலும்   விளையாடும்  

இளங்குழவிப்   பருவம்  கொண்டவள்  கலை  தழுவும்  காதலறியாத  

மன வளர்வு  கொள்ளாத   உள்ளத்தினாள்  என்ற தோழி   கையுறை  ஏற்க 

மறுத்தல் .

                                                பாடல்-- 102.

இடித்துயரும்    இளமுலை  இதுநாள்   வளர     வில்லை;

துடியிடை    துவளவில்லை ;  தூமொழித்    தூய்மைக்      குதலை;

விடியாத    பொழுதில்   விரிசுடர்   வேண்டிநிற்கும்   வெற்ப!

நெடும்புகழ்   நற்றணிகை    நீடுவாழ்    செல்வி   அறியாளே.

                                                பொருள்  

   நன்கு   விடியாத    அதிகாலைப்   பொழுதில்  சூரியனைப்    பார்க்கவேண்டும் 

என்று  வானம்   அண்ணாந்து   பார்க்கும்   நாடனே!   மிகப்பெரும்   புகழுற்ற 

முருகன்    வீற்றிருக்கும்     தணிகை    மலைச்சோலையில்   வாழ்கின்ற  

தலைவியை   நாடி, மதிப்புடைய   தழைகளை  அளிக்கும்  உன்  செயலை,

  ஒன்றோடொன்று   இடித்து,உயர்ந்து   வளர்கின்ற   அவளது   இளம் முலைகள் 

இன்றுவரை  நன்கு வளரவில்லை;  அவைகளின்   சுமையைத்   தாங்கி 

அவளது    இதையும் வருந்திதுவளவில்லை ; அவளது    பேச்சு  தூய்மை  

தழுவாத   மழலைப்   பேச்சாகவே  இன்றும்   விளங்குகிறது; 

ஆதலால்  அவள்   அறியவில்லை;

உன்காதல்   குறிப்பை  அவள்    எங்ஙனம்    அறிவாள்?   ஆதலின்    நீ   தரும் 

இக்கையுறையை   நான்  வாங்கிக் கொள்ளமாட்டேன்". என்று   தோழி 

தலைவனிடம்   கூறினாள் .

விளக்கம்;---- 1 .  துவளவில்லை=  மார்பகத்தின்   சுமையால்   சிற்றிடை 

                                  துவளும்;  ஆனால்  அவை  பெருக்காததால்  சிற்றிடை 

                                  துவளவில்லை.

2.  தூமொழி  =  தலைவியின்  நல்ல  பேச்சு ; புரியும்படியும், விளக்கமாகவும் 

                               பேசும்   பேச்சு.

3.  விரிசுடர்  =  ஆதவன் .

                                               12. 16.  மறைத்தமை   கூறி  நகைத்துரைத்தல் .

                                                               கொளு .

என்னை   விடுத்துப்      பொன்னைத்     தொட்டிட,

மன்னவ!  முடியாது"   புன்னகை   கூட்டினாள் .

பொருள் ;--     மன்னவனே!  என்னை  ஒதுக்கிவைத்துவிட்டுத்     தலைவியை 

அடையலாம்   என்ற   உனது எண்ணம்   ஒருபோதும்   பலிக்காது. முன்னரே 

கூறியதுபோல்  நாங்கள்   இருவரும்  நெருங்கிய   தோழிகள்;  எனச் 

சிரித்தாள்   தோழி.

                                                பாடல்-- 103.

சிவத்தின்     சேவடி   வணங்கவந்த   செஞ்சுடர்   பணியா 

வுவகையால்     சிறையும்,   அவமும்    பிரமன்   அடைந்திடச் 

சிவமாம்   தணிகை   நவநாட்டு   மன்னா!   என்னைத்     தவிர்த்து,

தவழ்மதித்   தளிரைத்   தொட்டிடவும்  இயலுமோ?   என்றாள் .

                                                பொருள்.

  ஒருபோது   சிவபெருமானை   வணங்காவந்த  நான்முகன், வழியில் 

கோயில்   கொண்டிருந்த   முருகனை   வணங்காமல்  ,  செருக்கோடு  உள்ளே 

சென்றான்;  அந்த செருக்கானது   அவனுக்குச்  சிறையைத்   தந்தது; படைப்புத் 

தொழிலையும்  போக்கியது; அவ்வாறு செய்த   சிவமாகிய   முருகக்   கடவுள் 

வீற்றிருக்கும்   திருத்தணிகை   மலை   நாட்டின்  குறுநில   மன்னா! என்னை 

விடுத்து,  நீயாகவே   என்  தலைவியைக்   காண  நினைத்தாயோ?

அந்த   அழகுதேவதையை   என்   உதவியில்லாமல்   உன்னால்   தொடக்கூட 

இயலாது"  என்பதை   உணர்ந்துகொள்!   என்று   தலைவனிடம்   தோழி 

கூறினாள் .

விளக்கம்;--  சிவமும்.முருகனும்   ஒன்று ;  என்பதை   உணராது   பிரமன் 

துன்புற்றானோ    அதுபோல்   நானும்,தலைவியும்  ஒன்றானவர்கள் 

என்பதை    உணராத   நீ   இன்பம்   துய்த்தல்  இயலாது" என்ற  குறிப்புப்பொருள் 

இங்கு    விளக்க ப்படுகிறது.

1.  செஞ்சுடர் =  தீவடிவானவன்;  தீயாகிய   நெற்றிக்கண்ணில்   தோன்றியவன்.

2. சிவமாம் =  தணிகையில்    வீற்றிருக்கும் முருகனே   சிவமாகும்.

3.  தளிரை =  இளந்தளிர்போல்   விளங்கும்  மேன்மை,அழகு  கொண்ட  தலைவி.

                                                12.17.  நகை  கண்டு  மகிழ்தல் .

                                                               கொளு .

புன்னகை    கண்டான்;  நன்னலத்   தோழியை,

தன்னலம்   வேண்டிப்    போற்றி   மகிழ்ந்தான்.

பொருள்;--  தோழியின்    முகத்திலே  ஒளிமிகு   புன்னகை  கண்ட   தலைவன்,

அவளது   பண்பு,மேன்மைகளைக்  கூறிப்  புகழ்ந்து   உரைத்தான் .தனக்கு   

நலம்   செயபவள்   இவளே  என முடிவுற்று ப்    போற்றினான்.

                                                பாடல்--104.

தனக்குவமை    இல்லாதான்    தணிகை     வேலன்   வள்ளிக்காக 

 வனக்காட்சி      வேண்டி,   அழைக்க      வழிகாட்டிய     வள்ளல்போல்  

மனக்குறை    நீக்கி,   மணக்கோல   மகிழ்வின்    மதி நீயே ;

தனச்சுமை      தாங்காவிடை  அனநடை   ஆருயிர்த்     தோழீ !

                                                பொருள்.

   ஒருவரையும்    உவமை  சொல்லாத   அளவு  உயர்ந்தவன்,  திருத்தணிகையில் 

வீற்றிருக்கும்   வேலவன்,  வள்ளியின்    காதல்  பார்வை   வேண்டி  

 வள்ளிமலைக்    காட்டினில்   தவித்தபொழுது, வள்ளியை    அடையத்  தனக்கு 

உதவுபவர்   அண்ணன்   விநாயகரே.   எனமுடிவுற்று   அவரை அழைத்து, 

வேண்டி,  இங்கு   காட்சி   தருக "  என வேண்டினான்;   அங்கு வந்து   உதவிய 

வள்ளல்  போல,

      மார்பகச்சுமை   தாங்கமுடியாது  ஒசிந்து  விளங்கும்  இடையை 

உடையவளே!  அன்னம்போல்  நடை கொண்டவளே! தலைவியின்   

ஆருயிர்த்   தோழியே!

      எனது   மனத்துயரை  நீக்கி, நான்  தலைவியை   மணந்துகொள்ள  

மகிழ்வடைய  அறிவுரை   பகர்ந்து,[மதிபோன்ற  உன்முகக்கருணை]

புரிந்து   அருள்வாய்!  என   வேண்டினான்.

விளக்கம் ;--  1. வள்ளல்  =  விநாயகப்பெருமான் 

2.  மதி நீயே  =  மதி =நிலவு;   மதி=  அறிவு.[வழிகாட்டி]

3 .  வனக்காட்சி =  வள்ளிமலைக்   காட்டில்  காட்சி   தரவேண்டும்.

                                                12. 18. அறியாள் போன்று  நினைவு  கேட்டல்.

                                                                கொளு .

  

பெரும்புகழ்த்   தலைவ !  நறுமணத்    தளிரின்  

அருமையை    நான்கண்டது     இல்லையே.

பொருள்;----  பெருமையுடைய   தலைவனே!  நீ  கூறும்   அழகுமிகு 

இளந்தளிரை  நான்  ஒருபோதும்   கண்டதில்லை; எனத்தோழி  கூறினாள் .

                                                பாடல்--105.

மூவர்    முதலான  ,  இருவர்    பதியான,    தணிகைக் 

காவலன்,   காவி,   தாமரை   கண்மலரும்    சோலையிலே ,

தாவுமான்     தளிரனம்    தோகைகள்     ஆடுவ;    உனது  

பூவாகிப்     புரிந்துணர்    அருளாகி,  நிற்பாள்    யாரோ?சொல்!

                                                பொருள். 

  அரி,அயன்,அரன்   ஆகிய   மூவர்க்கும்   முதலானவன்;  வள்ளி,தேவயானை 

ஆகிய   இருவருக்கும்  கணவரானவன்,  தணிகை   மலையின்   காவலன்,

அவனது  மலைச்சோலையிலே  குவளையும்,தாமரையும்   மலர்ந்திருக்கும்;

அச்சோலையில்  நளினமாய்த்   தாவி  ஓடும்   மான்கள், மென்மையான   நடை 

பயிலும் அன்னப்பறவைகள், தோகை  விரித்தாடும்  மயிலினங்கள்  

என்னும்படி   அங்குமிங்கும்   ஒடி  நடக்கின்ற  இளம்கன்னியர்    பலருண்டு;

அவர்களிலே   உனது    மலராகி,உன்னைப்  புரிந்துகொண்டு, உனக்குக்  காதல் 

அருள்புரிந்த  முறுவலோடு   நிற்பவள் யாரோ?   நானறிய   அவளைக் 

காட்டுவாயாக'   எனத்    தலைவியைத்   தான்   அறியாதவள்போல்   அவனிடமே 

வினவுகிறாள்.

விளக்கம்;--  1. இருவர்=  வள்ளி,  தேவயானை.

2 . காவி  =  குவளை மலர் .

3 . புரிந்துணர்  =  மனதைப்   புரிந்துகொண்டு, காதல்  உணர்வுடன்  அருள் 

                                   புரிபவள்.

                                               12.  19.  அவயவம்   கூறல் .

                                                                கொளு .

தானறி    தலைவியின்    தளிர்நல   அவயவம் 

தேன்பொழி   திவ்வியம்  என்றனன்  தலைவன்.

பொருள்;----  என்னால்   உணரப்பட்ட   மென்மை,நன்மை   வாய்ந்த 

இனிக்கும்  புனிதமாய் விளங்கும்   தலைவியின்    அவயவங்கள்  

இவை இவை   எனத்    தோழிக்குத்     தலைவன்    விளக்கியது.

                                                பாடல்--106.

பொன்னை   உருக்காப்    புதுமேனி ,    மயக்கும்    மதிமுகம் 

மண்ணையும் ;       மழைமேகக்    கருங்கூந்தல்;  தண்ணளிக்   கண்கள்;

வெண்முத்து,  வெவ்விதழ் ,   உண்கிண்ண   வளமுலை, மின்னிடை,

பண்தணிகைப்    பைஞ்சோலை ப்   பேரழகு   பேசாயோ   தோழி!

                                                பொருள். 

    இசைபோல்   இனிக்கும்   தணிகை  மலையானது    சோலையில்  

உலவும்   தலைவியின்   பேரழகைப்   பெற்றுவிளங்கும்  அவயவங்களை 

நல்ல   தோழியே !  பேசுவாய்!

      உருக்கிய    பொன்போன்று   விளங்கும்  புதுமேனி ; நிலவுபோன்ற 

அவளது   முகம்   மண்ணுலகையும்,விண்ணுலகையும்   மயக்கும்  தன்மை 

கொண்டது;மழைபொழியமுற்படும்  மேகத்தின்   கருமையைக்  

 குளிர்ச்சியைக்  கொண்ட  கூந்தல்,இரக்கமும்,கருணையும்   வாய்ந்த 

கண்கள்;  வெள்ளைமுத்து   போன்ற பற்கள்; வெப்பத்தை எப்பொழுதும் 

வழங்கும்  இதழ், நாக்கு, செவ்வாய், உண்பொருள்   எடுத்துவைக்கும் 

கிண்ணம்போல் திரண்டெழுந்த   மார்பகங்கள்;  மின்னல்போன்று 

தோன்றி மறையும்    சிற்றிடை; இவைகளை   நான்கண்டேன்;  நீ  

காணாயோ?  தோழி "  எனது தலைவன்  வினவினான்.

விளக்கம்;-- 1.  உருக்கா  =  உருக்கிய.   "செய்யா"   என்னும்  வாய்ப்பாட்டுப் 

                                                      பெயரெச்சம்.

2. மண்ணையும் =  மண் ...இடவாகுபெயர்.  உம் ..இறந்ததுதழுவிய  எச்சஉம்மை. 

                                        மண்ணையும்,விண்ணையும்  எனப்பொருள்  தந்தது.

3 .  உண்கிண்ணம்    =  உண்ணுகின்ற   பொருட்களை   வைக்கும்  பாத்திரம் .

                                                12.  20.  கண் நயந்து  உரைத்தல்.

                                                                  கொளு .

இருகண்   களது   பெருநலம்   பேசியது.

பொருள்;-  தலைவியின்   கருணையும்,  இரக்கமும்  குடிகொண்ட  

இருகண்களின்   அழகை   விளக்கினான்  தலைவன்.

                                                 பாடல்--- 107.

வள்ளித்தாய்   நல்லருள்;   வடிவேலின்   கடிகூர்மை ;  வண்ணப் 

புள்ளிமயில்  தோகை ;  குள்ளமுனி    நல்லதமிழ்    ஞானம்;

நல்லொளிர்   பொற்றணிகை ;  தொல்குடிலைத்    தூமொழி;  நாடும் 

பல்லடியார்   அல்லலழி   அன்பு ;   மெல்லிமைக்     கண்களே. 

                                               பொருள்.

    தோழி!  தலைவியின்    கண்கள்  எவ்வளவு  அழகும்,அருமையும்   

வாய்ந்தது  தெரியுமா! வள்ளிமலையிலே   அவதரித்த   வள்ளியின்  தாய் 

ஒருமான்;  அம்மானின்  அழகுக்கண்போன்றது. [மற்றொருபொருள் ]

 வள்ளிப்பிராட்டியாரின்   கருணைகூர்ந்த  கண்போன்றது; 

முருகனின் கையில்  உள்ள   அழகுபொருந்திய பகைவர்களை  அழிக்கின்ற 

வேலின்   கூர்மை போன்று,காண்போர்   மனதை  அழிக்கின்ற  கண்;

முருகனின்  ஊர்தியான   மயிலின்  தோகை   போன்று  வண்ண வண்ண 

நிறம்  கொண்ட கண் ;

பொதிகைமலையிலே   அகத்திய  மாமுனி  வளர்த்த   தமிழ்  மொழியின் 

ஞானப்பார்வை  கொண்ட கண்;

பொன்போன்று   ஒளிரும்  தணிகை  மலைபோன்ற   ஒளி கொண்ட  கண்;

பிரணவம்   என்று   போற்றப்படும்   ஓங்காரத்தின் தூய்மை  மிக்க  சொல்லாகப் ,

பொருளாக  விளங்குவது  அக்கண் ;

ஓங்காரத்தை  உபதேசித்த  முருகனின்    அடியார்கள்   அல்லல்   படாமல் 

காக்கின்ற   முருகனின்    அன்பு  போன்றது  அந்தக்கண்;

மென்மையாக, இரக்கம் கருணை   சார்ந்து   இமைக்கும்  இமைகளைக் 

கொண்ட தலைவியின்   கண்கள் ;அம்மம்மா   என்னே   அழகு!  என்று 

பாராட்டினான்  தலைவன்.

விளக்கம்--- 1.  வள்ளித்தாய்  =  வள்ளிப்பிராட்டியாகிய  அன்னையென்றும்,

                              வள்ளியைப்  பெற்றெடுத்த   மானாகிய   தாய்,  என்றும்  பொருள்.

2.  குள்ளமுனி  =  அகத்தியமாமுனி .

3 . தொல்குடிலை  =  தொன்மை    வாய்ந்த  பிரணவம் ;ஓங்காரம்.

     மெய்ப்பாடு ------உவகையைச்  சார்ந்த பெருமிதம் .

              பயன்-------    ஐயமறுத்தல் 

                                                12.  21.  தழையெதிர்தல் .

                                                                 கொளு .

அகன்றனள்   தோழி;  அயர்ந்தனன்  தலைவன்.

அயர்வு  போக்கிட   ஏற்றனள்   கையுறை.

பொருள்;----   குறைநேர்ந்த   தலைவனின்  குறை  போக்காது,   தோழி 

சற்றே    நகரத்  தலைவன்    சோர்ந்துபோனான்;  அதுகண்ட  தோழி 

மனம்   மாறி அவன்கரத்தில்    வைத்திருந்த   பூந்தழை    ஆடையைப் 

பெற்றுக்கொண்டாள் .

                                                 பாடல்.....108.

இந்திரன்   இகல்போற்றி  இரத்தின   மணிகள்  ஏற்காச் 

சந்திர   முகத்தாள்   தேவயானை    விந்தைப்     பரிசென

மந்திரத்     தணிகை   பெற்றது  மந்தாரத்   தழையாடை 

பந்துவாய்ப்      பரிவாய்ப்     புன்முறுவல்  முகத்தோடு   பெற்றாள் .

                                                பொருள் .

     சூரபன்மனோடு   நடந்த   தேவாசுரப்   போரிலே  படைத்தலைவனாய்  நின்று 

வெற்றி தேடித்தந்த   முருகனுக்கு , இந்திரன்  இரத்தினங்கள்  ஆபரணங்கள் 

நவமணிகள்  எனப்பலப்பல  பரிசுகளைக்  கொடுத்தான்;   அவைகளை 

எல்லாம்    ஏற்காத  தணிக்கை   மலையான்  நிலவுபோன்ற  முகமுடைய   அழகு 

மகளான    தேவயானையைக்    கொடுத்ததும்   விருப்போடும்,    

ஏற்றுக்கொண்டதுபோல,  

    மந்தாரை,போன்ற   மலர்களால்   ஆன  தழையாடையைத்    தலைவன்  

கையில்    பார்த்த    தோழி,அதனை  ஒரு   நெருங்கிய   உறவினன்  கொடுப்பது 

போலவும், தலைவிக்காக   ஏங்கி  நிற்கும்  அவன்  மீது   கொண்ட  பரிவினால் 

பெறுவது போன்றும்,  புன்முறுவல்   காட்டி, அன்போடு   பெற்றுக்கொண்டாள் .

விளக்கம்---  வெற்றிபெற்ற   படைத்தலைவனுக்குப் பலப்பல உயரிய  பரிசுகள் கொடுத்தான் இந்திரன்;  அவைகளை ஏற்காத முருகன்,  மகளையே  பரிசாகக் 

கொடுத்ததும்   அன்போடு ஏற்றுக்கொண்டான்; அதுபோல 

நற்குலக்குடிப்பிறந்த  தலைவியின்   தோழி  மிக்குயர்ந்த  பரிசுகளைத்  

தவிர்த்து,   அவன்  தந்த    தழையாடையை   ஏற்றுக்கொண்டாள்  என்பதும் 

குறிப்பு. 

தவமிருந்து  காத்துக்கிடந்த  தேவயானிக்கு  முருகனே   

கணவனாக   வந்தான்;  அதுபோல  தலைவனின்  எதிர்பார்ப்பும்  

தழையாடையைப்   பெற்றதால்   நிறைவேறியது   என்பதும்   குறிப்பு.

 

1. இகல் போற்றி  =  சூரன் முதலிய  அரக்கர்களோடு   நடந்த 

போரில்   வெற்றிபெற்றுத்  தந்தமைக்காகப்   பாராட்டி,

2.  விந்தைப்பரிசு  =  வியக்கவைக்கும்   பரிசு;  தவம் கிடந்தாள்  தவத்திற்கு 

                                          நற்பலப்பரிசு.

3.  மந்திரத்தணிகை  =  மந்திரம் =  பிரணவம்;ஓங்காரம்;  மந்திரமாய்                                                                         விளங்கும்   தணிகைத்   தலைவன் .

4.  பந்துவாய்  =  யாரோ  அடுத்தநாட்டுத்   தலைவன்" என்றில்லாமல்   தமது 

                                  உறவினனாய்.

5.  புரிவாய்  =  தலைவி   மீது கொண்ட   காதலால்  பலகாலம்    காத்துக்கிடக்கும் 

                              பணிவு, விருப்பம்  அறிந்து   கொண்ட   இரக்கவுணர்வு .

   மெய்ப்பாடு ------அச்சத்தைச்  சார்ந்த   பெருமிதம்.

          பயன்     -------  குறைநேர்தல் .

                                               12.  22.   குறிப்பறிதல்.

                                                              கொளு .

மற்றதொரு     பொய்தான்    மனத்தெழா   நிலையில்,

பற்றினேன்    பசுந்தழை;உற்றவளே!  உணர்க நீ.

பொருள்   ;--  தோழி   தலையிடம்  உயர்ந்தவளே !  மீண்டும்   தலைவன் 

தழையாடையைக்   கொண்டுவந்து   கொடுத்ததும்,    அதனை   மறுப்பதற்கு 

வேறொரு  பொய்   என்  மனத்தளவில்   தோன்றாததால்  அதனை  நான்  

பெற்றுக்  கொண்டுவிட்டேன்"  என்று கூறினாள் .

                                                பாடல்--109.

மழுவேந்தி   மாலை     ஏந்திநின்றான் ,  மறுபொய்    எழவில்லை;

விழுத்தணிகைச்       சோலை,  குழுமலர்ச்   செழிப்பாடை  பெற்றேன் .

எழிலிக்குழலி    இணைமுலைப்    பொழிலி;   இந்த்ர   வில்லாம் 

விழிமேல்     புருவமே !   பழியிலை ;  பொழிக    கருணை.

                                              பொருள் .

  மேகம்போன்று  கருமைகொண்ட   கூந்தலை  உடையவளே! இரன்டு 

முலைகளால்     அழகைப்  பொழிபவளே! இந்திரவில்    என்று  போற்றப் 

படும்  வானவில்லின்  வர்ணஜாலப்   புருவம்  கொண்ட விழியை  உடையவளே! 

நேற்று   சிறப்புமிக்க   திருத்தணிகை  அருட்சோலையில்  மழுவேந்தியான 

தலைவன்   உனக்காக   மலர்த்தழையாடையை    ஏந்திக்   கொண்டு  வந்தான்;

இதுவரை,  பலப்பல  பொய்களைக்  கூறி  அதனை   வாங்க   மறுத்த   நான் 

வேறு   பொய்  கூற  வழியில்லாததால்  ஏற்றுக்கொண்டு  விட்டேன்;

இது    நமக்குத்  பழியை அளிக்காது;  நீயும்   கருணையே   பொழுந்திடுக!

என்று   தோழி  தலைவியிடம்   கூறினாள் .

விளக்கம்------  1.மழுவேந்தி  =  பெயர்ச்சொல்.மழுவேந்தியவன்.

2.  மறு  பொய்  =  மற்றொரு  பொய் , என்றும்,   மறுத்துரைக்க  வாய்ப்பாக 

                                    வேறொரு பொய் .

3.  எழிலி  =  மேகம்.

4.   இந்த்ரவில்  =  வானவில்லின்   மதிப்புமிக்க  பெயர்/

                                                 12. 23.  குறிப்பறிந்து  கூறல்.

                                                                 கொளு .

தழையைத்    தந்த   தோழி 

தளர்வு   போக்க  வேண்டியது.

பொருள்;=== தலைவனிடம்   பெற்ற   தழையாடையைத் 

தலைவியிடம்    அளித்த   தோழி ,தலைவனின்   அயர்வு 

போக்க  வேண்டிக்கூறினாள் .

                                                பாடல்--110.

கலைவளம்;    அலைகடல்;  அண்டம்;  அனைத்துமாய்  விளங்கும்,

தலைத்தணிகைக்   கலைச்சோலைக்     கொலைக்கரி   வீழ்த்திக்    காத்தான் ;

நலமலர்த்       தழையாடை    நலிவுறல்    நலமோ?   தோழி!

அலைமன     வயர்வு    நீங்கிட   வருங்கரம்    ஏற்றிடு .

                                                 பொருள்.

    அறுபத்து   நான்கு  கலைகளின்   நிறைவு,  ஆழ்ந்தகடல் , அனைத்து 

அண்டங்கள்.இவையனைத்துமாய் விளங்கி,  மூவேழ்   உலகிற்கும்   தலைமை 

வகிக்கும்   திருத்தணிகையில்   வீற்றிருக்கும்  முருகனின்  மலையில்,

அங்குள்ள  வளம்மிக்க   சோலையில் நம்மைத்    தாக்கவந்த   கொலைவெறி 

மதயானையை   அடக்கி,வீழ்த்தி,நம்மைக்  காத்தவன், நம்மீது   கொண்ட 

அன்பால்   அழகுமப்பார்களால்   ஆன  இவ்வாடையை  அளித்தான்;

அதனை   வாடவிடல்   நலமாகுமோ   என்  தோழி! அத்தலைவனின்  அலையும் 

மனத்துயரை, அயர்வை   நீக்கிட   இவ்வாடையை   உனது  பொற்கரத்தில் 

பெற்று,  அணிந்து   மகிழ்வாயாக"   என்று   தோழி  தலைவியிடம்   கூறியபடி 

மலராடையைக்   கொடுத்தாள் .

விளக்கம் ;---தலைத் தணிகை =  மூவர்க்கும்  முதல்வன்; மூவேழ்  உலகிற்கும் 

                                                                     தலைமை; கொண்டு விளங்கும்  தணிகை .

2, நலிவுறல்  =  மகிழ்வோடு  அளித்த  காதற்பரிசு,அவ்வாடை  ;அதை 

                            ஏற்று  அணியாமல்   வாடவிடலாமா ?

3.  அயர்வு =  தலைவனின்   துயர்; தலைவியின்    அருட்பார்வை                                                             கிட்டாமையால்    அவன்   படும்   வேதனை.

                                                12.  24. வகுத்துரைத்தல் .

                                                                  கொளு .

தழையைத்    தந்தவள்   தண்வழி   காட்டினாள் .

பொருள்;  --  தலைவன்    தந்த   பூந்தழையாடையைத்    தலைவியிடம்   தந்த 

தோழி  கடைபிடிக்கவேண்டிய  வழிமுறைகளை   ஆய்ந்து  கூறினாள் .

                                                        பாடல்--111.

மன்னவன்    மாண்புடன்   மகிழ்ந்தளி     மலராடை  ஏற்றால் 

மன்னூர்ப்     பழியாம்;   மறுப்பின்   மடலேறும் ;  மதிதவழ் 

பொன்னூர்த்   தணிகைச்    சோலைவழி  மன்னுயிரைக்    காத்தவன் 

தன்னுளம்   ஏற்பதே   பெண்ணுள்ளப்   பண்பென்றாள்   பாங்கிமதி .

                                                   பொருள். 

   தலைவியே!   நாம்   நம்மை   நாடிவந்த நின்று  மாண்பும், மகிழ்வும்  கலந்து 

தலைவன்  தந்த  மலராடை யை    ஏற்றால்   ஊரார்  பழிப்பிற்கு     ஆளாவோம்;

அதனை மறுத்து  விட்டால்   மனம்   தளர்ந்த  தலைவன்    மடலேறி   மடிவான்;

என்னசெய்வது?   என்று    சிந்தித்தால்  அன்று  நிலவுதவழும்    திருத்தணிகைச் 

சோலையிலே  ஆடிக்கொண்டிருந்த   காலை,  நமக்குமுன்    வந்து  நம்மை 

தாக்கவந்த    கொடும் யானையை   வீழ்த்தி  நம்மை,நம்  உயிரைக்காத்த 

தலைவனின்  உள்ளத்தைப்   போற்றுதலே  நன்றிமறவாய்  பண்பாகும்;

பெண்ணின்   உள்ளத்தின்  நல்ல செயலும்  அதுவேயாகும்; தழையாடையை 

ஏற்று  மகிழ்வோம்"  என்றால்   அறிவுசார்ந்த  உள்ளம் கொண்ட தோழி.

விளக்கம்---1. ஊர்ப்பகை  =  வேற்று  மலர்;  வேற்றூர்   ஆடை;  என  விமர்சித்து 

                                                            ஊரார்   அலர் ,பழி   தூற்றுவார்கள்.

2. மடல்  =  தலைவன் தரும்  தழையைத்    தலைவி    ஏற்காவிடில்   தனிமைத் 

                     துயரை   வெளிப்படுத்தவும், தன்னை ஏற்காத   பெண்ணைப் பற்றி 

                     ஊரார்    அறியவும்   பனைமடல்  கருக்கால்  குதிரை  உருவாக்கி,

                      அதன்மீது   அமர்ந்தும், அப்பெண்ணின்  உருவம்   தாங்கிய  கொடி 

                      பிடித்துக்   கொண்டும்,  ஊரைச்சுற்றி   வருதல்; 

3.  பொன்னூர்  =   பொன்   போன்ற  மாமுருகன்   வீற்றிருக்கும்  தணிகையூர் .

                                                 12. 25.  தழையேற்பித்தல் .

                                                                    கொளு .

அருந்தவன்    அளித்த   திருத்தழை   கொள்கென 

விரும்பி   அளித்தாள்   பெருமைத்  தலைவிக்கு.

பொருள்;---   பெருமைமிகு    தலைவியே!  உன்னை அடையப்   பெருந்தவம் 

புரிந்த   தலைவன்    அன்போடு    அளித்த   மதிப்புமிக்க   இதழையாடையை 

ஏற்றுக்கொள்!   என்று  தோழி   தலைவியிடம்  கொடுத்தாள் .

                                                பாடல்--112.

மும்மல    மூவரக்கர்   மூதூர்    அழித்தவன் ; முனகி ,

விம்மிய   விண்ணவர்   மீட்டவன்; விரிமறைத்     தணிகைச் 

செம்மல்    சீரடி    போற்றுபவன்  புனிதமாய்ப்    பறித்த 

செம்மலர்    ஆடை;  சீராக்கினான்;  சேயிழை    ஏற்றருள்க.

                                                 பொருள்.

   ஆணவம்,கன்மம்,மாயை  எனும்  மும்மலங்களால்    உருவான   அரக்கர்கள் 

சூரன்,சிங்கமுகன், தாரகன்   என்ற மூவர்;  அவர்களையும்,  அவர்களது  

கூட்டத்தையும்,  அவர்தம்   நகரங்களையும்  அழித்து,வெற்றிபெற்றவன்;

அவ்வரக்கர் களால்    சிறையில்   அடைக்கப்பட்டுப்   பெருந்துன்பம் 

அனுபவித்த    தேவர்களின்  விம்முதலைக்    கேட்டு,  வீரவாகு  வழியே 

விடுவித்தவன்;  மறைதனை    உலகோர்  அறிய  உபதேசித்தவன்;

திருத்தணிகையில்   வீற்றிருக்கும்  முருகக்   கடவுள் .   அன்றாடம் வழிபடும் 

தலைவன்,  அத்தணிகை    மலையிலே தோன்றிய  செடிகளில்  மலர்,தழை 

பறித்துப்    புனிதமாய்    உருவாக்கிய  இம்மலராடையை   உனக்குச்    சீராகத் 

தந்துள்ளான்; அழகிய    தலைவியே   இதனை   நீ     அன்போடு    ஏற்று  

அருள்வாய்    எனத்   தோழி  தலைவியிடம்    கூறினாள் .

விளக்கம்;---  1.  மும்மலம் =  ஆணவம்,கன்மம்,  மாயை .

2.  மூவரக்கர்  =  சூரன்,சிங்கமுகன், தாரகன்.

3.  விரிமறை   =   மறை = பிரணவம்;  விரி  =  பொருளை  விரித்து                                                                       உபதேசித்தான் 

சேயிழை  =   அன்மொழித்தொகை.

                                                 12.  26 . தழை  விருப்புரைத்தல் .

                                                                  கொளு .

விருப்பம்    பொருப்பனுக்குத்     தோழி    உரைத்தது.

பொருள் ;---   தலைவன்    அளித்த   தழையாடையைத்   தலைவி   பற்றுக  

கொண்ட   விருப்பதைத்   தோழி    தலைவனிடம்   மகிழ்வோடு  கூறினாள் .

                                                பாடல்---113.

வாசமலர்   வண்ணவண்ண   வாடையைத்    தந்தாய்    நீயெனப் 

பாசத்தால்     நான்கொடுக்க,  நேசமுடன்  நீவி,  நிர்மலப்  

பூசனைத்     தணிகைப்    பரமன்   மணிச்சேவடி  பெற்றது   போல,

மாசறு   பொன்னாய்,  வீசுமணமாய்   அணிந்து       திகழ்ந்தாள் .

                                            பொருள் .

   நறுமணமும்,  பலப்பல   வண்ணங்களும்   இழைத்த   ஆடையை    நீ 

தந்தாய்"   என,அன்புகொண்டு  அதனை  நான்   தலைவியிடம்  கொடுத்தேன்;

அவளோ   அவ்வாடையை  உன்னைக்காண்பதுபோல்   பார்த்து, மெல்லக் 

கைகளால்   தடவினாள் ;  பற்றில்லாத  பூசனைப்   பொருளாய், தலைவனாய்,

இறைவனாய்    விளங்கும்   திருத்தணிகை   முருகக்   கடவுளது  சேவடியே  

கிடைத்ததுபோல  குற்றமற்ற   பொன்போல்  அணிந்தும், வீசுகின்ற  

மணத்தால்   மகிழ்ந்தும், உடலெல்லாம்   அவ்வாடை   படும்படியாக  அணிந்து 

மகிழ்ந்தாள் .  என்று  தலைவனிடம்  தோழி    கூறினாள் .

--  விளக்கம்;1. வண்ணவண்ண =  பலவண்ணங்களில் 

2 . நிர்மலம்  =  தூய்மை;  பற்றற்ற  தன்மை.

3 . மணிச்சேவடி  -  உவமைத்தொகை .

       மெய்ப்பாடு----உவகை.

                  பயன்----- தலைமகனை  ஆற்றுவித்தல் .

                                               13. பகற்குறி .

     தலைமகன்   தந்த   தழையாடையைத் தலைவியிடம்   அளித்தவள் 

தலைவனுடன்  தலைவியைப்  பகலில்   ஓர்  இடத்தில்   சந்திக்க வைத்தல் .

இது    முப்பத்திரண்டு   துறைகளை    உடையது.

பகற்குறி  ;--  பகற்பொழுதில்  ஒரு   குறிப்பிட்ட   இடத்தில்  சந்தித்தல் .

                                                13.  1.  குறியிடங்கூறல் .

                                                                    கொளு .

தலைவன் அளித்த   தழைதனை    ஏற்றவள்,

விளையாடு    மிடத்ன்மை   விளக்கி  உரைத்தது.

பொருள்;--   வாட்டம்போக்கிடத்     தலைவனிடம்   இருந்து  வந்த தழையைப் 

பெற்றவளாகிய   தலைவி,  விளையாடும்   இடம்பற்றித்  தலைவனுக்குத் 

தோழி    விலகினாள் .

                                  பாடல்--114.  

தக்கவேள்வியில்    தண்டித்த   தந்தை போற்றிடும் தனயன் 

சிக்கலின்       தணிகைக்   காடாதலின்   நுழையாப்    பகலோன்.

அக்கறை   கொண்டவன்  பக்கத்தில்  மீன்கள்  சிக்கனமாய்ப்  

புக்கொளி  சூழ்ந்த  புதர்மிகு  பொழில்கார்   பூஞ்சோலையே .

                                    பொருள் .

   தக்கன்   தொடங்கிய    தீய   வேள்வியை, அழிக்கவந்த வீரபத்திரனாம்  சிவன் 

அதில் பங்குபெற்ற   தேவர்களையும்    தண்டித்தான் ;  அப்போரில்     

சூரியனின்  பற்கள்   உடைந்தன;  அந்த   அச்சத்தில்  இருந்து   விலகாத  

 ஆதவன்,  சிவனின்   மகன்,  தந்தைக்கே  உபதேசித்தவன்; என்று   சிவனே 

போற்றும்  சிக்கல்   சிங்காரவேலனின்  தணிகைக்   காட்டில்  தானோ,

அல்லது    தனது    ஒளியோ   புகாதவாறு   விலகிச்சென்றான்; அதனால் 

அவ்விடம்   இருள்சூழ்ந்து    காணப்பட்டது;

  இருள்சூழ்ந்த    காட்டின்மீது   அக்கறை  கொண்ட நிலவு,[அந்தக்   கறை  

குறை  கொண்ட நிலவு]  தன்னைச்   சூழ்ந்து  விண்மீன்கள்   சுற்றிவர,

தனது   ஒளியையும்  குறைவாய்ப்படுமாறு  வீசிவருவான்; அடர்ந்த  

புதர்கள்   அவன் ஒளியைக்   குறைத்துவிடும்; மேலும்  கருமேகமும்  

பூக்களும்  நிறைந்திருப்பதால்  ஒளியின்    வீச்சு   குறையும்;  அப்படிப்பட்ட 

தனிமை   மிக்க   சோலையே   தலைவி    விளையாடும்   இடமாகும்"

என்று தலைவனிடம்   அவளைக்  காணக்   குறியிடம்   கூ\றினாள் .

விளக்கம் ;---  1 .  தக்கவேள்வி  =  பிரம்மனின்   மகனான   தக்கன் 

                                   சிவபெருமானை  வெறுத்து, ஒதுக்கிவைத்துவிட்டு 

                                   விண்ணவர்கள்    எல்லோரையும்   அழைத்து  ஆற்றிய 

                                   தீய  வேள்வி.

2.  சிக்கல்  =  முருகனது    தலங்களில்   ஒன்று; சிங்கார வேலனாக  வீற்று 

                          அருள் புரிவார்  முருகன்.[மற்றொரு பொருள்]

                         புதர்கள்  மண்டி,நிறைந்து ,பிணைந்து  விளங்குவதால்  சிக்கல் 

                         மிகுந்த  காடு.

3 . மீன்கள்  =  விண்மீன்கள் ;உடுக்கள் .

       மெய்ப்பாடு ------உவகை .

               பயன்---------குறியிடம்  உணர்த்துதல் .

                                                 13.2. ஆடிடம்      படர்தல் .

                                                                கொளு .

தழைதனைப்    பெற்றவள்   மழைக்குழல்   மாதுடன் 

விழைந்தாள்     விளையாடும்   வியன்மலர்க்   காடு .

பொருள்;---   தலைவனிடம்    தழையாடையைப்   பெற்றுக்கொண்ட 

தோழி,தலைவியை    அழைத்துக்கொண்டு,  விளையாடும்   இடம் 

நோக்கிச்சென்றாள் .

                                                பாடல்---115.

முள்ளும்   முகிலும்    முதிர்கள்ளியும் கள்ளரும் நிறைந்த    

வள்ளி   மலைக்காட்டில்  துள்ளியோடி    ஆடிய   வள்ளிபோல் 

உள்ளம்    உவந்து    ஊசலின்பின்      புதுநீர்    ஆடிடுவாய் !

வள்ளல்    வடிவேல்        வளமிகுத்    தணிகைச்     சோலையிலே.

                                               பொருள் .

  முட்செடிகளும்,  மேகக்கூட்டமும்,  கள்ளிச்செடிகளும்  , கள்ளர்களும் 

நிறைந்து   விளங்கும்   வள்ளி   மலைக்காட்டுச்  சோலையில்   தனது 

தோழியருடன்  கூடி   ஒடி,ஆடிய   வள்ளிக்குறத்தி   போன்று,

        தலைவியே    நீயும்  மனத்திலே   மகிழ்வுடன்   வள்ளலாகிய   வடிவேலன் 

வீற்றிருக்கும்    வளம் மிகுந்த   தணிகை    மலைச்சோலையில்  

 விளையாடுவாய்!   முதலில்   ஊஞ்சல்   ஆடு;  அதன்பின்   மலையிலிருந்து 

பொழியும்   அருவியில்   நீராடி  மகிழ்வாய்!   என்று  தோழி   தலைவியைக் 

காட்டுச்சோலைக்கு  அனுப்பித்    தானும்  தனது   குழுவோடு    சென்றாள் .

விளக்கம்-- 11  புதுநீர்  =  மலையருவியிலிருந்து   பொழியும்   புதிய  நீர். 

                                                 13.3. குறியிடத்துக்  கொண்டுசேர்தல் .

                                                                கொளு .

ஆடிடத்தே   கூடிய     ஆய    வெள்ளம் 

ஆடிடத்     தலைவியைத்   தனியே  பிரித்தது .

பொருள்;--   கூடிய     ஆயர்  கூட்டங்கள்   விளையாடின;  அவர்களோடு 

விளையாடிய   தலைவியைத்    தனியே  பிரித்து  அழைத்துச்  சென்றாள்  

 தோழி.

                                                பாடல்--116.

பணிவோர்   படுதுயர்   போக்கி ,நனியருள்  புரிபவன்,

தணிகை     மலையில்,  தினைப்புனத்தைக்     காப்போம்; எழுப்புவோம்  

மணிக்குரல்;    மண்வீடு    கட்டுவோம்;  மகிழருவி   பாய்வோம்;

தனியே,    தளிராய்,வா!  தமிழ்மகளே !  காண்போம்   தகவே .

                                                பொருள்.

    தன்னைப்பணிந்து   போற்றுவோர்களது    துயரை  எல்லாம்    போக்கி ,

அவர்களுக்கு   நல்லருள் புரிபவன்,முருகக்கடவுள் வீற்றிருக்கும்    தணிகை  

 மலையில்   தமிழ்மகளே !  தலைவியே!  இவ்வாயத்தை    விடுத்துத்    தனியே 

என்னுடன்  வா!  நாம்  தணிகை  மலையில்   தினைப்புனத்தைக்  காப்போம்;  மலைகளின்   முன்  நின்று   மலைஎதிரொலிக்கக்   குரல் எழுப்புவோம்; மணலில்    வீடு  கட்டி விளையாடுவோம்; மலையில்   பொழியும்  அருவியில்   மகிழ்வோடு  ஆடுவோம்;    தனியே   வா! காட்டின்  தகவெல்லாம்  காண்போம்"!   என்று கூறித்   தோழியானவள்   தலைவியைத்    தலைவனோடு  சேர்த்துவைக்க முனைந்தாள் .

விளக்கம்;-- தன்னோடு   விளையாட   வா!"  என்றழைத்தாலும் , தனியே 

தலைவனோடு   ஆடப்  போ!  எனக்குறிப்பால்  உணர்த்தினாள்   தோழி.

     மெய்ப்பாடு -------உவகை 

            பயன்-----ஆயம்   பிரிதல்.

                                                13. 4. இடம்  துய்த்து  நீங்கல் .

                                                                கொளு .

மென்மைத்     தலைவியை  இடத்தருகு   விடுத்து,

நன்மைச்       சொல்லை     நலத்தாள்    உரைத்தது.

பொருள்;---   மென்மை  வாய்ந்த  தலைவியைப்    பகற்குறி   இடத்தே 

நிறுத்திவிட்டு,நல்ல தோழி  அவளிடம்  கூறினாள் .

                                                பாடல்--117.

பரன்தணிகைப்    பாங்குடையாய்! நிறமிகு    பூக்கள்   கொய்து,  

கரங்களால்   கட்டிக்     கருங்கூந்தல்  சூட்டிடக்   கருதியே  

பரற்கல்   முரண்வழி  செல்கிறேன்; பஞ்சினும்   மெல்லிய 

திருக்கால்    நொந்திடும்;அதனால்  திருமகளே! நில்லிங்கே.

                                                பொருள்.

       மாமுருகனது     தணிகை   போன்றவளே!  உன்னை விட்டுப்  பிரிந்து  சென்ற 

நான்  நல்ல மணம் மிக்க   நிறம் மிக்க   மலர்களைப்    பறித்துவந்து, 

அவைகளை என்   கரத்தால்    நன்கு கட்டி,  உனது  கூந்தலில்   சூட்டிட  

 விரும்பிச் செல்கிறேன்;நான்  செல்லும்  வழி  முள்ளும்,பரற்கற்களும் 

நிறைந்து  நடப்போர்க்குத்   துன்பம் செய்யும் வழி  ஆகும். அவ்வழியில் 

நீ   வந்தால்  பஞ்சுபோன்ற   உன்  மெல்லிய   சேவடி  மிகுந்த   துன்பம் 

அடையும்;அதனால்   இலக்குமி   போன்றவளே!  நீ    இங்கேயே   நின்றிரு;

நான்  விரைவில்   வந்துவிடுவேன்" ,என்று சொல்லிவிட்டு,

  அவளைத்    தலைவனைச்   சந்திக்கும்   குறியிடத்தருகே   நிறுத்திவிட்டுத் 

தோழி  தனியே சென்றாள் .

விளக்கம்;-- 1 .  பரன் தணிகை  =  பரம்பொருளான முருகனின்   தணிகை  மலை.

2.  முரண்வழி  =  நன்கு  நடந்துசெல்லமுடியாத  மாறுபட்ட  வழி.

3 . திருக்கால்  =  மதிப்புமிகு   கால்கள்.

       மெய்ப்பாடு -------உவகை 

                பயன் --------  தலைமகளைக்    குறியிடத்துய்த்து  நீங்குதல். 

                                                      13.5.  உவந்துரைத்தல் .

                                                                      கொளு .

மயிலன்ன   சாயலாள்    மதியன்ன   முகத்தாள் 

பயில்சோலைப்  பக்கம்வரத்    தலைவனின்  மகிழுரை.

பொருள்;---   மயில்போன்ற   சாயலையும், மதிபோன்ற  முகத்தையும்  கொண்ட 

தலைவி, சோலையின்  ஒருபுறம்   வந்துநிற்க,  அது கண்ட  தலைவன்  உவகை 

கொண்டு    உரைத்தது.

                                                 பாடல்---118.

குறவர்   நிலைமாற்றி,  முருகன்    காணவந்த   வள்ளிபோல்,

புறப்பரி   சென்றதும்   போர்ப்புறம்   வந்ததேவ  யானைபோல்,

துறந்தாலும்     தூற்றாது    துவண்டணைக்கும்     தூய்மைத்     தொன்மையே!  

அறத்தணிகைப்    புறக்கா    வகமே !     அழகே!     வந்தாயோ!

                                                பொருள். 

    தடுத்த   உறவினர்களாம்    குறவர்களின்   மன  நிலையை   மாற்றி,  

வேடனாக  வந்த   முருகனை   நாடி   ஓடிவந்த  வள்ளிக்குறத்திபோலவும்,

தேவாசுரப்போரின்    வெற்றிக்குக்   காரணமான  முருகனுக்கு   என்மகள் 

போர்ப்பரிசாவாள் "  என்று இந்திரன்   அறிவித்ததும், மகிழ்வுடன் முருகன்  

தங்கியிருந்த படைவீடு   நோக்கி    ஓடிவந்த தேவயானை  போலவும்,

    உன்னைவிட்டுப்  பிரிந்தாலும்,சினம்  கொள்ளாது, என்காதலை   நினைந்து 

துவண்டு.என்னை    அணைக்கத்   தூய்மை  எண்ணம்கொண்ட  பண்பே!

எனது    உள்ளமே!  அழகே!  என்னைக்காண  திருத்தணிகைப்   புறம் 

அமைந்துள்ள  காடு  நோக்கி   வந்தாயோ?  எனத்   தான்  வீற்றிருந்து  சோலை 

அருகே தலைவி நிற்பதை  பார்த்து, மகிழ்ந்து  கூறினான்.

விளக்கம்;--  1 . புறப்பரிசு  =  புறப்போரின்  வெற்றிப்பரிசு. மகேந்திராபுரிப்  

                                                            போரில் அரக்கர்களை  வென்றமைக்கு.

2 . போர்ப்புறம்  =  போர்க்களத்துப்   படைவீடு '

3.  புறக்கா  =  தணிகை   நகருக்கு   வெளியே  அமைந்துள்ள  காட்டுப்பகுதி.

                                                13.  6.  மருங்கணைதல் .

                                                                 கொளு .

விற்புருவ   நற்றவள்    நாணுதல்   கண்டு,

கொற்றவன்  ஆதரவாய்   அன்புரை  கூறியது.

பொருள்;---  வில்போன்ற  புருவம்கொண்ட  நற்குடிப்  பிறந்தாள்   புகழுரை 

கேட்டு,நாணி  நிற்க, மலைநாடன்   அவளுக்கு  ஆதரவு   காட்டி   அன்புடன் 

கூறியது.

                                                பாடல்--119.

திருத்தணிகை    நிருத்தன்   விரும்பியோர்  முன்வந்      தருளைத் 

தருவபோல்   தண்வேலி  அருகருளும்   தலைவி   கண்டு,

பொருப்புப்    பூரிப்புப்   புறப்படும்   பயணம்  பொறுக்காத 

சுருக்கிடை  சோர்வடைவதால்  பெருக்கா   திராதோ ?  என்றான்.

                                                பொருள் 

   திருத்தணிகையில்   வீற்றிருக்கும்   பரம்பொருளாம்   முருகன்,   தமது 

அடியார்களுக்கு,  தன்னை விரும்பிப்போற்றும்  அடியவர்களின்   துயரைப் 

போக்குவதற்கு,  அவர்களுக்கு    அருள்புரிவதற்கு,   அவர்கள்   முன் தோன்றிக் 

காட்சிகொடுத்துக்   காப்பான்;அதுபோல  தனக்கு   நல்லருள்புரியத்   

தலைவி தணிகைமலைச்   சோலையிலே  அமைந்துள்ள  முள்வேலி  அருகே 

வந்துநின்று, கொண்டிருக்கிறாள்"  என  உணர்ந்த    தலைவன்,   அவளது  

அழகைப்  பாராட்டிப்பேசுகிறான். இருமலைகள்   அவையே  மார்பகங்கள்;

அவை  பூரிப்படைந்து மேலும்மேலும்  விம்மிப்  பெருக்கத்தொடங்கின ;

அவைகளைத்    தங்க முடியாத  சுருங்கிய   இடையே   மேலும்   சுமை ஏறிடச் 

சோர்வுற்று  விளங்கியது; ஓ  ஓ  மார்பகங்களே!  நீங்கள் பெருக்காமல்  

 இருக்கக்கூடாதா?  என   வினவுவதுபோலத்    தலைவியின்    அழகை    மேலும் 

வளமாக்கினான்.

விளக்கம்;--- தன்னைத்தேடி   வந்த    தலைவியைப்  போற்றும்  முறையில்  

அவளது  மேனியழகைப்    பாராட்டுகிறான்.

1 . நிருத்தன்  =  மன்னன்.

2 . விரும்பியோர்   =  விரும்பிப்  போற்றும்    அடியவர் .

3 . பொருப்பு  =  மலை; மலைபோன்று  பெருத்த  முலைகள்.

4 . சுருக்கிடை =  ஓசிந்த  இடை .

     மெய்ப்பாடு -----உவகை 

                  பயன் ----  சார்தல்.

                                                13.  7.  பாங்கியறிவுரைத்தல் .

                                                                கொளு .

முன்னறி    பாங்கி,முழுதும்  அறிவாள் 

நன்னெறித்    தலைவன்    தலைவிக்     குரைத்தது .

பொருள்;---   நமது  இக்கூடலைத்     தோழி  முன்னர்   அறிந்தவளே ;

கலங்காதே!    எனத் தலைமகளிடம்   கூறியது.

                                                பாடல்--120.

பரங்குன்றத்       தோழியர்  பரிகசிக்க  நாணுற்ற  தேவா 

வரமளி    நாள்போல்  வடிவுடைத்    தலைவியே!  வரியிடு

நிறக்கண்   நித்தில   மணிமுலை, நீள்குழல்சூழ்   நன்மாலை

திறக்கோலம்   தோழி,     நானுமே; திறனறி;     கலங்கற்க .  

                                                பொருள்.

     திருப்பரங்குன்றத்துத்   திருமண   நாளன்று, இரவு  பள்ளியறை  சென்ற 

தேவயானை, மறுநாள் காலை   வெளிவரும்பொழுது   அவளது  அலங்காரங்கள் 

கலைந்து  இருக்கக்கண்டு  தோழியர்    பரிகசிக்க , வெட்கித்தலை  குனிந்த  

அவள்   அவர்களுக்கு அருள்புரிந்தாள் ;  அதுபோலவே  அழகிய   தலைவியே! 

உனது   கண்களின்   வரியிடப்பட்ட  புள்ளிகள்   எல்லாம்   கலைந்திருக்கவும்,

உனது மார்பகத்தைச்   சுற்றி  முத்துமாலைகள்   தாறுமாறாகக்  கிடக்கவும்,

உனது  நீண்ட கருங்கூந்தலிலே  கழுத்தில்  போடப்பட்ட மாலைகள்  சுழன்று 

விளங்கவும், உருவான  இத்திறக்கோலத்தைத்    தோழியும்   அறிவாள் ;  

நானுமே   அதற்கு உடன்பட்டவன்; தோழி    அறிந்துவிடுவாளோ    என்று 

கலங்காதே;  முன்னரே   அவள்  அறிவாள் "  என்றும்  கூறினான்.

விளக்கம்;--1 . பரங்குன்றம்  =  முருகக்கடவுளின்   திருமணம்  நடந்த   தலம் .

2.  வரியிடு  =  கண்களைச்சுற்றிப்   புள்ளி  அமைத்தல் .

3 .  திறனறி =  நமது  கூடலை முன்னரே   தோழி    அறிவாள் ;

மெய்ப்பாடு  -----பெருமிதம்.

       பயன்  -------பாங்கி   அறிந்தமை  தலைமகட்கு   உணர்த்துதல் .

                                                13.  8.  உண்மகிழ்ந்துரைத்தல் .

                                                                  கொளு .

புணர்ந்த    தலைவன்  குணநலத்    தலைவியை,

உணர்ந்து    உயர்த்திப்   புகழ்ந்து    உரைத்தது.

பொருள்;---   தலைவியிடம்    இன்பம்  அனுபவித்த    தலைவன்   அவளது 

பெருமைகளை,உயர்வை   உயர்த்திப்  பேசியது.

                                              பாடல்--121.

தணிகை      வந்ததும்    தத்துவ   வள்ளியைத்    தழைத்தணைத்து 

மணிவிளக்கே!  மாசறு    பொன்னே!  மலர்வாய்    போற்றியபோல் 

பிணிதீர்   பேரமுதே!   பிறவாத     பொன்மலரே !  பெற்றேன் 

அணியழகை; அருள்நீ;   பொருள்நான்;  அன்பளி     சுகமே!  

                                                பொருள்.

   வள்ளிமலையிலிருந்து வள்ளியோடு    திருத்தணிகை   வந்த  முருகன்,

தனது    மாளிகையில்  எழுந்தருளி, சக்தி  தத்துவத்தின்   சான்றான  

வள்ளியை  மகிழ்வுடன்   அணைத்து,அவளை   ஒளிர்மிகு   விளக்கே!

குற்றமற்ற   தங்கமே!  என  மலர்போன்ற  தனது வாயால்  போற்றினான்;

அதுபோல,

     கூடிமகிழ்ந்த    தலைவனும், தலைவியை,  நோய், துயர்,கவலை  தீர்க்கும் 

அமுதம்   போன்றவளே!  நிலத்தில்   தோன்றாத  உயிருடைத்   தங்கமே!

பூக்காது  மணம்   வீசும்  விண்ணகமலரே! நான்    செய்த   தவத்தால்  

அழகே   உன்னைப் பெற்றேன்; எல்லோர்க்கும்    அருள்புரிபவள்   நீயே;

உனக்கு உறுதுணையாய்  நற்பொருள்   வழங்குபவன்   நானே;என்றும் 

எனக்கு   அன்பும்,இன்பம்   அளிப்பாய்   அழகிய   கிளியே!

சுகத்தைத்   தருபவளே!  எனக்கு   அன்பையளிப்பாய் !  என  உள்ளமெல்லாம் 

மகிழ்ந்து  உரைத்தான்.

விளக்கம்;--  .தத்துவ வள்ளி  =  சக்தி  தத்துவம்;  அருள்வழங்கு  அன்னை.

                                                              பிரியாது   உடன்  வீற்றிருக்கும்    சக்தி.

2.  மலர்வாய்  =  உவமைத்தொகை ;  முருகனின்   மலர்போன்ற  செவ்வாய்.

3 .  சுகமே =   இருபொருள். சுகமே=கிளியே;  சுகமே =  நன்மைகள் தரும் மகிழ்வு.

     மெய்ப்பாடு------    உவகை.

                பயன்   -------நயப்புணர்த்துதல் .

                                                13. 9. ஆயத்து   உய்த்தல் .

                                                                  கொளு .

தேனடைத்    தேனீயாய்த்   திரண்டெழும்   கூட்டம் 

தேனீக்கள்    அரசியாய்த்     திகழ   விட்டான்.

பொருள்;----    இனிமை  சேர்க்கும்    தேனீக்கள்  வாழும்   தேனடை; 

அதைச்சுற்றிச்சுற்றி வருபவை   அவை;  கணக்கில்லாப்   பெருங்கூட்டம்;

அதற்கு   ஒரு   அரசி;  அவளே  தலைவி;   அக்கூட்டத்தில்  கலக்க  விட்டான் 

தலைவியை.  ஆயர்  கூட்டத்தில்  தலைவியைச்  சேர்த்தான்.

                                                பாடல்---122.

விரிந்தது     கமலம்;  விலகியே    சூழ்ந்தன   மொட்டுக்கள்;

வியந்தது     நிலவு;   விண்வானில்    நிறைந்தன  உடுக்கள்;

வியனுறு    விளக்கமே!  விரும்பிக்   கூடிடு!        உன்கூட்டம்.

தயவளித்    தணிகையான்   சேரும்   தன்னடியார்   கூட்டமாய்.

                                                பொருள் .

   பொய்கையில்   தாமரை   மலர்ந்தது;  அதைச்சுற்றி  நிறைந்த  மொட்டுக்கள் 

விலகி விலகி   விளங்கின;

நிலவு   மலர்ந்தது;  அதைச்சுற்றி   உடுக்கள்   வானில்ஆங்காங்கு  நிறைந்தன; 

தலைவி  நடுநின்றாள் ;  அவளைச்சுற்றி  ஆங்காங்கு   தோழியர்   கூட்டம் ;

    வியக்கத்தக்க   ஒளிமிகுந்தவளே!  உன்னுடைய   கூட்டத்தாருடன் ,

கருணைபொழியும்   தணிகை   முருகன்  தனது  அடியார்களுடன்  

கூடி,  அவர்தம்   துயர் போக்கும்  நிலைபோல , நீயும்  சேர்ந்து  மகிழ்வாய்!

என்று  கூறித்   தலைவியை  ஆயர்   கூட்டத்துடன்   சேர்த்தான்.

விளக்கம்;--- 1 . உடுக்கள் =  விண் மீன்கள் 

2. விரும்பிக்கூடிடு =  விருப்பமான   தோழியர்; அதனால்   விரும்பிக் கூடல்.

3 .  தயவளி  =  கருணை  பொழியும் .

    மெய்ப்பாடு------    பெருமிதம்.

               பயன் -------புறத்தார் அறியாமைப்   பிரிதல்.

                                                 13. 10. தோழி  வந்து கூடல் .

                                                                        கொளு .

குறியிடம்  நிறுத்திச்   சென்ற   தோழி 

மறுபடி     வந்து   அருமுரை   கூறினாள் .

பொருள்;--  தலைவியைக்   குறியிடம் நிறுத்திவிட்டுச்சென்ற   தோழி,

மீண்டும்    அங்குவந்து  நற்சொல்  கூறினாள் .

                                                பாடல்--123.

தளர்வடையாத்     தணிகைச்    சோலை  தளர்வுற்ற  தலைவி 

வளர்மொட்டு   தொட்டு , நலமலர்  பறியா   மனத்தவள்

நிலைகண்டு,  மெலிவிரல்  நோகப்   பறியேல் ;  அலைகுழல்  

தலைதனில்    சூடத்    தளிரிதழ்  யானே   கொணர்ந்துளேன்.

                                                பொருள் .

    தன்னை வணங்குவோரின்   துன்பம் நீக்கி  அவர்   தளர்வடையாமல்  

அருள்  கூட்டுபவன்   வீற்றிருக்கும்    திருத்தணிகைச்   சோலையிலே  

தலைவனோடு    கூடியதால்  நாணமும், தோழி  அறிந்துவிடுவாளே   என்ற 

அச்சமும்  கொண்டதால்  தளர்வடைந்து,  மலர்களைப்   பறிக்காமல்  

மொட்டுக்களைத்  துழாவிக்கொண்டிருந்த   தலைவியைக்   கண்ட   தோழி,

தலைவியே!  உனது  மென்மையான விரல்கள்   துன்பமடைய  நீ   பூக்களைப் 

பறிக்கவேண்டா; உனது   பறக்கும்   குழலுடைய   தலையில்  சூடத்தகுந்த  

மணமும் , மென்மையும் நிறைந்த  நல்ல மலர்களை  நானே   

கொண்டுவந்துள்ளேன்;  என்று   கூறினாள் .   இவ்வாறு   கூறுவதிலிருந்து 

அவளுக்கு  தலைவியின்   கூடல்  நிகழ்வு   தெரியும் என்பதையும்  

வெளிப்படுத்தினாள் .

விளக்கம்;--  1.  தளர்வடையா  =  தணிகையில்   வீற்றிருக்கும்   முருகனை                                                                                  

                                                                   வணங்குவோர்  தளர்வடைய   மாட்டார்கள்.

2 .  தளர்வடைந்து  =  தலைவனோடு   கூடியதால்,  அந்நிகழ்வு  தோழி 

                                          போன்றோர்   அறிந்துவிடப்  போகிறார்களே    என்பதில்

                                         தலைவி தளர்வடைந்தாள் .

3.  அலைகுழல்  =  காற்றில்   பறக்கும்   கூந்தல்.

                                                13. 11. ஆடிடம்   புகுதல் .

                                                                கொளு .

தனியே    நின்ற   தோழி   தவிமனக் 

குணத்தா      ளுடனே   ஆடிடம்   சேர்ந்தது.

பொருள்;---   தலைவியைக்   குறியிடத்து   விட்டுவிட்டுத்    தனியே   நின்றிருந்த 

தோழி  ,  தலைவனோடு கூடிய   தலைவி,  மனத்தவிப்புடன்  தோழியோடு   சேர.

இருவரும்    ஆடிடம் சேர்ந்தனர். 

                                                பாடல்--124.

இருளில்   நிலவாய்,  மருளில்   விடையாய், விளங்குபவன் 

அருளில்    பொலியும்   முருகனது   திருத்தணிகைச்   சாரல் 

திருவே!   விரும்பியே   பெருக்கும்   இருமுலைச்    சுமையாய் !

குறுநடை   நடந்து  மெதுவாகப்  புகுவாய்   பேராயம். 

                                                 பொருள்.

   மாய  இருளில்  தட்டுத்தடுமாறும்   ஆன்மாக்களுக்கு, ஞான   விளக்குபோன்ற 

நிலவாய்   நல்வழிகாட்டுபவன்; மலமாயமருட்கையில்  சிக்கித்  தடுமாறும் 

உயிர்களுக்கு   நல்லுபதேசம்  அளித்து  நன்மை   அளிப்பவன்; இப்படிப்பட்ட 

அருள்நோக்கம்   கொண்டு   விளங்குகின்ற  மாமுருகன்;   அவன்   வீற்றுள்ள , 

திருத்தணிகை மலை;  மலைச்சாரலிலே  வாழ்கின்ற  இலக்குமி   அன்ன 

தலைவியே! என்   தோழியே!  உனது    முலைகள்  அவைகளாகவே  

நாளுக்குநாள்  விரும்பிப்   பெருத்துக்கொண்டே   இருக்கின்றன;  அதனால் 

அவைகளின்    சுமையைத்  தாங்கமுடியாத    இடையோ    மேலும் மேலும் 

வருந்திச்   சிறுக்கிறது;  சிற்றிடை  உள்ளவளே ! மிக மெதுவாக   நடந்து  சென்று,

நமது   பேராயத்தை    அடைந்து,  தோழியரோடு   கலப்பாய்! "  எனத்தோழி 

தலைவிக்குச்   சொன்னாள் .

