ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

                                               முன்னுரை 

     எல்லாம்  வல்ல,   பரம்பொருள்   எம்பெருமான்   முருகன்  அருளினால்  அடியேன்   வெளியிடும், ஒன்பதாவது  நூல்,"திருப்பரங்குன்றத் திருவுலா"

என்னும் சிற்றிலக்கிய நூலாகும். இதுகாறும், "கன்னியாகுடி   என்ற   எனது 

கிராமக் கடவுளரையே  போற்றிவந்த  நான், முருகன் காட்டிய  வழிச்சுவடுகளால் 

மதுரையம் பதியிலே     நாற்பது ஆண்டுகள்   வாழ்ந்து,  செவ்வாய்க்கிழமை 

தோறும், திருப்பரங்குன்றம்  கண்டு, குன்றத்து முருகனைக்கண்டு  மகிழ்ந்த 

நான்,   அவனருள்படி,இவ்வுலா   நூலை  அம்முருகன்   புகழ்   பாடிப் 

படைக்கின்றேன்.

1.   உலா   ....

    சிற்றிலக்கிய  வகைகளிலே  உலா  ஒன்றாகும்.பாட்டுடைத் தலைவன்  

ஊர்வலம்  வருகின்ற   நிகழ்வைப்  பாராட்டி  வருணிப்பதே  உலாவின் 

அடிப்படையாகும்.

    "ஊரொடு   தோற்றமும்  உரித்து, என மொழிப ,வழக்கொடு 

      சிவணிய  வகைமையான்"

தொல்காப்பியரின்  புறத்திணை  இயல்  கூறும்   நூற்பா, உலா  இலக்கியம் 

தோன்றுவதற்கான  கரு   எனலாம்.  

ஆண்களின்   ஒழுக்கலாறுகள்   என்பவற்றுள் "  பெண்கள்   அவன் மீது 

கொள்ளும்   காதல் உணர்வும்   அடங்கும்"  என்பர்   ஆன்றோர்.

        இதுவே   வளர்ந்து  உலா இலக்கியம்  ஆக  உருவெடுத்தது.   பாட்டுடைத் 

தலைவனைப்  பல்வேறு  பருவ  வயதுப் பெண்கள்  உள்ளமார்ந்து  காதலிக்கும் 

அமைப்பாக   இது  உருவாயிற்று.

2.1.   உலா   இலக்கணம்.   

உலாவின்   இலக்கண  அமைப்பைப்  "பன்னிரு  பாட்டியல், வெண்பாப்

பாட்டியல்,  நவநீதப்பாட்டியல், பிரபந்தப்பாட்டியல்,  சிதம்பரப்ப்பாட்டியல் 

தொன்னூல் விளக்கம்,  முத்து வீரியம்,  பிரபந்த  தீபிகை, சுவாமிநாதம் 

போன்ற   பிற்காலப்பாட்டியல்   நூல்கள்  விரிவாக  விளக்குகின்றன.

          உலா   இலக்கியம்  இரண்டு  நிலைகளாகப் பிரிக்கப்படும்.

                 1.    முன்   எழு நிலை 

                 2.    பின்    எழுநிலை 

2. 2 .  முன் எழுநிலை ...

     பாடலின்  முதற்பகுதியில், அமைக்கவேண்டிய  ஏழு நிலைகள்.

அ .  பாட்டுடைத்தலைவனது  பெருமை, ஆட்சிச்சிறப்பு 

ஆ.  பண்பாடு, ஈகைச்சிறப்பு,

இ.   உலா  செல்ல   எழுதல்,

ஈ.   நீராடல்,

உ.  அணிகலன்கள்  அணிதல்,

ஊ.  ஊர்மக்களின், வேண்டுகோளும்,வரவேற்பும்,

ஏ.   வீதிகளில்  உலா   வருதல்,

2.  3.  பின் எழு நிலை 

உலா  வரும்போது  பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை, அரிவை , தெரிவை,

பேரிளம்பெண்  என்ற ஏழு  நிலையில்   ஏழு   பருவப்பெண்கள்  காதல் 

கொள்வதாகப்  பாடுவது.

2.   4..    பாட்டுடைத்தலைவன் 

உலா  இலக்கியத்தில்  பாட்டுடைத்தலைவர்களாக,

அ.  மன்னர்கள்,

ஆ. கடவுளர்கள் ,

இ . சான்றோர்கள், 

ஈ.  குழந்தைப்பருவத் தலைவர்க்கள் 

                           அல்லது 

இளமைப்பருவத்    தலைவர்கள்.

ஆகியவர்களில்   ஒருவரைப்   பாட்டுடைத் தலைவனாகப்  படைக்கலாம்.

என்று,பன்னிரு   பாட்டியல்   கூறுகிறது.

3.  இலக்கியங்களில்  உலாவின்   சாயல் ....

சங்க   இலக்கியங்களிலும்,  பிற்கால  இலக்கியங்களிலும்  உலா   என்னும் 

தென்றலின்   மெல்லிய   காற்று   ஆங்காங்கு   வீசுகிறது.

3 . 1.   சிலப்பதிகாரம்.....

 சேரன்   செங்குட்டுவன்   கண்ணகிக்குச்   சிலை   செய்வதற்கான  கல்லைக் 

கொண்டுவர, வடநாட்டிற்குச்   சென்று,கனக,விசயர்களை   வென்று,பல

வடபுல  மன்னர்களையும்  வென்று, வெற்றிக்    களிப்புடன்  நாடு  

திரும்புகிறான். அவ்வாறு   அவன் திரும்பி  வருங்காலை அவனை  நாடு மக்கள் 

வாழ்த்தி வரவேற்கின்றனர். யானை மீது  வரும்   செங்குட்டுவன், அவனைத் 

தொடர்ந்து  குதிரை,தேர், முதலிய  ஊர்திகளில்   வரும்  அமைச்சர்  

பெருமக்கள், மலர்தூவி, ஆடல் பாடலுடன்   வரவேற்க  ஊர்வலமாய்   வருகின்ற 

அந்நிகழ்வே   உலா   இலக்கியம் தோன்ற  வழி வகுத்தது  எனலாம். 

3. 2.  பக்தி  இலக்கியங்கள் .....

திருஞான  சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  ஆகிய   மூவர்  பாடியருளிய 

தேவாரங்கள், காரைக்காலம்மையாரின்   அற்புதத்திருவந்தாதி, கருவூர்த் 

தேவர்  போன்ற  சான்றோர்களின்  பாடல்கள்  போன்றவற்றில்  விளக்கப் 

படும்,போற்றப்படும்   இறைவனது   திருவீதி   உலா நிகழ்வுகளும் 

உலா இலக்கியம்  தோன்றக்   காரணம்   ஆயிற்று"  எனலாம்.

4.  முதல் உலா இலக்கியம்.....

சேரமான்  பெருமாள்  நாயனார்   பாடிய " திருக்கயிலாய  ஞான  உலா"  வே ,

முதல்  உலா   இலக்கிய நூலாகும். 

       ஒட்டக்கூத்தர்   பாடிய  "மூவருலா" இலக்கியச் சிறப்புமிக்க  வருணனைகள் 

நிறைந்த  நூலாகும்.

5.  யாப்பு ....

உலா   இலக்கியம்  வெண்சீர்  வெண்டளைகளாலேயே   பாடப்படவேண்டும்.

இருஇரு கண்ணிகளாக    அமைக்கப்படவேண்டும். பிரதளைகளும்  பிற 

சீர்களும்   விரைவில்   கூடா   என்பதே உலாவின்   யாப்பு முறை ஆகும்.

6.   திருப்பரங்குன்றத்திருவுலா .....

திருப்பரங்குன்றத்தில்   வீற்றிருக்கும்   முருகனைப்  பாட்டுடைத் 

தலைவனாக்கிப்   பாடப்படும்   உலா  இது.

திருப்பரங்குன்றம்"   என்ற   சொல் குன்றத்தைக்   குறிக்காமல்   வீற்றிருக்கும் 

முருகனைக்  குறிக்கிறது.அம்முருகன்   மதுரை  நோக்கிச் செல்லும் உலா  இது.

அவன் மீது   மையலுற்ற   ஏழு  நிலைப்   பெண்களும்  அவன்   மீது  காதலுற்று,

அவனது   உலாவிலே   கலந்து  கொண்டு   அவன்   புகழ்   பாடுதல்  இந்நூலின் 

மையக்கருத்தாகும்.

பற்றற்ற   பரமன்   மகனோ  பற்றில்லா   ஆண்டியாவான்; புகழைப்  பழியை 

நோக்காது  தன்வழியே   பயணத்தை   மேற்கொள்ளுகிறான்.

6.  நன்றி ..

அடியேனது   என்பத்தோராம்   அகவை ,  தொடும்  நாளிலே  முருகன்  அருள்  

வேண்டிப்   பாடப்பட்ட   இந்நூலை  இயற்றிட்ட  என்னைப்   பணித்த 

மாமுருகன்   சேவடிகளுக்கு  நன்றியும்,வணக்கமும்.

     என்னை முனைவராக   ஆக்க,    வழிகோலி,என்னை   அவர் பணிபுரியும் 

பல்கலைக்  கழகத்தில்  சேர்த்தருளிய   பெருந்தகையாளர்,1977ல்  எனது  எழுபத்தைந்தாம்  அகவை  விழாவை முன்னின்று நடத்தி,நூலும் வெளியிட்ட  கல்விமேலாளர்,   இன்று  நான்  

முனைவர்  பட்டம் பெற்றபின்பு, எனது என்பத்தோராம்   பிறந்தநாள் 

விழாவிலே  கலந்துகொள்ள வந்திருக்கும்  சான்றாளர், அன்று  நூல்  

வெளியிட்ட  அதே   பொற்கரம்   இன்றும்   நூல்   வெளியிடப்போகும் 

பொற்கரம்; அப்பொற்கரத்தின்  சொந்தக்காரர், முனைவர். திருமிகு. 

தோத்தாத்ரி வேணுகோபால்     அவர்களுக்கு  மனமார்ந்த  நன்றி. 

இந்த  மாபெரும்   பாக்கியத்தை   எனக்கு  அளித்த  திருமிகு. தோத்தாத்ரி 

வேணுகோபால்   தம்பதியினருக்கு  எனது   மகிழ்ச்சி  மிகுந்த  நன்றியை 

மீண்டும்  தெரிவித்துக்   கொள்கிறேன்.

     இந்நூலுக்கு    அணிந்துரை  அணியாக   வழங்கியவரும், இந்நூலைப் 

பிழையின்றித்  திரித்துக்   கொடுத்தவரும், ஆன ,எனது மாணவர்,  தமிழ்ப்பேரறிஞர்   திருமிகு,ஜி.சேகர்  அவர்களுக்கும்  வாழ்த்துக்களும்,நன்றியும்  படைக்கிறேன்.

இந்நூலை  நல்ல முறையில்  அச்சிட்டு  வழங்கிய   நண்பர்.     உரிமையாளர்,

திரு,அருண்   அவர்களுக்கும்   அந்த நன்றி.

எப்பொழுதும்போல்  கணிணி சரிபார்ப்பு, போன்றவற்றில்   பேருதவி  புரிந்த 

என் மனைவி, என்னிரு மகள்கள். ஆகியோருக்கும்   நன்றி,

 வடிவமைப்பு, வெளியிடல்   போன்றவற்றில்  பேருதவி  புரிந்த எனது  இரு 

மாப்பிள்ளைகள்,பேரன்,பேத்திகள், பேரன் மனைவி போன்றோருக்கும் 

எனது   நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக