புதன், 4 செப்டம்பர், 2024

மகேந்திரபுரப்பரணி - 5

 

                                        13. களம்   பாடியது 

        தேவாசுரப்போரில்  வீரவாகுவின்  போர்க்கள நிகழ்வில்   நடைபெற்ற 

வீரநிகழ்ச்சிகள்  பிற நிகழ்ச்சிகள்   இப்பகுதியில்    காளியால்   காணப் 

படுகின்றன;அவற்றை நாமும்  அறிவோம். 

                                        களமாண்பு 

கலிகாலம்             கண்டஞ்சும் 

            களப்போர்க்கு             வழிகாட்டும் 

தலைப்போராம்             தேவாசுர 

            மலைக்களத்தின்             மாண்புகாணீர் !                                                             739

                                        பொருள் 

        கலியுகம்  தொடங்கிப்   பல்லாயிரம்  ஆண்டுகள்    ஆயினும்,  இதுவரை 

இப்படிப்பட்ட  போர்    யாரும்  கண்டதில்லை.  பார்த்தாலே    அஞ்சும் அளவு 

மிகக்கொடூரமான  இப்போர்   வருங்காலத்திற்கு   வழிகாட்டியாக   அமையும் 

முதற்போராகும்.இதோ   தேவர்களும்,   அசுரர்களும்   நடத்தும்  போரையும் 

அப்போர்க்களத்தையும்   காண்பீர்களாக. 

                                        பேய்கள் வேண்டக்    காளி  வருதல் 

தார்மேவு             பேரரசி!

            போர்கண்டாய் ;            போர்ப்பொலிவு 

போர்க்களம்             காணவருக ;

            சீர்வாயில்             வந்துளோம்;வா!                                                                             740

                                        பொருள் 

மலர்மாலைகள்  அணிந்துவிளங்கும்   பேரரசியே!  போரைக்கண்டு  அதன் 

தன்மை உணர்ந்த   நீ   களம்   காணவேண்டாவா? உன்னை  அழைக்க 

வந்து,உன்கோயில்     வாயிலில்  நிற்கிறோம்;  வா   தாயே!  என்று  பேய்கள் 

அன்போடு   அழைத்தன.

                                        களம்  காணல் 

கடலோடு             கடலமோதும் 

            காட்சியிதோ!            மாட்சியிதோ !

உடல்சிலிர்க்க,            உளம்வியக்க 

            உவந்திட்டேன்;            உரைத்திடுவேன்.                                                                    741

                                        பொருள் 

        கடலும்,கடலும்  மோதுவதைப்போல்  இருபடையினரும்   மோதுகின்ற 

காட்சி   இதோ ;  போர்க்காட்சி  மெய் சிலிர்க்கவைக்கிறது; உவந்த  

காட்சிகளை  உங்களோடு   பகிர்ந்துகொள்கிறேன்"  என்றாள்   அன்னை. 

                                        மலை--யானை 

கலைமூங்கில்             நிலையான             மலைமேலே 

            சிலைக்கூட்டம்             அலையலையாய்             அடுக்கிடவே 

தலையெல்லாம்             தார்போலப்             போர்த்திட்ட 

            மலைமேவு             மாதங்கம்             காண்மின் !                                                    742

                                        பொருள் 

        மலையின்மீது  நிலையாக   வளர்ந்துநிற்கும்   அழகு  மூங்கில் மரக் 

கூட்டம்போல வில்வீரர்கள்  வரிசை வரிசையாய்    அம்புகளைச   செலுத்திட 

விழுந்த  கணைக்கூட்டங்களெல்லாம்   மாலைபோல்    உடலெல்லாம் 

தைத்துப் போர்த்தி நிற்க, மலையில்  உலாவும்  யானைபோல்  அஞ்சாமல் 

அழகுற நிற்கும்  போர்யானையைப்    பாருங்கள்!

