திங்கள், 14 ஆகஸ்ட், 2023

முன்னுரை

                                                     முன்னுரை 


         எல்லாம்   வல்ல  எம்பெருமான்    திருவருள்    அருளினாலே   அவனது 

பெருமையைப்   புகழை,  அருள்  திறத்தை,  இலக்கியமாக  வடிக்கும் , யான் 

பரணி"   பாடவேண்டும்  என்ற  எண்ணம்   கொண்டிருந்தேன். உடல்நிலை 

காரணமாக, அப்பணி   தடைப்பட்டது. இந்நிலையில்   "  அவனருளாலே  அவன் 

தாள்   வணங்கி"  என்னும்  மணிவாசகப்   பொன்மொழிக்கு   ஏற்ப, ஞான மலை 

ஞானபண்டிதஸ்வாமியின்  ஞான   தீக்கையால்,  அக்கோயில்   அன்பர்கள் 

வாயிலாக   ஞானமலை  அலங்காரம்"  என்னும்   இந்நூல்   படைக்கும்  பேராவல் 

என் மனத்தகத்தே   புகுந்தது. பல்லாண்டு   காலமாக   அம்மலை   முருகனைப் 

போற்றிவந்த   எனக்கு, இவ்வலங்கார   நூல்  படைத்துப்   போற்றுவதற்கு 

முருகன்   அருளிய  இவ்வருள்   அடியேனைத்    தன்வயப்   படுத்திக்  கொண்டது.

எப்பொழுதும்போல்   இவ்வாண்டு(2023)   "ஈசன்   எந்தை  இணையடி    நீழல்"  

அருளிய  அலங்காரம்   உருவெடுத்தது.

               கந்தர்  அலங்காரம்  பாடிய  அருணகிரி  நாதரும், கந்தபுராணம்  பாடிய 

கச்சியப்ப சிவாசார்யாரும்,  ஆற்றுப்படை   பாடிய   நக்கீரப்பெருமானும்,

கந்தர் கலிவெண்பா   பாடிய ,குமரகுருபரரும்,  நால்வர்   நற்றமிழும்,

பன்னிரு  திருமுறைகளும்   செந்தமிழால்  போற்றிப்   பரவசம்  அடைந்த 

ஞானமா  நூல்கள்  முன்னர்,  இந்நூல்  ஆதவ   ஒளியின்முன்  அகல்விளக்கே 

ஆகும். ஆயினும்   அருமுருகன்   ஆன்ற புகழ்    என்ற  அருஞ்சுடர்  இந்நூலையும் 

பிரகாசிக்க  வைக்கும். அந்த  மாபெரும்   சான்றோர்களின்  அருங்கருத்தையே 

இந்நூல்    தனது   மையமாகக்   கொண்டே  பாடப்பட்டுள்ளது,  என்பதாலும் 

இந்நூல்  முருகன்   சேவடி  தொட்டுப்  பயன்  பெறும்   என்ற  பணிவோடு,

அந்த  மாபெரும்  ஞான  ஆசான்களை   மனத்திலே  நிறுத்தி,  வணங்கிப்

போற்றி  இந்நூலைப்  படைக்கின்றேன்.

      அலங்காரம்"   என்ற   சொல்லைத்   தமிழில்  "அணி"  என்பர்.

அலங்காரம்   தமிழில்  பெரிதும்   வழங்கப்பட்டாலும், இது  தத்பவ  வடசொல் 

ஆகும். மாறுபட்ட  கருத்து  இருந்தால்  மன்னிக்கவும். தண்டியாசிரியர் 

அணியிலக்கணத்தை   வகுக்கும்   பொழுது, அலங்காரம்  என்பதே   அணி 

ஆம்,  என்கிறார். அதன்  வகைகளை, விரிவுகளை   விளக்குபவர்  அணியின் 

இலக்கணமாக  விரிவு   காட்டவில்லை.  அணியே   அலங்காரம்  என்று 

வழங்கப்பட்டுப்   பயன்பாட்டில்    உள்ளபோதும், செய்யுள்  அணிகள் 

விளக்கப்பட்ட   போதும், அலங்காரம்   என்னும்  சொல்லிற்குப்   

பெரிதான விளக்கம்   அளிக்கப்பட வில்லை.

    "காவ்யா  தர்சம் "  என்ற  வடமொழி   நூலானது   இதனை   விரிவாக 

விளக்கிய  போதும், "கந்தர் அலங்காரம்"வேல் அலங்காரம்" போன்ற 

இலக்கிய நூல்களுக்கு  அவ்வலங்கார  விளக்கம்  போதவில்லை.

அரசன்   அல்லது அரசி   அணியும்   அலங்கார  நகைகள்,அணிகள்,ஆடைகள் 

போன்றவற்றின்  அழகு பற்றி,  அமைப்பு  பற்றி   அவை   விவரிக்கின்றன.

   நூல்களில்  வரும்  சொல்லணிகள்  பற்றி   விரிவாகத்    தருகின்றன.

ஆயினும்  அலம்  = அழகு,ஆபரணம்,  சுவை, என்று  பற்பல  பொருளைக் 

கொண்டு, அவைகளால்   மேலும்   அழகூட்டப்பட்ட  ஒன்று"  எனக்கொள்வோம்.

அவ்வளவில்   ஞானமலை  என்ற  மலையில்  வீற்றிருக்கும்   முருகனின் 

அழகை,அருளை, அன்பை, ஆழ்ந்த  புலமையை, வருணிப்பது"  எனக் 

கொள்வோம். மலையும்   அழகு;முருகனும்   அழகு; ஞானமே   முருக  வடிவம்;

முருகே (அழகு)  மலையின்  தோற்றம் ;  என்று  கொண்டு, ஞானமலையின் 

அழகும்,வளமும், அம்மலையில்   வீற்றிருக்கும்   முருகனின்   புகழும்,

கருணையும், விளக்கப்படுவதே  இந்நூலின்  நோக்கமாகும்.



          ஞானமலை   அலங்காரம்,  என்னும்   இந்நூல்  ஞானமலையின்  அழகை,

அருங்காட்சிகளைப்  பெருமையை  எடுத்துரைக்க  உருவானதாக மட்டும் 

கொள்ளக்கூடாது,  மலை"   முதலாகுபெயராய்,  மலையில்   வீற்றிருக்கும் 

முருகனைக்  குறிக்கிறது, முருகன்   புகழ்  பாடும்   நூல்   இது. மலை  

வருணனை,  மலையின்  தோற்றம் ,  அருவி,செடிகொடிகள் , விலங்கு,

பறவையினம். போன்ற   இயற்கை  வருணனைகளும், முருகன்   புகழை,

முருகன்  வரலாற்றை,  புராணத்தை, அருளைக்   கருணையை  விரித்து,

உரைக்கவே  பயன்படும். 

   "காதினிய  கீதமே!  காட்டுமலர்க்காதலே!

              கார்க்களிற்றுக்  குளிர்வே!

   தீதினிய   சேவலே!   மீதமர்  மயிலே!   (41)

என்ற  பாடலில்   இனிய  கீதம் "  என்பது   முருகன்  பெயர்  போற்றும் 

ஒலியாகவும்,  காட்டுமலர்"  என்பது   வள்ளியாகவும்,  கார்க்களிறு"

என்பது   தேவயானையாகவும்  பயன்படுத்தப் பட்டுள்ளது.

  "கானமலை   கான மலை; கவின்மேகச்  சாரல்  மலை"(43)

கானகங்கள்  நிறைந்தமலை; காற்று   இசையாய்  வீசும்  மலை;

அழகிய  மேகச்சாரலிலே   பறவைகள்  நிறைந்து  விளங்கும்  மலை"

என்ற  இடத்திலும்  இயற்கை  விரிந்து  கிடக்கிறது.

"  மாமரம்   பட்டது"  எனும்  48  ஆம்  பாடல்   முழுவதும்,இயற்கை 

மாமரத்து   வழியே  வரலாறு,தத்துவம்   விளக்குதலைச்   சான்றாகக் 

கொள்ளலாம்.

      வரலாற்றுக்குறிப்புகள்  தலப்பெருமை ,புராணச்செய்திகள்,

போன்ற  பலப்பல   ஆங்காங்கு  சுட்டியுள்ளேன்.

"செவ்வாய்   மலர்ந்ததால்  சிறந்தது  ஏரகம்" (47)

"மாதங்க   மகளுடனே மாமணம்   கண்டோனே:(52)

"தீந்தமிழ்த்     தவ்வைக்குச்   சுடாத தீங்கனியைத் 

                       தந்தருளிய   தமிழ்வேடா"(66)  சில   சான்றுகள்  இவை.

    தூயபாதம்"  என்னும்  57  ஆம்  பாடல்  சைவசமயச்  

 சான்றோர்களைப் போற்றுகிறது.

"  புகழ்   பாடி "  என்ற   63  ஆம்  பாடல்  பேறு  பெற்ற   முருகன் 

அடியார்களைப் போற்றுகிறது.

"அருள்தனை"   எனத்தொடங்கும்  59   ஆம்   பாடல்  பாதாதி  கேச  

வருணனையாக   அமைந்துள்ளது.

"நாவரசி    நாவிலே   நவின்றேத்தும்   நாவலன்"   என்ற  புராணச் 

செய்தியும்  இடம் பெறுகிறது.

  ஆண்டுதோறும்   அடியேனின்   பிறந்த  நாளன்று, முருகன் புகழ்  பாடும் 

நூல் இயற்றி வெளியிடல்,  ஒரு  சிவாசார்யார் , ஒரு  ஓதுவாமூர்த்திகள் 

போற்றுதல்  செய்தல்.   என்பதைக்  கடைப்பிடித்து  வரும்  அடியேன் 

இந்த  (2023)   ஆண்டும்  அந்தநிகழ்ச்சிக்காக, இந்தநூலை   இயற்றியுள்ளேன்.

இந்தநூல்   எழுவதற்கு  முழு முதல்  காரணம்   முருகனே.  துணைக்காரணமாக 

அமைந்தவர்   திருப்புகழ்  அமுதன் திரு  வலையப்பட்டி   கிருஷ்ணன்  அவர்கள் 

ஆகும். யதேச்சையாக  ஒருநாள்   ஞானமலைக்கு   ஒரு   அலங்காரம்   எழுதிக் '

கொடுங்களேன்!  என்கிறார்.   நானும்   சரி   என்று  ஏற்றுக்கொண்டேன்.

அந்நூலை  முடித்து  வெளியிட  அச்சகத்திற்கு   அனுப்பமுடிவு   செய்தபொழுது 

தான், இவ்வாண்டிற்கான   நூலை  நான்  இன்னும் முடிக்கவில்லையே! என 

சிந்தித்து,  பரணி"  நூலை  அடுத்த  ஆண்டு வெளியிடலாம். இவ்வாண்டு 

ஞானமலை  அலங்காரம்" என்ற  அரிய  நூலை வெளியிடுவோம்"  என 

முடிவுற்று  அச்சகத்திற்கு   அனுப்பிவிட்டு,  அதன்பின்   திரு.கிருஷ்ணன் 

அவர்களிடம்  செய்தியைச்  சொன்னேன்.  அவரும்  ஏற்றுக்கொண்டார்.

ஆக   இந்நூல்  வெளியாக  ஒருவகையில்  வழிகாட்டி  உதவி புரிந்த 

திரு,கிருஷ்ணன்   அவர்களுக்கு  நன்றி.

இந்த  நூலுக்கு, அணிந்துரை  எழுதிக்கொடுத்த  பேச்சாளர்,  எழுத்தாளர்,

இசைச்சொற்பொழிவாளர், நல்லாசிரியர். திரு,எம்.முத்துக்கிருஷ்ணன் 

எம்.ஏ.எம்.எட்   கிழக்கு  தாம்பரம்   அவர்களுக்கும்   என்  நன்றி.

  இந்நூல்   வெளியீட்டு விழாவின்   தலைமைப்   பொறுப்பு   ஏற்றும்,

சான்றோர்களைப்   பாராட்டிப்  பதக்கங்கள்  அளித்தும்  பேருதவி  புரிந்த 

அவைத்தலைவர்  தமிழ்ச்செம்மல், மதுரை  காமராசர்   பல்கலைக்  கழகத் 

தமிழியற்புலத்  தலைவர். இதழியலில்  புலமை கொண்டவர், யோகா 

பட்டயம்  பெற்றவர், முனைவர். திரு. போ.சத்தியமூர்த்தி, எம் ஏ  எம் ஏ 

(இதழியல்)    பிஎட் . பிஎச்டி  யோகா பட்டயம்.                                                  

அவர்களுக்கும்  என் நன்றி.

இந்நூலை   அழகுற அச்சிட்டு   வழங்கிய  திரு.அருண்  அவர்களுக்கும் 

நன்றி.

வழக்கம்போல்  பல்லாற்றானும்  எனது இவ்வரிய   பணியில்  பெரிதும் 

உதவும்  என்மகள்கள், எனது  மாப்பிள்ளைகள்,எனது   பேரன்,பேத்திகள் 

ஆகியோருக்கும்   நன்றி.

வழக்கம்போல்  இவ்விழா  நடைபெற  அழகுமிகு  பேரறை யும் ,               

வழங்கிய வி.பைவ்   ஹோட்டல் நிர்வாக  உறுப்பினர்  ஐவருக்கும் மற்ற 

அனைவருக்கும்   நன்றி.

"கூவிடும் குமர  நாமம் சேர்ப்பது  செஞ்சிறை"  என்னுமாப்போல 

என்றும் அம்முருகன்  சேவடிக்கு   நான்  ஆட்பட்டவன்.  முருகா  சரணம்.


                                                                                                                      இவண் 

                                                                                                     சுவாமி.சுப்பிரமணியன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக