சூரன் மீண்டும் உரைத்தல்
நாரணனோ நலிந்தோட ;
வாரணனோ வனத்தோட ,
பூரணனோ பயந்தோடக்
காரணமோ கடுஞ்சூரன் . 472.
பொருள்
காக்கும் கடவுளான திருமால் அஞ்சி ஓடினான்; இந்திரனோ நாட்டை
விட்டுக் காட்டில் மறைந்துவாழ்ந்தான்;நான்முகனோ எப்பொழுதுமே அஞ்சி
நடுங்கி நின்றான்; இவை எல்லாவற்றிற்கும் காரணம் சூரனாகிய என்னைக்
கண்ட அச்சம்தான்.
படைப்பெருமை
அண்டகோள்களின் ஆண்டவன் நான் ;
துண்டமாயின தேவகூட்டம் ;
கொண்டமாயக் கோட்டைகள் ;
பண்டுபோரினில் வென்றிடுவரோ ? 473.
பொருள்
அகிலஉலகத்தையும்,அண்டகோள்களையும் ஆள்பவன் நானே.
எதிர்த்த தேவகூட்டம் ஆங்காங்கு சிதறிப் பிய்ந்து போயின.என்னிடம்
மாயநிரம்பிய பலகோட்டைகள் உள .இப்படிப்பட்ட என்னை யாரால் போரில்
வெல்ல இயலும்? சீறினான் சூரன்.
படைப்பெருமை
இந்த்ரஜாலம் எனதுதேர்;
மந்த்ரஜாலம் எனதுமேனி;
விந்தியமலை எனதுகரம்;
விந்தையாம் எனதுபடை. 474.
பொருள்
இந்த்ரஜாலம் என்னும் மாயாஜாலத்தேர் என்னிடம் உள்ளது.
மந்திரஜாலங்களால் விளங்குவது எனது மேனி. விந்தியமலை எனது
கரம்போன்றது. எனது போர்ப்படைகள் எல்லாம் விந்தைகொண்டவை.
விளையாட்டுக்குழந்தை
விளையாட்டுச் சிறுகுழந்தை
விளையாட வருகிறது;
விளையாடலன் பெருவரத்தால்
விளையாட்டில் விழுந்திடுமே. 475.
பொருள்
என்னோடு போரிட விளையாட்டுச்சிறுகுழந்தை வருகிறது.அந்தத்
திருவிளையாடல் தலைவன் எனக்களித்த பெருவரத்தால் இப்போர்
விளையாட்டில் நானே வெற்றி பெறுவேன்" என்றான் சூரன்.
சூரனின் தன்னம்பிக்கை
படைவீரத் தளபதியரே!
படைகளான தம்பியரே !
படைபோற்றும் புதல்வர்களே !
படையாக இருக்கையிலே.... 476.
பொருள்
வீரத்தளபதியர்களும் ,படைகளாகவே மாறிவிட்ட என் தம்பியர்களும் ,
படைகள் எல்லாம் போற்றும் என் புதல்வர்களும் , என்னுடைய
படைகளாகவே மாறிவிட்டபின்னர்.........
சூரனுக்குத் தோல்வியில்லை
சூரனுக்குத் தோல்வியில்லை ;
சூரனெனிலோ வெற்றிதான்.
சூரன் நான் செருக்குற்றேன்;
சூர வெற்றி! சூரவெற்றி . 477.
பொருள்
எந்தப்போரிலும் சூரனுக்குத் தோல்வி என்பதில்லை. சூரன் என்று
சொன்னாலே வெற்றிதான்.அதனால் சூரனாகிய நான் செருக்குற்றேன்.
சூரனுக்கே வெற்றி! ஆம்.வெற்றி.
படை புறப்படல்
தெருவெல்லாம் மலையாகி,
மாறினபோல் மதகரிகள்'
உருவான மலைக்கூட்டம்
தெருவெல்லாம் நிறைந்தனவே. 478.
பொருள்
போருக்குப் போர்ப்படைகள் புறப்பட்டன. தெருக்கள் முழுவதும்
மலைகளின் மாண்புபோல மதம்பிடித்த யானைகள் அணிவகுத்தன.
மலைகளின் பெருங்கூட்டம் தெருவை அடைத்தபடி நிற்பனபோல்
யானைக்கூட்டங்கள் விளங்கின.
காளமேகக்கூட்டம்
ஆயிரமாம் ஆயிரமாம்
ஆனைகளின் அணிவகுப்பு;
பாயிரமாம் நூல்முதல்போல்
காயகருமைக் காளமேகம். 479.
பொருள்
இலக்கக்கணக்கில் யானைகளின் அணிவகுப்பு; நூலுக்குப்
பாயிரம்போலப் படைப்பிரிவின் முதலில் அலங்கரிப்பது காளமேகம்
போன்ற யானைப்படைகள்.
குதிரைப்படை
கனைத்தலிலே கனிவெற்றி ;
வினைப்படையில் வீறுநடை'
துணைப்படையோ ? யமன் படையோ?
கணக்கில்லை குதிரைப்படை. 480.
பொருள்
குரலெடுத்துக் கனைக்கும் கனைப்பிலே வெற்றியைத் தரும்.
செயலாற்றலில் வீறுகொண்ட நடை நடக்கும்;இது துணைப்படையா?
யமன் படையா?கணக்கற்ற குதிரைக்கூட்டம் படைகளாக சென்றன.
தேர்களின் வரிசை
சடச்சடரெனப் படர்படரெனச்
சுடர் சுடரென இடர் இடரென த்
தடதடவெனத் தொடத்தொடவென
விடவேகப் படைத்தேர்கள் . 481.
பொருள்
சடசட எனவும், படார் படார் எனவும் ஒலியெழுப்பிக்கொண்டும் ,
சுடர்,இது சுடர் சுட்டுவிடும் என எச்சரித்தும், நெருங்கினால் இடர் இடர்
என அச்சுறுத்தியும்,தட தட என்றும், தொட தொட என்றும் பேரொலி
எழுப்பியபடி விடம்பாயும் வேகம்போல் விரைவாகச் செல்லும்
தேர்ப்படைகள் அணிவகுத்துச்சென்றன.
காலாட்படை
மலைக்கரத்து மதவீரர் ,
மரக்கரத்து உரவீரர் ,
சிலைக்கரத்து சீர் வீரர்,
அலைக்கடல்போல் அணிவகுத்தனர். 482.
பொருள்
மலைபோன்ற கரங்களைக்கொண்ட வெறிபிடித்த வீரர்கள்,
மரம்போன்ற வலிமைமிக்க கரம்கொண்ட நெஞ்சுரம் மிக வீரர்கள்,
வில்லை ஏந்திய சீர்மை மிக்கவீரர்கள் அலைகடல்போல்
அணிவகுத்துச்சென்றனர் .
பலவீரர்கள்
கூச்சலிடும் கொடுவீரர்,
வீச்சரிவாள் தொடுவீரர்,
பாய்ச்சல்புலி படுவீரர்,
மேய்ச்சல்நில மேதிவீரர். 483.
பொருள்
பெருங்கூச்சலிட்டபடியே செல்லும் கொடுமையான வீரர்,
வீசுகின்ற அரிவாளைக் கையிலேந்திய வீரர், புலிபோல் பாய்கின்ற
வேகவீரர்,மேய்ச்சல் நிலத்தே கிடந்தாலும், தக்கநேரத்தில் சிலிர்த்தெழும்
எருமை அன்ன வீரர், எனபலப்பல வீரர்கள் அணிவகுத்துச்சென்றனர்.
அரக்கர்படை
அரக்ககுண ஆட்டத்தில்
இரக்கமில்லாப் பெருங்கூட்டம்,
உறக்கமில்லாக் கின்னரர்கள்,
பறக்கும்குணக் கிம்புருடர். 484.
பொருள்
இரக்கமில்லாது,அரக்ககுணம் வாய்ந்த அரக்கர் கூட்டமும்,
தூங்கவே விருப்பமில்லாத கின்னரர் கூட்டமும், நடப்பதோடு பறக்கும்
பழக்கம் கொண்ட கிம்புருடர் கூட்டமும் அணிவகுத்துச்சென்றன.
அழிபடை
எழுந்ததோ வெழுகடலென,
விழுப்படை குழுக்குழுவாய் .
கொழுகொழுவுடல் கூட்டத்தினர்
அழிவழியெனப் படைதிரண்டனர். 485.
பொருள்
ஏழுகடல் எழுந்ததுபோல் விழுமை உடைய படை, குழுக்குழுவாய்ப்
புறப்பட்டன.நல்ல உடற்கட்டு உடைய அப்படையினர் அழிப்போம்
பகைவரை" என்றே திரண்டெழுந்தனர்.
தேவர் படையெடுப்பு
செந்திப்பதி புரக்கின்ற
செவ்வேளின் ஆணைப்படி,
விந்தியமுதல் குமரிவரை,
செந்தூர்ப்படை சேர்ந்திசைத்தது. 486.
பொருள்
விண்ணவர் போர்ப்படைகளும் மகேந்திரம் நோக்கிப் புறப்பட்டன.
செந்திப்பதியிலிருந்து முருகன் ஆணையை ஏற்ற படைவீரர்கள்,
விந்தியம் முதல் குமரிவரை நாடுகளில் இருந்து வந்துசேர்ந்த வீரர்கள்
அணிவகுத்தனர்.
சேரபாண்டியப்படைகள்
சேரபாண்டியர் அனுப்பிவைத்த
வீரயானை வியன்படைகள்,
பூரபரணிப் புண்ணியனின்
போர்ப்படையில் முந்துசென்றன. 487.
பொருள்
அரக்கர்களை அழிக்கும் புண்ணியப்போரில் பரணி நாள் பிறந்த
முருகக்கடவுளின் சார்பில் போராடத் தமிழ் மூவேந்தர் படைகளும்
வந்தன. சேர,பாண்டிய நாட்டிலிருந்து வீரயானைப்படை முதன்முதலில்
அழகுற அணிவகுத்துச்சென்றது.
சோழப்படை
சோழநாட்டின் வேழங்களும்,
சோழப்பெருமைக் குதிரைகளும்.
ஆழசக்கர மேழித்தேர்,
சூழவந்தது சோழப்படை. 488.
பொருள்
முருகன் நடத்தும் புனிதப்போரில் சோழநாட்டுப் படைகளும்
கலந்து கொண்டன.சோழநாட்டின் யானைகளும்,குதிரைகளும்
தேர்ப்படைகளும் கொண்டு சோழப்படை அணிவகுத்தது .
விண் படை
விண்ணகத்தின் ஐராவதம்,
விண்ணிலசெல் பொன்குதிரை ,
பொன்னால்புனை புதுத்தேர்கள்,
விண் விண் எனப் பறந்துவந்தன. 489.
பொருள்
தேவர்களின் வீரம் மிக்க ஐராவதம் என்னும் வெள்ளையானையும்,
வானத்தே பறக்கும் பொன்னிறக்குதிரையும்,பொன்னால் உருவாக்கப்பட்ட
பொற்றேர்களும் மிகவிரைவாய்ப் பறந்துவந்தன.
தேவவீரர்ப்படை
கொடியோடு குடைகளும்
கூர்வேலும் , சீர்வில்லும்,
விடிவுவேண்டி விண்படையினர்
அடி!பிடி!எனக் கடிநடந்தனர். 490.
பொருள்
தங்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும் என்று விரும்பிய
தேவர்கள் கொடியும், குடைகளும் சுமந்து சென்றனர்.வில்லும்,வேலும்
ஏந்திச்சென்றனர்.அரக்கர்களை அடி!அழி! எனக்கதியபடிச் சென்றனர்.
விலங்குகளும்
தேவிவழியே சிங்கங்கள்,
தேவன்வழி காளைகள்,
ஆவியய்யன் அரும்புலிகள்,
காக்கவந்தன ; தாக்கவந்தன. 491.
பொருள்
காட்டில் வாழும் கடும் விலங்குகளும் கந்தனுக்கு உதவிடப்
படையில் அங்கம் வகித்தன.தேவியருளால் சிங்கங்கள்,தேவனாசி
காளைகள்,ஐயப்பன் அன்பு புலிகள் என இவை காக்கவும் செய்தன;
பகைவர்களைத் தாகவும் செய்தன.
பறவைகளும்
கிளிமயில்புறா செம்பூத்து,
அளியன்னம் அருங்காகம்
விளிகுயில்நா கணவாய்ப்புள்
களிப்போடு கனல்படையாம். 492.
பொருள்
முருகனது படையில் பசுமைப்பறவைகளும் பங்கேற்றன.
கிளி,மயில்,புறா,செம்பூத்து, அன்னம்,காகம்,குயில்,நாகணவாய்ப்புள்,
ஆகியன மகிழ்வோடு கனல் காக்கும் போர்ப்ப்டையாக விளங்கின.
திறன்மிக்க தேவர்களின் அணிவகுப்பு
எட்டுதிக்கும் காப்பவர்கள்,
எட்டாப்புகழ் நவவீரர்,
பதினோரு உருத்திரர்கள் ,
பன்னிரண்டு சூரியர்கள். 493.
சிவனருளுடைப் பூதங்கள்,
சிவனடியார்க் கணங்கள்,
தவமுருக மாமுனிகள்,
தவமாக நடைபோட்டனர். 494.
பொருள்
அட்டதிக்பாலகர்கள், நவவீரர்கள்,ஏகாதசருத்திரர்கள், த்வாதச ஆதித்யர்கள்
அணிவகுத்தனர்.
சிவனது பூதகணங்கள், சிவனடியாராகிய கணங்கள்,முருகனையே
வணங்கும் தவமுனிவர்கள்,ஆகியோர் இப்பொறைத் தவமாகக் கருதிப்
பீடு நடைபோட்டனர்.
அடியவர்க்கூட்டம்
காவடித்தோள் கந்தனடியார் ,
சேவடிசேர் செந்திலடியார்
பாவடிபுனை பைந்தமிழர்,
தேவப்படை வீரரானார். 495.
பொருள்
தேவரைக் காக்கும் படையினில் எப்பொழுதும் காவடி தூக்கி
முருகன்புகழ் கூட்டும் அடியார்கள், செந்திலாதிபதி சேவடியைப்
போற்றும் அடியவர்கள்,முருகன்மீது பாமாலை புனையும் பைந்தமிழ்க்
கவிஞர்கள் ஆகியோரும் முருகன் படையில் வீரராகச் சென்றனர்.
மாலும்பிறரும்
மாலொடு நான்முகனும்,
காலோடு கவின் தீயும் ,
மகிழ்வோடு இந்திரனும்,
காலனுமே படைநடந்தார். 496.
பொருள்
திருமாலும், நான்முகனும், காற்றும்,அக்கினியும், இந்திரனும், இயமனும்
அவ்வணிவகுப்பில் நடந்து சென்றனர்.
முருகனும் நடந்தான்
வல்லவனின் நல்லாசி,
தொல்லோரின் தண்ணாசி ,
பல்லோரின் பணிவுவாழ்த்து,
நல்முருகன் நனிநடந்தான். 497.
பொருள்
எல்லாம் வல்ல சிவபெருமானின் நால்லாசியும், தொன்மை வாய்ந்த
முனிவர்களின் தண்மைமிகுந்த வாழ்த்து,பலப்பல மக்களின் பணிவான
வாழ்த்துக்கள் இவைகளோடு கூட ,முருகப்பெருமானும் அவ்வணிவகுப்பில்
அழகே உருவாகவும், வீரமே விளைக்களனாகவும் நடந்தான்.
12. போர் பாடியது .
வலம்வரும்படை
பலகாலும் அலைமோதும்
உலகாளும் நிலைகாணும் ,
களங்கண்ட ```கடல்நாடு
வலம்வந்த நலப்படையே. 498.
பொருள்
உலகை ஆள்வதற்கான நிலையான ஆட்சி அமைக்கவே, பலயுகங்களாக
அலைமோதிக்கொடிருந்த நிலையில், இன்று அரக்கர்களை அழித்தே
தீருவது, என்ற நோக்கத்தோடு களம்காண முற்பட்ட தேவப்படை
செந்திக்கடல் நாடு போருக்குப் புறப்பட்டு நீண்ட வலம் வந்தது, முருகன்
தலைமையின் அமைந்த நலப்படை.
பயணப்பணி
நெடுந்தூரக் கடும்பயணம்
உடுக்கூட்டம் தொடுதூரம்,
சுடும்வெய்யில் நடுங்குபனி
மடுக்கடலுள் தடுப்பணைகள். 499.
பொருள்
மகேந்திரபுரம் நோக்கிச் செல்கையில் படைகள் பல்வேறு
துயர்களைச் சந்திக்க நேரிட்டது;நெடுந்தூரம்செல்லவேண்டும் .கடுமையான
பயணம்.தொடுகின்ற தூரத்தில் விண்மீன்கள் கண்சிமிட்டும்; சுட்டெரிக்கும்
வெயில்;நடுங்கவைக்கும் குளிர்; கடல்வழி ஆங்காங்கு கடற்பள்ளங்கள்;
அதனைத் தாண்டிடத் தடுப்பணைகள் கட்டிச்செல்லுதல் துயரை நல்கும்.
படைக்கூட்டம்
படையானை ; மடக்குதிரை;
தடத்தேர்கள் நடைவீரர் ;
கடைவரையில் படைச்சீர்மை ;
இடையிடமிலா எழில்சிவப்படை. 500.
பொருள்
செல்லும் வழியெல்லாம் நிறைந்து நிற்கும் யானைப்படை; குதிரைப்
படை,தேர்ப்படை;காலாட்படை முதல் தொட்டுக் கடைசிவரை பார்க்க
இயலாத அகலமும் நீளமும் கொண்டது.அதுவே அழகுடைச்சிவப்படை
ஆகும்.
படைகளின் பிரிவு
வானத்துத் தேவர்படை,
மோனத்து முனிவர்படை ,
தானத்துத் தமிழர்ப்படை,
ஞானத்துக் கூறுபடை . 501.
பொருள்
தேவர்களின் வானப்படை ; மோனமுனிவர்களின் படை;
தானம்செய்வதில் சிறந்த தமிழர்ப்படை ; ஞானத்தில் சிறந்தோரின் அறிவுசால்
படை என நான்கு வகை விளங்கின.
பாவபூமி ;பாசறை புண்ணியத்தானம்
பகைநாட்டின் முகைகண்ட
வகைமால்தான் தகைச்செய்தி
பகைப்பாவச் சிகைநாட்டில்
புகுவதன்முன்