                                        செந்நிறம் 

செந்நிறத்துப்             பூதர்கள்             பட்டபின்னும் ,

            செங்குருதிக்             குளத்தால்             செம்மையாம்;

செந்நிறக்             குருதிக்குளிக்             காரரக்கர் 

            கருங்கார்             மீண்டுமானார்:            பாரீரோ!                                                 743

                                        பொருள் 

            போரிலே  வீழ்ந்துபட்ட ச் செந்நிறப்பூதர்கள்   குருதிக்குளத்தில்  விழுந்த 

=பின்னரும்,  செம்மையாகவே  விளங்குவர். இந்தக்கார்  அரக்கர்களோ 

செந்நிறக்  குருதிக்குளத்தில்    விழுந்தாலும்,   செந்நிறம்  ஆகாமல் 

செழிப்புடைய   கருங்கார்  வண்ணத்திலேயே  விளங்குவர்.

                                        காய்கள் - தலைகள் 

கரைத்தென்னை             நிறைகாய்கள்             விழுந்தனவே;

            நிறையாற்றில்             அலைஅலையாய்ப்             போவதுபோல் 

அறையுற்ற             வருந்தலைகள்             ஆடிப்பாடி 

            நிறைகுருதி             நீராற்றில்             மிதக்குதம்மா!                                             744

                                        பொருள் 

            அற்றன்கரையிலே   வளர்ந்துநிற்கும்    தென்னை     மரங்களின் பழுத்த 

காய்கள்  ஆற்றுநீரில்  விழுந்து    அலையோடு  அலையாகி   மிதந்து 

செலவதைப்போல , போர்க்களத்தில்  வெட்டுண்ட  தலைகள்        ஓடும் 

குருதியாற்றில்  வரிசை  வரிசையாய்  மிதந்து   செலவத்தைப்  பாரீரோ!

                                        சத்திரவரிசை 

சத்திரத்தில்              போடுகின்ற             சாப்பாடு 

            பெற்றிடவே             நின்றிட்ட             வரிசைபோலக் 

கத்தியபடிக்             கழுகு,காகம்             பருந்தெல்லாம் 

            குத்தியுணக்            காத்திருப்பதைக்             காண்மின்!                                    745

                                        பொருள் 

            எல்லோருக்கும்  இலவச  உணவு   அளிக்கும்    சத்திரங்களில்  

சாப்பிட,  வரிசையில்  நின்று   அமர  இடம்பிடிக்கக்   காத்திருக்கும்    மக்கள் 

வரிசைபோலக்     கத்தியபடிக்    கழுகு,காக்கைப்,  பருந்துகள்    எல்லாம் 

வரிசைவரிசையாய்    இறந்த  உடல்களைக்   குத்தியுண்ண க்  காத்திருக்கும் 

வரிசை   காணீரோ!

                                        செய்நன்றி 

பகைவனெறி             படைபட்ட             வீரனுடன் 

            விடைகொண்ட             பரியொன்று             விழுந்தபோதும்,

பகைவாளைத்             கவ்வி,வாயால்             எடுத்ததுவே ;

            மடைநன்றி            மடியாது             மடிந்தது;பார்!                                                 746

                                        பொருள் 

            குதிரை  வீரன்  ஒருவனைப்    பகைவீரன்   படைகொண்டு  

 தாக்கியபொழுது   அடிபட்டுக்  குதிரையுடன்  வீழ்கிறான்; இறக்கும் 

தருவாயில்    அக்குதிரைத்   தனது   காப்பாளனின்  உயிரைக்  கவ்வியிருக்கும் 

பகைவன்  வாளைத்  தன்வாயால்  கவ்வி    எடுத்து அவன்  உயிரைக்காப்பாற்ற 

முயன்று விழுந்து  உயிர்  துறக்கும்;  என்னே  குதிரையின்   நன்றிச்செயல்!

                                        பனம்பழம் -தலை 

பனங்காட்டுப்             புனலாற்றில்             மழைக்காலம் 

            பனம்பழங்கள்             பலவிழுந்து             மிதப்பதுபோல் 

அணங்காடும்             குருதிவெள்ள             வாற்றினிலே 

            பிணத்தலைகள்             அணிவகுப்பைக்              காண்மின்!                         747

                                        பொருள் 

            பனைமரங்கள்  நிறைந்த  காடு    அது;  மழைக்காலம்;  கீழே  ஓடும் 

காட்டாற்றில்  வெள்ளம்;  காற்றில்  விழுந்த   பனம்பழங்கள்   எல்லாம்  

வரிசை  வரிசையாய்     மிதந்து  செல்கின்றன. அதுபோலப்  போர்க்களத்தே 

பேய்கள்  குளித்து  விளையாடும்  குருதியாற்றில்  போரில்   வெட்டுண்ட 

தலைகள்  வரிசையாக    அணிவகுத்துச்  செல்வதைக்     காணுங்கள்!

                                        வரவேற்புப்பட்டு 

செஞ்சோற்றுக்             கடன்தீர்த்த             செயவுடலை 

மஞ்சத்து             அமர்த்திவைத்து             மஞ்சையர்கள் 

செம்பட்டுப்             போர்த்துவதுபோல்            செங்களத்துச் 

செங்கொடி            ஒடிந்தவன்மேல்             விழுதல்காண் !                                            748

                                        பொருள் 

        போர்க்களம்  சென்று,  போரிட்டு  வீரமரணம்  அடைந்த   வீரனுடலை 

மஞ்சத்தில்  கிடத்தி,அப்புனித  வீரவுடலுக்கு நல்ல  செம்பட்டினைப்  

போர்த்தல்போலக்   களத்தில்  அடிபட்டுக்  கீழே  உயிரற்றுக் கிடக்கும் வீரன் 

மீது,   களத்திலே    பறக்கும்   செங்கொடி , இயல்பாகக்   கம்பம்  ஒடிய 

அக்கொடி  அவன்மேல்  விழுந்தது ,அவனைப்போற்றும்   நிகழ்வாக 

அமைவதைப்     பாருங்கள்! 

                                        இராகு பற்றும்  நிலவு 

வெண்ணிலவு              பற்றவரும்             இராகுபோல 

விண்ணளவு             உயர்ந்துபாயும்             தேரினிலே 

கண்ணிமைக்கும்             நேரத்தில்             கால்வைத்து,

அன்னவனின்             உயிர்பற்றல்             காணீரோ!                                                    749

                                        பொருள் 

            நிலவைப்  பற்றிடும்   கேதுக்கிரகம் போல ,  வானளாவி   உயர்ந்த 

தேரினிலே   இமைப்பொழுதில்  கால்வைத்து    ஏறி நின்று தேரில்  உள்ளவனது 

உயிரைப்பறிக்கும்  காட்சி  காணீரோ!

                                        நீர்யானைபோல் 

நீராற்றில்             சண்டையிடும்             நீர்யானை 

            பேர்வாயால்             பெரும்போரை             ஆற்றுவபோல்     

வீரரிருவர்             வெங்கதையால்             வெஞ்சினத்துடன் 

            போராற்றும்             சீர்தனையே             பார்மின்!                                                  750

                                        பொருள் 

            நிறைந்தோடும்  நீராற்றினிலே   சண்டையிடும்   நீர்யானைகள்  போல 

வாயைத்திறந்து,அவ்வாயினாலேயே  ஒன்றுக்கொன்று   சண்டையிடுவதுபோல 

இக்களத்தில்    இருவீரர்கள்  சினத்துடன்    தண்டெனும்    கதையைப்  பற்றிச் 

சண்டையிடுவதைப்    பாருங்கள்!