விளக்கம்;--  1.  இருளில்  =  தீயவழி   காட்டும்  மாயா மலம்.

2.  மருளில்  =  அறியாமை   என்னும்  மருட்கை.

3.  விரும்பியே  =   தானாகவே  

   மெய்ப்பாடு-------   பெருமிதம்.

           பயன் -----------    தலைமகளின் ஆற்றாமை  நீக்குதல்.

                                                13.  12.  தனிகண்டு   உரைத்தல் .

                                                                     கொளு .

தலைவியை      ஆயத்து      விடுத்துத்    தோழி 

சிலைக்கைத்      தலைவனைத்      தனியே   கண்டுரைத்தது.

பொருள்;--  தலைவியை     ஆயர்தம்    கூட்டத்தே   விட்டுவிட்டு த் 

தலைவனைத்     தனியே சென்று,பார்த்து,உரைத்தது.

                                              பாடல்--125.

அள்ளிப்    பருகும்   அருஞ்சுனை    முள்ளிமலர்  முதுசுவை 

துள்ளுமனத்   தேன்கனி, பள்ளுப்   பறவைகளும்   நிறையூர்;

வள்ளித்தாய்     வந்ததால்   குரவைவளம்  மேலுமே   வளர்ந்த,

நல்லூர்த்    தணிகையில்   நலமெலாம்   சுவைத்தபின்   செல்கவே.

                                                பொருள்.

    தலைவ !  சிற்றூரான   எம்மூரில்  கையால்   அள்ளிப்பருகும்   நன்னீர்  

பொழியும்   அருவி,  சுனைகள் உண்டு;  தாமரை போன்ற   மலர்கள்  எங்கும் 

பூத்துக்குலுங்கும்.  தொன்மைவாய்ந்த   சுவைகொண்ட ,மனத்தை  

மகிழவைக்கும்   தேனும்,  நல்ல கனிகளும், உண்டு;    பள்ளுப்பாடும் ,

பறவைகள்  நிறையைக்காணலாம்; மாமுருகன்    வள்ளியம்மையை   இங்கு 

அழைத்துவந்தபின்  குரவைக்கூத்து  வெகுசிறப்பாக வளரும்  நல்ல ஊர்  இது.

இந்தப்     பெருமைகள்   விளங்கும்    திருத்தணிகை    மலைச்சாரலில்   தங்கி,

கண்டும்,   சுவைத்தும்    மகிழ்ந்தபின்னர்    தாங்கள்    உங்களூர்    செல்லலாம்"

என்று  வரைவு   கடாதல்   நிமித்தமாகத்    தலைவனை    அங்கு    தங்குமாறு 

வலியுறுத்தினாள்   தோழி.

விளக்கம்;--- 1 . முதுசுவை =   தொன்மை   வாய்ந்த  பழமை  கூடிய  சுவை.

2 .வந்ததால்  =  முருகனோடு   வள்ளிமலையிலிருந்து   அன்னை வந்ததால் .

3 .   =  குரவை  =  குன்றத்தில்  வசிக்கும்   குறவர்,மற்றவர்    ஆட்டும்   ஒருவகைக் 

                                  கூத்து.

மெய்ப்பாடு --------- பெருமிதம்.

      பயன்  -------------குறிப்பினால்   பிரிவாற்றாமை  கூறி   வரைவுகடாதல் .

                                                  13.  13.  பருவங்கூறி   வரவு  விலக்கல் .

                                                                     கொளு .

விருந்துண்ட   திருமகனே!  வரைதல்      அன்றி 

திரும்பவும்   இவ்வழி    வாரற்க"   என்றாள் .

பொருள்;---   எங்களோடு  தங்கி   விருந்து    உண்டபின்னர்  குன்னூர்  செல்வாய்;

அதன்பின்   தலைவியைத்    திருமணம்  செய்துகொள்வதற்காகவே  இவ்வழி 

வருதல் வேண்டும்;  காண , கலந்துரையாட  என   வராதே"  எனத் தோழி 

தலைவனிடம் கூறினாள் .

                                                பாடல்--126.

பற்றில்லா   முனிவர்போல்    தன்னைப்    பற்றிய  மரங்களை,

உற்றபுகழ்   மணி,தந்தம்  போன்றவை  வீசி     யெறியும்

நற்றாறு     தணிகைமலைச்    செல்வி    பொற்றிரு   முலைகள் 

சிற்றிடை   நெருக்கின ;  சிந்தனை  செயலாகக்    கொள்க.  

                                                 பொருள்.

     சிறு   தூசினையும்    பற்றாத   முனிவரின்  செயல்போலத்    தன்னைப் 

பற்றிக்கொண்டு,தன்னோடு   வரும், மரங்களை,  உயர்ந்த   நவரத்தினங்களை,

யானைத்ததந்தங்களைத்    தனது  கரையில்    வீ சி வீசி எறியும்  விரைவாறு 

பாய்கின்ற    தணிகை   மலையில்  வாழ்கின்ற  தலைவியின்  பொற்கலசமான 

முலைகள்  மேலும்  பெருத்து,அவளது    சிற்றிடை   தாங்கமுடியாது  

துன்புறவைத்தன .   இதை  தலைவ !   நீ   மனதில் கொள் !  விரைவில்  

தலைவியை மணந்துகொள் !  என்று  விருந்துண்ட    தலைவனிடம்  

வற்புறுத்தினாள் .

விளக்கம்;--  1.  தந்தம்  =   யானைக் கோடு.

2 . நற்றாறு  =  விரைவாகச்செல்லும்  பேராறு.

3 .  பொற்றிரு  முலைகள் =  பொன்+ திரு.   பொன்மயமாக விளங்கும்  அழகு 

                                                                           மார்பகங்கள்.

   மெய்ப்பாடு -----அச்சம் 

              பயன்  ------   வரைவு   கடாதல். 

                                                13 .14.  வரைவு    உடம்படாது   மிகுத்துக்   கூறல்.

                                                                         கொளு .

வரைவுதனை   வற்புறுத்திய  தோழிக்குத் தலைவன் 

நிறைவு,      குறைவு     காட்டிக்   கூறியது.

பொருள்;--  திருமணம்  செய்துகொள்ள   வற்புறுத்திய   தோழியிடம் 

தலைவன்,   தலைவியின்  நிறைந்த  பெருமையையும்,   தனது  குறைவுடைய 

தாழ்வையும்  கூறி, வருந்தி  மாவிலக்கியது.

                                                                 பாடல்--127.

வானுயர்ந்த   மலையோ   தேனூறும்  தணிகை ;  தெய்வமோ 

கானூரின்    கடிவள்ளிக்     கணவன்; கால்வணங்கும்   பிரமன் 

தான்படை   தளிரை  எழிலைத்   திருமணச்     சடங்கில்

யானமர,    வேழுலகும்   ஒப்புமோ? ஏழைக்கும்   ஒவ்வா. 

                                                பொருள். 

    வானளவு   உயர்ந்தும்,  தேனூறும்  கனிகளும், தேனடைகளும்  நிறைந்த 

தணிகை  மலை; அம்மலையின்     கடவுளோ   வள்ளிமலைக்காட்டின்   தலைவி 

வள்ளியம்மையின்    கணவன்   முருகக்கடவுள்;  அவனது கால்களில்   விழுந்து 

வணங்கி,   உபதேசம் பெற்ற   பிரம்மதேவனது  இளமை,எழில்  மிகுந்து  

படைக்கப்பட்ட வள்   தலைவி.   அவளை    மணந்துகொள்ள,  

திருமணச்சடங்கில்   அவள் பக்கத்தில்    அமரும்  தகுதி    எனக்கு    உளதோ?

இதனை  ஏழுலகும்   ஏற்றுக்கொள்ளுமோ? அது    தவிர   வளத்திலும், 

கல்வியிலும்    தாழ்மையான,ஏழ்மையான  எனக்கும்   இது  ஒத்துவராது.

தோழியே!  தலைவியைத்   திருமணம்    செய்து கொள்வது   அவ்வளவு 

எளிதாகாது"   இதனை    நீ   உணர்க"  என்று   தோழியிடம்   கூறினான் 

தலைவன்.

விளக்கம்;;--

[திருமணத்தைத்     தவிர்த்துக்   களவொழுக்கத்திலேயே   காலத்தைக்  கடத்த 

விரும்பிய   தலைவனது  மனதின்   எடுத்துக்காட்டு  இது.]

1 . கானூர்  =  காட்டுமலையூர்  

2 . தளிரை  =  இளமையை 

3 . எழிலை  =  அழகை 

4 .  ஏழை  =  செல்வக்கல்வி   வளத்தில் .

                                               13. 15. உண்மை  கூறி, வரைவு  கடாதல்.

                                                                    கொளு .

மலைநாடன்   மணந்திடத்    தயக்கம்  காட்டத் 

தலைவியின்  உண்மைநிலை  தோழி   உரைத்தது.

பொருள்;---  தலைவன்,  தலைவியை   மணந்துகொள்ளத்    தயக்கம்   காட்டத் 

தோழி,  தலைவியின்  உண்மை   நிலையை விளக்கி  வரைவு வேண்டியது.

                                               பாடல்--128.

தக்கோர்   தாரை    வார்த்ததும்,   தான்விரும்பியே   மணந்ததும்

மிக்கபுகழ்    மின்மலைத்    தணிகைத்     தினைப்புனம்    காக்கும் ,

மக்களே   பெற்றோர்;   தக்கது     மலைச்சாரல்   காவலாகும் ;  

எக்கணமும்  எம்மை   ஏற்றியுரை   வேண்டாமே ;   ஏந்தலே!

                                              பொருள்.

     தலைவியை  வானளாவிப்  புகழ்ந்து, உயர்நிலையில்   உலாத்தன்மையால் 

மணக்கததயங்குகிறேன்" என்று தலைவன்   சொன்னதிற்கு   விடையாகத் 

தோழி .

             தகுதிமிக்க    தாய்  தந்தையர்   தமது மகள்   தேவயானையை  முறைப்படி

மணம்  செய்துகொடுத்ததை    ஏற்றவன்;  தானே  விரும்பி,   மலை,காடுகள் 

எல்லாம்  சுற்றிக்காதலித்து   வள்ளியை   மணந்துகொண்டவன்;  இவைகளால் 

மிகப்பெரிய   புகழ்   அடைந்தவன்  முருகன்   வீற்றிருக்கும்  ஒளிர்மிகுந்த  

தணிகை   மலைச்சாரலிலே   தினைப்புனம்  அமைத்துக்காவல்    காக்கும்  குடி 

எங்கள்  .குடி ; அவ்வேடுவர்களே   எம்  பெற்றோர்;  எண்கள்    பணி  

 மலைச்சாரல்    காக்கும்   பணியாகும் .இப்படி  எ'ளிமையாய்    விளங்கும் 

எங்களை,   உயர்த்திப்பேசித்   தங்களைத்    தாழ்த்திக் கொள்ளவேண்டாம்;

எனத்   தலையின்    உண்மை  நிலையை  விளக்கி,

விரைவில்  தலைவியை   மணந்துகொள்ளுங்கள் "  என்று  தோழி  

 தலைவனிடம்  வேண்டினாள்.

விளக்கம்---  முறைப்படிப்   பெற்றோர்  நடத்திய   திருமணத்தையும்   ஏற்றவன்;

தானே    விரும்பிக்   காதலித்த  தன்மையும் கொண்டவன்  தணிகை   மலைத் 

தலைவன்  என்பதால்  அவன்வழி   போற்றும்   எங்களிடம்   உயர்வு  தாழ்வு 

என்பது   இல்லை;  ஆதலின்   எம்  தலைவியை   நீங்கள்   மணந்துகொள்ளலாம்"

என்பது  தோன்றத்   தோழி   கூறினாள் .

1 .  தக்கோர்  =  தாய்,தந்தையர்;   இந்திரன்,இந்திராணி.

2 . மின்மலை  =  ஒளிர்மலை .

3 . ஏற்றி  =  [வீணே ] புகழ்ந்து,   

     மெய்ப்பாடு ------பெருமிதம் .

              பயன் ---------- வரைவு   கடாதல் .

                                                13 . 16.வருத்தம்  கூறி   வரைவு  கடாதல்.                                                                                                                கொளு . 

தனித்து   வாடும்    பனித்துளிக    கண்ணீர் 

மணியாள்   மனம்கண்டு   வரைக   தலைவ .

பொருள்;--  நீயின்றித்    தனியே   தவிக்கும்    தலைவியின்  கண்ணீர்த்  துளியை 

மணிமணி  யாகச்சிந்தும் தலைவியின்   மனம் கண்டபின்னரும்  மணக்காது 

காலம்  தாழ்த்தல்  முறையாகாது"   எனக்கூறி வரைவு  வேண்டினாள்  தோழி .

                                                பாடல்--129.

அமுத      வல்லியின்    அருந்துயர்   தவத்தால்   வள்ளியை,

அமுதாய்     மணந்த     தணிகை   அருகுவாழ்    தலைவி 

அமுதக்      காதல்   அருநஞ்சாம்    அரற்றி   வருந்திடக் 

குமுதக்    கண்ணீர்   குறைந்து,  மகிழ்ந்திட  வரைக நீ.

                                                பொருள்.

     முற்பிறப்பில்   அமுதவல்லி    என்றபெயரில்   தோன்றி, முருகனையே 

மணக்கவேண்டும்' என்று எண்ணம்   கூடாததால்  வருந்திய   அவளின் 

நீண்டநாள்   தவம்கண்ட   முருகன்  அவளை  வள்ளிமலைக்   காட்டில் 

ஓர் தவமுடை  மானின்   வயிற்றில்    வள்ளியாக   அவதரிக்க  வைத்துப் 

பின்னர்   அவளைத்தேடிச்  சென்று  தனது    வாழ்வின்  துணை   ஆக்கிக் 

கொண்டான்;   அந்தத்     தணிகை    மலையின்  சாரலில்    வாழும்   தலைவியும்,

இன்று   தன்னை  வாழவைக்கும்   அமுதமெனக்காதலைக்   கைக்கொண்டு,

அதுவே   கூடாததால்  நஞ்சாக   மாறி   வருத்துவதால்  புலம்பிப்புலம்பி 

வருந்துகிறாள்;  அல்லிமலர்போன்ற  முகத்திலே  கண்கள்  கண்ணீர் 

வடிக்கின்றன; தலைவனே!   அக்கண்ணீரைத்   துடைத்து,   அவளது    துயரைப் 

போக்கி  அருள்வாய்!   அவளை    மணந்துகொள்வாய்!  எனத்   தோழி 

வரைவு    வேண்டினாள்.

விளக்கம்;---   அமுதவல்லியின்   துயரை த்   தணிகை   முருகன்  போக்கினான்;

அம்மலை    வாழ்   தலைவியின்   துயரைத்    தலைவனே!  நீ   போக்குவாய்! 

என்ற   உட்பொருளும்   இங்கு  கிடைக்கிறது.

1 . அமுதாய்  =  இல்லறவாழ்வின்   துணையாகி, அருள்புரியும்   சக்தியாகி 

எல்லோரும்    வாழ   அமுதம்போன்ற    வரங்களை  வாரி  வழங்கவைப்பவள் 

தனது   மனையாள்  வள்ளி "  என  மகிழ்ந்தான்  முருகன்.

2.  அரற்றி  =  புலம்பி,

3 . குமுதம் =  ஈரப்பசை  குளிர்ச்சி  குறையாத  அல்லிமலர்; அதுபோல்  

  தலைவியின்    கண்கள்   கண்ணீரை   விடாமல்  பொழிந்துகொண்டே 

இருந்தன.

          மெய்ப்பாடு----------அச்சம்.

                   பயன்-------------- வரைவு கடாதல் .

                                        13.  17 . தாய்    அச்சங்    கூறி   வரைவு கடாதல் .

                                                               கொளு .

வளர்ந்த    பருவம்;    தளர்ந்தனள்     தாயே;

தளராத்     தலைவ !  நலச்சொல்     ஏற்க.

பொருள்;---  தலைவியின்   பருவ வளர்ச்சிக்கு    ஏற்ப,  உடலும் 

வளர்கிறது;    அதுகண்டு,   தாயும்  கலங்குகிறாள்; தளராத  மனம்  கொண்ட 

தலைவனே!  மணம்   புரிந்துகொள் "   என்னும் நான்  சொல்லும்  நலத்தைக் 

கேட்பாய்   என்று  வேண்டி வரைவு   வற்புறுத்துகிறாள்.

                                                பாடல்---130.

மூவர்க்கும்    முழுமறை  முதல்விரிவு   தந்த   மூத்த

நாவலன்    நற்றணிகை   மலரடி     போற்றும்     நாடனே !

காவல்      கடந்து,   காலத்தால்    கனம்பெற்ற    முலைகண்டு

நோவுற்ற      நற்றாயும்       சிற்றிடைக்   காப்பெண்ணி         யஞ்சுகிறாள்; 

                                                பொருள்.

அரி    அயன் அரன்    ஆகிய   மூவர்க்கும்   முழுமை   பெற்ற   மறைகளின்  

முதலாக    விளங்கும்    பிரணவப்பொருளை   விரிவாக   உபதேசித்தவன் ,

முதிய   நாவன்மை  கொண்டவன், தணிகை   மலையிலே  வீற்றிருக்கும் 

முருகக்கடவுள்;  அவனது   மலர்போன்ற   சேவடிகளை    வணங்கிப்போற்றும் 

நாடனே !  

    கச்சை,  பட்டையணிகள்   போன்றவற்றால்   காவல்  காக்கப்  பெற்றும்,

அவைகளை  எல்லாம்  கடந்து, பருவகாலத்தில்  விரிந்தும்,பரந்தும் , பெருத்த 

அவளது   மார்பகங்களைக்    கண்டு, தாய்  மிகுந்த   கலக்கம்   அடைந்தாள்;

இம்முளைப்பெருக்கத்தால்   வருந்துகின்ற  சிற்றிடை   கண்டும்   வருந்தினாள்;

இம்மார்பகங்களையும்,   இந்த  சிற்றிடையையும்  கைக்கொண்டு,  

 காப்பாற்றும்     ஆண்மை  மிக்க   தலைவன்  எப்பொழுது   வருவான்?  எனத் 

தவிக்கும்  தாய்,  வேறொரு நிலையிலும்    அச்சம்  கொண்டாள்;  இவளைப் 

பெண்கேட்டு  யாராவது    உறவுமுறையினர்   வந்தால்  என்ன   பதில் 

சொல்லுவேன்?   என்றும்   அச்சப்படத்   துவங்கிவிட்டாள் .   ஆகவே 

தலைவியை    விரைவில்   மணந்துகொள்!   என  வரைவு  வற்புறுத்தினாள் .

விளக்கம்---1  . மறைமுதல்  =  பிரணவம்.

2 . காவல்  = மார்பகத்தின்    காவலாம்  கச்சை, பட்டையணிகள்  முதலியன.

3 .காப்பு  =  கணவனாய்  வந்து   மகளைக்   காப்பவன்.

   மெய்ப்பாடு ----அச்சத்தைச்  சார்ந்த  பெருமிதம்.

       பயன்       -----   செறிப்பறிவுறுத்து  வரைவு   கடாதல் .

                                               13.  18.  இற்செறி  அறிவித்து   வரைவு கடாதல் .

                                                                கொளு .

செறிமுலை    உடையாளை    அறிமன    நற்றாய்,

புறம்விட    மறுத்து  இற்செறிவாள்  என்றுரைத்தது.

பொருள்;---   வளர்ந்துவிட்ட   மார்பகம் வெளிவரமுடியாமல் தவிப்பதைக்    கண்ட  நற்றாய்  அவளின்  பருவம்  அறிந்து, வெளியே    செல்ல விடாமல்  வீட்டிற்குள்ளேயே  அடைத்து    வைத்துவிடக் கூடும்; என்று    தலைவனிடம்   தோழி கூறினாள் .

                                              பாடல்--131.

குருதியோ     செந்தூர்;   உறுதியோ    திருப்பழனி ;  ஆழ்ந்த 

அருவமைதி  தணிகை ; மாமலைச்       சீர்நாட!   அன்னையோ 

பருவத்தின்   வளர்வால்   வருமிடர்    எண்ணி,  விளையாடத் 

திருவை    வீட்டில்  செறித்திடுவாள் ;      வாராளினி;   அறிக.

                                                பொருள்.

   செம்மைப்போரின்     செங்குருதி   வழிந்தோடிய    பதி    திருச்செந்தூர்   ஆகும்;

ஆண்டிக்கோலமே   என்கோலம்  என  உறுதியாய்   நின்றபதி   பழனியாகும்.

போர்,  காதல்,ஏக்கம்,  இவைகளை   எல்லாம்   தவிர்த்து ஆழ்ந்த   அமைதி  தரும் 

பதி     திருத்தணிகை;  போரின்  வெற்றிச்செயலும்,  உறுதியின்  

 இறைபக்தியும்,  அமைதியின்   காதலுணர்வும்  நிறைந்த  தணிகை  

 மாமலையின்   சீர்கெழு  நாட்டில்    ஒன்றை  ஆள்பவனே! என்றழைத்த    தோழி,

  எங்கள்    அன்னை    எம்  தலைவியின்   பருவமேம்பாடுகளைக்   கண்டாள்;

அந்த   வளர்ச்சி   தரும்   இடர்ப்பாடுகளை  விளக்கிட   முடிவு  செய்து, 

தலைவியை   வீட்டிலேயே    அடைத்துவைத்துவிடக்கூடும்;   விளையாடவும் 

இனி    அவள்   வாராள் ; இதனை  நீ   அறிந்து, விரைவில்     அவளை   மணம் '

புரிந்துகொள்வாயாக"   என்று  கூறினாள் .

விளக்கம்;--- 1 . குருதி  =  இரத்தம் ;  போர்க்களத்தே  ஓடும்   குருதி  

ஆற்றுவெள்ளம்.தேவாசுரப்போர்.

2 . உறுதி =  ஆண்டியாய்  நிற்பது  என்பதில்  உறுதி.

3. அமைதி =  போர்நிகழ்வு,  ஊடல்நிகழ்வு , வேடரழிவு   இவைகளில் 

                           சாராமல்  மனம்    தணிந்து   அமைதி   பெறல் .

செறித்தல்  = வீட்டிற்குள்ளேயே   வெளிச்செல்ல   விடாமல்  அடைத்தல். 

   மெய்ப்பாடு ------பெருமிதம் 

           பயன் ---------  வரைவு    கடா தல் .

                                                    13. 19.தமர் நினைவு  உரைத்து  வரைவு  கடாதல் .

                                                                         கொளு .

அழகிய    தலைவியை   பழகிட   வெளியிடாமல் 

தமரும்    இற்செறிப்பர்"   தோழி  உரைத்தது.

பொருள்;--  தலைவ !  அழகுமிக்க    தலைவியை  வெளியே   சென்று  யாருடனும் 

பழகவிடாமல்  தந்தை,அண்ணன்மார்  தடுத்து,   இல்லிலேயே   அடைத்து 

வைப்பர்"   இதனையறிந்து,   விரைவில்   இவளைத்    திருமணம்    செய்துகொள்!

என்று  தோழி   கூறினாள் .

                                               பாடல்-- 132.

நம்பியும் ,  தம்பியும்,   அண்ணனும்   வள்ளியைச் செறித்தல்போல் ,

நம்பியவரைக்   கைவிடாப்     பரமன்    தணிகையில்    உம்பர் 

தம்பிராட்டிச்     செம்பவள  மேனியைச்    சிறைபோல்   செறித்தே  ,

அன்பினால்    தடுப்பார்   அண்ணனும்  தந்தையும்   அறிகவே.

                                                பொருள்.

        வள்ளியின்    தந்தையான    நம்பிராசனும்,  அவளது    உடன்பிறப்புகளும்,

தினைப்புனக்    காவலுக்கு   அவளைச்   செல்லவிடாமல்,  வேடமுருகனைக் 

காணத்   தடைவிதித்ததுபோல்  வீட்டினுள்ளே  அடைத்து  வைத்ததுபோல்,

      தன்னை   நம்பிப்போற்றுபவர்களை   ஒருபோதும்   கைவிடாது   காக்கின்ற 

பரமனாம்    முருகன்    வீற்றிருக்கின்ற   தணிகை  மலையில்,

    தேவர்களின்   தலைவியான   இந்திராணிபோன்ற  அழகு   மேனிகொண்ட 

தலைவியை,வெளியே   செல்லவிடாமல், தடுத்துச்   சிறைபோல  

வீட்டிற்குள்ளேயே   அன்போடு   அடைத்துவைப்பார்  அவளது   தந்தையும் 

அண்ணன்மார்களும்"   என்பதைத்     தலைவனே!   நீ அறிவாயாக!  அதற்குமுன் 

அவளை   மணம்பேசி  மணந்துகொள்!  என்று  தோழி  கூறினாள் .

விளக்கம்;---  ஊரார்   அலர்    தூற்றியதால்  நொந்துபோன  தந்தையும்  பிறரும்,

இற்செறிப்பர்;  அது நடவாமல்    காக்கவேண்டிய   நீ    உடனே    தலைவியை 

வரைந்துகொள் . எனத்    தோழி    வரைவு  வேண்டினாள்.

1. உம்பர்  தம்பிராட்டி =   இந்திராணி .

2.  அறிகவே  =  ஏ   காரம்   எச்சப்   பொருளைத்  தந்தது. அறிந்து, வரைவு 

தொடர்பான   செயல்களைச்  செய்வாயாக "  என்ற பொருளைத்தந்தது.

                                   13. 20. எதிர்கோள்  கூறி,  வரைவு  கடாதல் .

                                                            கொளு .

தலைவனைத்     தானே   சென்றெதிர்    கொண்டு,

நலத்தோழி   நறுமணம்   நாடுகவே    என்றாள் .

பொருள்;---  காலத்தைக்   கடத்தாது, தோழியே     தலைவன்முன்    சென்று,

வரைவை    விரைவாய்   முடிக்க வேண்டினாள்.

                                                பாடல்  133.

புவியில்   கவியாகி   உவந்த    தவமலர்த்     தலைவன்,

சிவமறை    சுவாமி  மலைத்தணிகைச் சிந்தை  கொண்டவர் 

தவமுனி,  தாயர் ,   தந்தை,  தழுவுசுற்றம் , நவமானோர்,

எவரும்    ஏற்றிடுவார் ;   தலைவ !   உன்னையும்,   மணத்தையும் .

                                               பொருள்.

    பூ   உலகு   வந்துநின்ற  முருகன்  கவிஞன்   ஆனான்;  தமிழோடு  இளமையும்,

மென்மையும்    வாய்ந்த  இருமலர்களை,  தனக்கெனத்   தவமிருந்த  

இருவரையும்   தன்னோடு   இணைத்துக்கொண்டான்; தந்தையாகிய 

சிவபிரானுக்கே  குடிலையை    உபதேசித்த சுவாமிமலையிலும் , தணிகை 

மலையிலும்  இருந்தருளும்  மனம்கொண்ட  மாமுருகன்   மலைநாட்டில் 

ஆட்சிபுரியும்     தலைவனே   என்   சொல்  கேள்! தலைவியை   உடனே 

மணந்துகொள் !  மணந்து  கொண்டதால்    உன்னையும்,  நீ செய்துகொண்ட  

திருமணத்தையும்   காட்டில்    தவம் புரியும்   முனிவர்கள்   விரும்பி    

வாழ்த்துவர்;  தாயும்  சினமுடைய   மனம்    மாறி   வாழ்த்துவாள்;

பெண்ணின்   தந்தையோ  மிகவும்  விரும்பிப்   போற்றுவார்; சார்ந்திருக்கும் 

சுற்றத்தாரெல்லாம்   மனமுவந்து   வாழ்த்துவர்; ஊராரும் ,  மற்றவர்களும் 

போற்றுவார்கள்;  அதனால்   உடனே    காலம்    தாழ்த்தாது   தலைவியை 

மணந்துகொளவாயாக"   என    வேண்டினாள்   தோழி.

விளக்கம் 1. கவியாகி   =    அழகை,இயற்கையை   விரும்பும் நிலையைப் 

                                                       பெற்றவன்  கவிஞன்; விண்ணகமலரொன்று,

                                                       காட்டுமலரொன்று  இரண்டையும்  மணந்தவன்.

                                                        முருகனாம்   கவிஞன்.

2 . தவமலர்  =  முருகனை   அடைவோம்  என்றே  தவமிருந்த   இரண்டு                                                     பெண்கள்.

3 .சிவமறை  =   சிவபெருமான்  விரும்பிய   பிரணவப்பொருள் .

                                                13.  21.  ஏறுகோள்  கூறி  வரைவு   கடாதல் .

                                                                       கொளு .

காளைதனை   அடக்கின்   கன்னியைக்  கொடுப்போம்"

சீலத்தமர்   சீர்முடிவு,  காலத்தில்    வரைக.

பொருள்;---  எம்மவர்கள்   குலவழக்கப்படிக்   காளையை   அடக்கும் 

ஆண்மகனுக்கே  தலைவியைக்   கொடுக்க  முடிவுசெய்வார்" அது  தவிர்க்க,

தலைவ ! விரைவில் தலைவியை  மணந்துகொள் "   என்றாள்   தோழி.

                                               பாடல்--134. 

மாயமாம்      கிரௌஞ்சமலை    சாய்த்த   தணிகைவேல்    தந்தைச்  

சேயூர்தி     பாயுருவக்   காளையைக்     களத்தில்    விரட்டி,  

ஆயபுகழ்   வீரர்க்கே  வேய்த்தோளி  தமர்கள்  தருவர்;

 தேயிடை   சாய்முலை    வாயமுதை   வரைக விரைவில். 

                                            பொருள். 

    அரக்கர்களை   அழிக்கமுனைந்த  ஆறுமுகன்   முதலில்  வீழ்த்திய  அரக்கன்,

தாரகன்.அவன்   கிரௌஞ்சம்   என்ற  மாயமலையாக   நின்று  தமக்குள் 

பகைவர்களை  நுழைய  வைத்துக்  கொன்றுவிடுவான்;  மாயம் கொண்ட அந்த 

மலையான சூரனின்  இளவலான  தாரகனைத் தனது   வேலால்  வீழ்த்தினார்;

தணிகை   வேலனின்   தந்தையாகிய   சிவபெருமானின்    ஊர்தி   அறக்கடவுள் 

ஆகிய   காலை  ஆகும்;  அந்தக்காளை   வம்சத்தில்   தோன்றிய  வலிமை மிக்க 

காளைகளை   எந்தவீரன்   அடக்குகிறானோ.   அவனுக்கு தமதுகுலமகளை 

மணம்  செய்துகொடுப்பது   மரபு;   அவ்வழியை   எமது   உறவினர்கள் 

கடைபிடிக்கத்    துவங்கிவிட்டனர்; பருத்துச்சாய்ந்த   முலைகளின்  

பாரத்தால்  வருந்தித்தேயும்  இடைகொண்டவள்; அமுதம்போன்ற  சொல்லை 

உடையவள்;தலைவி,  அவளை தலைவா! விரைவில்   மணமுடித்துக்கொள்!

என்று  ஏறுகோள்  கூறி   வரைவினை   தோழி   வற்புறுத்துகிறாள் .

விளக்கம் ;---  1.  கிரௌஞ்ச மலை =  தாரகாசுரனின்    மாயமலை .

2 . சேய்  =  காளை .

3 .வேய்த்தோள்  =  மென்மையான  மூங்கிலன்ன  தோள் .உவமைத்தொகை.

    மெய்ப்பாடு ...   பெருமிதம்.

          பயன் ....   ஏறுகோள்  உணர்த்தி,வரைவு  கடாதல் .

                                                13.  22.  அயல்  உரைத்து   வரைவு   கடாதல் .

                                                                       கொளு .

அயலார்   வரைந்திட   வருவர்     என்றது.

பொருள்;--- பருவம்  வாய்ந்த   தலைவியை பெண்கேட்டு   வேற்றூரவர்  

வருவார்"   அதற்குமுன்    நீ வரைந்துகொள்"  என்று  தலைவனிடம்  தோழி 

கூறியது.

                                                பாடல்--135.

உழவில்லாப்      பழமுதிர்    சோலைக்   கிழவனே,  தணிகைத்  

தழலூட்டும்   அழகானான்; நிழலருள்   பெற்ற  மழவ !

விழலாம்    வேற்றவர்   குழல்கோதை  தழுவுமணம்   வேண்டி,

குழலூதி   வருமுன்   கழுத்தணிச்     செழுமை     புரிக.    

                                                பொருள்.

    விவசாயம்   எதுவும்  செய்யாமல்  மலை  முழுதும்    பழுத்துக்  குலுங்கும் 

பழங்கள்  உதிர்கின்ற   சோலைக்கடவுளே!  முருகன்;    அவனே    தணிகை   

மாலையிலும்   செந்தழலாய்  செம்மேனி   அழகனாக   விளங்குகிறான்;

அவனது   கருணை,அருளை  நிழலாகப்  பெற்று  ஆட்சிபுரியும்  

 வீரத்தலைவனே!   

       ஆற்றுநீர்     பயிருக்குப்    பாயாமல்   விழலுக்குப்   பாய்வதுபோல் 

வேறு  வேறு    ஊரைச்சார்ந்தவர்     எல்லாம்  கருங்குழல்  கொண்ட  

தலைவையைப்   பெண்கேட்டு மங்கல   இசை இசைத்துக்கொண்டு  வருவார்;

அவ்வாறு    அவர்கள்    வருவதற்கு   முன்னதாக  நீ  தலைவியை  மணம் 

புரிவதற்கான   செயல்களைத்   துவங்கு! அதுவே   உனக்கும்,  தலைவிக்கும் 

இன்பம்  தரும்"   என்று  தோழி   கூறினாள் .

விளக்கம்;--- 1.  உழவில்லா  =  உழாமல்,விவசாயம்  செய்யாமல்,   தானே                                                                                 விளையும்.

2.  நிழல்கருணை  =  கொடிய வெய்யிலில்  இருந்து   காக்கும்  நிழல்;

                                           கொடிய    தீவினைகளில்   இருந்து   காக்கும்   முருகனருள்.

3 .  குழலூதி  =  மங்கல   இசை இசைத்து 

   மெய்ப்பாடு  -----  அழுகையைச்சார்ந்த   பெருமிதம்.

            பயன் ----வரைவு  கடாதல் .

                                        13.23. தினைமுதிர்வு    உரைத்து   வரைவு  கடாதல் .

                                                             கொளு .

தினைப்புனம்     காத்து, ஆடிய     ஆட்டம்,

நினைவிலும்   முடியா;நினைவில்   கொள்க.

பொருள்;---   தோழி   தலைவியிடம்  கூறுவாள்போல்  சிறைப்புறமாக 

இருந்த  தலைவன்   உணரும்வகை  உரைத்தது. இனி   நமது   ஆடல்கள் 

இல்லை; தினை  அறுவடை  முடியும்காலம்; என்றாள் .

                                                 பாடல்--136.

அன்பொரு     பக்கமும்,  அருளாம்    மறுபக்கமும்  கொண்டு,

விண்மண்    காக்கும்  வேலனது   தணிகைத்    தினைப்புனத்து 

பொன்பூவால்    வேங்கை   பொழுது  கணிக்கவே ,   அயர்ந்தோமே!

இன்பமாம்      நுகர்வும்      இங்கிலை ;  இனிமை    வரைவென்றாள் .

                                                   பொருள்.

    அன்பாகிய    வள்ளிப்பிராட்டியாரை  ஒருபக்கமும், அருட்சக்தியான  

தேவயானையை   மறுபக்கமும், கொண்டு, மூவேழ்   உலகங்களையும்  

காக்கின்ற  முருகன்    வீற்றிருக்கும்   திருத்தணிகைத்   தினைப்புனத்து ,

அறுவடைக்காலத்தை  வேங்கைமரமானது  பொன்னாய்   மலர்ந்து   காட்டிட,

வேடுவர்கள்   தினையை  அறுக்கத்   தொடங்கினர்;  தலைவியே!   நாம் 

இனி   எப்படி   விளையாடுவது?  என்று கூறி,ச்    சிறைப்புறத்தில்  இருந்த 

தலைவன்    உணரும்வகையில்,  இனிய    நமது   ஆட்டங்கள்,  இங்கு   இனி 

நடவாது;[  கூடல்நிகழ்வும்  நடக்க வாய்ப்பில்லை]  ஆதலின்  தலைவியை  நீ 

விரைவில்  வரைந்துகொள்!  என்று கூறினாள் .

விளக்கம்  ---1.  அன்பு  =  அன்புகொண்ட  மனையாள்   வள்ளி.

                          2.  அருள் =  அருட்சக்தி   தேவயானை .

                         3 . பொழுது =  அறுவடைக்காலம் .

மெய்ப்பாடு  ----அழுகை.

        பயன் -----செறிப்பறிவித்தல் .

                             13.24. பகல் வரல்   விலக்கி   வரைவு  கடாதல் .

                                                கொளு .

முகமதி     முகம்காணப்     பகலில்   வாரற்க!

நகைமுகத்      தோழி   வகைகாட்டிக்    கூறியது. 

பொருள்;---  தினைப்புனம்   அறுத்ததால்   மறைவிடம்  இல்லாச்சூழலில் 

தலைவியாக  காணப் பகற்பொழுது  குறியிடம்  வராதே!  எனத்    தோழி 

தலைவனிடம்  கூறினாள் .

                                                பாடல்---137.

களிறும்   கலைமானும்  கவினாம்     பறவையும்  மிளிரும்,

அளிகொண்ட   தணிகைத்    தினைப்புனம்  நலிவுற்ற  நோய்போல் 

பொலிவிழக்கும்;   நிலவுமுகம்  கண்டு   நீயும்  மகிழத் 

தளிரிடம்   நிலையோ?   தவிர்க்க;   தருமநெறி   காக்க.

                                          பொருள்.

  யானைகளும்,  அழகுமான்களும், பலவித  அழகு  இறக்கைகள்   கொண்ட 

பறவைகளும்  ஆங்காங்கு  வந்து  இளைப்பாறும் , உணவு  தேடும், தினைப் 

புனம்,  கருணைமிக்கவனாகிய  தணிகைக்கடவுள்  வாழ்மலையின்  தினைப் 

புனம்   இதோ   அறுவடைக்குத்   தயாராகிவிட்டது; நோயினால்  அழகிழந்து 

வாடுபவரைப்போல  இவ்விடம்  பொலிவிழந்து    காணப்படும்;  தலைவ !

இனி   நீ   நிலவுபோன்ற   முகத்தாளைக்  கண்டு,பேசி, உறவாடத்    தகுந்த 

இடம்  இல்லையே!  இப்படி   அஞ்சியஞ்சி   மறைவிடம்  தேடும்   நிலையை 

விட்டுவிடுக . நல்லோரும்,மறைகளும்    சொல்லும்   வரைவினை   நாடுக.

எனத்     தோழி  கூறினாள் .

விளக்கம்;--- 1 . மிளிரும்  =  ஆங்காங்கு    மகிழ்வோடு  உலாவும்.

2 . பொலிவு  =  அழகு  =  பசுமை மிக்க  நிழலினால்  குளிர்ச்சியுடன்  விளங்கும்.

3 . தருமநெறி  =  அறங்கூறும்   ஆக்கவழி; வரைவு  புரிந்துகொண்டு  இல்லறம் 

                                  சிறக்க    வாழும்  வகை. 

                              13 . 25. தினையொடு   வெறுத்து  வரைவு  கடாதல் .

                                                        கொளு .

தினைவினை    எண்ணி,  மனமிக    வருந்தி,

மனைமகள்     சார்ந்து      தோழி  கூறியது.

பொருள்;---   நாம்  வளர்த்த    தினை   நமக்கே    வினையாக   வளர்ந்ததே" 

எனத்    தலைவியிடம்   தோழி  வருந்திக்கூறியது.

                                                      பாடல்--138.

தன்னையே   நினைந்து   தவம்செயச்     சொல்லித்     தளிர்களைத் 

தண்வழி   மணந்த  தணிகைப்   புனத்தில்  தவழ்தினை

கண்ணின்     மணியாய்க்  கருகாது      காத்துநன்கு      வளர்த்தால்,

பண்ணழிப்    பாவத்தீ    பண்ணியதே!    அன்னமே!!   என்னினி?

                                                பொருள்.

   தன்னையே   மணக்கவேண்டும்"  என்று  மனத்தால்  வரித்த   மாலின் 

மகளிருவரை , அதேநினைவில்   தவம்  செய்யுங்கள்!  நானே   வந்து    மணம் 

கொள்வேன்"  என்று  வரம்கொடுத்த  தணிகையாளன்  எளிமையாய் 

ஒருத்தியையும் , காடுமேடு  சுற்றி  மற்றொருவளையும்   மணந்து  

 மகிழ்ந்தவன்   நகராகிய   தணிகை   நகரின்    தினைப்புனச்சோலையில் 

இளந்தினைகளை   விதைத்துப்   பயிரிட்டு, வாடாமல்,கருகாமல்  கண்மணி 

போல்  வளர்த்து    ஆளாக்கினோம்   நாம்.  ஆனால்   அத்தினை களோ 

நமது  இன்பத்தை,  நமது   மகிழ்வை  அழிக்கின்ற   பாவத்தீ   போல,

வளர்ந்து, முற்றி  விளையும்  நிலையை  எட்டியதால்  நமுறவினர்   அவைகளை 

அறுக்க  முனைந்தனரே !   அந்தோ!  அன்னம்போன்ற  தலைவியே!  நாம் 

தலைவனை   எங்கு.எப்படிச்    சந்திப்பது? என்று வருந்துகின்ற  நிலையைச் 

சிறைப்புறமாக   இருந்த  தலைவன்    கேட்குமாறு   தோழி    கூறினாள் .

விளக்கம்;---1 .தளிர்களை  =  இளமை வாய்ந்த  இரு   கன்னியரை.

2.  தண்வழி  =  குளிர்ந்த   வழி... தெய்வயானையை  மணந்தது; மாறுபட்டுக் 

                              காட்டு,மேடு  சுற்றி,   வள்ளியை   மணந்தது.

3.   பாவத்தீ  =  பாவமாகிய   கொடிய  செயல்;  தன்னை  வளர்த்தவர்கள் 

                              துன்புற, அவர்களது   சந்திப்பிற்கு  இடம்  கொடுத்த  வளர்ந்த 

                              தினைகளை   அறுக்க  உதவியது.

                                          13.  26.  வேங்கையொடு    வெறுத்து   வரைவு  கடாதல்.

                                                            கொளு.

பாங்கி   இனியும்   இங்கே   வராதீர்!

வேங்கையைக்  கூறுவது  போலக்   கூறினாள் . 

பொருள்;-  வேங்கை  பூத்ததால்  தினையறுத்தல்  நடந்தது;  அதனால் 

துன்புற்றோம்" என்று எண்ணம் கொண்ட  பாங்கி, வேங்கைமரத்தை 

வெறுப்பதுபோல்  தலைவனே!  சென்றுவிடு ;இனி இங்கு வராதே    எனக் 

கூறினாள் .

                                              பாடல்---139.

மனைவிட்டு      மன்னுபுகழ்     முன்னவன்   தணிகைப்    புனத்தில் 

தினைகாக்க   வந்தநாம்   தினையோடு     வேங்கை    வினையையும் 

இணையாக்    காத்தோம்;  தினைமுற்ற,  துணைபூக்க  நலிவுற்றோம்;

வினையை   இளமையில்   அழித்திடின்    நனைகண்  தீங்கிலை.

                                            பொருள்.

தலைவியே!மிகுந்த    புகழுடைய   முதல்வனாகிய  முருகக்கடவுளின்  

 தணிகைமலையிலே  அமைந்துள்ள  தினைப்புனத்தை,   நாம்   நமது  

மனைவிட்டு வந்து காக்க வந்தோம்;இரவும்பகலும்   தினையைக்  காத்த 

நாம், அதன்   துணையாக   நிழல் தரும்    வேங்கைமரத்தையும்  காத்தோம்;

துணையாக  வந்த    வேங்கை  நமக்கு  வினையாக    மாறிவிட்டது;  தினை 

முற்றியது;  வேங்கை  பூத்தது; தினையை  அறுக்கச்     சோதிடன்போல 

வேங்கை  பூத்து   நம்மவருக்கு   உணர்த்தியது; அதனால்  தினை  

 அறுக்கப்பட்டது;  காவல் முடிந்து    நாம்   வீடு திரும்பவேண்டிய   நிலை;

மேலும்  தலைவனைச்    சந்திக்க     மறைவிடச்சோலை   மறைந்துவிட்டது.

  நாம்   இளங்கன்றாக   இருந்த காலத்திலேயே   அவ்வேங்கைச்செடியை 

அழித்திருக்கவேண்டும்;  அவ்வாறு செய்யாததால்  அது   நமக்குத்   துயரைத் 

தந்துவிட்டது."  எனத்தோழி  தலைவியிடம்  கூறினாள் .

விளக்கம்;--  தலைவனுக்கு    உணர்த்துவதுபோல    வேங்கைமரத்தை  வைத்துத் 

தோழி  இவ்வாறு  கூறினாள் .

1 .  வேங்கை  வினை  =  வேங்கைமரம்   என்ற  பாவத்தையும்  வளர்த்தோம்"

2 . முற்ற   =  திணையானது  முற்றியது;  பூக்க  =  தினையை அறுக்கும்  பருவம் 

                         கூறும்    சோதிடன்போல்  பூத்தது.

3 . நலிவு  =  துன்பம்,சோகம்;  தலைவனைச்  சந்திக்கமுடியாத   வருத்தம்.

                                        13. 27. இரக்கமுற்று   வரைவு  கடாதல் .

                                                          கொளு .

வருந்தும்    தலைவனுக்கு,  வருத்தம்   கூறி,

மருந்தாம்   வரைவை   மலராள்    வகுத்தது.

பொருள்;---   தலைவியைச்   சந்திக்கவும்  முடியாமல்  போய்விட்டதே"  என 

வருந்தும்  தலைவனின்   துயருக்காகத்    தானும் வருந்தி,  அதற்கு   மாற்றுவழி 

வரைவே"  எனத்   தோழி   வரைவைக்   கட்டாயப்படுத்தினாள் .

                                                பாடல்--140.

நினைத்துப்  போற்றிய   நக்கீரனின்  வினையைப்   போக்கியவன்

அனைத்து    ஆன்மாக்களின்    அறம்பொழி  தணிகையான்   புனத்தில் 

தினைவித்துத்      தெளித்தனர்     மூத்தோர்,  அணைத்துக்    காத்தனம்யாம்

சினைக்கதிர்     அறுத்தனர்   வினையோர்;     சீர்நாட  !   வாரற்க.

                                               பொருள்.

   அனைத்துமாய்   விளங்கும்   முருகனை  நினைத்துப்   போற்றி,  அவன்மீது 

ஆற்றுப்படை"  பாடிய  நக்கீரனின்  துன்பத்தை,   அவன் தனது    தந்தையிடம் 

பெட்ரா சாபத்தைப்  போக்கியமாமுருகன், உலகின்    அனைத்து  மக்களும் 

நல்வழிப்பட,அறத்தையும்,   அன்பையும்  உபதேசிக்கும்  தணிகையில் 

வீற்றிருக்கும்  அவனது    மலைநாட்டின்    தினைப்புனத்தில்  வாழும்  

 வேடுவர்கள்   அங்கு    தினையை  விதைத்தனர்; செடி வளர்ந்ததும்  அப்புனச் 

சோலையை   தலைவியும், அவளது  தோழிகளான   நாங்களும்  கண்ணும் 

கருத்துமாய்க்   காவல்  காத்தோம்; தினைவளர்ந்தது; கதிர்   தோன்றியது;

முற்றி   அறுக்கும் பருவம் பெற்றது;    எம்மவர்  தினையை    அறுத்தனர்; 

இனி   இங்கு   பார்க்க,  பேச, பழக,  நமக்கு    மறைவிடம்   இல்லை;  ஆதலின் 

பெருமைமிக்க   நாடனே !  இனி   தங்கள்  இப்பக்கம்  வரவேண்டாம்; அப்படி 

வரநினைத்தால்   எம் தலைவியை   மணந்துகொள்க.  அதுவே  நல்வழி  ஆகும்"

என்று  தோழி  தலைவனிடம்  கூறினாள் .

விளக்கம்;--  தினை  விதைத்தவன்   தினை  அறுப்பான்;  வினை  

 விதைத்தவனோ   வினையையே  அறுப்பான்"   என்றவழி  இங்கு 

வினைவிதைத்து  அல்லல்  படுவோர்   ஆறுமுகனை  வணங்கினால்  அவரது 

பாவ  வினைகள்   அகலும்; என்பது   பெறப்படுகிறது.

1 . தினைவித்து  =  திணையில்   விதைகள்;

2 .  சினைக்கதிர்  =  அறுக்கும்   பருவம்   எய்திய  கதிர்கள்; சினை = முற்றிய .

3 . வினையோர் =  தினையை  விதைத்த  செயல்  ஆற்றினோர் .

                                      பாவம்   செய்தவர்கள்   பாவத்தையே  கூலியாய்ப் 

                                      பெறுவார்.

                                                13. 28. கொய்தமை   கூறி    வரைவு  கடாதல் .

                                                                கொளு .

கொய்த   புனத்தில்   குதூகலம்   இல்லை;

பொய்யா   வரைவை,மெய்யாய்   ஏற்க.

பொருள்;-  தலைவனே!  எமது    தினைப்புனம்   அறுக்கப்பட்டுவிட்டது.

இனி  அங்கு  விளையாட மாட்டோம்; நீயும்  தலைவியைச்    சந்திக்க  இயலா.

மாற்றாத   வரைவை  நீ விரும்பு!  அதுவே  உனக்கு  உண்மையான   அன்பாக 

அமையும்"    என்று   தோழி  தலைவனிடம்   கூறினாள் .

                                               பாடல்---141.

சம்பந்தரைச்   சேர்ந்து,   சம்பத்துச்   சிவனடி சார்ந்தோர்போல்

உம்பரும்,   நம்பரும்    உவந்தேத்தும்  தணிகைப்   புனத்தில் 

கும்பமா    முலைதழுவிக்   கூடு   கூட்டம்  குலைவுற, 

எம்மவர்  பற்றறச்    செய்தனர்காண்    தினையைச்     செம்மலே!

                                               பொருள். 

  ஆச்சாள்புரம்    என்ற  திருத்தலத்திலே  "  திருமணம்  வேண்டாம்; நின் சேவடி 

வேண்டும்"  எனக்கேட்டு, எம்பெருமானால்  அருளப்பட்ட  செழுந்தீயில் 

சேரும்முன்   தன்மனைவியை,உறவினரை,   அங்கு   குழுமியுள்ள  

சிவனடியார்   கூட்டத்தைச்     சுற்றிநின்ற  அனைவரையும்  

 அழைத்துக்கொண்டு சிவனது    சேவடி   சார்ந்த  அடியார்கள் போல,

    திருத்தணிகை   முருகனைச்சார்ந்து   பற்றுவிட்டுப்   போற்றி வாழும் 

தேவர்களும்,  அடியவர்களும்  மிக்க மகிழ்ந்து  அடையும்   தணிகை ;

அங்கமைந்துள்ள   தினைப்புனத்தின்    கண்  தலைவியின்  பெருத்த 

முலைகளை  வருடியும், தழுவியும்  நீ  கூடிநின்ற  சேர்க்கையானது, இனி 

நடவாது; குலைந்துபோய்விட்டது.காரணம்,  வேடுவர்கள்  அப்புனத்தின் 

தினையை  அறுத்துவிட்டனர்; பற்றே   இல்லாமல்  கிள்ளிவிட்டனர்;

தலைவா! என்று   கூறிய  தோழி  விரைவில்  தலைவியை    வரைந்துகொள்"

என்பதைக்  குறிப்பால்    உணர்த்துகிறாள்.

விளக்கம்;  பற்றில்லாத     சம்பந்தர்   பற்றுடைய   பலப்பல   பிறவிகளையும் 

ஆன்மாக்களையும்    தன்னோடு   சேர்த்துக்கொண்டு   சிவசேவடி  சென்றார்;

அதே   நிலையை, சம்பந்தராக    அவதரித்த   முருகன்   தணிகையில் அமர்ந்து 

அனைவருக்கும்    அளிக்கிறான்"   என்பதும்,

    பற்றை   விலக்கி ,  வாழ்முறையை   வழங்குபவன்  முருகன்  என்பதும்,

தினையை   அறுத்தல்   பற்றை  விடுதலுக்கு   ஒப்பானது.

சிற்றின்பப்பற்றுக்கு   இடம்   தராத  தினைப்புனம்.  போன்றவை   இங்கு 

விளக்கப்படுகிறது.

1  . சம்பத்து  =  செல்வம்;  எட்டு  ஐஸ்வர்யங்கள்  அட்டமா   சித்தி.

2.  பற்றற  =  செடியின்    பற்றாகிய   வேர்  அறுபடியாக  அறுத்தல் .

                          போக,புவன  பாக்யங்களின்    ஆசை இல்லாமல்  இருத்தல் 

                                    13.  29.  பிரிவு  அருமை  கூறி  வரைவு  கடாதல் 

                                                            கொளு .

மறைந்திருந்த    தலைவனிடம்   பிரிவுத்   துயருரைத்தல்  .

பொருள்;---  தலைவன்   சிறைப்புறத்தானாக,அவன்  காதில்   படும்படித் 

தோழி, பிரிவின்    துயரை  விளக்கியது.

                                                பாடல் .142.

கணித்த   நாளிலே    காணாத   நிலையில்   கண்கலங்கிய 

தனிவள்ளித்   துயர்,களை    தணிகையான்    புனத்துப்   பயிரை

முனிகாக்கக்    கொத்தவந்த  நனிகிளியும்  நட்பு    கொள்ளும்;

தனிவயல்    தான்வந்து   முனியைத்  தேடுகிளி ;  உட்கொள்க.

                                           பொருள்.

   இன்று   போ ! நாளைக்காலை   வந்து உன்னைப்    பார்க்கிறேன்"   என்று 

சொல்லிவிட்டுச்   சென்ற வேடமுருகன்  வராத   நிலையில், அழுதுவருந்திய 

தனியே   நின்ற வள்ளியின்  துயரைக்   களைந்த  முருகனது    தணிகை  

மலைப்புனத்தில்  விளைந்த  பயிரைக்    காவல்   காத்துவந்த  முனிப்பேயை 

பயிரைக்   கொத்தவந்த   கிளி  ஒன்று கண்டு,   அதனோடு   பழகியது;

வயலில்   அறுவடை  நடந்தது;   யாருமற்றதாக  விளங்கிற்று  

வயல்;அப்பொழுதும்   அங்குவந்த  கிளி    அப்பேய்முனியைத்   தேடியது;

பிரிவு    அக்கிளியை  மிகவும்   வாட்டியது.  தலைவ !  இதனை    நீ   உணர்க!

என்று கூறினாள்   தோழி .

விளக்கம்;---   தலைவா!   பேயோடாயினும்   பிரிவு   அரிதாகும்"  என்பதை 

உணர்க"   என்கிறாள்  தோழி; பிரிவுத்துயர்  நீங்க  விரைவில்    மணந்துகொள்க 

என வற்புறுத்துகிறாள்.

1 .  கணித்த  =  குறித்த  .நாளை வருவேன்   எனக்குறித்த 

2 . தனிவள்ளி   =  தோழியர்  இல்லாது  தனியே    அமர்ந்திருக்கும்  வள்ளி,

3 . முனி  =   ஒருவகைப்   பேய்.

                                         13.  30.  மயிலொடு   கூடி   வரைவு    கடாதல் .

                                                            கொளு.

நீங்க    விரும்பா    அரும்புனம்   நீங்கிடின் 

தாங்க   வியலாத்     துன்பமே    சாரும்.

பொருள்;---  இந்த அரும்    தினைப்புனத்திலிருந்து  போகவே  மனம்  வராது;

நீங்கிச்சென்றுவிட்டாலோ   தாங்கமுடியாத    துன்பம்   வந்துசேரும்; ஆக,

தலைவா!  வரைவை  விரைவு படுத்து   என்றாள்   தோழி.

                                               பாடல்--143.

ஏறுமயில்     ஏறிவரும்   இளைய    ஞானக்   கொழுந்து

வீறுமலை   பேறுபுகழ்   தணிகை  மயிலே!   வேங்கை 

கூறுசொல்   நாறுமலர்  கூற்றால்   ஆறுவழி   அறியா 

மாறுபடு   செயல்பின்   ஊரடைந்தார்  சூரர்க்   குரைக்க .

                                                பொருள்.

   என்மீது   ஏறியமர்ந்து   உலகைச்சுற்றி வருக"  எனக்கேட்ட   சூரபன்மனின் 

விருப்பத்திற்கேற்ப,   அதன்மீதாமர்ந்து  வலம்    வந்த  ஞானக்கொழுந்தாகிய 

பாலமுருகன்   வீற்றிருக்கும்  பேறுபெற்ற  புகழுடைய  தணிகை   மலைப் 

புனத்து   உலவும்    மயிலே!   வேங்கைமரமானது  சோதிடன்போல் 

தினையறுக்க  நல்ல நாள்  கூறுவது போன்று,பூத்துக்குலுங்கிற்று. 

வேடுவர்கள்தினையை அறுத்தனர்; தலைவனைச்    சந்திக்க,  உறவாட 

வழியற்றுப்போனதால்,  என்ன செய்வதென  அறியாத    நாங்கள்  பிரிதல்,

பிரித்தலை   ஆற்றியிருத்தல்  என்னும் மாறுபாட்டை நாங்கள் மேற்கொண்டு 

எம்மூர்    அடைந்துவிட்டோம்; "  என்று   எம்மைத்தேடி   வரும்   தலைவனுக்குச் 

சொல்வாய்!  என  மயிலை வேண்டினாள்;

விளக்கம்;---   இதன்வழி  இச்சொல்  கேட்ட,சிறைப்புறத்து   நிற்பவனாகிய 

தலைவன்   விரைவில்    தலைவியை   மணப்பான் "  என  நம்பினாள்   தோழி.

1 .  இளைய   ஞானக்கொழுந்து  =  இளையது;கொழுந்தானது;   ஆயினும் 

                                                                       தந்தைக்கே   உபதேசித்த  ஞானி.

2 . பேறு  =  பாக்கியம்;  தணிகை  மலைக்கு  முருகன்    வீற்றிருப்பது பேறு .

3 . ஆறுவழி  =  ஆற்றும்    வழி  .

                                                13 . 31 . வறும்    புனம் கண்டு  வருந்துதல் .

                                                                  கொளு .

மென்புனம்   விட்டு   நீங்கினாள்   மெல்லியள் ;

தண்புனம்     வந்தவன்     தவித்து   வருந்தினான்.

பொருள்;---   அந்த  மென்மை   மிக்க புனத்தை விட்டுத்   தலைவியும் 

தோழியும்  சென்றனர்;  அங்குவந்த  தலைவன்    தன்மைமிக்க  புனமானது 

இப்படி வாடி வதங்குகிறதே   என  வருந்தினான்.

                                             பாடல்---144.

தணிகைத்      தினைத்தண்புனம்   பிணிநோய்  கண்டதோ? புயலோ?

அணியான    ஆறுமுகன்   அருள்விழி  அமுதி        லையோ? 

மணிவீ         ழருவியும்   மணிவாழ்   கடலோ?  மனங்கொள்ளேன் ;

நுனியீ      பனிப்பூ    நறுமணம்   வற்றிற்றோ ?   வாடுகிறேன்.  

                                                பொருள்.

      அழகான    ஆறுமுகன்  வீற்றிருக்கும்   திருத்தணிகையைச் 

சிறக்கவைக்கும்   குளிர்ச்சி வாய்ந்த    தினைப்புனமானது  ஏன் ?

இப்படி   ஆயிற்று? ஏதேனும்    பிணி  தழுவியதால்   நோய்   கண்டதோ?

பெரும்புயல்    வீசியதா?   அல்லது    அந்த ஆறுமுகனின்   அருள்விழியின் 

கருணையமுதம்   படவில்லையா?   சோலை    இப்படியிருக்க,   நல்ல 

மணிகளோடு   வீழ்கின்ற   அருவியின்    சுவையும்   உப்பாக    மாறிற்றே!

செடி,கொடிகளின்   மெல்லிய   இதழோரம் அமர்ந்திருக்கும்   வண்டுகள்,

பனிபோல்  குளிர்ந்த மலர்கள்,  அவைகளின்   நல்லமணம் ,  இவைகள் 

எல்லாம்   வற்றிப்போய்விட்டதே!  என்மனம்   இவற்றை     ஏற்க 

மறுக்கிறதே!  எனக்கூறி   அப்புனம்கண்ட     தலைவன்     வாடி   வருந்தினான்.

விளக்கம் ;--  தலைவியைத்     தினைப்புனத்தில்   காணாத   தலைவனுக்கு,

தலைவி   இல்லாத அப்புனம்  வளமற்ற   புனமாகவே  தென்பட்டது.

1 . மணி வீழருவி  =  மணிகள்,  நவரத்தினங்கள்   மலை   அருவியிலிருந்து 

                                        பொழிகின்றன.

2.  மணிவாழ்  கடல்  =  மணிகள்  முத்துக்கள்  வாழ்கின்ற  கடல் .

3 . நுனி ஈ  =  புணர்ச்சி   காரணமாக   நுனியீ  என   வந்தது. ஈ =  சிறுவண்டு.

                                                13 . 32 .  பதி    நோக்கி    வருந்தல் .

                                                                     கொளு .

தலைவியின்    நகரினை  அடைதல்    இயலா;

மலைநாடன்    மனமெலாம்     கலங்கி  வருந்தல் 

பொருள்;---  தினைப்புனத்தில்    தலைவியைக்    காணாத    தலைவன்,  

அத்தலைவியை   அவளது   நகரில்  ஊரில்   சந்திக்க விரும்பினான்;   ஆனால் 

வெகுதூரம்,வழிதெரியாமை  ஆகியவற்றால்  செல்லமுடியாது  வருந்தினான்.

                                                 பாடல்---145.

தேனருவி,      வானமுதம்,  கானப்        பறவை , சூழ்தணிகை ,

மான்விழி       மகிழகம்   மலைமேல்  மதியாம்;   மனமே!

கோன்தலைக்       கோஹினூர்மணி    காணலாம்; கேட்டல்     முறையோ?

நான்நாளும்     நொந்தேனே!    நீயின்றுமே     நொந்திட்டாய்; என்செய?

                                                பொருள்.

   இனிமையான   நீர்    அருவி,  வானத்திலிருந்து   வருகின்ற    அமுதம்போல் 

பொழியும்; பலவண்ணப்   பற்பல  குரல் காட்டும்  பறவைகள், 

ஆகியவைகளால்  இயற்கை    ததும்பும்    தணிகை   மலை;   அம்மலை 

உச்சியில்  உதிக்கும்   நிலவு    அருகே  அமைந்துள்ள  மான்போன்ற கண்ணாள் 

தலைவியின்   மகிழ்ச்சிமிக்க    வீடு; அதனை   அடைதல்    எளிதாமோ?

மிகப்பெரிய    பேரரசை   உருவாக்கிய  மாமன்னனின்    தலையில்   உள்ள 

முடிக்கிரீடத்தில்  நடுநாயகமாக     அமைந்திருக்கும்   இந்தியக்   கோஹினூர் 

வைரக்கல்லைக்   கண்ணால்   பார்க்கலாம்; அது    வேண்டும்  என்று   அடம் 

பிடிக்கலாமா?  மனமே! அத்தலைவியை   நினைந்திநினைந்து     நானும் 

வருந்திய   நிற்கிறேன்;  நீயும்    அதுபோலவே    வருந்துகிறாயே!  நான் 

என்ன  செய்ய   இயலும்?  என   மனதை  வினவி  வருந்தினான்    தலைவன்.

விளக்கம்;--    1. மகிழகம்   =  தலைவி   மகிழ்ந்திருக்கும்     அவளது    வீடு.

2 . கோஹினூர்  =  மிக உயர்ந்த    வைரக்கல்;  இங்கிலாந்து   மன்னன்  முடியில் 

                                      விளங்குவது; இப்பொழுது    காட்சியகத்தில்   அங்கு                                                            இருப்பது.

3 . இன்றும்  = நேற்றும் வருந்தினாய்;  நாளையும்  வருந்துவாய்; இன்றும் 

                             வருந்துகிறாய்; உம -- இறந்தது  தழீய  எச்ச  உம்மை.

                                                  பகற்குறி    முற்றிற்று .