புதன், 28 ஆகஸ்ட், 2024

மகேந்திரபுரப்பரணி - 4

                                              நாலாம் நாள் போர் 

                                            அக்கினிமுகன் போர் 

                                                        அக்கினிமுகன் 

கருவுறுகால்             செருவழல்சொரி 

            பெருமாயவள்             பெற்றெடுத்தாள் ;

எரிமாமுகன்             எனும்பெயரை 

            உரிசூர்மகன்             விரைந்தனனே.                                                                        672

                                        பொருள் 

அக்கினிமுகனின்    தாய்  அவனைக்கருவுறும்   காலத்தில்  தீயழல்  கருவில் 

வழிந்தோடியதால்  அவனுக்கு  அக்கினிமுகன்   என்னும்பெயரை  வைத்தாள் .

அந்த அக்கினிமுகன்  தந்தையாகிய  சூரனுக்கு  உதவுவதற்காகப் போர்க் 

களம்  காணப்புறப்பட்டான்.

                                        சூளுரைத்தல் 

மன்னர்க்கிறை             துன்னும்துயர் 

            முன்னொடுபின்             இன்னுமெலாம் 

பின்னரும்போர்             பெற்றியறி 

            மன்னன்மகன்             சூளுரைப்பான்.                                                                    673

                                        பொருள் 

            மாமன்னனாகிய  சூரமாமன்னன்   படும்துயரெல்லாம் நன்கு 

அறிந்தவனாகையால்  மீண்டும்  துவங்கும்  போர்   பற்றியும்  நன்கு 

அறிந்த  அக்கினிமுகன்  சூளுரைத்துச்சொல்வான்.

                                        சூளும் ,விடையும் 

படைகொள்மன்             பகையறுக்க;

            அடல்தூதனை             திடமழித்துச் 

சுடர்முகனேனக்             கடனாற்றுவன் ;

            விடைதருகென             விளம்பினானே.                                                                674

                                        பொருள் 

        பகைவர்களை  அழித்திடவே  படைகளைக்  கைக்கொள்வேன்;அந்தத்  

தூதன் வீரவாகுவை  அழித்தொழிப்பேன்;அப்பொழுதுதான்  எனக்குச்  

அக்கினிச்சுடர் முகன் 'எனும்பெயர். எனது  கடனாற்ற  இதோ களத்திற்குப் 

புறப்பட்டேன்;விடை தருக     தந்தையே!  என  வேண்டினான்.

                                        எழுவர்  வருகை 

விடமாகிய             எரிமாமுகன் 

            விறலர்மேல்             கணைபொழிந்தான் ;

இடிகாலுறு             முகிலாமென 

            எழுவீரரும்             எதிர்த்தனரே .                                                                             675

                                        பொருள் 

        நஞ்சுபோன்ற   அக்கினிமுகன்  பூதப்படைமீது  கணைகளைப் 

பொழிந்தான்; இடிநிறைந்த  கருமுகில்  போன்ற   ஏழு  வீரரும்  

ஒன்றாகஇணைந்து களத்துள்   நுழைந்து, எதிர்த்தனர்.

                                        சிவப்படை 

அடலெரிமுகன்             ஆதிநாயகன் 

            படைதொடவும்             படர்வானம் 

வடவைத்தீ             வடிவாய்வர,

            கடனெழுவர்             கலங்கினரே .                                                                         676

                                        பொருள் 

        எழுவரையும்  வீழ்த்துவதற்காக  அக்கினிமுகன்   சிவப்படையைத் 

தொட்டான்; விட்டான்; அதைப்பார்த்த   எழுவரும்  வானத்தே    வடவை 

என்னும்   தீ போல்  வருவதைப்பார்த்துக் கலங்கினர் .

                                        அனல் படையோ 

அனல்படையே ;            அதற்குமாற்று 

            புனல்படையே ;            என்றெண்ணி 

புனல்வாருணப்             படைவிடலும்,

            முனிபோலவே             உண்டதுசிவம் ..                                                                    677

                                        பொருள் 

        அரக்கன்  ஏவியது  அனல்படையே என  எண்ணிய  எழுவரும்  அதற்கு 

மாற்றாக,வாருணப்படையை  விட்டனர்; சிவப்படையோ   

முனிவரைப்போலவே வாருணப்  படையை  விழுங்கியது சிவம்.

                                        பேறு பெற்றோர் 

வாருணப்படை             வாயில்பொடி;

            திருவெழுவர்             பேருயிரும் 

திருசிவப்படை             போக்கிற்றே ;

            பேறுற்றனர்;            பதம்பெற்றனர்.                                                                        678

                                        பொருள் 

        சிவப்படையின்   வாயில்  வாருணப்படை   பொடியாயிற்று; எழுவரது 

உயிரைப்  போக்கியது  சிவப்படை; பேறும் ,பதமும்  பெற்றனர்  எழுவரும்.

                                        வாகுவிற்கு  அறைகூவல் 

விம்மிநின்ற                 வீரவாகு 

            செம்மல்மனச்             சீரறியா,

மும்மதாக்கினி             முகன்கூறுவான் 

            முனைவேன்நான்             நின்னோடுபோர் .                                                         679

                                        பொருள் 

            மனத்தில்  எதோ   சஞ்சலம்!  விம்மிநின்றார்  வீரர் .அம்மனத்தைப் 

புரிந்துகொள்ளாத   அக்கினிமுகன்  வீரவாகுவே!  உன்னோடு  நான் 

போர்  புரிய  விரும்புகிறேன்,என்றான்.

                                    வீரவாகு அக்கினிமுகன் போர் 

அறத்துவழித்             திறத்தவாகு 

            உரத்திலும்,            உயிர்த்தடத்திலும் 

முறைப்படும்முறைச்             சரச்சரம்விட ,

            கறைப்படுசூர்             களைப்புற்றனன்.                                                                680

                                        பொருள் 

        அறவழியில்  போராற்றும்    வீரவாகு பகைவனது   உரத்திலும், உயிர் 

காக்கும்  தடத்திலும்  சரங்களை   மாறிமாறிவிட,ஈதிர்க்க  இயலாது 

களைப்புற்ற அரக்கன்  கறையுற்று வீழ்ந்தனன்.

                                        மனத்தில்  தோன்றிய  எண்ணம் 

விழுந்தனன்              அழுமனத்தே 

            எழுந்ததொரு             முழுவெற்றி ;

விழுபோர்தனில்             அழிபட்டிடின் 

            தழுவியெனைக்             காத்திடுவாய்!                                                                    681

                                        பொருள் 

            அடிபட்டு  விழுந்த  அரக்கன்  மனத்திலே  எழுந்தது  ஒரு  வெற்றி எண்ணம்.

தனக்கு  ஆள்பட்ட    காளியிடம்   ஒருவாரம்  வாங்கியிருந்தான்; போரிலே 

தோற்று அழிவுறும்  வேளை  அக்காளி   வந்து  காக்கவேண்டும்" அதை  

இப்பொழுது  நினைத்தான்;காளியே!என்னைக்காக்க  வருவாய்!  என்று 

வேண்டினான்,

                                        காளிவந்தாள் 

தொழுதவுடன்             தூயகாளி 

            பழுதின்றி             வந்திடுக 

செழுங்குரலால்             அழைத்திடவும்,

            மழுவேந்திய             காளிவந்தாள் .                                                                        682

                                        பொருள் 

        அக்கினிமுகன்  காளியைத்  துணைக்கு  வணங்கி   அழைத்தான் 

மழுவேந்திய  காளியும்  அவனுக்காகப்போரிட  வந்தாள் .