                                        தாய்மடி 

தாலாட்டுப்             பாடிவளர்             தாயொருத்தி 

வேலாட்டு             வித்தகனை             விரும்பிவரச் 

சூலத்தால்             உயிரிழந்தோன்             சூல்மடியில் 

தாலாட்டித்             தானும்மடி             காட்சிகாணீர் !                                                    751

                                        பொருள் 

            தாய்  தன்மகனைத்     தாலாட்டிப்  பாலூட்டி  வளர்த்தாள் ;  அவனும் 

வீரனாகிப் போர்க்களம்  சென்றான்;  அவனைக்களத்தில்  காண  விரும்பிய  

அன்னை  வந்தவள்     வீரமரணம்    அடைந்தவனைத்     தன்மடியில் போட்டுத் 

தாலாட்டுப்பாடி த்   தூங்கவைத்தவள்    தானும்   அப்படியே  மீளாத 

துயிலில்  ஆழ்ந்துவிடுகிறாள்,  மனத்தைத்  தொடும்  இக்காட்சியைக்  

 காணுங்கள்!

                                        ஈயாமை 

இரந்தும்             ஈயாத             கஞ்சவீரன் 

            பரந்துபட்ட             போரினிலே             பட்டுவிட்டான்;

நிறைந்தபல             கழுகுகளுக்            குணவானான்;

            குறைந்தவிச்செயல்             கூட்டுவித்தது             புண்ணியத்தை.                752

                                        பொருள் 

            வாழ்ந்த   காலத்தில்  தன்னை  நாடிவந்து   இரந்தவர்களிடம்  

பொருளெதுவும்   கொடுக்காது  வாழ்ந்த  கருமித்தனம் கொண்ட  ஒருவீரன் 

பெரும்போரிலே  ஈடுபட்டு,  இறந்துவிடுகிறான்; களத்திலே   கிடந்த 

அவனுடலைப்   பல   கழுகுகள்  உண்டன ; அவனுடல்  பலவுயிர்களுக்கு 

இரை    ஆயின;  அந்த  சிறுசெயல்  அவனுக்குப்  புண்ணியத்தை   அளித்தது.

                                        காதல்மடி 

கட்டுண்ட             காதலனின்             கரம்பற்றிக் 

            கட்டுண்ட             தளைநீங்கிடக்             களத்தினிலே 

கட்டுநீக்கி             வெற்றிபெற             வாழ்த்தியவள் 

            பொட்டிழந்து             புலம்புவதைக்             கேளீரோ!                                         753

                                        பொருள் 

        விரும்பிய  காதலனின்  கரம் பற்றினாள்  காதலி; நாட்டில்  அடிமைத்தளை 

நீங்கிடவே  போருக்குப்  புறப்பட்டான் காதலன்;மனைவி    வாழ்த்தி  அனுப்பி 

வைத்தாள் ; போரிலே  அவன்  மாண்டான்;  பொட்டிழந்த   அப்பெண் 

புலம்பியழுவதைக்   கேளீரோ!

                                        வரவேற்பு 

அரையுயிரும்             காலுயிரும்             ஆங்காங்கு 

            கரைகாகக்             கழுகுகள்             நின்றுநின்று 

திரவியமே             தேடிநிற்கும்             உறவுபோல 

            வருயமன்             வரவேற்பு             காணீரோ!                                                       754

                                        பொருள்

            காலம்  முழுவதும்   வெட்டுண்டு  அரை உயிரும்,  கால்  உயிரும்  ஆக,

காக்கைகளும்,கழுகுகளும்  மின்று,பறந்து உண்ண  நிற்க, இறந்தவன் 

உடலில்,வீட்டில்  பொருள்கள்  கிடைக்குமா?  எனத்தேடும்  உறவினர்  போல 

யமனும்  தன்னுடைய  நாட்டிற்கு  வரவேண்டும்" என  வரவேற்பு   கொடுக்கும் 

காட்சியைப்    பாரீரோ! 

                                        காமஉடல் 

காமத்தால்             கடைவீடு             காத்துவரும் 

            காமத்தான்             கரைந்தான்             கடும்போரில்;

காமவுடல்             குத்திகுத்தித்             தேடுகழுகு 

             காமமதைக்             காண்மின்!            காண்மின்!                                             755

                                        பொருள் 

        காமத்தையே  தனது  விருப்பமாகக்  கொண்ட  ஒருவன்,  தன்  மனைவி 

மட்டுமல்லாமல்  கடைவீடு  வரை  உறவு  வைத்திருந்தான்; அவன் 

போருக்குச்  சென்றான்;  போரிலே  பட்டான்; அந்தக்காம   உடலைக் 

கழுகுகள்  குத்தி குத்தி த் தேடின;  அவன்  உடலில்  காமம்   இருக்கிறதா?

என  எங்கும்  தேடிப்பார்த்தன; காமஉடல்  தேடும்   கழுகு கள்   காணுங்கள். 

                                        மறமகன் 

இறந்தபின்னும்             விழிகளின்             வீரவொளி ;

            மறைந்தபின்னும்               மாறாது             வீசிடுமொளி ;

சிறகடித்துப்             பறந்திடும்             கழுகுகள் 

            மறமகனைப்             போற்றிடுதல்             காணீரோ!                                        756

                                        பொருள் 

        போர்க்களத்திலே  இறந்துபட்ட  வீரன்; அவன்  கண்களில்  இறந்த பிறகும் 

வீர  ஒளிவீசுகிறது; அவனுயிர்  மறைந்தபின்னும்  மாறாத வீரத்தின்  

ஒளிக்கற்றை    படர்ந்துள்ளது;இதனைப்  பார்த்த  கழுகுக்கூட்டம்  

அவனைச்சுற்றிவந்து,    சிறகடித்துப்  பறந்து  அவன்  புகழ்   போற்றிப் 

பாடுவதுபோல்  சிறகடித்துப்   பறப்பதைப்   பாருங்கள்!     

                                        கழுகுக்கல்வி 

வற்றாத             வளக்குருதி             ஆற்றினிலே 

            பற்றற்ற             முனிவர்போல்             மூழ்கிமூழ்கி,

உற்றாருடன்             உறவினர்தம்             உடல்களைக் 

            கற்றுண்ணும்             கழுகுகள்             காணீரோ!                                                757

                                        பொருள் 

        பெரும்போரினால்  வற்றாத  அந்தக்   குருதி   ஆற்றினிலே  பற்றில்லாத 

முனிவர்கள்   போல  நீரில்  முழ்கி. உள்ளே  அழுந்திக்கிடக்கும்  உடல்களை 

வகைவகையாகப் பிரித்து, உறவுமுறையை   நன்குச்   சுவைத்துக் 

கண்டுபிடித்து,நன்கு  உண்ணும்  கழுகுக் கூட்டம்   காணுங்கள்!  

                                        பேய்கள் 

களமெல்லாம்             கரும்பேய்க்             கூட்டமென 

            உளமெல்லாம்             உறவுமுறை             உயிர்த்தோடத் 

தலைகால்முகம்             காரரக்கர்             இருப்பதனால் 

            நிலையின்றி             ஓடும்பேய்கள்             காண்மின்!                                         758

                                        பொருள் 

        போர்க்களத்தில்  வீரர்களின்    உடல்களை  உண்ண   வந்த   பேய்கள்,

களத்தில்   இறந்துகிடக்கும்   அரக்கர்  கூட்டத்தைக்   கண்டன; தங்களின் 

உறவினர் போலவும்,  உயிர்த்தொடர்பு  போலவும்,அவ்வுடல்களெல்லாம் 

கார்க்கருமை   தாங்கியும், விரித்த  தலையால்  பேய்கள்  போலவே  காட்சி 

அளிப்பதாலும்  அஞ்சி நடுங்கி  தலைதெறிக்க  ஓடின; அக்காட்சியைக் 

காணுங்கள்!    

                                        பொன்னிறவுடல் 

பொன்னிறமான             பூதர்களின்             உடலுக்கு 

            எந்நேரமும்             பேய்களிடைப்             பூசல்தாம்;

தன்னிறக்             காரரக்கர்             தள்ளிடுவோம்;

            இன்னுமொரு             சண்டையைக்             காண்மின்!                                      759

                                        பொருள் 

        காலத்தில்  கிடக்கும்  உடல்களில்   பூதர்களின்   பொன்னிற  உடலுக்கு 

பேய்களிடையே  பெரும்  சண்டை;தம்மைப்போன்ற  கார்நிற   அரக்கர் 

உடல் வேண்டாம்; தள்ளிடுவோம்; பூதர்   உடலே  வேண்டும் எனும்  சண்டை; 

மற்றுமொரு  சண்டை  காண  வாருங்கள்!

                                        வீரவாகு 

வீரவாகு               வீழ்த்திய              வீரருடல் 

            கூறுபோடக்             குதூகலம்             உள்ளதால் 

வீரவாகு             வீரதீரம்             போற்றியபின் 

            ஈரவுடலை             உண்ணுமழகு             காணீரோ!                                            760

                                        பொருள் 

        வீரவாகு  போரிட்டு,  வீழ்த்திய  வீரர்களின்  உடலுக்கு  அதை  உண்ணும் 

பேய்களிடையே  மிகுந்த மகிழ்ச்சி; அவ்வுடலைக்  கூறுபோடவே  குதூகலம் 

அடைந்தன; வீரவாகுவின்  வீரம்  பற்றிப்பேசிய  பின்னரே  அவைகள் 

அவ்வுடலைக்  கீறின; பிய்த்தன;பின்  தின்றன;  அவ்வழகைக்   காணுங்கள்!

                                        சதமுகன் 

நூறுதலை             அரக்கனவன்             நொந்திறக்க 

            நூறுபூதம்             கழுகோடு             காகநூறு 

கூறிட்டன;            மாறில்லாப்             பங்கிட்டன ;

            கீறிட்ட             கரங்கள்             காண்மின்!                                                                 761

                                        பொருள் 

        நூறுமுகங்களைக்  கொண்ட  அரக்கன்  போரில்  பட்டு  வீழ்ந்தான் ;

அவனுடைய  உடலை வெட்டி வகைவகையாய்  அமைக்க   நூறுபூதங்கள்,

நூறு  கழுகுகள் காகங்கள்  கூடின; கூறாக்கிய  உடல் மாமிசத்தைப் 

பங்கிட்டன ; கீறிய  கரங்களைக்  காண  வாருங்கள்!

                                        உண்பன.....

உண்டன;            உறங்கின;            உளறின;

            கண்டன;            கனவிலே,            கை ,கால்,குடல்,  

கண்டபின்னும்             உண்டன ;            உணவளித்தோன் 

            பண்டுபோற்றி             உண்பதைக்             காணீரோ!                                         762

                                        பொருள் 

        பேய்கள்,காகங்கள்,கழுகுகள், இன்னபிறவும்  களத்திலே   உண்பது,

உறங்குவது, உளறுவது என  மாற்றி மாற்றிச்  செய்தன; உண்டதால் 

உறக்கம்  உறக்கத்தில்  கனவு;  கனவிலும்  கை ,கால்,குடல் இவை களையே 

கண்டன; மீண்டும்  கண்டவைகளைத்   தின்றன;இக்களத்தை  இப்போரை 

நமக்களித்த   காளி   வாழ்க; பரணிக்கடவுள்  முருகன்  வாழ்க; என்று 

வாழ்த்தியபடி  மீண்டும்  உண்ணும்  அழகைக்  காண  வாரீரோ!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக