மகேந்திரபுரப்பரணி
கடவுள் வாழ்த்து.
விநாயகர் வணக்கம்
புவனத்துப் போகபோக்யம் உயர்ந்திடவே,
புதுமையாம் வித்தகங்கள் விரிந்திடவே,
அவனிவாழ்வும், சிவப்புகழும், நிலைத்திடவே,
உவந்திடுவோம்; ஓம்காரக் கணபதியை . 1
இவன்குகனே; இகபரனே; இலைவேலே;
இளஞ்சுடரே; இராக்கதர்கள் அழிந்திடவே
சிவன்சொல்லைச் சிந்தைகொண் டரும் போரில்
செயவெற்றிச் செந்தூரைக் காக்க"என. 2
பொருள்
மகேந்திரபுரப்பரணி ....... மகேந்திரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு,
ஆட்சி புரிந்து,மூவேழ் உலகங்களையும் துன்புறுத்திய சூரபன்மன் என்ற
அரக்கனை, அவன் குலத்தை, அழித்து, அவன் நாட்டையும் அழித்து, அவனது
தம்பியர்களையும் அழித்த முருகப் பெருமான் மீது பாடப்படும் பரணி
நூல் இது.
கடவுள் வாழ்த்து = == கடவுளரைப் போற்றி வாழ்த்தி,
வாழ்த்தும் ஒவொரு கடவுளரையும் அரக்கர்களை அழித்து வெற்றி பெற்ற
முருகனைக் காக்க வேண்டியும், அவர்களை அருமுருகன் புகழோடு
தொடர்பு படுத்தியும் பாடுவது.
விநாயகர் வாழ்த்து -------- தீமைகளை நீக்கி, நன்மைகளை வழங்குபவர்
விநாயகப் பெருமான். அவரைப் போற்றிப் புகழ்வது.
உலகத்தின் எல்லாவித நலன்கள், ஆன்மாவை நல்வழிப்படுத்தும்
சிவபெருமானால் அருளப்பட்ட இம்மை,மறுமைக்கான இன்பசுகங்களும்
விநாயகரது அருள் நோக்கினால் உயரட்டும் .
புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும், அதனால் உருவாக்கப்பட்ட
சாதனங்களும், உலக நன்மைகளும் விரிந்து, வளர்ந்து செழிக்கட்டும்.
நிலவுலகத்தில் அமைதியான வாழ்க்கையும், சிவனைப் போற்றும்
தெய்வீக வாழ்க்கையும் ,சைவப்புகழும் நிலைத்து நிற்கட்டும்.
என்றெல்லாம் வேண்டி,விரும்பி, வணங்கி, ஓங்கார உருவம் கொண்ட
விநாயகப் பெருமானை நாளும் போற்றிடுவோம்.
போற்றத் தகுந்த பாட்டுடைத் தலைவன் இவன்; குகையன்ன
மனித நெஞ்சத்தில் நிற்பவன்; இவ்வுலகின் பரம்பொருளானவன்;
இலைபோன்ற வேலாயுதம் ஏந்தி, வீரவேற்றி கண்டவன்; நெற்றிச்
சுடரிலே தோன்றி, இளமையிலேயே வெற்றிகண்ட இளஞ்சுடர் அவன்;
தந்தை சொல்லைத் தலைமேல் கொண்டு, அரக்கர் கூட்டத்தை
அழித்துத் தேவர்களை விடுவித்தவன்; திருச்செந்தூரில் தோற்றுவித்த
தேவர் படை எழுச்சி, சூரபன்மன் தலைநகர் மகேந்திராபுரம் நோக்கிப்
புறப்பட்டது. தேவசேனாபதியாக முருகன் வீற்றிருந்து படையை
நடத்தினான். வீரபாகுவும், அவனது எட்டு சகோதரர்களும் தொடர்ந்து
சென்றனர்; போரிலே அரக்கர் கூட்டம் அழிய முருகன் வெற்றி
பெற்றான்; வெற்றிபெற்ற முருகன் வரலாற்றைக் கூறும் இந்நூல்
பாட்டுடைத் தலைவன் வாழ்க என வாழ்த்தி அருள் புரியவே
விநாயகக் கடவுளைப் போற்றுவோம்.
சிவபெருமான் வணக்கம்.
கடலமுதினை நிலைநினைபெறக் குலும் குலு மெனக் கடைந்திடுபவர்
கொடுவிடம்வர, அருட்டுணையென அதைவிழுங்கிய ஆன்றோனே! 3
கடல்நகரினை நிலைகுலைகென கரத்திறப்படை கலக்கியபோர்க்
கொடைமறவனை நிறைமனமுடன் வாழ்த்திடுகெனப் பணிவோமே. 4
பொருள்
பாற்கடலைக் கடைந்து, அமுதத்தினைப் பெற்று நிலையான
அழிவில்லாத நிலையினைப் பெற விரும்பிய தேவர்கள், அரக்கர்களோடு
இனைந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மேரு மலையை
மத்தாகவும், கொண்டு, பாற்கடலைக் கடைந்தனர்; கடையும் ஒலியானது
"குலும் " "குலும் " என மூவேழ் உலகையும் ஆட்டிப்படைத்தது.
அமுதம் வேண்டிக் கடைந்தவர்கள் அலறி,அழுது ஆங்காங்கு
ஓடும்படி, அங்கே தோன்றியது ஆலகால விஷம். தேவர்கள் ஒருபுறம்,
அரக்கர்கள் மறுபுறம், ஓட . த் திருமாலும், பிரமனும், இந்திரனும்
அஞ்சியபடியே ஒடி ஒளிய , அனைத்து ஆன்மாக்களையும் , தேவ
அரக்கர்களையும் உலகையும் காக்கவேண்டித் தோன்றிய விஷத்தை
அமுதம்போல் பருகினார் சிவபெருமான். அருளும், உயிர்களின்
துணையுமான ஆன்ற பரம்பொருளே! உம்மை வணங்குகிறோம்.
கடலால் சூழப்பட்ட மகேந்திர புரமாம் சூரபன்மனின் தலைநகரை
வீரபாகுவின் வாயிலாக, முதலில் அழித்தும், அந்நிலையிலும் ஆணவம்
அடங்காத அரக்கனின் நகரை அழியோடு அழித்தும், அரக்கனும்
அவனைச் சார்ந்திருந்த படை, பல பராக்கிரமங்களும் அஞ்சி அலறி
ஓடும்படியாக ஆன்ற வீரம் காட்டிய தேசேனாபதியை, அன்பும் அருளும்
கொண்ட முதல்வனான செந்திப்பரம்பொருளை வாழ்க" என வாழ்த்தியும்,
வள,நலமெல்லாம் அருளியும், வாழ்த்தி அருளுமாறு வேண்டி,
மூவர்க்கும் முதல்வனான சிவபெருமான் தாளிணைப் போற்றுகின்றோம்.
பாட்டுடைத் தலைவனைக் காக்குமாறு பணிகின்றோம்.
விளக்கம்.
கடல்நகர்= மகேந்திரபுரி. சூரனது தலைநகர்.
கரத்திறப்படை = முருகன் கையில் வைத்துள்ள. அன்னை தந்த வேல்.
கொடை மறவன் = வெற்றிக்கான போர்புரிந்த மாவீரன்; ஆயினும்
அருட்கொடையாக ஆணவச் சூரனை,மயிலாகவும்,
சேவலாகவும் ஏற்றவன்.
உமையம்மை வணக்கம்
மலைதருமகள் மதிமுகமுடை மனமருள்மலர்;
மகிடமதையே மருள்செயச்சிலை மழலையைக்கா;
மலைஅரியழி மகேஸ்வரன்மகன் மதகரி தனை
மறுநொடியழி திருக்குமரனை வாழ்த்திடுவாய். 5
தனதுயிர்த்துணை தனுடனேயிணை நடமிடுசுகம்
தருமமதனைக் கரம்தரிபணி தலைநிலைமகள்'
சினமுறுசெயல் புரியரக்கனைச் செயமடைவழி
சிவகுகமகன் செயித்திடவருள் புரிந்திடுவாய். 6
போரிடச்செல்லும் முருகக்கடவுளை வாழ்த்துமாறு அன்னை
பராசக்தியிடம் வேண்டுதல்..
இமவான் என்னும் மலையரசன் பெற்ற மலைமகளே! நிலவுபோன்ற
ஒளியும்,குளிர்ச்சியும், அழகும் கொண்ட திருமுகம் கொண்டவளே!
உன்னுடைய மனமானது இரக்கம் கொண்டது; கருணை கொண்டது;
அடியவர்களைக் காத்து, அருள்புரிவதில் மலர் போன்று, மென்மையும்,
மணமும், குளிர்வும் கொண்டது.
மகிடாசுரனின் கொடுமையைத் தாங்காது மண்ணும்,விண்ணும்
தவித்தபொழுது, அவ்வரக்கன் மயங்கி, மதிகெட்டு,அழிந்திட வில்லெடுத்துப்
போர் புரிந்த வீரமாதேவியே! சூரனோடு போர்புரியச்செல்லும்
குகனாம் குழந்தையைக் காத்திடுவாய்.
கிரௌஞ்ச மலையாக மாயை பல புரியும், தாரகனையும்,
சிங்கமுகனையும், அழித்து வெற்றியடைய போர்புரியச்செல்லும்
மகனைச் சிவபெருமான் நெற்றிக்கண்ணில் தோன்றிய அவரது மகனைக்
காத்திடுவாய். அவ்விருவரையும் அழித்த மறுகணமே மதம் கொண்ட
யானைபோல் ஆணவம் கொண்ட சூரபன்மனையும் அழித்திடப் போர்
தொடுக்கப் புறப்படும் திருக்குமரனை வாழ்க"என வாழ்த்திடுவாய் !
தனது உயிராகவும், உடலாகவும் ஒன்றிணைந்த தலைவனோடு
மனமகிழ்ந்து ஆனந்த தாண்டவம் ஆடும் அன்னையே! இருநாழிகை
தானியம் பெற்று, முப்பத்திரு நல்லறம் புரியும் காமாட்சி அம்மையே!
ஆற்றும் செயலில் மூத்தவளே! அழிவேயில்லாத அறப்பெரும் தலைவியே!
ஆணவச்சினம் கொண்டு, அடாத செயல் பல புரிந்தும், அறவழி மறுத்தும்,
தேவர்களைச் சிறையில் அடைத்தும் தீய செயல் புரியும் சூரபன்மாதி
அரக்கர்களை அழித்திடப் போர்தொடுக்கும் முருகனுக்கு, தந்தை
சொல்லைத் தாரகமாகக் கொண்டு, செந்திப்பதியிலே படையோடு
புறப்பட இருக்கும் தேவசேனாதிபதிக்கு, சிவத்வம் வாய்ந்த குகமூர்த்திக்கு
நல்லருள் புரிவாய்! வெற்றிச் செல்வியே! வெற்றி பெற ஆசிகள் வழங்குவாய்!
விளக்கம்...
மகிடம் == எருமை; மகிடாசுரன்
மலையரி அழி === மலை = கிரௌஞ்சமலை = தாரகாசுரன்
அரி = சிங்கமுகாசுரன் ( சூரனது தம்பியர்கள் )
திருமால் வணக்கம்
.
ஒருதிருமலர் குறையுளதால் பெருமகனையே
கருங்கண்ணதால் அருச்சனைபுரி கருமுகிலனே!
நறுமண,குண நலமகள்இணை நலம்பலவருள்
நவநிதிக்கடல் உறைபவ! பரவுதுமே. 7
வேலாளன் விண்ணோரின் போராளன்
வீணவா பேணரக்கர் வீழ்ந்திடவே
சீலதேவர் சிறைமீட்கச் செந்தூரில்
செயப்போரைத் தொடங்கிட்டான்; வாழ்த்திடுக. 8
பொருள்
ஆயிரம் மலர்கொண்டு, சிவபெருமானை வணங்கி, ஆயிரம் நாமங்கள்
சொல்லி, அருச்சனை செய்த நேரத்தில், ஒரு மலர் குறைந்திட, ஆயிரமாவது
நாம அர்ச்சனைக்குத் தனது தாமரைபோன்ற கண்ணையே மலராக்கி
அர்ச்சனை செய்து, பூஜை முடித்தவன் திருமால். அதனால் மகிழ்ந்த
சிவபெருமான் நாரணனுக்குச் சக்ராயுதத்தையே அருளாக வழங்கினார்;
நறுமணங்களும், நல்லகுணங்களும் நலமருளும் கருணையும் கொண்ட
இலக்குமியின் இனிய கணவனே! தன்னை வணங்கும் அடியவர்களுக்கு
நன்மைகளை அருள்பவனே! ஒன்பது வகையான நித்தியங்களையும்
தன்னகத்தே கொண்டு விளங்கும், பாற்கடலில் பள்ளி கொண்டவனே!
உமது திருவடிகளைப் போற்றுகின்றோம்.
நான்முகன்
முகம்நான்கும் முதுவேதம் ;
முதுஞானத் துணைவாணி ,
அகம்காண அணிபுகழே.
அரும்பூவோன் அடிபணிவோம். 9
குறிஞ்சிநின்று வயல்கண்டான் ;
குணமுல்லைக் குலம்தொட்டான்;
வறியபாலை அரக்கர்க்கே,
வாழ்நெய்தல் வாழ்கவென்றே . 10
இருக்கு,யஜுஸ்,சாம, அதர்வ என்னும் பழமை மிக்க வேதங்களே
நான்கு முகமாகக் கொண்டவன்; ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
நன்கறிந்த ஞானத்தலைவி சரஸ்வதி தேவியைத் துணையாகக்
கொண்டவன்; இருஞான முதுமைத் தலைவர்களும் இணைந்து
சத்யலோகம் மிகுந்த புகழோடு விளங்குவது. தாமரை மலரில்
அமர்ந்துள்ள நான்முகனைப் பணிந்து போற்றுகிறோம்.
குறிஞ்சிக்கடவுள் முருகன். முதல்நிலம் குறிஞ்சி. குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாம்" என்பர். அவ்வழி. அங்கு
நின்று அருள்பாலித்து உலகைக் காப்பவன், வழிந்தோடும் காவிரி;
வளமான விளைச்சல் கொண்ட மருதநில வயல்கள்; முருகனின்
கண் பார்வையிலே வளத்தைப் பெறுகின்றன. மருத நிலப்பார்வை
அப்படியே முல்லையில் அருளைப்பொழிகிறது; வள்ளிமலை சார்ந்த
முல்லைநிலப்பகுதியிலே மலர்ந்த வள்ளி எனும் முல்லை மலர்;
அதன் தவமும், அழகும் முருகனைத் தன்வயப்படுத்த, மலைவேடனாகி
முல்லை மலரைச் சூட்டிக்கொள்கிறான்; வேடுவர் குலமும் முருகனது
கண் நோக்கத்தால் பேறும் ,பெருமையும் பெறுகிறது. வறண்ட
மனம், வற்றிய அன்புநெறி; சுடுமணல் செயலாக்கம், பாலைநிலத்தே
கண்ட அரக்கர்களின் தீய குணம் மாற்ற நெய்தல் நிலமாம் திருச்
செந்தூரிலிருந்து புறப்பட்ட மாமுருகன் படை அரக்கர்களை அழிக்கிறது.
நான்கு நிலத்திலும் கால் பதித்து மற்றொரு நிலமாம் பாலையில்
கொடுமை அழித்த மாமுருகன்; அவனை,அவனது போர்த்திறனை
வாழ்க வாழ்க என்ற வாழ்த்தவேண்டும்" என நான்முகனை வாழ்த்தி
வேண்டுகிறோம்.
விளக்கம்...........
சூரபதுமனை முருகப்பெருமான் அழித்து, அன்பு காட்டியது
எத்தனையோ யுகத்திற்கு முன்பு. அதனை மனக்கண் முன்பு
கொணர்ந்து அவர் பெருமையைப் பேசும் நிகழ்வு இது. இதில்
நடந்தவை,நடக்கின்றவை நடக்கப்போவன முன்னும்,பின்னும் வரக்
கூடும்; பக்தி, பெருமை, புண்ணியம் கருதி ஆய்வு தவிர்க்க.
பைரவ வணக்கம் .
சுருள்முடிபுரள் இருளுடலெழில்
கரியுரியதள் கலைக்கஞ்சுகம்
குறைசுரர்படு கொலைக்களத்தலை
மறைநிறைகுண வயிரவவாழ். 11
பெருந்தவத்தினால் அருள்பொழிகரத்
தொருசுடர்வேல் அளித்ததன்பயன்
திருச்சிவன்பணி முடித்திடமுனை
குருகுகன்படை சயமடைகென . 12
பொருள்
போருக்கும்,போர்க்களத்திற்கும் தலைவர் பைரவர் ஆவார்.
தக்கனது யாகத்தில் அனைவரையும் வெட்டி வீழ்த்திய வீரபத்திரர்
போன்றவர், அவரை அரக்கர்கள் மீது படையெடுக்கும் சுப்பிரமணியரை
வாழ்த்துமாறு வேண்டுதல்.
சிவனின் அம்சமான வயிரவர் சுருண்ட கருமையான முடி புரள்கின்ற
தலையை உடையவர்; அழகே உருவான அவரது மேனி இருள் போலக்
கருநிறம் கொண்டு விளங்கும்.
தண்டகாரண்ய முனிவர்களால் தன்னைக் கொன்று விழுங்குமாறு
ஏவப்பட்ட கருமையும், கடுமையும் வாய்ந்த யானையை வீழ்த்தி, அதன்
உடலை இரண்டாகக் கிழித்துத் தோலை உரித்து, அதனை அழகே
உருவான மேற்சட்டையாக அணிந்து திகழ்பவர்.
சிவபெருமானை அவமானப் படுத்துவதற்காகவே அவரை அழைக்காமல்,
அவருக்குத் தரவேண்டிய ஹவிர்பாகங்களை வழங்காமலும் , தக்கன்
செய்த யாகத்தைத் தடுத்து, நிறுத்தமுடியாமல், ஹோமகுண்டத்தில்
வீழ்ந்து மாள்கிறாள் தக்கன் மகள் தாட்சாயணி . தன்மனையாள் பட்ட
அவமானத்தால் வெகுண்ட சிவபெருமான், வீரபத்திரரை, அனுப்பி,
தக்கனைச்சம்ஹாரம் செய்யக்கட்டளை இடுகிறார். அதில் கலந்துகொண்ட
சிவாபசாரம் செய்த தேவர்களையும் அழிக்க ஆணை இடுகிறார்;
குறை அறிவால் குறையுடையவனைச் சேர்ந்து உடல் குறைபட்ட தேவர்கள்.
பார்வதி தேவியின் வேண்டுகோளால் பிழைக்கின்றனர். ஆனாலும்
சிவாபராதம் செய்ததால் அரக்கனாகிய சூரபன்மனிடம் சிக்கித்
தவிக்கின்றனர். அந்தக் கொலைக்களத்திலே தலைமை ஏற்று வெற்றி
கண்ட வர் பயிரவர் .ஆவார்.
மறைகள் எல்லாம் நிறைந்த மஹா தக்ஷிணா மூர்த்தியும் அவரே.
அந்தச் சிறப்புமிக்க வயிரவரை வணங்குகிறோம். போற்றுகிறோம்.
உமையம்மை நீண்டகாலம் தவம் புரிந்தார். அரக்கர்களை அழிக்க
அயராது தவம் செய்தார். அதன்பயனாய்க் கிடைத்தது அருமை
வேலாயுதம்.கருணையும், அன்பும் கொண்ட அவர் கரத்திலே இருந்த வேலை
ஒளிமிகுந்த அவ்வேலை அரக்கர்களை அழிக்கப்புறப்பட்ட முருகனிடம்
அருளோடு அளித்தார்;
சிவபெருமானோ தேவர்களின் துயர் தீர்க்க, அரக்கர்களை அழிக்குமாறு
முருகனுக்கு அன்புக்கட்டளை இட்டார்.தந்தை அளித்த பணி ; தாய் தந்த
வேல்; இரண்டும் சுமந்த முருகன் அரக்கர்களோடு போருக்குப்
புறப்படுகிறார். அவரை வெற்றியடையுமாறு வாழ்த்திக் காக்க" என்று
வேண்டி நாம் வயிரவரை வணங்கிப் போற்றுகிறோம்.
இடும்பன் வணக்கம்
காவடிக்கரம்; சேவடிமனம்;
தாவிடுபணி; நாவொலிகுகம் ;
தூவடித்துணை; பூவிதழருள்;
கா,இடும்பனைக் கரம்குவிப்போம். 13.
ஆலடிச்சிவன் சீலமாம்மகன்
ஆலவிடமாம் ஆணவத்தவர்
பாலனெனவே பழித்தகுலம்
கூலமாகிட நாளுமருள் . 14.
பொருள்
முருகனையே முதல்வனாகக் கொண்டு, முருகன் புகழ் பாடும்,
இடும்பமூர்த்தி, காவடி ஏந்திய தோள் ; அபிஷேகப் பாலும், பிறவும்
கொண்ட காவடி அது. எப்பொழுதும் முருகன் சேவடியைப் போற்றும்
மனத்தையயும் கொண்டவர். பூ பறித்தல், மாலை கட்டல்; கோயில் கூட்டல்,
மெழுகல் என்னும் பணிகளைத் தாவித்தாவி ஆற்றும் அடிமைப்பணி;
நாளும் மறவாமல் உரைத்துக் கொண்டே இருக்கும் முருக நாமம்.
தூய்மை வாய்ந்த முருகன் சேவடியே என்றும் துணையாகக் கொண்டவர்;
முருகனின் மலர்போன்ற செவ்வாய், இதழ் போன்ற உதடுகள் அங்கு
உதிக்கும் அருட்சொல்லை என்றும் பெற்றவர்; காக்கும் கடவுளாய்
விளங்கும் இடும்ப னை இருகரம் குவித்து வணங்குவோம்.
ஆலமரத்தடி அமர்ந்து அறம் புகட்டும் ஆசான் சிவபெருமான்.
அவரது நெற்றிப்பொறியில் அவதரித்த நற்பண்பு நலமகனை,
ஆலகால விடம்போன்று, ஆணவமும் கொண்டு, விளங்கும், தீய
சூரபன்மாதி அரக்கர்கள் பாலன்" எனவும், போராற்ற ஆற்றல்
இல்லாதவன் என்றும் பழிதூற்றிய குலத்தவர்கள் நடைபெறும் போரிலே
அழிந்திட, குப்பையாய்ப் புழுதியாய் அழிந்திட எம்பெருமானுக்கு
அருகில் நின்று காத்து, அவரை வெற்றி அடைய உன்பணி ஆற்று,
என,வேண்டி வணங்குகிறோம்.
வள்ளி தேவயானை வணக்கம்.
மலர்த்தாழை மதிக்கூழை
கனிவாழை நிதிப்பேழை
மொழியாழே முகம்பூழே ; 15
குகை இணையே போற்றுகின்றோம்.
தவத்தாலே சுவர்க்கப்பதி
நவமகளாய் நலவேடர்
தவமகளாய் அருகுற்றே,
சிவயோகம் காத்தருள்க. 16
பொருள்
தாழைமலர் போன்ற நறுமணமும், வளைந்த மூன்றாம்பிறையைப்போன்ற
நெற்றியும், வாழைப்பழம் போன்ற, சுவை,மென்மை , இளகிய மனமும் ,
கொண்டவர்களே! சங்க பதும நிதிகள் நிறைந்திருக்கும் பெட்டி போன்று,
செல்வக்குவியல்களான அன்பு,கருணை, இரக்கம், ஆகியவற்றை
அடியவர்களுக்கு வரையாது வழங்கும் உள்ளம் கொண்டவர்களே!
வீணைபோல் இனிய பேச்சுடையவர்களே! பூளைப்பூ போன்று அழகே
உருவான கருணை முகம் கொண்டவர்களே! முருகனின்
மனைவிமார்கள் ஆகி இருபுறமும் காட்சி தருபவர்களே! வள்ளி தேவயானை
அம்மையர்களே! உங்களை வணங்கிப் போற்றுகின்றோம்.
இருவரும் ஆற்றிய தவ மேன்மையால் இந்திரனுக்கு
மகளாக அவதரித்து, முருகப் பெருமானுக்குப் போர்ப்பரிசாக,
மனையாளாக அமையும் தேவ்யானைத்தாயே! வேடர்குலத்திலே
அவதரித்து, முருகனின் காதலுக்குப் பாத்திரமாகி,மணந்து,
மனையாளாக அமையும் வள்ளிப்பிராட்டியாரே! சிவயோகத் தன்மை
மிகுந்த மாமுருகன் அரக்கர்களை அழிக்கும் போரிலே அருகே
வீர சக்தி களாக நின்று அவரைக் காக்க வேண்டும்" என
வணங்குகிறோம்
சப்த மாதர் வணக்கம்
எழுகூற்று இருக்கையர்
ஏந்தலிள கியமனத்தார்
விழுவெற்றிக் குடையுடையோர்;
வியன்பாதம் தயவடைந்தோம். 17
மழுமழுங்கி, மலர்தயங்கி,
மனுசக்கரம் மாவஜ்ரம்
பழுதாகும் பேரரக்கன்
புழுவாக்கிய வேல்காக்கவே. 18
பொருள்
மாறுபட்ட ஏழு உருவங்கள்; தீமைகளை அழிப்பதில் கூற்றுவன்
போன்ற வாகனங்களைக் கொடிகளைக் கொண்டவர்கள்;
அழகும் அருளும் இணைந்த தூய, கருணை மனம் கொண்டவர்கள்;
அரக்கர்களை அழித்தும், தேவர்களைக் காத்தும் ஆற்றும் போரிலே
வெற்றிக்குடை கொண்டவர்கள்; அந்த சப்த மாதர்களின் சேவடிகளை
வணங்குகிறோம்.
அளித்த வரத்தால் அழிக்கத் தயங்கினார் சிவபெருமான்;
தானே படைத்துத் தானே உயரிய வரங்களை வழங்கிய பிரமனோ
தயங்கி நின்றார்; நீதி காக்கும் சக்கரம் கொண்டவன் திருமால்.
அவனோ அரக்கன் தம்பியான தாரகனிடம் சக்கரப்படை இழந்து
தவித்தான்; வஜ்ரம் என்னும் கூராயுதம் கொண்ட இந்திரனோ
அஞ்சி ஓடிக் காட்டில் ஒளிந்துகொண்டான்; இப்படி வலம்
மிக்கவர்களை எல்லாம் தூசாக்கி, அறத்தின் மாசாய் விளங்கும்
பேரரக்கனைத் தன்காலடியில் விழவைத்த வேலேந்திய முருகக்
கடவுளை, வாழ்த்தி, அவராற்றும் போரிலே அவரோடு இணைந்து
நின்று, காத்திடுக" என வேண்டி ஏழு மாதர்களை வணங்குகிறோம்.
வாழ்க வையகம்
வேண்டிநின்ற வரங்களெல்லாம்
வேலனெனவே வந்துநிற்கும்.
கூண்டுசிறை பாவவினைகள்
கூட்டமுடன் மாண்டுபோகும். 19
பூண்டகோலம் போர்க்கோலம்
புவனத்தைக் காத்துநிற்கும்;
ஆண்டவனாம் ஆறுமுகன்
அருங்கருணை காத்திடுமே. 20.
பொருள்
வேலா! முருகா! என்று போற்றி வணங்கினால் மனமுருக வேண்டினால்
விரும்பும் அனைத்தையும் வாரி வழங்குபவன் முருகன் ஆவான்;
குமரனைக் கும்பிட்டால் நம்மைத் துன்புறுத்தும் பிறவிப்பிணி நீங்கும்;
ஆணவம்,கன்மம்,மாயை யாவும் நம்மைவிட்டு அகலும்.
சூரபன்மனை அழிக்கவே எடுத்துள்ள போர்க்கோலம் தீமையை அகற்றி,
மூவேழ் உலகங்களையும் காத்துநிற்கும். ஆண்டவனாகிய ஆறுமுகக்
கடவுளை வாழ்த்திப்போற்றினால், அவரது கருணை நிறைந்த அன்பு
நம்மையும் , நாம் வாழும் உலகையும் காத்துநிற்கும்.
கடை திறப்பு
மகேந்திரபுரம் சென்று, அரக்கர்களை அழித்த முருகப்பெருமானின்
படைகள் வெற்றிவாகை சூடிச் செந்திப்பதி திரும்புகின்றன. நகரமாந்தர்
மகிழ்வோடு ஆரவார வரவேற்பு அளிக்கின்றனர்; வெற்றிக் களிப்போடு
வரும் வீரர்களை,அவர்தம் காதலியர், மனைவியர் ஊடல் கொண்டு
தத்தம் வீட்டுக் கதவங்களைத் தாழிட்டுவிடுகின்றனர். காதல்
மனத்தோடு ஏங்கிய படை வீரர்கள் அவரவர் வீட்டு வாயிலின்முன்
நின்றபடிக் கதவம் திறக்க வேண்டுகின்றனர். பழைய நினைவுகளை
எடுத்துக் கூறிக் காதல் மொழிபேசிக் கதவு திறக்கவேண்டுவது.
அழகுடையீர்! தாள் திறவும்
தொடர்போரின் அடர் முலையீர்!
தொடர்போரால் சினந்தீரோ? 21
இடரிடையீர்! இளங்குருத்தீர்!
மடல் கதவம் திறப்பீரே! 22.
பொருள்
நானே அழகு; நானே வளம்; நானே இளமை, என இரண்டு
மார்பகங்களும், ஒன்றோடொன்று இடித்தும், எதிர்த்தும், விடாது
போர் புரிகின்ற அடர்ந்த அழகு முலைகளை உடைய காதலியரே!
உம்மை மறந்து தொடர்ந்து நடந்த மகேந்திரபுரப் போரிலே
கலந்துகொண்டு காலம் தாழ்த்தி வந்ததால் சினம் கொண்டீரோ?
மாமுருகன் கூடச்சென்று போராற்றியதால் சினம் தனிவீராக.
( சினந்தீரோ? = கோபம் கொண்டீரோ? என்றவினாவும். சினம்+தீரோ
சினம் தவிர்ப்பீர்! என்ற இருபொருளும் அமைந்துள்ளது.)
காட்சியும், நினைவும் துன்பம் நல்கும் ஒடி இடை உடைய கன்னியரே!
இளம்வாழைக் குருத்துபோன்ற மென்மையும், குளிர்வெப்பம் கலந்த
அழகும் கொண்டவர்களே! உங்களைக் காண ஓடோடி வந்து, உங்கள்
வீட்டுமுன் நிற்கம் எங்கள் காதல் மனத்தை ஏற்க, வரைந்து வந்து
கதவைத் திறப்பீர்களாக"! என்று வேண்டுகிறார்கள் இளம் வீரர்கள்.
நோவகலத் தாள் அகல்க !
அறுபடையான் படைவீரன்,
அறம்வளர்க்கப் போரிட்டேன்; 23
கரும்படையான் படைவீச்சில்
நோகலாமோ? தாள்திறப்பீர்! 24
பொருள்
ஆறு படை வீடுகளைக் கொண்டவன்; அரக்கர்களின் படைகளை
அறுத்து ஒடுக்கியவன்' மாமுருகனின் படை வீரர்களில் ஒருவனான நான்
அரக்கர்களை அழிக்கும் அறப்போரில் போரிட்டேன்; வெற்றியோடு
நகர் திரும்பிய நான். காதலியாகிய உன்னைக் காணக் காதல்
மனத் தோடு வந்தேன்; அந்தோ! நீயோ கதவைத் தாழிட்டுவிட்டாய்.
கரும்பெனும் வில் படை கொண்ட மன்மதன் என்னைத் துன்புறுத்துகிறான்;
காதல்பிரிவில் நான் வாடலாமோ? வாயிற்கதவைத் திறந்திடுவாய்! என்று
கெஞ்சுகிறான்.
வில்லோ!வேலோ!
வேல்தொட்டேன்: வேடனானேன்;
வில்தொட்டேன்: வீரனானேன்; 25
வேல்வில்தொடு மனத்தினுள்
விரகமோ? தாள் திறவாய்! 26
பொருள்
அரக்கர்களை அழிக்கப் புறப்பட்ட மாமுருகன் படையிலே சேர்ந்து,
வேல்முருகன் வணங்கி, வேலெடுத்துப் போர் புரிந்தேன்; வேடனாய்
நின்ற வேலவனின் அருளில் திகழ்ந்தேன்.
அரக்கர் அழி போரிலே வில்லேந்திப் போராற்றினேன்; முருகன்
படை வீரன் ஆனேன்.
வெற்றியோடு இங்குவந்து நிற்கிறேன்; வேல்போன்ற உன் கண்ணையும்,
வில்போன்ற உன் புருவநெற்றியையும், மனத்தாலும் மேனியாலும்
தொட்ட நான், வெளியே காதல் எண்ணத்தில் நிற்கிறேன்; விரகதாபம்
என்னை வாட்டுகிறது. வேல் வில் தொட்ட வீரன், வேல்வில் சுவைத்த
காதலன் பிரிவால் வாடலாமோ? மனமிரங்கிக் கதவம் திறப்பாய்!
மனக்கதவைத் திறந்து மாலை சூட்டுவாய்! என்று கெஞ்சுகிறான்.
லலிதசித்திரமே !
லலிதசித்ரம் : லிகிதநேத்ரம் :
லலாடகாத்ரம்; டமருகஇடை ; 27
கலிக்குணமனம்; நிலைகொண்டீர்!
வளைக்கரத்தால் நிலை திறப்பீர் ! 28
பொருள்
அழகிய ஓவியமே! தீட்டப்பட்ட ஓவியக்கண்ணே! அழகு முழுதும்
தொகுக்கப்பட்ட நெற்றியே! டமருகம் போன்று ஒடுங்கிய இடையே!
விடாப்பிடியாய்ப் பற்றித் துன்புறுத்தும் சனிபகவான் போன்றே,
தாமதத்தை மட்டுமே பற்றிக்கொண்டு, படுத்தும் குணமுடைய மனமே!
இவைகளை எல்லாம் கொண்டு சினந்த உள்ளம் கொண்டவர்களே!
அணைக்கும் அழகுக் கரத்தில் அணிவளை அணிந்த தேவதைகளே!
வாயில் கதவைத் திறவுங்கள்! என்று கெஞ்சுகிறான்.
கனிக்கூழே!
கரந்தொட்ட காலத்தினில்
கனியாகிக் கூழானீர் ! 29
வரம் வேண்டி நிற்கின்றோம்;
வாயில் தாள் நீக்கிடுக. 30
பொருள்
மாலை வேளையில். சோலை அழகிடையே அணைத்து நான் மகிழ்ந்தேன்;
என் கரம் பட்டதும், துவண்டீர்; குழைந்தீர்; மதி மறந்தீர்; மனமுருகிக்
கூழாகி ,கலவியில் கலந்தீர்;
இன்றோ உமது வாய் தரும் அமுதம் வேண்டி, வாருங்கள்! என
அழைக்கும் உமது வரம் வேண்டி வாயிலில் நிற்கின்றோம்.
வாயில் கதவை அடைத்திட்ட தாழ்ப்பாளைத் திறந்திடுவீர்!
இன்ப வாயில் திறவுங்கள்! என்று வேண்டுகிறான் .
உருகுரை கேளீர்!
முருகுவேல் முடக்கரக்கர்,
முருகுவேல் முடக்கியமன் ; 31
உருகுரை உணர்வீர்!
திருக்கதவம் திறப்பீர்! 32
பொருள்
அழகானது; அரும் வீரமானது; ஆறுமுக வேலவனின் வேற்படை ;
நன்மைகளைத் தடுத்த அரக்கர்களை அழித்தது அவ்வேல் ;
முருகனின் வேலாயுதத்தால் வீழ்ந்தனரே வீணரக்கர் .
வேற்படை போற்றிப் பின்சென்று, அப்படையில் அரும்போர்
புரிந்த அற்புதங்களை உரைக்கிறேன் கேளுங்கள்;கேட்டு, முருகன்
புகழ் பாடிய போரை உணருங்கள்; உங்கள் சினம் தவிர்த்து,
வாயிற்கதவத்தைத் திறப்பீர்களாக" என்று கெஞ்சுகிறான்.
மற்றொரு பொருள்
அழகே உருவான வேல் போன்ற கண்களினால், எங்களை முடக்கும்
கரம் கொண்டவர்களே!
கடுமையும், கொடுமையும் வாய்ந்த கூர்மையான வேல் போன்ற
கண்களினாலே எங்களை வீழ்த்துவதில், கூற்றுவன் போன்றவர்களே!
எங்களது கெஞ்சல் கலந்த பேச்சைக் கேளுங்கள்! போருக்குச்
சென்ற உண்மையை உணருங்கள்! மனம் மாறிச் சினம் தவிர்த்து,
அடைத்த கதவின் தாழ்ப்பாளைத் திறவுங்கள்! என்று கெஞ்சுகிறான்.
விளக்கம். முடக்கு + அரக்கர் என்றும், முட+ கரக்கர் என்றும் கொள்க.
முடக்கிய+ மன் (அசை ) என்றும், முடக்கு+ இயமன் என்றும் கொள்க.
இடரிலும் இனிப்போ!
நுனிமுலைக் கனிகசி
பனியிடர் இனிப்பீர் ! 33
தனித்தவம் துறப்பீர் !
அணித்தாழ் இனிஏனோ ? 34
பொருள்
காதல் மயக்கத்தில் உங்களை அனைத்து மகிழும் காலை,
மெல்ல,மெல்ல முலைநுனியைத் திருகும் பொழுது, அக்கனியிலே
கசியும் குளிர்மை கொண்ட கனித் திவலை இனிக்கும் நேரத்தில்
நெருடும் அவ்விடரை ஆனந்தத்தோடு சுவைப்பீர்!
இன்றோ, வீட்டிற்குள் தனியே அமர்ந்து தவம் புரிகின்றீரோ? அத்தவத்தை
நீக்குவீர்! நமக்கிடையே இனி தடுப்பும் தேவை தானோ! கதவு
திறவீர் ! என்று கெஞ்சுகிறான்.
சுவர்க்க வழி
இருமலை நடுப்பாதை ,
இனியமென்முடி தொடுதொப்புள் 35
கருநாகப் பெரும்போகச்
சிறுதோகை ! சீற்றம்தவிர்! 36
பொருள்
பஞ்சணையில் மல்லாந்து படுத்திருக்கும் போது ,பக்கத்தே
அமர்ந்துள்ள என் விழிகள், பார்த்ததால் பரவசம் அடைந்த அந்த
இரண்டு மலையன்ன கனிகள் விம்ம, மகிழ்ந்து அவை இரண்டும்
எனக்கொரு பரிசாக, இனிய ஊர் செல்லும் பாதையாக மெல்லவே
அமிழ்ந்து ஒரு வழி காட்ட, மெல்லிய கோடு போல, உதர விதானத்தில்
நழுவலும் , தங்க மென்னிறமும் கொண்ட அழகிளம் முடிகள், முதல்சுவர்க்க,
நடுத் தொப்புளைத் தொட்டபடி, வட்டவடிவாகச் சுற்றியபடிக்
கிணற்றுள் படுத்துள்ள படமெடுத்துக் காட்சி தரும் நாகத்தின்
சாயல் கொண்ட சுவர்க்க போகம் காட்டும் மயிலன்ன மலர்மகளே !
சீற்றமாம் சினம் தவிர்த்துக் கதவு திறப்பாய்!, என வேண்டுகிறான்.
இகபோக சுகமே!
குகஞானம் அகம்நிறைந்து
குகப்படையின் தகவானேன்; 37
இகபோக சுகஞானி
குகவாணை குடில் திற ! 38
பொருள்
ஆட்கொள்ளும் ஆண்டவன் அளித்த போகபோக்யங்களை அனுபவித்து,
அவற்றின்மீதுள்ள பாசஉணர்வுகளை அறவே நீக்கிவிட்டு, முக்தி வேண்டி,
இறையனுபவத்தை நாடவேண்டும்," என்பது குகன் காட்டும் வழி ஆகும்.
அதன் படி அவன்தாள் போற்றிட, அவனருகே நின்று பணியாற்றிட
நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரக்கர் அழி போரிலே மனமெல்லாம்
மகிழ்வு பொங்கப் போர்ப்படையிலே இணைந்தேன்; அதில் சேர்ந்ததால்
அறவழி போர் மாற்றியதால் தகவும் தன்மையும் பெற்றேன்;
பற்றற்ற நிலையிலே தேவசேனாவையும், பற்றுற்றுக் காதலிலே
திளைத்து, வள்ளிப்பிராட்டியையும் மணந்து இல்வாழ்வின் தத்துவத்தை
உலகிற்கு, எடுத்துக்காட்டிய ஞான மாமுருகன் அவன்; அவன் படையில்
பணிபுரிந்ததால் இகபோக சுகத்தை இழப்பேனோ? கல்யாண சுந்தர
முருகன் ஆணை! குடிலின் கதவைத் திறப்பாய்! என்று, முழக்கமிட்டு
ஆணை பிறப்பித்தான். ஒருவீரன்.
தடை ஏனோ ?
கருவூரிலே கடுங்குளிர்; 39. கனியூரில் கவிச்சுவை;
கலையூரில் அலைமனம்;
கவாடத் தடைஏனோ ? 40.
பொருள்
கருநிறமும் கருதோன்றும் பகுதியும் ஆன , இன்ப ஊற்றிலே
கடுங்குளிரைப் போக்கிக் கொள்ளலாம் . கோவைக்கனி போன்ற
செவ்விதழ்களிலே கவிதைச் சுவை தரும் இன்பத்தைப் பெறலாம் .
கண்கள் , மெல்லிடை , போன்ற அழகுக் கலை அங்கங்களிலே
அலைபாயும் மனத்தை அடகு வைக்கலாம். இப்படி இன்ப ஊருக்கு
வழிகாட்டும் வனிதையர்களே ! வாயிற்கதவைத் தாழிட்டதும் ஏனோ ?
மனம் குளிர்ந்து கதவு திறவுங்கள் , என்று வேண்டுகிறான்.
கடை திறப்பீர் !
தொடர்போரின் அடர்முலையீர் !
தொடர்போரால் சினந்தீரோ ? 41.
இடர் இடையீர் ! இளங்குருத்தீர் !
மடற் கதவம் திறப்பீரே ! 42
பொருள்
ஒன்றோடொன்று ,இடித்து , இடித்துப் போர்புரியும் , பருத்த அடர்த்தியான
முலைகளை உடையவர்களே ! உங்களோடு இன்பம் துய்க்காமல் நீண்ட
காலமாக போர்ப் படைக்களத்திலே போராற்றிய காரணத்தால் சினம் கொண்டு
வரவேற்காமல் சினத்தால் கதவைத் தாளிட்டீரோ ?
எம்போன்றோருக்குத் துன்பம் தருகின்ற செவ்விடை உடையவர்களே !
இளம் வாழைக்குருத்து போன்ற ,மென்மையும் ,குளிர்வும் உழ்ணமும்
சீராகக் கொண்ட தொடையை உடையவர்களே ! வாயிற்கதவு திறந்து
இன்பத்திற்கு வழி காட்டுங்கள் ! என வேண்டுகிறான்.
மற்றொரு பொருள்
அரக்கர்களை அழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்றே ,
உமது பருத்த முலைகளும் துன்பத்தை அழிக்கப் போரிடுகின்றன;
எங்களது அறவழிப் போரால் , முருகன் தொடர்ந்த போரால் சினந்த
அரக்கர் கூட்டம் செயலிழந்து ஒடுங்கின . அதனை அறியாத நீங்களோ
எம்மீது வீணே சினம் கொண்டுள்ளீர் !
இடரை உணராத இடையீடு உணராத , வளராத குருத்து போன்ற
மடமை கொண்டவரே ! மனக்கதவைத் தாழ் இடாதீர்கள் ! கதவம் திறந்து
முருகனை மனம் கொள்ளுங்கள் ! என வேண்டுகிறான்.
மணிக்கதவம் திறப்பீர் !
தொட்ட காலை துவண்டுநின்றீர் ! தொடாதகால் மருண்டுநின்றீர் !
பட்டுமேனிப் பரவசத்தால் மட்டில்லா மகிழ்வுற்றீர் ! 43.
வட்டெறியும் வளைத்தோள்கள் வளையத்துள் வலம்வந்தீர் !
மட்டுமென்ன மனக்கோபம் ? மணிக்கதவம் திரைவீரே ! 44.
பொருள்
ஏகாந்த நேரத்தில் ,இனிமைப் பொழுதினில் மென்மையாகக் காதலன்
தொட்ட பொழுது , இன்பத்திலே திளைத்துத் துவள்பவரே ! காதலன் சற்றே
விலகித் தொடாமல் நின்றான் எனில் , பிரிந்து விடுவானோ ? என்றஞ்சி
மருண்டு நிற்பவரே ! மீண்டும் அவன் அணைத்த பொழுது ,பட்டுபோன்ற
மேனி முழுவதும் , மயிர்கூச்செறிய அளவில்லா ஆனந்தம் அடைபவரே !
போரிலே வீரப் படைக்கலன்களை எறிந்து வன்மை கொண்டும் ,
வீரவளை அணிந்தும் விளங்கும் காதலனது கரங்கள் அணைத்தபொழுது
பேரின்பத்தில் திளைப்பவரே ! மேலும் ,மேலும் மனக்கோபம் கொள்வது ஏன் ?
மணவாளனோடு மகிழ்ந்துறவாட மாளிகைக் கதவு தனைத்
திறப்பீர்களாக ! என்று வேண்டுகிறான் .
முருகனது முதுபோர்
இரவெல்லாம் இனியபோரில் இதமாகி வெற்றியுற்றீர் !
சரமெல்லாம் சரிந்துபோய்ச் சரசத்தில் சார்வுற்றீர் ! 45.
முரசுதானை முருகனவன் முதுபோரை நினையீரோ ?
அரசனவன் அறநெறியை அறியீரோ ? தாள்திறவீர் ! 46.
பொருள்
காதலனுடன் இரவு முழுவதும் நடத்தும் இனிமை மிகுந்த இன்பப்
போரினிலே அன்பும், ஆதரவும் காட்டி ,மிக்க இன்பச்சுவை ,ஊட்டி வெற்றி
பெற்ற படைக்களப் பதுமையீர் ! அவ்விரவுச் சரசத்தில் ,தலைக்கூந்தல்
எல்லாம் சரிந்தும் , வாடியும் போகுமாறு ,சல்லாபத்தில் சார்ந்து ,சோர்ந்த
பெண்களே !
வெற்றிமுரசம் ,கொட்டி நால்வகைப் படைகளுடன் மகேந்திரபுரி சென்று
அரக்கர்களை அழித்த மாமுருகன் மாப்போரை மனதில் கொள்ள
மாட்டீரோ ? அரசனாகிப் படைத்தலைவனாகி , ஆள்கின்ற இறைவனுமாகிய
முருகனது போர்க்களத்திலே பங்குற்ற வீரர்கள் அல்லவா நாங்கள் !
இதனை நன்கறிந்தவர்களே ! நாளெல்லாம் கோபம் ஏன் ?
அறநெறி காக்கப் போரிட்ட எங்களை அன்போடும், கனிவோடும் வரவேற்கக்
கதவு திறப்பீர் ! என்று வேண்டுகிறான்.
சுவர்க்கக் கதவு திறமின் !
படைபடுவ பலர்புகழ்உரம் ;
நடைபடுவ நனி புல் ,தலை ;
உடைபடுவ யௌவனக்குமிழ் ;
இடைபடுவ எழிலணி கரம் ; 47.
மடை படுவ மதி கயல் மணி ;
தடைபடுவ தவமுனி சினம் ;
குடைகொடுவரு குளிர்க்குலமே !
கொடைதடு சுவர்க் கடைதிறமின் ! 48 .
பொருள்
காதலியீர் ! உமக்கு முன்னால் , பலரும் போற்றும் , திட மார்பும் ,வலிமை
மிக்க நால்வகைப் படைகளும் தோற்று, ஒடுங்கிவிடும் ;
மென்மையான நடைபயிலும் ,உமது பாதங்கள் நடை பயில , எமது
தலையும் ,அழகே உருவான புல்லும் பணிவை அளிக்கும் .
உமது உடைகளின் மென்மையான ஸ்பர்சத்தால் யௌவனம் கூறும்
தொப்புளும் ,பிறவும் மயங்கி மகிழும்
உமது இடையோ அழகே உருவான ஆபரணங்களையும் , எங்களது
கைகளையும் தழுவி நிற்கும் .
நாற்றங்கால் மடைகளிலே மீன்களும் ,மணிமுத்துக்களும் ,நிழலாய்
நிலவும் உலவும் ; ( உமது உள்ளுறுப்பு மடையில் எமது அறிவும், குறுகுறுத்த
கண்களும் ,அணிந்துள்ள அணிகளும் சுற்றிச்சுற்றி நிலைத்திருக்கும் .)
உங்களின் பார்வை , வசீகரம் ,மொழி போன்றவற்றால் தவமுனிவர்களும்
தங்களது தவத்தை ,விட்டுவிட்டு ,முனிவர் கோலம் ,துறந்து சபிக்கும்
சினத்தையும் விட்டு விடுவர் .
இளமை என்னும் வெண்கொற்றக் குடை பிடித்தபடிப் பவனி செல்லும் ,
குளிர்ச்சிக் கன்னியர் கூட்டமே !
இனிய இளமை வள்ளன்மையைத் தடுக்கும் இச்சுவர் இக்கதவம்
தேவைதானா ? சுவர்போல் தடுக்கும் வாயிற்கதவைத் திறப்பீராக , என்று
வேண்டுகின்றனர் .
தடுப்பைத் தகர்க்க.
வளரிளமுலை தளிர்தவழ்நகை அலர்முகையிதழ் நிலைகுலைநடு
மலர்மதிமுகம் உலைகனலுடல் புலர்புனல் மொழி கலை மெலி கரம் , 49.
விலைமதிப்பிலா வியன்பொலிசுகம் நிலைதகுநிலா நிலவெனவுறை
தலைவியரிவர் தலைவனும்மகிழ் நிலவிடும்தினம் சிலைதடுப்புமேன் ? 50 .
பொருள்
நாளும் வளரும் நல்ல இளமை காட்டும் மார்பகங்கள் இளமை தவழும்
புன்னகை ; அப்பொழுதுதான் அலர்ந்த முல்லைமுகை போன்ற இதழ் ;
தழுவியதால் நிலைகுலைந்துபோன தொப்புள் ; புணர்வினால் மகிழ்ந்த
மதிபோன்ற சிரிப்பு முகம் ; உலைக்களத்திலே தகிக்கும் கனல் போன்ற மேனி ;
விடியற்காலை விளங்கும் குளிர்நீர் போன்று இதமான பேச்சு ;தழுவியதால்
மேலும் அழகோடு அணைக்கும் மென்கரங்கள் ; விலைமதிப்பற்ற புணர்வில்
அளித்த இன்பம் ;இவற்றையெல்லாம் வாரி வழங்கியதால் நிலைத்த முழு
நிலா வீசும் நிலவொளி போல் விளங்கும் தலைவியர் இவர்கள் , எனத்
தலைவனும் மகிழ்வில் உறைந்திடும் நாட்கள்போல் இன்றும் அமையும்
என நினைக்கும் நாளிலே மலைபோன்ற இக்கதவுத் தடுப்பும் தேவை
தானோ ? கதவைத் திறவுங்கள் ! என்று வேண்டுகிறான்.
அடைத்தல் முறையோ ?
தொங்குகனி சங்குநுனி பொங்குமுனி தங்கு நனி
எங்கு இனி ? என்றழைக்கும் வங்கப்பனி வனிதையரே ! 51.
தங்கத்திரு சங்கத்தரு சிங்கத்துரு சிவனவன்குரு
ஓங்குபடையில் அங்கிணைந்தோம்; அஃதறியா தடைக்கலாமோ ? 52.
பொருள்
நன்கு பழுத்துத் தொங்குகின்ற மாங்கனி போன்ற ,மார்பகம் ;
கூர்மை வாய்ந்த வெண்சங்கின் நுனி போன்ற ,முலைக்கூர்மை;
முனிவரின் அடக்கமுடியாத கோபம்போல் மேலெழுந்து காட்டும் சிவந்த
மார்பகத் தோற்றம் அடர்த்தியான அழகின் சான்றாகும்.
இப்படிப்பட்ட அழகைச் சுவைக்காமல் எங்கே செல்ல இயலும் ?
என்று அன்பு அழைப்பு விடுக்கும் அன்பை மறந்துவிட்டு , வங்கக்கடலலைக்
குளிர் சீற்றம்போல் சினம் கொண்ட அழகுப் பெண்களே !
தங்கத்தால் உருவான சிலைபோல அழகானவன் : மதுரைத் தமிழ்ச்சங்கம்
தோற்றுவித்த கற்பக மரம் ; சிங்கவாகனம் கொண்ட பார்வதி தேவியின்
வீர உருவம் கொண்டவன் ;மூவர்க்கும் முதலானவரான சிவப்பெருமானுக்கே
ஆசானானவன் ; அரக்கர்களை அழிக்க அவன் மேற்கொண்ட போரிலே
பங்கு பெறும் பேறு எங்களுக்குக் கிட்டியது ; அப்படைப்பணி ஆற்றுகையில்
வெற்றி பெற்றபின் இங்குவரக் காலநீட்டிப்பு ஏற்பட்டுவிட்டது ;அதற்குக்
கோபம் கொண்டு எங்களை வீட்டில் நுழையாதவாறு தடுக்கத் தாள்
போடலாமா ?செய்தி உணர்ந்து கதவு திறப்பீர்களாக , என்று வேண்டுகிறான் .
கலைமானே ! கதவம் திற !
அலைமகிழ்வு அலர்தூற்ற , வலை மீன்கள் வரியழிக்க ,
சிலையிரண்டு சிலிர்த்தெழ , சலசலவாய் முணுமுணு உரை க் 53.
கலைமானே ! கழிவிரக்கம் , கலைக்காதல் பகையாகும் .
நிலைவீழ்ந்து புலம்பியபின் ,நிலைசாத்தல் விலையாமோ ? 54.
பொருள்
சோலைகளிலும் , மலைச்சாரல் , அருவிகளிலும் காதலனோடு சுற்றித்
திரிந்த நிலை ,கண்டு ஊர்மக்களெல்லாம் குறைத்துப் பேச ,அதனால்
தாயும் ,சுற்றமும் இடித்துரைக்க ,வலையிலே சிக்கிய மீன்கள் போன்று
கண்கள் நீரைப்பொழிந்து ,இட்ட மையை எல்லாம் அழிக்க , இளமைக்கு
இனிமைக்குத் தடையா ? என்று இரண்டு மலை போன்ற மார்பகங்கள்
போருக்கு எழுவதுபோல் மேலும் உயர்ந்து எழ , எப்பொழுதும் விடாமல்
பேசிக்கொண்டே இருக்கும் வாயும் ,யாருக்கும் கேட்காதவாறு ,முணுமுணுக்க
அழகுமானே !நீ கொண்ட இத்துயர் ,இவ்வருத்தம் , காதலுக்குப் பகையல்லவா ?
நாங்களோ உங்களது ,காதலை , அன்பை ,அரவணைப்பை , வேண்டி
உங்கள் வீட்டு வாயிலின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து , மன்னிப்பு
வேண்டிப் புலம்புகின்றோம் ; இதன்பின்னும் கதவைச் சாத்தல் முறையாகுமோ ?
விலைமதிப்பில்லா உங்கள் அன்பில் மகிழ வாயிற்கதவு திறப்பீர்களாக ,
என்று வேண்டுகிறான்.
நிலையழகு நித்திலமே !
இல்லையே என்னுமிடை , உண்டெனவாம் உயிர்க்கண்கள் ,
இலை ,உண்டு , எனும்மதம் இலையாக்கிய அவதாரம் ; 55.
இலைவேல்சிலை இரண்டினால்,தலை நிலைப்புகழினைப் போற்றிடவே ,
கலைக்கதவினைத் திறந்திடுவீர் ! கனியிதழ்ச்சுவை நித்திலங்களே ! 56.
பொருள்
இல்லை இல்லவே இலை ' என்று சொல்லும்படி ஒடிந்து அழகு
கூட்டும், இடையும் , உண்டு ' என்று வாதிடும் அளவு மிகநீண்ட அளவோடு ,
உரையாற்றும் உயிர்த்துடிப்புடைய கண்களும் கொண்ட தலைவியரே !
உங்களைப்போலவே இல்லை இல்லவேயில்லை ' உண்டு உண்மையில்
உண்டு ' என்னும் மாறுபட்ட இரண்டினை த் ,(அஸ்தி ,நாஸ்தி ) தங்களது
கொள்கையாகக் ,கொண்ட சமணசமயத்தவர் தோன்றித் தமிழ்நாட்டை
வைதிகச்சைவ நெறியிலிருந்து மாற்றிட முற்படுகையில் ,அம்மதத்தை
அடியோடு அழித்து நீக்கியும் ,சைவமதத்தை நிலைநிறுத்தியும்
வளரச்செய்வதற்காக ஞானசம்பந்தர் என்ற அடியாராக அவதாரம்
செய்தவன் ; ,வேலும் வில்லும் கொண்டவன் ;இவ்விரண்டினால்
அழியாத புலழைப்பெற்றவன் ; அவனது பெருமையை ,மகேந்திரபுரத்தில் வாழும் சூரபன்மாதி அரக்கர்களை அழித்த சுப்பிரமணியக் கடவுளின்
பெருமையைப் போற்றிடவே ,பூட்டியுள்ள உங்கள் மனக்கதவத்தையும் ,
தாழ்போட்டுள்ள உங்கள் வீட்டுக் கதவையும் திறவுங்கள் ! இனிக்கும்
இதழ்ச்சுவை !உடையவர்களே !அழகுமுத்துக்களே ! கதவு திறப்பீர் !
என வேண்டுகிறான்.
மஞ்சசுகம் மற வீரே !
கொஞ்சினால் பஞ்சமென்பீர் ! கெஞ்சினால் வஞ்சமென்பீர் !
அஞ்சினால் நடிப்பென்பீர் ! மிஞ்சினால் நஞ்செடுப்பீர் ! 59.
மஞ்சசுக நினைவுற்றீர் ! துஞ்சலுமே விஞ்சிநிற்பீர் !
நெஞ்சிலுறை நினைவகற்றீர் ! நீள்கதவம் தாள்திறப்பீர் ! 60.
பொருள்
உம்மீது அன்பு கொண்டு , ,கொஞ்சவந்தால் , நாட்டினிலே பஞ்சம் ;
நமக்கெதற்கு மஞ்சம் ?எனச்சினம் கொண்டு தடுப்பீர் ; காதலை வேண்டிக்
கெஞ்சி நின்றாள் , 'உமது நடிப்பும் ,வஞ்சமும் நாம் அறியாததோ ?
என வெறுப்பீர் ; மிகுந்த அச்சத்துடன் அருகு வந்து , அன்போடு பேசினால் ,
உமது அன்பும் ,அஞ்சுவது போன்ற தோற்றமும் , நல்ல 'நடிப்பு ' என
விலகுவீர் ; உம்மையும் மிஞ்சும் அளவு ,சினம் கொண்டு நின்றால்
உமது திருவாய் நஞ்சன்ன சொற்களைக் கக்கும் ; இப்படிப்பட்ட
நீங்களோ எப்பொழுதும் மஞ்சத்து நடந்த மன்மத சுகத்தை மனதை விட்டு ,
நீக்கமாட்டீர் !தூக்கத்திலுமே இன்ப நினைவுகளை அசைபோட்டு
ஆனந்தத்தில் எங்களையும் வென்று மகிழ்வீர் ; நெஞ்சிலே நிறைந்த
காதலோடு அந்நினைவிலேயே வாழ்பவர்களே ! இன்னும் தயக்கம் ஏன் ?
பிடிவாதம் நீக்கிக் கதவைத் திறப்பீர் ! என்று வேண்டுகிறான் .
வீரவாகுவின் வெற்றி போற்றக் கதவு திறக்க .
இலங்கை ,மகேந்திரம்
வீழ்த்திய வீரவாகு
நலப்புகழ் பேசிடவே ,
நலவாயில் திறப்பீரே ! 61.
பொருள்
மாமுருகனின் தூதுச் செய்தியைச் சூரபன்மனிடம் தெரிவிக்கச் சென்ற வீரவாகு வான்வழியே செல்லும்கால் வழியில் இலங்கை குறுக்கிட்டது .
அங்கு காவல் காத்த சூரனின் படைகள் வீரவாகுவோடு போரிட்டு மடிந்தன .
வெகுண்டெழுந்த தசமுகன் என்னும் வரபலம் மிக்க அரக்கனை அழித்தபடி
மேலே பயணம் தொடங்கினார் மகேந்திரபுரியின் தெற்கு வாயிலைக் காவல்
காத்த ஆயிரம் கரங்களும் ,நூறு முகங்களும் கொண்ட சதமுகன் என்னும்
வலிமை மிக்க அரக்கனைப் போரிட்டு அழித்தார் வீரவாகு.அவரின் புகழை
,வெற்றியை நலமுற நாம் பேசிப் போற்றுவோம் .அவ்வாறு போற்றுவதற்காக ,
அடைத்துள்ள கதவைத் 'திறப்பீர்களாக ' என்று வேண்டுகிறான் .
பூரிப்பும் நேசிப்பும் போரன்றோ !
பொன்னென்றேன் பூரித்தீர் !
பொலிமணி நேசித்தீர் !
திண்போர்எனில் தயங்கலாமோ ?
திறப்பீரே மரக்கதவு ! 62.
பொருள்
கலவி மயக்கத்தில் பொன்னான 'மேனியழகி ' என்று வருணித்த காலை ,
மனமெல்லாம் நிறைந்து மகிழ்ந்தவவரே ! பொன்னையும் ,மணிகளையும்
பரிசாகக் கொடுத்து ,இவைகளை விட நீரே உயர்வு ' என்றபோது , மிகவும்
விரும்பி அணைத்துக்கொண்டீர் ! இன்றோ போர் என்றதும் ,அப்போருக்குச்
சென்று ,காலநீட்டிப்பு ஆனதும் காணவே தயக்கம் காட்டுகிறீர்கள் !
தயக்கம் ;வேண்டாம் ; வாயிற்கதவு திறவுங்கள் ' என்று வேண்டுகிறான் .
(மரமாகிவிட்ட மனக்கதவைத் திறவுங்கள் 'என்றும் பொருள் கொள்ளலாம் )
தொடுவதில் மாற்றம் வேண்டுமோ ?
வளைதொட்டால் வலுவிழப்பீர் ;
வரம்கேட்டால் வளம்அருள்வீர் ;
சிலைதொட்டால் சீறலாமோ ?
சிலைக்கதவு அலைக்கசைப்பீர் ! 63,
பொருள்
காதல் மயக்கத்தில் கரம் தொட்டேன் ; கையணியாம் வளையல்கள்
வரிசை தொட்டேன் ; மயங்கிக் கிறங்கி ,வலுவிழந்து தோள் மீது
சாய்வீர்கள் ; காதல் தேவியாம் உங்களிடம் உறவுகொள்ள வரம் கேட்டால் ,
வளமான உடலையும் ,உள்ளத்தையும் அருள்வீர்கள் ;
இன்றோ வேலவனின் படை வீரராகி வில்லையும் ,அம்பையும்
தொட்டதால் சினந்து பிணக்கம் கொள்கிறீர்கள் ? போர்வெற்றி பெற்றுத்
திரும்பி வந்த எங்களை வரவேற்காமல் வாயிற்கதவையும் அடைக்கிறீர்கள் ?
இது நியாயமா ? கல்போல் அடைத்து நிற்கும் வாயிற்கதவைத் திறவுங்கள் '
என்று வேண்டுகிறான் .
அஞ்சும் இயல் அழகீரே !
அன்னமோ நடைக்கஞ்சும் ;
கன்னலோ மொழிக்கஞ்சும் ;
மின்னலோ இடைக்கஞ்சும் ;
புன்னகையீர் ! பூட்டுதிறமின் ! 64.
பொருள்
உங்களது மென்மையான நடைப்பயில்வு ,கண்டு அன்னப்பறவையோ
தன்னால் அவ்வாறு நடக்க இயலாமை அறிந்து ,வெட்கித்தலை =குனிந்து
செல்லும் ;இனிப்பின் சாரமாக சாறாக விளங்கும் கரும்போ ,உங்களின்
இனிய மொழி கேட்டுச் சுவைத்து என்னே இனிமை என அஞ்சியபடி அகலும் ;
தோன்றியதும் தெரியாமல் , தோன்றிமறைவதும் தெரியாமல் மேகத்திடையே
தோன்றும் ஒளிமின்னல் உங்களின் ஒய்யார நடை கண்டு ,ஒசிந்து ஒடிந்து
காணப்படும் இடை காண முடியாத அழகு கண்டு ,ஒளியைச் சுருட்டிக்
கொண்டு ஓடி ஒளியும் ; இத்தகைய அழகு உருவத்தோடு மெல்லிய
புன்னகையும் கொண்ட காதலியரே ! வாயிற்கதவின் பூட்டைத் திறப்பீர் !
புன்னகையோடு எம்மை வரவேற்று மகிழுங்கள் ! என்று கூறுகிறான்.
கலையுற்றீர் ! கதவு திறமின் !
மலைமேக வலைக்கூந்தல் ,
முலைமீது கலைந்தேகச்
சிலைப்புருவ நலமீன்கள்
கலையுற்றீர் கதவு திறமின் ! 65.
பொருள்
மலையின் மீது வலைபோல் போர்த்தியிருக்கும் மேகம்போன்ற கருங்கூந்தல்
(மற்றொரு பொருள் -----மலைமீது அங்கும் இங்கும் அலைந்து திரியும் கருமை
மேகம்போல் அங்கும் இங்கும் பறக்கும் கருங்கூந்தல் ) முலைகளின் மீது
கலைந்தபடித் தழுவவும் , உமது வில்போன்ற புருவத்தினிடையே அழகுநலம்
வாய்ந்த கண்கள் பார்க்கும் பார்வையும் இணைந்த அழகு ஓவியப் பெண்களே !
உங்கள் அழகை நாங்கள் சுவைக்க வேண்டாவா ? அடைத்திருக்கும் வீட்டு
வாயிற்கதவைத் திறப்பீர்களாக !'என்று வேண்டுகிறான்.
காமன் அடிமைகளே !கதவு திறமின் !
செஞ்சாந்துக் குழம்பெழுதிச்
செங்கால்பெடைச் சிறுநடையீர் !
அஞ்சம்புக் கரும்புவில்லான்
அடிமையீர் ! அகற்றுக தாள் ! 66.
பொருள்
அழகுமிளிரும் பாதங்களில் மேலும் அழகு கூட்டச் செஞ்சாந்துக்
குழம்பை ஓவியமாய் எழுதி ,அவ்வழகுடன் சிறுபதம் தூக்கி மென்னடை
பயிலும் செங்கால் உடைய அன்னப்பறவை போன்றவர்களே !
ஐந்துவித மலர் களால் உருவான அம்பினை , அன்புக்காதல் வளர்க்கக்
கரும்பு வில்லிலே தொடுக்கும் மன்மதனது அடிமைகளான அழகுப்
பெண்டிரே !( மன்மதனை அடிமையாகக் கொண்டு ஆடவர் மனத்தைச்
சிறைபிடிக்கும் அழகுப் பெண்டிரே !......என்றும் பொருள் கொள்ளலாம் )
உமது அழகைச் சுவைக்கும் எங்களை வரவேற்க இனிதே கதவின் தாளை
நீக்குங்கள் !' என்று வேண்டுகிறான்.
தவிக்கவிடல் தர்மமா ?
விண்ணாளத் தவமியற்றக்
கண்ணாளக் கடையானோம் ;
மண்ணாளவும் வழியின்றித்
தவிக்கவிட்டீர் ! தாள்திறவீர் ! 67.
பொருள்
மண்ணையும் ,விண்ணையும் ஆளவேண்டும் ' என்ற பேரவாவினால்
இன்பங்களை வெறுத்து . மனமடக்கித் தவம் செய்தோம் . அந்த வெம்மை
மிகுந்த காட்டிலும் வந்தீர் ! கண்ணாலே மயக்கிக் காதல் ஜாலம்
காட்டி , எங்களது எண்ணத்தைச் சிதற அடித்தீர்கள் ! கடையினும்
கடையனாக ஆக்கினீர்கள் ! பண்பாடும் , ஒழுக்கமும் இழந்ததால்
மண்ணாளும் தகுதியும் இன்றித் தவித்தோம் . அறவழி காட்டும்
ஆறுமுக மாமுருகனது அரக்கர் அழி போரிலே கலந்துகொண்டு
வெற்றியோடு திரும்பினோம் ;அவ்வாறு வந்த எங்களை வரவேற்காது
வாயில் அடைத்தல் முறையோ ?கதவைத் திறவுங்கள் ! காதலை வாரி
வழங்குங்கள் ' என்று வேண்டுகிறார்கள் .
அடைகதவம் தடையல்லவா !
இடையாடும் இளமெலி நடை ;
படைப்போரில் அடர்முலைப்படை ;
தொடையாடும் துகில் சரி உடை ;
உடைம னத்தீர் தடைகதவமேன் ? 68.
பொருள்
காதலியரின் அழகை வருணித்து அடைத்த கதவைத் திறக்க வேண்டுதல்.
அழகியரே ! ஒடுங்கிய உமது இடையிலே உறவாடும் இளமையும் ,
மென்மையும் கலந்த நாடக நடை நளினம் அல்லவா ?
படையெடுத்து விடாது காலம்காலமாய் ஆற்றுகின்ற போரினிலே
அடர்ந்து பருத்த இரு முலைப்படைகளும் ஒன்றோடொன்று மோதுவது
இளமை அழகின் சுவைக்காட்சி அல்லவா ?
அழகுமிகு உமது இருதொடைகளிலும் தொட்டும் பட்டும் விளையாடும்
உரிமை அந்த த் துகிலுக்கு .காட்சிப் பொருளை வெளிக்காட்டும் அத்துகில்
மெல்லவே நழுவி அழகை வெளிப்படுத்துதல் இளமை வெளிப்பாடல்லவா ?
அழகால் உருவான உடலும் மனமும் கொண்டவர்களே !(மற்றொரு பொருள் ----
இப்படிப்பட்ட அழகினால் எமது மனத்தை உடைத்துச் சிதறவைக்கும்
உடல் வாகு கொண்டவர்களே !) இந்த அழகைக் காட்டிடத் தடை
தேவைதானா ? கதவைத் திறவுங்கள் ! என்று வேண்டுகிறான் .
அழகில் அமிழ்ந்தது நெஞ்சம் .
நின்றேனே நீள்வாயில் ;
நின்றதுவே மென்னெஞ்சம் ?
பொன்றுகளைப் போர்த்துநின்ற
பூண்முலையால் ; பூட்டுதிறவீர் ! 69.
பொருள்
அழகுமிகு காதலியரே ! உமது நீண்ட மாளிகை வாயிலில் உமது
பார்வைக்காக ;வந்துநின்றேன் ; உம்மீது காதல் கொண்ட அன்பான ,
மென்மையான என்நெஞ்சம் ஒருநொடி இயலாமல் நின்றுவிட்டது ;
பொன்னாபரணங்களால் போர்த்தப்பட்டுப் , பூரித்து எழுந்த முலைகளின்
எழுச்சியை , இளமைத்தன்மையை ,' ஆ ' என வியந்து பார்த்தததால் மூச்சே
நின்றுவிட்டது ; அழகுடை ஓவியங்களே ! அடைத்த வாயிற்கதவின் பூட்டைத்
திறந்து பூணழகு சுவைக்க வழி காட்டுவீர் ! என வேண்டுகிறான் .
மழுப்படையீர் ! விழு தடை ஏனோ !
கழுத்தழகும் , பழுத்தகனியும் ,
செழித்தநடு செழுசுவர்க்கமும் ,
இழுத்தமனத் தழுதொடையும் ,
மழுப்படையீர் ! விழுதடைதவிர் ! 70.
பொருள்
உள்ளே ஓடும் , இரத்த நாளங்களின் ஜாலத்தைக் காட்டும் ,
செம்மைநிற அழகு கழுத்து , அணிந்திருக்கும் மணியாரங்களின்
மெருகூட்டல் கொண்ட பேரழகையும் , கழுத்தின் கீழே பக்குவமாய்ப்
பழுத்துத் துவளும் இரு மார்பகங்களையும் , அவைகளின் இடையே
செல்லும் வழி பற்றினால் அங்கே தோன்றும் சுவர்க்க வாயிலையும் ,
காணும் கண்களைக் கவர்ந்து ,தன்பக்கம் இழுக்கும் தழுதழுத்த
தொடையையும் , தமது போருக்குத் துணை செய்யும் கூறிய
மழுப்படையாகக் கொண்ட இளம் பெண்களே ! உங்களோடு போரிட
வந்துள்ள எங்களைத் தடை செய்ய லாகுமோ ! வாயிற்கதவைத்
திறவுங்கள் ! என்று வேண்டுகிறான் .
மழகளிறழி மாவீரனோ !
அழகனெனவும் அமலனெனவும்
மழகளிறழி மறவனெனவும் ,
பழங்குமரன் பண்பாடிட
இழுகதவம் திறப்பீரே ! 71.
பொருள்
பன்னிரு கையும் , பவளச்செவ்வாயும் , கருணை
பொழிகின்ற ஆறுமுகமும் கொண்ட அழகனே !
தீப்பொறியிலே தோன்றிச் செஞ்சுடராய் விளங்கி , வாய்மையும்
தூய்மையும் கொண்ட அமலனே ! சூரனை வீழ்த்திய போரிலே
பல்லாயிரக்கணக்கான மதம் கொண்ட யானைகளையும் ,
அரக்கர்களையும் அழித்த தமிழ் மா மறவனே ! என்றெல்லாம்
வெற்றிபெற்ற தொல்குடிக் குமரனைப் போற்ற வேண்டாமா ?
அவன் புகழ் பாடிடவும் ,ஆடிடவும் விருப்பமுற்று வெளியே
வாருங்கள் ! வாயிற்கதவைத் திறந்து வெளியே வாருங்கள் !
என்று ,வேண்டுகிறான் வீரன் ஒருவன் .
எழில்சுகமே ! இடைத்தடை ஏனோ ?
படர்படாமுலை இடைவிடாச்சுகம்
அடர்தொடைநடு மடைதருதளிர்
தொடர்,ரதிபதி தொடுசுகவனம் ;
தடைதவிருமே ! தாள்திறவுமே ! 72.
பொருள்
அழகிய வேலைப்பாடு மிகுந்த மெல்லிய பட்டுப்புடவைத்தலைப்பால்
போர்த்திய பின்னரும் , யௌ வனம் வெளிப்படுத்தும் மார்பகம் ; இடைவிடாமல்
வருடுவதால் தோன்றும் இன்பநிலை ; அடர்ந்து தொடை இடுக்கின் நடுவே
அமைந்துள்ள அந்த மடை ; அதன் வசீகரம் வழங்கும் இளம் இன்பம் ;
அவ்விளமையைத் தொடர்ந்து வரும் மன்மதன் (இரதியின் கணவன் )
தொட்டுத் தொட்டுக் காட்டுகின்ற இன்பக்காடு அந்த இளமைமேனி .
அதனை நாங்கள் சுவைக்க வேண்டாவா ?தடையாகக் கதவைத் தாளிட்டு
விட்டீர்களே !அருள்கூர்ந்து தாள் நீக்குவீர் ! என்று வேண்டுகிறான் .
போராட்டம் போதாதோ ?
மாறனுக்கோ மனப்போர் ;
மறவனுக்கோ குணப்போர் ;
சூரனுக்கோ மலப்போர் ;
வீரனுக்கோ தாள்போராட்டம் ! 73.
பொருள்
உயிர்களின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தும் , மன்மதன்
தேவாசுரர் போர் நடைபெறுவதால் மனம் வெதும்பி ,மலர்க்கணை
தொடுப்பது , ஆசையுறச்செய்வது , போன்ற தமது செயல் பற்றிய
சிந்தனையில் மனத்திலே போராட்டம் கொண்டுள்ளான் .
அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காக்கப் போரெடுத்த
மறவனாம் ஆறுமுகக் கடவுளுக்கோ தீயவர்களைத் திருத்தி ,நல்வழிப்படுத்தலில்
பண்பு சார்ந்த போராட்டம் .
அரக்கனாம் சூரபன்மனுக்கோ ,ஆணவம் ,அகங்காரம் ,போன்ற இழிந்த
மலக்கர்ம வினையாலே எங்கே நாம் தாழ்ந்து விடுவோமோ என்ற போராட்டம் .
மகேந்திரபுரப் போரிலே வீரனாகக் கலந்துகொண்டு , முருகன் அருளால்
வெற்றி பெற்று ஊர் திரும்பிய காலைத் தங்களை வரவேற்று ,உபசரிக்காமல்
வாயிற்கதவுகளையும் தலைவியர் பூட்டிக் கொண்டார்களே !' எப்படித்
திறப்பது என்ற போராட்டம் .இதற்கு ஆளாகாமல் கதவு திறப்பீராக '
என்று வேண்டுகிறான் .
பரணி பாடி ஆடக் கதவு திறப்பீர் !
கஜமுகக் கனித்தொடை கலைமுகக் கருவண்டீர் !
புஜசயிலம் பன்னிரண்டு பெற்றவனின் புண்ணியப்போர் ,
கஜக்கூட்டம், கருங்கூட்டம் கணநொடியில் மாண்ட ,களம்
த்வஜஊர்தியோன் பரணிகொட்டத் திறந்திடுவீர் ! தடைக்கதவு. 74.
பொருள்
யானையின் துதிக்கை போன்ற மென்மையும் ,கனிபோன்ற தழுதழுத்த
சதையும் கொண்ட தொடையை உடையவர்களே !அழகே உருவான முகத்தில்
கருணைக் காதலைவெளிப்படுத்தும் சுழலும் வண்டன்ன கண்களை
உடையவர்களே !
மலையன்ன மாண்பு கொண்ட வலிமை மிக்கப் பன்னிரண்டு
காக்கும் கரங்களை உடையவன் ,மாமுருகன் அரக்கர்களை அழித்துத்
தேவர்களை ,வேதவழியினைக் காத்திட எடுத்த புண்ணிய தேவாசுரப் போர் .
அந்தப் போரிலே ஆயிரம் ஆயிரம் யானைக்கூட்டத்தையும் ,
பல்லாயிரக் கணக்கான தீய அரக்கர்கள் கூட்டத்தையும் , நொடிப்பொழுதில்
வீழ்த்திய போர் .தீய அரக்கர்களும் ,நால்வகைப் படைகளும் மாண்ட களம்
அது .
மரமாய் நின்ற மாயச்சூரனை இருகூறாக்கி,அவற்றை மயிலும் சேவலும்
ஆக்கி ,ஊர்தியாய் மயிலையும் ,கொடியாய்ச் செயலையும் அருளோடு
ஏற்றவன் . அவன் பெற்ற வெற்றியைப் போற்றிப் 'பரணி' பாடிடக்
கதவைத் திறவுங்கள் ! என்று கூறுகிறான் .
மயில் ,வேல் அழகுடையீர் !
மயிலழகுக் கூந்தலோடும் ,
மணிவேல்நிகர்க் கண்ணோடும் ,
எயிலழித்த வீரவாகு
இசைபாடித் தாள்திறப்பீர் ! 75.
பொருள்
முருகனின் ஊர்தி மயில் . அழகே உருவானது அதன் தோகை .
அத்தோகை போல் அழகும் ,மென்மையும் ,கொண்ட கூந்தலை
உடைய பெண்களே ! அழகும் ,கூர்மையும் ,வெற்றியும் நிறைந்த
வேலாயுதம் முருகனின் படை ; அவ்வேல்போல் பகைவர்களை
( பார்ப்பவர்களை )வீழ்த்தும் கூர்மை அழகுக் கண்கள் உடைய
எம் காதலியர்களே ! மகேந்திரபுரப் போரிலே முருகன் அருளோடு ,
அரக்கர்களை அழித்து ,வெற்றிக்கு வித்திட்டவன் நவ வீரருள்
முதல்வனான வீரவாகு. அவன் புகழை ,மேன்மையைப் போற்றிப்
பாராட்டவேண்டுவது நம் கடமை ; பூட்டிய கதவைத் திறவுங்கள் !
போற்றுவோம் வீரவாகுவை ' என்று தாள் திறக்க வழி காட்டுகிறான் .
அருள்சுகமே ! அடைக்காதே .
இருமலைகள் வழிகாட்ட ,
இடையின்பம் கலைகாட்ட ,
அருள்சுகத்துத் திருமகளீர் !
அடைக்காதீர் ! அணைத்திடுவீர் ! 76.
பொருள்
இன்ப ஊர் நோக்கிப் பயணிக்கையில் நம் கண்ணை மறைத்து ,
மனத்தைத் தன்வயப்படுத்தும் வளம் நிறைந்த இரண்டு மலைகள்
தம்மைச் சார்ந்தோருக்கு ,தம்மிடையே இன்பஊருக்குச் செல்லும்
பாதையை மென்மையான உரோமங்களால் வகைப்படுத்தும் .
இடையில் குவிந்திருக்கும் கலையழகைச் சுவைத்தபடியே சென்றால்
இன்ப ஊர் தெரியும் ;புலப்படும் ;
இந்த வகையில் இனிய சுகம் அருளும் அழகுத் தேவியர்களே !
கதவை அடைக்காதீர்கள் ;நாங்கள் வந்ததும் அணைத்து மகிழுங்கால்
கடை சார்த்துங்கள் ' என்று கோரிக்கை வைக்கிறான் .
சுகம் வேண்டி அகம்திறவும் !
பருமாமலை பணிந்துவிழ ,
ஒருமாவும் கருவாகப்
பெருமலமும் பிளந்துபட ,
அருஞ்சுகத்தீர் ! அகற்றுக! தாள் . 77.
பொருள்
(இப்பாடலுக்கு இருவிதப் பொருள் கொள்க .)
வரலாறு தழுவிய பொருள் ;
தன்னை அழிப்பவர் யாரும் இல்லை என்ற இறுமாப்பில்
மாயங்கள் நிறைந்த 'கிரௌஞ்ச ' மலையாகவே நின்ற தாரகனாகிய
சூரனின் இளவல் முருகனிடம் தோற்றுப் பணிந்து விழுந்து மாண்டான் ;
சூரனின் மற்றொரு தம்பி ,சிங்கமுகன் போரிலே அடிபட்டுக்
கரிச்சாம்பல் ஆனான்;
ஆணவமா மலத்தால் கட்டுண்டு ,போரிட்ட மாயச்சூரன் மரமாகி
நின்றபொழுது இருகூறாகி ,அவ்விரண்டும் சேவலும் ,மயிலுமாகி
முருகனின் அடிமை ஆனான் ; இவற்றையெல்லாம் செவியுற்றுப்
பெறற்கரிய பேறு பெற்ற பெண்டிர்களே ! பெருமை மிக்க முருகன்
போற்றிடக் கதவம் திறவுங்கள் !'என்று வேண்டுகிறான் .
மகளிர் சார்ந்த பொருள் ......
பருத்த ,அடர்த்து எழுந்த மிகப்பெரிய முலைகள் ஆடவரின்
கைக்குள் அடங்கி , மகிழ்ந்து இன்பத்தோடு சாயவும் ,
உயர்ந்த இவ்வுலகில் உயிர்ப்பும் ,இன்பமும் கலந்த புதுப்பிறவிகள்
இன்பம் துய்த்தலால் தோன்றி உருவாக வும் ,
பிறப்பதனாலே நன்மை ,தீமை கலந்த மனமும் ,ஆணவம் முதலிய
கர்ம வினைகளால் சுவர்க்கம் ,நரகம் என்ற பயன்பாட்டில் இருவினை
சேர்ந்து உழலவும் , காரணமாய் விளங்கும் சிற்றின்ப வேட்கையை நாடி
அனுபவிக்கும் காதலியரே ! காலநீட்டிப்பு இனியும் தேவையோ ? கதவையும்
மனத்தையும் திறப்பீராக ! என்று வேண்டுகிறான்.
தொல்புகழோன் போற்றிடுவீர் !
தாள்பணிசுரர் பாலிக்கவே ,
தோள்தாங்குபோர் த் தொல்புகழை ,
நாளெல்லாம் நன்குபோற்ற
நற்கதவம் திறப்பீரே ! 78.
பொருள்
சூரபன்மனின் அடக்குமுறை பொறுக்கமுடியாத தேவர்கள்
சுப்பிரமணியக் கடவுளை வணங்கித் தங்களைக் காக்குமாறும் ,சிறைப்பட்ட
தேவர்களை மீட்டு அருளுமாறும் ,வேண்ட அவர்களுக்காக அரக்கர்கள் மீது
வலிமைமிகு தோள் பலம் கொண்ட முருகன் போரிட்டு ,வெற்றி பெற்றப்
பெரும்புகழை நாமெல்லாம் ஒன்று கூடிப் பாராட்ட வேண்டாமா ? வாருங்கள் ;
வந்து எம்மீது சினமுற்றுச் சார்த்திய கதவைத் திறவுங்கள் ! என்று
வேண்டுகிறான்.
வேலவன் புகழ் போன்றவரே !
வெற்றியுறு வேலவனின்
விரிபுகழின் விளக்கம்போல்
நெற்றிமணி நீள்கதிர்கள்
உற்றவரே ! தாள்திறப்பீர் ! 79.
பொருள்
அரக்கர்களை அழித்துச் சூரபன்மனையும் வெற்றி கொண்டு ,
விண்ணவர்களைச் சிறைமீட்ட வேலவனின் ஒளிமிகுந்த பெரும்
புகழினைப்போல ,நெற்றியில் அணிந்த தலைமணி மாலையின்
ஒளியும் ,காந்தியும் மூவுலகும் கண்டு போற்றும் பேரழகு உடைய
காதலியரே ! உங்களைக் காணும் பாக்கியத்தை நாங்கள் அடையச்
சாத்தியிருக்கும் வாயிற்கதவைத் திறவுங்கள் ' என்று வேண்டுகிறான் .
அழிவாழ்வில் ஆணவம் ஏன் ?
குழிக்கன்னம் விழுக்கிண்ணம்
செழிப்புவன முழுநிலவீர் !
அழிஜனனம் அறியீரோ !
கொழிசுகம்காண் ! கொளுதிறப்பீர் ! 80. .
பொருள்
அழகின் இலக்கணமாய் குழிவிழுந்த கன்னங்களையும் , அடர்ந்தும் ,
பெருத்தும் , அழகோடும் விளங்குகின்ற விழுமிய கிண்ணம் போல்
முலைகளை யும் ,கொண்டு செழித்த வனத்திடையே தோன்றும் முழு நிலவு
போன்று வசீகரம் உடையவர்களே !
பிறத்தலும் இறத்தலும் ஆகிய இப்பிறப்பை அறியவில்லையா ? ஆணவமும்
அன்பு காட்டாமையும் நல்ல பண்பாடு ஆகுமோ ? நமது கண்முன்னே
கொழிக்கும் இன்பத்தை நாம் இழக்கலாமோ ! கதவின் தாழ்ப்பாளை
நீக்குக ' என்று வேண்டுகிறான்.
காடு பாடியது
காளிதேவி வீற்றிருக்கும் இடம் ;பாலையும் முல்லையும் கலந்த
காட்டுப்பகுதியாகும் . அதனியல்புகளைப் பாடுவது .
எரிஎரிசுரம் பொறிபொரி நிலம்;
கரிகரிமரம் செரிசெரிகனல்;
அரிஅயனவர் அடிபணிவேல்
அவன்தனைப்படை அனையவள்குடி . 81.
பொருள்
ஆதவனின் அளவுகடந்த வெப்பத்தினால் விடாமல் எரிந்து
கொண்டிருக்கும் காடு ; எரியும் தீயின் பொறிகள் பறந்து காட்டு
நிலம் முழுவதும் பரவுவதால் பொறிந்து பொடியாகிப் பொரிபோல்
பறக்கும் காட்டு விளைச்சல்கள் . தீயிலே காட்டு மரங்களெல்லாம்
எரிந்து ,கரிக்கட்டைகளாய் நிற்பன ; காடு முழுவதையும் உண்டு ,
தீச்சுடரைக் கக்கும் கனல் ; திருமாலும் ,பிரமதேவனும் ஏனைய
தேவர்களும் வேலேந்திய முருகனின் பாதம் பணிவர் . அம்முருகனைப்
பெற்றெடுத்து , அவனுக்கு ஆன்ற வேலாயுதத்தை வழங்கிய அன்னை
உமாதேவியாகிய மாகாளி வீற்று அரசாட்சி புரியும் காடு .
காட்டானோ கறைக்கண்டன் ;
காட்டாளோ காளிதேவி ;
காட்டாளே கசிவிரக்கம் ;
காட்டானைக் கரம்கொண்டாள் . 82.
பொருள்
சுடுகாட்டில் பூதங்களோடும் ,பேய்களோடும் சேர்ந்து நடமாடி
நாளும் மகிழ்பவன் நீலகண்டனாம் சிவபெருமான் . அந்தப் பரந்துபட்ட
காட்டை ஆளும் அரசியோ மாகாளியான பரமேஸ்வரி . காளியாக
அவதாரம் கொண்டபின் ஈவு ,இரக்கம் தவிர்த்து , கொடுமைகளை அழித்திட
உறுதி கொண்டாள் . அத்தேவியே ஆண்டவனாம் சிவபெருமானின் மீது ,
காதல் கொண்டு அவனையே தன் கணவனாகக் கொண்டாள் . மூவேழ்
உலகை ஆளும் எம்பெருமானும் ,தேவியும் காட்டையும் தமது நிலமாகக்
கொண்டு ஆன்மாக்களுக்கு முக்தி அளித்தனர் .
மலைவேல் முருகன் மகேந்திரத்து ,
மறப்போர் அரக்கர் மாண்டிட்ட ,
தலைக்கூழ் உண்டதாம் பேய்கள்
தாகம்தீர் தாய்க்காடு பாடுவாம் . 83.
பொருள்
குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருக்கும் வேல்முருகன் ,தேவர்களைச்
சிறைமீட்க .மகேந்திரம் என்னும் சூரன் நகர்நோக்கி எடுத்த ,தேவாசுரப் போரிலே
மாண்டு மடிந்த அரக்கர்களின் பிணக்குவியல்களின் தலைக்கூழை விரும்பி
உண்டு மகிழ்ந்த பேய்களின் ,பசியைத் தாகத்தை அறவே போக்கிய
காளிதேவியாகிய தாய் நிலைத்து வீற்றிருக்கும் காடு பற்றி இனி
விளக்கிப் பாடுவம் .
பற்றிய தீ முற்றியநிலம் ;
சுற்றிலும் தீ பற்றறுயிர் ;
தொற்றிய தீ மற்றெலாம்மடி;
நெற்றியில் தீ உற்றதுமதே . 84.
பொருள்
வறண்ட காடு முழுதும் ,பற்றிய நெருப்பால் ,காடு முழுதும் கருகிப்
போயிற்று . அங்கு இங்கு எனாதபடி எங்கும் தீ கொழுந்துவிட்டு எரிவதால்
காட்டிலே வாழும் அனைத்து உயிர்களும் மடிந்து ,அழிந்தன . மரம் ,செடி
கொடி என எல்லா இடங்களிலும் தொற்றிப் பற்றிக்கொண்ட தீயால்
வளம் மிக்க காடே வதிந்து அழிந்தது . நெற்றியிலே மூன்றாம் கண்ணை
உடையவன் கொண்ட நெருப்போ ' என்னும்படி அவனது காட்டிலும் அத்தீ
ஆட்சி புரிந்தது .
காடடைந்த கருங்குருவி
கார்மேக நிழல்தேடி,
ஏடேடாய்ச் சிறகிரிய ,
எரிகாற்றில் கரியாகும் . 85.
பொருள்
வெப்பமிகுதியால் தீ பரவிய அந்தக் காட்டைத் தமது இருப்பிடமாகக்
கொண்ட பல்லாயிரக்கணக்காண பறவைகளில் கருங்குருவி இனமும்
அடங்கும் . வெப்பக் காட்டிலே ,குளிர்ச்சி மிக்க நிழல் தேடி ,
நாளெல்லாம் பறந்த ,அக்குருவி , நீண்டநேரம் பறந்ததாலும் ,வெப்பக்காற்றாலும்
பிய்ந்து ,ஏடு ஏடாகப் போன ,சிறகினால் பறக்க முடியாமல் ,காற்றில் சுழன்று ,
சுழன்று விழுந்து ,கனலில் கலந்து கரியாகி விடும் . கடுமையும் ,கொடுமையும்
இணைந்த காடு .
ஆழ்ந்தகன்ற ஆலமரம் ,
ஆசானாம் அரசமரம் ,
தாழ்ந்துவளர் தருபலவும் ,
தழலாகித் தனித்துநிற்கும் . 86.
பொருள்
அந்த வளம்மிக்க நெடுங்காட்டில் நீண்ட ஆயுளை உடைய பழமையான
மரம் ;ஆணிவேரும் ,பக்க வேரும் பலமாகவிளங்குவதால் நிலையாக
விளங்குவது ; அகன்று நிழல் தரும் பந்தர் போல் விளங்கும் ஆலமரம் ,
மாமுனிவர்கள் இம்மரத்தின் அடியில் அமர்ந்து சீடர்களுக்கும் ,பிறருக்கும்
நல்லுபதேசம் அருளும் அரசமரம் , இன்னும் இவைபோன்று தாழ்ந்து
நன்னிழல் தரக்கூடிய பல்வேறு மரங்கள் , இவைகளெல்லாம் வெப்பக்
காட்டுட்த்தீயில் ,எரிந்து பொசுங்கி க் கரிக்குச்சிகளாய் இலைகள் ,
பறவைகள் , ஆகிய வளங்கள் இன்றித் தனியே நிற்கும் .
வீரவாகு சூரநாட்டை ,
நீறதாக்க நெருப்பெடுப்பக்
காரரக்கர் பெறுகரிபோல்
கார்காடும் கார்பூண்டது. 87.
பொருள்
தூதுசென்றகாலத்தில் வீரவாகு, சூரனின் ஆணவப்பேச்சாலும்,
முருகனை இகழ்ந்ததாலும், சூரனின் நாட்டையே அழிக்க முனைந்து,
நெருப்பு மழை பொழிந்தார்; மகேந்திரபுரியும் , அரக்கர் கூட்டமும்
தீயில் எரிந்து கருகின. அப்போரில் அந்நெருப்பில் அரக்கர் கூட்டம்
எரிந்து, மேலும் கருமை பூண்டது. கருமையான அரக்கர் கூட்டம் மேலும்
பெற்ற கருமைபோல் , இருளடர்ந்த கருங்காடு ,வெப்பத்தீயால் மேலும்
கருகிக் கார்நிறத்தைக் கொண்டது.
அடுபடுசுடு விடுநெடுமடு
தொடு தொடு கொடுகொடு
இடு உடு நடு கடுகடுகடு
பீடுகாடு மாடு கேடே . 88..
பொருள்
கடுங்கோடைக் காலத்தால், ஏற்பட்ட வெப்பத்தால் , எரிகின்ற தீயினால்
பட்ட, மரங்களால் எப்பொழுதும் சூடாகவும் , வளத்தை அறவே விட்டுவிட்ட
நெடுங்காடு; அக்காட்டைச் சென்றடைந்தால் அத்தீயும் வெம்மையும்
நம்மைப்பற்றிக்கொள்ளும்;கொடுமைமிக்க நிலைமையை நமக்குக்
கொடுக்கும்; இடப்பட்ட நக்ஷத்திர மண்டலம்போல் தீ சூழ்ந்த அந்த
நடுக்காட்டில், கடுமையாகிய வெப்பத்தின் கடுமையைக் கண்டு,மகிழும்
பெருமை பெற்ற பீடுடைய காடு ; தீச்செல்வம் நிறைந்த அக்காட்டினால்
உயிர்களுக்கு என்றும் தீதே பயக்கும்.
விளக்கம் ;.....கடு கடு கடு இதில் மூன்றாம் கடு என்பது கண்டு என்பதன்
தொகுத்தல் விகாரம்.
எரியும்மரம்; பொரியும்புரம்;
கரியும்சுரம் ; சொரியும்புகை;
திரியும்கனல்; தெரியும்மணி;
பரியும்பலி; விரியும்வனம் . 89.
பொருள்
காட்டில் தோன்றிய வெப்பமேலீட்டால் மரங்கள் எல்லாம் எரிந்து
விழுந்தன. காட்டுப்பகுதி முழுவதும் நெருப்பால் பொரிந்து சாம்பல்
ஆயின. காடுமுழுவதும் தீயால் கருகிக் கரிக்கட்டையாய்க் காட்சி
அளித்தன. தீ அணைந்தும் அங்கு தோன்றும் புகை காட்டையெல்லாம்
சூழ்ந்தன. புகையோடு காற்றும் சேர்ந்துகொள்ளக் காடெங்கும் தீயும் ,
சிறுசிறு தணல்கட்டியும் பரந்துபட்டன . ஆங்காங்கு காட்டு மணலில்
எட்டிப்பார்க்கும் தணல் துண்டுகள், பொந்தினுள் இருந்து எட்டிப்பார்க்கும்
பாம்பின் தலையில் உள்ள நாகமணி போல் காட்சி அளித்தன. காட்டில்
வாழும் குதிரைகளும், பிறவிலங்குகளும் கொடுந்தீய்க்குப் பலி ஆயின.
விரிந்த அக்காடு முழுவதும் தீ விரைவாகப் பரவியது.
கொடிமலர்ப் பொடித்தளிர்ச்
செடிக்குளிர்த் தொடிக்கொடிக்
குடிக்கோடு கடிக்காவி
நொடிப்பொழுது மடிந்தொழிந்தன. 90.
பொருள்
காட்டிலே வளத்தோடு படர்ந்திருந்த கொடிகளில் மலர்ந்திருந்த
காட்டுமலர்கள், அக்கொடிகளில் அமைந்திருந்த இளந்தளிர்கள் ,
குளிர்ச்சியைக் காடு முழுவதும் வழங்கும் செடிகள், காட்டின்
ஆபரணம் போல் படர்ந்துள்ள மென்கொடிகள், காட்டில் குடிகொண்ட
கோட்டுமலர்கள் , அழகே உருவான காவி என்னும் காட்டுமலர்க்கூட்டம் ,
இவையாவும் வெப்பத்தால் ஏற்பட்டக் கொடுந்தீயில் நொடிப்பொழுதில்
மடிந்தன.
உயர்ந்தபனை உலர்ந்தநிழல்
உறுவெய்யில் போக்கிநிற்கப்
பயந்தபழன் பதம்பார்க்கப்
பட்டவன்போல் நெட்டுயிர்க்கும். 91.
பொருள்
காடெல்லாம் பனைமரங்கள்; உயர்ந்த அப்பனைமர நிழலில்
பொசுக்கும் வெய்யில் வெம்மை தணித்துக்கொள்ள ஒருவன் நிற்கிறான்.
அந்நேரம் அப்பனையிலிருந்து முதுபழம் பற்றை விடுவித்துக்கொண்டு
விழ , அது மரத்தடி நின்றவன் தலையில் விழுந்தது; தாங்கமுடியாத
வலியினால் அவன் துடிதுடித்துப் பெருமூச்சு விடுவதைப் போன்று,
அப்பனைமரமும் வெப்ப,வெய்யில் காற்றால் நெடிதாடி நிற்கும்.
நீர்தேடும் நீள் யானை ,
நிணம்தேடும் அரிமாக்கள் ;
கார்தேடும் காட்டினுள்ளே
கரியாகிக் கோடுநிற்கும் . 92.
பொருள்
நீண்ட யானைக்கூட்டங்கள் நீர்தேடி அலையும்; பசிக்கு இரை தேடிச்
சிங்கங்கள் அலையும்; கருணை தேடி அலையும் அக்காட்டினுள்ளே ,
எரிந்துபோன மரங்கள் எலும்புக கூடுபோல் கரிக்கட்டையாய் ஆங்காங்கு
நிற்கும்; கொடுமையும்,கடுமையும் வாய்ந்த காடு .
பேய்த்தேராம் பெருவெய்யில்
பின்னாலே நீர்ப்பருக ,
வாய்வைக்கும் வனவிலங்கு,
வாயற்று , வாய்ச்சேரும். 93.
பொருள்
காட்டில் கொளுத்தும் வெய்யிலில் , வழிந்தோடும் நீர்ப்பரப்பு போல
கானல் நீர், காட்சிதர, அதுகண்டு, வனவிலங்கொன்று நீர்ப்பருகும்
ஆசை மிகுந்து, வாயதனை வைக்க, வாயோ வெய்யில் வெப்பத்தில்
சுட்டுப்பொசுக்க, வந்த வழியே மீண்டேகும்.
வறண்டகள்ளி திறண்டபூமி ;
வறண்டமேகம் திறண்டவானம்;
புரண்டபாம்பு மிரண்டபேய் ;
அரண்டகூகை; இருண்டகாடு . 94.
பொருள்
நீரும்,பாலும் அற்று, வரண்டு போய்க் காட்சிதரும் கள்ளிச்செடிகள்
திரண்ட காடு ; வறண்டுபோன மேகக்கூட்டம் திரண்டு சூழும் வானம்;
வெப்பத்தால் புரண்டு படுக்கும் பாம்பு; அதுகண்டு மிரண்டு போன '
பேய்க்கூட்டம்; அதுகண்டு, அஞ்சும் கூகைக்கூட்டம்; இருளடைந்த காடு .
எரிமரம் கரிநிலம்
விரிவெயில் சொரிகனல்
பொரி மணல் உரிதசை
நரிபரி விரிவனம் . 95.
பொருள்
வெப்பத்தால் காட்டுமரங்கள் எல்லாம் எரிகின்றன. மரங்கள்
எரிந்ததால் நிலமெல்லாம் கருமை கலந்த பூமியாக மாறுகின்றன.
விரிந்த வெய்யிலோ அனலை எங்கும் வீசுகின்றன. தரை மணலெல்லாம்
நெருப்பால் பொரியாக அமைகின்றன.தணலால் தசைகள் எல்லாம்
உரிந்து, நரிகளும், பரிகளும் ஆங்காங்கு ஓடும் காடாக மாறிவிட்ட காடு ,
காரைச் செடியோ கரியாய்ப் பொரியச்
சூரை மரங்கள் சரிந்தன; எரிந்து.
வீரைக் கூட்டம் விண்புகை ஆகிடப்
பாரைப் பட்டை உருதிரிந்து பாழாம். 96.
பொருள்
காட்டுடை மூலதனங்களாம் பற்பல மரங்கள் வெப்பத்தீயில்
அழிந்தன; காரை' என்னும் அடர்செடிகள் தீயில் எரிந்து காரியாயின;
பொரியாய்ச் சாம்பலாய்க் காற்றில் கரைந்தன. சூரை' மரங்கள்
எரிந்து,சரிந்து, அழிந்தன. வீரை மரக்கூட்டம் முழுதும் எரிந்துக் கருகிச்
சாம்பல் புகையாய் விண்ணிலே மேகம்போல் சூழ்ந்துகொண்டன .
பாரை ' என்னும் பழமைமிக்க மரங்கள் வெப்பத்தால் பட்டைகளை
எரிக்குப் பலிகொடுத்து, உருமாறி உயிரற்று நின்றன.
மூங்கில் முனகல்புகை மேகத்தைத் தொடவே,
ஏங்கிய பாலை, ஓங்கிய தீயாய்,
ஓங்கும் ஓலம் ஆங்கு பொசுங்கும்;
பூங்குழல் இழந்தாள் பாலை நிலத்தாய் . 97.
பொருள்
காட்டுத் தீயால் எரியும் மூங்கில் மரங்கள் முனகலோடு ,
உயிரைப் புகையாக விட்டன; அப்புகையோ விண்ணில் பறந்து,
மேகத்தைத் தழுவின; தன்னைத் தழுவாமல் மூங்கில் மேகத்தைத்
தழுவுவதைக் கண்ட பாலை மரங்கள், வானளாவும் தீப்பிழம்பில்
தம்மை அர்ப்பணித்துக் கொண்டன; ஆயினும் தீச்சுடரால் அம்மரங்கள்
ஓலமிட்டன ; அவ்வோலத்தைக் காதில் வாங்காமல் மரங்களைப்
பொசுக்கிற்று தீ. பூச்சூடிய மங்களகரமான குழலை, பூவாய்க், கனியாய்த்
தளிராய்க் கொண்டிருந்த பாலைநிலத் தாயோ பசுமை இழந்து,
துயருற்று நின்றாள்.
அகண்டவானில் கண்டதாகம்
கொண்டஞாயிறு கொடுங்காட்டில்
அகலாத செந்நாயின்
அகல்வாய்வழி நீரைச்சுவைக்கும். 98.
பொருள்
அனைத்துக் கோளங்களும் நிறைந்த விரிந்த வானத்தில் தன்கதியில்
செல்லும் ஆதவனுக்கு வெப்ப மிகுதியால் தாகம் எடுத்தது . பூமியைப்
பார்த்தான் ; பற்றியெரியும் கொடுமை மிகுந்த காட்டைக் கண்டான் ;
குளத்தில் ,சுனைகளில் ,அருவிகளில் , ஆறுகளில் நீர் துளிக்கூடக்
காணப்படவில்லை ; ஆனால் அக் கொடுங்காட்டை விட்டு அகலாது ,
மூச்சிரைக்க , நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ,நிற்கும்
செந்நாயைக் கண்டான் ; அதன் வாயிலே தொங்கும் நாக்கு நுனியில்
சொட்டும் நிண நீரைக் கண்டான் ; அந்நீரைத் தேவ அமுதம்போல்
சுவைத்துப் பருகினான் .
காட்டரசி கூந்தல்தனில்
காட்டுத்தீ கமழ்பூவாம்;
காட்டுநாகம் மணிஅணியாம் ;
காட்டுமின்மினி கனல்சுடராம் . 99.
பொருள்
காடாம் அழகரசி வீற்றிருக்கிறாள் . பசுமை நீங்கிக் கருமை
வாய்த்த அவளது கூந்தல்தனிலே காட்டுத்தீயே செம்மை மலராகத்
திகழ்கின்றது . தீயால் சினமுற்ற காட்டு நாகப்பாம்பின் தலையிலே
ஒளிர்விடும் நாகரத்தினமே அரசியின் தலையலங்கார அணியாகக்
காட்சி தருகிறது . காட்டிலே இங்குமங்கும் சுடர்விட்டுப் பறக்கின்ற
மின்மினிப் பூச்சிகளே அரசியின் ஒளிக்கற்றையாய் , அனல்பறக்கும்
சுடரொளியாய் விளங்குகின்றன . முற்றுருவகப் பாடல் இது.
தகிக்கின்ற தணல்வெயிலில்
தண்மேகமும் வறண்டுபோகும் ;
சுகிக்கின்ற சுரகுலமும் ,
சுடுகாட்டால் சுகமிழக்கும் . 100.
பொருள்
பாலை ....அதுவும் கோடைப்பாலை; வெய்யில் தணல் இரண்டும்
கூடி , எரிந்து தகிக்கிறது .நிலமெல்லாம் தாங்கமுடியாமல் தவிக்கின்றது
உயிர்கள் தாகத்தால் ஏங்குகின்றன ; வானமும் வாடுகிறது ; வான்மேகங்கள்
வளமிழந்தன ;நீர்ப்பதம் இழந்தன ;வறண்டுபோய் மலட்டுத் தன்மை
பெற்றன . எந்நிலையிலும் தங்கள் சுகபோகத்தை இழக்க விரும்பாத
தேவகுலத்தவரும் ,எரிகின்ற சுடுகின்ற காட்டுத் தீயால் தாங்களும்
சுகமிழந்து தவித்தனர் ;
வந்தவான வெண்ணிலவு,
வளர்ந்துஎரி வனத்தீயால்
வந்தவெப்ப வரிவியர்வை
சிந்திடுமே செம்பனியாய் . 101.
பொருள்
மாலை வந்தது; வானத்து வெண்ணிலவும் உதித்தது; அந்த வெண்ணிலவைச்
சுட்டெரித்தது,காட்டுத்தீ. வானம்வரை வந்த அக்காட்டுத்தீயால் குளிர்நிலவும் வெப்பத்திற்கு
ஆளாயிற்று. நிலவுக்கு வியர்வை; வழிந்தது வியர்வை; அதுவே செம்மை மிகுந்த பனித் துளி
ஆகி நிலத்தில் சொட்டியது; அத்துளியும் சுட்டது.
நிழல்தேடி நிலம்தேடி
நலம்தேடி நாளெல்லாம்,
அழல்விட்டு, அனல்விட்டு,
அகன்றோடும் நம்நிழலே . 102.
பொருள்
சுட்டுப்பொசுக்கும் காட்டு வெப்பத்தில் சிக்கிக் கொண்ட, நமது நிழல், (நிழலையுடைய
நாம்) முதலில் வெய்யில் கொடுமையைப் போக்க நல்ல நிழல் தேடி அலையும்; அடுத்துக்
கால்கள் சுடாது நிற்கவும், உடல் சூடு தணியவும் பொசுக்காத குளிர் நிலம் தேடி அலையும்;
உடலைப் பாதுகாக்க, நிழல்தரும் மரத்தடியும், குளிர்க்காற்றுக்கு மரங்களின் ஆதரவும் தேடி
அலையும்; நாள்முழுவதும் காடெல்லாம் சுற்றித் தேடும். எதுவும் இல்லாது பொசுங்கும்
காட்டிலே மேலும் தேட வழியில்லாமல் தீ தணல் இவைகளை விடுத்தும், கொழுந்துவிட்டு
எரியும் நெருப்பை விடுத்தும், அகன்றோடுவோம். நம்மை விட நமது நிழல் முதலில் அகலும்.
காரணம் நிழலான தன்னையும் காட்டுத்தீ பற்றிக்கொள்ளுமோ? என்ற அச்சம்.
கரமரங்கள் கொடைமரங்கள்
காலத்தால் கருகியதால்,
உரமிழந்த உயர்ந்தோன்போல் ,
உயிரிழந்து ஒடுங்கிநிற்கும். 103.
பொருள்
காட்டிற்கு வருவோரை வரவேற்கும் காற்று; இனியமணப்பூக்கள் ; வயிறார உண்ண
நற்கனிகள்; குளிர்நிழல்; போன்றவற்றைத் தன் கரக் கிளைகளால், செயற்பாட்டால் வழங்கும்
அக்காட்டு மரங்கள் கொடை வள்ளன்மை கொண்டவை ஆகும். ஆனால் இன்றோ
வெப்பத்தீயால் கருகிப்போயின. வள்ளன்மை மிக்க ஒருவன் தன்னால் மற்றவர்க்கு ஒன்றும்
கொடுக்க இயலாத வறுமை வந்த காலத்தே, உயிரையே இழப்பான்; அதுபோன்று
இக்காட்டிலுள்ள கொடை மரங்களும் தீயில் உயிரைவிட்டு, ஒடுங்கிக் கரிக்கட்டையாய்
நின்றன.
கனிமரங்கள் கனிவிழந்து
நனிஇழந்துத் தனியாயின;
பனிபோர்த்த அணிமலர்கள் ,
முனிநெருப்பில் சனியாயின. 104.
பொருள்
காடுமுழுவதும் காய்த்துக் குலுங்கும் கனிமரங்கள்; அவைகள் காட்டுத்தீயால்
தங்களது உயர்குணத்தைக் கொடைத்தன்மையை இழந்தன; எரிந்த தன்மையால் அழகும்
இழந்தன; சோலையாக விரிந்த பெருங்கூட்டமாக நின்றவை இன்று கருகித் தனியாக
நிற்கின்றன;அம்மரங்களின் சுற்றுப்புறத்தே நிறைந்திருந்த பசுமை போர்த்திய செடிகள்;
பூத்துக் குலுங்கிய செடிகள்; குளிர்ச்சிமிக்க பனிப்போர்வை போர்த்தியிருந்த செடிகள்
அவைகளிலே மலர்ந்த நறுமணமலர்கள், சினமுற்ற முனிவன் பார்வைபோல் தகிக்கும்
நெருப்பில் வாடி,வதங்கி, வடிவிழந்து, கருகிக் கருமை நிறத்தை அடைந்தன.
நெடுவானம் தொடுவானமே;
மடுப்பொய்கை கொடுமேடு ;
கடுங்கூற்று அடுபக்கம் ;
காட்டாறும் கனலாறே . 105.
பொருள்
தொடமுடியாமல் மிக உயரத்தில் விளங்கும் வானம், சூடுமிக்க சூரியன்,
கொடும் சூடுடைய கோள்கள் எல்லாம் இங்கு தொடும் அளவு அருகே வந்து
-விட்டனபோல் காட்டு நெருப்பு பொசுக்கிடுமே. அவ்வெப்பத்தால் மிக
ஆழமான மடு ' என்றழைக்கப்படும் பொய்கையோ நீர் வறண்டதோடு நில்லாமல்
நீர் தீ நோக்கி மேல் எழும்பியதால் மேடாகி,அதுவும் சூடாகிக் கொடுமை நல்கும்.
கூற்றுவனைத் தேடி அவன் நாடு செல்லவேண்டா. அவன் இதோ பொசுக்கும் காட்டினுள்
நிரந்தரமாகத் தங்கிவிட்டான் .காட்டையே அடித்துச்செல்லும் காட்டாறும்
கனல் ஆறாய் அலைக்கழிக்கிறது.
4.கோயில் பாடியது .
பாலை நிலத்துக் கடவுள் கொற்றவை;காளி ; அவள் வீற்றிருக்கும்
கோயிலின் சிறப்பு, வழிபாட்டுமுறை, கோயில் அமைப்பு போன்றவற்றைப்
பாடுவது.
பழங்கோயில்
மாமுருகன் தனைப்பயந்த,
மாதரசி; மாகாளி;
ஓம்பிரணவம் உதயத்தே
உதித்ததுவே முதுகோயில் . 106.
பொருள்
அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்தவனாகிய முருகனை
ஈன்றெடுத்த அன்னை; கொற்றவை, காளி என்று போற்றப்படும் அன்னை
ஓங்காரி; அந்த ஓம் எனும் பிரணவம் அதன் ஒளி, கீழ் வானத்தே
அதிகாலையில் தோன்றும் ஆதவ ஒளிபோல் இருளை அகற்றும் தனமை
கொண்டு,அரக்கர்களை அழிக்கும் அன்னையின் பழமை மிக்கப்
பெருங்கோயில் காட்டகத்தே உதித்தெழுந்தது.
கோயில்விமானம்
இந்திர விமானமோ!
சந்திர மணிக்கற்களோ!
செந்தீவளர் செவ்வேள்வியோ!
செந்தாமரைச் செவ்விதழோ! 107.
பொருள்
காளிகோயிலின் மேல்விதான விமானம் இந்திரனால்
விண்ணகத்தில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டதோ ?
குளிர்ச்சியும் வெண்மையும் மிகுந்த சந்திரகாந்தக் கற்களின்
கூட்டமோ? மாமுனிவர் வளர்க்கும் வேள்வியில் எழும் ஆஹுதி
ஜ்வாலையோ? விரிந்து விளங்கும் செந்தாமரையின் செவ்விதழ்களோ,
என்னும்படி அழகுற அமைந்திருந்தது.
கோயிலமைந்தவிதம்
ஆடலானோ டாடலாலோ?
ஆதிதானெனச் சூடலாலோ?
ஏடலாளின் கூடலாலோ?
தேடுசெல்வி பாடலாலோ? 108.
பொருள்
ஆடலரசனான நடராசப்பெருமானோடு போட்டியிட்டாடும்
ஆட்டநாயகி ஆன தன்மையாலோ? எந்த நிலையிலும் அனைத்திற்கும்
மூத்த தாய் தானே' என்ற தன்மையாலோ?
கலைமகளின் கனிவுசார்ந்த தோழமை கொண்டதன்மையாலோ?
செல்வத்தலைவி இலக்குமியின் பணிந்து போற்றும் பாடலாலோ ?
அம்மையே ! தங்கள் சிறப்படைவது எதனால்?
தேவதேவன் வீற்றருளும் கோயில் .
தேவதேவன் திக்குவெற்றி;
பாவகூட்டம் பணிந்தவெற்றி;
மேவுவான சோதிவெற்றி ;
மேவினானோ தேவிகோயில் . 109.
பொருள்
மூவருக்கும்,தேவர்களுக்கும் முதல்வனான சிவபெருமான்,
அனைத்து உலகங்களையும் எல்லாத்திசைகளையும் வென்றவன்;
பிறவிப்பாவங்களைப் புரியும் தேவர்களும்,அரக்கர்களும், மானிடர்களும்
பணிந்து, போற்றுகின்ற வெற்றி பெற்றவன்; தானே முதல்வன் ' என்னும்
நிலையில் பிரம்ம விஷ்ணுக்கள் காண இயலாத வடிவமாம் ஒளி
வடிவத்தில் நிலமும் வானும் தொடும் அளவு , கால் நிலத்தினுள்ளும்,
முடி வான்வெளிக்குள்ளும் மறைந்திருக்குமாறு வடிவம் கொண்டு,
அவர்களது கர்வம் அடக்கி வென்றவன்; அச்சிறப்புமிக்க சிவபெருமான்
காளியின் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்.
புதுக்கோயில்
சடசடவெனச் சமர்மழைவிண்
படபடவெனப் பாரழிப்படை ;
கடகடவெனக் கார்சிரிப்பு;
நடநடவென நடந்ததுவிதி. 110.
பொருள்
வானத்தே போர்ப்படை ஒலிபோல் ஒலித்துக் கொண்டு சட சட என்ற
ஒலியுடன் பொழிகிறது மாமழை; அதன் படபட ஒலி உலகையே
அழிக்கவந்த பெரும்படைபோல் காட்சியளிக்கிறது. வானத்துக்
கருமேகங்கள் கடகட எனப் பேய்ச்சிரிப்பு சிரித்துவிட்டு, மழைச்சிரிப்பை
வீசுகின்றது. காலத்தில் நடக்கவேண்டிய எல்லாம் ஊழின் பயனாய்
விளைகின்றது.(கொடுமை மிக்க அரக்கர்களின் கொடுமையைக்
கொடுந்தீயை வானமழை போல வந்து காளியின் புதல்வன்
அழிப்பான்' என்பதை இவ்விதி எடுத்துக் காட்டுகிறது.)
வரத்தாலே சிறைப்பட்ட,
திறத்தாலே தேம்பியழ,
உரனென்னும் தோட்டியானோ
உருவாக்கினான் செந்தீமகன். 111.
பொருள்
கொடுந்தவத்தினால் இறவா வரம்பெற்ற சூரனும், அவனது தம்பியரும்,
விண்ணுலகத்தையும், விண்ணவர்களையும் படாத பாடு படுத்தினார்கள்;
தேவ உலகைத் தமது ஆட்சிக்குள் கட்டுப்படுத்தினார்கள்.தேவர்களைச்
சிறையில் அடைத்தார்கள்;இந்திரன் ஒடி மறைய, அவன்மகன் ஜெயந்தனும்
பிறரும் சிறையில் வாடிவதங்கினார்கள். இறைவனிடம் முறையிட்டுத்
தேம்பியழுதார்கள். கலையாத சிந்தனை ; நிலையான மனம்;
ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் ஞானமும் கொண்டு விளங்கிய
சிவபெருமான் தேவர்களைக் காக்கவும், அரக்கர்களை அழிக்கவும்
வல்லமை பொருந்திய வீரனாம் மகனைப் படைக்கத் தனது நெற்றிக்
கண் சுடரைப் பயன்படுத்தினார். அங்கு தோன்றிய தீப்பொறி வீரமகனாக
உருவெடுத்தது.அச்சுடரே முருகன்.
சரவணத்து நிறைகுணத்தன்,
அரவணைத்துக் கந்தனெனத்
திறம்போற்றிய அறத்தாய்க்கு,
மறக்கோயில் மாண்பெடுத்தார் . 112.
பொருள்
நெற்றிக்கண் எழுந்த தீப்பொறியை, வாயுவும், அக்கினியும்
தாங்கமுடியாமல், கங்கையில் விட , அன்னவளும் தாங்கமுடியாமல்
தவிக்க, அப்பொறியைச் சரவணப்பொய்கையில் விட்டனர்.
அங்கே தோன்றிய அச்சுடர் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன.
அவ்வாறு குழந்தைகளையும் காணவந்த சிவபெருமான், தனது
மனையாளாகிய உமையம்மையிடம் குழந்தைகளைக் காட்ட,
அன்னையும் அகமகிழ்ந்து, ஆறுகுழந்தைகளையும் அரவணைத்தாள் ;
அன்பு செலுத்தினாள் ; ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள் ; கந்தன்'
எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தாள். அவ்வாறு தனது திறனை உலகறியச்செய்த
அறமே உருவான தாய்க்கு, காளிமாதேவிக்கு, வீரமே உருவான கோயிலை
நடுக்காட்டினுள் படைத்தான் ஆறுமுகன். அதுவே அன்னையின்
புதுக்கோயிலாக உருவெடுத்தது.
குழந்தை விளையாட்டு
இளவயதில் இகலாடலில்
ஏழுலகும் கலங்கிடவே,
களங்கண்ட கணக்கற்ற
கார்க்கூட்டம் நடுங்கிடவே,, 113.
பொருள்
சரவணத்தில் அவதரித்த முருகன் இளங்குழவிப் பருவக்காலத்தில்
விளையாட்டாகப் போர் நிகழ்வைத் தொடங்கினான். அவனது வில்,வேல்,
ஆற்றல்கண்ட ஏழுலகும் கலங்கிற்று. பிரும்மஉலகு ,சத்ய உலகு
போன்றவைகளும் நடுங்கின; யார்? எதற்கு? இப்போர்? தங்களை
அழிக்க விண்ணவர்கள் முற்படுகின்றனரோ? என எண்ணி,எதிர்த்த
கணக்கற்ற அரக்கர் கூட்டம் போரிட இயலாது,பின்வாங்கி ஒடி
ஒளிந்து நடுங்கினர்.
விண்ணவரும் வேல்பெருமை ,
உணராது போரிடவே,
கண்ணிமைப்பில் நிலைகுலைந்து,
விண்பெருமை இழந்துநிற்க,, 114.
பொருள்
அரக்கர்களைப்போலவே விண்ணவர்களும், போரிடுபவர் முருகன் என்றோ, அவரது வேலின் பெருமை மகத்தானது என்றோ உணராமல் தாங்களும் போரிட்டனர்;நொடியளவில் படைபல பராக்கிரமங்களை இழந்து, நடுநடுங்கி,ஒடி ஒளிந்தனர்.
நான்முகனும், நடுங்கிநின்று,
நன்மணிகள் பரிசளிக்கப்
பாற்கடலோன் பயந்தோடப்
பற்றியதோ எட்டுதிக்கு. 115.
பொருள்
பிரும்ம உலகில் அஞ்சிய நான்முகன் நடுங்கியபடி வணங்கி,
நன்மணிகளைப் பரிசாகச் சமர்ப்பித்து நின்றார். பாற்கடலில்
பள்ளிகொண்டவன் பாய்ந்துவரும் வேற்கதிர் கண்டு, அஞ்சி ஓடினான்.
போரின் முடிவு எட்டுத்திக்குகளும் முருகனுக்குக் கட்டுப்பட்டன.
மாவெற்றி மாகாளி
மறம்போற்ற, மனமகிழ்ந்து,
மாக்கோயில் மலர்ந்திடவே,
மாமுருகன் மனம்கொண்டான். 116.
பொருள்
விண்ணவர்களையும், பிரும்மாவிட்டுணுக்களையும் . மூவேழ் உலகையும்,
அரக்கர்களையும் வென்ற மாபெரும் வெற்றியைத் தந்த, அன்னையாம் மாகாளிக்கு,
நன்றிக்கடனாக, வீரச்செறிவு உலகோர் அறிய, வாழ்த்துவதற்கு மனம் கொண்ட
முருகன், மகிழ்வோடு மாபெரும் கோயிலை காட்டினுள் உருவாக்க முடிவு செய்தான்;
அவ்விலங்குமரனின் எண்ணப்படி எழுந்தது கோயில்.
கோயில் எழுச்சி
விளையாட்டுப் போர்க்களத்தே,
வினையறியா வீணர்களின்
தலைக்கொழுப்பைத் தரையாக்கித்
தண்ணீராய்க் குருதிசேர்த்து, 117.
பொருள்
குழந்தை விளையாட்டாய்த் துவங்கிய வீரவடிவேலனின் போர்ச்செயலை,
இன்னதென்று அறியாமலும், வீரம் புரியாமலும், தேவசேனாதிபதியாகி அரக்கர் கூட்டத்தை
அழிக்கத் தோன்றியிருக்கும் அவதாரம் உணராமலும் போரிட்ட வீணர்கள்,
வீழ்ந்தழிய, அவர்தம் ஆணவம்மிக்க தலைக்கொழுப்பினைத் தரை தளமாக ஆக்கி,
கட்டடக் கலவையில் கலக்கும் நீராக, அவர்களது குருதியைக் கலந்து,
படையானை மடக்குதிரை
அடையாளி தடம்வீழக்
குடைந்தெடுத்த இடையெலும்புக்
கூடைகூடு கல்லாக்கிப் , 118.
பொருள்
போரிலே பட்டொழிந்த யானைகள், குதிரைகள், யாளிகள், இவைகளின்
ஓலம் அடங்கியபிறகு, அவைகளை வெட்டிக் குடைந்தெடுத்த அவைகளின்
விலா எலும்புகளை அடுக்கி, வரிசைப்படுத்தி, முறையாகக் கட்டுவதற்கேற்ப,
கற்களாக அமைத்து.
பாற்கடலில் பற்றியெடுத்த,
பல்மணிகளைப் பதித்ததோடு,
நாற்புறமும் நனிமகுடத்
தோள்வைரம் மேலிட்டு, 119.
பொருள்
பணிந்து போற்றிய திருமால் வாழும் பாற்கடலில் கைப்பற்றியகாலை , அங்கு
எடுக்கப்பட்ட வைர,வைடூர்ய, மாணிக்க மணிகளை அத்தரையில் அழகுறப்பதித்து,
அக்கூடத்தின் சதுரப் பரப்பினிலே தோற்று ஓடியோர் மணிமகுடவைரங்களையும்,
தோளிலும் ,மார்பிலும் அணிந்த ஆபரண வைரங்களையும் தேவதச்சன் செயல்போல்
சதுரக் கோடாகப் பதித்து,
வீழ்ந்ததலை சூழ்ந்தமதில்
ஆழ்ந்தபலம் ஆனதுவே;
கூழுதசை சேறுபூசிப்
பாழுடலின் பங்குசேர்த்து, 120.
பொருள்
தரை பதித்தபின் நான்குபுறமும் பாதுகாக்க மதில் எடுத்தனர்; போரிலே பட்ட
வீரர்களின் தலைகளை எல்லாம் வரிசையாக அடுக்கி, அவைகளின் இணைப்பிற்கு,
வழிந்தோடும் குருதி, வீழப்த உடல்களின் தசைக்கொழுப்பு, இவைகளைச்
சேறாகப்பூசி ,உருவாக்கிய மதில் பலமான காப்பு ஆயிற்று.
விண்தொட்ட விரிமதிலின்
கண்கூர்மைக் கருந்தலைகள்,
மண்பார்க்க மனமஞ்சும்
தண்குருதித் தான்வழிநிலை , 121.
பொருள்
வானத்தைத் தொடும் அளவு உயர்நத அந்த மதிலில் பதிக்கப்பட்டிருந்த தலைகள்,
இமைகள் மூடாது விழித்துப்பார்க்கும் வீரக்கண்கள், குருதி காயாத தலைகள்,
நிலத்தை நோக்கிப் பார்த்தபடி அமைந்திருந்தன; அவைகளின் பார்வையே அச்சத்தைத்
தருவன; அதோடு வெட்டப்பட்ட அத்தலைகளின் பசுங்குருதி அப்படியே வழியும்
நிலையைப் பார்த்தால் அஞ்சி அஞ்சி நடுங்கி ஓடுவர் மண்ணக மாந்தர்.
மதில்களை அழகு படுத்தி....
இந்திராணி இடையணிமணி,
இலக்குமியின் மார்பணிமணி,
விந்தைமக்கள் கழுத்தணிமணி,
முந்தைய முறைபதித்து, 122.
பொருள்
உருவாக்கிய கோயில்மதிலை மேலும் அழகு படுத்தினர்; இந்திரன் மனைவி
அணிந்திருந்த ஒட்டியாணம், போன்ற ஆபரணங்களின் நவமணிகள், இலக்குமி
அணிந்திருந்த பதக்கங்களின் மணிகள், சரஸ்வதி தேவி அணிந்திருந்த
ஆரங்கள், சங்கிலிகள் , அவைகளில் பதித்திருந்த மணிகள் இவைகளை
எல்லாம் அழகுற முறைப்படுத்திப் பதித்து அழகு படுத்தினர்.
வீரவாகுவின் சூரநகர் மணிகள்...
தூதுபோன வீரவாகு
வாதுஏற்க மறுத்திட்ட,
சூதுமன்னன் சூரநகரைச்
சேதமாக்கிக் கைக்கொண்டவை, 123.
பொருள்
முருகனால் தூதாக அனுப்பப்பட்ட வீரவாகு, சூரன்முன் எடுத்துரைத்த தூதினைக்
கேளாமல், தூதாக வந்தவனைத் துன்புறுத்தப் படைத்தலைவரை ஏவிய காலத்தில்,
அவரோடு போரிட்டு, அந்நகரையே அழித்த காலை, அவர் கைப்பற்றிக் கொணர்ந்த
பல்வேறுபட்ட மணிவகைகளைப் பதித்து,
யானைத்ததந்தங்கள்
தசமுகன், சதமுகன்
பசைத்தலைப் பணியாநிலைக்
கசம்பல களத்திலழி
கஜதந்தம் கலைப்படுத்தி, 114.
பொருள்
மகேந்திராபுரத்தில் வீரவாகுவைத் தூது வந்தகாலை எதிர்த்த சூரனின் தளபதிகள்
தசமுகனும்,சதமுகனும் போரிட்டுத் தோல்வி அடைந்து ஓடினர்; அப்போரில்
யானைகள் நூற்றுக்கணக்கில் போரிட்டு மடிந்தன; அப்போரில் பல்வேறு பொருள்களோடு
யானைத் தந்தங்களையும் கைப்பற்றி வந்தார் வீரவாகு. அத்தந்தங்களை மதிலிலும்
பிற இடங்களிலும் அழகுறப் பதித்தனர்.
விதானம்
இந்திராதிப் பிரமதேவர்
தோற்றகாலைப் பற்றிட்ட
விந்தைமிகு வெற்றிக்கொடிகள்
விதானமாய் விளங்கவைத்து, 115.
பொருள்
குழவிப்பருவத்தில் விளையாட்டாய்த் தொடங்கிய போரிலே, பல்லோரும் தோற்று,
ஓடினர்; தேவர்களும்,அரக்கர்களும் அஞ்சி, அரண்டு ஓடி ஒளிந்தனர்; இந்திரனும்
தோற்றான்; அட்ட (எட்டு) திக்பாலர்களும் தோற்றனர்;பிரமனும்,திருமாலும் தோற்றோடினர்;
அப்பொழுது அவர்களிடம் பற்றப்பட்ட அவர்களது அன்னக்கொடி,கருடக்கொடி, போன்றவற்றை
அன்னையின் மண்டபங்களுக்கு மேல் விதானமாக வரிசைப்படுத்தி அமைத்தனர்.
தூண்கள்
வேண்டிநின்ற விநாயகரால்
மூண்டுவந்த யானைப்படை
தோண்டியழி கா,மரங்கள்
தூண்களாய்த் தோன்றிநிற்க, 116.
பொருள்
அன்னையை வணங்கவந்த விநாயகப்பெருமான், கருணையால் திரண்டுவந்த
யானைக்கூட்டம் காட்டுமரங்களைத் தோண்டியெடுத்துப் போட்டன; அம்மரங்களே
காளிகோயிலின் தூண்களாக உருவாயின.
மதில்சிற்பங்கள்
அடுக்கடுக்காய் என்புவரிசை
அழகுவெள்ளி மாமதில்கள்;
நடுக்கமில்லாப் பலித்தலைகள்
நடுங்குமதில் சிற்பங்கள். 117.
பொருள்
போரிலே பட்ட யானைகளின் விலா எலும்புகள், குதிரை எலும்புகள், வீரர்தம்
எலும்புகள் இவைகளை ஒழுங்குபடுத்தி, வரிசையாய் அடுக்கிக் கட்டப்பட்டவை
கோயில் வெள்ளிநிற மதில்கள் ஆகும்; அம்மதில்களின் மீது அலங்காரமாய்
வரிசையாய் வெற்றி வேண்டித் தமது தலையைப் பலி கொடுக்கும் வீரமிகு
தலைகளை அமைத்து அழகு படுத்துவர்; அத்தலைகளோ பார்ப்போரை அச்சுறுத்தும்.
பலித்தலைப்பண்பு
பலியான தலையெல்லாம்
புனிதவேதம் பணிந்துரைக்கும் ;
தனியான தண்ணுடலோ
தாள்பணிந்து தான்வணங்கும் . 118.
பொருள்
தானே விரும்பித் தனது தலையைத் தானே பலிகொடுக்கும் பொழுது,
வெட்டுப்பட்ட அத்தலை, தேவியின்முன் தான்கற்ற நான்மறைகளை முறைப்படி
ஓதும்; வெட்டுப்பட்ட பச்சை இரத்தம் காயாத அவ்வுடலோ அப்படியே நிலத்தில்
விழுந்து, தேவியைப் போற்றி வணங்கும்.
கோயில் விளக்கு
ஈமதீபம் சோமதீபம்;
இடுகாட்டு எரிகட்டைச்
சேமதீபம் ; செங்குருதி
சேர்தீபம் சோதிவிடும். 119.
பொருள்
காளியின் கோயிலிலே எரிகின்ற விளக்குகள் பெரும்பாலும் இறுதிச்
சடங்கிற்கு ஏற்றப்பட்ட விளக்காகவே அமையும். அதுவே மங்களவிளக்காக
எரியும். சுடுகாட்டின் பிணம் எரிக்கப் பயன்படும் எரிக்கட்டைகளின் ஒளியும்
நன்மை தரக்கூடிய விளக்காக அமையும்.அவ்விளக்குகளுக்கு எண்ணெய்யாக
செம்மை வாய்ந்த இரத்தக்குழம்பே ஆகும்;இப்படிப்பட்ட விளக்குகளே கோயில்
முழுவதும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.
நரபலி
விலங்கினப் பலிதவிர்த்துக்
கலங்காதது, நரபலியே ;
களம்காணும் கழல்வீரன்
உளமொன்றி அளிபலியே . 120.
பொருள்
காளிதேவிக்கு விலங்குகளைப் பலியிடல் மரபு. அதனைத்
தவிர்த்து, நிகரற்ற காளிக்குத் தன்னையே பலியாகத் தானே தன்தலையை
அஞ்சாமல்,கலங்காமல் வெட்டிப் பலிகொடுத்தல் மிகஉயர்ந்தது. களம்
கண்டவன், வெற்றி அடைந்தபின் அதற்குக் காணிக்கையாகத் தனது
தலையை,மகிழ்வோடும், பரவசத்தோடும் கலங்காமல் வெட்டிக் கொள்வான்.
உள்ளம் ஒன்றிய அப்பலியே அன்னை விரும்பும் பலியாகும்.
திருமெழுக்கு
கோயிலெல்லாம் குருதிமெழுகல்;
வாயிலெல்லாம் தசைக்கோலம்;
மாவிலையோ ஆவியின்கை ;
தூவுமலர் துவள்சிசுத்தலை . 121.
பொருள்
கோயிலைத் தூய்மைப் படுத்த முதலில் மெழுகினர்; மணிகள் பதித்த
தரைத்தளம் முழுவதையும் பலிக்காலம் வழிந்த குருதியைச் சேமித்து
மெழுக்கு இட்டனர்; கோயில் வாயிலிலே பலியிட்ட உடல்களின்
சதைப்பகுதியை நன்கு கரைத்துக் கோலம் போட்டனர்; தோரணமாக
மாவிலை கட்டுவதுபோல் இறந்து திரியும் ஆவிகளின் கைகளைக்
கட்டினர் ; பலியிடப்பட்டு, ஆங்காங்கு துவண்டு கிடக்கும் குழந்தைத்
தலைகளைக் கோயிலெங்கும் மலர்களாகத் தூவினர் .
கோயிற்படிகள்
படிக்காத வேதத்தார்,
படியாத வாதத்தார்,
தொடிநங்கை தூஷித்தார்
படியாகக் கிடந்தனரே . 122.
பொருள்
நான்மறைகளை முறையே கற்று ஓதாத அந்தணர்களும், வீண்
வாதம் செய்து, நன்மை வழி சாராத கூட்டத்தினரும், மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையர்களும், தாம் செய்த பழிபாவம் போக
இங்கு வாயிற்படியாகக் கிடந்தனர். இறந்தபின்னர் பாவம் உணர்ந்து
கோயில் படியாகக் கிடந்து தேவியின் முகம் நோக்கிக் கிடந்தனர்.
மும்மலங்களே மண்டபங்கள்
ஆணவத்தான் அதிசூரன்,
மாயத்தான் யானைமுகன்,
கன்மத்தான் சிங்கமுகன்
நின்றனரே மண்டபங்களாய். 123.
பொருள்
தேவாசுரப் போரிலே மாமுருகன் வீழ்த்தியருளிய ஆணவச்சூரனும்,
மாயத்தாரகனும், கன்மச்சிங்கமுகனும் தங்கள் பாவங்கள் நீங்க, இங்கே
கோயில் மண்டபங்களாக, மண்டபம் தாங்கும் தூண்களாக நின்று
காளியைப் போற்றினர்.
கோயில் அர்ச்சகர்கள்
எரிகாட்டு ஏவலர்கள்,
உரியில்லா உடலினர்கள் ,
விரிமுடியினர் வெங்கண்ணினர்,
கரிப்பேய்கள் அர்ச்சகர்கள். 124.
பொருள்
அக்கோயிலில் வீற்றிருக்கும் காளியைப் பூசனை செய்யும்
அர்ச்சகர்களாக, பூசாரிகளாக, விளங்கியவர்கள் சுடுகாட்டில் பிணத்தை
எரிக்கும் ஏவலர்கள், உடையணியாத நிர்வாணஉருவங்கள் ,
விரித்துப்போட்ட பரந்த முடியினை உடையவர்கள்,வெம்மையான
சினம்கொண்ட கண்ணை உடையவர்கள்,கரியநிறம் கொண்ட
பேய்கள், ஆவார்கள்.
கோயிலைச்சுற்றி இருப்பன
மோகினி, இடாகினி,
முதுபேய் , குறைப்பேய்,
தாகினி , தலையிலாள் ,
கொள்ளி வாய்ப் பேய்களாமே . 125.
பொருள்
காளியைச்சுற்றி எப்பொழுதும் இருப்பவர்கள் .... மற்றவர்களை
மயக்கும் மோகினி, தவறுசெய்பவர்களை அப்படியே தூக்கி
நெருப்பில் போடும்,இடாகினி, தொன்மையான வயதுற்ற கிழப்பேய் ,
காலோ,கையோ இல்லாமல் நொண்டும் குறை உடைய பேய்,உயிர்களின்
இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் தாகம் உடைய பேய், தலை
உடலுக்குள் பதிந்திருக்கும் முண்டமான பேய்,எப்பொழுதும் கொழுந்து
விட்டெரியும் நெருப்பை வாய் முழுதும் கொண்ட பேய் ஆகியன
கோயிலையும்.தேவியையும் சுற்றி நிற்பார்கள்.
கோயில் அமைவிடம்
குருதியாறு கோயில்புறம் ;
பெருந்தீயெரி சுடுகாடு;
உருமிமேளம் ஓங்குசுருதி;
விருதுநிலம் அமுதுகுருதி. 126.
பொருள்
காலி கோயிலின் பக்கத்தே ஓடுவது இரத்த ஆறு; அதுவே
புண்ணிய நதி ஆகும். கோயில் விளக்கும் வெளிச்சமும் சுடுகாட்டுத்
தீயே ஆகும்.எப்பொழுதும் ஒலிக்கும் உருமி ' மேளப் பெரும் ஒலியே
மங்கள இசை ஆகும். எப்பொழுதும் விருந்து கொடுக்கும் இடம் அது.
காக்கை,கழுகு, பேய்கள் விருந்தினர்கள். அங்கு வழங்கப்படும் அமுது
குருதியே ஆகும்.
5.தேவியைப்பாடியது.
தேவியின் பெருமை
வில்வேலன் விளைவீர
வேல்வாங்கச் சூல்கொண்டாள் ;
கல்லாலத் தொல்லாளன்
நல்லிதயம் தான்கொண்டாள். 127.
பொருள்
வில்லையும்,வேலையும் தனது படையாகக் கொண்டவன் முருகன்.
அவனது வீரநிகழ்வுகள் மூவேழ் உலகிலும் பெருமையும், சிறப்பும்
பெறுவதற்கு, அடித்தளமாகத் தானே தவமிருந்து பெற்ற வேற்படையை
மகனுக்கு அளித்தவள்' கல்லால மரத்தினடியில் அமர்ந்து, ஞானம்
உபதேசிக்கும் முழுமுதற்கடவுளான , சிவபெருமானின் மனத்திலே இடம்
பிடித்து, உடலிலே சரிப்பாகமும் பெற்றவள். உமாதேவி' என்றழைக்கப்படும்
காளிதேவி ஆவாள்.
எல்லாம் அவளே
போற்றிடத் தோன்றின் சொல்லும் அவளே;
சாற்றும் கருவும், கனியும் , அவளே;
சேற்றுள் தாமரைச் செந்தீ, செம்பொன்,
ஊற்றுள் ஊறுநீர், உலகமும் அவளே. 128.
பொருள்
தேவியைப் போற்றிட முனைந்து, சொல்லைத் தேடினால் , அந்தச்
சொல்லாகவும்,அதன் பொருளாகவும் விளங்குபவள் அவளே. சொல்லப்படும்
உலக உற்பத்தித் தன்மை வாய்ந்த கருவாகவும், கருவின் பலனாம்
கனிப்பொருளாகவும் விளங்குபவள் அவளே. சேறாகவும் சேற்றுள்
தோன்றும் செந்தாமரை மலராகவும் விளங்கும் குளிர்மை அவளே.
வாட்டிப்பொசுக்கும் கொடும் தீயும் அவளே. நிலத்தடியெல்லாம் நிறைந்து
இருக்கும் பொற்கட்டியும் அவளே.நீரூற்றாகவும், ஊற்றும் சுரக்கும்
நீராகவும் விளங்குபவள் அவளே.ஏன் ? இந்த உலகமெல்லாம் அவளே.
மாகாளி மாப்புராணம்
ஊசிமேல் நின்று,தவம் ஊருலகு காத்ததுவும்,
பாசிமேல் மலராகித் தோன்றியதும், தொன்மைக்கு,
ஆசிபெற, ஆசையாய் ஐந்தில் அமர்ந்ததும்,
மாசிலா மாகாளி மாப்புராண சாராம்சம். 129.
பொருள்
பிருதுவித் தலமாகிய திருவாரூரில் மண்ணெல்லாம் நலம் பெற,
ஒருகால் பத்மாசனத்திலும் , மறுகால் ஊசிமுனைமேல் நின்றபடித் தவம்
செய்யும் கமலாம்பிகை என்னும் மாகாளியே ஆகும்.
நிலவுலகிலே தக்ஷனுக்கு மகளாக அவதாரம் செய்ய,நதிநீராட வந்த
அவ்வரசன்முன் நீரின்மேல் மலராக, மலருள் மகவாக அவதரித்ததும்
காளியே ஆகும்.
மூவருக்கும் முதல்வனான சிவனின் அருள்பெற்று, அவனுடலில் சரிபாதி
பெற்றும் ,தொன்மையை அவனோடு பங்கிட்டுக் கொள்ளவும், தக்ஷனுக்கு
மகளாக அவதரித்தும், ஐந்து வயதில் சிவனருள் பெறத் தவத்தில்
அமர்ந்ததும், சிவனையே மணந்து, சரிபாகம் பெற்று. மூவுலகும்
போற்றி வணங்கத் தொன்மை பெற்றதும் மாகாளியின் புராண
மேம்பாடுகள் அல்லவா!
ஊர்த்வ தாண்டவம்
ஆத்மநாதன் தன்னோடு, ஆடவரும் அகிலத்தில்
சீதகுளிர்ச் செம்பாதம் சேர்ந்திசைச் சதங்கைகள்,
காதணிகள் காட்டிநின்ற கால்மேலே கணநேரம்
ஈதன்றோ இறைப்பெருமை! எனப்போற்றும் எழிலாளே . 130.
பொருள்
உலக ஆன்மாக்களின் தலைவன், தனது மனத்துள் நாளெல்லாம் தான்
போற்றும் தலைவன், அவனோடு,நிகராகத் தானும் உலகறிய ஆதிமகிழ்ந்த
காலை , ஆட்டவேகத்தில் தனது காதில் அணிந்திருந்த குழையாகிய அணி
நிலத்தில் வீழ, அதுகண்டு ஆடியபடியே, குளிர்ச்சியும், கருணையும்
இணைந்த கால்; ஆட்டத்திற்கேற்ப ஒலித்தபடி விளங்கும் சதங்கைகள்
கட்டிய அந்தக்கால் கீழே கிடந்த காதணியை மெல்லப்பற்றிய படியே
வான் நோக்கி எழுந்ததே! அந்நொடி அந்நேரம் அச்செயல் !
இதுவல்லவா! ஆடலரசனின் பெருமைக்குச் சான்று! என வியந்து தன்
ஆட்டத்தையே மறந்து நின்றவள் ; தோற்றாலும் தூய செயல் போற்றிய
பேருள்ளம் கொண்ட பேரரசி மாகாளி ஆவாள்.
சிலம்பணிந்த சீர்மை
சிலம்புவில் சிவபெருமான் மகிழ்ந்திடவே சிலம்பணிந்தாள் ;
சிலம்புதோறும் குடிகொண்ட குகன்மகிழச் சிலம்பணிந்தாள் ;
சிலம்பரசன் இமவான் சிறப்புறவே சிலம்பணிந்தாள் ;
சிலம்புமுகக் கொங்கையவள் செம்மையுறச் சிலம்பணிந்தாள் . 131.
பொருள்
அழகே உருவான அன்னை பல்வித அணிகளை அணிந்துகொண்டாள் ;
அவைகளில் சிறப்பான சிலம்பினைக் காலில் அணிந்துகொண்டாள் .
அவளனிந்த அச்சிலம்பு , அச்சதங்கை, மேருமலையையே வில்லாகக்
கொண்டு முப்புரங்களை அழித்த சிவபெருமானின் வீரமகிழ்வில் தானும்
பங்கு கொள்வதைப் போல் சதங்கையைக் காலில் அணிந்தாள் .
சி;அம்பி= மலை. மலைகள் தோறும் குடிகொண்டு உலகைக் காக்கும்
வீரமகன் மகிழவே அன்னை சதங்கை அணிந்தாள் .
பல மலைகளுக்கும் பேரரசனாய் விலகும் இமவான் (இமயமலை)
மகளாக அவதரித்த அன்னை அத்தந்தையும் சிறப்படையக்
கால்களிலே சிலம்பணிந்தாள் . மாமலைபோல் பருத்த கொங்கை உடைய
அன்னை, வீரம் செழிக்க முருகனுக்கும், ஞானம் செழிக்கத்
திருஞானசம்பந்தருக்கும் அமுதப்பால் அளித்த கொங்கையுடையாள்
பல்லுயிர்களும் வாழ வழிவகுக்கும் தனது செவ்விய பாதங்களில்
சிலம்பணிந்து அழகே உருவாகக் காட்சியளித்தாள்.
அணிந்த சிலம்பின் பெருமை
காளிதாசன் கருணைபெறக் கால்காட்டிய சிலம்பு;
யாழழுகை பசிதீர்க்க, நடந்துவந்த சிலம்பு;
ஊழ்விதியைப் பட்டருக்காய், உடன்மாற்றிய சிலம்பு ;
ஆழிவிஷம் அகன்றிடவே அருகணைந்த சலம்பு . 132.
பொருள்
காளிதாசன் என்னும் கவிஞனின் இளமைப் பருவத்திலே அவனது
மடமையை விலக்கி, உயரிய ஞானத்தை அருளிடத் தனது கால்களைக்
காட்டிச் சிலம்பொலிக்கச் செய்தாள் ; அவ்வருள், அக்கருணை நல்கிட
அவனருகே சென்றது சிலம்புப் பாதங்கள்.
நீரில் மூழ்கிக் குளிக்கும் தந்தையோடு குளக்கரை வந்த ஞானக்குழந்தை
தந்தையைக் காணாது அழுதிட , அதுகேட்ட தோணியப்பர் யாழொலிபோல்
உள்ள ஞானக்குழந்தையின் அழுகை போக்கிட,அன்னையைப் பார்க்க,
அன்னையோ செம்பவளக் கிண்ணத்தில் முலைப்பால் சுரந்து,
ஊட்டிட நடந்தாள் ; நடந்த காலிலே நலுங்கியது சிலம்பு.
அமாவாசை அன்று பௌர்ணமி என்றுரைத்து, மன்னனின் சினத்திற்கு
ஆளாகிய அபிராமி பட்டருக்காக, நிலவாகத் தனது தாடங்கம் என்னும்
காதுத் தோட்டையே வானில் நிலவாக மாற்றி,விதியை மாற்றிய கருணைக்
கால்கள். அமுதம் வேண்டிப் பாற்கடலைத் தேவர்களும்,அரக்கர்களும்
கடைந்தபொழுது, தோன்றிய ஆலகால விஷத்தால் உலகே அஞ்சியபொழுது,
அதனைக் குடித்து மூவேழ் உலகையும் காத்த சிவபெருமானின்
மனையாளாகிய உமாதேவி அவரது கழுத்திலேயே நஞ்சு தங்குமாறு
தமது,கரத்தால் தடுக்க எண்ணி விரைந்து சென்ற கால்கள்;
அக்கால்களிலோ கருணை காட்டும் செம்மைச்சிலம்புகள் . சிலம்பணிந்த
பாதங்கள் போற்றி. போற்றி.
சதங்கைகள்
மலைகளை நினைவூட்டும்
மாணிக்கப் பரல்களைக்
குலைத்தேங்காய் போல்நிரப்பிக்
குறுநாக வடமிட்டுச் 133.
பொருள்
வளமும், பேரொளியும் கொண்ட மிகப்பெரிய மலைபோன்ற
மாணிக்கப் பரல்களை,உள்ளே பரப்பி, வெளிய குலையாகத் தொங்கும்
குலைத்தேங்காய் போலத் தொங்கவிட்டு, அழகுபடுத்தி, அவைகளை
இணைக்கும் வடமாக குட்டிப்பாம்புகளைக் கோர்த்துக் கட்டியமைத்து,,,
செம்பாதச் செவ்வழகில்
செங்காந்தள் சதங்கைகள்
செம்போரின் சிவமணியின்
செய'செய ஒலிச் சீர்பரப்பும். 134.
பொருள்
அன்னையின் அழகுமிகு கால்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசிய
பாதங்களில். செங்காந்தள் மலர்போன்ற சதங்கைகளைப்
பொருத்தியவுடன், அருள்பாலிக்க அன்னை அடியெடுத்து வைக்கும்
நேரத்தில், வெற்றி/1வெற்றி என்னும் ஒலியை நேர்மையும், சீர்மையும்
கொண்டு ஒலிக்கும்.
இடையழகு
குன்றிற்கிடைக் குறுகணவாய் ;
குணமதகிற் கிடைவாய்க்கால்;
பொன்மின்னல் விண்ணிற்கிடை;
கண்காணாக் காளியிடை. 135.
பொருள்
வலிமைக்கும், பாதுகாப்பிற்கும் உறுதி பயக்கும் சிறுகுறு கணவாய்
குன்றத்தின் இடையாகும்; நிறைந்த நீரைத் தடுத்து முறையே
விநியோகிக்கும் அணை மதகிற்கோ வாய்க்காலே இடையாகும் ;
பரந்துபட்ட வானத்திற்கோ பொன்போல் மின்னும் மின்னலே ஒளிமிகு
இடையாகும் . பராக்கிரமும் ,கருணையும், ஆட்சிச்சுடரும் கொண்ட
அன்னை காளி மாதேவிக்கோ கண்ணால் காணமுடியாத ஒளிமிகு
இடை ; கண்ணுக்குத் தெரியாத இடை ; வீரம்,கருணை,ஒளி நிறைந்த
அன்னையின் அழகைப் பேரழகாக்குவது மெல்லிய இடை ஆகும்.
இடையணி
இடையணி ஒட்டியாணம்;
ஈரொளியின் கூர்பாணம் ;
படைக்கச்சை உடைக்கிடையே
பரமனுக்கோ பயில்சுகமாம். 136.
பொருள்
அன்னை மாகாளி இடையிலே ஆபரணமாக 'ஒட்டியாணம்' என்னும்
அணியை அணிந்திருந்தாள்; இரத்தினக் கற்கள் பதித்த அவ்வாபரணம்
சூரிய, சந்திரர்களின் ஒளியை வெளிவிடும் கூர்மைவாய்ந்த அம்புபோல்
பிரகாசித்தது. உடைகளுக்கு இடையே இளமையை மறைக்கும் கச்சையை
அணிந்திருந்தாள். பரமனாம் சிவபிரானுக்கோ விருந்தளிக்கும் விந்தைமிகு
அணியாகவும், அழகாகவும் பரிணமித்தது.
பசும்வயிறு
வீரகுலம் வேலவன்தான்'
விநாயகப் பெருமானுடன்;
பாரகிலம் பெற்றெடுத்த
பசும்வயிறு பாற்கடலாம். 137.
பொருள்
மாதேவியின் வயிற்றிலே உதித்த வீரபரம்பரை, வேலவனும்,விநாயகனும் .
பரந்த மூவேழ் உலகங்களையும் கட்டிக்காக்கவே இவர்களைப்
பெற்றெடுத்தாள். பெற்றெடுத்த அன்னையின் வயிறு பசுமையும்,
இனிமையும் வாய்ந்த பாற்கடலாகும்.
மாமுலைகள்
ஒன்றையொன்று மற்போரில்
பின்னியே பிணைந்திருக்கும்,
மென்முலைகள் மன்மலைபோல் ;
நண்ணுயிர்க்கு அருள்சுரக்கும். 138.
பொருள்
மாகாளியின் மென்முலைகள் இரண்டும் ஒன்றோடொன்று மற்போர்
புரிகின்ற நிலையில் எப்பொழுதும் பிணைந்தே, இணைந்தே விளங்கும்.
வளம் மிகுந்த மலைகள்போல பருத்துப் பெருத்த மென்மை வாய்ந்த
முலைகள் உலகிற்கும், ஆன்மாக்களுக்கும் அருளையும், கருணையையும்
பொழிந்து கொண்டே இருக்கும்.
இடையணி
இடையழகின் ஒட்டியாணம்;
ஈரொளியின் கூர்பாணம் ;
படைக்கச்சை உடையிடையே
பரமனுக்கோ பயில்சுகமே. 139.
பொருள்
அன்னை மாகாளியின் இடையே பேரழகு வாய்ந்தது; அவ்விடையிலே
அணிந்துள்ள 'ஒட்டியாணம்' நவமணிகளாலும், வைரவைடூர்யங்களாலும்
இழைக்கப்பட்டது; சூரிய, சந்திர ஒளிக்கற்றையால் அமைந்தது. கூர்மை
மிகுந்த அதன் கிரணங்கள் சூரிய ஒளிபோல் வெற்றியையும் , சந்திர
ஒளிபோல் கருணையையும் அம்புகள்போல் செலுத்தும் வன்மை வாய்ந்தது.
உடைகளுக்கிடையே இடையில் கட்டியுள்ள கச்சை, அதீத யௌவனத்தை
வெளிப்படுத்தி நாயகனாம் சிவபிரானுக்கு மகிழ்வூட்டும் சுகம் தரவல்லது .
பாற்கடல் பசும்வயிறு
வீரமுதல் வேலவனை,
விநாயகப் பெருமகனைப்
பார்விளங்கப் பெற்றெடுத்த
பசும் வயிறு பாற்கடலாம். 140.
பொருள்
மூவர்களையும் வென்ற முதல்வீரன் வேலவனையும், விநாயகப்
பெருமகனையும் மூவேழ் உலகங்களும் உயர்வடைவதற்காகப்
பெற்றெடுத்தது அன்னையின் கருணை நிறைந்த வயிறு. அவ்வயிறு
இனிமை வாய்ந்த பாலால் இரக்கம் வாய்ந்த மனத்தால் நிறைந்து
விளங்குவதில் பாற்கடல் போல் பெரும்துயுற்றது.
அருள்பொழி அருமுலைகள்
ஒன்றையொன்று மற்போரில்
பின்னியபடிப் பிணைந்துநிற்கும்;
மென்முலைகள் மன்மலைபோல்,
நண்ணுடையார்க் கருள்சுரக்கும். 141.
பொருள்
ஒன்றோடொன்று மற்போர் புரிபவர்போல் இடித்து,இடித்துப் பின்னிக்
கொண்டும், பிணைந்து கொண்டும், விளங்கக் கூடிய இரு மார்பகங்களும்,
கூர்மைமிகு செங்குத்து செம்மலைபோல் விளங்கின. அன்னையின்
மார்பகங்கள் ஊருக்கும், உலக உயிர்களுக்கும், எப்பொழுதும் அருளைச்
சுரக்கும்; அழுத திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய முலை
அல்லவா!
பொற்கலசம்
சிவனுக்கே அர்ப்பணித்துச்
சிவபூதி தரித்திருக்கும்
சிவாம்சம் செம்பாலைச்
செயிர்த்தடக்கிய பொற்கலசம். 142.
பொருள்
தன்னையும், தனது உடைமைகளையும், சிவார்ப்பணம் என்று,
சிவனுக்கே தன்னை அர்ப்பணித்தவள் அன்னை. அதன்வழி சிவபூதியாம்
திருநீற்றை மேனி முழுதும் அணிந்து விளங்கும் அன்னை சிவாம்சம்
ஆவாள். தனது கருணையும்,சிவானுக்கிரஹமும் கலந்த செம்மை வாய்ந்த
பாலை, ஆன்மாக்களுக்கு முத்தி அளிக்க நிறைத்து வைத்திருக்கும்
பொன்னால் உருவாக்கப்பட்ட கலசம் போல் விளங்குவன அம்மையின்
மார்பகங்கள்.
கழுத்தணிகள்
வாசுகிபோல் வடமாலை;
வடமலைபோல் உருத்திராக்கம்;
மாசுநீக்கிய மணித்தலைகள் ;
மங்களநாண் மலர்க்கழுத்திலே . 143.
பொருள்
அன்னையின் மலர்மாலை அணிந்த கழுத்திலே, மலர்போன்ற கழுத்திலே,
வாசுகி என்னும் பாம்பினைப் போல வலிமையும், நீள ,அகலமும்,கொண்ட
மணிகளால் ஆன மாலை, கயிலைமலைபோல் தொன்மையும், தூய்மையும்
மந்திரத்தன்மையும் கொண்ட உருத்திராக்க மாலை ;தவறு புரிந்தோரை
அழித்தும், அவர்களைத் தூய்மை ஆக்கியும், மேலும் தீயசெயல் அவர்களை
அண்டாதவாறு காத்திடவே அவர்களது தலைகளை அணியாகக் கழுத்தில்
அணிந்த தலையோட்டு மாலை; இவைகளோடு மங்கள நாணாக மஞ்சள்
கயிறாம் தாலிச்சரடும் அணிந்திருந்தாள்.
காதணிகள்
பாம்பினிலே கோத்தமலை
படாம்களாகத் தொங்கிடுமே;
தேம்பியழும் குரலகேட்டுத்
தேடியருள் தீங்காது . 144.
பொருள்
எட்டுத் திசைகளையும் காக்கின்ற, தக்ஷகன்,கார்க்கோடகன் என
அழைக்கப்படும் எட்டு பாம்புகளில் ஒன்றைக் கயிறாக ஆக்கி, அதற்குள்
விந்தியம் போன்ற மலைகளைக் கோத்து , அதனைக் காதினிலே
தாடங்கமாய்க், குழையாய் அணிந்திருந்தாள் அன்னை. ஆபரணங்களாய்த்
தொங்கும் மலைகளால் தாழ்ந்து வளைந்தனவா காதுகள்? இல்லை;இல்லை;
உலக ஆன்மாக்கள் துயரால் துன்புற்று அன்னையை நினைந்து அழுகின்ற
காலை,அவர்களுக்கு இரங்கி, அவர்கள் குரல் கேட்டுத் தாழ்ந்து அருள்
பாலித்தன அன்னையின் காதுகள்.
இருவகை மாலைகள்
வில்வமாலை, கொன்றைமாலை
விரிசடையான் போற்றிசைக்க;
கள்ளிமாலை, வெள்ளிமாலை
காரரக்கர் வீழ்த்திடவே. 145.
பொருள்
காளியன்னை கழுத்தில் இருவகையான மாலைகளை அணிந்திருந்தாள்.
விரிந்த சடை யையுடைய சிவபெருமானைப் போற்றும் முகத்தான், அவரைப்
போலவே வில்வ மாலையையும் ,கொன்றைமாலையையும் அணிந்து
விளங்கினாள். அரக்கர்களை அழித்து, வீழ்த்திடக் கள்ளிப்பூ மாலையையும்,
வெண்ணிறம் கொண்ட மண்டையோட்டு மாலையையும் அணிந்திருந்தாள்.
சிவநாமச்செவ்வாய்
செவ்வாயோ சிவநாமம்;
செவ்வாயோ செங்குருதி;
செவ்வாயோ சீரருளாம்;
செவ்வாயோ செகம்விழுங்கும் . 146.
பொருள்
மாகாளியின் செம்மைமிகுந்த திருவாயானது எப்பொழுதும்
'சிவாயநம ' எனச்சிவன் பெயரை உச்சரித்தபடியே விளங்கும்;
அரக்கர்களையும்,தீயவர்களையும் அழித்து,அவர்களை வதைத்து ,
அவர்களின் வெட்டுண்ட கழுத்தில் வாயை வைத்துச் செங்குருதியைக்
குடிப்பதால் அந்தச் செவ்வாய் வழிகின்ற செங்குருதியை உடையதாக
விளங்கும்; தன்னை நாடிவந்து போற்றும் அடியவர்களுக்கு எப்பொழுதும்
அருளை,நல்லாசியை வழங்கும் சீர்மையைப் பெற்றது அச்செவ்வாய்;
ஊழிக்கால முடிவிலே தனது நாயகனோடு ஊழித் தாண்டவம்
ஆடியபடியே உலகையே விழுங்குவதும் இச்செவ்வாய் தான்.
கடற்கண்ணாள்
கறைக்கண்டன் காதலுற,க்
கறையரக்கர் கடிந்தழியக்
கறைபோக்கும் கருணைவழிக்
கரைகடக்கக் கடற்கண்ணாள். 147.
பொருள்
நீலகண்டனாகிய சிவபெருமானின் காதல் பரிமாணங்களை ஏற்று
அன்பு மீதூர அகம் கொள்வது; குற்றங்களையே தமது மூலப்பொருள்களாகக்
கொண்ட அரக்கர் கூட்டத்தை அழித்து வீழ்த்தும் ஆங்காரப் பார்வை
கொண்டது; தனது அடியார்களின் துன்பம் போக்கிக் கருணைப்பார்வை
கனிவோடு கொள்வது; பிறவிக்கடல் கடக்க வழிகாட்டுவது; ஆகிய
இவைகளை, நீலநிறத்தன்மையாலும், பரந்துபட்ட பராக்கிரமத்தாலும்,
அருளடங்கிய ஆழ் குணத்தாலும் கடல் போன்ற கண்களை உடையவளாக
விளங்குகிறாள் காளிமாதேவி.
வெண்ணீறும் குங்குமமும்.
விற்புருவ நெற்றியிலே,
வெண்ணீறும் , செஞ்சிவப்பும்;
உறுவெண்மை சிவபக்தி;
செம்மையோ செயவீரம். 148.
பொருள்
வளைந்த வில்லைப் போன்ற புருவம் கொண்ட நெற்றியிலே
வெண்ணீறும், செந்நிறக் குங்குமமும் அன்னை அணிந்திருந்தாள்.
அம்மை அணிந்திருந்த வெண்ணீறு அம்மையின் சிவபக்தியையும்,
சிவப்புக் குங்குமம் மென்மேலும் பெறும் வீர வெற்றிகளையும்
காண்போருக்கு உணர்த்தின .
கூந்தல் நிறங்கள்
கருங்கூந்தல் கருணைத்தாய்;
செங்கூந்தல் செயத்தம்பம்;
விரிகூந்தல் வேரறுக்கும்;
சடைக்கூந்தல் படையொடுக்கும். 149.
பொருள்
அன்னையின் அழகுமிகு கூந்தல் பலவண்ணங்களில் பரிணமித்தது.
கருமை மிகுந்த கூந்தலானது அன்னையின் கருணைத் தனமையை
வெளிக்காட்டியது; செம்மைநிறமுற்ற கூந்தல் பகைவர்களை,
அரக்கர்களை அழித்து, வீர வெற்றியைப் பறை சாற்றியது; விரிந்து
வானளாவிப் பறக்கும் கூந்தல் வீணர்களை வேரறுத்து, வீழ்த்தும்
வீரநிகழ்வைக் காட்டியது; சிவன்போன்று விளங்கும் சடைமுடிக் கூந்தல்
பகைவர்களின் படையை அடியோடு அழித்து, வீழ்த்தும் திறனை
வெளிப்படுத்தியது.
கரங்கள்
இருகரத்தாள் இயல்புத்தாய் ;
நாற்கரத்தாள் நல்லரசி;
அறுகரத்தாள் அறுதலையாள் ;
எண்கரத்தாள் விண்காப்பாள் . 150.
பொருள்
இரண்டு கரங்களோடு, இனிய முகத்தோடு, நல்லருள் புரிபவள்
இயல்பான கோலத்துடன் காட்சி தருவாள். நான்கு கரத்துடன் விளங்குபவள்
நல்லரசியாக. நல்லாட்சி புரியும் வல்லமை உடையவளாகக் காட்சி தருவாள்.
ஆறுகரங்களுடன் ஆக்ரோஷ முகத்துடன் வில்,வாள் ,ஏந்தி நிற்பவள்
அரக்கர்களது, தீயவர்களது தலையை வெட்டி வீழ்த்தி, அத்தலையைக்
கையிலும் ஏந்தி நிற்பாள். எட்டு கரம் கொண்டு விளங்கும் அன்னை,
மண்ணையும், விண்ணையும் தீயசக்திகளிடம் இருந்து காப்பவள் ஆகும்.
துர்க்கை
பதினாறும், பதினெட்டும்,
பார்காக்கும் துர்க்கையாம்;
விதிகூடின் பதினாயிரம்
வெங்கரம் வீசிநிற்பாள். 151.
பொருள்
உலகைக் காக்கின்ற வீரப்போரில் அன்னை மாகாளி பதினாறு
கரத்தோடும் அரக்கர்களை வேட்டையாடுவாள்; வரம் மிகுந்த அரக்கர்களை
அழிக்க முற்படுகையில் பதினெட்டு கரங்களில் பல்வேறு கூரிய
ஆயுதங்களை ஏந்தி,நின்று போரிட்டு அவர்களை அழித்தொடுக்கும்
துர்க்கையாகக் காட்சி தருவாள்.அரக்கர்களின் ஊழ் வினை கூடிவரும்
காலை, பதினாயிரம் கரங்களைக் கொண்டு வெம்மை மிகுந்த தீக்கரம்
கொண்டு போராற்றி அக்கூட்டத்தையே அழிப்பவள் மாகாளி ஆவாள்.
படைக்கூட்டம்
உடனேகும் பூதகணங்கள்;
ஓடிவரும் பேய்க்கூட்டம்;
இடாகினி எழில்மோகினி,
விடாதுபற்றும் உடுகடும்படை. 152.
பொருள்
மாகாளி போருக்குச் செல்கையில் முன்னும் பின்னுமாக ஓடிவருவன
பூதகணங்களும், பேய்க்கூட்டங்களும் ஆகும். பார்வையாலேயே
பகைப்படையைக் கரைந்துருக வைக்கும் இடாகினியும், அழகிலே
மயங்கவைத்து உயிருண்ணும் மாயமோகினியும், காளியைப்
பின் தொடர்ந்து செல்லும் விண்மீன்கள் போல் ஒளிவீசும் கடுமைத்
தன்மை வாய்ந்த படைவீரர்கள் ஆவார்கள்.
போற்றும் படைமாட்சி
எழுகன்னியர் விழுப்படையும்,
நவகன்னியர் நலப்படையும்,
பழுதில்லாப் படைமாட்சி;
பாராண்ட சீர்காளி . 153
பொருள்
பிராம்மி, மாகேஸ்வரி என்று போற்றப்படும் சப்தமாதாக்களின்
வீறுகொண்ட படைகளும் , வாமா,ஜ்யேஷ்டா என்று போற்றப்படும்
ஒன்பது கன்னியர்களின் நன்மை மிக்க படையும், தன்னைச் சூழ்ந்து
நிற்க, வீரமும், விவேகமும் கொண்டு தீமைகளை அழிக்கும் அன்னை
மாகாளியின் படை ; மாட்சிமை கொண்டது. உலகை ஆள்கின்ற
பேரரசி மாகாளி ; சீரும்சிறப்பும் பெற்றவளாய்த் திகழ்ந்தாள்.
தேவி வாழ்க
பொருளுமவள் புனிதமுமவள் ;
பெருமானின் சரிபாதி;
அருளுமவள் , அவள்தன்னை
ஆரறிவார்? அவள்வாழ்க. 154.
பொருள்
மூவேழ் உலகங்களிலும் விளங்கும் எல்லாப் பொருள்களும் அவளே.
புனிதம் என்று சொல்லப்படும் அநித்யங்கள் அவ்வளவும் அவளே.
மூவர்க்கும் முதல்வனான முக்கண்ணனின் சரி பாதி உடல் பெற்ற
அன்னையும் அவளே.அன்பும் அவள்; அருளும் அவளே.அவள் பெருமையை,
உயர்வை, வீரஉணர்வுகளை, கருணையை, இரக்கத்தை யார் அறிவார்கள்?
யாரால் கணக்கிடமுடியும்? அந்த பெருமைமிக்க அன்னையை வாழ்த்திப்
போற்றுகிறோம்.
6.பேய்களைப் பாடியது.
பேய்கள்
சுடுகாட்டுச் சடைநாதன் ;
கொடுகொட்டுக் கூத்தாடி;
அடுகாட்டில் ஆர்ப்பரிக்கும்
நெடுகூட்டப் பொடித்துகள்கள். 155.
பொருள்
(மாகாளியின் பெருமை பேசியபின் அவளைச் சுற்றியிருக்கும்
பேய்களைப் பேசுவதே இவ்வியல்.)
சுடுகாட்டையே விரும்பி வீற்றிருப்பவர் சிவனாவார்; அவர் விரிந்த
சடாமுடி கொண்டவர்; அவர் அக்காட்டில் ஆனந்த நடனம் ஆடுபவர்;
அவர் ஆடுகின்ற காலத்தே அவர் சடையில் ஒளிந்து விளங்கும் கங்கை ,
பிறைநிலவு, பாம்பு போன்றவைகளும் ஆடிக் குலுங்கும். சடையில் சூடிய
கொன்றைமலர் விரிந்து நறுமணத்தை வீசி ஆன்மாக்களை
நல்வழிப்படுத்தும். அக்காட்டில் அடிக்கப்படும் தப்பு,தாரை, பறை,
உருமி போன்ற தாளவாத்தியங்களுக்கு ஏற்பச் சிவனார் ஆடுவார்.
அந்த சுடுகாட்டில் ஆர்ப்பரித்து அவர் ஆனந்த நடனம் ஆடுகையில்
சாம்பல், சுடுமண், போன்றவைகளின் தூசிகள் பறக்கும். அவை அவரருளால்
உருவெடுத்து அச்சுறுத்தும் பேய்களாக மாறுகின்றன. அவைகள்
எப்பொழுதும் அவரைச்சுற்றியே ஆங்காங்கு செல்லும்; அவரைப் போற்றும்
பேய்கள் அன்னையையும் போற்றிநிற்கும். அவைகளின் ஆறாத பசியைப்
போக்குபவள் அன்னை. ஆதலின் அவைகள் இடுகாட்டில் உதித்து,
நடுக்காட்டில் காளியோடு வாழ்ந்தன.
பூதகணங்கள்
சைவநெறிப் புண்ணியத்தால்
சமராடும் சதுரானைச்
சிவபிரானை அண்டிநாடிச்
சிவத்தொண்டில் அணுக்கமாயின. 156.
பொருள்
சிவனைப் போற்றும் சைவநெறியில் பலகாலம் நின்று, தொழுது,
பணியாற்றிய தொண்டர்கள் சிவனடி சேர்ந்ததும், கயிலையில் அவரவர்
பணி நிலைக்கேற்ப அணுக்கத் தொண்டர்கள் ஆவர். அவர்களே பூத,
கணங்கள் என்று அழைக்கப்படுவர்.சிவனருகில் சென்று பணியாற்றும்
பூதகணங்கள் அணுக்கத் தொண்டர்கள் என்றழைக்கப்பட்டனர்.
பூதகணப்பணிகள்
நீள்முனிவர் வழிநின்று,
நெறிகற்று, நீள்கயிலைத்
தாள்தொட்டுத் தன்பணியுடன்,
கோன்போமிடம் தாமும்போய் ,,,, 157.
பொருள்
கயிலையில் காலம் காலமாய்த் தவம் புரியும் தொன்மை மிகுந்த
முனிவர்களின் வழியில் நடந்து, ஒருக்கமேம்பாட்டுடன் மாபெரும் கயிலை
மலையின் பாதங்களைத் தொட்டு,வணங்கித் தத்தம் பணியைத் துவங்கும்
பூதகணங்கள் கயிலைநாதன் போகும் இடங்களுக்கு எல்லாம் தாமும்
சென்று அவருக்குப் பணிவிடை செய்யும்.
தொண்டாற்றும் தூயகணங்கள்
தொன்றுதொட்டு, அணுக்கச்செயல்
மன்றல்பணி மகேசன்பணித்
தொண்டெல்லாம் நின்றாற்றும் ,
தொல்கணங்கள் தூயனவே. 158.
பொருள்
காலம்காலமாய் மாக்கயிலை மலையிலே சிவபெருமானுக்கு
அணுக்கத் தொண்டர்களாகி, நாள்தோறும் அவர் சார்பான அனைத்துப்
பணிகளையும் பக்திபூர்வமாக, முறையோடு ஆற்றி வரும் பூதகணங்கள்
சிவனின் அணுக்கத் தொண்டர்களாகும். தூய தன்மை வாய்ந்த அவைகள்
சிவபிரான் எங்கு சென்றாலும் கூடவே சென்று, அவர் பணியைத்
தலைமேற்கொண்டு செய்வன.
அணுக்கத்தொண்டர்
பூதகணங்கள் கோடி,கோடி ;
பொன்மகனோ டாடி,ஆடி,
சீதக்கயிலை நாடிநாடி,
சேர்ந்தணுக்கத் தொண்டராயின. 159.
பொருள்
பூதகணங்கள் எண்ணிக்கையில் கோடிக்குமேல் இருக்கும்.
அவைகள் ஆண்டவன் நடராசப் பெருமான் ஆடும்பொழுது, தாமும்
அவனோடு ஆடுவன .ஆடிமுடித்து அப்பெருமான் கயிலை செல்லும்
-பொழுது அவைகளும் அக்கயிலையை அடையும்.அடைந்து
அவன்பணி விடாது செய்வதால் அவைகள் அணுக்கத் தொண்டர் '
என்னும் பதம் பெற்றன.
பேய்க்கூட்டம்
தொண்டருக்கு அருளுகின்ற,
தூயவனோ அவர்க்குதவ ,
மணபதிந்த பொன்பொடியை,
மகிமைத்துகள், மனக்காற்றை,,,,,,, 160.
பொருள்
தன்னை நாடிவரும் தொண்டர்களுக்கும், அடியவர்களுக்கும் உதவுகின்ற
தூயவனாகிய சிவன், அக்கணங்களுக்கு அருள்பாலித்திட நினைந்து,
அவர்கட்கு உதவும் பேய்க்கூட்டங்களைப் படைத்தான். சுடுகாட்டுப்
பொடித்துகள் ,மகிமை கொண்ட சாம்பல் தூசி,மனத்தைச் சுமக்கும் காற்று,
இவைகளை உலவும் பேயாக மாற்றினான்.
கிரியாளின் கருணையுடன்,
கரிப்பேயை ஆக்கினானே !
தரியாவுடல் தவழ் ,உறழ் ,செயல்
தாண்டவத்தில் அடிப்பொடியே. 161.
பொருள்
கிரியா சத்தியின் கருணையுடன்,பொடி,மண், சாம்பல், காற்று போன்ற
பொருட்களை உருவமற்ற தன்மையில் கருமை நிறம் தாங்கிய பேயாய்
உலவவிட்டான். அவைகள் உடலற்றவை ; தவழ்பவை; பறப்பவை ; வான்போல்
உயர்ந்தும், வளிபோல் சுழன்றும், எங்கும் செல்லும் நிலையம் பெற்றன;
அவைகள் ஈசனின் தாண்டவத்திலே சுடுகாட்டில் தோன்றும் மண்துகள்கள்.
பேய்வளர்வு
அன்றுதொட்டு மன்றலாடித்
தென்றலுக்குக் கரும்பொட்டு ;
குன்றாகிக் குருவியாய்,
நின்றோடி வளர்ந்தனவே. 162.
பொருள்
காற்றாகிக் காற்றோடு கலந்த பொருளெல்லாம் கறைக்கண்டன் காலடி
பட்டதாலே கணங்களாய்ப் பேய்களாய் மாறிய நிலையில் .ஆடும் கூத்தன்
ஆடுகின்ற மன்றல்களில் எல்லாம் , தென்றல் காற்றுக்கு வைத்த கருமைப்
பொட்டுபோலவும், வளர்குன்று போலவும், சின்னஞ்சிறிய குருவி போலவும்,
நின்றன; ஆடின;ஓடின; அன்னை பாதம் அடைந்தன; வளர்ந்தன பேய்கள்.
அன்னையை அடைதல்
அன்னையவள் அன்புதேடி,
அண்டவந்தத் தொண்டுகூட்டம்
அன்னையடி அகலாமல்,
ஆவியவை தேவகூட்டம். 163.
பொருள்
ஆயிரம் ஆயிரம் பேய்க்கூட்டங்களும், அண்ணல் வழிபோற்றி ,அப்படியே
அன்னையைச் சார்ந்தன; அன்பையும் கருணையையும் தேடி, அண்டிய
அந்தத் தொண்டுக் கூட்டம், அன்னையின் பாதங்களைப் பற்றிக்கொண்டு
வாழும் தேவகூட்டம் போலத் தாங்களும் அவ்விடம் விட்டு அகலாமல்
அன்னைக்குத் தொண்டாற்றின.
பேய்ப்பசி
காளி கோயில் கணமும் பிரியா;
சூலி வீழ்த்திய அசுரர் கூட்டம்,
பாலாய்க் குருதிப் பசுவாய் மேனி,
நாளும் உண்டபின்னும், நலிந்தே அழுதன. 164.
பொருள்
காளியின் கோயிலை விட்டு, ஒருகணமும் பிரியாதன அப்பேய்கள்.
மாகாளியோ வெவ்வரக்கர்களை நாளும் வதை செய்தாள் ; வீழ்ந்து மடிந்த
அரக்கர் உடலில் வழியும் குருதியைப் பால்போலக் குடித்தன; அவர்தம்
பசுமை மாறாது குருதி தோய்ந்த உடலை நன்கு உண்டன; ஆயினும்
அவைகளின் பசி அடங்கவில்லை; அன்னைமுன்னால் பசி!பசி! என்று
அழுது புரண்டன;நலிந்து மெலிந்து கருணை வேண்டிப் பார்த்தன.
பேய்களின் ஓலம்
அன்னையே! பசி!பசி! அம்மையே! பசி!பசி!
முன்னரும் பசி!பசி! பின்னரும் பசி!பசி!
கண்ணீர் காற்றில்; கைகள் வானில்;
புண்ணீர் வேண்டும் கதையைப் பேசுவோம். 165.
பொருள்
காளிதேவியைச் சூழ்ந்து நின்ற பேய்கள் பசியால் புலம்பத் தொடங்கின;
அன்னையே! பசிக்கிறது; தாங்கமுடியாமல் பசிக்கிறது; உலக உயிர்களின்
அன்னையே! பசியால் வாடுகிறோம்; நீ போட்ட உணவை உண்டபின்னரும்
பசி; உண்பதற்கு முன்னாள் கேட்கவே வேண்டாம்; அப்படிப்பசி;என்று
கதறும் பேய்களின் கண்ணீர் காற்றோடு காற்றாய் வெளியெங்கும்
பறந்தன; வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட அவைகளின்
கைகள் வானத்தைத் தொட்டுத் துழாவின;குடிப்பதற்குப் பசுங்குருதி
வேணடும்; என்ற பேய்களின் முறைப்பாட்டுக் கதையைப் பேசுவோமா!
பேய்கள்
மாய வுருவமே பேயின் தோற்றம்;
காயும் கனலில்; சாயும் வானில்;
பாயும் நீரில்; மேயும் மலையில்;
சேயும் தாயும் சூலில்லா மாயம். 166.
பொருள்
பேய்களின் தோற்றங்கள் மாயமாகவே அமைந்துள்ளன; அது நெருப்பிலே
விழுந்து உடலைச் சூடாக்கிக் கொள்ளும்; பரந்த வானத்திலே சாய்ந்து
நிற்கும்;ஓடும் பேராற்று வெள்ளத்திலே பாய்ந்து விளையாடும்;
மலைமுகட்டில் நுனியில் உலவும்; பாட்டி,அம்மா, மகள் என்ற உறவுகள்
இருக்கும்; ஆனால் அவைகள் எப்படிப் பிறந்தன என்பதும் மாயம்தான்.
பேய்களின் மாய உறுப்புகள்
வானைத்தொடும் வடக்கைகள்;
வளைமுதுகோ வான்பாதி;
மீன்தொடும் முறுக்குகால்கள் ;
மேலலைபோல் மிளிரிடுப்பு; 167.
பொருள்
பேய்களின் உருவ வருணனை ; அவைகளின் தேர்வடம் போன்ற கைகள்
நிலத்திலிருந்து வானைத்தொடும். வளைந்த அதன் முதுகோ வானத்தில்
பாதிபோல் பரந்து விளங்கும்; வானில் நின்று கடலைத் தொடும் கால்கள்
முறுக்கிய இரும்புத் தூண்கள் ஆகும்;அவைகளின் இடுப்பு சீறி மோதும்
கடலலை போல் பள்ளமும் மேடும் கலந்தனவாய் விளங்கும்.
கான்குகைபோல் கரும்கண்கள் ;
கவிழ்மலையே கடுந்தனங்கள் ;
மானுறங்கும் மடுமூக்கு ;
மேதிமேயும் மகிழ்அசை, வாய் ; 168.
பொருள்
பேய்களின் கருமையும்,கடுமையும் வாய்ந்த கண்களோ கொடும்காட்டின்
பாழ் குகைபோல் விளங்கும்; அவைகளின் மார்பக முலைகள் கவிழ்ந்து
கிடக்கும் மலைகள் போல் கிடக்கும்; மான்கள் உறங்கும் அளவு பரந்துபட்ட
பள்ளம் போன்ற மூக்குகள் துவாரம்; எருமைகள் மேய்கின்ற சகதி நிலம்
போன்று, விளங்கி, அம்மாடுகள் அசைபோடும் நிலமாகவும் விளங்கும்
வாய், எப்பொழுதும் தின்றுகொண்டே இருக்கும் தன்மையோடும்
விளங்கும் தன்மையைக் கொண்டது.
கழுகுதங்கு முட்காதுகள் ;
களத்துமேட்டுக் கருநெற்றி;
உழுகலப்பை உளிப்பற்கள் ;
புழுநெளியும் புண்ணாக்கு; 169.
பொருள்
பேய்களின் முள்போன்ற முடிகள் சூழ்ந்த காதுகளில் கழுகுகள் தம்
குடும்பத்தோடு தங்கி வாழும்; கரும்புருவமயிர் கொண்ட அவைகளின்
நெற்றி, நெல்லடிக்கும் களத்து மேடுபோல் காட்சி தரும்; அவைகளின்
வாயிலே அமைந்த பற்கள் உழுகலப்பை போலவும், உளி போலவும்
விளங்கின;(கீழ் வரிசை உழுகலப்பை; மேல்வரிசை உளி ஆகும்,)
அவைகளின் வாயில் நெளியும் நாக்கினிலே புழுக்கள் நெளிந்து
கொண்டே இருக்கும்; அந்த நாக்கும் எலும்புகளைக் கடித்துக்கடித்துப்
புண் உடையதாகவே இருக்கும்.
விழுதுபோல் முடிக்கற்றை;
அழுகைபோல் அவலக்குரல்;
தொழுதுபோற்றத் தூயதேவி,
அமுதடைக்கக் கஜவயிறு. 170.
பொருள்
அவைகளின் பின்னிப்பிணைந்த சடை முடிகள் ஆலம் விழுதுகள்
போல் தொங்கும் ; அவல அழுகையே அவைகளின் குரல் ஆகும்;
எந்நிலையிலும் தங்களைக் காப்பவள் தேவியே, காளியே என்று நாளும்
அவளையே போற்றி வாழ்வன.அத்தேவி அருளால் கிடைக்கும் உணவை
நிரப்பிவைக்கும் வயிறோ யானையின் வயிறுபோல மிகமிகப் பெரியது.
நொண்டும் கிழப்பேய்
அவதாரப் பன்றியின் அகங்காரம் அடங்கிடச்
சிவனவன் சினந்த, செம்போர்க் குருதியைத்
தவத்தால் குடித்து, அவம்தனில் இன்றும்,
நவமாய் நொண்டும் நற்கிழப் பேயே. 171.
பொருள்
திருமாலின் அவதாரமான வராஹ அவதாரத்தில் வெற்றி மகிழ்வில்
அகங்காரம் கொண்டு, உலகிற்குப் பெரும் தீங்கு விளைவித்த திருமாலை,
அழிக்க,அவரோடு போரிட்டு அவரை அடக்கிய சிவபெருமான் ஆற்றிய
போர்க்களத்தில் வழிந்த செங்குருதியைத் தவமேம்பாட்டினால் குடித்த
பேயானது,இன்றுவரை உலகில் கால் மட்டும் ஊனம் ஆகிய நிலையில்
நொண்டிப் பேயாகவும், தொன்மை வாய்ந்த முது கிழப்பேயாகவும்
இக்காட்டில் தேவியைப் போற்றியபடித் திரிகிறது.
இல்லறப்பேய்
பிரமன் தலையைப் பெயர்த்த சிவமோ,
குறையாய், ஓடாய்க் கொண்டது ஓட்டைச்
சிரமதன் கொழுப்பைத் திறமுடன் உண்டதால்,
இரவுபகல் இன்றுவரை ஈன்றுவரும் இல்லறப்பேய். 172.
பொருள்
கர்வமுற்ற பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றை ச் சிவனின்
ஆணைப்படி நகத்தால் கிள்ளி வீழ்த்தினான் வீரபத்திரன். அந்தப்
பாவம் சிவனைப் பற்றியது;அதன் கழுவாயாக, அத்தலை ஓட்டையே
உணவுண்ணும் ஓடாகக் கொண்டு 'பிட்சாண்டவராக' நாளும் பிச்சை
எடுத்தார் இறைவன். அந்தப் பிரமனின் வீழ்ந்துபட்ட தலையிலிருந்து
வெளிவரும் கொழுப்பைக் குருதியைத் தனது மாயத்தால் உண்ட ஒருபேய்,
இன்றுவரை வாழ்வதோடு, நாள்தோறும் ஆயிரக்கணக்கில்
பேய்க்குழந்தைகளை ஈன்று வருகிறது;பிரம்மதேவனின் தலைக்கொழுப்பை
உண்டதல்லவா!
எருமைப்பேய்
அகிலம் அரற்றிய அரக்கன் வரவலியன்
மகிடன் தலையை வீழ்த்தினாள் மகேஸ்வரி.
மகிடக் குருதித் துகளைச் சுவைத்ததால்
மகிடம் ஆகவே மாறி நின்றது. 173.
பொருள்
உலகையே துன்புறுத்திய அரக்கன் வரப்பலாம் மிக்க மகிடாசுரனை,
வென்று, அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள் மாகாளி. அவன் குருதியைத்
தானே குடித்தாள் ; அப்பொழுது நிலத்தில் தெரித்த மகிடன் குருதித்
துகளை நாவால் நக்கிய பேயொன்று நாளடைவில் எருமை ஆக மாறி
-விட்டது; இன்றுவரை அது எருமைப்பேயாகச் சுற்றிவருகிறது.
தலை முண்டப்பேய்
வீரவாகு மகேந்திரத் தூதுப் போரில்,
கார்குல வரக்கர் தலையை வீழ்த்தினான்;
போர்க்களப் பேயொன்று சூருடல் முண்டச்
சீர்குருதி உண்டதால் முண்டப் பேயானதே. 174.
பொருள்
சூரபன்மனுக்குத் தூதுச் செய்தி தாங்கிச் சென்ற வீரவாகு சூரனின்
அடாத செயலால் அங்குள்ள ன் அரக்கர்களோடு போர் புரிந்தார்;
அக்களத்தில் பல அரக்கர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார் வாகு.
அவ்வாறு வெட்டப்பட்ட தலை இழந்த முண்டமான வீரனின் குருதியை
ஒரு பேய் நன்கு சுவைத்துக் குடித்து, மகிழ்ந்தது. நாளடைவில் அப்பேய்
முன்டமாகித் தலை ன் இல்லாது விளங்கியது. அதை முண்டப்பேய்
என்று மற்றவை அழைத்தன.
குலிசப் பேய்
வேலின்றி மற்றிலையோ ?
வாய்மூடா முன்பாய்ந்தது ,
சேய்குலிசம் ; மாச்சிங்கன்
மார்பிரத்தம் ஊர்முழுதுமே. 175.
பொருள்
சூரபன்மனின் தம்பி, சிங்கமுகன்; அவனோடு முருகன் போரிடுகையில்
அவன் சிரித்தபடி,ஏளனத்துடன் .முருகனே! வேலாயுதம் தவிர வேறெதையும்
பயன்படுத்தத் தெரியாதோ? உனக்கு? என்று சொல்லி அவன் வாய்
மூடும்முன்னே அவன் மார்பில் பாய்ந்தது முருகனின் குலிசம்' என்ற படை.
போர்க்களம் முழுவதும் சிங்கமுகனின் குருதி வெள்ளமெனப் பாய்ந்தது.
கார்க்குருதி நீர்மூழ்கும்
பேர்பெற்ற பேயொன்று,
போர்க்குருதி குடித்ததால்
விரிகுலிச வடிவுற்றதே. 176.
பொருள்
காலமெல்லாம் நிறைந்து விளங்கிய அக்குருதி வெள்ளத்தில் மூழ்கும்
பண்புற்ற பேயொன்று மூழ்கி,வயிறு நிறையக் குடித்தது; வெளியே வந்த
அப்பேய், நீண்ட தன் உருவம் மறைந்திடக் குலிசம்போல் உருப் பெற்று
விளங்கிற்று.
குருட்டுப்பேய்
கூழ் காய்ச்சும் கொடுங்களப்பேய்
தாழ்கிடந்த பாழ் தலைகளில்
ஆழ்கண்கள் காயாக்க,
வீழ்நோக்கு விழிபோயின. 177.
பொருள்
கொடுமை மிக்க அக்களத்தில் கிழட்டுப் பேயொன்று கூழ் காய்ச்சத்
துவங்கிற்று. அங்கே பக்கத்தில் கிடந்த அரக்கர்களின் தலைகளில்
கண்கள் விழித்தபடியே இருந்தன; அத்தலைக் கண்களையெல்லாம்
கூழில் காய் போலப் போட எண்ணிய அப்பேய் ஆழ்ந்த கண்களை
அகழ்ந்து பிடுங்கி எடுக்க முனைந்தன; இறந்த பின்னரும் தீமையே
வடிவான அவ்வரக்கக் கண்கள் சுட்டெரிப்பதைப்போல் பேயை
நோக்கின; அந்த நோக்கத்தில் பேயின் கண்கள் குருடு ஆயின; அது
குருட்டுப் பேய் ஆயிற்று.
சுருள் பேய்
சதமுகனின் தசைக்கரங்கள்
நசைவிருப்பப் பசைப்பேய்
அசைக்கரத்தில் அகப்பட்டுத்
தசைசுருண்ட சுருள்பேயாம் . 178.
பொருள்
சூரபன்மனின் சேனைத் தலைவர்களில் ஒருவனான நூறு முகங்கள்
கொண்ட 'சதமுகனின்' இறந்துபட்ட உடலின் சதைகளை உண்ணுவதில்
மிகுந்த ஆசை கொண்ட ஒரு பேய் இருநூறு கரங்களுக்கு இடையே புகுந்து,
தசையைத் தின்ன முயல்கையில் இங்குமங்கும் அசைகின்ற கரங்களுக்கு
இடையே சிக்குண்டு, வெளியேற முடியாது தவித்து, மேலும் மேலும்
சுருண்டு வெளிவந்தது; ஆனால் அதன் உடலும் சுருண்டே காட்சி அளித்தது.
ஆதலின் அப்பேயின் பெயர் சுருள் பேயாகும்.
நொண்டிப்பேய்
பயந்தோடிய பானுகோபன்,
பயத்தாலே விழுந்தகயம் ;
நயந்தோடிய நலுங்குப்பேய்
மயலுற்று நொண்டியாமே. 179.
பொருள்
தகுதிமிக்க கணைகள் இன்றித் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தால்
களத்தை விட்டுப் பயந்தோடிய பானுகோபன்,பயத்தாலே தட்டுத்
தடுமாறி விழுந்த யானைபோல் விழுந்தான்; அவன் விழுந்ததைப் பார்க்க,
ஓடோடி வந்த ஆட்டப்பேய் அவனைக் கண்டு, அஞ்சி, மயக்கமடைந்து,
கீழே விழுந்து காலொடிந்து நொண்டியாயிற்று. அன்றுமுதல் அப்பேய்
நொண்டிப்பேய் என்றழைக்கப்பட்டது.
தத்துவப்பேய்
பசி பசி எனப் பதறியபேய்
புசி புசி எனப் புகல்தளமெலாம்
நசி நசி என நசித்துண்டபின்
வசி வசி எனத் தனையுண்டது. 180.
பொருள்
கோயிலைச் சுற்றி அமர்ந்திருந்த பேய்க்கூட்டங்களிலே பல பேய்கள்
பசி!பசி! எனப்பதறி அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தன; கோயில்,
அதன் சுற்று, வெளியிடங்கள் என அமைந்திருக்கும் எல்லா இடங்களிலும்,
கிடந்தவை, பறந்தவை , பூத்தவை, காய்த்தவை ஓடியவை, எல்லாவற்றையும்
கடித்தும்,குதறியும் , தின்றன; தங்களது அகோரப் பசிக்குக் கண்டவைகளை
எல்லாம் புசி புசி எனப்புசித்தும், அவைகளை நசி நசி என அழித்தும்,
உண்டபின்னர், தரையிலும்,ஆகாயத்திலும், விழுந்து புரண்டன.
அக்கூட்டத்தில் நல்ல ஞானம் கூடிய சிலபேய்கள் நசி நசி என மனத்துள்
சிவநாமம் உச்சரித்தன; தன்னை உணர்ந்தன; தன்னை, ஆத்மாவை
நினைந்து, தனது தீய குணங்களை விழுங்கின; பசியை மறந்தன;
பரமனை எண்ணித் தன்னுயிரைத் தானே தின்று மடிந்தன; தத்துவம்
உணர்ந்த அப்பேய்கள் தத்துவப்பேய்கள் எனக்கூறப்பட்டன.
முதுகிழப்பேய்
மூதுரை சொன்னது, முனகலில் கிழப்பேய் ;
தீதுரை கேளாதே! தடுத்தது இளம்பேய் ;
மீதிப் பேய்கள் பேதமுடன் போரிட,
ஆதிப் பேயோ அடக்கித் தடுத்தது. 181.
பொருள்
கூட்டத்தில் உள்ள முதுகிழப்பேய் ஒன்று, அடங்காது திரியும் இளம்
பேய்களுக்கு, அறிவுரை கூறியது; இளம்பேய்க்கூட்டமோ, கிழத்தின் தீய
உரைகளைக் கேட்காதீர்! எனகத்தியபடித் தடுத்தன; ஏனைய பேய்களின்
கூட்டம், கேட்கலாம்" என்றும், கேட்கக்கூடாது" என்றும் தமக்குள் சண்டை
இட்டுக் கொண்டன; முதுகிழப்பேயோ அவைகளைத் தடுத்து நிறுத்தி
அடக்கியது. இதுவே கிழங்களின் செயலாம் .
குறளைப்பேய்
முழங்காலை முன்நீட்டி,
முதுகுவளை முழுவீச்சில்,
செழுங்குருதிப் பேராற்றில்
சிலிர்குளியலால் சிற்றுடல்பேய். 182.
பொருள்
போர்க்களத்தே வெட்டுண்ட வீரர்களின் உடலில் வழிந்த குருதி
ஆறாக ஓடுகிறது; அவ்வாற்றில் நீந்திக்குளிக்க விரும்பிய பேயொன்று,
காலை மடக்கி, முன்னே உடலை நீட்டியபடி, முதுகினை வளைத்தும்,
கைகளை நீட்டியபடியும் அக்குருதி ஆற்றில் தாவி வீழ்ந்தது; குளிர்
கொழுப்பு கலந்து வேகமாய் ஓடும் அச்செங்குருதி நீரின் குளிர்ச்சியால்,
கொழுப்பின் பிடிப்பால் அப்பேயின் கைகால்கள் விரைத்தும், இயங்காமலும்
போயின; உடலோ சுருங்கிச்சிறுத்துப் போயிற்று; வெளிவந்த அப்பேய்
குள்ளப்பேயாக, குறளைப்பேயாக விளங்கிற்று.
முடக்கைப்பேய்
நெடிதுயர்ந்த நெடும்பேய்தான்,
கொடிக்கரத்தை மேலுயர்த்திட ,
உடுகோள்கள் தடுத்திடவே ,
உயர்தோள்கள் உணர்விழந்தன. 183.
பொருள்
மிகவும் உயரமான ஒல்லிக்குச்சிப் பேய் , தன்னுடைய நீண்ட கைகளை
மேலே தூக்கியது; உயர்ந்த மிக நீளமான அக்கரங்கள் வானத்திலே
செல்லும் கோள் கள் மீது பட்டன; விண்மீன்க்கோளான அதன் தீஜ்வாலை
பட்டும், அதன்மீது உராய்ந்ததால் காயமும் பட்ட அப்பேயின் கைகள்
இயக்கமே இல்லாமல் போயின; காய் இருந்தும் பயன்படாததால்
அப்பேய் முடக்கைப் பேய் என்றே அழைக்கப்பட்டது.
அவலப்பேய்
மாயமலை மாவேலால்
மாயந்தகாலை, பாய்ந்தகுருதித்
தோய்கொழுப்பில் சேய்பேய்கள்
ஆழ்ந்துசிக்கி அவலமுற்றதே. 184.
பொருள்
கிரௌஞ்ச மாய மலையாக விளங்கிய தாரகன் முருகனின்
வேலாயுதத்தால் அழிகிறான்; அழிந்து வீழ்ந்த அரக்கனின் உடலில்
இருந்து வழிந்தோடும் குருதி ஆறாக ஓடுகிறது. கொழுப்பு கலந்த
அக்குருதி ஆற்றில் விழுந்து,சிக்கிக்கொண்ட குழந்தைப் பேய்கள்
அவலமுற்று அழுது, மாளாப்பிறப்பில் சிக்கித் தவிக்கும் ஆன்மாவைப்
போல அவலமுற்றன.
குருட்டுப்பேய்
ஓடுகுருதி தேடுபிணம்
வாடுபசிப் பேயின்கண்
நீடுவாள்நுனி ஆடுமணிபோய்ப்
பீடுபெருந்துயர் குருடானதே. 185.
பொருள்
அளவுகடந்த பசியால் வாடும் பேயொன்று, களத்தில் ஓடும் குருதி
ஆற்றில் மிதக்கும் பிணத்தைத் தேடுகிறது. கூர்ந்து கவனிக்கும் அப்பேயின்
கண்ணை, ஆற்றில் பிணமாக மிதக்கும் வீரன் கையில் உள்ள வாளின்
நுனி ஆற்று வேகத்தில் வேகமாகக் குத்துகிறது. அக்கண்ணின் பார்வை
மணி. அழிந்துவிடுகிறது. பசிக்கு உணவு தேடிய பேயோ கண்ணை இழந்த,
குருடாகிப் பெருந்துயர் உற்றது.
ஊமைப்பேய்
வெந்தவுடல் பதம்பார்த்து,
வேகாவுடல் வாய்போட்டு,
வெந்தயமாய் நாக்குவேக ,
வியனூமைப் பேயாமே. 186.
பொருள்
சமைத்துக் கொண்டிருந்த பேயொன்று, உடல்கள் வெந்துவிட்டனவா!
என்று பதம் பார்க்கையில், வேகாமல், சுட்டுப் பொசுக்கும் தசையினை
வாயில் போட்டுக் கொண்ட பேய், சூடு தாங்காமல் நாக்கானது வெந்த
உணவுபோல் ஆக, நாவைச்சுழற்ற முடியாமல் பேசாத நிலையைப் பெற்றது;
அன்றுமுதல் அது ஊமைப்பேய் என்று அழைக்கப்பட்டது.
பல்திற அழிவு
குருதியில் சறுக்கியவை;
குடற்சிக்கலில் செருகியவை;
இறுதிமூச்சில் சரிந்திறந்தவை;
இப்படியாம் பெரும்பேயவை . 187.
பொருள்
போர்க்களத்தில் பேய்க்கூட்டங்கள் பலவிதமாக அழிந்தன.
குறுதிச் சேற்றில் சறுக்கிவிழுந்து இறந்தவை பல; குருதியில் ஓடும்
பிணங்களின் குடலுக்குள் சிக்கிக்கொண்டு இறந்தவை பலப்பல.
உயிர்விடும் வீரர்களின் இறுதி மூச்சுக்காற்றில் சரிந்து, விழுந்து
இறந்தவை பல.இப்படியாக அப்போர்க்களத்தே வீரர்களோடு அவர்தம்
உடலை உண்ணவந்த பேய்களும் மாண்டு போயின.
செந்திக்கடற்கரை
செந்திப் பதியின் செம்மைக் கடற்கரை;
உந்திப் பசியால் உணவைச் சமைத்தபேய்கள் ,
புந்திப் பசிமுன் புனிதம் போற்ற,
முந்திக் குதித்தன; முந்நீர் அலையுள் . 188.
பொருள்
திருச்செந்தூர் நகரத்தின், அரக்கரை அழித்த போர்க்களமாம் அந்தக்
கடற்கரையில் சுற்றும் பேய்கள் தமது பசியைப் போக்கிட உதவும்
உணவைச் சமைத்தன; உண்ணுவதற்கு முன் புனிதம் ஆகிய
அக்கடலிலே நீராட விரும்பி, அவைகள் அலைமோதும் கடலில் தாவிக்
குதித்தன.
காளி கோயில் போவோம்
போதாது; போதாது;
பொதிமலை வயிற்றுக்கு;
போயழுவோம் பொற்றாயிடம் ;
புறப்பட்டன காளிகோயில். 189.
பொருள்
சமைத்த உணவை நன்கு உண்ட பேய்க்கூட்டம் இவ்வாறு ஓலமிட்டன ;
பொதிகைமலை போன்ற எமது வயிற்றுக்கு இந்த உணவு போதாது;
நமக்கு வயிறார உணவளிக்கும் நம் அன்னை காளிதேவியிடம் சென்று
முறையிடுவோம்; என்று கூறியபடியே அக்கூட்டம் காளிகோயில் நோக்கிப்
புறப்பட்டன.
7.இந்திர ஜாலம்.
தேவி வீற்றிருக்கும் கோயில்.
காட்டுக் கோயில்; கதவே கிடையா;
மோட்டு வான மூடாக் கூரை;
பாட்டோ காற்று; ஆட்டமோ மரங்கள்;
கூட்டு வாளரவு , தேளும் பிறவும். 190.
பொருள்
அந்தப் பெருங்காட்டின் நடுவே அமைந்திருந்தது காளிதேவியின் கோயில்.
பல வாயில்கள்' ஆயினும் கதவே கிடையாது; நீண்ட காட்டிடம்; நல்ல
கட்டிடம் ; ஆயினும் விமானத்தின் மேல்தளம் மூடாத தோற்றம்;வானமே
கூரை; வானத்தைக் கூரையாகக் கொண்ட பெருங்கோயில் எனலாம்.
கோயிலின் பாட்டுச்சத்தம் கேட்கும் ' பாடுபவர்கள் இலர்; காற்றுதான்
கச்சேரி நடத்தும்; கோயிலைச்சுற்றி நிறைந்த மரங்கள் காற்றிலே
ஆடும்; அதுவே நடனம் ஆகும்; கோயிலை வந்து வணங்கும் கூட்டங்கள்
பாம்பு, தேள், பூரான், பல்லி போன்றவைகளே.
கோயில் அமைப்பு
பிணத்தை அடுக்கிய பேருயரப் படிகள்;
நிணமாம் சேறு இடுக்கிப் பிடிக்கும்;
சுணங்கா நடைக்குத் தணலாய் எலும்புகள்;
நனைக்கும் கால்களுக்குக் குருதிக் குட்டை. 191.
பொருள்
கோயில் நல்ல உயரம் கொண்டது; தரையிலிருந்து மேல் செல்லுவதற்குப்
படிக்கட்டுகள் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட பிணங்களே ஆகும்,
அவைகள் இணைந்தும், பிடிப்புடனும் விளங்க அவைகளுக்கு இடையேயும்
பள்ளம் விழும் இடங்களிலும் நிணச்சேறு அழகுறப் பூசப்பட்டது; அச்சேறு
படிகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்.அதன் மீது விழாமலும்,
விரைவாயும் நடக்க எழும்புக் கூடுகள் பொருத்தப்பட்டன; அவை காலுக்கு
இதமாக அமையும். கோயிலுக்குள் செல்லக் கால்களை நன்கு கழுவ,
அக்கோயிலின் வடபுறத்தே தீர்த்தக் குளம் உண்டு; அது குருதி நிரம்பி
வழியும் குட்டை ஆகும்.
கோயில் தளம்
தரையை மெழுகல் தனிக்குருதிச் சேறால் ;
தரைமேல் நடக்க, அரை,கால் எலும்பு;
தரையின் விரிப்பு தண்கய உரிப்பு ;
தரைமேல் பூக்கள் கரிவேழக் கண்கள். 192.
பொருள்
கோயில் மண்டபத் தரைகளை நாள்தோறும் சிறப்புமிக்கக் குருதிச்
சுற்றினால் மெழுகுவார்கள் ; அந்த தரையில் நடக்கும் பொழுது வழுக்காமல்
செல்ல,ஒடிந்த,சிறுசிறு எலும்புகளைப் பதித்து வைத்திருப்பர்.அத்தரை மீது
இரத்தினக் கம்பளம்போல யானையின் உடலில் உரித்த பசும் தோலைப்
பரப்பி விரித்திருப்பர். ஆங்காங்கு அழகுபெறும் வகையில் தூவப்பட்டும்
பூக்களைப் போல, யானையின் கண்களை அழகுறப் பதித்து வைத்திருப்பர்.
பழத்தட்டு
தலைகள் மலைகள் கலைகள் கனிகள்;
அலைஅலை பரிச்செவி அருந்தளிர் இலையிலை '
கொலைகொலை கூர்க்கண்கள் குலைகுலை களிப்பாக்கு ;
தலை,உடை தண்காய் ; தட்டெல்லாம் தவழ்ந்தன . 193.
பொருள்
தேவியை அர்ச்சிப்பதற்காகப் பழத்தட்டுக்கள் பலரும் கொண்டுவந்தனர்.
அத்தட்டிலே வெட்டுண்ட தலைகள், தேங்காய் மலைகள் போல
வைக்கப்பட்டிருந்தன; கலைமிக்க நாக்குகள் கனிகளாக இருந்தன;
காற்றிலே அலையும் குதிரையின் செவிகள் தளிருடைய வெற்றிலைகளாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன; கொலை நோக்கம் கொண்ட யானையைக்
கொலை செய்து, அதன்கண்களைப் பறித்துக் களிப்பாக்காக
வைத்திருந்தனர். உடைக்கப்பட்ட தலைகள் குருதிவழியத் தேங்காய்போல்
அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பழத்தட்டுக்கள் தேவியின் பூஜைக்கு
வைக்கப்பட்டன.
விளக்கும்,பிறவும்.
கொள்ளிக் கட்டையில் குருதி விளக்கு;
குள்ளப் பேய்த்தலை கொள்ளும் தூபம்;
புள்ளொலி பேயொலி புனிதமறை நல்லொலி;
மள்ளப் பேய்களின் மண்டையடி வாத்யம். 194.
பொருள்
காட்டுக காளிகோயிலில் எரியும் விளக்குகளாவன, கொள்ளிக்கட்டையும்,
குருதியில் எரியும் விலங்குகளே . தூபமாக விளங்குவது குள்ளமான பேயின்
பறக்கும் முடியில் பற்ற வைக்கப் பட்ட தீச்சுடரே தூபங்களாகும். காட்டைச்
சுற்றி ஒலிக்கும் பறவைகளின் ஒலி யம், கிழட்டுப் பேய்களின் பேரொலியுமே
நான்மறை நல்லொலியாகும். ஒன்றுக்கொன்று எப்பொழுதும் சண்டையிடும்
மள்ளப் பேய்களின் சண்டையில் மண்டையோடு மண்டை மோதும்
ஒலியே தாள வாத்தியங்கள் ஆகும்.
தேவியின் சிங்காதனம்
இருபுறமும், இளங்கன்றின்
இருந்துதிக்கை இழுத்துசாத்திக்
கருவயிற்று விலாஎலும்பு
கணக்கின்றி நடுவமைத்து ,,,,, 195.
பொருள்
கோயில் உள் மாளிகையில் (கர்ப்பக்கிருகத்தில் ) நடுவே தேவி
அமர்வதற்கான இருக்கை அமைக்கப்படுகிறது. இரண்டு புறங்களிலும்
இளமை குன்றாத யானையின் கருத்த துதிக்கையை வளைத்துக் கட்டி,
யானையின் வயிற்று விலா எலும்புகளை எண்ணிக்கையின்றி
நடுவெல்லாம் நன்கமைத்து,......
குதிரைக்கால் குத்திவைத்துக்
கோலமாய்க் குறுவெலும்பு
அதிலிட்டு, வழகிற்காய்
குதிரைக்கண் கொலுவைத்து,,,, 196.
பொருள்
குதிரையின் கால்களைத் தரையில் நட்டு, முன்னவைகளை எல்லாம்
நன்கு சேர்த்துக்கட்டி, அதன் நடு நடுவே சிறியதும், பெரியதும் ஆகிய
விலா எலும்புகளை அழகழகாய் அமைத்து, மேலும் இடைப்பட்ட
இடங்களில் குதிரைக் கண்களைச் சொருகியும், படரவிட்டும் கொலுபோல்
உருவாக்கி.......,
மென்மேலும் பொன்போர்வை
வண்ணம்போல் வளக்கொழுப்பு
செங்குருதிச் சேறுபூசிய
சிங்காதனம் சேர்ந்திசைத்தன. 197.
பொருள்
மேலும் அழகு கூட்டும் வகையில் அவ்வளைவுகளின் மீது பொன்னால்
செய்யப்பட போர்வை போர்த்தியதுபோல் அமைய,வளமாகிய வண்ணம்
கலந்த கொழுப்பைச் செங்குருதியோடு சேர்த்துப் பிசைந்து, பூசி
அழகுமிகுந்த சிங்காதனத்தை அனைத்துப் பேய்களும் சேர்ந்து
உருவாக்கின.
தேவி புறப்படல்
செவ்வாற்றில் சிகைஅலசிச்
செங்குழம்பு மேல்பூசிச்
செவ்வாடைச் செவ்வணிகள்
சிவநீறு அணிந்துகொண்டு. 198.
பொருள்
செம்மை நிறம் கொண்ட நீரோடும் காட்டாற்றில் தனது செம்பட்டை
முடியை, அலசிக் குளித்துவிட்டுத் தலைமுடியில், செங்குழம்பு பூசிக்
கொண்டும், காய்,கால்களில் தடவிக்கொண்டும், செம்மை வண்ணம்
சார்ந்த ஆடைகளை அணிந்துகொண்டும், செந்நிற வைர வைடூர்ய
அணிகளை அணிந்துகொண்டும், தனது அழகிய நெற்றியிலே
சிவமணம் கமழும் திருநீற்றை இட்டுக்கொண்டும், அழகும், வீரமும்
கருணையும் கலந்த அருள் நோக்கோடு ஆலயம் நோக்கிப்
புறப்பட்டாள் காளிமாதேவி.
அன்னையின் தோற்றப்பொலிவு
நான்குகரம், நான்கிருகரம் ,
நான்குநான்கெனப் பேணுகரம்,
வான்மண்எலாம் வளமையுடனே
வாழவைப்பாள் வந்தமர்ந்தாள். 199.
பொருள்
நான்கு கைகளோடும், சிலநேரம் எட்டுக்கரங்களோடும் , சிலநேரம்
பதினாறு கரங்களோடும் தீமைகளை அழித்து உலகைக் காத்திட
அரசுபுரியும் அன்னையின் தோற்றம் அமைந்திருந்தது. விண்ணையும்,
மண்ணையும் கோள்களையும் வளமோடு ஆட்சி புரியும் அன்னை
வாழவைக்கும் அன்னை அக்கோயிலின் உட்சென்று சிம்மாசனத்தில்
அமர்ந்தாள்.
வரவேற்பு
மாமுதுபேய் வாழ்த்தொலிப்ப,
முனகல்பேய் பாட்டிசைக்க,
மாவீரன் மணித்தலையை
மகிழ்ந்தேதான் வெட்டியிட ...... 200.
பொருள்
வந்தருளிய காளிமாதேவியை தொன்மை வாய்ந்த கிழப்பேய் வாழ்க
தேவி! வருக வருக என வரவேற்று ஒலி எழுப்பவும், எப்பொழுதும்
முனகிக்கொண்டே இருக்கும் வயதான பேயொன்று பாடல் பாடவும்,
கோயிலின் வாயிலிலே வெற்றி கண்ட மாவீரன் ஒருவன், தன்தலையைத்
தானே வெட்டி, மகிழ்வோடு பலிபீடத்தில் வைக்கவும், புன்னகையோடு
ஆசனத்தில் அமர்ந்தாள் அன்னை.
பேய்களின் பசி
பேய்க்கூட்டம் பெரும்பசியில்,
பெற்றவளே! பசிபோக்கு!
தேய்க்குரலில் ஓலமிடத்
தேவியவள் நாவசைத்தாள் . 201.
பொருள்
கூடியிருந்த பேய்க்கூட்டம் எல்லாம் பசியால் துடித்தன; தாயைநோக்கி,
எங்களைப் பெற்ற மகராசியே! பசியோடு தவிக்கும் எங்களைப் பார்!
தீராத எமது பெரும்பசியைப் போக்கு! என்று கத்தி, ஓலமிட்டன.தேவியும்
அவைகளின்மீது கருணை கொண்டு ஆணை பிறப்பித்தாள் .
பேய்களின் பசி போக்க.....
நாவசைவில் நான்குபுறமும்,
காவுதலை, களக்குருதி ;
நோவுகாணா நுதிக்குடல்கள் ;
தாவிக்குதி தரித்திரப்பேய். 202.
பொருள்
தேவியின் நா கருணையோடு அசைந்தது; அவ்வசைவில் அங்கு
நான்கு புறமும் காவு கொடுக்கப்பட்ட மனிதத் தலைகள் குவிந்தன;
வெட்டிய களத்திலே வழிந்தோடிய குருதிவெள்ளம் அத்தலைகளைச்
சூழ்ந்து நின்றது; நல்ல திடகாத்திர உடல்களின் சேறான குடல்கள்
தரையில் நிறைந்து கிடந்தன; பசியால் வறுமை மிக்க பேயொன்று
அவ்விடத்திற்குத் தாவிக்குதித்தது.
7. இந்திர ஜாலம்.
பேய்களின் மகிழ்ச்சி .
நாவசைவில் மாமலைபோல்
நானாவித நற்சுவைநிணம் ;
ஆவலினால் ஆடிஅசைந்து,
ஆர்ப்பரித்தன சூர்ப்பேய்கள் . 203.
பொருள்
நாவசைவிலே அப்பேய்க்கூட்டம் விரும்பும் பல்வேறுபட்ட நரமாமிச
உணவுகளைக் கண்ட பேய்க்கூட்டம் ஆவலினால் அவ்வுணவைப்
பார்த்தபடியே ஆடின; பாடின; அன்னையைப் போற்றியபடி உண்டன.
உணவுக்களம்
தலைகளைத் தழுவின சில;
அலைக்குருதி ஆடினசில ;
கலைக்கண்கள் கடித்தனசில ;
வலைக்கூந்தல் வியந்தனசில ; 204.
பொருள்
உணவாகக் குவிந்து கிடந்த பிணக்குவியல் மீது பேரானந்தம் கொண்ட
பேய்க்கூட்டம் அதன்மீது விழுந்து புரண்டன; தலைக்கூட்டங்களைத்
தழுவி மகிழ்ந்தன;நிறைத்து வைக்கப்பட்டிருந்த குருதி நீரிலே
குளித்து மகிழ்ந்தன; வெட்டப்பட்ட தலையில் விழித்துப் பார்க்கும்
கண்களைக் கடித்தன; இறந்துபட்ட வீரர்களின் தலைக்குடுமியைக்
கண்டு வியந்தன சிற்சில பேய்கள்.
உண்ணும் அழகு!
குருதி குடித்து, உறுதி இழந்தன;
பருத்த உடலைப் பங்கு போட்டன;
திருத்தி அழகுறும் தீஞ்சுவை உணவுபோல்,
விருந்தினர்க் களித்து உறவை வளர்த்தன. 205.
பொருள்
அப்பேய்கள் உணவை உண்டவிதமே தனியாக அமைந்தது.
ஒருசில இளம்பேய்கள் சுவைமிக்கக் குருதியை அளவிற்கு அதிகமாகக்
குடித்தன; அதனால் குடிகாரன்போல் மனவுறுதி இழந்து ஆடின; பாடின;
பிதற்றின;. மிகப் பருத்த பெரிய உடலைச் சிறுபேய்கள் தமக்குள்
பங்கு போட்டுக்கொண்டு உண்டன; கை உனக்கு; கால் எனக்கு; வயிறு
அதற்கு; எனத் தமக்குள் பிரித்துக் கொண்டன. அங்கு தாறுமாறாகக்
கிடந்த அவயவங்களை எல்லாம் அழகுற வரிசை முறைப்படுத்தி
உலகோர் அளிக்கும் விருந்துபோல் நன்கமைத்து, அங்கு வந்திருக்கும்,
கழுகு, காகம், நரி , போன்ற விருந்தினர்களுக்கு முகமலர்வுடன் அளித்து
மகிழ்ந்தன.
முதுபேய் வேண்டல்
கற்றவர்களின் கனிக்கரும்பே !
கற்றவித்தை காட்டவந்தேன் ;
அற்றைநாள் விந்தியத்தின்
கற்றஞானம் நின்கால்களில். 206.
பொருள்
எழுந்துநின்ற கிழப்பேய் ஒன்று, தேவியை நோக்கி, வணங்கியபடி,
" கற்றவர்களின் கலைஞானம் உணர்ந்தவள் நீ. அவர்களுக்கு இனிய
நல்லாசி புரிபவள் நீ.கரும்புபோல் இனிக்கும் கலையரசி! நான்
விந்திய மலையடிவாரத்தில் அன்று கற்றவித்தையைக் காட்சிப்
பொருளாக்கி அவைகளை உனக்குக் காணிக்கையாக உன்
பாதரவிந்தங்களில் படைக்கிறேன். என்று கூறியபடிக் கண்கட்டி
வித்தையை, இந்திரஜாலக் காட்சிகளைப் படைக்கத் துவங்கிற்று.
பொன்துகள் பூமழை.
என்றுசொல்லிய குன்றுப் பேய்
நன்றுசெய்யென, நாவசைத்த,
மன்றலாளை மண்டியிட்டுப்
பொன்றுகளைப் பொன்மழையாய்....... 207.
பொருள்
போற்றிவாழ்த்திய மலையுயரப் பேயைநோக்கி, நல்லது; செய்வாய்!
என்று தேவி நாவசைத்ததும் , மன்றத்தில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த
தேவியை, நிலத்தில் மண்டியிட்டு வணங்கியபின், அன்னை மீது
பூமாரி போலப் பொன்மாரி பொழிந்தது.
பொன்னான பூங்கோயில்
கர்ப்பக் கிரஹம் பொற்பொன் ஜொலிப்பு;
சிற்பச் சிலையெலாம் செம்பொன் சிவப்பு;
அற்பப் பேய்முதல் பொற்புடைப் பேய்வரை
புட்பப் பொன்துகள் போர்த்திப் பூரிப்பு. 208.
பொருள்
கோயிலின் உள்மாளிகை , வழி, மண்டபங்கள் எல்லாஇடமும்
பொன்னால் ஜொலித்தன; கோயிலில் அமைந்துள்ள சிற்பச்சிலைகள்
எல்லாம் செக்கச்சிவந்த செம்பொன் நிறமாய்க் காட்சி அளித்தன;
அற்பமான குட்டிப்பேய் முதல் வயது ஆன , அறிவு சார்ந்த பேய் வரை,
பொன்மழையில் நனைந்து, பொன்துகள்களால் அபிஷேகம்
செயப்பட்டு விளங்கியதால் பூரிப்போடு விளங்கின.
பொன்மயப்பூமி
வாயில் வழியே வானம் அடைந்து,
கோயில் விமானம், கொத்தடுக்கு மாளிகை,
தீயில், தெருவில், தேயிளம் பிறையில்,
நாயின் வாலில், நாடெலாம் பொன்மயம். 209.
பொருள்
பொன்துகள்கள் வாயில் வழியாக வெளிவந்து, நிலமெல்லாம் பரவி,
வானை அடைந்தது; கோயிலின் விமானமெல்லாம் தங்கம் ஜொலித்தது.
அடுத்து அமைந்துள்ள கோயில் மாளிகைகள் எல்லாம் பொன்னால்
பூரித்தன; கொழுந்துவிட்டு எரியும் தீயும்,தணலும் பொன்மயமாயின;
கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்கள், பொன்துகள் போர்த்திய
தெருக்களாகக் காட்சி அளித்தன; வானதே சென்ற அத்துகள்கள்
மூன்றாம்பிறை நிலவின் வெண்மையைத் தங்கநிறமாக மாற்றின;
தெருவிலே சுற்றித் திரியும் நாய்களின் வால்கள் எல்லாம் பொன்னிறம்
பெற்றன; ஆக, அக்காடே பொன்னிறக்காடாய்க் காட்சி அளித்தது.
நுண்ணியல் பொன்மயம்
பெண்ணின் முலைமுனை, கண்ணின் கடைநீர்,
மண்ணின் மைப்பொடி , மலரின் மெல்லிதழ் ,
விண்மீன் ஒளிநுனி , விரிசுடர் மிளிரலை ,
உண்மீன், பொன்னலை மின்னின அதிசயமே. 210.
பொருள்
பரந்துபட்ட பொன்துகள்கள் பெண்களின் மார்பக நுனிமுகப்பைப்
பொன்மயமாக்கின; அப்பெண்களின் கருணையே உருவான கண்களில்
ஓரம் வழியும் கண்ணீர்த் துளிகளையும் பொன்னிறமாக்கின. நிலத்தில்
எங்கும் கிடந்து விளங்கும் மண் பரப்பை, மண்ணின் தூசியை, அப்படியே
தங்கமாக்கி ஜொலிக்க வைத்தன; சோலைகளில் மலர்ந்து விரியும் மலர்
இதழ் நுனிகளைப் பொன்னிறமாகின;
வானத்தே ஒளிரும் விண்மீன்களின் ஒளிமுனையை ஜொலிக்கும்
தங்கமாக்கி, அதனை மேலும் உயர்த்தின;வானிலே வரும் ஆதவனின்
வெண்ணிற ஒளி அலைகளைப் பொன்னிறமாக்கி தங்கச்சூரியன் எனக்
கூறும்படி மாற்றின; உண்ணும் வளம் மிக்க வயல் மீன்களின் உடலெல்லாம்
தங்கச்சுடர் மின்னின; இது பேரதிசயம் அல்லவா!
தேவியின் புன்முறுவல்
பூத்தனளே புன்முறுவல்;
பூத்தவழிப் பெரும்பேயும்,
காத்தவளே! கற்றஞானம்
காலடியில் காணிக்கை. 211.
பொருள்
அதிசய ஜாலம் பார்த்த மாதேவி புன்முறுவல் பூத்தாள்; அன்னையின்
முறுவலைக் கண்ட அந்தப் பெரும்பேயும், வணங்கியபடி, எம்மையும்.
எம் குலத்தையும் காலம் காலமாய்க் காத்து வருபவளே! நான் கற்ற
இந்திரஜால வித்தைகளை அன்னையின் காலடிகளில் சமர்ப்பிக்கின்றேன் ,
என்றபடி விழுந்து வணங்கியது.
பேயின் வேண்டுகோள்
விந்தியத்தில் சந்த்ரவதன
வித்யாதரன் வேண்டியுற்ற
இந்த்ரஜாலத் தந்திரத்தை
இயம்புகின்றேன் ஏற்றருள்க. 212.
பொருள்
தேவியே! இந்த்ரஜாலக் கலையை நான் விந்திய மலைச்சாரலில்
சந்திரவதனன் என்ற வித்யாதரனிடம் கற்றுக்கொண்டேன்; அவனிடம்
கற்ற அந்த ஜாலத்தையெல்லாம் உங்கள்முன் படைக்கின்றேன்.
அதைக்கண்டு சுவைத்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்று
வேண்டியது அக்கிழப்பேய்.
பேய் காட்டிய ஜாலம்
கண்பொத்திக் கலைமாற்றிக்
கடுந்தவத்துக் காரிகையே!
கண்பொத்தாக் கலம்மாற்றும்
கண்கட்டி வித்தைஇது. 213.
பொருள்
உலகியலைப் பாராமல் இருக்கண்களையும் இறுகப்
பொத்திக்கொண்டு, மூக்கிலிருந்து வெளிவரும் காற்றை, சூரியகலை,
சந்திரகலை, பிங்கலை என்றமுறையில் வெளியிட்டும், உள்வாங்கியும்
நெடுங்காலம் தவம் செய்து, இறைவன் உடலில் ஒருபாதியைப் பெற்று,
விளங்கும் தாயே! கண்பொத்தாமலேயே கண்ணைக் கட்டும் கலை இது.
விழித்திருக்கும் கண்ணெதிரே பொருள்களை மாற்றியமைக்கும் தந்திரக்
கலையிது.இதனைக் கண்கட்டி வித்தை என்பார்கள்.
பேய்களின் கூச்சல்
முதுபேயும் முனகல்பேய்,
முழவுப்பேய் முனிமுகப்பேய்
இதுபோதும் இந்த்ரஜாலம்;
புதுப்புதுப்பசி மதுமதுஇடு ! 214.
பொருள்
கீழே அமர்ந்திருந்த பேய்க்கூட்டம், அதில் ஒருபகுதியினர் வயதான
பேய்கள்; அவைகளும், எப்பொழுதும் எதையாவது முனகிக்கொண்டே
இருக்கும் பேயும், முழவு ஒலிப்பதைப்போல் கத்தும் பேயும்,
முனிவர்போன்ற முகம் கொண்ட பேயொன்றும், அவைகளைச் சார்ந்த
கூட்டமும் கத்தத் தொடங்கின; " இந்த்ரஜால நிகழ்ச்சி போதும்; இதை
உடனே நிறுத்து; எங்களுக்குப் புதிது புதிதாய்ப் பசி தோன்றுகிறது ;
மதுவும், மாமிசமும் நிறைய நிறைய இடுக ! என்று கூச்சலிட்டுக்
கத்தின .
தோன்றின ஊனுணவு மலைகள்
கூக்குரல்தான் முடிவதற்குள்,
சாக்கோட்டச் சன்னதிமுன்,
தூக்கியவாள் துவண்டதலை
தேக்குகுருதி நாக்குஊற........... 215.
பொருள்
பசியால் துடித்த பேய்களின் கூச்சல் அடங்குவதற்கு முன்னரே,
சா க்கோட்டம்' என்றழைக்கப்படும் காளிதேவி கோயிலின் சன்னதிமுன்,
ஓங்கிய வாளால் வெட்டப்பட்டு, விழுந்து, துவளும் கணக்கில்லா மனிதத்
தலைமலைகள், வெட்டியா இடத்தே பாய்ந்தோடும் குருதித்தேக்கம் ,
பேய்களின் நாக்கினிலே எச்சில் வழிந்து ஆறுபோல் ஓடவும் ,..............
குருதி ஆறு
வெட்டுண்ட வெறிக்கரிகள் ,
வீழ்ந்தபட்ட வியன்குதிரை ,
சொட்டுகுருதிச் செவ்வாற்றில்
மொட்டுமலராய் மிதந்துவர, ..... 216.
பொருள்
வெட்டப்பட்டு,உயிரிழந்த வீரம் மிக்கதாகிய யானைகளின் உடல்கள்,
போரிலே வீழ்ந்து இறந்துபோன வீரம் மிக்க குதிரைகளின் உடல்கள்,
வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து ஓடிவரும் செம்மைக்குருதி ஆற்றினிலே
அரும்பாகவும், மலராகவும் மிதந்துவந்தன.
மிதக்கும் தலைகள்
தலையில்லாச் சிலமுண்டம் ,
தலைதேடி நீந்திவர,
அலைச்செந் நீர் அதனடியில்
தலைதாழ மேற்கொணரும். 217.
பொருள்
அந்தக்குருதி ஆற்றினில் தலை வெட்டப்பட்ட முண்டங்கள் தமது
தலையைத் தேடி, நீந்தி வந்தன; அலைகளை உடைய செவ்வாறு
ஆற்றின் ஆழத்தில் மூழ்கிவிட்ட தலைகளை நீரின்மேல் கொண்டுவந்து
காட்டும்.
குதிரைச்சடலம்
பாய்நதகுதிரை தோய்ந்தவம்பு;
மாய்ந்தபின்னர் ஓய்ந்தவுயிர்;
ஆழ்ந்தவாறு சூழ்ந்தவுடலே
வீழ்ந்தவேகம் ஊழ்வினையாம் . 218.
பொருள்
களத்திலே வீரமாகப் பாய்ந்துவரும் குதிரையின்மீது, அம்பு பாய்ந்தது.
மாய்ந்தது ;உயிர் ஓய்ந்தது. பலப்பல உடல்களைச் சுமந்து செல்லும்
அக்குருதி ஆற்றினுள் இக்குதிரை உடலும் சேர்ந்தது;வேகம்கொண்ட
குதிரையின் வேகமும் வீழ்ந்தது; இதுதான் ஊழ்வினையோ!
உண்ணும் காட்சி
கழுகும், பேயும், காகமும், நரியும்,
அழுகுடல் அமர்ந்து, அதிதி ஆயின;
முழுதுயிர் போகா நிலையிலும், முகர்ந்து,
விழுந்து விழுந்து உண்டன உடல்களை. 219.
பொருள்
ஆற்றிலும், கரையிலும் கிடக்கும் உடல்களை உண்ணும் ஆசையால்,
கழுகுகள், பேய்கள்,காகங்கள்,நரிகள் கூடின;இறந்து கிடக்கும் உடல்களின்
முன் விருந்தினர்போல அமர்ந்தன; உடல்களின் முனகல் நில்லாதபொழுதும்,
அருகமர்ந்து முகர்ந்து பார்த்தன;உடல்கள் மீது விழுந்து,புரண்டு
உண்டன.
பாவச்செயலோ!
விழிக்கும் கண்ணால் வியந்தே அகன்று,
அழிக்கும் ஆற்றல் அகன்றது உணர்ந்து;
கொழிக்கும் உடலைக் குத்திக் கிழித்தன;
பழிக்கும் வேதம்' பற்றியோன் பாவம்! 220.
பொருள்
இறந்துபட்டவைகளின் கண்கள் மூடாமல் விழித்தபடி இருந்ததால்
அஞ்சியும், வியந்தும் அவ்விடம் அகன்றன சில 'இறந்துபட்டவைகளை
அழிக்க மிகுந்த முயற்சி வேண்டாம் என்பதை உணர்ந்த சில அங்கேயே
சுற்றிச்சுற்றி வந்தன; பருத்த உடல்களை மூக்கால் கிழித்துக் குத்தி
உண்டன சில; நான்மறையோ இவைகளைப் பாவச்செயல் என்கிறது.
நன்மை பற்றி வாழ்பவர்கள் பாவம்தான்.
இறுதிப்பயணம்
குருதி வேகம், இறுதிப் பயணம்;
உறுதுணை யானை, உரகம் , துரகம் ,
உறுதி இதனை உணர்ந்தே உயர்க.
தருதி ! தகவுதி ; தர்மமே தலையாம். 221.
பொருள்
ஓடும் இரத்தக்குருதி ஆறு; அதன் வேகத்தில் பலப்பல உயிர்களின்
இறுதிப்பயணம். யானைக்கு உறுதுணை குதிரை; குதிரைக்கு உறுதுணை
அதன் சேணம் மட்டுமே.உறுதி உரைக்கும் இச்செயல் கண்டே நல்ல
எண்ணத்தில் வாழ்க.தகவும், தர்மமும் தழைக்க உதவுக.அதுவே
தலையாய ஆகும்.
காட்சியைக் கண்ட பேய்களின் செயல்கள்.
குருதிதனைக் கண்டபேய்கள்,
குபுக்" எனக் குதித்தனவே;
அருஞ்சுவை உடல்கண்டு,
அள்ளிஅள்ளி உண்டனசில. 222.
பொருள்
ஓடும் குருதி ஆறு;மிதக்கும் உடல்கள்; இவைகளைக் கண்ட பேய்கள்,
பசியால் துடித்த பேய்கள்,அப்படியே ஆற்றில் பாய்ந்தன;நல்ல உணவாகிய
சவ உடல்களை அள்ளி விழுங்கின;
மேலும் சில பேய்
மிதக்கின்ற மிதவைக்கரி
மேல்குதித்தன நால்வகைப்பேய்;
சதைபற்றிச் சாகசமாய்ச்
சஞ்சரித்தன சகதிக்குடல் . 223.
பொருள்
இரத்த ஆற்றில் மிதக்கின்ற மிதவைபோல் செல்லும், யானையின்
உடல்மேலே நால்வகைப் பேய்களும் தாவிக்குதித்தன; அவ்வுடலின் சதைப்
பகுதியைப் பிய்த்தும் ,கடித்தும்,நக்கியும் பற்பல சாகசங்கள் செய்து,
இங்குமங்கும் ஓடின; அமர்ந்தன; இவ்வளவும் நடந்த இடம் யானைவயிற்றுச்
சகதியில் தான்.
விருந்து தேடி ....
குருதியாற்று வெள்ளத்தில்,
விருந்துசெல்ல, வேட்கைமிகு
திருதிருவென விழிவிழித்துப்
பரபரவென பாய்ந்தனசில. 224.
பொருள்
குருதி ஆற்றினிலே விரும்பும் விருந்தாக யானைக் குதிரை போன்றன
மிதந்து செல்ல,அவைகளின்மீது ஆசை வைத்த பேய்கள் எல்லாம் திரு திரு
என விழித் பர பர என விரைவாய்ப் பாய்ந்தன ஆற்றினுள்.
அறியா மூடங்கள்
முதியபேயும், புதியபேயும்,
பதியவைக்கப் படாதபாடு
மதியினிலே ஏற்காமல்
மண்காட்டில் விழுந்தொசிந்தன . 225.
பொருள்
இந்திராஜால நிகழ்ச்சி நடத்திய முதிய பேயும், அங்கு அமர்ந்திருந்த
புதிய பேயொன்றும், மூடப்பேய் க் கூட்டத்திற்குப் பலவாறு எடுத்துக்
கூறின; "இது உண்மையன்று; ஜாலக்காட்சிகள்; பார்ப்பது மாயாஜாலம்.
யானையும்,குதிரையும் குருதி ஆறும் உண்மையன்று.விழாதீர்கள்!
பாயாதீர்கள்! என்று எடுத்துக் கூறியும் அவைகள் உணரவில்லை;
பாய்ந்து.பாய்ந்து காட்டு மண்ணிலே விழுந்து கை ,கால்களை
ஒடித்துக் கொண்டன;
பொன்மழை
கலகலவெனச் சிரித்ததேவி,
நலம் நலமென நாடுமுதுபேய்
சலசலஎன ஒலிஎழும்பத்
தக தக எனத் தண்பொன்மழை . 226.
பொருள்
பேய்களின் அறியாமை கண்ட தேவி 'கல கல' எனச்சிரித்தாள் . தேவியின்
மகிழ்ச்சி கண்ட முதுபேய் இதுவே தருணம், என நினைந்து அடுத்த
நிகழ்வைத் தொடங்கியது.சல ச ல என ஒலி எழுப்பியபடி,வானத்திருந்து
தக தக என மின்னியபடிப் பொற்காசு மழை அங்கே பொழியத்
தொடங்கியது.
செல்வவளச்சீர்மை
பூத்ததுவே பொன்மணிமலர்;
காய்த்ததுவே வேய்முத்தம் ;
வார்த்ததுவே வான் அணிக்குவை;
சீர்த்ததுவே செல்வவளம். 227.
பொருள்
அந்த அரங்கமெங்கும் பொன்மணிகளால் ஆன பொன் மலர்கள்
பூத்துக்குவித்தன.மூங்கில் மரத்தகத்தில் தோன்றும் முத்துக்கள் கொட்டின;
வானத்திலிருந்து அளவற்ற அணிக்குவியல்கள் வந்து சூழ்ந்தன;தேவியின்
கோயில் முழுவதும் செல்வ வளம் நிரம்பி வழிந்தன.
பொன்னாசை
பொன்னாசை பட்டதாலே
பேயான பெண்பேய்கள்
பொன்னாசை மீண்டும்வரப்
பொன்குவியல் மீதுபாய்ந்தன. 228.
பொருள்
பொன் மீது பேராசை கொண்டதாலே பேயாக மாறிவிட்ட பெண்
பேய்கள்,பொழிந்த பொன்மழை கண்டதும் மீண்டும் பொன்னாசை
மனமெல்லாம் நிறைந்திட, அப்படியே பொன்குவியல் மீது பாய்ந்து,
விழுந்து புரண்டன.
பழியடைந்த பேய்கள்
பொன் பொன் என, எனதெனதென
முன்பின்அலை பண்பின்மனம்
உண்திண்ஒழி மண்நிலைகுணம்
மண்நிலாஉடல் புண்பழிமன் . 229.
பொருள்
பொன்!பொன் ! என்னுடையது! என்னுடையது! எனக்கூறி ,,முன்னும்
பின்னும், புரண்டு, அதன்மீது விழுந்து அதனைப்பற்றியபடியே அலைந்து,
பண்பு மயங்கிய மனம் கொண்ட பேய்கள் சில; உண்பது,தின்பது தவிர,
எதையும் நினைக்காதமனம் கொண்டவைசில; நிலையான குணமற்றவை
பல; உலகில் நிலைத்து நில்லாத உடலைக் கொண்ட பேய்கள்,
நிலவொளி போல் பறப்பன ,அவைகள் தங்கள் பேராசையால் பழியுற்றன;
மற்றவர்களால் புண்படுத்தப்பட்டன. அந்தோ பாவம்!
காளியின் முடிவு
கண்கட்டி வித்தையால்
கருத்திழந்தது, கருங்கூட்டம்;
புண்பசியால் புரண்டழுபேய்
புண்படுவதை, விரும்பாத,..... 230.
பொருள்
முதுபேய் காட்டிய கண்கட்டி வித்தைகளை விரும்பாத பேய்க்கூட்டம்
முனகின; வாட்டும் பசியால் புலம்பின; புரண்டன; இவ்வாறு அவைகள்
துன்புறுவதை விரும்பாத மாகாளி......
மாகாளி மாற்றிடுக!
மாபாவம் நீக்கிடுக!
போகாத பொய்க்காட்சி
போதுமே, என்றுரைத்தாள் . 231.
பொருள்
கண்கட்டி வித்தையை நிறுத்துங்கள்! பசியால் துடிக்கும் பாவத்தை
நீக்கிடுக! உண்மையாய் நடவாத பொய்க்காட்சி இத்தோடு போதும்.
என்று ஆணையிட்டாள் .
முதுபேயின் புதுச்செய்தி
முறுவலித்தாள் அதுதடுத்தாள் ,
முதுபேயின் புதுச்செயலை
விருப்புடனே ஏற்றிட்டாள் ;
சிறந்தாளைச் சீர்வணங்கி, 232.
பொருள்
சினமில்லாத முகத்தில் புன்சிரிப்புடன், இந்திரஜாலம் தடுத்தவள்
அமர்ந்திருக்கப் புதுப்பேயொன்று ஒரு புதுச்செய்தியைச் சொல்ல
விண்ணப்பித்தது . விருப்போடு,அதனை ஏற்றாள் . அப்பேயும் சிறந்த
அன்னையை விழுந்து வணங்கியது.
சிவபுராணம்
அகப்பையில் அகப்படாத
யுகப்பேயும் தகவுற்ற
மகத்துவமாம் மாதேவன்
மாப்புராணம் நான்புகல்வேன் . 233.
பொருள்
கர்ப்பப்பையில் தோன்றிப் பிறக்காத,அந்தப்புதுப்பேயும்,
தகுதிமிக்கதாகிய மகாதேவனின் பெரியபுராணத்தை நான்
இப்பொழுது சொல்லப்போகிறேன். என்றது.
தேவாசுரர்
தேவாசுர மூவாயிரம்
காவாக்கதை நாவாலே
தேவிஉன்முன் பாவிநானே
கூவிடுவேன்; ஏவிடுவாய் . 234.
பொருள்
மூவாயிரம் கோடி ஆண்டுகள் தேவர்களும், அசுரர்களும் மூவேழ்
உலகத்தையும் ஆண்ட கதையைப் பாவியாகிய நான் தேவியாகிய
உன்முன்னே சொல்லிடுவேன்; சொல்லுமாறு நீயே ஆணையிடுவாய்,
என்று பணிந்து வேண்டியது.
மன்றுளாடி மாப்பெருமை
என்றபடி மன்றினுள்ளே
சென்ற கூட்டம் வந்துநிற்கக்
கன்றுதேடும் கறவைபோல்
மன்றுளாடி மாப்பெருமை.... 235.
பொருள்
சிவபுராணத்தை மன்றத்தில் அம்முதுப்பேய் சொல்லத்தொடங்கியதும்,
வெளியே சென்ற கூட்டம் உள்ளே வந்து குழுமின. தாய்ப்பசுவைத்
தேடும் கன்றுபோல, அப்பேயும் இறைவனை நாடி, அவன் புகழ்
பேசத்தொடங்கியது. மன்றுளாடி =சிவபெருமான்
பேச்சாற்றல்
பணிவுடனே பெருமைகளை,
மணிச்சொல்லால் அணிவித்தது ;
தனிச்சிறப்பைக் கனிவுடனே
இனிமையோ டெடுத்துரைத்தது. 236.
பொருள்
சிவபெருமானின் பெருமைகளைப் பணிவோடு, அழகான சொற்களால்
மாலையாக அணிவித்தது . அவரது தன்மைவாய்ந்த சிறப்பியல்புகளை
இனிமையும், கனிவும் கலந்து எடுத்துரைத்தது. அப்பேய்.
8. தெய்வப் பாரம்பர்யம்
முழுமுதற்கடவுள் .
பழம்பொருட்கெலாம் பழம்பொருளவன் ;
தழலவனுடல், குழல்முடிவெளி ;
உழவிலாப்பயிர் ; கழல்கலைக்கடல்;
மழகுழவனே பழுமுதல்தலை. 237.
பொருள்
தொன்மைவாய்ந்த மூவேழ் உலகப்பொருட்களுக்கு எல்லாம் முன்
தோன்றிய தொன்மைக்கடவுள் அவனே. தீயாலே விளங்குவது அவனுடல் .
பெருவெளியான ஆகாயமே அவன் முடியாகும். சிவபெருமான் என்னும்
இந்தப்பசும்பயிர் உழாமலும், நிலத்தைப் பேணிக்காக்காமலும் தானே
தோன்றிய முதற்பயிராகும். அவனது பாதாரவிந்தங்கள் கலைகளின்
ஆழமான,பரந்துபட்ட கடலாகும். இளமை மிகுந்தவன்; இளமைவாய்ந்தவன்;
அப்பரம்பொருளாம் சிவனே தொன்மைக்கடவுள். முதற்கடவுள்.
எல்லாத்தெய்வங்களுக்கும் தலைமையும், முதலும் வாய்ந்த கடவுளாகும்.
(மழ ,குழ = இரண்டும் இளமையைக் குறிக்கும் உரிச்சொற்கள்.)
தான்தோன்றி
தானாகத் தோன்றினானே;
வானாக வளர்ந்தானே ;
மீனாக மிளிர்ந்தானே;
ஊனாகும் உயிரவன்தான். 238.
பொருள்
தந்தை, தாய் என்னும் தோற்றுவிக்கும் மூல ஆதாரமின்றித் தானே
தான்தோன்றியாக அவதரித்தவன்.தீ,புனல், காற்று, வெளி, இவைகளால்
ஒருங்கிணைந்து முதன்முதலில் தானே தோன்றியவன். உயர்ந்த
வானமாகவும் இன்றுவரை வளர்ந்துகொண்டே இருப்பவன். நீர்நிலைகளில்
மீனாகவும் அவன் மிளிர்ந்தான். அண்ட சராசரங்களிலும் ஊனும் அவனே.
உயிரும் அவனே. எல்லாமாகி நிற்பவன் சிவனாகும்.
பரம்பொருள்
பாரெல்லாம் பரமானான்;
காரெல்லாம் நிறமானான்;
சீரெல்லாம் சிறப்பானான்;
சிவனென்றே பொருளானான். 239.
பொருள்
நிலம்,நீர்,ஆகாயம், காற்று என்னும் எல்லா உலகங்களுக்கும் இவனே
தலைவன் ஆகும்.கருமை,பச்சை என்று பலவகைப்படும் வண்ண
பேதங்களும் இவனே.போற்றுதல், புகழ், பெருமை எல்லாவற்றையும்
சிறப்பாகப் பெற்றவன் இவனே. நன்மை, நல்லன, மங்களங்கள் என்று
போற்றப்படும் பெயரான சிவம், சிவன் என்பதும் இவனையே ஆகும்.
இது இறை உரை
படைபலபதி விடைவிரிவிதி
மடைமகிழ்மதி உடைஉறுபுலி
நடைமொழிதுதி கொடைகுளிர்நதி
இடைஇளம்சதி இறையுரையிது. 240.
பொருள்
சிவனின் படையாகப் பணிபுரிவது பலப்பலத் தலங்கள்; இறைவனின்
ஊர்தியாகவும், கொடியாகவும், கயிலைக் காப்பாளனாகவும் விளங்குவது,
விடையாகிய அறக்கடவுள். சிவன் தலையிலே மகிழ்ச்சி வெள்ளத்தை
மடைவெள்ளம்போல ஆன்மாக்களின் உள்ளத்திலே பாய வைப்பது
மூன்றாம்பிறைச்சந்திரன் ஆகும். தண்டகாரண்ய முனிவர்களின் தீய
வேள்வியிலே தோன்றி.இறைவனை அழிக்கவந்த புலியை வீழ்த்தி,
அதன் பசிய தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். அடியவர்களால்
பக்தியுடன் பாடப்படும் நிறைந்த துதிப்பாடல்களே சிவமொழி நடை
ஆகும்.ஆன்மாக்களின் வெம்மை களைந்தும் ,தாகம் தீர்த்தும் இறைவன்
அளிக்கும் கொடைப்பொருளாக அமைந்து விளங்குவது சட்டையில்
ஒளிந்திருக்கும் கங்கை நதி ஆகும். நுண்ணிய இடைகொண்ட பார்வதி
தேவியை ஒருபாகமாகக் கொண்டவர்.வேதாகமங்களில் இறைவனே
இதனை உரைத்திருக்கிறார்.
பிறவாப்பெரியோன்
பிறப்பிறப்பும் பற்றாப்பரம் ;
பிறப்பிறப்பினில் உறுகடுந்துயர்
அறக்களைந்து ஆன்மாக்களை
நிறைகாக்கும் முறைகாவலன் . 241.
பொருள்
பிறப்பும் இறப்பும் ஒருபோதும் பற்றாத பெரியோன் சிவன் ஆகும்.
தான்மட்டுமன்று, தன்னை முறையோடு வணங்கும் சிவனடியார்களையும்
பிறப்பு,இறப்பு என்ற துயரிலிருந்து விடுவித்து, தனது சேவடியில்
நீங்காத இடம் அளித்துக் காப்பவன்.
முத்தொழில்
நான்முகனைப் படைத்தலுக்கும்,
மோனமாலைக் காத்தலுக்கும்,
ஞானருத்ரனை அழித்தலுக்கும்,
ஆணையிட் டாதியானே . 242.
பொருள்
முத்தொழிலுக்கும் தகுதிமிக்கோரைப் பணியில் அமர்த்தினார் சிவம்.
படைத்தல் தொழிலாற்ற நான்முகனையும், காத்தல் தொழிலாற்றத்
திருமாலையும், அழித்தல் தொழிலாற்ற உருத்திரனையும் படைத்துச்
செயல் ஆற்றவைத்தார் முதற்கடவுளாகிய சிவபெருமான்.
தேவ உலகு
விண்ணவர்தலை இந்திரன்தான்;
தண்வருணன் தீயக்னி ,
எண்மர்கள் இணைந்தனர்;
பொன்னுலகு மின்னியதே. 243.
பொருள்
தேவ உலகின் தலைவனாக இந்திரன் விளங்கினான்; அவனுக்குத்
துணையாக எண்மர் நியமிக்கப்பட்டனர்; வருணன், அக்கினி, குபேரன்,
வாயு, நிருதி ,யமன்,ஈசானன் என்ற எழுவரும் அவரவர்க்குரிய பணியில்
ஈடுபட்டனர்.அதனால் தேவ உலகம் செழிப்போடு விளங்கியது.
தேவகூட்டம்
முப்பத்து முக்கோடி
முதுகிளையாம் தேவர்கள்
தப்பாது தன்பணியில்
தலைசிறந்து, நின்றார்கள். 244.
பொருள்
பலவேறு தொன்மை வாய்ந்த கிளைகள் வாயிலாக,முப்பத்து
மூன்றுகோடி தேவர்கள் அறவழியிலிருந்து பிறழாமல் தத்தம்
பணியைச் செவ்வனே ஆற்றி,உயர்ந்தோராக விளங்கினர் .
அன்னை
கடுந்தவத்தால் கரம்பற்றிய
நெடுங்குன்ற நீள்புகழாள் ,
கொடுஞ்செயலைத் தடுத்தழித்து,
மடுவெள்ளக் கருணைத்தாய். 245.
பொருள்
இமயமலையென்னும் மன்னனுக்கு, மகளாய் அவதரித்து, இறைவன்
சிவபெருமானையே மணக்கவேண்டும் ,என்று கடுமையாகத் தவம் செய்து,
அவரையே மணம் புரிந்துகொண்ட புகழினை உடையவள்; தீயவர்கள்,
அரக்கர்கள் ஆற்றும் செயலை அழித்து, அவர்களையும் அழிக்கும்
வீரத்திருமகள்;தமது அடியவர்கள்,உலகமக்கள் மீதெல்லாம் கருணை
கொண்டு, காக்கும் நற்றாய்; அவளே பராசக்தி;
கயிலைமலை
சிவனுக்குச் சரிபாதி,
சிவனோடு முதலாதி,
தவக்கயிலை சிவமாபதி;
நவநாயகி உவக்கும்பதி. 246.
பொருள்
சிவபெருமானது பெருமைகளில் கயிலை மலையும் சரிபாதி
கொண்டது. சிவனோடே தோன்றி,அவன்போலவே ஆதிமுதலாக
விளங்குவது.தவம் செய்தபடியே உலகாளும் சிவம் தங்கியருள் பாலிக்கும்
உயர் தலம் கயிலை ஆகும்.சிவனைவிட்டுப் பிரியாத அன்னை
உமாதேவி மகிழ்ந்து வீற்றிருக்கும் பதி ஆகும்.
சிவன்பெருமை
ஒரேஒரிறை ஈர்சக்தி
மும்மூர்த்தி நான்குமறை
ஐந்துதொழில் ஆறுமதங்கள்
எழுகன்னியர் எண்பாலகர்,,,,, 247.
பொருள்
மூலமுதல்வனாம் சிவனே ஒர்கடவுள் ; சிவம், சத்தி என்னும் இரண்டே
மூலாதாரச் சத்திகள்; பிரமன்,திருமால், உருத்திரன் என்ற முமூர்த்திகள்;
நான்கு வேதங்கள்; படைத்தல்,காத்தல் ,அழித்தல்,மறைத்தல், அருளல் என்ற
ஐந்து தொழில்கள்; சைவ, வைணவ,சாக்த, கௌமார,காணாபத்ய, சௌர
என்னும் ஆறுமதங்கள்; ஏழு கன்னியர், அட்ட திக்பாலகர்கள் ,
சிவன்பெருமை
நவக்கோள்கள் பற்றுவிடல்
பதினோரு வுருத்திரர்கள்
பன்னிரண்டு சூரியர்கள்
பணிக்கடவுளர் அணிவகுப்பார். 248.
ஒன்பது கோள்கள்,பற்றில்லாநிலை, பதினொன்று உருத்திரர்கள் ,
பன்னிரண்டு சூரியர்கள், ஆகியோர் பணி ஆற்றும் கடவுளர்களாக
அணிவகுத்து நின்று உலகைக் காப்பார்கள்.
சிவக்குடும்பம்
மூத்தபிள்ளை முதுயானை,
முகத்தானே பகைக்கரியை
வீழ்த்திடவே எடுத்தவுரு ,
வியன்கரிமுகம் விநாயகனே. 249.
பொருள்
சிவபெருமானின் முதற்குழந்தை தொன்மை வாய்ந்த இளம்
யானை முகம் கொண்டபிள்ளை ஆகும். கஜமுகாசுரன்' என்னும்
அரக்கனை சங்கரிப்பதற்காக சிவனும்,பார்வதியும் யானை உருவம்
தாங்கி ,அவ்வுருவிலே ஈன்றெடுத்த குழந்தையே விநாயகப் பெருமானான
யானைமுகத்தோன் ஆவார்..
மாமுருகன்
சூரரக்கன் வீரழித்துத்
தார்மாலை தரித்தவனே ,
கூர்வேலன் சீர்முருகன்
ஈரேழு உலகவனே. 250.
பொருள்
வரபலத்தால் விண்ணவர்களை அடக்கிஆண்டவனும், அவர்களைச்
சிறையில் தள்ளியவனும் ஆகிய சூரபதுமனையும்,அவன் தம்பியர்
சிங்கமுகனையும், தாரகனையும் அழித்து,வெற்றிபெற்ற மாமுருகன்,
அன்னை தந்த வேலாயுதம் கொண்டவன் பதினான்கு உலக
மக்களால் போற்றப்படுபவன் வேலவன் சிவபிரானின் இரண்டாம்
மகனாவான்.
அய்யனார்
தண்டகவன முனிவர்க்குழு
தருக்குவேள்வி தடுத்திடவே,
பொன்மோகினி உண்ணிறையிறை
நன்மகன் ஐயனாரே . 251.
பொருள்
தண்டகாரண்ய முனிவர்க்கூட்டம் இறைவனுக்கு நிகரான
சிறப்பைப்பெறத் தீயவேள்வி நடத்தினர்; உலகைக்காக்க அவ்வேள்வியைத்
தடுத்து நிறுத்த முடிவு செய்து, திருமால் மோகினி வேடத்திலும், இறைவன்
பிட்சாடணர் வேடத்திலும் சென்று அதைத் தடுத்தனர். அவ்வேளை
மோகினி மீது மையலுற்ற சிவன் ஐயனாரை மகனாகப் பெற்றார்.
மேலும் சில மகன்கள்
தக்கயாக வீரபத்ரன் ,
தக்கபக்தி சண்டேசர்,
நற்கண்ணளி கண்ணப்பர்,
நந்தனாரும் நின்றருள்வர். 252.
பொருள்
தக்கன் நடத்திய வேள்வியிலே தக்கனை அழித்த வீரபத்ரர்,
நல்லபக்தி சண்டிகேஸ்வரர், இருக்கண்களையும் இறைவன் கண்வழி
குருதி நிற்க, அக்கண்ணில் அப்பிய கண்ணப்பர்,நந்தன் என்றழைக்கப்படும்
தகுதிசால் அடியவர், ஆகியோரும் இறை மைந்தர்களாய்க் காட்சி
அளிப்பார்கள்.
நால்வர்
சம்பந்தன், நாவரசன் ,
சுந்தரன், மணிவாசகன்
சம்பந்தச் செந்தமிழால்,
சத்புத்திரச் சார்பாமே. 253.
பொருள்
சீர்காழியில் அவதரித்த, திருஞான சம்பந்தர், திருவதிகை
திருநாவுக்கரசர், திருவெண்ணெய்நல்லூர் ஆலால சுந்தரர், திருவாதவூர்
மாணிக்கவாசகர் ஆகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும்
சத்தைச் சார்ந்த நான்கு மகனார்களும் வீற்றிருப்பார். செந்தமிழ்ப்
பண் தேவாரம்,திருவாசகம் பாடிய நிலையால் சிவசம்பந்தம் உடையவர்
அவர்கள்.
தேவரும், அரக்கரும்
தொல்லமுது கொல்நஞ்சு
தோன்றிற்றே இரு பிரிவு;
நல்லதேவர் வல்லரக்கர்
வற்றாத போர்ப்பிரிவு. 254.
பொருள்
அமுதத்தைப் பெறுவதற்காகத் தேவர்களும், அரக்கர்களும்
பாற்கடலைக் கடைந்தார்கள். அங்கு தோன்றியது தேவர்,அரக்கர் என்ற
இரு பிரிவுகள். அன்றுமுதல் இருபிரிவினரும் போர் புரிந்து கொண்டே
இருந்தனர்.
காசியபர்
காசியபர் பரம்பரையே
கருணையும், கடுமையும்;
பேசியென்பயன்? பெரும் போரால்
பெற்றதுயர் மாறிடுமோ? 255.
பொருள்
மிகப்பெரிய ஞானி;தவமுனிவர்; முக்காலம் உணர்ந்தவர்; இரண்டு
மனைவியர் கொண்டவர்; காசியபர் என்ற முனிவர்.அவர் வழியிலே
தோன்றியவர்களே தேவரும்,அரக்கரும். கருணை தேவர்களும்,
கடுமை கொண்ட அரக்கர்களும் வீணே போரிட்டனர்;எவ்வளவோ காலம்
கடந்தும் அப்போர் நிற்கவேயில்லை.
அரக்க குணம்
அருவேத நெறிமீறி,
அகங்கார மனம்கொண்டு,
கருங்குணத்துப் பேரரக்கர்
கடும்போரில் மாய்ந்திட்டார். 256.
பொருள்
மறைகள் காட்டும் நன்னெறியை மீறி நடந்து, ஆணவம்
மிகக்கொண்டு தீய குணம் கொண்டதால் பல போர்களில் ஈடுபட்டுத்
தோற்றும்,மாய்ந்தும் போனார்கள். அவ்வரக்கர் கள்.
சிவக்கருணை
ஆணவத்தால் அரக்கர்பலர்
ஆதியோடு போர்புரிந்து,
தாமழியினும், தண் கருணை
தானளித்தே ஏற்பவர்சிவம் . 257.
பொருள்
ஆணவம் கொண்ட அரக்கர்கள் ஈசனையே எதிர்த்துப் போரிட்டனர்;
போரிலே தோற்று ஒடி ஒளிந்தனர்; சிலர் மாண்டனர்;அப்படித்
தோற்றோடிய அரக்கர்கள் மீது கருணை கொண்ட சிவனார் அவர்களுக்கு
வரமும் ,வாழ்வும் அளித்து நல்வழிப்படுத்தினார்.
வீர விளைநிலம்
1.பிரமன் தலை இழத்தல்
பரமன்போல் சிரமைந்து ;
வரமளிக்கும் திறனுடையேன்;
செருக்கினால் சிவன்கரத்தால்,
பிரமதேவன் சிரமிழந்தான். 258'
பொருள்
சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலை; சிவன்போலவே வரம்
அளிக்கும் மாண்பும் உள்ளது; அதனால் நானும் சிவனும் சமமானவர்கள்"
என்று செருக்குற்றான் பிரமன். அதனால் அவனது ஐந்தாம் தலையைத்
தனது நகத்தினால் கிள்ளியெறிந்தார் சிவபெருமான். எட்டு
வீரத்தலங்களில் ஒன்றான, திருக்கண்டியூர் என்ற தலத்தில் இது
நடந்தது.
பிரமனுக்கருள்
திருக்கண்டியூர் கண்டநீலன்
திருக்கண்டம் இழந்தபின்பு,
விருப்புடனே வீழ்ந்துபோற்றி,
அருள்பெற்றான் மருள்பிரமன். 259.
பொருள்
திருக்கண்டியூரில் நீலகண்டனைத் தலையிழந்த பிரமதேவன்
நிலமுற வீழ்ந்து,வணங்கிப் போற்றி, சிவனருள் பெற்று உய்ந்தான்.
2. அந்தகன் அழித்தல்
உலகுயிர்களை உறுதுயரளி
அலகையாம் அந்தகனை,
நலச்சக்கர நற்படையால்
நன்கழித்தார் நமசிவாயர் . 260.
பொருள்
உலக மக்களை இருளாக்கத்தால் துன்புறுத்தும் பேய் போன்ற
அந்தகாசுரனைத் தன்னிடமுள்ள சக்கரப்படையால் அழித்துச்
சங்கரித்தார் சிவபெருமான். திருக்கோவிலூர் என்ற தலத்தில் இது
நடந்தது.
திரிபுரசங்காரி
வான்கோட்டை தானமர்ந்து,
வீணழிவில் வெற்றிகாணும்
ஞானநகை போனதுபுரம்;
ஞானிசிவன் ஞானதீக்கை. 261.
பொருள்
வானத்தே சுற்றிவரும் மூன்று அரக்கர்களாம் கோட்டை; நிலவுலகில்
பறந்துசென்று அப்படியே அமர்ந்து,அழிவை உருவாக்கும் முப்புரக்கோட்டை
பலனின்றியும், பயமின்றியும் அழிக்கும் அரக்கர்கள் செயல்.. மேரு
மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் ,திருமாலை
அம்பாகவும் கொண்டு,நான்கு மறைகள் பூட்டிய தேரிலே முப்புரம்
அழிக்கும் போருக்குப் போன சிவபெருமான் அக்கோட்டைகளைப்
பார்த்து நகை கொண்டார்; நகைத்தார்; கோட்டைகள் பொசுங்கிப்
பொடியாகிக் கீழே விழுந்து நொறுங்கின;ஞானியின் சிரிப்பு ஆணவத்தை
அழித்தது; மூன்று அரக்கர்களுக்கும் ஞான தீக்கை நெருப்பு தீக்கை
அளித்து த் தன் சேவடியில் சேர்த்துக்கொண்டார். திருவதிகை என்னும்
தலத்தில் நடந்தேறிய நிகழ்வு இது.
தக்கன் சங்காரம்
தருக்குற்ற தக்கன்சிரம்
தளிர்விரலால் கிள்ளியே,
செருக்கினை அழித்தேயருள்
திருப்பறியலூர் சிறப்புவீரம் . 262.
பொருள்
பிரமனின் மூத்த மகன் தக்கன்; சிவனையே வணங்கிவந்த அவன்,
சிவபெருமானுக்குத் தன்மகளை மனையாளாகக் கொடுக்கவிரும்பித்
தவம் செய்து, இறைவன் அதற்கருளவும், நதியில் நல்ல நாளில் நீராடச்
சென்ற தக்கன் தாமரைமலரில் மலர்ந்துள்ள மழலையைப் பார்த்து
மகிழ்ந்து,எடுத்துச்சென்று,வளர்த்து, ஆளாக்கி,ஐந்து வயதில் தவம்
செய்யும் தாக்காயினியை நேரே கண்ட சிவன் அவளைக் காந்தர்வ மணம்
செய்துகொள்கிறார். தன்னிடம் சொல்லாமல் தன்மகளை அவர்
மணந்து கொண்டதால் சிவனை வெறுத்து, ஒதுக்கித் தானே கடவுள் போல்
செருக்குற்றுச்சிறப்பு வேள்வி செய்கின்ற காலை, சிவனுக்குத் தரவேண்டிய
ஹவிர்பாகத்தைத் தராமல் அவமதிக்கிறான்; அதனைக் கேட்கவந்த
தன்மகளையும் அவமதிக்கிறான். அவளோ அதே வேள்விக்குண்டத்தில்
விழுந்து உயிர் நீக்குகிறாள்;சிவனின் சொல் கேட்டு, அக்குண்டத்தில்
தோன்றிய சிவாம்சம் ஆகிய வீரபத்திரர் தக்கனின் தலையைத்தன்
விரல்களால் கிள்ளி எடுத்து வீழ்த்துகிறார்.தக்கனுக்கும் சிவனார்
அருள் காட்டுகிறார். அங்கு கிடந்த வேள்விப்பசுவான ஆட்டின் தலையை
அவனுக்குப் பொருத்தி மீண்டும் வாழவைக்கிறார். திருப்பறியலூர்
என்ற தலத்தில் நடந்தது இந்நிகழ்ச்சி.
சலந்தரன் சங்காரம்
அலைஆணவம்; கலைக்கன்மம்;
வலைமாயம் சலந்தரனை,
வளைவிற்குடி மலைவில்லர்
தலையறிந்தார் தளையறிசிவம் . 263.
பொருள்
கடலிலே தோன்றிய ஆணவத்தான் ,கன்மமாகிய கல்வியைக்கற்று,
மாயமாகிய வலைக்குள் விழுந்து, அரக்கனாய் மாறிய சலந்தரனை,
வளைந்த விற்குடி என்னும் தலத்தில் மலையையே வில்லாகக் கொண்ட
சிவபெருமான் சங்கரித்தார்; ஆன்மாக்களின் தளைகளை அறுத்து,
மீண்டும் பிறவாவண்ணம் காக்கும் சிவபெருமான் அவ்வருள் புரிந்தார்.
கய சங்காரி
மழுவுடையான்; மாணிக்கத்தான்;
வழுவுற்ற முழுமுனிவர்,
அழிவேள்வி விழுங்குகயம்
விழுதோல் உரி செழுவீரம் . 264.
பொருள்
வழுவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் மழு
என்னும் படை ஏந்திநிற்பவன்; மாணிக்கம்போல் ஒளிர்விடுபவன்;
அத்தலத்தில் வாழ்ந்த தண்டகாரண்ய முற்றும் கற்ற முனிவர்கள்
இறைவனையே எதிர்த்தும், தீயவேள்வி செய்தும் வந்த காலை, அதனைத்
தடுத்துநிறுத்த வந்த சிவனைஅழிப்பதற்காக வேள்வித்தீயில் இருந்து
பலவிதக் கொடிய விலங்குகளை ஏவுகின்றனர்;அவ்வகையில் மதம்
கொண்ட யானையை ஏவ , அது சிவனை விழுங்கி விடுகிறது. உலகு அஞ்ச,
இறைவன் யானையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து,
அந்த வலிமைமிக்க யானைத்தோலை க் குருதி சொட்டச்சொட்ட ப்
போர்வைபோல் போர்த்திக் கொள்கிறார்.
மன்மத தகனம்
அஞ்சம்பன் அஞ்சியஞ்சி
அஞ்சம்பை விஞ்சிவிடச்
செஞ்சிவனின் செந்தீக்கண்
பஞ்சாக்கிட நஞ்சிவத்தவம் . 265.
பொருள்
அரவிந்தம், அசோகம் ,மாம்பூ,மல்லிகை,முல்லை என்னும் ஐந்து
மலர்களால் உருவாக்கப்பட்ட மலரம்பினை உடையவனான மன்மதன்
தேவர்களின் கட்டளைப்படி ,மிகுந்த அச்சத்துடன் தவம் புரியும்
சிவபெருமான்மீது மலரம்பை,மனதை மயக்கி மோகத்தில் ஆழ்த்தும்
அம்பை அஞ்சியபடியே ஏவுகிறான்; அந்தோ! தவத்தில் ஆழ்ந்திருந்த
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியை உமிழ,மன்மதன்
சாம்பலாகிப் போய்விடுகிறான்.அவனைப் பஞ்சுபோல் பறக்கவிட்டது
சிவத்தவப்பெருமை ஆகும். கொறுக்கை என்ற தலத்தில் நடந்த நிகழ்வு இது.
காலனைக்காலால் உதைத்தது
பதினாறு பதிசிவனே;
விதிகேட்க . பதிமதியேன்,
அதிபாசம் அறுந்தோட
மிதிகால்கள் ; மிளிர்வீரம். 266.
பொருள்
மார்க்கண்டேயன் பதினாறு வயதுப் பாலகன். அவனை அவன் ஆயுள்
முடிந்ததால் யமனுலகிற்கு அழைத்துப்போக யமன் வருகிறான். சிவபூஜை
செய்து கொண்டிருந்த சிறுவன் எனது பதியாகிய சிவபெருமான் என்னைக்
காப்பார்; என்றதும், விதி முடிந்துவிட்டது; சிவனோ பிறரோ யாரையும்
நான் மதிக்கமாட்டேன்; என்று சினந்து கூறுகிறான்; சிறுவனோ சிவனைக்
கட்டிக் கொள்கிறான்;உன்னை மட்டுமல்ல அவனையும் சேர்த்து இழுப்பேன்"
என்று இறுமாப்புடன் கூறிய யமன் பாசக்கயிற்றை சிறுவனோடு
சிவலிங்கத்தையும் சேர்த்து இழுக்கிறான்.இலிங்கத்தில் இருந்து
வெளிப்பட்ட சிவபெருமான் தனது காலால் அவனை உதைத்துக் கீழே
தள்ளுகிறார். பாசக்கயிறும்,அவன் உயிரும் அறுந்துபோகின்றது.
திருக்கடையூர் என்ற தலத்தில் சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக
விளங்குகிறார்.
மேலும்சில
கங்கை அடக்கிக் காரிகை வென்றான்;
சங்கை அகற்றிச் சங்கம் தாங்கினான்;
பங்கை அளித்தும், அங்கை காத்தும் ,
பொங்கும் தீயாய்ப் புவியை வென்றான். 267.
பொருள்
பகீரதன் என்ற மன்னனின் தவத்திற்கிணங்கி நிலம்நோக்கிக் கர்வத்துடன்
வந்த தேவகங்கையை, அடக்கத் தன் தலைச்சடைக்குள் அவ்வாற்றை
மறையச் செய்தான்; கர்வம் இழந்து பணிந்து வேண்ட, அக்கங்கையை
அழகுறத் தன் தலையிலேயே சூட்டிக்கொண்டான்.
மதுரை முத்தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய சந்தேகங்களை எல்லாம்
தலைமைப் புலவனாக வீற்றிருந்து போக்கினான்;இறையனார் களவியல்"
என்னும் நூலையும் எழுதினான்.
பார்வதியின் தவத்தைப் புகழ்ந்து, அதற்கான பரிசாகத் தன்னுடலில்
பாதியை,அன்னையின் பங்காக அளித்தான்.
மதுரையை ஆண்ட பொற்கைப்பாண்டியனின் நீதி நேர்மையைப்
பாராட்டி, நியாயத்துக்காக அவன் வெட்டிக்கொண்ட கையைப் பொற்கை
ஆக மாற்றினான்.
தமிழுக்குத் தங்கம்
தமிழைக் கேட்கத் தங்கம் தந்தவன்;
அமிழ்தம் அளிக்க, நஞ்சை உண்டவன்;
உமிழ்நீர் இறைச்சி அமிழ்தம் என்றவன்;
குமிழ்மலர்க் குணமாய்க் கண்ணை ஏற்றவன். 268.
பொருள்
சுந்தரரின் தேவாரத் தமிழ்ப்பாடலைக் கேட்கத் தங்கக் கட்டிகளைத்
திருப்புகலூரில் வழங்கி, அவைகளைத் திருவாரூர்க் கமலாலயத்தில்
(குளத்தில் ) வரவழைத்துக் கொடுத்தவன் .
அமுதம் வேண்டித் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது,
ஆலகால விடம் தோன்ற அதனைத்தான் உண்டுவிட்டு, அமுதத்தைத்
தேவர்களுக்குத் தந்தவன்.
காளத்தி மலையில் கண்ணப்பன் தந்த,இறைச்சியும், வாயில்
முகந்துவந்த எச்சில் நீரும் அமுதம்" என உண்டவன்.
கண்ணில் வழியும் குருதி நிற்கத் திண்ணனாம் கண்ணப்பன் அப்பிய
குவளைமலர் போன்ற இடக் கண்ணையும், பின்னர் வழிந்த குருதி நிற்க,
வலக்கண்ணையும் அன்போடு ஏற்றவன், சிவபெருமானே ஆகும்.
ஆன்ம ஆசான்
ஆன்ம வடியார் அருகில் சென்று,
ஆன்ம முத்தி , அன்புடன் அளிப்பவன்;
ஊனும் உருகும் உயர்தவ வாசான்
ஞானம் தேடும் மோன குருவாம். 269.
பொருள்
சிவனடியார்கள் இருப்பிடம் தேடிச் சென்று, அவ்வான்மாவிற்கு,
சேவடிகாட்டி,முத்தி அளித்து அன்புகாட்டுபவன்.
ஊனெல்லாம் உருகும் உயர்தவம் புரிந்து, ஆன்மாக்களின் ஆசானாகி,
மேலும் மேலும் ஞானம் தேடும் மௌனகுருவாய் விளங்குபவன்
சிவபெருமானே ஆகும்.
கயமுகன்
கய இணை கலந்து கயமுகன் தோற்றம்;
கஜாசுரன் அழித்துக் கணபதி வென்றார்;
மாண்பால் இளமை முதுமை ஆக்கி,
வான்புகழ் ஒளவை வண்டமிழ் அருளினார். 270.
பொருள்
கஜாசுரனை அழிக்கக் கஜத்தோற்றமே வேண்டும்" என
விரும்பிய பார்வதிபரமேஸ்வரர்கள் தாங்களும் யானைகளாக மாறி
இன்பம் பூண்டுக் கஜமுகனைப் பெற்றெடுத்தனர். கணபதி போரிட்டுக்
கஜாசுரனை அழித்தார்.
இளம்பிராயத்தில் ஏற்பட்ட மணமுறிவால் தன்னைக் கிழவியாக
மாற்றருளுமாறு அப்பெண் விநாயகரை வணங்கி வேண்ட, அவரும்
அருள்புரிய,அங்கே அவ்வைப்பாட்டி தோன்றினார். அருந்தமிழைக்காத்தார்.
அன்னையின் வீரம்
அசுரரழி அறவழியில்
அம்மையுமே அணிநின்றார்;
அசுரமகிடன் அடைந்தவரம்
அனைத்தையும் அழித்தனளனை . 271.
பொருள்
அரக்கர்களை அழித்து,நல்வழிப்படுத்தும் போர்வழியில் அன்னை
பார்வதி அம்மையும் முதலில் நின்றார்; மகிடாசுரனின் அளவில்லா
வரபலத்தையும், அவனது கூட்டத்தையும் அழித்து அறம் காத்தவள்
அன்னை துர்க்கை ஆகும்.
துர்க்கை
பதினெண்கரம் பலப்பலப்படை;
படநாகம் அடற் சிம்மம் ;
அதிவீரம் அருங்கோபம்;
அணிகருணை அழகுதுர்க்கை. 272.
பொருள்
பதினெட்டுக் கரங்கள் உடையவள்; கரங்களில் பற்பலப் படைகளைக்
கொண்டவள்; படமெடுத்துச்சீறும் பாம்பையும், வலிமைமிக்க
சிங்கத்தையும் அருகில் வைத்திருப்பவள் ; மிகுந்த வீரமுடையவள் ;
அளவுகடந்த கோபம் உற்றவள்; கருணையே வடிவானவள்;அழகுமிகு
துர்க்கை அன்னை ஆகும்.
சிவகுணநலன்கள்
அறமலி அருங்குலம்; அறைமறை தனிக்குலம் ;
திறமுடை அரக்கர் நிறையுடை வரங்கள்,
மறமலி மகேசனின் மாக்கருணை மன்னிப்பு;
இறையவன் நிறைகுடம்; இளகிய எழில்மனம். 273.
பொருள்
அறம் நிறைந்த அருங்குலத்தைச் சார்ந்தவர்;நான்கு மறைகள்
போற்றும் தனி வம்சம் சார்ந்தவர்;நல்ல தவம் செய்த அரக்கர்கள்
விரும்பி வேண்டும் வரங்களை அளித்தும், அவர்கள் புரியும் தவறுகளை
மன்னித்துக் கருணை புரிந்தும் நடப்பவர்; நிறைகுடமாக விளங்கும்
இறைவன் சிவபெருமான்;இளகும் நல்ல மனம் கொண்டவர் அவரே.
சத்யவிதி
சத்தியின் வீரம்; சத்புத்ர வீரம்;
நித்திய யோகம்; நினைவை மாற்றும்;
சத்திய விதிதான் சங்கடம் மாற்றும்;
முத்தியை அளிப்பதும் முக்கண் முறையாம். 274.
பொருள்
சத்தியின் வீரஉணர்வுகளே சத்புத்திரர்களின் வீரமாக உருவெடுத்தது.
அழிவே இல்லாத யோகங்கள் ,யோகப்பயிற்சிகள் மனதை மாற்றி,
ஒருமைப்படுத்தும்.நேர்மை,உண்மை போன்ற விதிமுறைகள், தோன்றும்
சங்கடங்களை மாற்றி நன்மைக்கு வழிவகுக்கும். ஆன்மாக்களுக்கு
முத்தி அளிக்கும் இறைவன் கொள்கையும் முறைமை கொண்டது;
நல்ல கருணையைக் கொண்டது .
அரக்கரின் ஆட்சி
வரபலத் திறனாலே வழுவுறு வாளரக்கர் ,
சுரரவர் அஞ்சிடச் சுகமெலாம் நீங்கிடச்
சுரவேந்தன் ஓடிடப் பிறரெலாம் சிறைபட,
அரக்க வேந்தன் இரக்கம் போக்கினான். 275.
பொருள்
சூரபன்மனும், தாரகனும் ,சிங்கமுகனும் அரக்கர்கள்; அவர்கள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து, இறைவனிடம் இருந்து அழியாத
வரங்களைப் பெற்றார்கள்; வரபலத்தால் கர்வமுற்ற அரக்கர்கள் கொடுமை
கொண்டனர்;தேவர்கள் அஞ்சியஞ்சி ஒடி ஒளிந்தனர்; இந்திரன்
நாட்டைவிட்டே ஓடிப்போனான்;ஏனைய தேவர்களை அரக்கர்கள் சிறையில்
அடைத்தனர்.அரக்கமன்னனோ இரக்கமே இல்லாமல் அவர்களைக்
கொடுமைப படுத்தினான்.
மும்மல வெளிப்பாடு
ஆணவச் சூரன், கன்மச் சிங்கன்,
வீணவா மாயத் தாரகன் விரிந்த
தூண்கைக் கரியாய்த் துரங்கச் சேனையாய்,
மாண்பு பெற்றே மமதை காட்டினார். 276.
பொருள்
ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மூன்று மலங்களின் சான்றாக
விளங்கிய அம்மூவரும்,அண்டகோளங்களில் இருந்து பெரும்படை
திரட்டினர் .ஆயிரம் ஆயிரம் யானைப்படை, குதிரைப்படை திரட்டிக்
காலாட்படைக்கும் அரக்கற்களைக் குவித்தனர்.வரபலம் ,,படைபலம்
அவர்களுக்கு மமதையை ஊட்டின.
முதுபேய் முடிப்பு
தேவர் காக்கத் தீரன் பிறப்பான்;
பாவம் அகலும்" பரமன் கூறிடவே
ஆவல் மேலிட, வழகன் பிறப்பைத்
தேவர் விரும்பினார்; தெய்வம் நீ அறியாயோ? 277.
பொருள்
தேவர்கள் எல்லாரும் மகாதேவனிடம் முறையிட்டழ, இறைவனோ,
வீரமகன் பிறப்பான்;தீமை அகலும்; காவலற்க" என்கிறார்.ஆவலோடு
அழகன் தோன்றுவதை விண்ணவர் விரும்பினார்கள். தெய்வமாகிய
காளியன்னையே! இதை நீ அறியாயோ? என்றது கிழப்பேய் .
தேவியின் வாயமொழி
என்றது முது பேய்; நன்றென எண்ணிக்
குன்றச் செல்வன் நன்றே தோன்றுக.
நன்றே அடைவோம்; என்றன ள் தேவி,
கன்று தேடும் கார்ப்பசு ஆனாளே . 278.
பொருள்
முது பேயும் சொல்லி முடித்தது. எல்லாம் நன்மைக்கே" என்று
எண்ணிய தேவி, குன்றுச்செல்வன் நன்றே தோன்றட்டும்; நாமும் நன்மை
அடைவோம்; என்று அன்னை "கன்றைத் தேடி நிற்கும்
கருணைப்பசுபோல் கந்தன் வருகைக்குக் காத்திருந்தாள்.
9.பேய் முறைப்பாடு .
பேய்கள் தங்கள் குறைகளைத் தாயான காளிதேவியிடம் கூறி,
வருந்தி, அழுது, அவைகளை நீக்கியருளுமாறு வேண்டுதல்.
பெற்றது ஏனோ ?
நெற்பதராய்க் , கற்றூசியாய்ச் , சொற்சிதைவாய்,
இற்றிட்ட நற்கயிராய்ப் புற்கட்டாய்,
கற்காத வற்பமான ஜந்துவாய்ப்
பெற்றிட்ட வன்னையே! பெற்றதேனோ ? 279.
பொருள்
நெல்லில் காணப்படும் பதராகவும், கல்,மண்,தூசிபோலவும்,
சிதைவுற்ற சொல்போலவும்,அறுந்து தொங்கும் கயிறு போலவும்,
காய்ந்துபோன புல் கட்டுபோலவும்,எதையும் கற்காமல் உலகிலேயே
மிகமிக அற்பமான இழிபொருளாகவும், விளங்கும் எங்களைப்
பெற்ற அன்னையே! இழிவான எங்களை ஏன் பெற்றீர்கள் அம்மா!
என்று பேய்க்கூட்டம் அழுதபடிக் கேட்டன.
பசித்தொல்லை
நாளுமே பசித்தொல்லை மூளுமே ;
தேளுமே கொட்டினால் போலுமே
வாளுமே வயிற்றினூடு பாயுமே;
ஆளுமேதகு மாதரசி! சாலுமோ? 280'
பொருள்
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால் பசி பசி என்னும் தொல்லை
வயிற்றைப் படாதபாடு படுத்தும்.தேள் கொட்டினால் தோன்றும்
வலிபோலவும், வாளைக்கொண்டு நடு வயிற்றில் பாய்ச்சுவது போலவும்
தோன்றும் பசி வலி படுத்தும். உலகை ஆள்கின்ற பெண்ணரசியே!
உம்மையே வணங்கும் எங்களுக்கு இது சால்பாகுமா?
குப்பைகளே யாம்
ஆனந்த மனிதர்போல் யாமில்லை;
மோனநிலை முனிவர்போல் யாமில்லை;
வானூரும் தேவர்போல் யாமில்லை;
கானூரும் கருங்குப்பை யாமாவோம். 281.
பொருள்
மகிழ்ச்சி கொண்டு விளங்கும் மனிதர்கள் அல்லர் யாம்;
மௌனத்தையே செல்வமாகக்கொண்ட முனிவர் அல்லர் யாம்;
வானவீதியில் பறந்துசெல்லும் தேவர்களும் அல்லர் யாம்;
காற்றினிலே, பறக்கும் கருநிறம் கொண்ட குப்பைகளே யாம்.
தாயே! நீ தானே துணை.
பேயாண்டி பின்சுற்றும், நாயானோம்;
மாயாண்டி மதில் காக்கும் சேயானோம்;
தூயாண்டி துரத்துகின்ற துகிலானோம்;
தாயான உனைவிட்டால் சேய்க்கியார் துணை? 282.
பொருள்
சுடுகாட்டில் ஆடும் பேயாண்டி பின்னாலே ஓடி ஓடி வளர்க்கும்
நாய்போலச்சுற்றி அலைந்தோம். கோட்டை,கொத்தளம் காக்கும்
மாயாண்டிக்குச் சேய்கள் போல விளங்கினோம். தூயவனான வாயு
தேவன் வீசுகின்ற காற்றினிலே பறந்து செல்லும் பழங்கந்தை ஆனோம்.
எங்களது தாயே! நீ தானே எங்களுக்குத் துணை. உன்பிள்ளைகள்
அல்லவா நாங்கள்.
வஞ்சிக்காமல் வாழவிடு
கஞ்சிக்கும் கூழுக்கும் கடும்சண்டை;
பஞ்சத்தால் பட்டினியால் பெரும்சண்டை;
எஞ்சியசோற் றெச்சிலைக்கும் ஏகசண்டை ;
வஞ்சிமகளே! வஞ்சியாது வாழவிடு! 283.
பொருள்
கொஞ்சம் கஞ்சி, அல்லது கூழ் அதைக் குடித்திடவோ கடுமையான
சண்டை; பஞ்சத்தாலும்,பட்டினியாலும் நாங்கள் போடும் சண்டை
அப்பப்பா ! சொல்லி மாளாது. தூக்கியெறிந்த எச்சிலையில் மீந்ததை
உண்டிடவோ பெரும் போர் நடக்கும்.வஞ்சி மாநகரத்து மாதேவி!எங்களை
வஞ்சிக்காதே! வாழ வழி காட்டு.
பிறவிப்பயன்
இளைத்தே துரும்பானார் உலகோரே ;
வளைந்தே கூனானார் உலகோரே ;
அலைந்தே மெலிவுற்றார் உலகோரே ;
மெலிதுரும்பு கூன்தோற்றம் பிறவிப்பயன் . 284.
பொருள்
நிலவுலக மக்களில் சிலர் பசிபட்டினியால் இளைத்தே துரும்பு போல்
ஆனார்கள்; சிலர் வளைந்து நடந்து கூனானார்கள்; சிலர் நாளெல்லாம்
அலைந்து திரிந்து மெலிவுற்றார்; ஆனால் நாங்களோ மெலிந்தும்,
துரும்பு போலவும்,கூனாயும் எப்பொழுதும் விளக்குகிறோம்; காரணம்
நாங்கள் பிறவி எடுத்த நேரம் அது!
ஏனம்மா இப்படி?
படைத்தாய்ப் பஞ்சுபோலப் பறந்தோம்;
படைத்தாய் எலும்பாய் ஒடிந்துநின்றோம்;
படைத்தாய்க் காற்றாய்ச் சுற்றினோம்;
படைத்தாய், ஏனம்மா ? இப்படி! 285.
பொருள்
எங்களைப் பஞ்சு போல் படைத்தாய்;வானத்தில் பறந்தோம்;
எலும்பாய்ப் படைத்தாய்;ஒடிந்து,ஒடிந்து விழுந்தோம்;காற்றுபோல்
படைத்தாய் ; வானவீதியைச் சுற்றிச்சுற்றி வந்தோம்; எங்களை மட்டும்
ஏனம்மா இப்படிப் படைத்தாய்?
கருணை மனம் வைப்பாய்!
வயிறில்லை பசியுண்டு அடங்காது;
உயிருண்டு உடலில்லை உறங்காது;
கயிறுண்டு கட்டலில்லை கலங்காது;
மயில்மேக மலையரசி! மனம்வைப்பாய். 286.
பொருள்
எங்களுக்கு வயிறேயில்லை; அடங்காத பசியுண்டு; உடலில்லை
உறங்காது வாட்டும் உயிருண்டு ; கயிறு உள்ளது; இருப்பினும் எங்களை
யாரும் கட்டிப்போடமாட்டார்கள்; கலக்கமும் இல்லை; மயில்கள் உலவும்
மேகச்சாரலில் விளங்கும் மலைநாட்டு அரசியே! எங்களுக்குக் கருணை
காட்டுவாய்!
நீள்பசி நீக்கிடு
செத்திடுவோம் செத்தபின்னும் பேய்தானே !
கத்திடுவோம் கடுங்குரலில் கேட்பாரிலை ;
பொத்திடுவோம் புனல்வாயை; பலனில்லை;
நித்தியமே ! நீள்பசியைத் தீர்த்திடுவாய்! 287.
பொருள்
பசி தாங்கமுடியாமல் சாவோம்" என நினைப்போம்; செத்தபின்னும்
பேய்தானே ஆவோம்; அதனால் சாகவில்லை. கஷ்டங்களைக்
கடுங்குரலில் கத்திடுவோம், கேட்டு உதவ யாருமில்லை. பெரும்வாயைப்
பொத்திடுவோம் ;அதனாலும் பலனில்லை. நித்தியமாய் வாழும் தாயே!
எங்கள் பசி போக்கிடுவாய் அம்மா!
ஊர்சூற்றும் பேய் வருகை
நள்ளிரவில் நாயகிமுன் நடித்தழுது,
கொள்ளிப்பேய், குருட்டுப்பேய் , கூன்பேய் கள்
சொல்லியழு பெருங்கூச்சல் ஓய்வதன்முன்,
தொல்லுலகு சுற்றிவரும் பேயொன்று,,, 288.
பொருள்
நள்ளிரவு வரை ஓயாது கத்தியழுத கொள்ளிப்பேய்.குருட்டுப்பேய் ,
கூன் பேய்க்கூட்டம் சொன்னதையே சொல்லிச்சொல்லி அழுதன; அந்நேரம்
உலகு சுற்றும் முதிய பேயொன்று தேவிமுன் வந்து நின்றது.
புதிய ஊர்ச்செய்தி
முதியபேய் புதியஊரில் கண்டவற்றை,
மதிமுகத்தாள் மாணிக்கச் சன்னதிமுன்
கதிகாட்டும் கற்பூரச் சொல்லிலே
அதிசயம்கேள்! அற்புதம்கேள் ! அன்னையே! 289.
பொருள்
வந்துநின்ற முதியபேயானது, புதிய ஊரில் தான் கண்டவற்றை
அன்னையின் சன்னதியில் நல்லகாலம் பிறந்துவிட்ட நல்ல சொல்லை
அதிசயம், அற்புதம் என்று என்று கூறத்தொடங்கியது.
மகேந்திரச்செய்தி
நிலவுலகு நீள்கோள்கள் நடுமையம்
அலைகடல் அற்புதமாய் ஆர்ப்பரிக்கும்,
அலைகடல்நகர் செந்திப்பதி சென்றுவந்தேன்.
மலைகடல்சூழ் மகேந்திரமும் சென்றுவந்தேன். 290.
பொருள்
நிலவுலகில் பெரும் கோள்களால் சூழப்பட்ட நடுவில் விளங்குவது;
அலைகடலின் ஆர்ப்பரிப்பில் அற்புதமாய் விளங்குவது; கடல்நகர் என்று
போற்றப்படுவது திருச்செந்தூர் செந்திப்பதி ஆகும்; அங்கு சென்றேன்;
அடுத்து,மலர்களாலும், கடலாலும் சூழப்பெற்ற மகேந்திரபுரி என்னும்
சூரபன்மன் தலை நகருக்கும் சென்று வந்தேன்.
அறிந்த செய்தி
வரத்தினால் வாழ்வுயர்ந்த வலியக்கர்
கரத்தினிலே கட்டுண்ட தேவர்கள்,
சிறைவாழ்வு சித்திரவதை அறிந்தேன்.
குறைகளையக் குமரனவன் பிறப்பறிந்தேன். 291.
பொருள்
மகேந்திரபுரி நகரில் அரக்கர்களின் உயர்ந்த வாழ்வைக்கண்டேன்.
வரமேன்மையால் தேவர்களை அடிமைப்படுத்தியும், சிறையில் அடைத்தும்,
சித்திரவதை செய்தும் துன்புறுத்துவதை நேரில் பார்த்தேன். தேவர்களின்
குறைகளைப் போக்கி, அவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க க்
குமரக்கடவுள் அவதரிக்கப் போகிறார் என்பதும் நான் அறிந்த
செய்திகள் ஆகும்.
வேலாயுதம்
ஆணவத்தான் அழிக்கின்ற அருமறையாய்ப்
பேணுகின்றப் பொற்செல்வன் போர்தொடுக்கக்
காணரக்கர் கதிகலங்கக் காட்சிகண்டேன் ;
பூணாயுதம்; பூவாயுதம் வேலாயுதம். 292.
பொருள்
ஆணவத்தாலே அழிக்கின்ற தேவர்களை அருமறையாகப் பேணிப்
பாராட்டி வாழும் பொற்செல்வனாகிய மாமுருகன் போர் தொடுக்கப்
போகிறான்' என்பதைக் கேள்வியுற்ற அரக்கர் கூட்டம் கதி கலங்கி
நிற்கும் காட்சியைக் கண்டேன்; முருகன் பயன்படுத்தும் பூப்போன்ற
ஆயுதம் வேலாயுதம் ஆகும்.
தூதுசென்ற வீரவாகு
தூதுசென்ற வீரவாகு தொடர்ந்தழித்த
சீதநகர் மகேந்திரமே செந்தீயாம்.
ஈதறிந்த வாதுசூரன் நோதலுற்று ,
மோதுபடை கோள்களிலே தேடலுற்றான். 293.
பொருள்
போர் தொடுக்கும் முன் அமைதி காணத் தூது அனுப்பும் முறையில்
முருகனின் தூதுவனாகச் சென்றான் நவ வீரர்களின் தலைவன் வீரவாகு.
தூதுவன் எனக்கருத்தாமல் அவனை அழிக்க முற்பட்ட அரக்கர்
கூட்டத்தை அடியோடு அழித்தும், முருகனைத் தவறாகப் பேசியதால்
வெகுண்டு, மகேந்திராபுரியையே தீயிட்டும் அழித்தான் வீரவாகு.
அதனை அறிந்த சூரன் மிகுந்த துயருற்றான்; முருகனோடு போர்
தொடுக்கப் படைகளை அங்கங்கு தேடலுற்றான்; அண்டகோள்களிலும்
வசிக்கும் அரக்கர்களைப் போருக்குத் துணை ஆக்கினான்.
கனவு பலிக்குமோ!
தெளிந்தே,வரும் தேவாசுரப் போர்தானே ;
விளித்ததே கூற்றுவனை விந்தைப்போர்;
பலித்ததே பகற்கனவு பாரினிலே;
ஜொலிக்குதே கண்கனவு இப்பொழுதும். 294.
பொருள்
முது பேய் மேலும் கத்தியது; நாமெல்லாம் பார்த்திருக்கத்
தேவாசுரப்போர் வந்தே தீரும்; கூற்றுவனைத் தெரிந்தே அழைக்கிறார்கள்
தேவாசுரர்கள். பகலில் கண்ட கனவு பலிக்காது' என்பார்கள்; ஆனால்
நான்கண்ட பகற்கனவு பலிக்கப்போகிறது. கண் கண்ட கனவுக்காட்சி
உலகில் ஜொலிக்கப்போகிறது. என்று.
கனவு உரைக்க
இன்னவாறு புதுச்செய்தி சொன்னபேயை,
இன்னலரி உன்கனவு உரைத்திடுக'
நன்சோதிடப் பொன்னுப்பேய் அதன்பலனை
விண்டுரைக்கும் என்றதுவே தலைமைப்பேய். 295.
பொருள்
புதுச்செய்தியை எடுத்துரைத்த பேயிடம் தலைமைப்பேய் கூறியது .
"துன்பம் தரக்கூடிய கனவு கண்டதாகச் சொன்னாயே! அதைச்சொல்!
இங்குள்ள சோதிடப்பொன்னு பேய் பலனை நன்குரைக்கும். நீ சொல்!
என்றது.
கனவை முனகிற்று
சொன்னசொல்லை ஏற்பாள்போல் முமுறுவலுடன்,
அன்னையவள் அழகுவாயில் கண்டதுமே
கண்களையே கசக்கிக் கண்ணீர்வர,
முன்னோடு பின்விக்கி முனகிற்று. 296.
பொருள்
தலைமைப்பேய் சொன்னதை ஏற்று, ஆமோதிப்பவள் போல முறுவல்
பூத்தாள் தேவி; அம்மையின் வாயில் முறுவல் கண்டதும், மகிழ்ந்து,
கண்களைக் கசக்கிக் கண்ணீர் வரவழைத்து,முன்னும் பின்னுமாக
முனகலிலே சொல்லத் தொடங்கிற்று.
கண்டகனவு
இட்டமுடன் எடுத்தவடி இடறிடவே ,
பட்டத்துப் பேரானைச் சீர்தந்தம்
வட்டவட்டமாய், விழுந்தொடிபடக் கண்டனனே ;
அட்டதிக்கில் கயமெட்டும் அகன்றனவே. 297.
பொருள்
மகிழ்வோடும்,விருப்போடும் எடுத்துவைத்த கால்கள் இடறிடவே
பட்டத்துப் பெரும் யானையின் அழகுமிகு நீண்ட தந்தம் ஒடிந்து,
சுருள் சுருளாய் நிலத்தில் விழுந்தன.அதன் ஒலியையும் ,ஓடிபடலையும்
நான் கண்ணெதிரே கண்டேன்; திசைகளையும் காவல் காக்கும்
எட்டு யானைகளும் அவ்விடம் விட்டு, அகன்றுபோகக் கண்டேன்.
குதிரைகள் வீழ்ச்சி
கண்டகனவால் கண்ணுளச்சம் ; அதுமட்டுமா?
சண்டமாருதத் செவ்வணிதிகழ்க் குதிரைகள்,
முண்டமாகி முன்தலை அறுபடவும்,
மண்,விழு,தலை மறைந்திடவும் காட்சிகண்டேன் . 298.
பொருள்
கண்ட கனவு மனதிற்குள் அச்சம் விளைவித்தது. அதுமட்டுமா?
ஊழிக்காற்றெனப் பறக்கும் செவ்வணிக் குதிரைகள் கழுத்து அறுபட்டு,
முண்டமாய் நிற்கக்கண்டேன்; மண்ணில் விழுந்த தலைகள் மாயமாய்
மறைந்துபோகவும் கண்டேன்.
தீய காட்சிகள்
அறைத்தெடுத்த நலமஞ்சள் கரியாகவும் ,
கறைத்தெடுத்த மணச்சந்தனம் சாம்பலாகவும்,
குரைத்தபடித் தெருநாய்கள் ஊளையிடவும்,
நிறைமாதக் கர்ப்பப்பசு வீழ்ந்திறக்கவும் ,,,,,, 299.
பொருள்
மங்கையர்கள் அம்மியில் மங்களமாக அறைத்து மஞ்சள்
கரியாக மாறிடவும், நறுமணப்பொருட்களோடு கலக்கப்பட்ட நறுமணச்
சந்தணம் சாம்பலாக மாறியது; தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்கள்
கூட்டமாகக் கூடிநின்று ஊளையிடுவதைக் கண்டேன்;தெருவில்
வந்துகொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பம் உற்ற பசுமாடு. அப்படியே
தெருவில் இறக்கவும் கனவு கண்டேன்.
பலன் கூறும் சோதிடப்பேய்
கண்டனனே தீக்கனவு; கண்டதனால்
பண்டுபயன் பறைசாற்றும் பெரியீரே !
விண்டிடுவேன், வந்துரைத்த சோதிடப்பேய்;
கண்டகனா கடும்போரின் காட்சியாகும். 300.
பொருள்
இவ்வாறு காணக்கூடாத கனவை நான் கண்டேனே;அக்கனவு நல்கும்
பலன்,பயன் பற்றிப் பெரியோர்களே! சொல்லுங்கள்" என்றதும்,
நான் சொல்கிறேன் என்றபடி முன்வந்த சோதிடப்பேய் இக்கனவு
நாட்டிலே விரைவில் பெரும்போர் உண்டாகும்' என்பதை முன்கூட்டியே
நமக்கு உரைக்கிறது.
மேலும் பலன்கள்
இடறிவிழுதல் இழக்கும் ஆட்சியாகும்;
உடைதந்தம் அடல்மன்னன் பட்டழிவான்;
திக்கயங்கள் திசையெலாம் தோல்வியாகும்;
படைநடத்தும் பேரரசனே பலனடைவான். 301.
பொருள்
பட்டத்து யானை இடறிவிழுதல் ஆளும் அரசனின் ஆட்சி பறிபோகும்.
தந்தம் உடைதல் பலம் மிக்க மன்னன் மாள்வான்; திசை யானைகள்
அகலல் எல்லாத்திசைகளிலும் ஆளும் மன்னனுக்குத் தோல்வி.இக்கனவின்
பலன் இன்றைக்கு ஆளும் அரசனுக்கே அமையும்.
குதிரைக் கனவின்பயன் கூடநிற்போர்
விதிகூடி, மிதிபட்டுக் கதியிழப்பர்;
நதிசூழ்ந்த நகரத்தின் நடுச்சாலை
மதியிழந்து, மண்டியிட்டு மாண்டிடுவர் . 302.
பொருள்
குதிரைக்கனவின் பயனாவது, பேரரசனின் உறவினர்கள், அமைச்சர்,
பிள்ளைகள், போன்றவர்களும், போர்க்களத்தில் விதி வந்து கூடுவதால்
மிதிபட்டுக் கதியிழந்து உயிர்விடுவர்;அதே களத்தில் நட்ட நடுவில்
மண்டியிட்டு,மதியிழந்து மாள்வர் .
மற்றவை அமங்கல அவலங்கள்;
இற்றபதி வழிசென்று இல்லறத்தாள்
பொட்டிழந்து, பூவிழந்து, புலம்புவது;
மட்டில்லா மகிழ்விழப்பும் மன்னனுக்கே. 303.
பொருள்
ஏனைய கனவுகள் அமங்கல நிகழ்வைக்குறிப்பன;கணவன் போரிலே
வீரேசுவர்க்கம் அடைந்தான், என்பதைக் கேள்வியுற்ற பத்தினிப்பெண்டிர்
அவனோடு இறந்துபோவதும், பூவும்,பொட்டும் இழந்து புலம்புவதும்
இயல்பே.ஆளும் மன்னனுக்கே மிகுந்த துயரை அளிக்கும் என்பதை
இக்கனவுகள் எடுத்துரைக்கின்றன.
தேவியின் சாபம்
என்றுரைத்த சோதிடப்பேய் சொலக்கேட்டு ,
நன்றுரைத்தாய்! நல்லதேவர் நற்சிறையில்
தொன்றுதொட்ட தூயமறைத் தூஷணம் "
இன்றழிவான் அரக்கசூரன் , என்றாளே . 304.
பொருள்
இவ்வாறு தீக்கனவின் பலனைச் சோதிடப்பேய் சொல்லியதைக்
கேட்ட அன்னை மாகாளி, சோதிடப்பேயைப் பாராட்டினாள் .
அன்பும் பண்பும் மிக்க தேவர்கள் சிறையிலே வாடிட வகை செய்தவன்;
தூய மறை நிந்தனை செய்தவன் அந்த அரக்கன், சூரன் இன்றே அழிக '
எனச்சாபம் இட்டாள் .
பேய்களின் மகிழ்ச்சி
தேவிகூறிய செய்தியாவும் தேன்மொழியாய்,
ஆவிப்பேய் அத்தனையும் கேட்டறிந்து,
தூவின மலர்களைத் தூயபாதம் ;
மேவின மாமகிழ்ச்சி மேம்பாட்டிலே . 305.
பொருள்
கூடியிருந்த பேய்க்கூட்டங்கள் தேவி கூறிய செய்திகளைத்
தேன்போன்ற மொழியாகப் போற்றின; தேவியின் பாதங்களில்
மலர் மாரி பொழிந்தன; மகிழ்ச்சி மேம்பாட்டில் நிலைத்து நின்றன.
முது பேயின் கூச்சல்
பரணிப்போர் பாரினிலே நடக்கும்;
பரணிமுருகன் அரக்கர்களை அடக்குவான்;
தரணியாளும் தருக்கசூரன் அடங்குவான் ;
தரணிமுழுதும் உறுபேய்ப்பசி முடங்குமே . 306.
பொருள்
முதிய பேயொன்று இவ்வாறு கூச்சலிட்டது." பரணிப்போர்
உலகில் நடக்கும்; பரணியில் பிறந்த மாமுருகன் அரக்கர்களை
அடக்குவான்; இன்று நாடாளும் ஆணவச்சூரன் அடங்குவான்;
தரணியிலே அடங்காத பேய்களின் பசியும் அடங்கும் " என்று
கத்தியது.
10.அவதாரம் .
அரக்கர் கூட்டம்
சிவமகனின் அவதாரம்
நவவீரர் தவப்போற்றல் ,
கவியாக வரும்முன்னே
அவவரக்கர் அறிந்திடுவோம். 307.
பொருள்
சிவசுப்பிரமணியரின் தோற்றமும், அவருக்குப் பக்கபலமான
வீரவாகு முதலிய ஒன்பது வீரர் பணியும் படைக்கும்முன் , இவர்களது
அவதாரத்திற்குக் காரணர்களாகத் தோன்றிய அரக்கர் கூட்டம் பற்றி
அறிந்திடுவோம்.
ஆட்சியாளன்
பலவரத்தால் தலைவனானான்;
கலவரத்தான் ; மலைக்கரத்தான்;
தலைக்கனத்தான்; உலைமனத்தான் ;
நிலமாண்டான், நீண்டகாலம். 308.
பொருள்
தவத்தாலும், வேள்வியாலும் பலப்பல வரங்களைப் பெற்றவன்
சூரபன்மன். மூவேழ் உலகிற்கும் தலைவனானான்; எப்பொழுதும்
சண்டை,சச்சரவு ,கலவரம் என்னும் தீச்செயலில் நிலைத்தவன்;
மிகுந்த பலம் கொண்டவன்; மலைபோன்ற கரங்கள் உடையவன்;
ஆணவத்தை அணியாகக் கொண்டவன்; அமைதியின்றி அங்குமிங்கும்
அலைபாயும் மனம் கொண்டவன்; மூவேழ் உலகையும் ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாய் ஆண்டுவரும் அரக்கர் குல மாமன்னன்.
சூர வம்சம்
சீயமலைச் சிங்கமுகன்,
மாயமலைத் தாரகன்,
தீயநோக்குச் சயவயமுகி;
ஆயமூவர் அண்ணன்சூர், 309.
பொருள்
சிந்கசம்போல் வீரமும், மலைபோல் வலிமையையும் கொண்ட
சிங்கமுகன், மாயங்கள் கொண்ட கிரௌஞ்சமலையைத் தன்னோடு
ஐக்கியப்படுத்திக்கொண்ட தாரகன், தீமையே வடிவமாகக்கொண்ட
அயமுகி, ஆகிய மூவருக்கும் அண்ணனாக நின்று அரக்கர் குல ஆட்சி
புரிபவன் சூரபன்மன் ஆவான்.
தேவர் துயர்
தொல்லறங்கள் நல்லநான்மறை
வல்லமுனிவர் வழியிழக்க,
அல்லலடிமை கொல்லலுயிர் ;
பொல்லாவினை பூண்டவாட்சி. 310.
பொருள்
தொன்மை மிக்க அறங்களும், நன்மை தரும் நான்கு மறைகளும்,
கற்றறிந்த முனிவர்களும், வலிமை இழந்து,மேன்மை குன்றின;
அல்லலும், அடிமைவாழ்வும், எதிர்ப்போரைக் கொல்லும் செயலும்,
தொடர்ந்து நடைபெற்றன.பொல்லாத வினைகளை ஆற்றித் துன்பம்
நல்கும் ஆட்சியாக அமைந்தது. சூரன் ஆட்சி.
வெஞ்சிறையில் விண்ணவர்
விண்ணாண்ட வியன்தேவரை
வெஞ்சிறையில் வீசிவாட்டினர் ;
மண்ணாண்டும் மாண்புகளை,
மண்வீதியில் தூசியாக்கினர் . 311.
பொருள்
விண்ணுலகைச் சீரும் சிறப்புமாக ஆண்ட விண்ணவர்களைச்
சிறையில் அடைத்துச் சித்திரவதை புரிந்தனர்; மண்ணுலகை ஆள்கின்ற
மாண்பு கிடைத்தும், பண்புகளை நடுச்சாலையில் எறிந்து ,தெருவில்
பறக்கும் குப்பைக்கூளங்களாக மாற்றினார்.
இந்திரன் குடும்பம்
அஞ்சிமறை தேவேந்திரன்
வெஞ்சிறையில் இந்திரன்மகன்;
பஞ்சினும் மெல்லிடையாள்
பரல்காட்டில் ஒளிந்துநின்றாள் . 312.
பொருள்
தேவர்களின் தலைவனான இந்திரன் மூங்கில் காட்டிலே மறைந்து
வாழ்ந்தான்; இந்திரனின் மகனான ஜயந்தனோ அரக்கர்களால் சிறையில்
அடைக்கப்பட்டான். அழகே உருவான இந்திராணியோ,பரல்கற்கள் பரவி
இருக்கும் கடுங்காட்டினில் ஒளிந்து வாழ்ந்தாள் .
சூரப்பேரரசு
மூவேழு உலகிற்கும்
முடியரசன் சூரனானான்.
சாவில்லாச் சீர்வரத்தால்
சாம்ராஜ்யம் சாதித்தான். 313.
பொருள்
நிலம்,விண் ,பாதாளம் என்னும் மூன்று உலகங்களையும் சூரனே
ஆண்டான்; முடியரசனாக வலம் வந்தான்.இறப்பு என்னும் துன்பம்
தன்னை அடையாத வரம் பெற்றிருந்ததால் அண்டகோள்களையும் தானே
கட்டியாண்டான்.
தாரகன்
தாரகனோ திருமாலின்
சீரகற்றிச் சக்கரத்தை,
மார்பினிலே மகிழ்ந்தணிந்தான் ;
மற்றோரைத் துன்புறுத்தினான். 314.
பொருள்
மாயா மலத்தவனான தாரகன் திருமாளோடு போர்புரிந்து, அவரை
வீழ்த்தி.அவருடைய சக்கராயுதத்தைப் பறித்துக்கொண்டான்; அதைத்
தனது மார்பில் அணிந்துகொண்டான் . ஏனைய தேவர்களையும்
துன்புறுத்தினான்.
நான்முகன்
நடுங்கிட்ட நான்முகனோ
நல்லோன்போல் நடமாடி,
கொடுசெயலில் தப்பித்தான்;
கொடுமையை என்சொல்ல? 315.
பொருள்
சூரக்கூட்டங்களைக் கண்டு,அஞ்சிநடுங்கிய நான்முகன்
,அரக்கர்களுக்கு நல்லவனாக நடித்துத் தான் தப்பித்தான்
கொடுஞ்செயலிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்யவேண்டி உள்ளது!
தேவரின் பணிகள்
அக்னி தேவன் அடிசில்பணி;
வாயுதேவன் தென்றல் பணி ;
வருணதேவன் அருவிப்பணி;
வருடமெல்லாம் வற்றாப்பணி. 316.
பொருள்
அக்னி தேவன் அரக்கர் வீடுகளுக்கு எல்லாம் சென்று,
அவர்களுக்கு நல்லுணவு பக்குவததோடு சமைத்துத் தரவேண்டும்,
காற்று தேவன் காலம் முழுவதும் சூரன் நாட்டில் தென்றலாகத்தான்
வீசவேண்டும். வருணதேவன் குளிர்மிகுந்த அருவிகளை ஆங்காங்கு
கொட்டவேண்டும் . இப்பணி அவர்களுக்கு வருடம் முழுவதும்
ஒதுக்கப்பட்டது.
தேவரின் முயற்சி
செய்வதறியாத் தேவகூட்டம்
செத்தொழிந்த செம்பினமாய்
உய்வழியைத் தேடியோடி
மெய்நான்கு முகம்போற்றி,,,,, 317.
பொருள்
அரக்கர்களின் கொடுஞ்செயல் கண்டு, எதிர்க்கவும் முடியாது,
அடங்கவும் வலியின்றி நடைப்பிணமாய் நடமாடிய அவர்கள் தங்கள்
துயருக்கு மாற்றம் தேடி நான்முகனிடம் ஓடினார்கள்.
அவரைப்போற்றினார்கள்,,,,,
சிவனருள்
மாலடைந்து, மாலுடனே
மணிகண்டன் தாள்போற்றக்
கோலவளை நாயகியைக்
கொண்டிடுவேன் குலமண மே . 318.
பொருள்
நான்முகனும் தேவர்களும், திருமாலை அடைந்து போற்ற, அவரும்
நாம் சிவனடி சேர்ந்து போற்றுவோம்' என்றுகூற, அனைவரும் சிவனை
வணங்கிப்போற்றி நின்றிட, அவரோ. கவலை வேண்டாம்; யாம்
விரைவில் அழகே உருவான பார்வதி தேவியை மணக்க இருக்கிறோம்;
அந்த மணம் உங்களுக்கு நன்மை பயக்கும்' என்றருளினார்.
பூரணன்
வீரமகன் பூரணனே
உதித்திடுவான்; உங்கள்துயர்
சூரனையே வென்றிடுவான்;
சென்றிடுக! என்றருளினார். 319'
பொருள்
பார்வதிதேவியை நான் மணந்த பின் எமக்கு வீரமகன் பூரண
குணங்கள் வாய்த்தவன் தோன்றிடுவான்; அவன் சூரனை வென்று,
உங்கள் துயர் போக்கிடுவான்; கவலையின்றிச் சென்றிடுக. என்றார்
இறைவனார்.
தவச்செல்வி
தவமியற்றும் தத்துவத்தை,
அவம்போக்க மணந்திடுவார் ;
சிவசூரியச் செஞ்சுடரோன்
அவனியையே காத்திடுவான். 320.
பொருள்
இமய மலைச்சாரலில் இமவான் மகளாக அவதரித்து, ஐந்து
வயதுமுதல் கடுந்தவம் புரிந்து சிவனை வணங்குகின்ற பார்வதி
தேவியை இறைவன் மணந்திடுவார். அவர்களுக்கு மகனாக அவதரிக்கும்
சிவசூரியமாம் செஞ்சுடர்க்குழந்தை உலகையே காத்தருளும்' என்றார்.
தவத்தில் அமர்ந்தார்
கனவுகண்ட தேவர்களின்
நினைவினிலே பேரிடிபோல்
மனமொடுக்கி மாதவத்தில்
மகாதேவர் அமர்ந்திட்டார் . 321.
பொருள்
வீரமகன் வரும்நாளை நோக்கிக் கனவு கண்டிருந்த தேவர்களின்
நினைவுகளிலே பேரிடி விழுந்ததுபோல் அஞ்சினர். சிவபெருமான்
மாதவத்தில் மனமொடுக்கி அமர்ந்துவிட்டார்;
மீண்டும் கலங்கினர் தேவர்கள்.
ஞானி சிவம்
ஞானமோன மாவழிகள்
ஞாயிற்றின் பேரொளிபோல்
ஞானபீட ஆலடியில்
ஞானிசிவம் மோனியானார். 322.
பொருள்
ஞானமார்க்கம்,மோனமார்க்கம் ஆகிய நன்மார்க்கங்கள்
ஞாயிற்றின் பேரொளிபோல் பிரகாசிக்க, எம்பெருமான் தமது
ஞான இருக்கையாகிய ஆலமரத்தடியில் அமைதியும், ஞானமும்
கலந்த சிவம் மௌனத்தில் குவிந்தது.
துயரான தவம்
கண்டநிலவு கருமேகத்தில்
கண்காணா மறைதல்போல் ,
கண்டநீலன் கொண்டகோலம்
கண்ணீர்வழி கடுந்துயரே . 323,
பொருள்
நல்லொளி வீசிக்கொண்டிருந்த நிலவு, கருமேகத்தில் மறைந்து,
கண்ணிற்கே தெரியாமல் போனதுபோல எம்பெருமான் கொண்ட
தவக்கோலம் தேவர்களின் வழிகின்ற கண்ணீரைப் பார்த்தால்
துயரம் போலவே காட்சி தருகிறது.
பாறைநடுவே பசுந்தளிர்
கடுந்தவத்து நெடுந்தவனைத்
தொடுந்தவத்தாள் தொண்டாற்றும்
வடுகோங்கு வனமுலையாள்
அடுகல்நடு அருந்தளிரோ ! 324.
பொருள்
தவத்தின் பயனாய் விளங்கும் நெடுந்தவச்சீலன் புரிகின்ற
கடுந்தவத்தில் , அவனைத் தொட்டும், பாதபூஜை செய்தும், பணிவிடைகள்
செய்தும் தொண்டாற்ற த் தவத்தின் மிக்காளும் ,காட்டுக்கோங்கு
முகைபோன்று விளங்கும் முலைகளை, பர,அபர ஞானங்களாகக்
கொண்டவளும் ஆகிய, பாறை நடுவே மலர்ந்துள்ள தளிர் போன்றவளும்
ஆகிய பார்வதி பணிவிடை செய்தாள் .
தேவர்கள் வழிதேடல்
யோகத்தின் வேகம்தான்
தாகத்தைத் தவிர்க்குமோ?
போகத்தில் பாகமாக்கச்
சோகதேவர் வழிதேடினர். 325.
பொருள்
யோகநிலையில் அமர்ந்திட்ட எம்பெருமானின் தவமேன்மை ,
தவவேகம் தேவர்களாகிய எங்களது துன்பத்தைப் போக்குமோ?
வீரமகன் தோன்றுவான் என்னும் ஏக்க தாகத்தைப் போக்குமோ?
என்று தள்ளாடிய தேவர்கள் சிவபெருமானைப் போகவாழ்வில்
ஈடுபடுத்தவும், ஒருபாகமாய் அன்னையை அமரச்செய்யவும் ,துன்பமே
வடிவமான தேவர்கள் வழி தேடி அலைந்தனர்.
மன்மதனே மாற்றுவழி
அஞ்சுமலர் அம்புடையான்
ஆழ்மனத்தின் அன்புசுரக்க,
மஞ்சுமாலை மதிசுகத்துணை
மன்மதனே மாற்றுவழி. 326.
பொருள்
பிரமதேவன் தலைமையில் தேவர்கள் கூடினர். அவ்வவை
மன்மதனைப் பரிந்துரை செய்தது. மகாதேவன் மனத்தை மாற்றக்
கூடிய மலரம்புகள் கொண்டவனே மன்மதன். ஆழ்மனத்தில் காதல்
எண்ணங்களைக் கசிய விடுபவன் அவன்.மாலைவேளை, மதியின்
குளிர்ச்சி, மலர்களின் நறுமணம், மேகச்சாரல் ஆகிய இவற்றோடு
இரதியின் துணை சார்ந்தவன் அவன். அவனது மலரம்பு மகேசன்
மனத்தை மாற்றும்" என்று முடிவு செய்தனர் .
அஞ்சியோன் செஞ்சிவன் ,மீது ,,,,,
அஞ்சிகெஞ்சி அடம்பிடித்தும்
அஞ்சிறைபுகு மஞ்சையோன்
செஞ்சுடர்ச் சிவன்மீது,
அஞ்சம்பை ஏவினானே . 327.
பொருள்
இறைவன் மீது மலரம்பு ஏவிட ஒருபோதும் சம்மதிக்காத
மன்மதனை, அச்சுறுத்தி,மிரட்டி, வீணே சாபம் பெறுவாய்! எனப்
பிரமன் முதலியோர் ஆணையிட்டனர் . சிறையில் வலையில்
சிக்கிக்கொண்ட மயில்போல வேறுவழியில்லாமல் அப்பாவச்செயலை
ஆற்றிட ஏற்றுக்கொண்டான் மன்மதன்.நல்ல மாலை மகிழ்ச்சி சூழ்ந்த
நேரத்தில்,மனையாள் இரதியோடு சென்று அஞ்சி நடுங்கியபடியே
அஞ்செழுத்தான் மீது அஞ்சுமலரம்பை விடுத்தான் .
அடிபடுதல் அரன் வழியாமோ!
சொல்லாலே அடிபட்டோன்;
வில்லாலே அடிபட்டோன்;
கல்லாலே அடிபட்டோன்;
மலரம்பு வடிபட்டான் . 328.
பொருள்
அடியவர்களிடம் பலநேரங்களில் அன்பிற்காக அடிபட்டவன்
சிவனாகும். சுந்தரர் என்ற சிவனடியாரிடம் பித்தா! பேயா! என்று
சொல்லடிபட்டவன். பாண்டவ இளவல் அருச்சுனனிடம் வில்லாலும்
அடிபட்டவன் சிவபெருமான்.சாக்கியர் என்ற பௌத்தரிடம் நாள்தோறும்
கல்லாலே அடிபட்டவன் அருட்சிவன் ஆகும். அப்படிப்பட்டவன் இன்று
மன்மதனிடம் மலரம்பால் அடிபட்டது வியப்பில்லை.
நெற்றிக்கண் சுட்டெரிக்க,,,,,,,
அஞ்சுமலர் நெஞ்சினிலே;
செஞ்சுடரோ செங்கண்ணிலே ;
பஞ்சுபோல வஞ்சம்பன்,
விஞ்சுசுடர் தஞ்சமானான். 329.
பொருள்
மன்மதன் எய்த மலரம்பு சிவனார் நெஞ்சினைத் தொட்டது.
அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறி மன்மதனைச்
சுட்டெரித்தது. பஞ்சுபோலச் சாம்பலானான் மன்மதன். அந்தச் சிவனார்
சேவடிகளில் தஞ்சமானான் அவன்.
பைங்கரம் பற்றினார்
விண்ணவரின் வீண்செயல்தான்,
வீணாகப் போனபின்பு,
பண்ணவளின் பைங்கரத்தைப்
பற்றினாரே பரமசிவம். 330.
பொருள்
தேவர்கள் ஆற்றிய அவலமான செயல்தான் பயனற்றுப் போயிற்று.
நேரம் வந்து சேர்ந்ததால் பார்வதி தேவியை மணம் செய்துகொண்டார்
சிவபெருமான்.உலகமும்,தேவர்களும் மகிழ்ச்சிக்கடலில்.
தீராத்துயர்
பற்றினாலும் உற்றதுயர்
முற்றியதே முனகலுடன்;
பற்றில்லாப் பரமன்தாள்
பற்றிட்டுப் புலம்பினரே . 331.
பொருள்
உமாதேவியாரை மணம் செய்துகொண்டபின்னரும் துயர்
தேவர்களுக்குத் தீரவில்லை; மகன் தோன்றவில்லை; துயர் நீங்கவில்லை;
பற்றே இல்லாத பரமனின் தாள்களைப் பற்றியபடி அழுது புலம்பினர் .
கடலும் கொதித்தது
உலகத்தின் உறுதுயர்கள்
விலகிடவும் , விண்ணவர்கள்
அலர் துன்பம் அகன்றிடவும்,
சிலைவில்லான் கலைநெற்றிக் , 332.
கண்ணதுதான் கணநேரம்
கண்பொறியை உண்ணின்று ,
மண்நோக்கி விண்தாங்கி ,
மணிச்சுடரை வெளிப்படுத்த, 333.
பொறிச்சுடரால் பொடிபட்டப்
பொன்பூமி விண்நேமி
அரியயனோ டண்டகூடம்
அருநிலவு ஆதவனுமே, 334.
சுடர்க்காந்திப் படரக்னித்
தடம்கூடத் தொடமுடியாத்
திடஜ்வாலை திக்கெல்லாம்
கடலெல்லாம் கொதித்ததுவே. 335.
பொருள்
உலகத்தின் துயர்கள் நீங்கவும்,வானத்து விண்ணவர்கள் படும்
துன்பமெல்லாம் அகன்றிடவும், மேருமலையை வில்லாகக் கொண்ட
சிவனார் தனது நெற்றிக் கலையாய் விளங்கும்,
நெற்றிக்கண்ணைக் கணநேரம் திறந்து மூடினார். அங்கிருந்து
புறப்பட்ட சுடர் மண் நோக்கிப் பாய்ந்தது;விண் தாண்டிப் பாய்ந்தது
மணி மணி யாய் அணி அணியாய் வெளிவந்த சுடர்ப்பொறி.......
அச்சுடரால் பொடிபட்டன பொன்மயமாகிய பூமி. வானச்சக்கரம்
திருமால், பிரமன், அண்டக்கூடங்கள் , அழகிய நிலவு, ஆதவனும் .....
ஒளிமிகுந்த சுடரால், பரவும் தீயால் ,அதன் அருகே செல்லமுடியாமல்,
சென்ற வழியைக் கூடத் தொடமுடியாமல் வெளிப்படும் அந்த
ஜ்வாலையானது திசைகளெல்லாம், எரித்தது;அதனால் கடலே கொதித்தது.
சுடர் கண்டு ஓடுவன
மதியோட, மலையேறி
மறைந்தோட, மலர்மீன்கள்
கதிதேடிக் கலந்தோடக் ,
காற்றோடு கூற்றோட, 336.
ஊரோடு வுறவோட
நீரோடு, காரோட,
வாறோடு வலையோட
யேரோடு விடையோட, 337.
மாலோட மனையோட,
மாலோடு முனியோட,
நாலோடு நாவோட,
நாதாந்தத் தொனியோட, 338.
ஆதியவன் பாதியான
ஜோதிமணி சுருண்டோட,
வீதிவிழா விநாயகனும்
வெஞ்சுடரால் அஞ்சியோட, 339.
தேவாதி தேவர்களும்
தீஞ்சுடரை நினைந்தோட,
காவாயெனும் கூக்குரலால்
கார்மேகச் சடையான்தான், 340.
பொருள்
நெற்றிக்கண் தீப்பொறி சுட்டெரிக்கும் சுடரொளி கண்டு அஞ்சி
வான நிலவு ஓடிற்று;ஓடிக் கொண்டே மலைமீதேறி மேகக்கருங்கூட்டத்தில்
மறைந்துபோயிற்று.விண்மீன்கள் அஞ்சிக் காப்பாற்றக் கடவுள் தேடி,
அங்குமிங்கும் கலந்தோடின;கற்று ஓடியது; கூற்றுவனும் அஞ்சி ஓடினான்.
ஊரெல்லாம் அஞ்சியபடி ஓடின; உறவுமுறைச்சுற்றமெல்லாம் ஓடின';
நீரும்,மேகமும், மழையும், ஆறுகளும்,அலைகளும் ஓடி ட , உழும் உழவன்
ஏர்க்கலப்பையோடும் காளைகளோடும் ஓடினான்.
அஞ்சிய திருமால் முதலில் ஓட, அலைமகள் அவர்பின் ஓடினாள்.
மயங்கிய கூட்டங்கள் ஓடின.நான்கு மறைகளை ஓதுபவர்கள் நாவால்
ஓதிக்கொண்டே ஓடினர்.பரம்பொருளின் ஆத்மார்த்த முதலும் முடிவுமான
பேரொலியும் வரவேற்றபடி ஓடியது.
இறைவனின் பாதி உடலைப் பாகமாகக் கொண்ட பார்வதி
அன்னையும் அணிந்த அணிகளெல்லாம் கழன்றுவிழும்படியாக
ஓடி ஒளிந்தார்கள்.வீதிதோறும் விழாவாக எப்பொழுதும் கொண்டாடப்
பெறும் விநாயகப் பெருமானும் ஏதோ ? என்னவோ? என்று ஓடினார்.
தேவர்களெல்லோரும் தீஞ்சுடர் என்ற நினைவு வந்தாலே அஞ்சியஞ்சி
ஓடிஒளிந்தனர். உலகமே, கூடி இறைவா! காப்பாற்றுங்கள்! என்று
எழுப்பிய சோகக்குரல் கேட்டு,மேகம் சூழ்ந்த சடைமுடி கொண்ட
சிவபெருமான் அச்சுடரைக் கையில் ஏந்தினார்.
பொறிச்சுடரின் புனிதப்பயணம்
படர்சுடரைப் பரிபவமாம்
பக்குவத்தால் பற்றிநின்று,
சுடரக்னிச் சுருள்காற்றுக்
கரத்தளித்துக் கங்கையிலே... 341.
விட்டிடுக ! ஆட்டமுகத்
துட்டரழி சுட்டசுடர்
எட்டிடுமே ஏற்றிடுமே
தொட்டிலையே துணையாக..... 342.
உரைத்தசிவ உயராணை
மறைமொழியை மனம்கொண்டு,
விரைந்தேற்று, நிறைசூட்டால்
குறைக்கரத்தில் மாற்றிமாற்றி...... 343.
எழுநாக்கன், விழுகாற்றன்
பழுதில்லாக் கங்கைக்கரம்
மழுச்சுடரோன் கொழுச்சுடரைத்
தொழுதளிக்கத் தூயதாயோ,,,,,, 344.
தான்தாங்காள் தகிக்கும்சுடர்
தண்ணலைக்கரப் பொய்கையிலே
மான்தாங்கி மணிச்சுடரை
ஊனுருக விட்டனளே . 345.
பொருள்
படரொளிச்சுடரைத் தமது பரிபவமெனும் தூயசக்தியால் கையால்
பற்றி, அச்சுடரை ஒளியுடைய அக்கினி,சுருண்ட காற்று இருவரையும்
அழைத்து, அவர்கள் கரத்தில் அளித்து.இதனைக் கங்கையிலே சேர்ப்பிக்க
என்று ஆணையிட்டார்.
நீங்கள் கங்கையில் விட்டிடுங்கள்;கங்கையை அடைந்தசுடர் எட்டு
பத்து என முகங்களைக் கொண்ட தீயவர்களை,அழித்திடும்;அச்செயலைத்
தானே ஏற்றிடும்;தொட்டிலில் உள்ள குழந்தையே அறத்திற்குத் துணை
போகும்.
சிவனது ஆணை ;முதற்கடவுளின் ஆணை;அதனால் மறைமொழியை
மனத்தில் இறுத்தி , விரைவாய் அச்சுடரைக் கையில் தாங்கினர் ;சுடரின்
சூடு தாங்கமுடியாமல் வலது,இடது எனக்கைகளை மாற்றி மாற்றி
முழுமை இல்லாத குறைப் பலமே உள்ள கைகளில் தாங்கியே ஓடினர்.
ஏழு நாக்குகளைக் கொண்ட அக்கினியும்,பெருங்காற்று வீசும்
வாயுவும்,விரைந்து சென்று குற்றமற்ற நதியாகிய கங்கையிடம்
மழுவென்னும் படை கொண்ட சிவனார் கொடுத்த அச்சுடரை ப்
பணிவோடு அளிக்க, அன்னை கங்கை
தன்னாலும் தாங்க முடியாத தகிக்கும் சுடரை, மானைத்தாங்கி
அருள்காட்டும் சிவனின் மாச்சுடரைக் ,குளிர்ந்த அலைக்கரங்களைக்
கொண்ட பொய்கையிலே ,உள்ளமெல்லாம் உருகும்படிப் போற்றி வணங்கி
விட்டாள் .
சரவணப்பொய்கை
சரவணப் பொய்கையில்
சரவணன் அவதரித்ததால்
சரவணம் பெயர்பெற்றதோ?
சரவணன் பெற்றாரோ? 346.
பொருள்
கங்கை விடுத்த சுடர் அப்பொய்கையில் மலர்ந்திருந்த ஆறு
தாமரை மலர்களில் ஆறு குழந்தையாக மலர்ந்தது. சரவணனாகிய
முருகன் தோன்றியதால் அப்பொய்கை "சரவணப்பொய்கை"
ஆயிற்றா? அப்பொய்கையில் அவதரித்ததால் முருகன்,"சரவணன்"
ஆனாரா? என்று வினா எழுப்பும் அளவு இரு நிகழ்வுகளும் ஒத்திருந்தன.
முருகன் அவதாரம்
ஆய்தமிழ்போல் தோய்மதிபோல்,
சாய்கதிர்போல் , தூய்மறை போல் ,
வேய்ங்குழல்போல் , மாய்மலம்போல் ,
பாய்கதிர்போல் , சேய் வருங்கால் ..... 347.
தண்குளிர் மண்குளிர் அடைந்திடவே,
கண்குளிர் விண்குளிர் அடைந்திடவே,
ஊன்குளிர் வான்குளிர் அடைந்திடவே,
மான்சுடர் கோன்சுடர் குளிர்ந்ததம்மா! 348.
தலையேற்ற கலைப்பொய்கை
மலைமகளின் மாண்புபோல்
விலையில்லா மாமணியை
அலைக்கரத்தில் அணைத்ததம்மா ! 349.
பெற்றசுடரோ பெற்றதண்மைப்
பேரணைப்பில் நற்றவனருள்
உற்றதுபோல் பற்றுற்றே
நற்கமலப் பொற்றளத்தில் ...... 350.
கற்றசான்றோர் கனிந்துபோற்ற,
முற்றுமாமறை முதிர்ந்துவாழ்த்தப்
பற்றியதீப் பாசறைகள்
நெற்றிய றை உற்றோட,,,,, 351.
நான்முகன்,மால் நலிதேவர்
நலநினைந்து வரவேற்கக்
கான்முனிவர் கரம்குவித்துக்
கருணையென வாழ்த்திசைக்க.... 352.
ஆணவச்சூர் மனையாளோ
அவலமாய்க் கனவுகாண
வீணரக்கர் வெளிறிநிற்க,
வேதனைகள் விலகியோட,,,,,, 353.
பூத்ததுவே புண்ணியமலர்;
பூத்ததுவே புதுப்புதுமலர்;
பூத்தமலர் ஆறாகிக்
காத்ததுவே கலியுலகை . 354.
பொருள்
ஆராய்ந்து சான்றோர்களால் அளிக்கப்பட்ட செந்தமிழ் போலவும்,
வானத்தில் தோய்ந்தபடிப் பவனிசெல்லும் முழுநிலவு போலவும்,
வயல்களில் நன்கு விளைந்த பயிர்களில் கதிர் முற்றியதால் சாய்ந்து
விளங்கும் நெற்கதிர் போலவும்,தூய்மையே உருவான நான்கு மறைகள்
போலவும்,மனத்தை ஒருமைப்படுத்தும் புல்லாங்குழலின் இசைபோலவும்,
மலவாசனை விட்டகன்று,மலபரிபாகம் பெற்ற ஆன்மா போலவும்,
காலையில் பளிச்சிடும் ஆதவக் கதிர் போலவும் விளங்கும்
சிவகுமாரன் வந்து அவதரிக்கப்போகிறான்.
குமரனின் அவதாரம் நடக்கப்போவதை உணர்ந்த சராசரங்கள்
அமைதியும், ஆனந்தமும், குளிர்வும் அடைந்தன; தண்ணீர் குளிரடைந்தது;
மண்ணும் வெப்பம் நீக்கிக் குளிச்சி உற்றது; கண்ணும் குளிர்ந்தது;
விண்ணுலகும் குளிர்ந்தது;ஊனும்,உயிரும் குளிர்ந்தன;இவ்வாறு உலகே
குளிர்வடைந்ததால் மானைத்தாங்கியவன் கண்சுடரும் ,தலைவனாகிய
சிவனது கண்பொறியும் குளிர்வடைந்தது அம்மா !
அழகுமிக்கதாகிய சரவணப்பொய்கை தன் தலையாலே வணங்கி
ஏற்றது அப்பொறியை. மலைமகளின் கருணைச்செயல்கள் போல
இப்பொய்கையும் விலைமதிக்கமுடியாத மாமணியாகிய சுடரைத்
தனது அலைக்கரத்தால் அணைத்து ஏற்றது.
அலைக்கரத்தில் பெற்ற சுடரானது தண்மையையும்,
குளிர்ச்சியையும் அலைக்கர அரவணைப்பில் பெற்றநேரம் எம்பெருமான்
அருளும் வந்து கூடியதால் ஊனும்,,உயிரும், பற்றும்,பிறவும் பெற்று,
அப்பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை ஆகிய பொன் தட்டில் ....
கல்விகேள்விகளில் சிறந்தோர் மகிழ்ந்து போற்றவும்,
நான்கு மறைகளும் நல்லாசி ,அரக்கர் பாசறைகள் எல்லாம் நெற்றியில்
வீழ்ந்த அறைபோல் அடிவாங்கி அஞ்சி ஓடவும் ,,,,,,,,
ஆணவச்சூரனின் அன்புமனைவி தீமை நல்கும் கனவுகளைக்
கண்டு அஞ்சி ,அலறவும் ,வீண்பொழுது போக்கும் அரக்கர்கள் அஞ்சி நடுங்கி
ஓடி ஒளியவும், நல்லோர்களின் துன்பங்கள் விலகிடவும் ,,,,,
புண்ணிய மாமலராம் குமரக்குழந்தை பூத்தது; புத்தம்
புதுப்புது மலர்கள் பூத்தன.அவை ஆறு மலராகி அகிலத்தைக்
காத்திடவே மலர்ந்தன.
கார்த்திகை விண்மீன்கள்
அறுதாமரை நறுமாமலர்
குறுகோங்கிதழ் உறுசீர்முகம்
அறுவிண்மீன் பெறுமாதவம்
தருதிருப்பணி பெரும்பேறு. 355.
பொருள்
ஆறு தாமரை நறுமண மலர்களிலே சிறிய கோங்கு மலரின்
இதழ்போன்று அழகே உருவான முகத்தைப் பெற்ற கார்த்திகை முதலாய
ஆறுவிண்மீன்கள் மாதவம் செய்த பெண்களாக மாறிக் குழந்தைகளைக்
காக்கும் திருப்பணியைப் புரிந்தனர் ;பேறு பெற்ற பெண்களல்லவோ
அவர்கள்.
கைகளில் மலர்ந்தன
வளர்ந்தன; வளர்ந்தன;
வளவிதழ்த் தாமரைகள்;
மலர்ந்தன; மலர்ந்தன;
மணியிதழ்த் தாமரைகள். 356.
பொருள்
வளமையுடைய இதழ்களைக் கொண்ட தாமரை மலர்களில்
ஆறுகுழந்தைகளும் அழகே வளர்ந்தன; மணிபோன்ற இதழ்கள் உடைய
தாமரை மலர்களில் ஆறு முகங்களும் மலர்ந்து விளங்கின.
குழந்தை விளையாட்டு
நிறைந்தன; குறைந்தன;
மறைந்தன; பறந்தன ;
உறங்கின குறங்கிடை;
புறங்கடை சிறந்தன. 357.
பொருள்
ஆறு குழந்தைகளும் ஓடியாடி விளையாடின; விளையாடு நேரத்தில்
எண்ணிப்பார்த்தால் சரியாக ஆறு இருந்தன; அடுத்த எண்ணிக்கையில்
குறைந்தன; காணாமல் போயின; சிலவோ நிலத்தைவிட்டு வானில்
பறந்தன; அடுத்த ,அப்பெண்டிரின் தொடைகளில் படுத்து உறங்கின
சிலகுழந்தைகள். வேறு சில கொல்லைப்புறத்தில் மற்போர், சிலம்பு,
விளையாடிச் சிறந்தன.
கார்த்திகைப்பெண்டிர் போற்றி வளர்த்தல்
.
பாலூட்டிச் சீராட்டித்
தாலாட்டி நாளுநாளும் ,
சூலுற்ற தாய்தமக்கும்
மேலாகி வளர்த்தனரே . 358,
பொருள்
குழந்தைகளையும் கார்திகைப் பெண்டிர் அறுவரும்,
தாய்க்கு மேலாக வளர்த்தனர். அவர்களுக்குப் பாலூட்டி, நன்கு
குளிப்பாட்டி,ஆடல்பாடலால் தூங்க வைத்துத் தொட்டிலில் தாலாட்டுப்
பாடி ஒவ்வொரு நாளும் வளர்த்தனர். தாயைக் காட்டிலும் அன்பு
செலுத்தினர் .அதனால்தான் இறைவன் அவர்களுக்கு ஆசி வழங்கும்
காலத்தில் அவர்களை நினைக்கும் விதமாக முருகன் போற்றும் நாளாகக்
கார்த்திகை விண்மீன் நாளை அறிவித்தார்.
ஆறுதல் அளிக்கும் முகங்கள்
ஐந்துமுகமுடன் அதோமுகமும்
தந்தவனால் ஆறுமுகமாம்,
ஆறுதாமரை ஆறுகன்னியர்
ஆறுமுகம் ஆறுதல்தரும். 359.
பொருள்
தேவர்களின் துயர் தீர்த்தருளச் சிவபெருமான் தனது ஐந்து முகத்திலும்
படர்ந்த நெற்றிக்கண்ணில் இருந்து, காணாத ஒளிமுகமான
அதோமுகத்தையும் இணைத்து, ஆறுமுகங்கள் தோன்றும் தீப்பொறியை
அருளாக்கம் செய்து வெளியிட்டார். அவ்வாக்கமே ஆறுமுகமாக
அவதரித்தது . அக்குழந்தைகளை ஏற்றது ஆறுதாமரை மலர்கள்.
காத்தது ஆறு விண்மீன் கன்னியர். அத்தகைய ஆருமுகங்களும்
ஆன்மாக்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
காண வந்தான் கடவுள்
படைத்திட்ட வடைக்கலத்தை
மடைதிறந்த வன்புவெள்ளச்
சடையான்தான் உமையோடும் ,
விடையொடும் வந்துகண்டான் . 360.
பொருள்
தமக்கும், தேவர்களுக்கும் அடைக்கலமாய்ப் படைத்திட்ட
பெரும்பொருளை, மடைதிறந்த வெள்ளம்போல் அன்பு பாய்ந்துவரச் ,
செஞ்சடைக் கடவுள் உமையம்மையோடும், விடையொடும் காண
வந்தருளினான்.
ஆறுமுகங்களும் ஒருமுகமாக...
மலராறுமாய் நின்றானை,
மலர்க்கரத்தால் எடுத்தணைந்து,
நிலையாக்கி, ஒன்றாக்கி
நீலகண்டன் கரத்தளித்தாள் . 361.
பொருள்
கந்தனைக் காணவந்த பெற்றோர்கள்,ஆறுமலர்களில் அழகே
உருவாய் விளையாடும் குழந்தைகளை ,வயிறூரும் தாய்ப்பாசத்துடன்
வாரி எடுத்து அணைத்துக் கொண்ட அன்னை பராசக்தி
ஆறுகுழந்தைகளையும் அணைத்து,ஒன்றாக ,ஒருமுகமாக்கி அன்புத்
செல்வதை அருங்கணவர் நீலகண்டன் கரத்தளித்தார் .
குன்றக்குமரன்
ஒன்றான ஓங்காரனை
நன்றான நமசிவாயனும்
குன்றெல்லாம் குடிகொள்க !
குமரா!நீ வாழ்கவென்றான். 362.
பொருள்
ஆறுமுகங்களும் ஒருமுகமாய்க் காட்சியளித்த ஓங்காரச்செல்வனை
நன்மையின் வடிவான நமசிவாயனான முழுமுதற்கடவுளும் "குன்று
இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக அமைக" எனக்கூறி,
குமரனே !நீ வாழ்க வாழ்க எனவும் வாழ்த்தினான்.
பாலூட்டிய தாய்
பராபரமாம் ஞானமுலைப்
பசுங்கிண்ணப் பைம்பாலைச்
சுராசுரரின் துயர்போக்கச்
சுகமாக ஊட்டினாளனை . 363.
பொருள்
பரம், அபரம் என்னும் ஞானமாகப் போற்றப்படும் தமது
முலைகளில் இருந்து பீச்சி எடுக்கப்பட்ட ஞானப்பாலைப் பசும்பொன்னால்
உருவாக்கப்பட்ட கிண்ணத்தில் சேமித்து,மூவேழ் உலகையும் உலகையும்
காக்கவும்,தேவர்கள்,அரக்கர்கள்,போன்றோரின் துயரைப் போக்கவும்
வலிமை,ஞானம் ,போன்றவற்றை அருளவும், அன்னை பராசத்தி
முருகனுக்கு ஊட்டினாள்.
வழிகாட்டி விடை பெற்றான்.
உபதேசம் செய்திட்டான்;
ஊர்த்வமுகம் காட்டிட்டான்;
உலகுகாக்க வழிகாட்டி,
உலகுகாப்போன் புறப்பட்டான். 364.
பொருள்
ஞானகுருவாகிய ஆலமரத்தண்ணல் அன்புமகனுக்கு "வாச தீக்கை"
அருளினான். தனது ஆறாவது முகமாகிய அதோமுகத்தைக் காட்டினான்;
உலகங்களைக் காக்கும் வழிமுறை கூறினான்;இவ்வாறு மகனுக்கு
அருளுபதேசம் செய்துவிட்டுக் கயிலைக்குப் புறப்பட்டான்.
விளையாட்டுக்குமரன்
ஒன்றான ஆறுமுகமும்
தன்போக்கில் மாறுபடும்;
கன்றான கந்தனவன்
கன்றானான் விளையாட்டில், 365.
பொருள்
ஆறுமுகங்களைக் கொண்ட குழந்தை அதன் விருப்பப்படி
முகங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும்; குழந்தையான குமரன்
விளையாட்டில் ஈடுபட்டான்.
வான்வீதிப்பயணம்
விண்மீன்கள் பணிவிடையால்
விண்வீதியில் பயணித்தான் ;
விண்ணடுத்தும் கண்காட்டும்
விண்கோள்கள் திண்பயணம் . 366.
பொருள்
தனக்கு அன்பொழுகப் பணிவிடைகள் செய்த விண்மீன்கள்
தொடர்பு கொண்ட வானவீதியில் சுற்றிச்சுற்றி .வந்தான் .
விண்ணை விட்டு வியப்புமிக்க கோள்களில் திறன்மிக்க பயணம்
மேற்கொண்டான்.
பாற்கடல்,பிரம உலகு
பாற்கடலைச் சேர்ந்தளைந்து.
பிரமஉலகு கரம்கொள்வார்;
வீரேந்திரப் பட்டிணமும்
விளையாட்டாய்ப் பற்றிடுவார். 367.
பொருள்
திருமால் வாழ் இடமாகிய பாற்கடலை அடைந்து, அக்கடலை
அளைந்தும் ,மேலெடுத்தும்,அங்குள்ளவர்களை வெளியேற்றியும், தானே
சென்று பாம்பணையில் படுத்துறங்கியும் விளையாடினார்.
பிரும்மனது சத்திய உலகைக் கைப்பற்றினார்;
இந்திர தேவநகரம் சென்று அதையும் கைப்பற்றினார்.
இளம்வீரக்களம்
அசுரர்குல நகரங்கள்,
அங்கங்கே பங்கங்கள்'
அசுரர்குலம் அஞ்சிடவும்,
அளவில்லா மகிழ்வுகொண்டார். 368.
பொருள்
அரக்கர்கள் ஆண்ட நகரங்களில் சென்று, பலரை அச்சுறுத்தினார் ;
அஞ்சி ஓடவைத்தார் ; அரக்கர் குலமே அஞ்சி ஓடவும் அளவில்லா
மகிழ்வுற்றார்.
சிறுபையன் குறும்பைப்பார்!
உறுவீரம் விளைத்திடுவோம்;
கருவுற்றுக் களம்கண்டோர்
காணாமல் போனார்கள் . 369.
பொருள்
சிறு குழந்தை; அதனுடைய குறும்பைப்பார் ; இதற்கு நாம் வீர
விடையளிப்போம்" என்று சினத்தோடு போராற்ற வந்தவர்கள் போன
இடமே தெரியவில்லை.
இந்திரன் தோற்றான்
அறியாது போரிட்ட
வமலேந்திரன் அழிந்துநின்றான்;
நெறிமிக்க நீள்வஜ்ரப்
பெரும்படையை இழந்துநின்றான். 370.
பொருள்
வந்து போரிடும் இளம்குழந்தை பற்றி அறியாத தேவேந்திரன்
போரிட்டு எல்லாப்படைகளையும் இழந்து தோல்வியுற்றான்; மீண்டும்
போர் செய்து தனது உயரிய வச்சிரப்படையையும் இழந்து நின்றான் .
மூவுலகுமே அச்சம்
நெறியில்லா நீளரக்கர்
நெறிசார்ந்த நெடுந்தேவர்
அறிவுவழி மண்ணகத்தார்,
பொறிகலங்கச் சமர்செய்தான். 371.
பொருள்
முறையில்லாது முரட்டுத்தனமாய்ப் போராற்றும் அரக்கர்கள்,
முறையோடு ஒழுங்காகப் போர்புரியும் தேவர்கள்,
அறிவில்,ஆன்மிகத்தில் உயர்ந்த மண்ணகத்தார் ஆகிய மூன்று
இடத்திலும் போர்புரிந்து அவர்களை அஞ்சி ஓடச்செய்தான் இளங்குமரன்.
விஸ்வரூபம்
சுரகுருவோ பரம்பொருளென,
சூரகுரு செயலிழந்தான் ;
சுராசுரர் தாழ்ந்துநிற்கச்
சுயரூபம் விஸ்வமானான். 372.
பொருள்
உலகையே அச்சுறுத்துவது யார் ? என்ற வினாவிற்குத் தேவகுருவானவர்
அந்தப்பரம் பொருள் மண்ணில் குழந்தையாக அவதரித்துள்ளது"
எனச்சொல்ல, அசுரகுருவாகிய சுக்கிரன் அசுரகுலம் அழிக்கவந்த
குழந்தை" அன்றறிந்து, செயல் இழந்து நிற்க,ப் பலநிலைகளிலும்
தேவர்களும்,அரக்கர்களும் தாழ்ந்து நிற்கத் தன்னை உணராத
அம்மூடர்களுக்குத் தான் யார்?என்பதைக் காட்டிட தனது பெரும்
பேருருவத்தை விஸ்வரூபமாகக் காட்டினான் கந்தசுவாமி .
முழுமுதல்
விஸ்வரூப விரிவுகண்டு,
விரிகாட்சி வடிவுகண்டு,
விஸ்வமான வேலவனை
விஸ்வமுதல் என்றுபோற்றினர் . 373.
பொருள்
வானளாவி நின்று, பாதங்கள் நிலத்தின் தலை வானின் மேலும்
அமைய உலகெலாம் பரந்து , மூவர்முதல் முக்கோடி தேவர்களும்,
ஆங்காங்கு நிற்க கடல்கள், மலைகள் உயிரினங்கள் உடலுக்குள்
ஒளிந்திருக்க,அனைத்துமாய் நிற்கும் விரிந்த அமைப்பும்,அழகும் கண்டு,
உலகமாய்க் காட்சிதரும் வேலவனை முழுமுதற்கடவுள் எனப் போற்றினர்.
செந்தில் செல்வன்
அசுரகுலம் அழித்திடவே,
அவதரித்த ஆறுமுகன்
சிசுவடிவச் செல்வனானான்
சிவமகனாம் செந்திலோனே. 374.
பொருள்
அரக்கர் கூட்டம் அழித்திடவே ஆறுமுகன் அவதரித்தான். குழந்தை
வடிவில் முழுமுதலான செல்வன் அவன் .சிவக்குமரனான செந்திலோனே
அவன்.
நவவீரர்
சிவசத்தித் திருவருளால்,
நவவீரர் வீரவாகு,
அவதரிக்கத் தவமகனின்
அடித்தொண்டு ஆனார்கள். 375.
பொருள்
சிவசத்தியாகிய பார்வதியின் அருளால் ஒன்பது வீரர்கள்
தோன்றினார்கள். அவர்களின் தலைவன் வீரவாகு. அவர்களும்
முருகனுக்கு அடிமைத் தொண்டு ஆற்றும் படைவீரர்கள் ஆனார்கள்.
தாரகன் அழிவு
தந்தைசொல் தலையேற்றுத்
தருக்ககுணத் தாரகனை
விந்தைமலைக் கிரௌஞ்சத்தை
வேற்படையால் வீழ்த்தினாரே . 377.
பொருள்
சிறையில் வாடும் தேவர்களை ,விடுவிக்கவும், அரக்கர்களோடு
போரைத் துவக்கு! அதன் முதற்படியாகத் தாரகனை அழிப்பாய்! என்று,
தனயனிடம் கூறினார் சிவபெருமான். அச்சொல்லைக் கேட்ட முருகன்
தாய் கொடுத்த தவவேலால் சூரனின் தம்பியான தாரகனையும் , அவனது
மாயகிரௌஞ்ச மலையையும் அழித்தான்.
வேலாயுதம்
அன்னையளி அருந்தவவேல் ;
ஆறுமுகனின் அற்புதவேல்;
பின்னேவரும் பெரும்போரின்
பெருஞ்சிறப்புத் திருவேலாம் . 378.
பொருள்
அரக்கர்களை அழிக்க முனையும் தன்மகன் முருகனுக்கு
அளிப்பதற்காக, அன்னை பார்வதி தேவியார் தவம் இருந்து பெற்ற
வேல்; ஆறுமுகனின் கைகளில் அமர்ந்த அற்புதவேல்; அடுத்து வரும்
பெரும்போரிலே பல்லாயிரக்கணக்கான அரக்கர்களை அழிக்கும்
சிறப்புமிக்க வேல; வேலாயுதம் எனப்படும் திருவேலாகும்.
காளி கேட்ட வரலாறு
காளியவள் கதைகேட்டுக்
கணநேரம் மௌனியானாள் ;
காளிகண்ட கண்காட்சி
கலகலவெனச் சிரிக்கவைத்தது. 378.
பொருள்
முது பேய் கூறிய வரலாற்றைக் கேட்ட காளியன்னை சற்று நேரம்
மௌனமாக அமர்ந்தாள்.அவளது கண்கள் அரக்கர்கள் அழியும்
காட்சியைக் கண்டது; மகிழ்ச்சியில் அன்னை கலகல எனச்சிரித்தாள் .
காளியின் வாழ்த்து
வீழ்த்திடுவான் வெவ்வரக்கர்;
வேலவன்தான்; வெற்றிவேலை
வாழ்த்திடுவேன் வாயார.
வளமகனின் நலச்செயலை. 379.
பொருள்
கொடுமை மிக்க அரக்கர்களை வீழ்த்திடுவான் வேலவனே.அவனது
வெற்றிவேலை வாழ்த்துகிறேன். மனமெல்லாம் மகிழ்வோடு வளமகனின்
நல்லசெயல்களை வாழ்த்துகிறேன்," என்று வாழ்த்தினாள்.
11.காளி கண்ட காட்சி .
ஆழ்துயில் அமைதி
வாழ்த்துரைத்த வனக்காளி
ஆழ்ந்தகண்ணால் அமைதியானாள்;
சூழ்ந்தசூழலில் மூழ்கிநின்றாள் ;
ஆழ்துயிலில் அமைதியானாள். 380.
பொருள்
பேய்களின் சொல்லிலே உள்ள தன்மைகளை ஆராய்ந்து, அதன்
அடிப்படையில் வளமார் முருகனுக்கு வாழ்த்துரைத்த காடாளும்
அரசி, கண்ணை மூடியவள், சஞ்சலம் போக்கிய மனத்தள் ஆனாள் .
நடந்து முடிந்த சூழலை உற்றுநோக்கி,அதற்குள் ஐக்கியமானாள் .
ஆழ்ந்த துயில்; அமைதியான மனம் ; அங்கே ..........
காட்சிகள்
கடல்சீற்றம்; கனல் சீற்றம்;
இடர்வாட்டம்; சுடர் நாட்டம்;
படர்பசுமை ; அடர்கருமை ;
தொடர் தூய்மை; தொடர்க்காட்சிகள். 381.
பொருள்
காளியின் ஆன்ம ஞானக் கண்ணிலே அடுக்கடுக்காய்க் காட்சிகள்
உதயமாயின. அடங்கிக் கிடந்த ஆன்மாக்களின் சீற்றம், கடல்போல ;
தீமைக்கு அஞ்சி தீமையர்களுக்கு அடங்கிக்கிடந்த அமைதியாளர்களின்
சீற்றம் அக்கினியைப்போல; வலிமைமிக்கவர்கள் அடக்குமுறையில்
சாதுக்களின் மனவாட்டம் ; நின்றுகொல்லும் இறைவனின் கருணை
நாடியே பயணிக்கும் வாட்டமுடையோர்; சான்றோர்க்கு நல்லன
நடக்கும் பசுமை;ஆங்காங்கு கருணையின் குளிர்மழை; தூய்மையும்
நேர்மையும் தொடர வாழ்வு ; இப்படிப்பட்ட காட்சிகள் அன்னையின்
கண்ணுள் கலந்து நின்றன.
அழியா அரக்கர்கள்
முக்காலம் முன்காணும்
தக்கோலம் தான் கண்டாள்;
அக்கால வரக்கர்களின்
அழியாத வரக்காட்சி. 382.
பொருள்
ஞான திருஷ்டி நுண்ணோக்குத் தண்பார்வையால் முக்காலமும்
முன்னரே அறிகின்ற தத்துவக்கோலம் கொண்ட அன்னை மாகாளி
அந்தக்காலத்தில் அரக்கர்கள் நீண்ட தவம் இருந்து இறவா வரம்
பெற்று, ஆணவத்தோடு வாழ்ந்த,அரசாண்ட காட்சிகளைக் கண்டாள்.
அரக்கன் தவம்
நிலைநின்றான்; மலைநின்றான்;
அலை,கடல் ,புயல் , தலைநின்றான்;
சிலையானான்; கலைத்தீயில்
மலைக்கடவுள் இளகவில்லை. 383.
பொருள்
அசுரகுரு சுக்ராசார்யாரின் அறிவுரைப்படி, காசியபவம்சத்தில் தோன்றிய
மாயையின் மகன்கள் சூரன்,சிங்கமுகன்,தாரகன் ஆகிய மூவரும்
கடுந்தவம் இயற்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
ஒரேநிலையில் நின்றே தவம் செய்தனர்; மலைமீது வெய்யில் மழை
பாராது நின்றபடியே தவமியற்றினர்.கடலலைச் சீற்றத்திலும் ,புயல்
காற்றின் தாக்கத்தாலும், தலைகீழாகப் பலப்பல ஆண்டுகள் தவம்
இயற்றினர் .ஆயினும் வரமளிக்க அந்தக்கயிலை மலைக்கடவுள்
வரவில்லை.
கொடுந்தவம்
வான்நோக்கித் தானெழும்பும்
தூணான தீநாக்குள்
மான்தாங்கிக் கோன்போற்றித்
தான்நின்றான் தம்பியருடன் . 384.
பொருள்
மிகப்பெரும் அக்கினிக்குண்டம் வளர்த்து,அதன் தீநாக்குகள்
தூண்போல வானத்தை எழுகின்ற தீச்சுடரில் தனது தம்பியருடன்
நெடுங்காலம் நின்றபடியே மானைக் கரத்தில் தாங்கிய மன்னனாகிய
சிவபெருமானை வழிபட்டனர்;போற்றினர்; அவ்விறைவன் ......
வரவில்லை
வரவில்லை வரமளிப்பவன்;
தரவில்லை நிறைவிருப்பம்;
உறவில்லை உடலிடத்து,
உடைவாளால் குறையாக்கி... 385.
பொருள்
வரமளிக்கும் கருணைக்கடவுள் வரவில்லை; அவர்களின் மனத்து
விருப்பங்களை நிறைவேற்றவில்லை. அந்நிலையில் தனது உடலின்மீது
பற்றுவைக்காத சூரபன்மன் உடைவாள் கொண்டு உடல் பாகங்களை
வெட்டி எரியும் நெருப்பில் ஆஹுதியாகப் போட்டான்.
வேள்வி பலி
காலிரண்டு காளபலி;
கையிரண்டு கையிலைபலி ;
கழுத்தோடு தலைதனிப்பலி ;
கருங்குடலும் நெருப்பிற்கே. 386.
பொருள்
தம்பியரை நெருப்பிற்கு வெளியே நிறுத்திவிட்டுத் , தீயின்மேல்
அந்தரத்தில் பறந்தபடியே சூரன் தனது இரண்டு கால்களையும்
காள பைரவனே! உனக்கே அர்ப்பணம் எனப்போட்டான். இருகைகளையும்
வெட்டுவதற்குமுன் கழுத்தோடு தலையைக் கருங்குடலை வெட்டி
நெருப்பிலிட்டுகைகளையும் கயிலைநாதனுக்குப் பலியாகப் போட்டான்.
நடுங்கியது விண்ணுலகம்
பயந்தோடிப் பிரமன்வரப்
பாய்ந்தோடி மாலும்வர ,
நயந்தோடி இந்திரன்வர
வியப்பெதுவும், வேண்டவில்லை. 387.
பொருள்
வேள்வித்தீயில் தன்னையே ஒருவன் பலியாகக் கொடுக்கிறான்"
என்பதால் அஞ்சிய பிரமன், திருமால் ,இந்திரன் ஆகியமூவரும் ஓடோடி
வந்து அவனுக்குக் காட்சி கொடுத்தார்கள். அவனோ வரமேதும்
கேட்கவில்லை; வியப்படைந்த அம்மூவர் முன்பு.......
வரம்பெற்றான்
ஆலகாலம் உண்டகண்டன்
சீலவரம் வேண்டுமென்றான்;
ஏலக்குழலி ஏழிசையான்
கோலவரம் கொடுத்தருளினான். 388.
பொருள்
நான் சிவபெருமானிடமே வரம் கேட்க விரும்புகிறேன்' சூரன்.
நஞ்சையுண்டு அமுதம் மற்றவர்க்கு வழங்கிய அந்த நீலகண்டன் இசை
வடிவான அருட்சக்தியோடு வந்து,சூரன் கேட்ட வரங்களை அளித்தான்.
சூரன் கேட்ட வரம்
சாவாநிலை , மூவாநிலை ,
தாவாரதம் நோவாமதம்,
தேவாவழிப் பூவாமொழி,
ஈவாவுயிர் இதுவேவரம். 389.
பொருள்
இறப்பேயில்லாத நித்ய வாழ்வு, மூப்பே அடையாத நித்ய மேனி,
எங்கும்,எதிலும் தங்குதடையின்றிச் செல்லும் இந்திரஜாலத்தேர்,
நோய்நொடி பற்றாத உடல் ,தேவர்களும், மற்றவர்களும் வழிபட்டு ,
எனது சொல்லையே இறையாணையாய் நினைத்துப் போற்றுவழிமுறை,
இயமனே வரினும் எடுக்கமுடியாத உயிர் இவைகள் அனைத்தையும்
எனக்குத் தரவேண்டும்.
சூரன் ஆட்சி
சூரனாட்சி; சூரவாழ்வு;
சூரவுலகு ; சூரனே இறை;
சூரவுறவு; பார்ப்பணிவு;
சூரவாரம் ஆரவாரம் . 390.
பொருள்
மூவேழ் உலகங்களும் அண்ட கோள்களும் சூரனே ஆட்சி புரிந்தான்;
சூரனின் வாழ்வு நிகரற்றது; உயர்வானது; சூரனே உலகம்;உலகமே சூரன்
அனைத்து உலகங்களுக்கும் சூரனே இறைவனானான்;சூரனோடு உறவு
கொள்ள,உலகோர் போட்டிபோட்டனர். உலகம் முழுவதும் சூரன் காலில்
விழுந்து வணங்கினர்.சூரனின் வலிமைகளில் ஒன்று ஆர்ப்பாட்ட
ஆரவாரச்சந்தடியே ஆகும்.
சூரஉடன்பிறப்புகள்
சிங்கமுகன் துங்கதாரகன் ,
தங்கையாய் அசமுகியே,
சிங்கமெனச் சங்கமெனச்
சிறுமைகொள் சிங்காதனம். 391.
பொருள்
சூரபன்மனின் தம்பிகள் சிங்கமுகனும், தாரகனும் ஆவர்.
அசமுகி என்ற தங்கையும் உண்டு. வலிமையில் சிங்கமாயும்,
ஒற்றுமை தழுவியும் ஆண்டனர். அவர்கள் ஆட்சி பெருமையுடன்
விளங்கவில்லை.
தேவர்கள்
தேவர்கள் தாழ்வுற்றனர்'
தீச்சிறையில் வதிந்தனர்;
தேவேந்திரன் ஒளிந்துவாழ்ந்தான்;
தீமைதாம் தேயமெங்கும். 392.
பொருள்
அரக்கர்கள் மூவேழ் உலகங்களையும் கட்டி ஆண்டனர். தேவர்கள்
தாழ்நிலை அடைந்தனர் ; தேவ உலகத்தைத் தீக்கு இரையாக்கிய
பானுகோபன் அவர்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தான்;
தேவர்களின் தலைவன் இந்திரன் மனையாளோடு ஓடி ஒளிந்துகொண்டான்.
உலகங்கள் முழுவதும் தீயசெயல்களால் நிரம்பி வழிந்தன.
தேவர்களின் கனவு
கண்ணிமையாக் கணத்தவர்கள்
கண்டனரே கண்காட்சி;
கண்டதொரு புதுக்காட்சி
கண்டநீலன் கருணையினால். 394.
பொருள்
கண் இமைக்காத தேவர்கள், துன்புற்றும், அழுதும் நீண்ட
நெடுங்காலமாக வாழ்ந்தவர்கள் காணாத கனவிலே நல்ல காட்சியைக்
கண்டார்கள். அக்காட்சி அவர்களுக்கு மகிழ்வைத் தரும் காட்சியாக
அமைந்தது. பரம்பொருள் சிவபெருமான் கருணைத் திறந்தாலே அக்காட்சி
உண்மையாகவே நடைபெற்றது.
ஆன்மத்துணைவன்
தேவத்துயர் மேவிடவே ,
தீச்சுடரால் மாப்புதல்வன்
தேவர்த்துணை ஆகிடவே
காவல்பணி சீவன்துணை . 394.
பொருள்
அரக்கர்களால் தேவர்களுக்குத் துயரம் அளவுக்கு அதிகமாக .
அவர்களுக்கு அருள்பாலிக்க விரும்பிய இறைவன் , அரக்கர்களிடம்
இருந்து அவர்களைக் காக்க விரும்பினான். தனது நெற்றிக்கண்
சிந்திய பொறியிலிருந்து தனது மகனாக முருகனைப் படைத்தான் .
அம்மகன் தேவர்களுக்குத் துணையாகவும், காக்கும் படைத்
தலைவனாகவும் பணி ஏற்பான். ஆன்மாக்களுக்கும் தேவர்களுக்கும்
துணைவன் ஆவான்.
தந்தை சொல்லே மந்திரம்
தந்தைசொல் மந்திரமாய்
எந்தையவன் ஏற்றதனால்,
விந்தைபல விளையாட்டாய்
முந்தைவழி பந்தமானான். 395.
பொருள்
தந்தையின் ஆணைகளை வேதவாக்காக நினைந்து முருகன்
செயலாற்றினான் . விந்தைகளையும் விளையாட்டாக முன்னோர்வழி
மீறாது செய்வதில் முறையாக நடந்தான்.
மாயத்தாரகன்
மாலவனின் சக்கரத்தை
மார்பினிலே அணிந்தவனது
சீலமில்லாச் செய்கையினால்
சினமுற்ற சிவபெருமான்....... 396.
பொருள்
திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியவர் சிவபெருமான் ஆகும்.
திருமாலோடு போரிட்ட தாரகன் அவரைத் தோற்கடித்து, அவரது
சக்கரத்தைப் பறித்துக் கொண்டான். அதனைத் தனது மார்பிலே அணிந்து
கொண்டான்;நற்பண்பு இல்லாத அச்செயல் சிவனார்க்குச் சினத்தை
உண்டுபண்ணியது.
வீரவாகு
நம்தேவர் நலம்காப்பாய்!
நாடிநின்றார்; நன்மகனும்
தம்பியான வீரவாகுவை,
எம்பிரான் அனுப்பிவைத்தார். 397.
பொருள்
சிவனார் நேராக முருகனிடம் சென்றார். குழந்தாய்! நம்மைச்
சேர்ந்த தேவர்களின் நலத்தைக் காத்தருள்வாய்! அது நம் பணியாகும்,
என்றார் .தந்தை சொல் கேட்ட முருகனும், வீரவாகுவைத் தாரகனிடம்
அனுப்பிவைத்தார்.
தாரகன் அழிதல்
மாயமன்னன் மாயமலை
மாயத்தால் மடக்கிடுவர்;
ஆயகாலை ஆறுமுகனார்
மாயப்போரை மாற்றிட்டார். 398.
பொருள்
சூரனின் தம்பியான தாரகன் மாயப்பணிகளில் ஈடுபாடு
கொண்டவன். கிரௌஞ்சம் என்ற மாயமலையும் கொண்டவன் அவன்.
மாயச்செயல் செய்து மற்றவர்களை மடக்கி அடிமை கொள்வான்;
தேவர்களை மாயத்தால் துன்புறுத்தியவன் அவன். வீரவாகுவை முதலில்
அனுப்பிய முருகன் பின்னர் தானும் வந்தார். அவனோடு போரிட்டு
மாயத்தை மாற்றினார்.
மாயம் அழிந்தது
அன்னையவள் அரும்வேலால்
அரக்கனையே அழித்தனர்.
அன்னவனின் அழிக்கிரௌஞ்சம்
அழிந்ததுவே அவனோடு. 399.
பொருள்
கொடுமை புரிந்து தேவர்களைத் துன்புறுத்திய தாரகனையும்,
அவனது மாயமலைக் கிரௌஞ்சத்தையும் அன்னை பார்வதி தேவியார்
தவமிருந்து பெற்றுத் தந்தருளிய வேலாயுதத்தால் முருகன் அழித்தார்.
சூரனின் துயர்
செய்திகேட்டுச் செயலிழந்து,
மெய்யிழந்து, நொந்தசூரன்
எய்திட்ட துன்பமெல்லாம்
எடுத்துரைக்கச் சொல்லிலையே . 400.
பொருள்
தாரகன் மகன் அசுரேந்திரன் வாயிலாகச் செய்தியறிந்த சூரபன்மன்,
அளவிலாத் துன்பமடைந்தான்.அழுதான்;அப்பொழுதே முருகன் மீது
படையெடுக்கத் துணிந்தான்;அமைச்சர்கள் சொல்லக்கேட்டு மாறினான்.
சூரனின் துயரை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை.
முருகன் மனம்
தேவர்சிறை மீட்டிடவே,
ஆவலுற்றக் காவல்குரு
பாவசூரன் வீழ்த்திடவே
போரதனை மனம்கொண்டார். 401.
பொருள்
தாரகனை அழித்தபின்னர் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டிட
ஆவல் கொண்ட தேவர்களின் காவல் சேனாபதியான முருகக்கடவுள்
அதன் முதற்படியாகப் போர் தொடுத்துச் சூரனை அழித்திட மனத்தில்
திட்டம் தீட்டினார் .
தூதனுப்புவோம்
போரெடுத்துப் படையெடுக்கச்
சீரில்லாச் சூரனுக்கே
போர்த்தூது எடுத்துரைக்கப்
பேசுதூதன் போகவென்றான். 402.
பொருள்
சூரனோடு படையெடுக்கும்முன் அவனுக்குப் போரெடுக்கும்
செய்தியைத் தூதன் வாயிலாகத் தெரிவிக்க ஆவன செய்யுங்கள்!
என்று முருகன் ஆணை பிறப்பித்தான்.
தூதுவன்
தூதுசெல்லத் தூயபேச்சு ,
வாதுரைக்க வானறிவு
ஈதுகொண்ட இளையவீரன்
வாகுவென்றே பிரமன் சொனார் . 403.
பொருள்
தூது அனுப்பிடத் தக்க நேர்மையான ,பேச்சு, வாதத்தை
எடுத்துரைக்கும் ஆற்றல், வானளாவிய பேரறிவு, வேண்டும். அத்தகைய
இளைய வீரன் வீரவாகுவே ஆகும். அவனையே சூரனிடம் தூதுவனாக
அனுப்பலாம்" என்று நான்முகன் சொன்னார்.
நன்குரைப்பேன் தூது
மாமுருகன் மனம்கொண்டார்;
ஓம்முருகா! அடிபணிந்தேன்;
சேமமுறு சொற்களாலே
சேர்ந்திசைப்பேன் நற்றூது. 404.
பொருள்
வீரவாகுவைத் தூதனாக அனுப்புவதை ஏற்றுக்கொண்டார் முருகன்.
மிகுந்த மகிழ்வடைந்த வீரவாகு ஓம்கார முருகனே! உன்னடி பணிந்தேன்;
நல்ல தகுதி உடைய சொற்களாலே முறைப்படிப் பேசுவேன்; நன்முறையில்
தூதினை எடுத்துரைப்பேன், என்றான்.
முருகன் உபதேசம்
என்றவனிடம் இயைந்துபேசு!
நன்றேயுரை ! சென்றதுரை !
தொன்றுதொட்ட தொன்மையுரை !
மன்றமும்மதி! மனங்களும்மதி ! 405.
பொருள்
வீரவாகுவுக்குத் தூதாற்றவேண்டிய முறைகளை ஆசானாகிய
ஞானகுரு உபதேசித்தார். பேசும் கருத்துக்களை முறையோடும் தொடர்பு
படுத்தியும் பேசு! நல்லதை மட்டுமே பேசு!கடந்த கால நிகழ்வுகளை
நினைவுபடுத்து !தொன்மையான செய்திகளை எல்லாம் தொன்மை
முறையிலேயே முறைப்படுத்து ! தூது உரைக்கும் அவையை மதித்து நட!
அமர்ந்துள்ள சான்றோர்களின் மனம் புண்படாதவாறும் மதித்தும் பேசு!
வானவழி
ஞானவாசான் ஞானவுரை
ஞானமாகி வழிகாட்டக்
கூனல்பிறை குணம்போற்றி,
வானவழி ஞானவாகு. 406.
பொருள்
ஆன்மாக்களுக்கு ஞான உபதேசம் செய்யும் ஞானகுருவாகிய
முருகன், தூது பற்றி உபதேசம் செய்ததையே, செல்லும்வழி ஞானமாகக்
கொண்டு,செல்லும் வீரவாகுவுக்கு வழிகாட்டும் ஞானமாகக் கொண்டும்
மூன்றாம்பிறையை அணிந்த சிவபிரானைப் போற்றிவணங்கி,
வானவழியாக மகேந்திரபுரம் நோக்கிப் பறக்கத் தொடங்கினார் வாகு.
கந்தமாதனம்
கந்தமாதனக் கருமாமுகில்
கந்தவீசக் கனிவளத்துடன்,
கந்தப்புகழ்க் கருத்தில்வைத்தே
மந்தமாருதம் போல்பறந்தான் . 407.
பொருள்
வானவழிப் பறப்பதற்காக அருகில் உள்ள கந்தமாதன மலையில்
உச்சி நின்று உந்திப் பறக்கும்பொழுது,கருத்த மாமேகங்கள் குளிரளிக்க,
மலைச்சோலைகள் நறுமணம் வீச,மரங்களெல்லாம் கனிவளம் காட்டி,
இனிமைகூட்ட ,கந்தமா முருகனின் புகழை மனத்துள் உள்ளிருத்திக்
கொண்டே, தென்றல் காற்றுபோல வானத்தில் பறந்தார் வீரவாகு.
அணுவில்சிறுத்து
அணுவினும் சிறியோனாய்
விண்மேக விரைதல்வழி,
முணுமுணுக்கும் முனிவர்வாய்
முதுநூலெனப் பறந்தனனே. 408.
பொருள்
மற்றவர் அறியாமல் செல்லவும்,விரைவு வேண்டியும், அணுவிலும்
அணுவாய் உருவமைத்துக்கொண்டு,வானத்தே செல்லும் மேகக்கூட்டத்தின்
விரைவமைத்துக்கொண்டு வானத்தே பறக்கும் மாமுனிவர்களின் வாயில்
முணுமுணுக்கும் முதுமறைநூல்போல அமைதியும்,புகழும் இணைந்த
நூலின் தன்மைபோல் வீரவாகு .பறந்தான்.
இலங்கைமேல்
வீரவாகுவின் சூரநிழல்
வெவ்விலங்கை மேற்படவும்,
வீரகாளி சூரவீரன்
வியப்புடனே நோக்கினானே . 409.
பொருள்
வானில் பறந்துவந்த வாகுவின் நிழலானது. சூரனது ஆட்சிக்கு
உட்பட்ட இலங்கைக் கடல்நகர்மீது பரவிற்று. அந்நிழலை அனுமதியின்றிப்
பறக்கும் அந்நிழல் ,நிழலுக்கு உரிய உருவம் இவைகளை அங்கு
காவல் காக்கும் காளி என்னும் வீரன் வியப்புடன் பார்த்தான்.
வீரன் வினவல்
தந்தையின் தலைப்பணியைத்
தான்பார்த்த தருணத்தில்
வந்துநுழைந்த பந்துயாரோ?
விஞ்சையனோ? வினவுவோம். 410.
பொருள்
சூரனின் சார்பு நாட்டைக் காவல்காத்த யாளிமுகன் தலைநகர்
சென்றுள்ளதால் அவன்மகன் காளி காவல் காக்கிறான்;இந்த நேரத்தில்
வந்துள்ள விருந்தினர் யாரப்பா?விஞ்சையனோ? கூறப்பா! என்றான் காளி .
கப்பம் எடு
சூரநாட்டின் சொந்தமாகவே
சோரனான வீரனே!நில்!
யாரடா,நீ? இயைந்தகப்பம்
எடடா,நீ ; ஏகடா,நீ . 411.
பொருள்
சூரநாட்டில் வாழும் சொந்தக்காரனோ? திருடவந்தவனோ ?
வீரனே!அங்கேயே நில்!கேளாமல் வருபவன் யாரடா நீ ?நாட்டுக்குள்
நுழைந்ததால் கப்பம் கட்டடா ;எடு கழஞ்சு;வந்தவழியே திரும்பிச்செல்!
என்று காளி கத்தினான்.
செல்வழிநாடிது
பாரடா,நீ . காரடா,நான்.
போரடா,வரும். பொறுஅடா,நீ.
தேரடா,நான். தடுப்பேதடா !
சூர்நாடா ?செல்வழியிது. 412.
பொருள்
காளியின் வினாக்களுக்கு விடை கூறும் வகையில் பாரடா! நீதான்.
வானம் முழுவதும் படர்ந்து செல்லும் மேகமடா நான் . வரப்போகுது
உலகில் போரடா ;பொறுத்திருந்து பாரடா ; எங்கும் செல்லும் தேரடா நான்.
எனக்குத் தடுப்பே கிடையாது. சூர நாடா ?இலங்கை பிறநாட்டிற்குச்
செல்லும் வழி நாடு ,என்பதை நீ அறிந்திடு.
மண்டியிடு
கடலலைத்தரைப் படரிலங்கை
தடைப்படைநிலை சுடர்சூரகம்.
இடைநடைத்தடை இதுதெரியா
மடமதியே !மண்டியிடு ! 413.
பொருள்
அலைக்கும் கடலும், கடற்கரையும் சூழ்ந்த இவ்விலங்கைத்தீவு
ஒளிபொருந்திய மன்னன் சூரமகாராசனது ;இங்கு தனிமனிதனுக்கும்,
படைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இடையில், வானில். நீரில்
நடக்கவும்,கடக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது . இது தெரியாது
இங்கு நுழைந்துவிட்ட அறிவற்றவனே ! எனக்கு முன்னால் மண்டியிடு
என்று சினக்குரலில் ஆணையிட்டான். காளி .
வாகு வீரம்
வீரவாகுவின் வலக்கரத்தில்
வெளிவந்த ஒளிருடைவாள்
சூரவீரனின் சீர்மார்பில்
பாரதிரவே பதிந்துநின்றது. 414.
பொருள்
அதிவீரனாம் காளி இட்ட ஆணையால் வெகுண்ட வீரவாகு
உடைவாளைத் தன் வலக்கரத்தில் பற்றி,அந்தச்சூர வீரனின் மார்பிலே
பதித்தார்.
மறைந்த படையினர்
அதிவீரன் அவனதாட்கள்
அதிவிரைவில் அகக்கடலினுள்
விதியாலோ வீரராலோ
வெள்ளலைபோல் மறைந்தனரே . 415.
பொருள்
வீரனொருவன் இறந்ததும் அஞ்சிய ஏனைய அதிவீரன் முதலியோர்
கடலுள் மூழ்கி அப்படியே மறைந்துபோயினர்.இது விதியால் நடந்ததா?
வீரவாகுமேல் கொண்ட அச்சத்தால் நடந்ததா? நாமறியோம்.
மகேந்திரபுரியில்
கடல்நடுவே மலைதாண்டிக்
குகைதாண்டிக் கரைதொட்டுப்
படல்போன்று பலர்வீரர்
பாதுகாத்த வீதியிலே ..... 416.
பொருள்
இலங்கைக்கடல் மலைகள்,பலவும் தாண்டிக் குகைகள் வழியே
உள்நுழைந்து.பரந்துபட்ட கடற்கரையைத் தொட்டுக் காவல்மிக்க
அந்த மகேந்திராபுரியின் பாதுகாப்பு மிக்க வீதியிலே பரபரப்பு........
வீரர்களுக்கு அறிவிப்பு
எல்லையைக் கடந்தொருவன்,
தொல்லைபல தந்துள்ளான்;
அல்லவனை வில்லுக்கிரை !
தள்ளுக சிறை ! நல்லகவனம் ! 417.
பொருள்
வீரர்களே! நம்நாட்டு எல்லையைக் கடந்து நம்நாட்டிற்குள் ஒருவன்
நுழைந்துள்ளான் ;இலங்கை தொட்டு நம்நகர் மகேந்திரபுரி வரை
அவன் தொல்லைகள் அளிக்கிறான் ; அல்லல் பலப்பல தரும் அவனை
உங்கள் வில்லுக்கு இரை ஆக்குங்கள்! பிடித்துச் சிறையில் தள்ளுங்கள் !
கவனத்தோடு விரைந்து செயல் படுங்கள் "என்ற அறிவிப்பு நகர்
முழுவதும் பறை சாற்றப்பட்டது.
தசமுகன் கூவல்
தசமுகனிடு நிசமுகவுரை ;
புசபலப்பலர் புரியவிரை !
கசப்படை துரகப்படை
விசைபோல்விரை ! வசையொழிபுரி ! 418.
பொருள்
படைத்தலைவன், நகர் காப்பவன் தசமுகன் கூக்குரல் இட்டான் .
நல்ல பலமுள்ள வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து, அவனைப் பிடிக்க விரைந்து
செல்லுங்கள் !யானைப்படையும் ,குதிரைப்படையும் நகர்முழுவதும் சென்று
தேடுங்கள் ! பாதுகாப்பில்லாத நாடு என்ற பழி வராமல் தடுங்கள் !" என்று .
விரைந்த வீரவாகு
போராற்றி ஊர்காக்கும்
சீரமைப்பணி சிந்தித்தபடி
வீரவாகு வாரணப்படை
வலிதாண்டி வாய்நுழைந்தான் . 419.
பொருள்
அரக்கர்களை அழிக்கவே போர்ப்பிரகடனம் செய்ய இருக்கும்
முருகக்கடவுளின் உலகு காக்கும் பணிபற்றி எண்ணியபடியே
தன்னைத்தேடி அலையும் படைகளைத் தாண்டிக் குறிப்பாக யானைப்
படையைத் தாண்டி யாரும் அறியாவண்ணம் அரண்மனை வாயிலினுள்
நுழைந்தான்.
கயமுகவரக்கன்
வந்துவிட்டான் வந்துவிட்டான்
வரவேற்புப் பெருங்கூச்சல்;
விந்தையுரு வாரணமுகம்
வியன்கரம்சதம் உயர்பனைப்புயம். 420.
பொருள்
வந்துவிட்டார்; நம் தலைவர் வந்துவிட்டார் என்று தலைவரை
வரவேற்கும் பெருங்கூச்சல்.வந்த உருவம் விந்தையாகக் காட்சி
அளித்தது.யானையின் முகமும் ,பனைமரம்போல் நீண்டுயர்ந்த நூறு
கைகளும் கொண்டிருந்தது.
சூழ்ந்த படை
அரசுப்படை, உரசுமடை ,
முரசுநடை , முகில்கரும்படை
புரவிவீரர் விரவிநிற்க,
விரைந்தாடினார் வீரவாகு. 421.
பொருள்
சூர அரசுப்படை, உரசிச்செல்லும் மடை நீர் வேகம்போன்றபடை ,
முரசின் ஒலிக்கேற்ப அணிவகுக்கும் படை, முகிலைப்போன்று
கருமுடலில் கருப்பாடை அணிந்தபடை களெல்லாமும், குதிரைப்படை
வீரர்களும் தன்னைச் சுற்றிநிற்பதை உணர்ந்த வீரவாகு ,விரவாகச்
சுழற்றினார் வீரவாளை .
வீரபலி
வேலவனின் மாக்கருணை
வீரர்படை வெந்தழிந்தது ;
காலன்போல் களமெல்லாம்
கணநேரம் பிணமாக்கினார். 422.
பொருள்
வாளைச்சுழற்றிய வீரரின் வீரத்தோடு வேலவன் அருளும் கூடிட
அரக்கர் கூட்டம் அழிந்து விழுந்தது.அக்களத்தில் காலன்போலவே நின்று,
நொடிக்குள் அனைவரையும் வீழ்த்தினார்.
யானைமுகன் மடிதல்
நூறுகைப் பேறுற்றோன்
ஆறுநடு அகப்பட்ட
சீறுபுலிபோல் வீரவேலுள்
மாறுற்றே மடிந்தனன் . 423.
பொருள்
நூறுகைகளைப் பெற்றவனாகிய யானைமுகன் பேராற்றின்
வெள்ளத்தில் சிக்குண்டு,நடுவில் அதுவும் மடுவில் மாட்டிக்கொண்ட
புலிபோல் வீரவாகுவின் வாளுக்கிடையில் பகைகொண்டு போராற்ற
வழியின்றி இறந்துபட்டான்.
தக்கன் வேள்விப்பலன்
வழியெல்லாம் வழிந்தோடும்
விழிவெள்ள வழிதேவர் ;
பழியெல்லாம் தக்கவேள்வி ;
பழிசெய்தோர் பலன்காண்பரே. 424.
பொருள்
வீரர்களை வெருட்டிய வீரவாகு, சூரமன்னனின் பேரவை நோக்கிப்
புறப்பட்டார். வழியெல்லாம் வாடிவதங்கிய முகத்தோடும், அழுத
கண்ணீரோடும் நிற்கும் தேவகூட்டங்களைக் கண்டார். மனதில் இரக்கம்
பிறந்தது.ஆயினும் தக்கனது வேள்வியில் சிவபெருமானை அழைக்காத
அவ்வேள்வியிலே திருமால்,பிரமன் இந்திரன் முதலாய தேவர்கள்
அனைவரும் கலந்துகொண்டும்,அவிர்பாகங்களை ஆண்டவனுக்கு
அளிக்காதபொழுது தாங்கள் பெற்றுக்கொண்டதும் சிவபராதம் அன்றோ!
அக்குற்றத்திற்கு இன்று அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்; இன்றும்
அவர்களைக் காக்கப்போவது சிவரூபமாகிய குமரன் அல்லவா!என்று
நினைத்தபடியே நடந்தார் வீரர்.
சூரன் பேரவையில்
சூரனது பேரவைக்குள்
வீரவாகு தீரனாக
வீரர்களை வெட்டிவீழ்த்தி,
வீரபத்திரர் போனுழைந்தார் . 425.
பொருள்
காவல்மிக்கதாகிய சூரனது பேரவைக்குள் (ஆஸ்தானமண்டபத்துள்)
எதிர்த்த வீரர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியபடி வலிமிகு வீரனாகத்
தக்கனது வேள்வியைத் தடுக்கவந்த வீரபத்திரர் போன்று நுழைந்தார்.
சூரன் சினம்
தருமகோபன் தவித்தோடக்
கருமவீரர் கவிழ்ந்துநிற்க
உறுமும்குரல் உயர்ந்தொலிக்க,
"வருமரண வாயிலுக்கு ..... 426.
பொருள்
தடுக்க இயலாத ஒருவன் பேரவைக்குள், மாமன்னன்
வீற்றிருக்கையில் வந்து நுழைந்ததும்,திடுக்கிட்ட அமைச்சர் தருமகோபன்
என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தான். காவல் வீரர்கள் காணாதது
போல் தலை கவிழ்ந்து நின்றனர். இந்தநிலையில் உறுமும் குரல் ஒன்று
மரண வாயிலுக்கு வந்தவனே! வா 'என்று கர்ஜித்தது .
யார் நீ?
அழைக்காமல் வந்தவனே !
பிழைக்காத தேவவாரிசோ ?
மழையானோ ? மலரானோ?
மகேந்திரனோ ? மற்றுயார் நீ ? 427.
பொருள்
மரண வாயிலுக்கு அழைக்காமல் வந்தவனே! நீ பிழைக்கத்
தெரியாமல் சாவு நோக்கி உள் நுழைந்துவிட்ட இளம் தேவனோ?
கார்மேக வண்ணனோ? நான்முகனோ ? இந்திரனோ? யாரடா நீ ?என்று
சூரன் கத்தினான்.
வந்தவழியே சென்றிடு
வந்தவழியே முந்திவிடு !
வந்தசிறு வழிதருவேன்;
எந்தனடி பற்றிடுவாய் !
உந்தன்மனம் உயர்ந்ததென்பேன் . 428.
பொருள்
எப்படி வந்தாயோ அப்படியே திரும்பிவிடு !நீ வந்த சிற்றிடம்
உனக்கு நான் தருவேன்;வந்த நீ வளம் பெற்றிட என்கால்களில் விழுந்து
வணங்கிடு !உன்னை உயர்ந்த மனம் உடையவன் என்று பாராட்டுகிறேன்
ஏளனத்தோடு சொன்னான் சூரமன்னன் .
சீரிருக்கை
ஏளனத்து வாளரக்கன்
இடிபோலக் கடிந்துரைக்கச்
சீலமதைக் காத்திடவே,
சீரிருக்கை செம்மலருள் ..... 429.
பொருள்
ஏளனத்துடன் கொடுமை வாய்ந்த அவ்வரக்கன் இடிபோலக் கடிந்த
உரையைக்கூற, அமைதி,அறம் காத்தல் தூது தர்மம் 'என மனத்துள்
கொண்ட வீரவாகு,முருகன் சார்பாகத் தூது பேசிவந்த நாம் அரக்கன் முன்
நின்றபடிப் பேசுதல் இழுக்காகும், என ,நினைந்து முருகனை வேண்டினான் .
தூதுச்செய்தி
பெற்றமர்ந்து, நற்றவம்போல்
கற்றார்போல் கவிமொழிபோல்
உற்றவரே ! உகத்தீரே !
பற்றில்லான் பற்றுற்றவன் ...... 430.
பொருள்
வேலவன் பேரருளால் நல்லிருக்கை பெற்று,அதில் அமர்ந்த வாகு
நற்றவத்தின் நற்பயன்போலவும்,கற்ற சான்றோருடைய அறமொழி
போலவும், நல்ல கவிஞனின் கவிதை மேன்மை போலவும்
பேசத்தொடங்கினான். உறவினர்களே! அண்டமா கோளங்களிலும்
வசிப்பவர்களே ! பற்றில்லாதவனைப் பற்றிவாழும் அடியேன் .......
தூதுச்செய்தி
வீரவாகு எந்தன் பெயர்
சூரமன்னன் செய்கையால்
சோர்வுற்ற தேவர்க்கே
சார்வுற்ற சிவகுமரன் ,, 431.
பொருள்
எனது பெயர் வீரவாகு. சூரமன்னனின் அடாத செய்கையால் துன்புற்ற
தேவர்களின் துயர் நீக்க முடிவு செய்து அவர்களுக்குத் துணையானார்
சிவகுமாரக்கடவுள்.
தொடர்ச்சி
செய்திதாங்கித் தூதுவந்த
செயவெற்றி வீரன்நான் ;
செய்திகேட்டுச் செகம்வாழச்
செயல்செய்வீர் பெரியீரே ! 432.
பொருள்
சிவகுமாரனின் செய்தியைத் தாங்கிக்கொண்டு, தூது வந்த வெற்றி
வீரன் நான். தூதினைக் கேட்டு இவ்வுலகம் வாழுமாறு நல்லசெயல்
புரிந்திட வேண்டுகிறேன்.
சூரனின் சீற்றம்
சின்னபிள்ளை என்னதெரியும் ?
அன்னைமடி புன்னைமரம்
குன்றுகுட்டை மன்றுமாயம்
நன்றிந்த தென்றல்தளிர். 433.
பொருள்
சூரன் ஏளனமாக அந்தப்பிள்ளை சின்னபிள்ளை ;அதற்கு என்ன
தெரியும்? அன்னையின் மடியிலே படுத்துறங்கும்! புன்னைமரநிழலில்
மாடுமேய்க்கும்;குன்று இருக்கும் இடங்களிலும் ,புண்ணிய நீர்
நிலைகளிலும் அமர்ந்திருக்கும்; மன்றங்களில் தமிழ் கேட்கும்;
இந்த தென்றலின் தளிரான குழந்தை நன்று நன்று என்று சிரித்தான் .
தூதுவிடும் வேதவனோ?
தூதுகேட்கத் தாழ்ந்தவனோ?
போதுமிதைப் போக்கிடு!செல்!
காதுகொடேன் தூதுவனே ! 434.
பொருள்
சூரனுக்குத் தூதுவிடும் அளவிற்கு,அவன் உயர்ந்த பிரம்மதேவனோ?
இந்த சூரன் இத்தூது கேட்கும் அளவு தாழ்ந்தவனோ?போதும்
உன்பிதற்றல் ;வெளியே போய்விடு !இதைக் கேட்க எனக்கு நேரமில்லை;
தூதுவனே ! என்று சீறினான் .
சூரனின் கர்வம்
வந்தனை வரம்பின்றி ;
அமர்ந்தனை அச்சமின்றி;
வந்துவேந்தனை வணங்கவில்லை;
வந்தநோக்கம் வளமில்லை. 435.
பொருள்
அவைக்குள் வந்தாய் ;மரியாதையின்றி மன்னன் முன் அமர்ந்தாய்;
மாமன்னனை வணங்கவில்லை; வந்ததின் நோக்கமும் சரியானதாக
இல்லை .
சினந்தனன் சினவேந்தன்
செந்தழலாய்ச் செம்முகமாய்
எந்தமடி பணிந்திட்டே
வந்தபணி வாய்திறந்தே
இயம்பிடுக அயலவனே! 436.
பொருள்
நெருப்புபோல் எரிகின்ற முகத்தோடு முதலில் என்னை வந்து
வணங்கு! அதன்பின்னர் நீ வந்த நோக்கத்தைக் கூறு. என்று கடிந்தான் சூரன்.
தூதன் உரை
வடிவேலை மனத்துள்ளே
வடிவமைத்து, வாய்திறந்தான்.
விடிவாழ்வு விண்ணவர்க்கு,
வடிவாக்கவே இந்ததூது . 437.
பொருள்
எம்பெருமான் முருகன் திருவடிகளை மனத்தில் போற்றிட்டான்;
வாய்திறந்து பேசத் தொடங்கினான்.விடிவு காணாது தவிக்கும்
விண்ணவர்க்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தலே இத்தூதின் நோக்கம்.
முறையாக்க வந்தவன்
மறைமறந்தான் ; குறைநிறைந்தான்;
சிறையிட்ட செயல்மறந்தான்;
முறைமாறிய மன்னவனை
முறையாக்க வந்ததூதன் . 438.
பொருள்
வரபலத்தால் நாடாளத் தொடங்கிய சூரமன்னன் வேதங்களை மறந்தான்;
ஆணவம்,அடக்குமுறை போன்ற குறைகள் கொண்டு வாழ்கிறான்;
தேவர்களைச் சிறையிட்டதையே மறந்துவிட்டான்; நன்முறை மாறிய
மன்னனை நன்முறைக்கு மாற்றவந்தவன் இந்தத்தூதன் "என்றான் வாகு .
தூதுணர்க
தொன்மைவழித் தூயனான
தேவமுருகன் விடுதூது
தொன்மைநெறி போற்றிடுக.
தேவர்சிறை நீக்கிடுக. 439.
பொருள்
சிவபெருமானின் வழித்தோன்றலாகிய தூய முருகன் விடுக்கும்
தூது இது .தொன்மை வாய்ந்த வேதநெறி போற்றுக . சிறையில் வாடும்
தேவர்களை உடனே விடுவிக்க' என்பதே ஆகும் .
கொதித்தெழுசூரன்
கொதித்தெழுந்த கொடூரசூரன்
கொக்கரித்தான் சிரிப்பினாலே .
மதிகெட்ட மானிடன்போல்
மமதைவழி பேசுகின்றாய்! 440.
பொருள்
கொடுமை மிக்க சூரமன்னன் கொதித்தெழுந்தான்.கொக்கரிப்புச்
சிரிப்பு சிரித்தான். அறிவற்ற அழிமானிடன்போல ஆணவத்தோடு
பேசுகின்றாய்!
தரணியறியும்
சாவாவரம் நோவாவுடல்,
சாசுவதமாய்ச் சங்கரனார்,
தேவாசுரத் திறல்தலைவர்
தந்ததனைத் தரணியறியும். 441.
பொருள்
இறப்பேயில்லாத வாழ்வு,நோயேபற்றாத உடல், நிலைத்த அழியாத
வாழ்வைத் தேவாசுரர்களின் தலைவரும் உலகமாக்கடவுளும் ஆகிய
சிவபெருமான் அருளியதை மூவேழ் உலகங்களும் அறியும்.
சூரப்பெருமை
அண்டகோள்களை ஆள்பவனும்,
இந்த்ரஜாலத் தேரோனும்,
புண்டரிக நயனத்தான்
பிரமனுடன் வணங்குபவனும், 442.
பொருள்
என் பெருமை அறியாயோ நீ.அண்டகோள்கள் ஆள்பவன்
இந்திரஜாலத்தேர் உடையவன்;பிரமனாலும் திருமாலாலும்
வணங்கப்படுபவன் என்பதை உணர்.
பரமனவன் பக்தியடிமை;
பானுவையே வென்றமகன் ;
அரிச்சக்கரத் தம்பிதாரகன்;
உரச்சிங்கன் உணராய் நீ. 443
பொருள்
சிவனாரின் சீரிய அடிமை; பானுவை வென்றவன் என்மகன்.
திருமாலின் சக்கரத்தைப் பறித்துத் மார்பில் அணிந்துகொண்ட தம்பி
தாரகன்;வலிமை மிக்க தம்பி சிங்கமுகன்; இப்பெருமை அறியாயோ நீ .
ஏன் வாய்வீரம்?
தந்தையும் தலைமாமனும்
பிரமனுமே தள்ளிநிற்கக்
கந்தனென்னும் குழந்தைக்கு
வந்ததோ? வாய்வீரம்! 444.
பொருள்
சிவனாரும்,திருமாலும்,பிரமனும் காணாது நிற்க ,இந்தக்
கந்தக்குழந்தைக்கு இவ்வாய் வீரம் தேவைதானா?
சிறுவனன்றோ
அறுதாயர் முலையுண்ட
சிறுவனன்றோ சிவமகன் ;
பெருஞ்சூரன் பெருமைதான்
அறியாதே அரற்றுகின்றான். 445.
பொருள்
கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் உண்டு வளர்ந்த சிறு
குழந்தை சிவமகன் ஆவான்.சூரன்பெருமையெல்லாம் அறிந்திருக்க
மாட்டான்;அதனால் இப்படிப்பேசுகிறான்.
திரும்பிடாது போ
சிறுவனுக்கோ ஒருதூதன்!
சிறுவதூத! சென்றோடு!
வருவார்பலர் வதைத்திடவே;
திரும்பிடாது தெருவில்நட! 446.
பொருள்
அச்சிறுவனுக்குத் தூதன் வேறா?சிறுவனின் தூதனே !இவ்விடத்தை
விட்டோடு ;வீரர் பலர் வருவார் உண்ணஉத்தண்டிக்க. திரும்பிப்பாராது ஓடு !
வாகுவின் பதில்
இறுமாப்புடன் இகழ்ந்தெண்ணி,
இறைப்பெருமை குறைத்தெண்ணி ,
நறுங்குணத்து நாயகனின்
பெருங்குணம் அறியாதோய்! 447.
பொருள்
அப்பேச்சைக்கேட்ட ,வீரவாகு இறுமாப்பினால் இறைவன் பெருமையைக்
குறைத்தும்,இகழ்ந்தும் பேசியவனே !பெருங்குணம் கொண்ட பெருமானின்
பெருமை அறியாத சூரமன்ன !கேள்.
தாரகன் மடிந்தது
கற்பூர வாசனையைக்
கழுதைகள் அறிந்திடுமோ?
கிரௌஞ்சமலைத் தாரகனும்
சிரஞ்சிவி மடிந்தனனால்..... 448.
பொருள்
நறுமணம் தாங்கிய கற்பூர நறுமணத்தைக் கழுதைகள் உணருமோ?
உன்தம்பி தாரகன் சிரஞ்சிவியல்லவா? அவனது மலை ;அதுவும் சேர்ந்து
அழிந்தது எப்படி? உணர்வாய்!
செஞ்சிவச்சுடர்
சிறுவனென்ற சீர்த்திறனால்
சிறுமையுறு சீரழிவும்,
சிறுவனாலே என்பதையுணர்!
செஞ்சிவச்சுடர் சிறுவனாகும் . 449.
பொருள்
சிறுவன் என்று குறைவுற்ற மதிப்பீடு செய்யும் நீ சிறுமையுற்றுச்
சீரழிவு பெறப்போவதும் அச்சிறுவனாலே என்பதை உணர்வாய்!
சிவபெருமானின் நெற்றிப்பொறியே சிறுவனான குமரன் என்பதும்
நீ அறியாததோ ?
தூதாக வந்ததால் பிழைத்தாய்
அரக்கவம்சம் அழியுநேரம்
அரக்கக்குணம் காட்டுகின்றாய்:
இரக்கமனமும் எழில் தூதும்
அரக்கனுனைக் காத்துநின்றது. 450.
பொருள்
அரக்கவம்சம் விரைவில் அழியப்போகிறது. அந்த நேரத்தில்
அரக்க,குணத்தைக் காட்டுகிறாய்;என்னிடம் உள்ள இரக்கமனமும் ,
தூதனாக வந்ததால் போரெடுத்தலும் என்னை நீங்கியதால் நீ உயிர்
பிழைத்தாய் .
இறுதியாக
சிறைத்தேவர் விடுவித்தல் ,
செம்மறை வழிநிற்றல்,
கறைக்கண்டன் கார்வரத்தைக்
கண்ணியமாய்ப் போற்றிவாழ்தல் ,,, 451.
பொருள்
இறுதியாக நான் கூறுவதைக் கடைப்பிடி.தேவர்களைச் சிறையிலிருந்து
உடன் விடுவித்தல் ,வேதவழி நிற்றல் இரண்டையும் உடனடியாக
நிறைவேற்று. எல்லாவற்றிற்கும் மேலாக எம்பெருமான் கொடுத்த
வரங்களை நேர்மையான முறையில் பயன்படுத்து.
வேலுக்கிரை
கொள்கையாய்க் கொண்டுவாழ்க ;
கொள்ளாது குறைதேடின்
வள்ளலவன் வேலுக்கிரை ;
உள்ளசுகம் உடனகலும் . 452.
பொருள்
கூறியவற்றைக் கொள்கையாகக்கொண்டு வாழ்வாய்.ஏற்காமல்
வாழ்வேயானால் முருகனின் வேல் உன்னை வீழ்த்தும் .இப்பொழுது
அனுபவிக்கும் போகபோக்கியங்கள் உன்னைவிட்டு அகன்றிடும்.
சூரனது கோபம்
என்றவனை எரிகண்ணால்
எரித்திடும் பார்வையால்
கொன்றுன்னைக் கொளுத்திடுவேன்,
கொடுங்கோபம் பற்றவைத்தான் . 453.
பொருள்
என்று கூறிய வீரவாகுவை நெருப்புப்பொறி பறக்கும் கண்ணால்
எரிந்து சாம்பலாகி விடும் பார்வையால் பார்த்தான்.கொன்று உன்னைக்
கொளுத்திவிடுவேன்' என்னுமாப்போல சினப்பார்வையை வீசிப்
பற்றவும் வைத்தான் சூரன்.
வீரர்களுக்கு ஆணை
வென்றிமிக்க வீரர்களே!
வீணனை வீழ்த்திடுங்கள்!
அன்றுஅன்று அறத்தூதனை
அடைத்திடுக அவலச்சிறை! 454.
பொருள்
மகேந்திரபுரி வெற்றி வீரர்களே! வீணன் வீரவாகுவை
வீழ்த்திடுங்கள்! இல்லை! !இல்லை அத்தூதனை அவலச்சிறையில்
அடைக்க முயலுங்கள்! விட்டுவிடாதீர்கள்! என்று சூரன் ஆணையிட்டான்.
வீரர்களும் வீரவாகுவும்
சூரவீரர் சுற்றிவந்தே,
ஈரமில்லா விடரளிக்க,
வீரவாகு விரைந்தெதிர்த்துப்
போரிட்டார் பேரவைக்குள். 455.
பொருள்
மன்னனது ஆணைக்கிணங்க வீரர்கள் வீரவாகுவைச் சுற்றிவளைத்தனர்.
ஈரநெஞ்சமற்ற அவ்வீரர்களோடு பேரவைக்குள்ளே போரிட்டார்.
வீரர்களது அவலம்
வளைத்தோர் பலர் வடிவிழந்தனர்;
நிலைத்தோர்சிலர் நிலம்படிந்தனர்;
தலைத்தசமுகன் சதமுகனும்
விலைமதிப்பிலா உயிரிழந்தனர். 456.
பொருள்
வீரவாகுவைச் சுற்றி வளைத்த வீரர்கள் பலர் வடிவிழந்துயிர் துறந்தனர்;
நிலைத்துநின்று போரிட்டவர்சிலர் மண்ணில் புதைந்து உயிர் விட்டனர்;
படைத்தலைமை வகித்த தசமுகனும்,சதமுகனும் பேருயிரை இழந்தனர்.
ஊரெரிதல்
பேருருவம் பெற்றவாகு
ஊரெல்லாம் எரித்தனரே ;
காருருவச் சூரமகன்
ஊருக்குள் உறைந்துபோனான். 457;
பொருள்
முருகன் அருளால் பேருருவம் பெற்ற வீரவாகு மகேந்திரபுரி
நகரையே எரித்தார்.அந்தப்போரில் சூரனின் மகன் வச்சிரவாகு என்பவன்
இறந்துபோனான்.
செந்திப்பதி
செருக்கினை அழித்தவாகு
செந்திப்பதி சென்றிட்டே
தருக்குடையோன் நிலைசொல்லித்
தலத்தினில் வணங்கிநின்றார். 458.
பொருள்
மகேந்திராபுரியை எரித்து அழித்து,சூரன் செருக்கினை அழித்த
வீரவாகு செந்திப்பதி சென்றார். சூரனின் நிலையை முருகனிடம்
விளக்கி எடுத்துரைத்தார்.அப்படியே நிலமுற விழுந்து வணங்கி
நின்றார்.
முருகன் அறிவித்தல்
நம்சொல்லைக் கேட்காத
சூரனோடு நாளைபோர்
செந்தேவர் சிறைவிடாதவன்
செவ்வேலுக் கிரையாவான். 459.
பொருள்
நாம் அனுப்பிய தூதினை ஏற்காத சூரபன்மனோடு நாளை போர்.
நமது தேவர்களைச் சிறையிலிருந்து வெளிவிடாதவன் எமது வேலுக்கு
இரையாவான். என்று முருகன் அறிவித்தார்.
சூரன் ஆலோசனை
ஒற்றர்வழி செற்றமறி
குற்றநிலை முற்றுசூரன்
உற்றவரைக் கற்றவரைப்
பற்றிவழி கேட்கின்றான். 460.
பொருள்
ஒற்றர்கள் வாயிலாக முருகன் படை எடுக்க இருப்பதை அறிந்த சூரன்
தனது தாழ்நிலை, தனது உயரிய நிலை, இவைகள் பற்றியும் போர்
எதிர் கொள்ளும் நிலை பற்றியும் உற்றவர்களையும் கற்றவர்களையும்
அணுகி வழி கேட்கின்றான்.
வழி காட்டுக
தூதுபட்ட துயர்கூறி ,
மூதூரின் அழிவுகூறித்
தூதுரைத்த செய்திகூறி,
யாதுசெய்வன் ? கூறிடுக . 461.
பொருள்
தூதாக வந்தவன் இழைத்த துயர்கள் கூறி, அவனே தொன்மை
மகேந்திரபுரியை அழித்த அழிவும் கூறி, தூதுச்செய்தியும் கூறி,
இந்நிலையில் தான் ஆற்றவேண்டிய செயல்களைக் கூறுங்கள் எனவும
அறிவிப்பு குறித்தும் கேட்டான்.சூரமன்னன்.
அமைச்சர் மேதி
இறைமகனோ! குறைமகனோ!
பகைமகனவன் சகிப்புவேண்டா;
நிறைபடைபலம் நிறையுடைநாம் .
பறைசாற்றுவோம் படையெடுப்பை . 462.
பொருள்
அமைச்சர் மேதி வணங்கிச்சொன்னான் ," இறைவன் மகனாகட்டும்;
குறைவீரனாகட்டும் ; நமக்கு அவன் பகைவனே ;யாருக்காகவும்
பொறுத்துப் போகவேண்டாம்;படைபலத்தில் நிறைந்துள்ள நாம்
படையெடுப்பதாகப் பறைசாற்றுவோம்" என்றான்.
மற்ற பலர்
துர்க்குணன், தருமகோபன்
துர்ஜித்து, பானுகோபன்
துர்க்குணத்தார் தேவமாக்கள்
தொலைத்திடுவோம் படையெடுத்தே . 463.
பொருள்
அரக்கர்கள் மீது தீய எண்ணம்கொண்ட தேவப்பதர்களை அழித்திட
நாம் போர் தொடுப்போம் ' என்று துர்க்குணன். தருமகோபன் ,காலஜித்து,
பானுகோபன் போன்றோர் கூறினர் .
சிங்கமுகன்
பலருமே பலப்பலவாய்ப்
பலனின்றிக் கூறியபின்
பலம்மிக்க உடன்பிறப்பு
நலம்காக்க நாவுரைத்தது. 464.
பொருள்
பலனற்ற பேச்சுக்களைப் பலரும் பேசியபின் சூரனின் இளவல்
சிங்கமுகன் அண்ணனின் நலத்தில் அக்கறை கொண்டு பேசலுற்றான்.
தஞ்சம் சிவமகன்
வெஞ்சிறையில் வெந்துவாடி ,
அஞ்சியஞ்சி நெஞ்சுயிர்த்து த்
தஞ்சமெனச் செஞ்சிவமகன்
கஞ்சமலர்க் கால்பற்றினர். 465.
பொருள்
சிங்கமுகன், பாவம்! வெஞ்சிறையில் அளவிறந்த துன்பங்களை
அனுபவித்தும்,தீயவர்களைக் கண்டு அஞ்சிநடுங்கியும் , நெஞ்சம்
தவித்துத் தம்மைக் காக்கும் கடவுள் முருகனே என் அவரைத்தஞ்சம்
அடைந்தனர். என்று .சொன்னான் .
சிவவசனம்
சிவவரத்தால் சீர்பெற்றநீ
சிவவசனம் மறந்துவிட்டாய்!
சிவவராயுள் நூற்றெட்டுத்
தவயுகமும், அவமானது. 466.
பொருள்
சிவபெருமான் தந்தருளிய வரங்களால் மேன்மையுற்ற நீ முடிவில்
அவர் அருளிய சொற்களை மறந்துவிட்டாய்! அதாவது உன் வயது
நூற்றெட்டு யுகங்களே ஆகும் என்றார் சிவனார். அவைகளும் மறைந்து
-விட்டன.என்றும் சிங்கமுகன் சொன்னான் .
சிங்கமுகன் அறிவுரை
குகன்வழிநட ! குறைசிறைமறை !
குலவழியுயர் !