                                        காளி 

எரிமுகனருள்             அரிமுகத்தாள் 

            அரிகரிபரி            திறம்புறம்சிரம் 

தரிமறிவிரி             குறைமறையறு 

            தெரித்தனள்கனல்             பொறித்தனள் தீ.                                                        683

                                        பொருள் 

அக்கினிமுகனுக்கு  அருள்புரிவதற்காக  வந்த  சிங்கமுகத்தாள் , 

சிங்கத்தின்மீது   அமர்ந்து,யானைக்குதிரைப்படைகளுடன்  திறன்கொண்டு,

வெளியில்  விளங்கும்  மற்றொரு  தலையுடன்,தரித்த  சூலமும், ஆட்டுக்கிடாய் 

வாகனத்தில்  விரித்த கூந்தலுடன் குறைகளையும், போக்கி, மறைகளையும் 

உச்சரித்தபடி,ப் பகைவர்களது   தலையை  அறுத்தெடுக்கும்  குணத்தோடு,

கனல்  போன்ற   கண்பார்வை வெறித்துப்பார்க்க, தீயால்  பொசுக்கி 

எடுப்பவளாகவும்  விளங்கினாள்.

                                        காளி  போரிடல் 

ஆர்த்திடு             காளியவள் 

            கூர்த்திடு             வாட்படையுடன் 

தார்த்தடத்தேர்             மேலதேறி 

            வீரனோடு              போரிட்டாள் .                                                                                684

                                        பொருள் 

        ஆரவாரம்  மிக்கவளாகிய  காளி   கூர்மைமிக்க   வாட்படையுடன் 

தேரின்மீது   ஏறியமர்ந்து  வீரவாகுவோடு  போரிட்டாள் .

                                        காளி   வீழ்ந்தாள் 

வெறியோடு             விரைந்தவளின் 

            பொறியெட்டுக்             கரங்களையும் 

ஒருகையால்              உறப்பிடித்தான் ;

            மறுகையால்             உரத்தடித்தான் .                                                                     685

                                        பொருள் 

        வாகுவை    வீழ்த்த   வெறியோடு   வேகமாக  வருபவளின் எட்டுக் 

கரங்களையும் தனது  ஒருகரத்தால்  திமிற முடியாமல்  பிடித்த    வாகு,

மற்றொரு  கரத்தால்  அவளின்  மார்பினிலே  பலமாக   அடித்தான்.

                                        காளியின்துயர் 

எண்கரமும் ,            இற்றிடவே,

            வண்மார்பும்             வலியிழந்து,

புண்குருதியாய்             மண்ணில்விழு 

            விண்ணவளும்             விசனமுற்றாள்.                                                                    686

                                        பொருள் 

        எட்டுக்கரங்களும்  வலியால்   துடிதுடிக்க, வலிமையான  மார்பும் 

வலிமையிழந்துபோக, உடலெல்லாம்  புண்பட்டுக்   குருதி  கொப்பளிப்ப,

மண்ணில்  விழுந்தாள்; விண்ணவளாகிய  காளி  மிகுந்த   துயருற்றாள்.

                                        காளி கூறியது 

அக்கினிமுகன்             அருச்சனையால் 

            அடிமையாய்க்             கடன்கழித்தேன்;

முக்கண்ணன்             முகத்தோன்றல் 

            தக்கவனே             வாழ்க நீ.                                                                                             687

                                        பொருள் 

        அக்கினிமுகனாம்  அரக்கன்  என்னைப்பூஜித்து  வரம் பெற்றான்; 

அவனுக்கு  அடிமையான  நான்  அவனுக்கு  உதவ  வரவேண்டும்; அப்படி 

வந்தவள்  நான்;இனி எனக்கு விடுதலை;விண்ணகம்  சென்றிடுவேன்;

முக்கண்ணன்  நெற்றிக்கண்  பொறியிலே   தோன்றிய  முருகனே  வெற்றி 

கொள்வான்;அவனுக்குத்  துணையான  நீயும்  வாழ்க! என்று  வாழ்த்திவிட்டு 

நீங்கினாள்  காளி .

                                        அக்கினிமுகன்  அழிதல் 

வியர்த்தெழுந்த             கயக்கனல்முகன் 

            வயப்படையொடு             சயப்பேரிகை

புயத்திறனால்             புரிந்துநின்றான் ;

            அய ,மால் படை             அடுத்தேவினான் .                                                              688

                                        பொருள் 

        அக்கினிமுகன்  நடந்த தைக்கண்டு  வியர்த்து, நின்றவன்  மீண்டும் 

போருக்கு  ஆயத்தமானான். அயன்படை   விட்டவன்,  மால்படையையும் 

விட்டான்;

                                        வீரபத்திரப்படை 

வீரவாகு             வீரபத்திரப் 

            பேர்வலிமிகு             படையேவி 

கார்மால்படை             கவிழ்த்தபின்னர் 

            கனல் முகன்         உயிர்குடித்ததே.                                                                             689

                                        பொருள் 

        வீரவாகு  வீரபத்திரப்படையை   ஏவினார். அது  மால்படையை   

அழித்தபின்னர்  அக்கினிமுகன்  உயிரையும்  குடித்தது.

                                        எழுவர்  உயிர் 

எழுவராயினர்             என்னவாயினர்?

            தழுதழுத்த             வீரவாகு 

விழுசிவப் படை             விழுங்கியது;

            அழுகையுடன்             ஆய்வுசெய்தான்.                                                                    690

                                        பொருள் 

        வீரவாகுவின்  தம்பியர்  எழுவர்  நிலை  என்ன? சிவப் படை 

விழுங்கிற்றோ? அழுகையுடன்  வாகு  ஆய்வு    செய்தான்.

                                        யமன் செய்த செயலோ 

எய்தியவன்             அக்கினிமுகன் 

            எய்தியது             ஆதியான்படை ;

மெய்தீரூயிர்             மேவினான் யமன்;

            செய்செயலோ?            செயிர்த்தவாகு .                                                                     691

                                        பொருள் 

        சிவப்படையை  எய்தியவன்  அக்கினிமுகன் ; எய்தியது  சிவப் படை; 

உயிரைக்கவ்வியவன் யமன்; விடுவானா?வீரவாகு.

                                        யமன்பணி 

ஏவினான் கணை             தாவினான் யமன் 

            கூவினான்  குரல்             மேவினான் சிவம்;

ஆவி பற்றி,            உடல்பற்றிப் 

            பாவினான்  பசு;            தேவமகிழ்வு.                                                                         692

                                        பொருள் 

        யமனை  வெல்வதற்காக வாகு  கணை  ஏவினான்;யமனோ  அஞ்சி நடுங்கி 

ஓடோடி  வந்தான்;காப்பேன்  உயிர்;கூவிய   யமன்  சிவலோகம்  அடைந்தான்;

உயிரேழையும்   பற்றினான்; உடலேழையும்   பற்றினான்; உயிருடல் 

சேர்ந்தது;  தேவபூமியெங்கும்  மகிழ்ச்சி.

                                    நான்காம்  நாள் பகல் 

                                        மூவாயிரவர் (சூரனின்மகன்கள் )

                                        சூளுரைத்த மகன்கள் 

சூரமன்னனை             வாழ்த்தியவர் 

            வீரபூதரை,            வேல்கந்தனை,

வீரம்விளை             வியன்களத்தில் 

            வென்றிடுவோம்,            இன்றுகாண்நீ .                                                                    693

                                        பொருள் 

            தந்தையை  வணங்கிய  மூவாயிரம்  புதல்வர்களும்  தந்தையே!

அந்தப்பூதப்படையை ,வேலுடைய   கந்தனை, இன்றே  போர்க்களத்தில் 

கொண்றுகுவித்து.வென்றிடுவோம்;  அவ்வெற்றியை  இன்று  நேரில் 

தங்கள்  பார்க்கப்போகிறீர்கள் ",என்றனர்.

                                        படைசெல்லல் 

நவவழித்தேர்             எண்ணிலவே;

            கவளக்கரி             எண்ணிலவே;

இவுளித்தொகை             எண்ணிலவே;

            அவுணப்படை             எண்ணிலவே.                                                                         694

                                        பொருள் 

            நால்வகைப் படைகளும்   ஆயிரம் ஆயிரம்    அணிவகுத்துச்சென்றன;

மூவாயிரவரும்  முன்சென்றனர்.

                                        வெற்றிப்படை 

மூவாயிரவர்             முந்திநின்று,

                    தேவானவப்             படையையெலாம் 

சீவனற்ற             நிலைவிரட்ட,

            மூவாயிரவர்             முதலாயினர்.                                                                            697

                                        பொருள் 

            வலிமைமிக்க               அரக்கப்படை  பூதர்களை   களத்தின்   முன்னே 

சென்று   தாக்கியது; தேவப்படையோ   எதிர்கொள்ளமுடியாமல்  வீழ்ந்தது;

மூவாயிரவர்ப்  படையே   வெற்றியில்  முதல்  நின்றது.

                                        விசய பூதன் 

இசையுறு             தமரெல்லாம் 

            இரிந்துபோனபின்             விசயனே ,தனி 

வசையெனும்பகைக்             கூற்றுவனாகித் 

            திசையெல்லாம்             நசைகூட்டுவான்.                                                              698

                                        பொருள் 

            புகழ்மிக்க  பூதப்படையினர்   அரக்கப்படையை   எதிர்கொள்ள 

முடியாமல்  நலிந்துபோகக்கண்ட    விசயன்  என்னும்   பூதத்   தலைவன் 

அரக்கப்படைகளைத்   தான்  ஒருவனாகவே   எதிர்த்தான்; அவனது  

போராற்றலுக்கு முன்   நிற்கமுடியாமல்  அரக்கப் படை  பின்வாங்கியது.   

                                        வெறிப்போர்   

கரங்களை             அறுத்தான்;

            கழல்களை             வெட்டினான்;

உரத்திலே             மிதித்தனன் ;

            சிரங்களையும்              அறுத்தான்.                                                                            699

                                        பொருள் 

            விசயனாகிய  ஒருவனே  அரக்கப்படைகளைக்   கொன்று குவித்தான்;

கைகள்,கால்கள்,  வெட்டி வீழ்த்தப்பட்டன; மார்பிலே  மிதித்தே  மாண்டனர் 

அரக்கர்;தலைகளை  வெட்டிவீழ்த்தினான் அவன்.    

                                        தவமேன்மை 

வீழ்ந்தவர்             எழுந்தார்;

            வெட்டுண்ட               கரம்வளர்ந்தது ;

தாழ்ந்தமேனி                 தளிருற்றது;

            தவத்தின்             மேன்மை காண் .                                                                         700

                                        பொருள் 

            விசயனால்   வீழ்த்தப்பட்ட   மூவாயிரவர்கள்   இறந்து  பட்டபின்னரும் 

உயிர்பெற்று  எழுந்தனர்; வெட்டப்பட்ட  கை ,கால்கள்  வளர்ந்தன; இது 

அவர்கள்  ஆற்றிய  கடுந்தவத்தின்  மேன்மையாகும் .  

                                        முருகனே  தீர்வு 

ஆறுமாமுகப்             பிரானன்றி 

            ஆக்கம்தரும்             துணையில்லை;

தேறினானே             தீரவிசயன் ;

           திருவடியை             உன்னினானே.                                                                           701

                                        பொருள் 

இந்த  நிலையில்  நல்வழி  காட்டக்கூடிய   பெருந்தகை   முருகனே  ஆவார்;

 அவரே துணை  செய்வார்; என  நினைந்த  விசயன்   மாமுருகனை   மனத்தில் 

நிறுத்திப் போற்றினான்.

                                    படை  அளித்தல் 

மீளமீளத்             தோன்றினானரோ!

            மேவலர்தாம்;            மீட்டது வரம்;

கேளிது நீ !            தளரேல்மனம்;

            நீளாற்றல்             நெடும்படைஇதோ !                                                                 702

                                        பொருள்  

            படப்பட    மீண்டும்,மீண்டும்    தோன்றுகிறார்களோ ! பகைவர்கள்.

அவர்கள்  பெற்ற   வரம் அவ்வாறு  உதவுகிறது.விசய!   கேள்! மனம்  தளராதே.

ஆற்றல்மிக்க  படையை  உனக்கு  நான்  தருகிறேன்;பெற்றுக்கொள்! என்று 

முருகன்  அருளினார்.

                                        அருள்முருகன் 

வென்றிகொள்படை             விசயனுக்குப் 

            பொன்றிடவே             படையைவிடு!

என்றிவைபல             உரைத்தேக,

           ஒன்றினானே             உலகமெலாம்.                                                                          703

                                        பொருள் 

        வெற்றியைத்தரும்   படையை  விசயனுக்கு   அளித்து,  இப்படையை 

ஏவுக . என்று  கூறி  மறைந்தவர்  உலகெல்லாம்  உறைந்தார்.

                                        மூவாயிரவர்  அழிதல் 

மாயவன்படை             மற்றுமொருவன் 

            மாயிருள்படை             வீழ்ந்தழிய,

தூயவனருள்             தாய்ப்படைவிட ,

            தீயவர்குழு             சீரழிந்தது.                                                                                    704

                                        பொருள் 

            விசயனை   எதிர்த்த  மூவாயிரவரில் மாயப்படை   ஏவினர்   சிலர்;

மற்றும்  இருள்படையை   ஏவினர்  சிலர்;  விசயனோ  தூயவன்  அருளிய 

தூய்மைப்படையை   எவிட்டான் ;  மாயவிருள்  படைகள்   மாய,

மூவாயிரவரும்    மாண்டனர். 

                                        சூரமகன்களின்  அழிவு 

பகைவர்முன்             பவித்திரமிலாப் 

            படையதாலே             மாண்டுபோன 

முகைமூவா             யிரவர்கள் 

            நகையழித்தனர்             சூரனுக்கே.                                                                      705

                                        பொருள் 

   பகைவர்களை  வென்றிட    மாயப்படைகளையும்   மாயஉருவத்தையும் 

பயன்படுத்தி  மூவாயிரவரும்   மாண்டுபோனார்கள். மகிழ்ச்சி  தரவேண்டிய 

புதல்வர்கள்  சூசனுக்கோ  வருத்தத்தையே   தந்தனர். அந்தோ!

                                        நான்காம்  நாள்  இரவு 

                                        அமைச்சர்    தருமகோபன்  போர் 

                                                தருமகோபன் வீரம் 

சூரமன்னன்             சோர்ந்துபோய்,

            வீரநிலம்             விரைந்தேகுவன்:

ஆரமார்ப!            அடியனுளேன்;

            அறகோபன்            ஆர்த்தெழுந்தான்.                                                                    706

                                        பொருள் 

            மூவாயிரவர்களும்   மாண்டபின்னர்  சூரன்  சோர்ந்துபோனான்;

நானே  போர்க்களம்  புறப்படுகிறேன் " என்று  கூச்சலிட்டான்.அதுபோழ்து 

அமைச்சர்  தருமகோபன்   மாமன்னர்!  யான்  இருக்கிறேன்;  நான் 

செல்வேன்"  என   ஆர்த்தெழுந்தான். 

                                        புறப்படல் 

போர்ப்பெருங்            கோலமுற்றுச் 

            சீர்ப்பெரும்              புண்டரீகம் 

கார்ப்பெரும்             யானையுடன் 

            போர்க்களம்             புறப்பட்டான்.                                                                             707

                                        பொருள் 

        போர்க்கோலம்  புனைந்த  தருமகோபன்  தனது  பெருமைமிக்க  

"புண்டரீகம்"  என்னும்   யானையுடன்   போர்க்களம்  நோக்கிப் புறப்பட்டான்.

                                        போராற்றல் 

அடற்களிறும்            அமைச்சனும் 

           கடற்சேனை            இடர்படும்படி ச்

சுடர்வாளால்             படையழித்தனர் ;

            விடைகண்டான்             வீரவாகு.                                                                                 708

                                        பொருள் 

        புண்டரீக  யானையும்,தரும கோபனும்  பூதச்சேனையைத்    திக்குமுக்காட 

வைத்தனர்;வாளால்  அழிப்பார்  அமைச்சர்;காலால்  அழிக்கும்    யானை .

பலரும்  இரிந்தோட,வீரவாகு   விடை  காண வந்தான். 

                                        தருமகோபன்  வீழ்தல் 

தருமமிலாத்             தருமகோபன் 

            கருமவினை             யுருமாறி 

வருவனபோல்             வீரவாகு 

            உறுகரமே              உயிரெடுத்தது.                                                                             709

                                        பொருள் 

        அரக்கவழி    அறமற்றன   புரிந்த  தருமகோபன்  ஆற்றிய   தீயவினைகளின் 

ஆக்கமும், கூடி நிற்க,  வீரவாகுவின்  வீரத்தால்   அமைச்சன்    மாண்டு 

வீழ்ந்தான். 

                                        கண்ணீரே  கதி 

புண்டரீகத்             திசையானை 

            கண்ணீரொடு             கதைகூறி 

மண்காக்கத்             திசைசென்றது;

            கண்ணீரே             சூரன்கதி .                                                                                         710

                                            பொருள் 

        தருமகோபனால்  அடிமைப்  படுத்தப்பட்ட  திசைகாக்கும்  புண்டரீகம் 

எனும்  யானையும்  கண்ணீருடன்  தன்கதையைச்   சொல்லியது; மீண்டும் 

திசைகாக்கும்   பணிநோக்கிச்  சென்றது;சூரனின்  கதி   கண்ணீர்   தானோ!  

                                        ஐந்தாம்   நாள்  போர் 

                                       பானுகோபன்  இறுதிப்போர் 

                                        அறம் உரைத்த  பானு கோபன் 

சார்ந்தபலர்             சோர்ந்திறக்க,

            ஊர்ந்தவாழ்வு             உணர்ந்தபானு 

சேர்ந்த தந்தை             செவ்வறமதை  

            நேர்ந்துரைக்க             நேயமானான்.                                                                         711

                                        பொருள் 

        தங்களைச்  சார்ந்து  போராற்றும்    பலரும்   தோற்று  இறந்துபோக,

வாழ்வின்  உண்மைகளை  உணர்ந்த  பானுகோபன்   சூரனை   அடைந்தான்;

அவனுக்கு   அறக்கருத்துக்களை  எடுத்துக்  கூறினான்; அறத்திற்கு 

நேயமானான்;தந்தைக்கோ   பகையானான்.

                                        போருக்குப் புறப்படல் 

மாறாத             மாவரக்கன்,

            மனம்கோணா             மாட்சிமையால் 

நேராக             நீள்களமே 

            போராற்றப்             புறப்பட்டான்.                                                                             712

                                        பொருள் 

        பானுகோபன்  கூறிய   சொற்களை   ஏற்கவில்லை  சூரனாம்   தந்தை;

தந்தையின்  மனம்  கோணாமல்  நடக்கவேண்டும்   என்ற எண்ணத்துடன் 

அங்கிருந்து  அப்படியே   போர்க்களம்  புறப்பட்டான். 

                                        வாகுவே    பகை 

பூதப்படை             பேதலிக்கச் 

            சாதலெனும்             சாரலிலே 

வேதப்படை             வீழ்ந்தழியத் 

            தூதனையே             எதிர்த்தனனே .                                                                         714

                                        பொருள் 

        பானுகோபன்  களத்தினுள்    நுழைந்தவுடன்    பூதப்படை  அஞ்சி ஓடியது;

வீரமரணம்  என்னும்  நினைவிலேயே   கோபனும்  போரிட்டான்; பூதரும் 

போரிட்டனர்; வேதப்படை    சற்றே    வாங்கியது;  வீரவாகுவே   தனது   பகை 

அவனையே  எதிர்க்க  முற்பட்டான்  பானு.

                                        இருவரின்போர் 

இருவருமே             பொருதபோர் 

            கருவினையும்             கலக்கிற்றே'

அரும்பூமி             பெருவானம்,

            உறுதேரில்         சுற்றினரே .                                                                                         715

                                        பொருள் 

        பானுகோபனும்,  வீரவாகுவும்   இடைவிடாது  போர் புரிந்தனர்; அவரிருவர் 

போரைக்கண்டு   கருவில்  உள்ள  சிசுவும்  கலங்கி  நடுங்கியது; நிலத்தில்,

வானில்  மலையில்,  என  உலகம்  முழுவதும்  சுற்றிசுற்றிப்  போரிட்டனர்.

                                        பற்றிய  படைகள் 

வரப்படையா  ,            வாட்படையா ,

            திறப்படையா,            தீப்படையா ,

இறைப்படையா ,            இருவருமே 

            குறையின்றி             நிறையானார்.                                                                         716

                                        பொருள் 

        வரத்தினால்  பெற்ற   படை,  வாள் வீச்சு, திறத்தை  வெளிப்படுத்தும்  படை,

அக்கினிப்படை, இறைவர்களின்  தெய்வீகப்படை  ஆகியவைகளில்  

இருவருமே  நிகராகிப்  போர்  புரிந்தனர்.

                                        மாயப்படை 

மாயப்படை             மாற்றிட வே 

            மாவீரன்             மாற்றினான்கலை ;

சீயமெனச்             செவ்வாளைச் 

            சீர்க்கரத்தே             ஏராக்கினான் .                                                                            717

                                        பொருள் 

        பானுகோபன்   மாயப்படையைத்    தொட்டான்;   வீரவாகுவோ  

படையையே   மாற்றினான்;  சீறும்   சிங்கம்போல்  சீரிய   செவ்வாளைத் 

தனது  கரத்திலே  பற்றினான்.

                                        வீழ்ந்தான்  பானுகோபன் 

பாய்ந்துவரும்             பானுகோபன் 

            வேய்ங்கரம்         வீழ்த்தினானே ;

காய்ந்தெடுத்த             கரமதையும் 

            காவுதலை             சீவினானே.                                                                                     718

                                        பொருள் 

            பாய்ந்துவரும்   பானுகோபன்   வலது  கரத்தை  வெட்டினான்  வாகு.

மீண்டும்  கரம்பற்றிட  முனைந்த  பானுவின்   மற்றொரு கரத்தையும்,  

சீவினான் ; முடிவாக  அவன்   தலையையும்  வாளால்  அறுத்தான்  வாகு.

                                        வெற்றிவேல் 

வீரசூரன்             வெந்தழவே 

            வீரவாகு             வெற்றியுற்றார்;

வீரவேலே             காரணமாம்;

            வீரவேலே             வெற்றிவேலாம்.                                                                             719

                                        பொருள் 

            மகனைப்பறிகொடுத்த   சூரன்  வெம்பி,  வெந்து   அழவும், 

வீரவாகு  வெற்றியுற்றார்;  வெற்றிபெற  வீரவேலே   காரணம்  ஆகும்.

வீரவேல்   வெற்றிவேலாகக்    காட்சி  அளிக்கிறது.

                                        ஆறாம்நாள்போர் 

                                        சிங்கமுகன் போர் 

                                        சிங்கமுகன் 

வீரதீர             வாசுரபரன் 

            காரசுர             சீறுகுரல் 

பாரதிரப்             போரதிரத் 

            தேரேறு             சூரிளையோன்.                                                                                    720

                                        பொருள் 

        வீரம் மிக்கவன்;  தைரியம்  நிறைந்தவன்; ஆசுரம்"  என்னும்  நாட்டை 

ஆள்பவன்; கடுமையான  அரக்கன்; சிங்கம்போல்    சீறும்  குரலுடையவன்;

உலகமே  அதிரும்படியாகவும், போர்க்களமே    அதிரும்படியாகவும்  தேரேறி 

வந்தான்  சூரனுக்கு   இளையவனான    சிங்கமுகன். 

                                        சூலப்படை  கொண்டவன் 

ஆசுரத்து             வீசுபுகழ் 

            மாசுநிறை             தேசுடையான் 

பாசுபதம்             போன்றபடை 

            கூசொளிர்             சூலத்தான் .                                                                                    721

                                        பொருள் 

        ஆசுரநகரில்  ஆட்சிபுரிந்து,பெரும்புகழ்  கொண்டவன்; குற்றம்,குறை 

நிறைந்த  ஒளியுடையவன்; இறைவனால்  அளிக்கப்பட  பாசுபதம்   போன்ற 

சூலத்தை  உடையவன்.

                                        களம்   காணவருதல் 

உடன்பிறப்             படல்சூரன் 

            கடன்கழிக்கக்             கடற்படையுடன் 

மடலேற்று,            மாமுகன்தான் 

            படையேற்றுக்             களம்புகுந்தான்.                                                                    722

                                        பொருள் 

        சூரனாகிய  உடன்பிறப்பின்  துணையாக, அண்ணனுக்கு  ஆற்றவேண்டிய 

நன்றிக்கடனுக்காகக்   கடல்போன்றபடையுடன்   அண்ணனின்  ஆணைப்படி 

சிங்கமுகத்தான்  படைத்தளபதியாகி   போர்க்களம்  புகுந்தான்.   

                                        போர்ச்சிறப்பு 

கயக்கூட்டம்             கரத்தினாலே 

             கசக்கிட்டான் ;            கறைத்திட்டான் ;

சயக்குதிரை             சிறுவிரலால் 

            சலமீன்போல்             நசுக்கிட்டான்.                                                                           723

                                        பொருள் 

போர்க்களத்தில்  யானைப்படைகளை  வெருட்டினான்;  அவைகளைக் 

கையால்  தூக்கிக் கசக்கினான்;  குருதிஆற்றில்     கறைத்தான்   வெற்றி தரும் 

குதிரைகளை  நீரில்  நீந்தும்  மீன்களை  வாரி  எடுப்பதுபோல்   எடுத்துத் 

தனது  சிறுவிரலால்  நசுக்கினான்.

                                        மேருமலையோ?

பூதப்படைகளை             ஊதிட்டான் ;

            தூதனவன்             தம்பியரைக் 

காததூரம்             எறிந்திட்டான்;

            மோதமுடியா             மேருமலை.                                                                                724

                                        பொருள் 

            பூதப்படைகளை   வாயால்  ஊதித்    தொலைதூரம்    தள்ளினான்;

வீரவாகுவின்  தம்பியர்  எண்மரையும்   களத்திற்கு    வெளியே    தூக்கி 

எறிந்தான்; தேவப்படைகள்   மோத    முடியாத மேருமலைபோல்  விளங்கினான் 

                                        மாயஉரு 

நூறுநூறு                 வேறுருக்கள் 

            பேருலகு             சார்ந்துநின்று,

ஊறுஊறு             மாயையினால் 

           மாறிமாறிப்             போர்புரிவான்.                                                                              725.

                                        பொருள் 

        வேறுவேறு  உருவங்கள்  தாங்குவான் ; நூறு நூறாக  வானிலும்,  நிலத்திலும் 

நின்று  போர்புரிவான்.மாயத்தன்மை   கொண்டு   பூதப்படையினருக்குத் 

துன்பம்  விளைவிப்பான்; பலஉருவங்களில்    மாறி மாறி   நின்று   போர் 

புரிவான்.

                                        வேல்படை 

வீரரெண்மர்             வீரவாகு 

            சூரசூலம்             இரிந்தேகினர் ;

வீரவேற்படைக்             கார்முகத்தால் 

            சூரிளவல்             சோர்வுற்றனன்.                                                                            726

                                        பொருள் 

            வீரவாகுவும்,  வீரரெண்மரும்  சிங்கமுகனின்  சூலத்தால்  மயங்கி 

விழுந்தனர்; அங்குவந்த   முருகக்கடவுளின்   வேற்படை   சிங்கமுகனை 

வழியிழக்கச்செய்தது.

                                        குலிசம் 

வேலின்றி             வேறிலையோ?

            சூலகர்வச்             சிங்கமுகன் 

சீலமில்லாச்             சொல்லேற்றுக் 

            கோலகுலிசம்              குனித்திட்டான்.                                                                    727

                                        பொருள் 

            முருகனின்  போராற்றல்  முன்  நிற்க  இயலா  அரக்கன், தளர்ந்து 

நின்றபடியே  முருகா!  உனக்குப்    பகைவர்களை  அழிக்க  வேலாயுதம்  

மட்டுமே  பயன்படுமோ?  வேறு படை  இயக்க  அறியவில்லையா? எனக் 

ஏளனத்துடன்  கேட்டான் சிங்கன்;அவனது  முறையில்லாத  சொற்களைக்  

கேட்ட முருகனோ  சிரித்தபடியே  குலிசம்'  என்னும்  கோடரியை   அவன்மீது 

வீசினான்;   அது  அடுத்த நொடி  அரக்கன்  உயிரைப்  பறித்தது.

                                        சங்கொ லி 

சிங்கமுகனும்             சீரிழந்தான்;

            தங்கவர             வாழ்விழந்தான்;

பங்கமுற்று             உயிரிழந்தான்;

            சங்கங்கள்             சேர்ந்தொலித்தன.                                                                     728

                                        பொருள் 

            மிக்க வலிமை  கொண்ட  சிங்கமுகனும்  சீரும்,சிறப்பும்    இழந்தான்;

அவனது   வரங்கள்    அவனைக்  காக்கவில்லை;  எல்லாம்  இழந்து  உயிரும் 

துறந்தான்; தேவப்படையில்  வெற்றியைப்போற்றி   எங்கும்  சங்குகள் 

முழங்கின.

                                        ஏழு,எட்டு, ஒன்பது,பத்தாம்  நாட்கள் போர் 

                                        சூரபன்மன் போர் 

                                                    போர்ப்படை 

ஆர்த்திடுக             போர்ப்பறையை;

            சூரத்தலைவன்             ஏற்றனன் தலை ;

போர்த்தியதோ!            பேருலகம்;

            போர்வையாம்             பேருயர்படை .                                                                     729

                                        பொருள் 

            சூரமன்னரே   போர்த்தலைமை   ஏற்றுள்ளார்; போர்ப்பறையை  

அறையுங்கள் ! இவ்வுலகமானது   சூரனின்  படை    போர்வையைப் 

போற்றியுள்ளதோ? எனும்படிப்  படை  திரண்டு எழுந்தது.

                                        சூரனின் போர் 

நேர்நின்றான்             தேர்முன்னே;

            சூர்மனத்துச்             சூழ்ச்சியுடன்;

தேரேறி                 வாள்வீசி,

            வீரவாகு             வான்பறந்தான்.                                                                                  730

                                        பொருள் 

        போர்க்களத்தின்  முன்னே  நின்ற சூரன்,  தேரேறினான் ;நிறைந்த  

சூழ்ச்சிகொண்ட  அவன்   களம் புகுந்தான்; பூதப்படைகளைச் 

சின்னாபின்னமாக்கினான்; வாள்   வீசி,வீரவாகுவை  வானில் 

பறக்கவைத்தான்.

                                        அண்டகோளை வேற்படை அழித்தல் 

அண்டகோளில்             எடுத்தெறியவே 

            கண்டவேலும்             காத்ததுவே ;

அண்டகோளின்             புண்தருபடையை 

            உண்டதுவே;                ஒழித்ததுவே.                                                                            731

                                        பொருள் 

        வீரவாகுவை    அண்டகோளில்   சூரன்  தூக்கி எறிந்தான் ;  இதனைக்கண்ட 

வேலாயுதம்  வீரரைக் காத்தது;  சூரனின்  அண்டக்கோளிலிருந்து   வந்து 

குவிந்த படைகளை  எல்லாம்  வேலானது  விழுங்கிற்று;அழித்துக்குவித்தது.

                                        மாயம்  மாற்றினான் 

மாயமான             மாச்சூரண் 

            மாய உரு             வேற்றநிலை 

மாயமெல்லாம்             தானுமாகி,

            மாயமதை             மாற்றினானரோ .                                                                        732

                                        பொருள் 

        மாயமே   உருவான   மாயையின்  மகனாகிய   சூரன், மாய  உருவை  

எடுத்தான்;   அந்நிலையில்  முருகனும்    சூரன் எடுத்த  மாய  உருவாகத்  தானும் 

மாறி,அவனது    மாயத்தை   மாற்றினார்.

                                        படை அழிதல் 

வளர்ந்துமேலும்             வந்துவந்து 

            களத்துப்படைக்             கருங்கூட்டம் 

உளத்தெழுந்த             ஹும்காரம் 

            தளத்தோடே             அழித்ததுவே.                                                                             733

                                        பொருள் 

        இருவரும்   போர்   ஆற்றிக்கொடிருக்கையில்   களமெல்லாம்  புதிது 

புதிதாய்த்   தோன்றிய   அரக்கப்   படைகள்  அழிக்க,அழிக்கத்   தோன்றிக் 

கொண்டேயிருந்ததைப்    பார்த்த  முருகப்பெருமான்,  தனது  உள்ளத்திலிருந்து 

ஹும் "  என்னும்  ஒலிமிக்க   ஓங்காரத்தை  எழுப்பினார்;  அவ்வொலி 

அனைத்துப்  படைகளையும்    அடியோடு  அழித்தது.

                                        வேலின் பணி 

இந்த்ரஜாலம்             மந்த்ரமாயம் ,

            எடுத்தழித்தே             ஏந்தல்முன் 

தந்த்ரமில்லாத்             தன்வழியில் 

            விந்தையை             வேல்புரிந்தது.                                                                                734

                                        பொருள் 

        சூரனின்  வரப்பிரசாதமாகிய    இந்திரஜாலத்தேரை .அதுசார்ந்த  

 மந்திரமாயத்தை  எடுத்து,அழித்து, நல்ல தன்மையில்   முருகன்முன் 

கொணர்ந்து  நிறுத்தியது. 

                                        மாவுரு (விஸ்வரூபம்)

மாவுருவைக்             காட்டினாலும்,

            மாறாத             சூரனையே 

தீவு தீவாய்த்             தேடிதேடி 

            தீரப்போரை             ஆற்றியதீரர் .                                                                                735

                                        பொருள் 

        சூரனின்  மீது  கொண்ட  கருணையினால்  விஸ்வரூபத்தைக்   காட்டினார் 

கந்தவேள் . அப்பொழுதும்  மாறாத  அரக்கனை  அழித்துவிட  எண்ணி 

உலகம்  முழுவதும்  சுற்றுச்சுற்றி வந்து  போராற்றினார்   முருகன்.

                                        கூறு போட்ட வேல் 

ஆறுமுகத்தார்             வீறுகண்டு ,

            சூருற்றான்             ஊறுமரம் ;

மாறுமா             மரத்தையே 

            கூறுபோட்டது             குமரவேல்.                                                                                736

                                        பொருள் 

        முருகனது  வீரம், வில்லாற்றல், போராற்றும்   திறன்  இவைகளைக் 

கண்டு,  அஞ்சிய  சூரன்   தனது   மாயத்தால்  தன்னை  அசைக்கமுடியாத 

ஒரு  மாமரமாய்  மாற்றிக்கொண்டான்; தேவர்களையும்,உலகோரையும் 

ஆடி,அசைந்து துன்புறுத்தினான்  அவன்; முருகனது  ஆணைப்படி  

வேலாயுதம்  அம்மரமாகிய    சூரனை  இரு கூறாக்கியது.

                                        சேவலும்மயிலும் 

வேல்தொட்ட             விந்தையினால் 

            விரிதோகை            நறுஞ்சேவல் 

சீலமாகிய             செவ்வரக்கன் 

            செந்திலையே             வணங்குமம்மா.                                                                    737

                                        பொருள் 

        முருகனது  வேலின்  தொடுதலால்  சீலமும்,பண்பும்   அருளெனத் தோன்றி,

அவ்வரக்கனைத் தன்னைச்சுமக்கும்    மயிலாகவும்,  தனது  

.தேர்க்கொடியாகவும்   மாற்றி  ஏற்றுக்கொண்டார்   முருகன்.  செவ்வரக்கனும் 

செந்திலாதிபதியை  வணங்கியபடி  அவரோடு  காட்சி   தருகிறான்.

                                        காளி கண்ட கந்தன் 

காலமெல்லாம்              காளியன்னை 

            கண்டகாட்சி             கந்தனருளே;

சீலமெல்லாம்             சிந்தையிலே 

            செம்மையை             வளர்க்குமம்மா .                                                                    738

                                        பொருள் 

        போர்க்காட்சிகளைக்   காணவந்த  காளியன்னை , கந்தனருளையே 

கண்டது  அக்கந்தனருளல்லவா! கந்தபிரானின்  அருளாக்கம்  நற்பண்பு,

நமது  மனத்தில்  நின்று  அறத்தை  வளர்க்கும்.


                                        13. களம்   பாடியது 

        தேவாசுரப்போரில்  வீரவாகுவின்  போர்க்கள நிகழ்வில்   நடைபெற்ற 

வீரநிகழ்ச்சிகள்  பிற நிகழ்ச்சிகள்   இப்பகுதியில்    காளியால்   காணப் 

படுகின்றன;அவற்றை நாமும்  அறிவோம். 

                                        களமாண்பு 

கலிகாலம்             கண்டஞ்சும் 

            களப்போர்க்கு             வழிகாட்டும் 

தலைப்போராம்             தேவாசுர 

            மலைக்களத்தின்             மாண்புகாணீர் !                                                             739

                                        பொருள் 

        கலியுகம்  தொடங்கிப்   பல்லாயிரம்  ஆண்டுகள்    ஆயினும்,  இதுவரை 

இப்படிப்பட்ட  போர்    யாரும்  கண்டதில்லை.  பார்த்தாலே    அஞ்சும் அளவு 

மிகக்கொடூரமான  இப்போர்   வருங்காலத்திற்கு   வழிகாட்டியாக   அமையும் 

முதற்போராகும்.இதோ   தேவர்களும்,   அசுரர்களும்   நடத்தும்  போரையும் 

அப்போர்க்களத்தையும்   காண்பீர்களாக. 

                                        பேய்கள் வேண்டக்    காளி  வருதல் 

தார்மேவு             பேரரசி!

            போர்கண்டாய் ;            போர்ப்பொலிவு 

போர்க்களம்             காணவருக ;

            சீர்வாயில்             வந்துளோம்;வா!                                                                             740

                                        பொருள் 

மலர்மாலைகள்  அணிந்துவிளங்கும்   பேரரசியே!  போரைக்கண்டு  அதன் 

தன்மை உணர்ந்த   நீ   களம்   காணவேண்டாவா? உன்னை  அழைக்க 

வந்து,உன்கோயில்     வாயிலில்  நிற்கிறோம்;  வா   தாயே!  என்று  பேய்கள் 

அன்போடு   அழைத்தன.

                                        களம்  காணல் 

கடலோடு             கடலமோதும் 

            காட்சியிதோ!            மாட்சியிதோ !

உடல்சிலிர்க்க,            உளம்வியக்க 

            உவந்திட்டேன்;            உரைத்திடுவேன்.                                                                    741

                                        பொருள் 

        கடலும்,கடலும்  மோதுவதைப்போல்  இருபடையினரும்   மோதுகின்ற 

காட்சி   இதோ ;  போர்க்காட்சி  மெய் சிலிர்க்கவைக்கிறது; உவந்த  

காட்சிகளை  உங்களோடு   பகிர்ந்துகொள்கிறேன்"  என்றாள்   அன்னை. 

                                        மலை--யானை 

கலைமூங்கில்             நிலையான             மலைமேலே 

            சிலைக்கூட்டம்             அலையலையாய்             அடுக்கிடவே 

தலையெல்லாம்             தார்போலப்             போர்த்திட்ட 

            மலைமேவு             மாதங்கம்             காண்மின் !                                                    742

                                        பொருள் 

        மலையின்மீது  நிலையாக   வளர்ந்துநிற்கும்   அழகு  மூங்கில் மரக் 

கூட்டம்போல வில்வீரர்கள்  வரிசை வரிசையாய்    அம்புகளைச   செலுத்திட 

விழுந்த  கணைக்கூட்டங்களெல்லாம்   மாலைபோல்    உடலெல்லாம் 

தைத்துப் போர்த்தி நிற்க, மலையில்  உலாவும்  யானைபோல்  அஞ்சாமல் 

அழகுற நிற்கும்  போர்யானையைப்    பாருங்கள்!

                                        செந்நிறம் 

செந்நிறத்துப்             பூதர்கள்             பட்டபின்னும் ,

            செங்குருதிக்             குளத்தால்             செம்மையாம்;

செந்நிறக்             குருதிக்குளிக்             காரரக்கர் 

            கருங்கார்             மீண்டுமானார்:            பாரீரோ!                                                 743

                                        பொருள் 

            போரிலே  வீழ்ந்துபட்ட ச் செந்நிறப்பூதர்கள்   குருதிக்குளத்தில்  விழுந்த 

=பின்னரும்,  செம்மையாகவே  விளங்குவர். இந்தக்கார்  அரக்கர்களோ 

செந்நிறக்  குருதிக்குளத்தில்    விழுந்தாலும்,   செந்நிறம்  ஆகாமல் 

செழிப்புடைய   கருங்கார்  வண்ணத்திலேயே  விளங்குவர்.

                                        காய்கள் - தலைகள் 

கரைத்தென்னை             நிறைகாய்கள்             விழுந்தனவே;

            நிறையாற்றில்             அலைஅலையாய்ப்             போவதுபோல் 

அறையுற்ற             வருந்தலைகள்             ஆடிப்பாடி 

            நிறைகுருதி             நீராற்றில்             மிதக்குதம்மா!                                             744

                                        பொருள் 

            அற்றன்கரையிலே   வளர்ந்துநிற்கும்    தென்னை     மரங்களின் பழுத்த 

காய்கள்  ஆற்றுநீரில்  விழுந்து    அலையோடு  அலையாகி   மிதந்து 

செலவதைப்போல , போர்க்களத்தில்  வெட்டுண்ட  தலைகள்        ஓடும் 

குருதியாற்றில்  வரிசை  வரிசையாய்  மிதந்து   செலவத்தைப்  பாரீரோ!

                                        சத்திரவரிசை 

சத்திரத்தில்              போடுகின்ற             சாப்பாடு 

            பெற்றிடவே             நின்றிட்ட             வரிசைபோலக் 

கத்தியபடிக்             கழுகு,காகம்             பருந்தெல்லாம் 

            குத்தியுணக்            காத்திருப்பதைக்             காண்மின்!                                    745

                                        பொருள் 

            எல்லோருக்கும்  இலவச  உணவு   அளிக்கும்    சத்திரங்களில்  

சாப்பிட,  வரிசையில்  நின்று   அமர  இடம்பிடிக்கக்   காத்திருக்கும்    மக்கள் 

வரிசைபோலக்     கத்தியபடிக்    கழுகு,காக்கைப்,  பருந்துகள்    எல்லாம் 

வரிசைவரிசையாய்    இறந்த  உடல்களைக்   குத்தியுண்ண க்  காத்திருக்கும் 

வரிசை   காணீரோ!

                                        செய்நன்றி 

பகைவனெறி             படைபட்ட             வீரனுடன் 

            விடைகொண்ட             பரியொன்று             விழுந்தபோதும்,

பகைவாளைத்             கவ்வி,வாயால்             எடுத்ததுவே ;

            மடைநன்றி            மடியாது             மடிந்தது;பார்!                                                 746

                                        பொருள் 

            குதிரை  வீரன்  ஒருவனைப்    பகைவீரன்   படைகொண்டு  

 தாக்கியபொழுது   அடிபட்டுக்  குதிரையுடன்  வீழ்கிறான்; இறக்கும் 

தருவாயில்    அக்குதிரைத்   தனது   காப்பாளனின்  உயிரைக்  கவ்வியிருக்கும் 

பகைவன்  வாளைத்  தன்வாயால்  கவ்வி    எடுத்து அவன்  உயிரைக்காப்பாற்ற 

முயன்று விழுந்து  உயிர்  துறக்கும்;  என்னே  குதிரையின்   நன்றிச்செயல்!

                                        பனம்பழம் -தலை 

பனங்காட்டுப்             புனலாற்றில்             மழைக்காலம் 

            பனம்பழங்கள்             பலவிழுந்து             மிதப்பதுபோல் 

அணங்காடும்             குருதிவெள்ள             வாற்றினிலே 

            பிணத்தலைகள்             அணிவகுப்பைக்              காண்மின்!                         747

                                        பொருள் 

            பனைமரங்கள்  நிறைந்த  காடு    அது;  மழைக்காலம்;  கீழே  ஓடும் 

காட்டாற்றில்  வெள்ளம்;  காற்றில்  விழுந்த   பனம்பழங்கள்   எல்லாம்  

வரிசை  வரிசையாய்     மிதந்து  செல்கின்றன. அதுபோலப்  போர்க்களத்தே 

பேய்கள்  குளித்து  விளையாடும்  குருதியாற்றில்  போரில்   வெட்டுண்ட 

தலைகள்  வரிசையாக    அணிவகுத்துச்  செல்வதைக்     காணுங்கள்!

                                        வரவேற்புப்பட்டு 

செஞ்சோற்றுக்             கடன்தீர்த்த             செயவுடலை 

மஞ்சத்து             அமர்த்திவைத்து             மஞ்சையர்கள் 

செம்பட்டுப்             போர்த்துவதுபோல்            செங்களத்துச் 

செங்கொடி            ஒடிந்தவன்மேல்             விழுதல்காண் !                                            748

                                        பொருள் 

        போர்க்களம்  சென்று,  போரிட்டு  வீரமரணம்  அடைந்த   வீரனுடலை 

மஞ்சத்தில்  கிடத்தி,அப்புனித  வீரவுடலுக்கு நல்ல  செம்பட்டினைப்  

போர்த்தல்போலக்   களத்தில்  அடிபட்டுக்  கீழே  உயிரற்றுக் கிடக்கும் வீரன் 

மீது,   களத்திலே    பறக்கும்   செங்கொடி , இயல்பாகக்   கம்பம்  ஒடிய 

அக்கொடி  அவன்மேல்  விழுந்தது ,அவனைப்போற்றும்   நிகழ்வாக 

அமைவதைப்     பாருங்கள்! 

                                        இராகு பற்றும்  நிலவு 

வெண்ணிலவு              பற்றவரும்             இராகுபோல 

விண்ணளவு             உயர்ந்துபாயும்             தேரினிலே 

கண்ணிமைக்கும்             நேரத்தில்             கால்வைத்து,

அன்னவனின்             உயிர்பற்றல்             காணீரோ!                                                    749

                                        பொருள் 

            நிலவைப்  பற்றிடும்   கேதுக்கிரகம் போல ,  வானளாவி   உயர்ந்த 

தேரினிலே   இமைப்பொழுதில்  கால்வைத்து    ஏறி நின்று தேரில்  உள்ளவனது 

உயிரைப்பறிக்கும்  காட்சி  காணீரோ!

                                        நீர்யானைபோல் 

நீராற்றில்             சண்டையிடும்             நீர்யானை 

            பேர்வாயால்             பெரும்போரை             ஆற்றுவபோல்     

வீரரிருவர்             வெங்கதையால்             வெஞ்சினத்துடன் 

            போராற்றும்             சீர்தனையே             பார்மின்!                                                  750

                                        பொருள் 

            நிறைந்தோடும்  நீராற்றினிலே   சண்டையிடும்   நீர்யானைகள்  போல 

வாயைத்திறந்து,அவ்வாயினாலேயே  ஒன்றுக்கொன்று   சண்டையிடுவதுபோல 

இக்களத்தில்    இருவீரர்கள்  சினத்துடன்    தண்டெனும்    கதையைப்  பற்றிச் 

சண்டையிடுவதைப்    பாருங்கள்!

                                        தாய்மடி 

தாலாட்டுப்             பாடிவளர்             தாயொருத்தி 

வேலாட்டு             வித்தகனை             விரும்பிவரச் 

சூலத்தால்             உயிரிழந்தோன்             சூல்மடியில் 

தாலாட்டித்             தானும்மடி             காட்சிகாணீர் !                                                    751

                                        பொருள் 

            தாய்  தன்மகனைத்     தாலாட்டிப்  பாலூட்டி  வளர்த்தாள் ;  அவனும் 

வீரனாகிப் போர்க்களம்  சென்றான்;  அவனைக்களத்தில்  காண  விரும்பிய  

அன்னை  வந்தவள்     வீரமரணம்    அடைந்தவனைத்     தன்மடியில் போட்டுத் 

தாலாட்டுப்பாடி த்   தூங்கவைத்தவள்    தானும்   அப்படியே  மீளாத 

துயிலில்  ஆழ்ந்துவிடுகிறாள்,  மனத்தைத்  தொடும்  இக்காட்சியைக்   காணுங்கள்!




        


            

        

                

                            

            


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக