சாமிமலை திருப்பதிக உரை
காப்பு
வண்புவி
என்ற பாடல்
பொருள்
வண்புவி சொல் = வளமை கொண்ட உலகம் முழுவதும் போற்றிச் சொல்லப்படும்,
சோழவளநாட்டில்
= வளமை மிகுந்த சோழ வளநாட்டின்கண் அமைந்துள்ள
சாமிமலைக்கண் புனிதர் = சுவாமிமலை என்ற தலத்தில் வீற்றிருக்கும், புனிதராம் முருகக்கடவுள்
செந்தமிழ்க்குக் காப்பாகும் = செந்தமிழுக்குக் காப்பாகவும் விளங்கும் முருகன்
விண்புகழும்
ஒண் பதுமத்தாள் மருகன் = மண்ணும் விண்ணும் போற்றிப் புகழும்,தாமரை மலரில் வீற்றிருக்கும்
இலக்குமியின் மருகன்,
ஆகிய முருகன் மீது பாடப்படும் இந்நூல் சிறக்க, ஆசிரியர் விநாயகப் பெருமானை
வாழ்த்துகிறார்.
ஓர் வெண்கோடு ஒங்க = விநாயகப் பெருமானின் ஒரு வெண்கொம்பு ஆகிய தந்தம் உயர்வடையட்டும்.
இரு தண் பதுமத் தாள் = அவரது இரண்டு குளிர்ந்த தாமரை போன்ற சேவடி பொன்மலர் போன்ற சேவடி உயர்வடைக.
கருத்துரை
மண்ணும், விண்ணும் புகழும், இலக்குமி அம்மையின் மருகன், சுவாமி மலை வாழ் புனிதர் ஆகிய முருகன் மீது பாடப்படும் இந்நூலை, பாரதம் எழுதி உயர்புகழ் பெற்ற ஒருகோட்டைப் (கொம்பு)வரும்,
குளிர்ந்த
தாமரை போன்ற பாதங்களை உடையவரும்,மலர்போன்ற
மணமும் பொன்போன்ற வண்ணமும் கொண்ட சேவடிகளை உடையவரும்
ஆன ஆனைமுகக் கடவுள் காக்கட்டும்.
விளக்கவுரை
1. வண்புவி = வளமை + புவி
ஞானத்தால், செல்வத்தால், வீரத்தால், விளைச்சலால், வளமை கொண்ட புவி.
2. சொல் = சொல்வது.
ஞானத்திலே பரமோனத்திலே உயர் நாடு" ---- பாரதியார்
3. சோழவளநாடு
·
“சோழநாடு சோறுடைத்து” என்பது பழமொழி
·
வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” பாயும் நாடு.
4. புனிதர்
·
தூய்மை, தவம், மேன்மை, ஞானம், வீரம் கொண்டவர்.
·
வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம " என்பது திருப்புகழ்.
·
புனித வேதமே உருவானவன்.
·
அழற்பிழம்பின் பொறியில் தோன்றியவன்
·
ஆதலின் புனிதர்.
5. பதுமத்தாள் மருகன்
·
தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி தேவி.
·
திருமாலின் மனைவி.
·
அவர்களின் இரு மகள்கள், கமலினி, அனிந்திதை என்பார்.
·
முருகனையே மணாளனாக அடையவேண்டும் என்று தவம் இருந்து,
·
முருகன் அருளால் தெய்வயானை,வள்ளி, என்ற பெயரில் தோன்றி
·
முருகனையே மணந்தவர். ஆதலின் முருகன் இலக்குமி அம்மையின் மருகன் ஆகிறார்.
6. ஓர் வெண்கோடு
·
ஒருவெண்கொம்பு
·
யானைமுக விநாயகருக்கு இரு கோடுகள்.
·
இரு தந்தங்கள்.
·
ஒன்றை ஒடித்து, எழுத்தாணி ஆக்கி, மகாபாரதம் எழுதினார் .
·
மொழி வளர்த்த அக்கொம்பு இந்நூலையும் காக்கட்டும்.
·
மற்றொரு கொம்பு வெண்கொம்பு இடப்பாகம் அமைந்தது,
·
இடப்பாகம் அருட்சக்தியின் பாகம், ஆதலின்
·
அக்கோடு இந்நூலைக் காக்கும். காக்கட்டும் என்பது தொனிப்பொருள்.
7. இரு தண் பதுமத்தாள்
·
விநாயகரின் இரண்டு பாதங்கள்
·
தண்மை = குளிர்ச்சி.
·
பதுமம் = தாமரை. அழகு,வண்ணம், மணம் கொண்டது.
·
குளிர்ச்சியால் கருணை பொழியும்.
·
அழகால் கலை போற்றும் .
·
வண்ணத்தால் புகழை அளிக்கும்.
·
மணத்தால் கவிதைச்சுவை நல்கும்.
·
என்பதால் இந்நூல் வாழ்வாங்கு வாழ அருள் புரிவார் ஆனைமுகன் என்பது உட்பொருள்.
காப்பு என்பது,
பாடியோர், பாடும்பொருள், பாடும் மொழி, பாட்டுடைத்தலைவன்,
கேட்போர், படிப்போர் நலம் வளர வேண்டிக் காக்கும் கடவுளை
வேண்டுதல் ஆகும்.
பாடல் 1
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பூக்கொண்டு
பொருள்
பூக்கொண்டு = பூக்களாகிய எழுத்துக்களைக் கொண்டு,
செந்தமிழ்ப்பாக்கொண்டு = உருவாக்கப்பட்ட செந்தமிழ்ப்பாக்களை
உருவாக்கி, அனந்த சுகபோகங்கள் அனுபவிக்க = அளவில்லாத, அழியாத இன்ப போகங்களை அனுபவிக்கவும்,
பொன்னுலகு
முத்தியும் = பொன்னுலகு எனப்படும் முத்திப்பேறு
அடையவும்,
தரு நினது அனந்த அற்புத குணம் எடுத்துரைப்பான் = அருள்கின்ற உன்னுடைய அழியாத அளவற்ற அற்புத குணங்களை எடுத்துரைப்பேன்.
காக்கொண்ட
என்மனது = காப்பது நீயே என்ற விடாப்பிடியான எண்ணம் கொண்ட என் மனம்,
மால்கொண்டது = உன்னை அடைய, உன்னைப் பார்க்க மயக்கம் கொண்டது.
(உனது குளிர்ச்சியான அருள் நிலையைப் பிடிக்க மனம்
முயல்கிறது. இது எதுபோல் இருக்கிறது என்றால்)
கதிர்த்திங்களைப் பிடிக்கக்கைகளை நீட்டும் சிறுவர் புத்திக்கும், =
வானத்துச் சூரியனை, வட்டவெண்ணிலவைப் பிடிக்க விரும்பித் தன் கைகளை வான் நோக்கி உயர்த்தி நீட்டும் சிறுவருடைய புத்திக்கும்,
நெடுநீர்க்
கடலினைக் கரை காணவே = மிகப்பெரிய கடலின் கரையைக் கண்டிட விரும்பி,
மாக்கொண்ட கைகளால் நீந்திடுவம் என்று சொல்வார்கள் புத்திக்கும் = ஆவேசம் கொண்டு கைகளால் நீந்தியே கரை காண்போம் என்று சொல்வார் புத்திக்கும்,
விண்ணின் மழைத்துளிகள் இவளவு என்று எண்ணவும், முயற்சி செய்வார்கள் புத்திக்கும் = 'வானத்திலே பொழிகின்ற மழையின் துளிகள் இவ்வளவு ஆகும்," என்று எண்ண முயற்சி செய்வாரது புத்திக்கும்,
ஒக்கும் = நிகரானது ஆகும்.
தாக்கொண்ட இப்பாடல் எளியதாயினும், = உன்னைப்போற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இப்பாடல் எளியது,சிறியது ஆயினும்,
ஐய! = தலைவனே! சுவாமிமலை முருகனே!
தள்ளாது கொள்ளவேண்டும் = இதனை நீ தள்ளிவைக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று
வேண்டுகிறேன்.
தாமநிலை ஏழ் மருவு மாடம் மலி = நிலையான மலைகள் எழும் ஒன்று சேர்ந்து, உயர்ந்தாற்போலவும், இணைந்தாற்போலவும் உயர்ந்தும், நெருங்கியும் அமைந்த மாட மாளிகைகள் நிறைந்தும்,
நீடு
எழில்கொள் = நீண்டும் அழகே உருவாகக் காட்சி தரும்,
சாமிமலை = சுவாமிமலை என்னும் தலத்தில்
வாழ் முருகனே! = கோயில் கொண்டு அருள் பாலிக்கும் முருகப் பெருமானே!
கருத்துரை
நிலவுலகின் வாழத்தக்க சுகபோகங்களை அனுபவிக்கவும், சிவப்பேறு என்னும் வீட்டுப்பேற்றைப் பெற்றிடவும்,விரும்பிய யான் அதனை வழங்குகின்ற பேரருள் கொண்ட உனது பாதங்களில் பூமாலை சார்த்தியும்,தமிழ்ப்பாமாலை சாத்தியும், உனது அளவிடற்கரிய ஆனந்த அற்புத மேன்மைக் குணங்களை எடுத்துரைப்பேன். காப்பவன் நீ ஒருவனே என விடாப்பிடியான எண்ணம் கொண்ட என்மனம் உன்னைக்காண உன்னை அடைய விரும்புகிறது. உனது பாதங்களில் மயக்கம் கொண்டது என்மனம்.உனது கருணைக்கண் பார்வைக்கு ஏங்கிடும் என்மனம் குளிர்ச்சியான உனது அருளை விரும்பித் தவிக்கிறது. இந்தநிலை எதுபோல் இருக்கிறது? என வினவினால் வானத்துச்சூரியனையும், நிலவையும் பிடிக்க விரும்பித் தன் கைகளை வான் நோக்கி நீட்டி உயர்த்தும், சிறுவனுடைய மனநிலை போலவும், மிகப்பரந்து விளங்கும் பெரிய கடலின் கரையைக் காண விரும்பிய ஒருவன் ஆவேசத்துடன் கைகளால் நீந்திக் கரை காண்போம், என்று நீந்தும் மன நிலைக்கும், வானத்திலிருந்து பொழிகின்ற மழைத்துளிகளை " இவ்வளவு" இருக்கும்"
எனக்கணக்கிட்டு எண்ணுதற்கு முயலும் மனிதரது நிலைக்கும், நிகராக அமைகிறது எனலாம்.
ஐயனே! சுவாமிமலை முருகனே! நான் பிதற்றும் இப்பாடல் சிறியது; எளியது; ஆயினும் உன்னைப்போற்ற வேண்டும் என்ற பெரிய ஆசையால் தோன்றியது. சிறியதோ,பெரியதோ இப்பாடலை ஏழை மீது கருணை கொண்டு ஏற்றருள வேண்டும். மலைகள் ஏழும் இணைந்து சேர்ந்த உயரமும்,அகலமும்,கொண்ட நீண்ட வீதிகளின் மாடமாளிகைகள் கொண்ட சுவாமிமலை என்னும் தலத்தில் கோயில் கொண்ட சுவாமிநாத குருவே! என்று போற்றுகிறார் ஆசிரியர்.
விளக்கம்
இப்பாடல் "அவையடக்கம்" என்ற முறையில் அமைந்த பாடலாகும்.
பாடல் 2
தயாவரத என்னும் பாடல்
தயாவரத = இரக்கம் கொண்டவனே!
சர்வ
ஜீவாதார! = மூவேழ் உலகங்களின் உயிர்ப்பானவனே!
கௌரிநந்தன! = உமாதேவியாரின் அன்புமகனே!
சடாட்சர
விநோத ! = ஆறெழுத்துக்களால் ஆன, புதுமையானவனே!
சத்வ குண
வித்தக! = அமைதியான குணத்தின் ஆன்றவனே!
சுபாங்க ! = நன்மையை உள்ளமாகக் கொண்டவனே!
காங்கேய! = கங்கையின் மைந்தனே!
உத்தண்ட
த்வாதச உன்னத புயாசல ! = படைகளைத் தாங்கிய
பன்னிரண்டு
புனிதமான மலைகள் போன்ற கைகளை உடையவனே!
மனோரம்ய
தெய்வகுஞ்சரி ரமண ! = மனத்தின் மிக விருப்பமாயும், அழகாயும் உள்ள தேவயானையின் கணவ!
பூர்ண
பண்டித! = நிறைந்த ஞானம் கொண்ட புலவனே!
விசால புவன பூஜித ! = பரந்துபட்ட மூவேழ் உலகங்களாலும்
பூஜிக்கப்
படுபவனே!
திவ்ய லாவண்ய = புனிதமாம் அழகே உருவானவனே!
கண்ய = போற்றத் தகுந்த பெரியோன
சுகபுண்ய! = சுகமளிக்கும் புண்ணியக் காட்சி அளிப்பவனே !
சிவசுப்ரமண்ய
! = சிவனின் மகனான சுப்பிரமணியக் கடவுளே!
வியாளமர்த்தன
! = சூரன் எடுத்த பறவை,விலங்கு,மரம் போன்ற கொடுமையான உருவங்களை அழித்தவனே!
நிர்த்த கலப = தந்தையைப் போல் நடனமாடுபவனே!
நிர்த்த = நடனம் ஆடும் நடராசனே!
கலபசிகிவாகன = கலையழகு மயிலை ஊர்தியாகக் கொண்டவனே!
விசேஷ விதரண = சிறப்பான பரந்துபட்ட ஞானம் கொண்டவனே!
விசாக ! = விசாக விண்மீனில் குடி கொண்டவனே!
விமல ! = தூய்மை ஆனவனே! (மும்மலங்கள் பற்றாதவனே!)
விக்ரம! = வெற்றிச்செல்வனே! (முறைமையின் மூத்தோனே!)
விபவ ! = தோன்றாதத்தோன்றலே!
விபுத = ஞானத்தால் கணிக்கத் தக்கவனே!
அற்புத ! = ஞானம் மிஞ்சிய ஆற்றல் உடையவனே!
விரத! = நெறி நிற்பவனே!
வேத ! = மறைகளால் ஆனவனே!
வேதாந்த பகவ
! = மறைகளின் முதலும் முடிவும் ஆன கடவுளே!
ஐயா விஜயீ பவா எனத்தினமும் பராவும் = "உனக்கு மேன்மேலும் வெற்றி அமைக" என வாழ்த்தித் தினமும் உன்னைப்போற்றும்
இத்தமியேனுக்கு = உன் அடியவனான இந்த ஏழைக்கு,
அருள்புரிவாய் = அருள்புரிவாய் .
தாமநிலை ஏழ்
மருவு மாடமலி நீடெழில்கொள் சாமிமலை வாழமுருகனே =
ஏழு
மலைகளும் ஒன்று சேர்ந்தாற்போலவும், இணைந்தாற்போலவும்,
உயர்ந்தும்,நெருங்கியும், அமைந்த மாடமாளிகைகள் நிறைந்து,
நீண்டும்,அழகே உருவாகக் காட்சி தரும் சுவாமிமலை என்னும் தலத்தில்
கோயில்
கொண்டு அருள் பாலிக்கும் முருகப்பெருமானே!
கருத்துரை
எல்லாச்சிறப்புக்களையும் பெருமைகளையும் பெற்று விளங்கும் முருகக் கடவுளே! சுவாமிமலை வாழும் சுவாமிநாதா! உனக்கே வெற்றி என்று தினமும் வாழ்த்திப் போற்றும் உன் அடியவன் ஏழையேனுக்கு நீயே அருள் புரிவாய்! என்று ஆசிரியர் பணிந்து போற்றுகிறார்..
விளக்கம்
இப்பாடலில் பயிலும் சர்வ, ஜீவாதார, விநோத , சடாட்சர, போன்ற பல
சொற்கள் "தத்பவ வடசொல் " ஆகும்.
பாடல். 3
பொங்காழி நஞ்சுண்ட ...எனும் பாடல்
பொங்காழி நஞ்சுண்ட கண்டன் அருளும் குகா! = பொங்குகின்ற அலைகளைக் கொண்ட கடலிலே தோன்றிய விடத்தை உண்டதனால் நீலகண்டன் ஆகிய சிவபெருமானின் மகனாக அவதரித்தவனே!
புனித
பங்கேருகா = தூய்மையும்,அருளும், ஈகையும் கொண்ட சேவடித் தாமரை கொண்டதால் சிறப்புற்றவனே!
புகலும் அமராவதிப் புலவர் புகழ் சண்முகா! = விண்ணுலகத் தலைநகரில் வாழும் புலவர்கள் போற்றுகின்ற புகழுடையவனே!
பொலி
பன்னிரண்டம்பகா = பொலிகின்ற பன்னிரண்டு அழகிய கரங்களைக் கொண்டவனே!
தங்காழி அணிவிரல் பார்ப்பதி மகாபயோதர அமுது அயின்ற சுமுகா! = பொன் மோதிரம் அணிந்த அழகிய விரலுடைய பார்வதியின் ஞானம் தங்கிய மிகப்பெரிய முலையில் ,அவளால் அணைத்தபடிப் பாலூட்டும் கால் தாய்ப்பால் பருகிய புண்ணியம் செய்த நல்வாய் உடையவனே!
தருண வெயில் உமிழும் வேல் படை தாங்கு சேவகா ! = அளவு கடந்த வெம்மையும், அதற்குள் ஒளிந்த ஈரமும், கொண்ட ஆதவக் கிரணம் போல் பராக்கிரமம், பைங்கருணை கொண்டு,பகைவர்க்கு அழிவும்,பக்தர்களுக்கு ஈகையும் வழங்கும் வேற்படையைக் கரத்தில் தாங்கிச் சேவகம் புரியும் தலைவனே!
தானவர்கள் வம்சாந்தகா! = சூரபன்மாதி அரக்கர்களின் குலம் அழிவுபடக் காரணம் ஆனவனே!
அங்காழி வந்தாண்ட சுகிர்த அற்புத சுகா! = அழகிய சீர்மையாகிய அலைகளால் சூழ்ந்த திருச்செந்தூர் வந்து, உலகை ஆண்டு, ஆன்மாக்களுக்கு நன்மை நல்கும் அற்புதங்களைப் புரிந்து சுகமெல்லாம் தந்தவனே!
(வேறொரு பொருள்)
அழகிய சீகாழி நகரிலே திருஞான சம்பந்தராக அவதரித்து, மொழியையும், நாட்டையும் ஆண்டு, அடியவர்களின் ஆன்மாக்களின் சிவப்பேற்றிற்காக அற்புதங்கள் நிகழ்த்தி உலகை நன்மைப் படுத்திய உயர்ந்த எண்ணம் கொண்டவனே!
அமிர்த நவரச வாசகா ! = நிலைத்த நித்தியமான அமுதம் போன்ற ஒன்பான் சுவைகளையும் சுவைப்பவனே!
அகில
லோகாத்மக சம்ரட்சகா! = மூவேழ் உலகங்களின் வாழும் ஆன்மாக்களை, சராசரங்களைப் பாதுகாக்கும் அருளாளனே!
அகத்தியர்க்கு அருள் தேசிகா! = மூத்த தமிழ் முனிவர், மூவுலகங்களிலும் உயர்ந்த குறு முனிவர் அகத்தியருக்குப் பிரணவ உபதேசம் உபதேசித்தவனே!
சங்காழி மால் மருகா! = சங்கும் சக்கரமும் ஏந்திய திருமாலின் மருகனே!
வித்தக! = சர்வ வல்லமை வாய்ந்தவனே!
சாற்றும் இத்தமியேற்கு = உன்மீது கவிதை பாடிப்போற்றும் இந்த உனது அடியவனுக்கு
வரம் தந்து அருள் = உன்னை மறவாத வரம் தந்து அருள்வாயாக.
தாமநிலை வாழ்
முருகனே! = சுவாமி மலையில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானே!
கருத்துரை
சிவபெருமானின் மைந்தனே! கருணை பொழியும் கமலச்சேவடியானே!
விண்ணகப் புலவர்களும் போற்றும் கனி முத்தே! பொலி கின்ற
பன்னிரண்டு கரத்தை உடையவனே! பார்வதி தேவியின் பைம்முலைப்
பால் உண்ட புண்ணியனே!வீரமும்,விவேகமும் கொண்ட வேற்படை
தாங்கும்
சேவகனே! அரக்கர்களை அடியோடு அழித்தவனே!
திருச்சீரலைவாய் வந்து தங்கி, உலகை ஆண்ட ஆண்டவனே!
ஒன்பான் சுவைகளை உணர்பவனே! மூவேழ் உலகங்களையும்
காப்பவனே! அகத்தியர்க்கு உபதேசித்த ஆசானே!திருமால் முருகனே!
இக்கவி பாடும் ஏழைக்கு நால்வரம் தந்து அருள்வாய்.
சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமி நாதனே!
விளக்கவுரை
1.
பொங்காழி நஞ்சுண்ட கண்டன் அருள் குகா ...
·
அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்கள் தேவரும் அரக்கரும்.
·
அங்கு முதலில் விடம் தோன்றிற்று.
·
ஆலகால விடத்தைக் கண்டு,திருமால்,பிரமன் முதலான தேவர்களும்,
·
அரக்கர்களும் அஞ்சி ஓடினார்கள்.
·
அவ்விடத்தைத் தானுண்டு உலக ஆன்மாக்களைக் காத்தார் சிவன்.
·
அவரது நெற்றிக்கண்ணில் தோன்றியவர் முருகன்.
·
சிவன் அருளிய குகா" என்பதால் அவரின் கருணையும்,வீரமும்
·
இவருக்கும் தோன்றும், என்பது தொனிப்பொருள்.
2.
அமராவதிப் புலவர் புகழ்ச்சண்முகா
·
இந்திரன் முதலாய தேவர் வாழும் நாடு அமராவதி .
·
அங்குள்ள புலவர்கள் அவர்களை விட்டு முருகனைப் புகழ்வது ஏன்?
·
அவர்களினும் மேலானவன்;அவர்களை அரக்கர்களிடம் இருந்து
·
மீட்டவன்;வீரமும் கருணையும் கொண்டவனை அவர்களும் போற்றினர்.
·
மண்ணுலகம் மட்டுமன்று விண்ணுலகமும் போற்றியது முருகனை என்பது சிறப்பு.
3.
பார்ப்பதி மகா பயோதர அமுது அயின்ற சுமுகா ...
·
தாயிடம் பால் பருகுவதில் என்ன சிறப்பு?
·
தாயாகிய பார்வதி ஆழியையே விறல் அணியாகக் கொண்டவள்.
·
என்பதால், உலகமே அவளது காலடியில் .
·
தாயைப்போலவே மகனும் விளங்குவான் என்பது சிறப்பு,
·
தாயைப்போலவே உலகைக் காப்பான் மகன் என்பதும் சிறப்பு.
·
தாயின் பயோதரம் பெருகியதால் முருகன் பெற்ற அருட்பயன்கள்
ஞானம் = பிரணவப் பொருளைத் தந்தைக்கே உபதேசித்தது
பராக்கிரமம் = படைப்புத் தொழில் பிரமனையே சிறையில் அடைத்தது.
வீரம் = கிரௌஞ்ச மலையை வீழ்த்தியது, அரக்கர்களை அழித்தது.
கருணை = அரக்கனான சூரன் மீது கருணை கொண்டு மயிலாகவும்,
சேவலாகவும் தானே ஏற்றது.
தமிழ் = சங்கப் புலவனாய் வந்து இறைவன் இயற்றிய களவியல்
நூலுக்கு உரை வகுத்தது.
காதல் = வள்ளியை மணம் புணர வேடனாய் வந்தது.
4.
படை தாங்கு சேவகா .....
·
வேற்படை தாங்குபவன்
·
வேற்படை தங்கி நிற்கும் பணியாள் .
·
தந்தையின் ஆணைப்படி அரக்கர்களை அழித்தது
·
தாயின் ஆணைப்படி வேல் கொண்டு உலகைக் காப்பது .
·
வள்ளிக்காக மரமானான்;கிழவனான் ; வேடனாகி வணங்கிச்
·
சேவகம் புரிந்தான்.
5. சங்காழி மால்மருகா ....
·
சங்கு, சக்கரம் ஏந்திய திருமாலின் மருகனே .
·
சங்கு = பாற்கடலில் தோன்றியது;நறுமணம் அழகு கொண்டது.
·
சக்கரம் = சுழன்று
கொண்டே இருப்பது;தன்னை நோக்கி அடியவர்களை
·
வரச்செய்வது.
·
சங்கு போன்ற ஒருமகள் கமலினி; தேவயானை.
·
அழகு, பொலிவு, செல்வச்செழிப்பு கொண்டவள்.
·
சங்கை வளர்த்தது வெண்பாற்கடல் ;தெய்வயானையை வளர்த்தது
·
"ஐராவதம்" என்ற வெள்ளை யானை.
·
சக்கரம் போன்ற ஒருமகள் அனிந்திதை ; வள்ளி.
·
தன்னைச்சுற்றிச்சுற்றி வந்து முருகனைக் காதலிக்க வைத்தது.
·
தணிக்கையில் இருந்த முருகனைத் தினைப்புனம் நோக்கி ஒடி
·
வரச்செய்தது.
பாடல் . 4
திருமணி விளங்கும் என்ற பாடல் .....
பொருள்
திருமணியே = நன்மையும், வளமும்,அருளும் கொண்ட மேன்மை கெழுமிய மணியே!
விளங்கும்
கிரீட மணி = தன்னேர் இல்லாத தகைமையாய் விளங்கும் மாமுடி அணிந்த மணியே!
வானவர் தினம் துதிசெய் சிந்தாமணி = முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து, வணங்கிப் போற்றுதல் செய்யும் காலை நால்வரும் நல்கும் உயர்ந்த வைரமணியே!
செப்பரு
மனோன்மணி = சொல்லுதற்கு எட்டாத அடியவர் மனத்தில் குடி கொண்டு பக்தியைத் தூண்டும் மணியே!
செம்மணி = நல்ல உள்ளக்கருணை கொண்டு விளங்கும் தூய மணியே!
செழுஞ்சூடகக் கரத்தேந்து ஒருமணி = செழுமையாகிய சூடகம் என்ற
ஆபரணம் அணிந்த கார்த்தில் "மணி" படையாகக் கொண்டவனே!
வளம் பெறும் சைவமணி = வளமும் நலமும் வளர்ந்து உயர்ந்தோங்கிப் பெருகும் சிவப்பேற்றினை நல்கும் சைவ சமயத்தை வாழ வைக்க வந்த சிவமணியே!
மால்பால் உதித்த பெண்மணி = திருமாலின் அன்பு மகளாக அவதரித்த
பெண்மணியான,
வள்ளியாம் ஒண்மணி = ஒளிவிடும் வள்ளி என்ற மணி மீது,
வயங்க = மையலுற்று அவளைக் காதலிக்கும் நோக்குடன்,
தினைப்புலத்தே = வள்ளிமலைச் சிற்றூர்த் தினைப்புனத்திற்கு
வந்துலாவுமணி = வேடனாக வடிவெடுத்து வந்து,மரமாக நின்றும் ,
கிழவனாக மாறியும் வள்ளியின் காதல் பார்வை வேண்டி அவள்
பின்னால் சுற்றுச்சுற்றி வந்தும் உலாவிய நடிக மணியே!
கடலுண்மணி = கடலுள் விளையும் முத்துமணி போன்றவனே!
(வேறு பொருள்) கடல் நடுவே மரமாய் நின்று தீமைகளைப் புரிந்த
சூரபன்மனின் உள்ளத்தே நின்று தீமை போக்கி அவனை ஆட்கொண்ட
உள்ளம் கொண்ட மணியே!
குருமணி = உருவாய்,அருவாய்த் தோன்றி ஆன்மாக்களை ஈடேற்றும்
ஞான குரு மணியே!
எனச்சொல்லும் = என்றெல்லாம் போற்றிப் பாராட்டி வணங்கக் கூடிய
சுப்ரமணியப்பெருங்குணமணி = சுப்ரமணியம் என்ற பெயருற்ற
உயர்ந்தோங்கிய அன்பு,அருள்,ஈகை, ஆகிய குணங்கள் கொண்ட மணியே!
என்
இருகண்மணி = உன்னைப்பார்த்து உன்னை வணங்கி உன் அழகில்
மயங்கி, உன் பாதங்களில் மனம் பதித்த எனது இரண்டு கண்களின்
பார்வையாய் விளங்கும் மணியே!
கோதிலாத்
தெய்வமணி = மாசும்,மருவும் பிறவும் பற்றிடாத தெய்வமாய் விளங்கும் மா மணியே!
அருணகிரி
நாதர் வாக்குக்கு உளம் மகிழ்ந்து கதியும் தருமணி = திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரின் உள்ளத்தில் மகிழ்ந்து தங்கியதோடு, அவருக்கு
சிவப்பேறும் அருளிய சிவமணியே 1 ( வேறு பொருள் )
அருணகிரி
நாதரின் பாடலைப் பக்தியோடு பாராயணம் செய்ப்பவர்
உள்ளத்துள் அமர்ந்து,சேவடி அருளும் அளிக்கும் மணியே !
நீ ஆதலால் = நான் போற்றிய மணியாகப் பல நிலைகளிலும் நீ
விளங்குவதால், என் மன இருள் தவிர்த்து நல்வாழ்வு தருவாய் = எம்பெருமானே! உன்னையே போற்றும் என் மன இருளை, அறியாமையைப் போக்கு.
ஆணவக் கன்ம மாயை இருளை நீக்கி எனக்கு குகாணுபவ வாழ்வைத் தந்தருள்வாய். சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமி
நாதக்கடவுளே !
கருத்துரை
நவமணிகள் தாங்கிய கிரீடம் அணிந்தவா ! தேவர்களால் நாளும்
துதிக்கப்படுபவ! சொல்லுதற்கரிய உயர் செம்மையோய் ! மணி
ஆகிய படையை ஏந்தியவனே ! உலகில் சைவத்திறன் வளர்க்கும் சிவமே!
வள்ளியை மணம் புணரத் தினைப்புனம் காடு.மலை எங்கும் ஒடி ஆடி
உலவியவா ! ஏழு கடலுள்ளும் விளங்கும் ஒளி மணியே! குருவாய் வந்து
உபதேசிக்கும் சுப்ரமணியரே ! அடியேனின் இருகண்ணாய் விளங்கும்
குற்றமற்ற கடவுளே! அருணகிரி நாதரின் அற்புதப் பாடலின்
கருப்பொருளே
!அப்பொருளால் மகிழ்ந்து சிவகதி நல்கிய சிவக்
கொழுந்தே!
என நான் போற்றும் எல்லாமாக நீயே இருப்பதால் எனக்கு
அமைதி அருளி அறியாமை அகற்றி, மும்மலம் போக்கி, அருள் பொழிந்து
காப்பாய். சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமிநாதக் கடவுளே!
விளக்கம்
இப்பாடலில் மணி என்ற சொல் பலமுறை வந்து ஒரே பொருளைத்
தருவதால் சொற்பொருட் பின்வரு நிலையணி பயில்கிறது.
பாடல் 5
கந்தா வளம்பெற சுகந்தா ...என்ற பாடல்.
கந்தா! = கந்தனே!
வளம் பெறு
சுகம் தா எனச் சதமகன்தான் இயற்றி = வளத்தை அளிக்கும்
சுகத்தைத் தந்தருள்க! என இந்திரன் வேண்டிக்கேட்க அதனை வழங்கும்,.
(வேறுபொருள்)
வளம் பெறு சுகம் தா எனச் = வளத்தை நல்கும் சுகத்தைத் தந்தருள் என்று
சதம் = எப்பொழுதும்
அகந்தான் இயற்றி = இடைவிடாது மனத்தால் வேண்டியவற்றை வழங்கும்
ஒளிர்பூங்கா மாதவன் = ஒளிர்கின்ற பூங்காவான பாற்கடலில் வாழும்.
திருமால்
திருமருகா = மருகனே!
மாதவன்
சுவாகா = மாதவம் புரிந்த அக்கினித்தேவனும்,
மாதவன் சலபதி = மாதவன் வருணபகவானும்,
தந்தா! = போற்றும் தலைவனே!
வளம்
பெருமிதம் தானடங்க = வளமும், அதைப்பெற்றதால் வந்த மகிழ்வும் அடங்கி வாழ,
உசிதம் தாவு = நல்லெண்ணம் வேண்டிடும்
நகிலாதிபர்த்தாதா = உலக அரசர்களின் தலைவனே!
மரைத்தார் விதாதா = தாமரை மாலை அணிந்த தலைவனே!
பதப்பொருள் செய் தந்தா ! = வேதத்தின் சொல்லும் பொருளும் விளக்கிய
நாவும்,பல்லும், வாயும் உடையவனே!
( வேறுபொருள் )
பதப்பொருள் செய் தந்தா! = மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் களவியல் நூலுக்கு
உரை வகுத்த பதப்பொருள் கண்ட செவ்வாய் உடையவனே!
விகர்தனுடனே = இந்திரன் தொடங்கி
நந்தா வளம் பெறும் = குறைவில்லா வளம் பெறும்
அனந்தாதியோர் = அனந்தன் முதலிய
உயர்கனம் = உயர்ந்த பாம்புக்கூட்டத்தால்
தாவு
திங்கள் = தீண்டப்பெறும் திங்கள் வரை
இமையா = இமைக்காத கண்களை உடைய
நாட்டத்தோர் = தேவர்கள்
தொழுமு நால் நாட்டத்தனே = தொழுது வணங்குகின்ற அறம் பொருள்
இன்பம் வீடு என்ற நாலறத்தில் நாட்டம் கொண்டவனே!
உண்மை நாட்டமுற = உண்மைப்பொருளாம் நினது சேவடி அடைதலை
விரும்பி, நின் பூசை உன்னைப்பணிந்து பூசை செய்யும்
நேசம் தா = உள்ளத்தைத் தா
வளம்
செய்யும் அமுதென = வளத்தை வாரி வாரி வழங்கும் அமுத மழை நீ என்று
கவி சொலும் = புலவர்கள் போற்றும்
தமிழறிஞர் சங்க நிதியே = தமிழ் அறிஞர்களின் சங்கத்து நிதியே!
( வேறு பொருள் )
தமிழறிஞர்
சங்க நிதியே = தமிழறிஞர்களுக்குக் குபேரனின் சங்க-பதும
நிதி போல் உதவுபவனே !
தாம . . . .
. . . முருகனே ! = சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமி நாதக்கடவுளே!
கருத்துரை
கந்தனே!
வளம்பலவும் அருள் புரிக என எந்நேரமும் மனத்தில் உன்னையே போற்றிக் கொண்டிருக்கும் பாற்கடல் மாதவனின் மருக ! அக்கினி,வருணன் போன்றோரின் தலைவனே!வளம் பெருகும் ஆசை அடங்காகி சிவப்பேற்றை விரும்ப வைப்பவனே ! உலக அரசர்களின் தலைவனே! தாமரை மலர் மாலை அணிந்த அழகனே! வேதப்பொருளை உணர்த்திய திருவாய் உடையவனே! களவியல் நூலுக்கு உரை வகுத்தவனே! இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவனே! நால்வகைப் பொருள்களை விரும்புபவனே ! உண்மை அறமாகிய உன்னை அர்ச்சிக்கும் பூசை மீது பற்றுக்கொள்ளும் மனத்தை அளிப்பவன்! வளம் நல்கும் அமுது நீயே எனப்பாடும் தமிழ்க்கவிஞர்களின் நிதியே!சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமிநாதக் கடவுளே!
விளக்கம்
1. சதமகம்தான் .....
சதம் = எப்பொழுதும்
அகம்தான் = மனமானது
சதம் = நூறு
மகம் தான் = யாகம் இயற்றிய இந்திரன் (அஸ்வமேத யாகம் )
2. சுவாகா மாதவன் = சுவாஹா என்று ஹவிஸ் பெறும் அக்கினி தேவன்
3. சல பதி சல = நீர் பதி = தலைவன் வருணன்
4. சங்க நிதி = தமிழ்ச்சங்கத் தலைமை சங்கம், பதுமம் என்ற குபேரனின் நிதிக்குவை
பாடல் ..6.
பூவார்ந்த கற்பகம் என்ற பாடல்
பூவார்ந்த கற்பகப்பொங்கும் நிழலினில் = மணம் மிக்க பூக்கள் கண்டு, வணங்கியோர் மனம் விரும்புவன எல்லாம் நல்கும் கற்பக மலர்ச்சோலை நிழலினில்
அரசுபுரியும் = நல்லாட்சி புரியும்
இந்திரனாதியோர் போற்ற = இந்திரன் முதலிய தேவர்கள் போற்றவும்
வெண்ணீற்று ஒளி விளக்கு மேனிப்புறம் பொருபவள் = பூசிய
வெண்ணீற்றின் ஒளி மேலும் விளக்கும் மேனியில் ஒரு பாகம் கொண்டவள்
வணநிகர்ப்ப = வாழ்த்தலுக்கு ஏற்பவும்,
கோவார்ந்த
சடை = நெடிது உயர்ந்த சடையானது
நதி
ததும்பல் இஞ்சும் = அழிவதுபோல் ஆவேச வேகத்துடன் பொங்கி
வந்த கங்கை நதியின் துள்ளலும்,வேகமும் ஒடுங்க, அதன் நீர்த்
திவலைகளைத் தனக்குள் அடக்கிய சடையுடைய
சிரம் குனிய = தலையானது குனிந்து,பணிந்து,
வளர்மறை
மலரும் = நிறைந்த வேதாகமங்களை உபதேசிக்கும் வாய் ஆம் கோகனக மாமலரை = நறுமணப்
பொன்மலர் போன்ற திருவாயை
மானாக
மால்வரை = செம்பொன் மாமலையாம் இமயமலையில்
குனித்த கைம் மலர் பொத்தவே = வளைத்த மலர்க்கையைக் கொண்டு பொத்தியபடி,
தேவார்ந்த
பண நாக குண்டல மணிக்குழை செறிந்த செவி ஏற்று, = தெய்வீகத் தன்மை வாய்ந்த படமெடுத்த நாகத்தைக் குண்டலமாகவும், மணிக்குழையாகவும் அணிந்த செவிக்குள் ஏற்று,
முக்கட்சிவபிரான் திருவுளம் கொள்ள = முக்கண்ணை உடைய சிவபெருமான் தன் மனத்திலே கொண்ட
ஓங்கார உரை = பிரணவத்தின் மாப்பொருள் விளக்கத்தை
செய்து
மகிழ் வித்தவா = உபதேசம் செய்து ஞான சுவாமிநாதனாய் நின்று தந்தையை மகிழ்வித்த ஞான குருவே!
சதா
ஆவார்ந்த என் மனக்குறை நீக்கி = எப்பொழுதும் ஆன்மாவை வாட்டும் எனது தீராத மனக்குறைகளை நீக்கி,
இத்தருணம் வந்து அருள் புரிகுவாய் = இப்பொழுதே வந்து இங்கேயே வந்து குறை களைந்து அருள் புரிவாய்
தாமநிலை . .
. . . . முருகனே! = சுவாமிமலையில் கோயில் கொண்டு விளங்கும் சுவாமிநாதக்கடவுளே!
கருத்துரை
வரையாது வழங்கும் கற்பகப் பொன்மரநிழலில் அரசு புரியும் இந்திரன் தலைமையிலான தேவர்கள் போற்றவும், வெண்ணீறணிந்த மாமேனியில் ஒருபாகம் கொண்ட பார்வதி போற்றித்துதிக்கவும்,கொன்றைச் சடை உடையவரையே அழிக்கும் வேகத்தில் வந்த வான் கங்கை நதியை அடக்கிய சடையை உடைய தலையானது குனிந்து வணங்கவும், வேதாகமம் உபதேசிக்கும் வாயாகிய முத்துமணி வாய் பொத்தியும், நாக குண்டலமும் மணிக்குழையும் அணிந்த செவிக்குள் ஞான குருவாம் முருகன் அளித்த பிரணவ உபதேசத்தை ஏற்ற மூன்று கண்ணுடைய சிவபெருமான் தனது உள்ளத்தில் தேக்கும் அளவு ஓங்காரத்திற்கு உரை உபதேசம் வழங்கிய வித்தகனே! தவிக்கும் எனது மனக்குறைகளை எல்லாம் நீக்கி இப்பொழுதே இங்கே அருள் புரிவாய். சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமிநாதக்கடவுளே!
விளக்கம்
1. கற்பகப்பொங்கர் = கற்பகமரநிழல்
·
மரத்தின்முன் நின்று எதை விரும்பினாலும் அது கிடைக்கும்.
·
அம்மர நிழல் அரசாட்சி ஆள்பவர்க்கும், ஆளப்படுபவர்க்கும் அனைத்தும் குறையின்றிக் கிடைக்கும் என்பதாம்.
2. முக்கட் சிவபிரான் ..
·
மூன்றாம் கண்ணினாலே முருகனைத் தோற்றுவித்தவர் சிவபிரான்.
·
மகனே ஆசானாகி அருள் உபதேசம் செய்வித்தான்.
·
தோற்றுவித்த முக்கண் இன்று வணங்கிய முக்கண்
·
என்பது தோன்ற "முக்கட்
சிவபிரான்" என்கிறார் .
பாடல் ..7
இமயக்கருங்குயில் என்ற பாடல்.
இமயக்கருங்குயில் = இமவான் (இமயமலை) பெற்றெடுத்த இனிய குரல் கொண்ட குயில் போன்ற பார்வதி அம்மை.
அளித்த வேல் ஏவி = தவத்தால் பெற்ற வேலாயுதத்தைத் தான்பெற்று
அதனை அரக்கர் மீது வீசி,
மிக்கிகல் கொண்ட = பெரும் போர் புரிந்த
சூர்மாவை
வென்று = சூரனாகிய மாமரத்தை இரு கூறாக்கி வென்று,
இருகூறதாம் = இரண்டு கூறுகளையும்
பச்சை மயில், வெண்சேவல் = பச்சை மயிலாகவும், வெண்ணிறச்
சேவலாகவும், மாற்றி
ஏர் வாகனம்,பதாகை = அமர்ந்து செல்லும் ஊர்தியாக மயிலையும்,
கொடியாகச்
சேவலையும்
அமையுறக் கொண்டு = தானே ஏற்றுக்கொண்டவனே!
இந்திரன் தந்த பெண்ணனமும் = இந்திரன் தந்த மக்களாகிய அன்னம்
போன்ற
தெய்வயானையையும்
அடல்வேடர்
பைங்கிள்ளையும் = சினப்போர் வேடர் நம்பிராசன் மகள்
கிளி போன்ற வள்ளியையும்
அகம் மகிழ = உள்ளம் மகிழ
மிக மருவும் = மிகுந்த விருப்பமுடன் மணந்து கொண்ட
உயர்
சக்ரவாக ஜெய அரசே = சூரனின் மாய உருவான சக்ரவாகப்
பறவையை
வெற்றி கொண்ட அரசே!
சிருஷ்டி கன்மக் கமலாலயன் = படைப்புத் தொழில் புரியும் தாமரை
மலரில் அமர்ந்துள்ள பிரமன்
சிரத்தேந்தும்
ஒண் கமலமே = பிரணவப் பொருள் அறியாது விழித்த காலை
அவன் தலையில் குட்டிய ஞான ஒளித் தாமரையே!
கண்ணன் மதிக்கும் மணியே = தேவர்களை விடுவித்ததால், தமது
மகள்களை மணந்து கொண்டதால் திருமால் மதித்துப் போற்றும்
இரத்தினமே!
கயிலைப்பிரான் மகிழ்வரு சிறிய யானையே = சிவபெருமான் மகிழும்படி வீரச்செயல் புரிந்த இளைய யானையே!
ககனம் உரை விபுதர் பதியே = விண்ணக வாழ்வைத் தந்த தால்
தேவர்களின் தலைவனாக விரும்பும் தேவர்கள் சேனாபதியே!
சமயம் ஓர் ஆறினிற்கு ஆதாரனே = அறுவகைச்சமயங்களுக்கும்
ஆதாரமான கௌமாரமதக் கடவுளே!
எனது ஜனனம் ஈடேற அருள்வாய் = எனது பிறவிப்பிணியை அறுத்து,
சிவப்பேறு அடைய அருள் புரிவாய்.
தாமநிலை . . . . முருகனே = சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள
சுவாமிநாதக் கடவுளே!
கருத்துரை
உமாதேவியார் தவம் செய்து பெற்ற வேற்படையைப் பெற்றுக்கொண்டு, அதனால் பெரும்போர் ஆற்றிய சூரபன்மனை வென்று,மாயமரம் ஆகிய அவனை, இருகூறாக்கி, ஒரு கூற்றை மயிலாகவும், மறு கூற்றைச் சேவலாகவும் மாற்றி,ஓர்தியாகவும், கொடியாகவும் கொண்டவனே!
இந்திரன்
மக்கள் தெய்வயானை,வேடர் நம்பிராஜன் மக்கள் வள்ளி இருவரையும் மணந்தவனே!மாயமாய் உரு எடுத்த சூரனாம் சக்ரவாகப் பறவையை வென்றவனே!பிரணவப் பொருள் அறியாத பிரமன் தலையில் குட்டி ஞானம் அளித்தவனே! திருமாலின் மதிப்புமிக்க மருகனே! சிவபிரான் மனம் மகிழும் இளம் யானைக்கு கன்றே!விண்ணவர் குலம் காத்த தேவசேனாபதியே!அறுசமயங்களின் ஆதாரமான கௌமாரக் கடவுளே!எனது பிறவிப்பிணி போக்கி வீடுபேறு அடைய அருள்வாய்.சுவாமிமலையில் கோயில்
கொண்டுள்ள சுவாமிநாதக் கடவுளே!
விளக்கம்
1. சூர் மா சூர் = சூரன் மா = மாயத்தால் மாமரம் ஆனான் .
2. சமயம் ஓர் ஆறினில் ... ஆறு சமயங்கள். சைவம், வைணவம்,, சாக்தம், சௌரம்,கௌமாரம், காணாபத்யம் என்பன.
3. ஜனனம் = பிறவி தத்பவ வடசொல்
4. கயிலைப்பிரான் மகிழ வரு சிறிய யானையே! ...
·
சிவபெருமான் விரும்பும் இளம் யானையாம் முருகா
·
இளம் யானை முருகன். எனில் மூத்த யானை விநாயகர் ஆவார் என்பது தொனிப்பொருள்.
பாடல் . 8
விஞ்சனத்தன்மை பெறு .... என்ற பாடல்
விஞ்சானத்தன்மை
பெறு = பற்றறுத்துப் பேறு அடையும் நிலை பெற்ற
சீவன்
முக்தர்களும்,
விதரணப்பெரியோர் = நன்மை,தீமை, பதி , பாசம் உயர்வு,தாழ்வு
போன்றவற்றை நன்கு உணர்ந்த பெரியோர்களும்,
விளங்கும்
கழகத்துறாமல் = நன்கு கூடிய பேரவைக் கழகம் சார்ந்து,
உன்னை அறியும் பணியில் ஈடுபடாமல்,
விரைமலர் பறித்து உனது பாதமலர் அருச்சித்து வேண்டிய வரம்
பெறாமல் = நறுமணம் மிக்க மலர்கள் பறித்துப் பெருமை மிக்க உனது
பாதங்களைப் பூசித்து, அருச்சித்து உனது அருள் என்ற வரத்தைப் பெறாமல்
வஞ்சனை.பொறாமை,கோபம்,படிறு ,கொலை, களவு, வாதாடல் ஆதியாம் =
வஞ்சனை,பொறாமை, கோபம், தாழ் செயல், கொலை, களவு, வீண்பேச்சு பேசுதல், ஆகிய
துன்மார்க்கமே = தீய வழியையே
பூஷணம் எனக்கொண்ட = தனது அணியாக, ஆபரணமாகக் கொண்ட
துஷ்டரை மதித்து = தீயோர்களை மதித்து, உயர்ந்த சான்றோராக
அவரைப்போற்றி,
உறவு கொண்டும் = அவர் தம்மோடு உறவும், நட்பும் கொண்டும் ,
வடிவார் = அழகினை உடைய
நஞ்சு அமுதம் இருப்போரும் உதித்த பாற்கடல் விழிநலாரின் =
நஞ்சு,அமுதம் என்ற இருபொருளையும் தோற்றுவித்த பாற்கடல் போன்ற விழிகொண்ட பாவையரின் உறவே
சுவர்க்கம் = இன்ப போகம் ஆகும்
விபுதர் நாடும் சுவர்க்கம் என்று = அறிவுடையோர் நாடும் சுவர்க்கமும்
அதுவே என்று ,
அவர்கள் உறவைக்கொண்டு நாள் பல கழித்திட்ட = அவர்களது உடலை
உறவை விரும்பிப் பல நாட்கள் வீணே கழித்த
என் = எனது
சஞ்சலம் நீக்கி = நிலை உணராது, இளையற்றுத் தவிக்கும் என் மனக்
குறையை நீக்கி
அஞ்சேல்
எனச்சொலி = அஞ்சாதே! நானே வழி காட்டுவேன்; பழி
போக்குவேன்; என்று சொல்லி
தண்ணருள் புரிந்து ஆளுவாய் = தண்மை பொருந்திய நினது கண்ணால்
அருட்பார்வை புரிந்து உன் அடிமையாக ஏற்றருள்வாய்
தாமநிலை . . . . . முருகனே! = சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள
சுவாமிநாதக்கடவுளே!
கருத்துரை
எனது தாழ்ந்த எண்ணத்தை மாற்றி, உயர்ந்த எண்ணத்தை அளித்து
உனது அடியவனாக என்னை ஏற்றருள்வாய் சுவாமிநாதக்ககடவுளே !
விளக்க உரை
1. விஞ்சனத்தன்மை ...... ஞானக்கல்வி பெற்று உயர்ந்த ஞானியரின் தன்மை
2. விதரணப்பெரியோர் . . . . கல்வி கேள்வி ஆய்வு மிக்க உயர்ந்த சான்றோர்.
3. வாதாடல் . . . . நாத்திக வாதம் புரிதல். தேவையற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வாதாடல்.
4. நஞ்சு, அமுதம் இருபொருள் உதித்த பாற்கடல் விழி . . .
·
நஞ்சும் அமுதமும் தோற்றுவித்தது பாற்கடல்.
·
அது போன்ற விழி உடைய மாதர்.
·
நன்மை,தீமை இரண்டும் கொண்ட பார்வை கொண்டவர்கள்.
பாடல் 9
அன்பு
என்பது எள்ளளவும் . . . எனத்தொடங்கும் பாடல்
அன்பு
என்பது எள்ளளவும் இல்லாதவன் = அன்பு என்பதைக் கொஞ்சம் கூட மனத்தில் கொள்ளாதவன்
வளர்
அறத்தின்வழி நில்லாதவன் = வளர்ச்சியைத் தரும் அறவழி ஒரு
போதும் நடவாதவன்,
அஞ்ஞான வேரினைக் கல்லாதவன் = அறியாமை என்னும் செடியின்
வேரினை
வெட்டி வீழ்த்தாதவன்,
கன அகந்தையைக் கொல்லாதவன் = மனத்தே வளரும் கர்வத்தை
நீக்காதவன், அழிக்காதவன்,
நின் பவள வாய் மலர்ந்தருள் மறை காணாதவன் = உனது பவளம் போன்ற
வாய்
மலர்ந்து அருளிய அருள் மறை உபதேசங்களைக் கல்லாத
மடையன்,
நிஜஸ்தர்
பால் செல்லாதவன் = உண்மை பேசி நீதி வழி நடக்கும் நல்லோர்
பால் சென்று சேராதவன்,
நீணிலத்தன் போலும் மிகப் பொல்லாதவன், = மிகப்பெரிய இம்மாபெரும்
உலகத்தில் என்றும் வாழ்வேன் என்ற எண்ணத்தால் மிக மிகப்
பொல்லாதன புரியும் என்னை
நேர்காணல் அருமையாம் = நேரே கண்டு அருள்புரிய மாட்டீர்கள்"
அதனால் தங்களைக் காணலும், அருள் பெறலும் நடவாத ஒன்று என்று மனம் கொண்டேன்.
என் துன்பு அகல = எனது துயர்கள் நீங்கவும்,
நின் துணைப்பத நளினம் = நினது அடியவர்க்குத் துணை புரியும்
மேன்மையும், இரக்கமும் வாய்ந்த திருவடிகளை
நம்பி = நம்பியே
தொழும்பு செய = உன்னடிமையாகி உனக்குப் பணிவிடை செய்ய,
வந்தடைந்தேன் = உன் பாத கமலங்களை நாடி வந்தடைந்துள்ளேன்.
துலங்கும் கடைக்கண்ணால் = அடியவர் மீது கருணை கொண்டு விளங்கும்
உனது அருள் வழங்கும் அன்புடைக் கண்களால்
நோக்கி = என் மீது அருட்பார்வை செலுத்தி,
நவை
நீக்கியே = துன்பங்களைஅடியோடு நீக்கியே
தொண்டனுக்கு = அடியவனாகிய அடிமை செய்யும் தொண்டனுக்கு
அருள்
புரிவாய்
தன்பக்கம்
வந்து சரண் என்றபின் = தீமைகளை விட்டுவிட்டு உன்னையே
சரணம் என்று உன் பக்கம் வந்து,அடைக்கலம் கொண்டவனை
வேறு,என = மாறுபட்டவன் எனக்கொண்டு,
தள்ளிவிடல் = ஏற்காமல் தள்ளிவிடுதல்
நீதி அல காண் = நீதி ஆகாது.ஆதலின் என்னை அரவணைப்பாய்.
தாம நிலை . . . . முருகனே = சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள
சுவாமி
நாதக் கடவுளே.
கருத்துரை
தீய வழியில் நடந்து, தீயோருடன் சேர்ந்து தீமைகள் பலப்பல
செய்தவனான என்னை ஏற்காமல் தள்ளிவிடாதே. நாளும் உன்னையே போற்றி, உனக்கே தொண்டு செய்பவன் யான். என்மீது கருணை கொண்டு எனக்கு அருள் புரிவாய் சுவாமிமலைக் கடவுளே.
விளக்கம்
1. அஞ்ஞான வேரினைக் " கல்லாதவன்" என்ற இடத்தில் கல்லாதவன் என்பதில் கல்லி = பிடுங்கித் தூர எறியாதவன் என்ற பொருளில் வருகிறது. அருள் மறை கலாதவன் என்ற இடத்தில் கல்லாதவன் என்பது இடக்குறையாக கலாதவன் என்று வருகிறது.
2. பாத நளினம் = உருவகமாய் வந்துள்ளது.
பாடல்..10
அடந்தோதுவார்க்கு உணவு . . . . என்ற பாடல்
அடந்தோதுவார்க்கு உணவு = வேதத்தைக் காலையிலும் மாலையிலும்
முறைப்படி ஓதுவார்க்கு உணவு.
விலைகொடுத்து உயிர் காத்தல் = பணம் செலவழித்து நோயுற்றோர் உயிர் காத்தல்,ஆதுலர்ச்சாலை சோலை = வழிநடப்போர் வருத்தம் போக்கச் சாலையும், சோலையும் அமைத்தல்,
ஆறுசமயத்தவர்க்கு அமுதோடு = ஆறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் உணவும், உடையும் வழங்கல்,
அறவைப்பிணம் சுடுதல் = யாருமற்ற அனாதைப் பிணங்களுக்கு
சம்ஸ்காரம் செய்து,எரியூட்டல்
அற
வைத்தூரிய மடம் = அறத்தின் நிலைக்களனாய் விளங்கும் மடம்
அமைத்தல்,
தண்ணீர்ப்பந்தல் = வழி நடப்போர் தாக்கம் தீர்க்கும் தண்ணீர்ப்பந்தல்
அமைத்தல்,
கண்ணாடி = பார்வையற்றோருக்குக் கண் பார்வை நல்கும் கண்ணாடி
வழங்கல் ,
காதோலை = சுமங்கிலிகளுக்குக் காதுத் தோடு வழங்கல்
கண்மருந்து = கண் நோய்க்கு மருந்து வாங்கி அளித்தல்,
ஐய நோய் மருந்து = சந்தேகத்தைத் தீர்க்கும் அறியாமை நீக்கக் கல்வி
புகட்டும்
பள்ளிகள் அமைத்தல்,
மகவு
பெறுவித்தல் = மகப்பேறு காக்கும் மருந்தகங்கள்,ஏற்படுத்தி
மருத்துவச்சிகள்
பணிக்கு அமைத்தல்,
பசுவுக்கு வாயுறை = பசுமாடுகளை வளர்க்க உறைவிடம் ஏற்படுத்தி,
வாய்
நிறையப் புல் அளித்தல்,
மகவளர்த்தல் = பசு ஈன்றெடுத்த கன்றுகளைக் காத்து வளர்த்தல்,
பால் வார்த்தல் = கன்றுகளுக்குப் பாலை வயிறு நிறைய அளித்தல்.
எண்ணெய் = எண்ணெய் நீவி அவைகளின் உடல் பேணுதல்,
திடந்தரும் விலங்கினுக்கு உணவு = வலிமை மிக்க காளைமாட்டிற்கும்,
எருமை நாட்டிற்கும், பிற காட்டு விலங்கினத்திற்கும், உணவு அளித்தல்,
பிறர் துயர் காத்தல் = யாராயினும் துயருற்றால் உடன் உதவி செய்தல்,
தின்பண்டம் = குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தின்பண்டம்
வழங்குதல்,
ஏறுவிடுதல் = காளைகளைத் திடலில் விட்டு,வாலிபர்களைக் கொண்டு
அடக்கிப் பிடிக்க வைத்தல்,
சிறைச்சோறு = சிறைக்கைதிகளுக்கு உணவளித்தல்
மா உறிஞ்சு
தறி அறவைச்சோறு = உடலை மிகுந்து வருத்தும் நெசவுத்
தொழிலாளிகளுக்கு நல்ல சத்துள்ள உணவு வழங்குதல்,
திகழ் கணம் வணா = இப்படித் திகழ்கின்ற கூட்டத்தினரைப்
பாதுகாத்தலோடு,
நாவிதன் = முடிதிருத்துவோர்க்கு உதவுதல்,
தடந்தையல் போகம் = நன்னடத்தை மிக்க பெண்ணை மணந்து,
அவளோடு இன்பம் கண்டு வாழ்தல்,
கணித்தான தர்மம் = இவைகளைக் கணிக்கும் தானங்கள் தர்மங்கள்
செய்வதற்கு
தர்மசம்வர்த்தனி சுதா! = அறம் வளர்த்த தேவியான பாரவ்தி அம்மையின்
மகனே!
தயை செய்வாய் = கருணை புரிகுவாய் .
தாமநிலை . . . . . . முருகனே! = சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள
சுவாமிநாதக் கடவுளே!
கருத்துரை
இந்நிலவுலகில் எல்லோருக்கும் உதவி செய்யவும், பண்பாடுகளை வளர்க்கவும், விலங்கினங்களைக் காக்கவும் தொழில் செய்வோருக்கு நல்லுணவு உடை அளிக்கவும் இவை போன்ற தான தருமங்கள் செய்யவும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகனே எனக்கு அருள் புரிகுவாய்.
விளக்கம்
ஆதுலர் = வழிப்போக்கர்
பாடல்...11.
கொடை வளம் பேரறிவு எனத் தொடங்கும் பாடல்
பொருள்
கொடைவளம் ............. க்ருபாகரா! = கொடை, ஈகை, வரம், பேரறிவு, பேராற்றல், பேரரசு, எல்லாம் அறிந்து எல்லோர்க்கும் தன்மை ஆகிய யாவும் கொண்டு ஒழுகுகின்ற அனைத்து நிறைகுணக் கடவுளே!
குருபரா! = ஆசானுக்கும் ஆசானே!
நாலுகத்தில்
. . . . . எனவும் = கிருத, த்ரேதா ,த்வாபர, காளி என்னும் நான்கு யுகங்களில் நான்காவதாக விளங்கும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீயே ஆகும், எனக் கருதிப்போற்றி வரும் அன்பர்களைக் காத்து ரக்ஷிக்கும் உண்மைக் கடவுளே!
பெரியர்கள் . . . . . . எண்ணி = சான்றோர்கள்
அடையாளமாக, அடைக்கலமாகச் சொல்லும், உறுதிச்சொல் அனைத்தும்,உன்னையே குறிப்பிடுவதாக ஒவொரு நாளும் எண்ணி,
அடியனேன் வரம் ஒன்று பெற நாடினேன் = அடியவனாகிய யான் தங்களிடம் வரம் ஒன்று பெற்றிட விரும்பி நாடி வந்துள்ளேன்.
அதும் அடிகள் திருவுளம் அறியுமே = அப்படி நான் வரம் கேட்க நினைப்பதும் தங்கள் அறிந்த ஒன்றே.
தடையிலாது என் எண்ணம் = அவ்வரத்தைத் தடையில்லாமல் எனக்கு அளித்து, என் வேண்டுகோளை ஏற்று அருள்வாயாக.
தகு சோழ வளநாட்டிடை = தகுதி மிக்கதாகிய வளம் நிறைந்த சோழ வளநாட்டின்
கண்
தாமநிலை . . . . . .முருகனே! = அமைந்துள்ள சுவாமிமலையில் கோயில் கொண்டுள்ள சுவாமிநாதக் கடவுளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக