ஞாயிறு, 23 ஜனவரி, 2022

ஞானமலை அலங்காரம்

                                                                        உ 

                                       ஞானமலை   அலங்காரம்  

                                                  சரவணபவ ஓம் 

                                                     காப்பு 


           ஞானமா    மேலோனே!  ஞாயிற்றின்  வெண்ணிலவின் 

           மோனமா  வேலவனின்  மேதக்க    -----------  ஞானமா 

           பாமாலை    சீர்மேவு     பாவால்    அலங்காரத் 

           தேமாலைத்     தீந்தமிழ்   கா 



                                                      பொருள் 

      ஞானங்களை   அருளும்   ஞான    ஆசானாம்   உயர்ந்தவனே !  வீரத்தின் 

ஞாயிறாகவும், ஈகை  இரக்கம் கருணையில்  தண்மை மிகுந்த  நிலவாகவும்,

விளங்குகின்ற  அழகையும், அமைதியையும்  கொண்ட  வேலவனின்   

தந்தைக்கே  உபதேசம்   செய்த மிக்குயர்ந்த  ஞானத்தை,ஞான மேன்மை 

போற்றும்   பாமாலையாகவும், வீரம்  கருணை,ஆற்றல், அழகு ஆகிய 

சிறப்புக்களைச்   சீர்மை  மிக்கதாகிய  ஆசிரியப்   பாவகையால் 

அலங்காரமாய்,   அலங்காரம் போற்றுகின்ற   வருணனைகளால் 

தேன்போன்ற  சுவைமிகு   மாலையாய்   இனிய  தமிழ்   மாலையாய் 

ஞானமலையில்   வீற்று அருள் பாலிக்கும் முருகன்   ஆதலின்  " ஞானமலை 

அலங்காரம்"  என்ற பெயரில்  படைக்க   இருக்கும்  பாமாலையைக்  காத்தும்,

பாமாலைத்    தலைவனைக்  காத்தும், பாமாலையைப்  படிக்கும் 

அன்பர்களைக் காத்தும்,காப்பாற்றுவாய்! என்று    ஆசிரியர்   வேண்டுகிறார்.


                                                           விளக்கம் 

1.   நூலைப்  படைக்கும் முன் காப்புச்செய்யுள்  இயற்றுவது  வழி வழி மரபு.

2.   காக்கும்   கடவுள்   கணபதி  ஆதலின்  அவரைப் போற்றிய பின்னரே 

      நூலைத் தொடங்குவர்.

3.   ஆசிரியரும்   அப்பண்பு  தழுவிக்  காப்புச் செய்யுள்  படைத்துள்ளார்.

4.   நூலின்   முதற்சொல்   மங்கலமாய்  அமைதல்  வேண்டும்.

     பெரியபுராணம் பாடிய   சேக்கிழார் சுவாமிகளும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், இராமாயணம் பாடிய 

கம்பநாடரும்    "உலகம்"   என்ற உயர்ந்தோங்கிய  மங்கலச் சொலாலே 

தமது காப்பியத்தைப் படைத்தனர்.

5.   இந்நூலின் முதற்சொல்  ஞானம் .  நிறை மங்கலச் சொல் இது.

அனைத்தையும்  அறியவும், இறைவனை அறியவும்,மங்கலங்களை 

அறியவும்  ஞானமே  முதற்படி. ஆதலின் இச்சொல்   மங்கலம் ஆகிறது.


6.  இதன்பின்   ஞாயிறு,வெண்ணிலவு,வேல்,பா, தீந்தமிழ்  போன்ற   சொற்களும்  பயின்று  இந்நூலை மங்கலம்   ஆக்குகிறது.

7.   நேரிசை   வெண்பாவால்   அமைந்தது   இப்பாடல்.

8.   ஞாயிற்றின், வெண்நிலவின்   ஞானமா மேலோனே!  என்று 

      விநாயகப் பெருமானுக்கும்,

     ஞாயிற்றின்   வெண்ணிலவின்   மோனமா வேலவனே!  என்று 

    முருகப் பெருமானுக்கும்  அடைமொழியைச்  சிறப்பாகக் கொள்க.

9.   மூன்றாம்   அடியில்   அமைந்துள்ள   "சீர்மேவு"   என்ற   சொல் 

மத்திம தீவகமாய் நின்று,   சீர்மேவு   பாமாலை,எனவும்,  சீர்மேவு  பாவால்,

என்று நின்றும், சீர்மேவு    அலங்காரம்  என்றும் நின்று   பொருள்   தருகிறது.

10.  "தேமாலைத்   தீந்தமிழ்"   என்ற இடத்தில்   தேனுடைய மலர்களால் 

கட்டப்பட்ட பூமாலை.  இனிக்கின்ற  சொற்களால்  உருவான தமிழ் மொழி.

தமிழ் மாலை. அது  தேன்போன்றது; இனிமை உடையது .என்பதோடு 

இனிமையும்,தேனும் கலந்த  மொழி தமிழ்  என்ற பொருளும் சுவைக்கத் தகுந்தது.

    


                                                       அவையடக்கம் 

                              எண்சீர்க்   கழிநெடில்   ஆசிரிய விருத்தம் 


சண்முகம்   என்றுபோற்றிச்   சாத்திரங்கள்  பலசொல்லும்,

     உண்முகச்    சைவமணி  உலகத்து   மாச்சுடர் 

பண்ணெடுத்துப்    பாடுதலோ    பேறுற்ற   அருணகிரி 

     கண்ணான    குமரகுருச்     சான்றோர்க்கு   நல்லருளாம்;

மண்துகளால்     மாளிகையை     மேல்மேலும்   கட்டநினை 

     எண்ணம்போல்    என்னாவும்    ஏற்றகவி   இயற்றிடவே 

எண்ணிட்டேன்;     இருந்தாலும்    ஏரகத்தான்    சீர்புகழைக்

     கொண்டதனால்   குமரனருள்    காத்துயர்வு    கொடுத்திடுமே.


                                            பொருள் 


    சண்முகன்  என்ற   தாரக மந்திரத்தைப்  போற்றியே  சாத்திர நூல்கள் 

எல்லாம்   அவனைத்  தலைவனாகப்  படைக்கின்றன.

   உள்ளமெல்லாம்   ஒரு முகமாய்  நின்று  சிவா வழியாம்   சைவநெறி போற்றும், ஒளிர்மணி  அவன்; உலகில்  விளங்கும்  ஞாயிறு,நிலவு, அக்கினி 

இவைகளை அருளிய, இவைகளுக்கு   மேலான பெருஞ்சோதி   அவன்.

   அவனைப் போற்றுதல், பாராட்டுதல்  எல்லோர்க்கும்  அமையாது. குமரன் 

போற்றும் குணக்கவிக் குன்று  எனப்பெயர் பெற்ற  அருணகிரியார்,கண்ணால் 

கந்தனைக்  கண்ட  குமரகுரு போன்ற சந்தக்கவிச்  சான்றோர்களுக்கே அது 

சாலும்.

   கைநிறைய தூசிமண்ணைச்  சேர்த்து வைத்துக்கொண்டு,மிக   உயர்ந்த 

மாளிகையைக்  கட்ட  விரும்பும் தாழ்ந்தோன்போல்   அவன் கொண்ட 

பேராசை  எண்ணம்போல்   அடியேனும்   என் நாவால்  ஞானமலை  

முருகனைப்  போற்றும்  அலங்காரம் என்னும் கவிதையை  இயற்றிட 

முனைகின்றேன்.

சொல்லும்  சொற்கள்,மன  எண்ணத்தின் வெளிப்பாடு, அவ்வெளிப்பாடும் 

ஞானகுரு சுவாமி மலையான் ஞானமலையான்  புகழையே  பாடும். "முருகன் 

புகழ் என்ற ஒன்றையே கொண்ட   இந்நூல்  முருகன்  அருளுக்குப் பாத்திரம் 

ஆகும்" என்ற  மனம்  இயற்றுகிறது  இந்நூலை.

     கந்தனே!  ஞானமலை  ஞானமுருகா! எளியேன்  சொல்லை ஏற்று 

இரக்ஷிப்பாய்,  என்று பணிந்து  போற்றுகிறார்    ஆசிரியர்.


                                            அவையடக்கம்

  அவை  முன்னர்   அடக்கம் கொள்ளுதல் மரபு. அதேவழியில் நூலை 

இயற்றும்   ஆசிரியன்  தன்னைத் தாழ்த்தி  அவையினரை உயர்த்தி 

அமைத்தல்  அவையடக்கம்   ஆகும்.

1.  சண்முகன் புகழ் பாடும் கவிஞன் என்ற தகுதி  தனக்கில்லை.

2.  அருணகிரியார்,குமரகுருபரர் போன்றோரே ஆறுமுக  அருட்கவிஞர் 

     ஆவர்.

3.   மண்துளி   கொண்டு மாளிகை கட்ட நினைக்கும் மட மனம்.

4.   ஆயினும் "முருகன் புகழ்"  என்ற கருத்தாழம் அருள்பெற  வழிவகுக்கும்.

5.   முருகனும்   ஏற்றிடுவான்.

6.   முருக பக்தியே   இந்நூல் இயற்றிடப்   பேரருள்  சுரக்கவைக்கும்.



                            ஞானமலை    அலங்காரம் .  1


மலையுற்றாய்    ஞானமாய்;   மலருற்றாய்     மோனமாய்;

       மகிழ்வுற்றாய்     கானமாய் ; மதியுற்றாய்     வானமாய் ;

கலையுற்றாய்க்     காட்சியாய்க்      கனிவுற்றாய்    மீட்சியாய்;

        கனலுற்றாய்      வீழ்ச்சியாய்;     கதியுற்றாய்ச்    சாட்சியாய்;

நிலையுற்றாய்     நித்தியமாய்;        நினைவுற்றாய்க்    கத்தியமாய்;

      நிதியுற்றாய்ச்     சத்தியமாய்;     நிகருற்றாய்ப்     புத்திரனாய்;

தலைஞான      மலைமீது       கலைஞான    வள்ளியோடு 

      தலைவனாய்த்     தத்துவமாய்த்    தரணிகாக்கும்   சண்முகனே!



                                                       பொருள் 

         ஞானமாம்    மாமலையை    உனதாக்கிக்   கொண்டவனே! மோனத்

தவத்திலே    மலராய்  மலர்ந்து,மணம்   வீசுபவனே!  இசையாய்,ஸ்வரமாய் 

மாறி   உலகோர்  மனமெல்லாம்  நிறைந்து   மகிழ்ச்சி    ஆனவனே!  பரந்த 

வானத்    தண்மதியாகிக்    குளிர்ச்சியும்,   மகிழ்ச்சியும்   அளிப்பவனே!

           தன்னை   வணங்குவோருக்குக்     காட்சி   அளித்துக்    கலையாய் 

நிற்பவனே!  ஆன்மாக்களை    மீட்டெடுத்துப்   பிறவிப்பிணி    அறுத்துச் 

சிவப்பேறு   நல்கும்   கனிவுடையவனே!  அரக்கர்களையும், தீய 

சகதிகளையும் வீழ்ச்சி  அடையச்    செய்வதில்   கனலாய்த்   தீப்பிழம்பாய் 

ஜொலிப்பவனே!   தன்னை     நாடிவரும்   ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும்,

நல்லடியவர்களுக்கும்   காட்சி  கொடுத்து,  நற்கதி    அருளும்   ஆண்டவனே!

         அழியாத   நித்திய   ஜோதியாய்    நின்று,நிலைத்து  வாழ்   தெய்வமே!

வேதங்களாகிய   கத்யத்தால்   (கத்யம்= செய்யுள்)   போற்றப்பட்டு,  மூவேழ் 

உலகத்தோர்    நினைவிலும்  நிற்பவனே!  உண்மை என்னும்     உயர்ந்த 

வடிவமாகி,  அதனையே   அழியாப்     பொருளாய்க்   கொண்டவனே!  மகேசன் 

மகனாகத்    தோன்றி   மகேசனுக்கே    உபதேசம்   செய்து,   அவனுக்கு   

நிகரராகி,  அவனின்  மேலாக   அவனது   நாதனும் (சுவாமிநாதன்)

ஆனவனே!

           உயர்   ஞான  மலைமீது,  மான் பெற்றெடுத்த   வள்ளி நாயகியோடு,

தரணி    போற்றும்   தலைவனாய்த்  தத்துவப்பொருளாய்    நின்று   மூவேழ்   

உலகங்களையும்  காக்கும்   சண்முகனே! 

     எங்களையும்   காத்து   அருள்வாய்"  என்று  ஆசிரியர்   வேண்டுகிறார்.


                                                            விளக்கம் 


1.  மலருற்றாய்   மோனமாய் =

       மோனம்= மௌனம்.  தவம் 

மலர்---   வண்ணம் கொண்டது;மணம் உற்றது.

                  அரும்பாகி, குவிந்து,  இதழ் விரித்து   மணம் பரப்புவது.

மோனம் =  அசையாத  தன்மை.  அமைதி காத்தல். பற்று விட்டும்,விடாமலும்.

                        அறவே  பற்றறுத்தல் . பேறடைதல்..

2.   கனிவுற்றாய்   மீட்சியாய்=

     கனிந்த கனி.  கனிவுடைமை.

    ஆன்மாக்களின் மீது கனிந்த  இரக்க   உணர்வு.

   மீட்சி =  மீட்டெடுத்தல்.

                    பிறவிப்பிணி  மீண்டும்,மீண்டும்  வாராது   தடுத்தல்.

                    சிவப்பேறு   அளித்தல் .

3.  கதியுற்றாய்  சாட்சியாய் =

     முருகனே   கதி   என்றடைதல் .

     தவமும், பூஜையும்   முருகனே.  என்றிருத்தல் .

    சாட்சி  =   சூரபன்மன்  =  மயில், சேவல் .

    குமரகுருபரர்,  அருணகிரி    மற்றும் பலர்     ஆட்கொண்ட முறை.

4.  நிகருற்றாய்  புத்திரனாய்  .....

     நிகர் =  சரி சமானம் 

     புத்திரன் =  முருகன் 

     தந்தை    =  சிவபெருமான் 

     தந்தைக்கு   மகன்   பிரணவ உபதேசம்  செய்தான்.  அதனால் 

    " சுவாமி நாதன்"  ஆனான்.

      நிகராக   மட்டுமன்று;  மேலும்  உயர்ந்த  தன்மை  அடைந்தான்.

5.  கலை   ஞான  வள்ளி  .......

     கலை களும்  ஞானமும்  பெற்று விளங்கும்  வள்ளிப் பிராட்டியார்.

    கலை =  மான் 

    ஞானம்  =  சுமந்து   பெற்றெடுத்த  குழவி 

    வள்ளி    =   வள்ளிப்பிராட்டியார் .


                                           பாடல்..  2

                            அறுசீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம் 


சண்முகா!  சண்மதச்    சாத்திரச் சான்றே!

             சங்கத்   தமிழே!

வண்ணக்    கலாப   வளமயில்     வாகன!

            வரகுண!    சரவண!

மண்ணும்   மலையும்    மதியும்   ஆனவ !

            மலரடி     மாதவ!

விண்ணிகர்    ஞான    மலைவாழ்    வித்தக !

           வியந்துனைப்    பணிந்தேன்.


                                                பொருள் 

ஆறுமுகா!  சைவம், சாக்தம், சௌரம், வைணவம், கௌமாரம், காணாபத்யம்  என்ற ஆறுவகைச்   சமய நூல்களெல்லாம்  போற்றுகின்ற   முதன்மைச்   சான்றானவனே! 

முச்சங்கத்திலும்  போற்றப்பட்ட   முத்தமிழாக விளங்குபவனே!  

வண்ணங்கள்   ஒளிர்விடும்   தோகை   கொண்ட மயிலை  ஊர்தியாகக் கொண்டவனே! 

வணங்கும்  அடியவர்களுக்கு  வரன்கள்  வழங்கிக்  காப்பவனே!  

சரவணப்   பொய்கையில்  மலர்ந்தவனே!  

மண்ணாம்   உலகமும் நீ,  வளர்ந்து   உயர்ந்த   மலையும்  நீ, வானில்  வந்து தண்ணொளி   வீசும்   நிலவும்  நீ,  மலர்  போன்ற  பாதங்கள்   கொண்டு விளங்கும்  மாதவனே!


விண்ணுலகிற்கு   நிகராய்   விளங்கும்   ஞானமலையில்   வீற்றிருக்கும் ஆசானே!  

உன்  பெருமை,  உன்  புகழ்  வியந்து  வியந்து  உன்னைப்  
பணிகிறேன்.  

                                                              விளக்கம் 

  சண்மதம்   =  ஆறுமதங்கள் 
 சங்கம்  =  மதுரை  நகரில்   அமைந்த   முதல், இடை ,கடைச்சங்கங்கள் 
 மலரடி  =  மலர்போன்ற  அடி.  உவமைத்தொகை 


                                                                பாடல்..3.

பணிந்தே   உன்னைப்   பலகாலும்   போற்றாது,
                  பாழ் உடல்    வளர்த்தேனே!
பணிந்தோர்    போற்றிய   பாழ்சொல்லில்   மயங்கி,
                 பாசவாழ்வு    வாழ்ந்தேனே!
அணி அணி    அழகினை   அழி அழி   சவவுடல் 
                 தழு தழு     கெட்டேனே !
மணி கிங்   கிணி கழல்   பணிசுழல்   அடியருள் 
                மதிஞான      மலையோனே !

                                              பொருள் 

            மணியொலிக்கின்ற  கிங்கிணி   ஒலியெழுப்பும்  கழல்  அணிந்த 
கால்களை  உடையவனே!  மதி  தவழும்   ஞான   மலைமீது  அமர்ந்திருக்கும் 
முருகா!   உன்னைப்ப் பணிந்து,  உன்  புகழைப்    பலகாலம்   போற்றாமல் 
இந்தப்   பாழ்பட்ட   உடலை  நன்கு   வளர்த்தேன்.  என்னைப்   பணிந்து   என் 
புகழ்   பாடிய  சொற்களில்  மதிமயங்கி  உலகத்தின்   மீதும்,பொருள்களின்  மீதும்   பற்று கொண்டு   வாழ்ந்தேன்;  அணிகளாலும்,  அணிந்த  உடல்களாலும்  தனது   அழகை   வெளிப்படுத்திய   உடலை,  அழிந்து  சவமாய் 
மாறப்போகும்   உடல்களை  ஆரத்தழுவி  ஆனந்தம்  இன்பம்   என்றவைகளை 
அடைந்து  கெட்டுப்போனேன்.என்னை   இந்நிலையிலிருந்து   காத்த கடவுளே!
இனி   நீயே  எனக்கு   நற்கதி   ஆவாய்   என்று  புலம்புகிறான் .

                                                               விளக்கம் 

கண் கண்ட   காட்சியினால்   கீழ்  நிலைக்கு   ஆளான  மனிதனது  புலம்பல் 
இப்பாடல். 

பாழ் உடல்........    அழகும், அணிவகைகளும்  ஆடம்பரங்களும்  கொண்டு 
உலவும்   இவ்வுடம்பு   நாற்றமும், நலிவும், கொண்டு  ஒருநாள்  அழிந்தே  தீரும்.
ஆதலின் இவ்வுடல்   பாழ்பட்ட   உடலாகும்.
பாசவாழ்வு .........      சுற்றத்தின்  மீதும்   பொருள்களின் மீதும்  கொள்கின்ற 
பிடிப்பு,பிணைப்பு   பாசமாகும்.  அப்பாசம்   குளத்தைக்  கெடுக்கும்;
குலத்தையும்  கெடுக்கும். பதியை   அடைய வேண்டின்   ஆன்மாவாகிய   நாம் 
பாசத்தைத்   துறக்கவேண்டும்.

"மைத்தானக்   கண் மடவார் தங்களோடு 
     மாயமனை  வாழ்க்கை  மகிழ்ந்து   வாழ்வீர்!"

என்று பாச வாழ்வைச்  சாடுவார்   அப்பரடிகள்.

                                                       பாடல்  ..4 

மலைமகள்   தருஞான   மணிவேலால்  பெருவெற்றி 
                        மதிச்சடையோன்    மகிழ்ந்தாட,
சிலப்புருவச்   செவ்வந்தி   சிறப்பான   பரிசாகச் 
                       சினவேடன்    சீர்மகளாம் 
கலைவள்ளிக்   காலடி   கலையாத   நடையாகிக் 
                       கரம்கொண்ட   காரழகா!
குலைத்தெங்கு   குரங்காடும்   அலைமேகக்   கலைக்குன்று 
                       குடிகொண்ட   குருமுருகா!

                                                     பொருள்  

     மலைமகளாம்  தாய்   அளித்த   வேலால். ஞானத்  தவ  மணி   வேலால்   
சூரபன்மாதி   அரக்கர்களை வெற்றி கொண்டதால் மகிழ்ச்சியுற்ற  
சிவபெருமான்  மகிழ்ந்து   ஆடவும்,  
    அரக்கர்களை   அழித்த   சுப்பிரமணியக்   கடவுளுக்குத்   தன்மைகளான 
வில்போன்ற  புருவமும், செவ்வந்தி மலர்போன்ற   அழகும்  கொண்ட 
தேவயானையைப் பரிசாக அளிக்கவும்,
      சினமுடைய  நம்பிராஜன்   என்ற  வேடகுல   மன்னன்  அன்பு  மகளான 
கலையே உருவான  வள்ளியை  விரும்பி,அவள்   காதலை  வேண்டி   அவள் 
பின்னால்   சுற்றிச்சுற்றி   வந்து, அவள்   காலடியே   கதியெனக்   கிடந்து,
அவளையும்   மணந்துகொண்ட   கார்   வேடனாகிய  அழகா!
  குலைகளைக்   கொண்ட  தென்னை  மரங்களின்  மீதேறி விளையாடும் 
குரங்குகளும்,  அலை அலையாய்   மேகங்களும்   சூழ்ந்து   விளங்கும்  அழகு 
மலையான   ஞான மலையில்   குடிகொண்டு   அருள் புரியும்  குருவான  
முருகனே!  போற்றி .

                                             விளக்கம் 

மதிச்சடையோன்  =  சிவபெருமான் 
செவ்வந்தி                =  தேவயானை 
காலடி   கலையாத   நடை  .....  வள்ளியின்   பின்னே சென்று  காதல்   பேசி,
நடக்கும் அவளது  கால்கள்  நோகுமே   என்று அவளைத்   தூக்கிக் கொண்டு 
முருகன்   நடப்பதால்   நடக்காத   காலடி   கொண்டவள்   என்றும்,
அவள்   நடக்க,அவள் பின்னே   அவளது  காலடிச்சுவடு   கலையாத  நிலையில் 
மென்மையாக நடந்தான்   முருகன்   என்றும்   பொருள் கொள்க.
குரங்காடும்  ....என்பதால்   மலை  வளமும்,
மழைமேகம்    ..... என்பதால்   ஞானமலையின்  கருணையும்  விளக்கப்படுகிறது. 

                                              பாடல்,,,5.

முருகன்    முதல்வன்   முனிவன்    முகிழ்நகை 
                      முறுவலன்   குன்றே!
அருகன்    அமலன்    அறிவன்    அறுபடை 
                     அமர்ந்தான்   குன்றே!
குருகும்     குயிலும்      கிளியும்   கோழியும் 
                     குலவும்     குன்றே!
பெருகும்    வளமும்    உருகும்    மனமும் 
                     பரிவருள்    குன்றே.

                                         பொருள் 

   அழகே  உருவானவன்;  மூவேழ் உலகங்களுக்கும்   முதல்வனானவன்;
பற்றற்றுப்  பழனிமலையில்   நிற்கும்  மாமுனிவன்;ஆயினும்   முகிழ்க்கும் 
சிரிப்பினைக்  கொண்டவன்   வீற்றிருக்கும்   ஞானமலை.
    தகுதி   மிக்கவன்;  தூய்மையே   வடிவானவன்;  அனைத்தும்   அறிந்த  அறிவன் ;  அறுபடை   வீடுகளிலும்   அமர்ந்தவன்   அமர்ந்திருக்கும்  ஞானமலை.
    குருகுகளும்,குயில்களும்  கிளிகளும்,சேவற்கோழிகளும் மகிழ்வுடன் 
கூடிக்  குலவுகின்ற   வளமும்   அமைதியும்   நிறைந்தது  ஞானமலை.
    வந்து   வணங்கியதால்   வாழ்வில்   பெருகுகின்றது   வளமே. முருகனைக் 
கண்டதும்   மனமெல்லாம்   உருகுகின்றது. இப்படிப்பட்ட   பரிவினை 
அருளாக  வழங்குவது   ஞானமலையே  ஆகும்.

                                   விளக்கம் 
  முனிவன் =  ஞானி,  பற்றற்றவன், 
  அருகன்   =   மூவர்க்கும் மேற்பட்ட  தகுதி  உடையவன், ஆன்மாக்களின் 
                            அருகு  இருந்து அருள்பவன்.
  அமலன்   =    தூய்மையே  வடிவானவன்,  ஆணவமலங்கள்  அண்டாதவன்.
  அறிவன்   =    அறிவே  உருவானவன், தந்தைக்கே  உபதேசித்தவன்.

                                 பாடல் ...6.

குன்றம்   எறிந்தானைக்   குவலயம்   காத்தானைக் 
                    குன்றாத    மனத்தானை,
வண்டார்    குழலி    விண்மகள்   வேட்டானை,
                     வள்ளியை    உள்ளினானைக் 
குன்ற      வில்லியார்    குணத்தினை   வெறுத்துக் 
                   குன்றுகுடி     கொண்டானை,
மன்றத்    தமிழின்     மாப்பொருள்    உரைத்தானை,
                    மறக்கும்   நாளுண்டோ?

                                பொருள் 

     தாரகனின்   மாயமலையாகிய    கிரௌஞ்ச   மலையைத்   தனது  வேலால் 
வீழ்த்தியவன்;    சூரன்  முதலிய   அரக்கர்   கூட்டத்தை   அழித்து மூவேழ் 
உலகங்களையும்   காத்தவன்;  தன்னை  நாடிவரும்,  வணங்கிப்   போற்றும் 
அடியவர்களுக்கு  அருளையும்,  அன்பையும்   வழங்குவதில்   நிறைந்த மனத்தை   உடையவன்;
          வண்டுகள்   மொய்க்கின்ற   மலர்க்கூந்தல்  கொண்ட   இந்திரன் 
மக்களாகிய   தெய்வயானையை   விரும்பி   மணந்தவன்;  தன்னை 
அடைவதையே  தவமாகக்  கொண்ட   வள்ளியம்மையாரைத்   தானே 
தேடிச்சென்று  விரும்பிக்   காதலித்து  மணம்   கொண்டவன்;
        மேருமலையையே   வில்லாகக்  கொண்டவராகிய   சிவபெருமான் 
நடத்திய   ஞான   நாடகத்தை  வெறுத்தவன்; தந்தை  தாய்  பிரிந்து,  தனியே 
பழனிக்   குன்றத்திலே  ஆண்டிக்   கோலத்தில்   அமர்ந்தவன்;
         மதுரைத்    தமிழ்ச்சங்கத்திலே   இறையனார்   அகப்பொருளுக்குப் 
பலரும்   எழுதிய   உரையில்  சிறந்த   உரையாக   நக்கீரரின்  உரையை 
உருத்திர சன்மன்  என்ற புலவனாய்  வந்து தேர்ந்தெடுத்தவன்.
           வீரம்,அருள், காதல், ஆளுமைத்திறன்,  ஆழ்ந்த புலமை  கொண்டவனாகிய   ஆறுமுக  நாதனை  ஒரு நொடியேனும்  மறத்தல் 
இயலுமோ?  மனமும்,நினைவும்  அவனே   அல்லவா!
  

                                           பாடல்  7.

உண்டெனில்   உரைக்க;  உரையா   நால்வாய் 
           உயர்சிரம்    ஒருகுட்டு .
பண்டெனில்    பகர்க ;  பகராப்    படைப்போன் 
           பார்த்தான்    சிறையை.
கண்டெனில்     காண்க;   காணாக்    கடையேன் 
           கண்டிடக்     கண்ணருள்.
விண்டிட    விரியும்,   வியன்மலை   வேலவன்,
           ஒண்புகழ்க்    கேடுண்டோ?

                               பொருள் 

      அகந்தையுற்ற  நான்முகன்  எம்பெருமான்   சிவனைக்காண   வெள்ளிமலை 
வருகிறார். வாயில்  வலப்புறம்   வீற்றிருந்த   முருகனைப்   போற்றாமலும்,
வணங்காமலும், "யான்   காண   வந்தது  சிவனை.  அவனது   மகனை   அன்று"
என்று  நினைந்து  கர்வத்தோடு   உள்ளே  செல்ல  முனைகிறார். அவரைத்  தடுத்து  நிறுத்திய   முருகன், தாங்கள்   யார்?  என  வினவுகிறார். நானா?
நான்தான்   படைப்புக்  கடவுள். என்று   இறுமாப்போடு  கூறிய  பிரம்மனிடம் 
தாங்கள்   எதன்    அடிப்படையில்   படைப்புத்   தொழில்   ஆற்றுகிறீர்கள்? என 
முருகன்   வினவ, வேதத்தின்   அடிப்படையிலேயே   படைக்கிறேன். அவ்வேதத்திற்கும்   நானே   மூலம்   ஆவேன்",  என  மீண்டும்   கர்வம் காட்டுகிறார்.  சற்றே   சிரித்த   முருகன்  வேதத்தின்   முதல்   எது? என்கிறார்.
பிரணவமே   ஓம்காரமே   முதலாகும்.என்கிறார்.  நான்முகரே!   அந்தப் 
பிரணவத்தின்   பொருள்   அறிவீரா? அறிந்தால்   கூறுங்கள்   பார்க்கலாம்"
என்றதும்,  மாயை,  மமதை,  சான்றோர்   போற்றாமை  போன்றவற்றால் 
பொருளை   விரித்துரைக்க   இயலாமல்   விழிக்கிறார்,
      பிரணவத்திற்குப்   பொருள்   உண்டு   என்றால்   அதனை  குறைக்கவும்"
என்றமுருகனது   வினாவிற்குப்   பொருளை   உரைக்க  இயலாது  நால்வேத 
வாயும், நான்முகமும்   கொண்டவன் விழித்தபடி நிற்க,  ஓம்காரப்  பொருள் 
தெரியாத   உன்   தலையில்  ஒரு   குட்டு   என்று  நான்முகன்   தலையில் 
சின்முத்திரை   பூண்ட   தனது   வலக்கரத்தால்   குட்டு   என்னும்   தீக்கை 
செய்தான்   முருகன்.
        தொன்மை மிக்க   படைப்புத்   தொழில்  இனி  தாங்கள்   ஆற்றுவது 
முறையாகுமா? பகருங்கள்.   பகர இயலாது   நின்ற  படைப்போனைச் 
சிறையிலே   அடைக்க   ஆணை  பிறப்பித்தார்  முருகன்.
      காணவேண்டிய   கருணைக்   கடவுள்   கந்தனே  என்பதை   உணர்ந்து 
காண்க.  என்னைப்போன்ற   கடையர்களால்   காணஇயலாமல் போய்விடும்.
கண்ணருள்  கொண்ட  கந்தக்கடவுளே!  கடையேனையும்   காத்திடக்  கண் 
அருள் பொழிவீர்களாக.
    அழகுமிக்க   ஞானமலையின்   புகழையும், அங்கு  குடிகொண்டிருக்கும் 
முருகன்   புகழையும்  விரித்துரைக்க   முற்பட்டால்   அது   வளர்ந்து கொண்டே 
போகும்.  எம்பெருமான்  முருகனின்   புகழுக்கு  இவ்வுலகில்   ஈடானது 
எதுவுமே   இல்லை.

                                           விளக்கம் 

நால்வாய்   உயர் சிரம்   ஒரு குட்டு :-   கந்தர் கலி  வெண்பா  பாடிய 
தெய்வப்  புலவர்  குமரகுருபரர் 
      "உகந்த  பிரணவத்தின்   உண்மை   புகன்றிலையால் 
       சிட்டித்  தொழிலதனைச்   செய்வதெங்கண்   என்றுமுனம் 
       குட்டிச்   சிறையிருத்தும்   கோமானே!"       என்று  போற்றுவார்.


                                         பாடல்--8

உண்டவனும்   உள்பவனும்   உணரவொண்ணா   உயர்சோதி,
                               உணர்ந்திடவே   உரைத்தவன்:
அண்டங்கள்    ஆட்டுவித்தான்   அண்டிவாழும்   அடிமையாய்,
                               அன்புற       ஆக்கியவன் :
துண்டான        தேமரமும்   தோகையாய்ச்       சேவலாய்த் 
                              தொழுதிடும்    தூயவன்:
கண்டவர்கள்   கழல்பணிந்து  போற்றுகின்ற   கருணைமலை  
                              கால்பதித்த   கோமகன்!


                                         பொருள் 

   உலகமாகிய   மண்ணை  உணவாக   உண்ட  மாலும், அவனது  தொப்புளில் 
தோன்றிய   நான்முகனும், பலகாலம்   தேடித்தேடி  முடியையும்,அடியையும் 
காணாது ம், அவனை   உணர ஞானமில்லாது   தவித்த பொழுது,பெரும் 
சோதியாய்   நின்ற  எம்பிரான்   சிவன், அவர்கள்   உணருமாறு  ஞானத்தை 
உபதேசித்த  மஹா  குருவுக்கும்  குருவானவனே!
      அண்டங்களையே   ஆள்கின்ற  பெரும்   வரபலத்தினால்   பேரரசனாகி 
அண்ட  சராசரங்களையும்   ஆளுமை  கொண்டு,அடக்கி,அடிமைப்படுத்தி,
விண்ணவரையும்,  மண்ணவரையும்   அடி,அடிமையாக்கிக் கொடுமைப்படுத்திய   சூரபன்மனை அவனது    மாயத்தை   வென்று,
மரமாகி   இருகூறான   அவனை   நல்வழிப்படுத்திய    அன்பு   ஆசானே!
       மாயத்தால்   மரமாகி   மாவேலால்   இரண்டாகப்  பிளக்கப்பட்ட  பின்னர் 
கர்வமுற்ற  அவ்விரண்டு   துண்டங்களைத்    தனது   நேரிய   நோக்கால் 
மயிலும்,சேவலும்   ஆக்கி, எப்பொழுதும்   தன்னை   வணங்கும்  நோக்கால் 
மயிலாய்  ஊர்தியாகவும், கொடிச்சேவலாகவும்   கொண்ட தூய  ஆசானே!
     விண்ணக  வேந்தர்களும்,  மண்ணக   மாந்தர்களும்   ஞான   மாமலையைக் 
கண்டவுடன்   கண்  பெற்ற  பயனாய்க்   கந்தன்   வாழ் மலை  எனக்  
கருணை   நல்கும்  சேவடியைப்   போற்றும் மலையிலே   மணம்   கொண்ட 
மாமகள்   வள்ளியுடன்  கால்  பதித்த   கோமகனே!  

                                     பாடல்  - 9 

கோமகனே!   குணக்குன்றே!   கோதிலாத   கோகிலத்தைக் 
                             குஞ்சரத்தைக்     கொண்டவனே!
நாமகளுக்      காழ்புலமை         நல்லாசான்     ஆனவனே!
                            நால்வேத              நற்சுருதியே!
ஓமதுவின்      உயர்பொருளை   அகத்தியர்க்    கருளியவா!
                            ஓங்காரப்              பேருருவே!
மாமதுரைப்   பேரரசி                மாக்கருணை    போல்விளங்கும்,
                             மாமலைமீ         தமர்ந்தோனே!

                                       பொருள் 

        அகிலாண்ட   கோடி  அரசனாக   விளங்கும்   சிவபெருமானின்   மகனே!
குளிர்வும்  வழங்குபொருளும், கொண்டு விளங்கும்   மலைபோன்ற  குணம் 
கொண்டவனே!  இனிமையாய்ப்   பாடும்  காட்டுக்குயில்  வேட்டுவ  வள்ளியையும் ,  தெய்வயானையையும்  மணந்தவனே!
        ஆழ்ந்த   புலமை  பெறுவதற்காக   உன்னை வேண்டித்   தவம்   இருந்த 
கலைமகளுக்கு  உயர் ஞானம்  உபதேசித்தவனே! நான்கு   வேதங்களின் 
நாயகனாகவும்,நல்ல  வேதங்களாகவும்   விளங்குபவனே!
        பிரணவத்தின்   பொருளைத்    தந்தை   சிவன்   அறிந்ததும், அப்பொருளை 
உன்னிடம்  வந்து வணங்கி   அறிந்த   அகத்திய  மாமுனிவனின்  ஆசானே!
பிரணவ   உருவமாய்   விளங்குபவனே!
         பெருமை   மிக்க   மதுரை   மாநகரின்   பேரரசியான   அங்கயற்கண்ணி 
அம்மையின்   கருணைபோல்   தன்னை   நாடிவந்தோரை   வாழவைக்கும் 
ஞான மலையின்   மீது   அமர்ந்து   உலகைக்   காப்பவனே!
           உன்னை வணங்கிப்   போற்றுகிறேன் .

                                             பாடல்  - 10 

அமர்வாழ்   சமர்புரி  சுமைவீழ்  தமர்பதம் 
                         அணைகரம்      உடையவர்!
உமைமகன்  உறுதவன்    உடைமலைப்   படையவன் 
                          உலைகனல்      உதித்தவா!
அமைவிடம் அகலொளி  தனில்சுடர்   நிலைமலை 
                           அதிலமர்     முதியவா!
எமையடை   எமபயம்    தமை,அடை     அருள்மனம் 
                           எனும்சிவம்    விதிப்பவா!

                                                பொருள் 

         விண்ணகத்தில்   வாழும்   தேவர்களை  அடக்கி  ஆண்ட  அரக்கர்களின் 
கொடுமையை  நீக்குமாறும்   போர்  புரிந்து   தன்களைக்   காக்குமாறும்,
அடிமைப்ச்சுமையை   வீழ்த்துமாறும்  வேண்டித்   தனது   கால்களில்  வீழ்ந்த 
பொழுது,  அவர்களுக்குக்   கருணை   காட்டி,அபயம்    அளித்த  கரங்களை 
உடையவனே!
      சிவபெருமானின்   சுடரொளி  மிகுந்த   நெற்றிக்கண்ணில்   உதித்து, 
உமை   அம்மையின்  மகனாகி,அம்மை தவமிருந்து   பெற்றுத்   தந்த 
வேலாயுதத்தினால்   மாயக்  கிரௌஞ்ச  மலையையும் தாரகாசுரனையும் அழித்த   வேற்படை   கொண்டவனே!
       ஞானச்சுடர்   ஒளி  மிகுந்த   ஞானியாய்   நீ   அமர்ந்த   இடமோ.அமைதியும்,
அன்பும்  நிலைபெற்ற  பழனி  மலை;  அங்கு  ஆண்டியாய்  முதுமைச் 
சான்றோனாய்   அமர்ந்தவனே!
      எம்மை   அடைந்து,  அஞ்சவைக்கும், அலறவைக்கும்   எம   பயத்தை ,
எம்மை    அடைய விடாமல்   காக்கக்  கூடிய   சிவா வழிபாடு.சிவம்  போற்றல் 
என்ற  முறைமை  அருளி, சிவபெருமானின்   அருள் மனத்தால்  சிவப்பேற்றை 
அடைய   வழிகாட்டும்   ஞான   ஆசானே!
     உன்னைப்போற்றி   வணங்குகிறோம்.

                                          பாடல்-11,

விதிமதிநதி   அதிபதிகதி    இதிதுதி,சதி    வியன்மகனே!
                            உதிமிதி     அழி;அரக்கரை.
மதிவிதி நதி   கதிஅதிபதி    சதிதுதிஇதிச்     சிவமகனே!
                            முதிருதி   கலையோனே!   
நதிவிதிமதி   பதிகதிஅதி      துதிசதிஇதி     நதிமகனே!
                            நிதிஉதி      உயர்வோனே!
பதிபதிபதி     விதிவிதிவிதி   மதிமதிமதி     எனப்புகழ் 
                            மதிமலைப்     பெருமானே!

                                          பொருள் 

       விதித்த  விதியால்,  மதியும்,  கங்கையும்  "தலைவனே"    கதி , என்று 
துதிக்கும்   சிவனுக்கும்,சக்திக்கும்  சிறப்புமிக்க   மகனாகத்  தோன்றியவனே!
     உதித்த   நீ   மிதித்து  அழித்தாய்   அரக்கர்களை.

        நிலவாகிய சந்திரன்  தக்ஷன்   தனக்கிட்ட  சாபமாகிய   விதியால் 
நொந்து, நதிக்கண்ணீர்   விட்டுக்    கதி   நீயே;  தலைவன்  நீயே;  என்று 
போற்றிய பொழுது ,  மன்மதனது   சதியாகிய  இரதியும்   துதிக்கும்  சிவனின் 
மைந்தனே!
      முதிர்ந்த   ஞான   குருவாய்   உயர்ந்த  கலை  ஞான  நாதனே!

     பகீரதனுக்காகப்   புறப்பட்ட   கங்கையே!  அகம்பாவத்தால், தான்  மதிக்காத 
பதியாகிய  சிவமே  கதி,   என  அதிர்ந்து,விழுந்து  ஆழ்  சடையில்    மறைந்து 
அடங்கித்   துதி   செய்து, மனையறமாம்   இதிஹாசம்   ஆன   கங்கையே! அந்நதியாம்    கங்கை   மைந்தனே   காங்கேயா!
         ஞானம், செல்வம், வீரம்  என்ற   நிதிக்கூட்ட   உதயத்தால்  உயர்ந்தவனே!

    பதி  நீ;   பதிக்கும்   பதி   நீ;   விதி   நீ;  விதிக்கும்   விதி   நீ;  மதி   நீ;  மறைதல் 
இல்லாத  மதி  நீ;  குறைதல்   இல்லாத  மதி   நீ.   என   சான்றோரும், உலக 
மக்களும்  போற்றிப்புகழும்  தலைவன்  நீ.
    ஞானமே  மலையான  ஞானமலையில்  எழுந்தருளும்  பெருமானே!

    என்று  போற்றினால்   முருகன்   அருள்   பாலிப்பான்.

                                              பாடல்  12

மானிநேர்    விழிமாதராள்      மாதவ     வேலினால்,
                         மாமலை    பிளந்தே    மாயமதை     நீக்கினாய்!
ஞானிநேர்   நிகராகி    ஞானமதைத்    தந்தைக்கு,
                         ஞாயிறுபோல்   ஒளியருள்      ஞான     பண்டிதா!
தேனிநேர்    இதழாளின்     தேன்காதல்    மணம்பெற்றுத் 
                         தேன்தணிகை செல்வழித்    திகழ்பாதம்   வைத்தவனே!
வானிநேர்   மாமழையும்,   வான்மரப்     பூமலரும்,
                         வான்மயிலும்   வட்டமிடும்   வான்ஞான   மலையோனே!

                                             பொருள் 

        மான்போன்ற   அழகும்,ஞானமும் கொண்ட  கண்ணை உடைய 
மாதரசி, உமையம்மை, நெடுந்தவமியற்றி  அதன்பயனாய்ப்     பெற்ற 
வேலாயுதத்தை  உனக்கு   ஆசியோடு  அளித்தாள்.  அரக்கர்களை   அழிக்கப்
புறப்பட்ட   நீ   மாயமாகிய   கிரௌஞ்ச மலையையும், தாரகாசுரனையும் 
அழித்தாய்.
        உயர்ந்த   ஞானிகளுக்கு   மேலாகி,  விளங்கிய  நீ   பிரணவப்பொருளை 
உலகத்து  முழு முதலவனும்,உனது   தந்தையும்  ஆகிய   சிவபிரானுக்கு 
உபதேசித்தாய். உலகம்  முழுவதும்   ஞாயிறுபோல்   ஞானசசுடரொளியாய் 
விளங்கினாய்.
     இனிக்கும்   தன்போன்ற  இதழை   உடைய  வள்ளிப்பிராட்டியாரை  விரும்பி 
மனமெல்லாம்  அவராகவே  எண்ணம் கொண்ட  நீ  ஆடினாய்;  பாடினாய்;
முடிவில்   அம்மையாரை     மணந்துகொண்டு,  திருத்தணிகைக்குப் 
பிறப்பட்டுச்  செல்லும்   வழியில்  உனது   பொன்னான   சேவடிகளை 
இந்த  ஞான  மலையின்மீது   அருள்புரியுமாறு   வந்து   தங்கினாய்.
     வானத்தின்  பரப்பும், குளிர்வும்   கொண்ட   மழையும்,  மழையால்  
வளர்ந்த   வானோங்கிய   மரங்களில்   மலரும்   பூக்களும்,
வானம்போல்  விரியும்  தொகை  கொண்ட  மயிலும்   சுற்றிச்சுற்றி   வரும்  
வானளவு   உயர்ந்த  ஞான   மலையில்  வீற்றிருக்கும்  ஞான   பண்டிதனே!
          உனது   மலர்ச்சேவடிகளை   வணங்குகிறோம்.

                                     பாடல் -13.

யானென்ற   நான்முகன்    யாத்திரையோ  கொடுஞ்சிறை;
                          யாழென்ற      மொழிதேவாள்   யாத்தமலர்    மாலையுள் ;
நானென்ற   ஆணவத்தால்    நாணாத      சூரனவன்,
                         நாற்படை     தோல்வியுற்று, நாதனைச்     சுமக்கலானான்;
கூனென்ற   பிறைவாழ்வுக்   கூத்தாடி     நற்சிவனோ 
                        கூறுபணி       ஏவலணி     குருசீடன்      நிலையானான்;
ஏனென்ற   விடைவேண்டின்    ஏறிடுங்கள்    ஞானமலை;
                       ஏற்றிடுங்கள்    நிட்டையினை;  எல்லாமே    விளங்கிடுமே.

                                     பொருள் 

       படைக்கும்   தொழில் மூத்தவன்;  நானே  மிக உயர்ந்தவன்; இந்தச் 
சிறுபிள்ளையை  வணங்கேன்,  என்று அகம்பாவத்தில்  கயிலை  சென்ற 
நான்முகனோ  சிவத்தைக்   காணாது   சிறையைக்   கண்டான்,
       வீணையையும்  வெல்லும்  மென்குரல்   கொண்ட   தேவயானையோ 
முருகன்   மாலைக்குள்   ஐக்கியமானாள்.
       நானே    மூவுலகிற்கும்   அரசன்; நானே   தேவர்களுக்கும்   முன்னவன்; 
என்ற  ஆணவம்   கொண்டவன் சூரன் ; அதற்காக   வெட்கப்படாதவன்; அவனோ 
முருகனுடன்   போரிட்டு,  நாற்படைகளையும்   இழந்து,  தன்னந்தனியனாகி 
மாயமும்   பயன்படாத   நிலையில்  வேலாயுதத்தால்  இருகூறாகி 
மயிலும் சேவலும்   ஆனான். மயிலான  அவன்   எம்பெருமானைச்  சுமந்து 
ஆணவச்சுமையைக்   கழிக்கிறான்.
    வளைந்தொடிந்த   தக்ஷனின்  சாபம்   பெற்ற   சந்திரனோ  சிவன்  தலையை 
அடைந்தான்; பிறையோடு  நடனமாடும்  சிவனோ,பிரணவப்   பொருளை 
அறிந்திட, முருகன்   இட்ட  பணிகளைச்  செய்தும்,தாழ்ந்தும்   விளங்கும் 
சீடனாகி   ஆசானாய்  ஆறுமுகனை   ஏற்றிட்டான்.
     இந்த   நிலை   ஏன்   வந்தது?  எப்படி   அறிவது?  என்ற  வினா  மனதிலே 
எழுந்ததா?  விடை   வேண்டுமா?  ஞான   மலையின்  மீது   ஏறுங்கள்,
மனத்தை  அடக்கி  முருகனோடு   ஒன்றுபட்டு  நீண்ட   தவம்   புரியுங்கள்.
அனைத்தையும்   ஞான   ஆசானாகி   அவன்   அறிவிப்பான்.
   ஞானம்  வேண்டுவோர் ஞான மலை   போற்றுங்கள். 

                                                      பாடல்-14.
 
விளங்கும்   வடிவேல்;   விரிமுகப்    புன்னகை;
                         வரமருள   அபயம்;
கலங்கும்    கார்மனக்   கலக்கம்     களையும்,
                        கரச்சின்      முத்திரை;
இலங்கும்    ஈராறு    கரங்கள்     காக்கும் 
                        உலகத்    துயிர்கள்;
நலுங்குடை  இருகால்   பொழியும்   கருணை;
                         நலமளி    நாயக!

                                                      பொருள் 

           ஒளியுடன்   விளங்கும்   வீர   வடிவேல்  தாங்கியோனே! இதழ்  விரிந்த 
தாமரை  போலத்   தெய்வீகப்   புன்னகை   கொண்டவனே! அடியவர்களுக்கு 
அஞ்சேல்"  என்று   அபயம்   அளிக்கும்  அபயக்கரம்   கொண்டவனே!
          உனது   சின்முத்திரை   தாங்கிய   கரங்களோ   துன்பத்தால்  கலங்கும் 
ஆன்மாக்களுக்கு   அத்துன்பத்தைக்   களைந்து   மகிழ்ச்சி   நல்கும்.
         உனது   பன்னிரண்டு   கரங்களும்  மூவேழ்  உலகிலும்   வாழ்கின்ற 
அனைத்து  உயிர்களையும்    அன்போடு  காக்கும்.
          நலுங்கு   பூசிய  உனது   இருசேவடிகளும்   அருளையும், கருணையையும் 
அன்பையும்  பொழியும்; இப்படி   அனைத்து  உயிர்களையும்  காக்கின்ற 
கலியுக  நாயகனே!  உனது   பாதங்களைப்   போற்றுகிறோம்.

                                                         பாடல்- 15.

நாயகன் காண்      நாயகனுக்கு     மேலான்காண்     நளினன்காண் 
                    நால்வேத        ஞானவன்காண்     நாடியோரைக்     காப்பவன்காண் 
தாயவன்காண்     தாயவள்      தந்தருளிய   தனிவேல்காண் 
                   தாமரையாம்    மலராறில்      தவழ்ந்தான்காண்     தழல்பொறிக்கண் 
சேயவன்காண்     செந்தூராய்ச்    செருகளத்தைச்        செய்தான்காண் 
                  செந்தமிழ்நூல்    சிங்காரப்    பேருரை    கண்டான்காண் 
தூயவன்காண்     தொல்ஞான      மலையவன்காண்     தோத்தரிக்கும் 
                  தூயமன     நாயடியேன்    சொல்லேற்றான்    தொல்குகனே!

                                                        பொருள் 

          அரக்கர்களை   அழிக்கவே   தேவசேனைத்   தலைவனானான்;  பிரணவப் 
பொருளை   உபதேசித்த   காரணத்தினால்  மூவர்க்கும்   முதல்வனான 
முக்கட்   பரம்பொருளுக்கும்   தலைவன்   ஆனான்; இளகிய   மனத்தால் 
எல்லோரும்   விரும்புகின்ற   அழகன்   ஆனான்;
         நான்குவேதங்களையும்  அதன்  உட்பிரிவுகளையும்   நன்கறிந்த  
ஞானவான்  ஆனவன்;  தன்னை  நாடிவந்த,   தன்னைப்போற்றும்  
அடியவர்களை  அன்புறக்காப்பவன்  ஆவான்;
         உலக   உயிர்களுக்கெல்லாம்    கருணை   பொழிந்து  அருளோடும்,
அன்போடும்  தாய்போலக்  காப்பவன்  இவனே;   தனது   தாயாகிய   பார்வதி 
தேவியார்   தவமிருந்து   தான்   பெற்ற   வேலாயுதத்தை   மகனுக்கு  அளித்திட 
அவ்வேலாயுதத்தைக்   கரத்திலேந்திக்   காட்சி   தருபவன்   ஆனான்;
         கங்கையும், அக்கினி தேவனும்  தாங்க   முடியாத  சிவபெருமானின் 
நெற்றிக்கண்  பொறியைத்   தாங்கியது   சரவணப்பொய்கை,அப் 
பொய்கையில்   மலர்ந்த   தாமரை   மலர்   ஆறில்   ஆறு குழந்தைகளாக 
அவதரித்துத்    தவழ்ந்த   ஆறுமுகன்   அவனன்றோ!
         அரக்கர்களின்   துயரால்   துன்புற்ற  தேவர்களின்   துயரை,அச்சத்தைப் 
போக்கிட, தந்த   ஐந்து  முகத்தோடு   அதோமுகமும்   சேர்த்து ,நெற்றிக்கண்ணிலிருந்து   ஆறுபொறிகளை  வெளிப்படுத்த ,  
அவ்வாறிலிருந்து   அவதரித்த  அருங்குழவி  அவனே.
         செம்மைப்   போர்க்களத்தைச்  செம்மைமிகு   செந்தூரிலே   அமைத்து,
அரக்கர்களை  அழிக்கப்  போர்க்களம்   உருவாக்கிய  சேனைத்  தளபதி 
ஆனவனும்   இவனே.
         இறையனார்   இயற்றிய   களவியல்   நூலுக்குப்   பலரும்   உரை  செய்த 
காலத்து,  நக்கீரன்   உரையே  சிறந்தது"  என்று  தேர்ந்தெடுத்துக்   கொடுத்த 
செந்தமிழ்ச்சங்கப்  புலவனாயும்   ஆன  புண்ணியன்.
        ஆணவம்,கன்மம், மாயை  போன்ற  மலங்கள்  பற்ற   இயலாத   தூய்மை 
ஆன  விமலன்  அவன்; தொன்மை   வாய்ந்த  ஞானமலையிலே  வீற்றிருக்கும்  
 ஞானபண்டிதன்   அவன்;
          அவனைப்   புகழ்ந்து   பாடும்   தூய்மையான   மனத்தைக்   கொண்ட 
நாயினும்   கீழான   அடித் தொண்டனாகிய   இவ்வேழை  போற்றும்  கவிதையை   அந்தத்  தொன்மை  வாய்ந்த   மாமுருகன்   ஏற்றருள்வான்,
     அவனைப்   போற்றுவோம்.  அருள் பெறுவோம்.

                                               பாடல்- 16.

குகனே!  குலமெலாம்    காக்கும்   குமரனே!
                   குழந்தை     வாக்கில்   கொடுத்தனைக்   கல்வியே.
அகத்துள்   ஆனந்த  அரவணைப்பு   ஆற்றிய 
                   அருண    கிரியின்    அருந்தமிழ்   ஆனவா!
நகமது    பணிந்து,  யுகம்பல     பழகி,
                  நகுமகள்     சுற்றி,    நாளும்    அலைந்தவா!
சகமது   காக்கவே    ஞான     மலையமர் 
                 சகமதை    உடுத்தவன்   சண்முகச்    சேயே!

                                               பொருள் 

     உலக  உயிர்களின்  உள்ளமாகிய   குகையில்   குடி   கொண்டவனே!
உயிர்க்குலமெல்லாம்   காத்து  இரட்சிக்கும்  குமரனே!
     ஐந்து  வயது   ஊமைக்  குழந்தையாகிய   குமரகுருபரனது   நாவில் 
கல்வியை   அளித்துக்   "கந்தர் கலிவெண்பா"  பாடுகின்ற  புலமையை 
அளித்தவனே!
     மனமெல்லாம்   உனது நினைவு   என்ற   ஆனந்தக்   களி   கொண்டு,
உள்ளமெல்லாம்   உன் அரவணைப்பிலேயே   வாழ்ந்த   அருணகிரி  நாதரின் 
அழகிய   செந்தமிழ்   ஆனவனே!
      செந்நிற   நகம்   கொண்ட  திருப்பாதங்களைப்   பணிந்து,போற்றி,
யுகயுகமாய்  ஆடியும்,பாடியும்,  ஆனந்தக்   கூத்தாடியும்  அந்த வேடமகள் 
வள்ளிப்பிராட்டியோடு   காடு.மலை.  கழனி   எல்லாம்  சுற்றிச்சுற்றி 
வந்தவனே!
      மூவேழ்  உலகையும்   காத்திடவே,  அருளோடு  ஞானமலையில் 
அமர்ந்தவனே!
     உலகையே   தனது   ஆடையாக   உடுத்த  அந்தத்   திகம்பர  சிவனின் 
மகனாகத்   தோன்றிய  சண்முக தேசிகனே!
     என்று   போற்றிப்பணிந்தால்   நம்மையும்   காத்து   அருள்  புரிவார் 
ஞானமலை   மாமுருகன்.

                                                  விளக்கம் 
குகனே!  ......  "  ஆருயிர்க்   குகை  தொறும் வதிதலால்  குகன்"  என்று 
போற்றும்    தணிகைப்  புராணம்.
நகமது  ........  நகம் ...நகத்தைக்   குறிக்காமல்  நகமுடைய   கால்களைக் 
குறிப்பதால்   இது   "சினை   ஆகுபெயர்"
சகமது  ........  ஜகம்  என்ற   தத்பவ  வடசொல்.

                                                 பாடல்-17.

சேயகளம்     செந்திலாமோ!   செந்நிறச்    சூலமாமோ!
                           சேய்மீட்ட      சிறையாமோ!   செவ்வேளின்      தூதாமோ!
மாயமலை    மறைந்ததாமோ!    மாவரக்கன்    மாள்வதாமோ!
                           மாயமனம்    மடிந்ததாமோ!   மன்னுயிர்க்கு    மீட்சிதாமோ!
மாயமரம்     பிளந்ததாமோ!   மாமயில்,சே    வலுமாமோ!
                          மாறாத     மாமனமும்   மாற்றிநின்ற    வேலவனே!
ஆயபுகழ்      ஆண்டவனே!     ஆதிஞான     மலையோனே!
                         ஆயகலை       ஆசானே!     ஆறுமுகப்    பெருமாளே!

                                             பொருள் 

          அரக்கர்களை   அழித்தொடுக்கத்    தேர்ந்தெடுத்த    போர்க்களம் 
செந்திப்பதி   ஆகும்;  ஆணவம்,கன்மம்,  மாயை   என்ற  முக்குண 
மூர்க்கர்களை  வீழ்த்தி  வெற்றி பெற  வியன்  துணை   ஞானவேலாகும்.
        சேயான   மாமுருகன்  ஆணையால்   சிறைவாழ்   தேவர்களை 
மீட்டெடுத்தான்   வீரவாகு. போருக்கு  முன்னால்   முருகனின்   தூதுவனாக 
மகேந்திரபுரம்   சென்றவன்   வீரபாகு  அல்லவா!
        தாரகனின்    மாயக்   கிரௌஞ்ச  மலை  முருகன் வேலினால்   இரண்டாகப்  பிளந்தது.   திருமாலையே   வென்ற  தாரகனும்   மடிந்தான்.
      மாயத்தால்  வெல்ல   நினைத்த  தாரகனது   உடலும்  அழிந்தது;
மனமும்    அழிந்தது. உலகத்து   நல்ல   ஆன்மாக்கள்  நல்ல   மனிதர்கள் 
விடுதலை  பெற்றனர்.
    மாயத்தால்   மாமரமாக  மாறிய   சூரனது   உடலும்   இரண்டாகப் பிளந்தது;
ஒருகூறு   மயிலாகவும், மற்றொரு   கூறு  சேவலாகவும்   மாறி  ஆணவம் 
அழித்து, அன்பும்,பண்பும்  ஞானவேலால்  பெற்று  முருகனை வணங்கி,
அவரது  சேவடி அருகே   நின்றன.
     மாறாத   கர்வமும்,  செருக்கும்   கொண்டிருந்த   சூரனையே   மாற்றியருளிய 
ஞானவேல்  கைக்கொண்ட   வேலவனே!
       மூவேழ்   உலகிலும்   நிலைத்த  புகழ்  கொண்ட   ஆண்டவனே!
தொன்மை  மிக்க   ஞானமலையில்   வீற்றிருக்கும்  முழுமுதற்கடவுளே!
     எண்ணிலா  ஆகமங்கள், எழுத  இயலா   வேதங்கள், அனைத்தும்  அறிந்த 
ஞானகுருவே!  ஆறுமுகப்   பெருமானே!  என்று   போற்றி  வாழ்த்தி,
வணங்கினால்  வரமெலாம்   வழங்குவான்  வடிவேலன்.

                                                 பாடல்--18

பெருமலை    பழனியைப்    போற்றிட   மறந்தாய்!
                           பேராளன்    ஏரகம்    பாராது     மயங்கினாய்!
திருப்பரங்     குன்றம்        விருப்பொடு    வணங்கிலை!
                           திருச்செந்    தூரான்       தரிசனம்    காண்கிலை!
மருத               மலையின்    மாக்கழல்     போற்றலை!
                          மருள்மதி       மலர்மலை     வணங்கிட    மதியிலை?
அருங்குறை  அனையவும்     அகன்றிட    அணைந்திடு! 
                         அருள்மலை    ஞானநல்    லாசான்   காத்திடுவான். 

                                                   பொருள் 

          பெரும்புகழ்   கொண்ட   பழனிமலை  ஆண்டியைப்   போற்றிவணங்கிட 
மறந்த   மனமே!  
           சுவாமிமலையில்  வீற்றிருக்கும்   சுவாமிநாதக்   கடவுளைக்    கண்டு,
போற்றி, உன்  ஆணவத்தை  இழக்காத  மாய மனமே!
           திருப்பரங்குன்ற   மாமலையையும்,  மாமுருகனையும்   அன்போடு 
போற்றி  வணங்காத   மனமே!
           தேவர்கள்  துயர் தீர்த்தத்    திருச்செந்தூர்   செவ்வேளைக்    கண்ணாரக் 
கண்டு   களிக்காத   கசட்டு  மனமே! 
          மருத    மலைமீது   ஏறி, மாமுருகன்   காலடிகளைப்    போற்றி 
வணங்காத    ஜடமே!
          மயக்கமுற்ற  மதியின்   மயக்கம்   போற்றிய  முருகன்  மலர்ந்தருளும் 
திருத்தணிகை   மலையை   வணங்கிட  மறந்த   அறிவற்ற   உயிரே!
          உனது   குறைகள்   அனைத்தும்   அகன்றிட   வேண்டுமெனில்  அருளைப் 
பொழிகின்ற   ஆசான்   வீற்றிருக்கும்   ஞான  மலையை  நாடு. அவனைப்போற்று;   ஆறுபடை  வீட்டிலும்   அமர்ந்துள்ள   முருகனது 
அருள்,  ஆசி,  அன்பு,  கருணை   எல்லாம்   கிட்டிடும்.
       ஆறுபடைவீடும்   ஆறுபடை வீடாம்   ஞானமலையே   ஆகும்.


                                                பாடல் --19

காத்ததுவோ   கனகநாடு;   ஏற்றதுவோ    ஞானபீடம்;
                        கேட்டதுவோ    சுடாதகனி;   பாட்டதுவோ   தமிழ்ச்சங்கம்;
நீத்ததுவோ     பட்டாடை;   நின்றதுவோ  நீள்பழனி;
                        நீக்கியதோ   அய்யனையம்;   நிலைத்ததுவோ  சுவாமிநாதம்;
கூத்ததுவோ   குயில்வள்ளி;  குலவியதோ   குலசேனை;
                        கூவியதோ   கூர்சேவல்;    சுமந்ததோ  சூர்மயில்;
ஆர்த்ததுவோ  ஆற்றுப்படை;   ஈர்த்ததுவோ   ஞானமலை;
                        பார்த்ததுவோ    அருணகிரி;    பார்புகழும்   பெருமாளோ!

பொருள் 
                                                                                                                                                                             
குமரக்கடவுளின்  போர்த்திறனால்  தேவர்களும்,அவர்கள் நாடும்  காப்பாற்றப் 
பட்டது. மூவருக்கும், மூவேழ்   உலகிற்கும்  ஞான   ஆசானாகி, உயரிய  ஞான 
பீடத்தை  ஏற்றவர்  சுவாமிநாதர்.
       ஒளவைக்கு  அருள்   காட்ட நினைக்கையில், வேடனாக வந்து, நாவல் கனிகளை 
உதிர்க்கையில்  ஒளவையிடம் சுட்ட பழமா?  சுடாத   பழமா? என்றகாலை  முருகன் கேட்ட 
சொல்   சுடாத  கனி" . மணலில். விழுந்த   கனியை ஊதிட   முனைந்த பொழுது, "கனி சுடுகிறதா?"
எனச்சிரித்தது  அருள்.நக்கீரர், கபிலர், பரணர், போன்ற  தமிழ்ச்சங்கப்  புலவர்கள்  பாடிய 
பாட்டெல்லாம்  முருகன்  புகழே.
       ஞானப்பழம், தனக்குக்   பழம்  கிடைக்காததால்  சினந்து,கொண்ட   கோலம்  பற்றற்ற  ஆன்டிக் 
கோலம்;தவிர்த்தது பட்டாடைகள்;   தனிமை. வேண்டியும், தன்பெருமையை  நிலை நாட்ட வேண்டியும்  ஆண்டியாய். நின்ற  மலை   பழனிமலை.
        பிரணவப் பொருள். அறியாத   தந்தை  சிவபெருமான், ஐயம்  கேட்டபொழுது, ஆசானாய்  அமர்ந்து,  அவருக்கு  உபதேசம்  செய்த  சுவாமிநாதன்.  அன்றுமுதல்  முருகனுக்கு   நிலைத்த 
பெயர்;பெருமை; மூவருக்கும்  முதல்வனான  சிவபெருமானுக்கே  ஆசானாக  அமர்ந்தவர்;
சுவாமிக்கே நாதன்  ஆனவர்  முருகன்.
         காதலிலே. மனம். கொண்டு,  காடும் , மலையும் ,கழனியும்  ஆடிப்பாடித்  திரிந்தவர் வள்ளிக்காக 
வேடனாக   வந்த  வள்ளிமலை. முருகன். அரக்கர்களை. அழித்துப்போரிலே   பெற்ற  வெற்றிப் 
பரிசாகத்  தன்மகளையே  அளித்தான். தேவேந்திரன்.தேவகுலத்திலே. தோன்றிய  தேவசேனையுடன் 
மஞ்சத்தில்  கொஞ்சிக் குலவியவன் குமரன்.
         தீய  ஆணவமனம்   கொண்ட  சூரன்,முருகனிடம்  தோற்று,மாயத்தால்  மரமாய்  நின்றபொழுது,
முருகனின் வேல்  அவனை  இரு கூறாக. ஆக்கி வீழ்த்தியது.முருகனின்   அருட்பார்வையால் 
ஒருகூறு. சேவலாகி. உருவெடுத்து, முருகன்  புகழைக்  "கொக்கறுகோ" என்று போற்றியது.
(கொக்கு= மரம்.அரு = வீழ்த்திய.கோ= இறைவன்) மற்றொரு. கூறு   மயிலாகி முருகனின் 
ஊர்தியாகி  ஆண்டவனைச் சுமந்தது.
       நக்கீரர். பாடிய  "திருமுருகாற்றுப்  படை". என்னும்  நூல்  முருகன்  புகழை  வெகுவாகப் 
பாராட்டுகிறது.  மாமுருகனை  விரும்பி  அழைத்து, இருக்கவைத்த   மலை   ஞானமலை  ஆகும்.
தான்   கண்ட   முருகன்   காலடிச்சுவட்டை   உலகறிய   அறிவித்துத்   திருப்புகழ்   பாடி 
அருளைப்பெற்றவர்  அருணகிரி  மாமுனிவர்   ஆவார்.
        ஞான  மலை. எம்பெருமான்  உலகெலாம்  உவந்து   போற்றும்  தலைவன். ஆவார். 
இறைவன்   ஆவார்; துணைவன். ஆவார்; முருகா   சரணம். 

          
   
                                                     பாடல்--20.

பெருமை      பேசிநான்    போக்கினேன்    பொழுதினை;
                     பெருமகன்   புகழ்பாட    மனமின்றி     மயங்கினேன்;
கருங்குழல்  காரிகைக்    காலடி    கிடந்தேன்;
                     கசடர்     கூட்டமே   கண்ணொளி    ஆயினேன்;
அருஞான    மாமலை      அருகடை    நலநாள் 
                    அகந்தை      ஆணவம்     அடிமரம்    அற்றதே;
ஒருதரம்      திருமுருக!    ஓதிநான்    உய்ந்தேனே.
                   ஓமொளி       நாமமே    சேமமாம்    உரைத்திடு!

                                                    பொருள் 

     வீண் பெருமை, பேசியே   வாழ்ந்த   நான்  நாட்களைப்
பயனற்றதாய்   வீணே. கழித்தேன்; 
    பெருமை மிக்க  முருகன்  புகழைப்  போற்ற  மனமில்லாமல்  ஆணவ  மயக்கத்திலே 
கிடந்தேன்;
    கரிய,நறுமணம் மிக்க  நறுங்கூந்தல்   உடைய  நங்கைகளின்  அழகைப் 
புகழ்ந்தபடி, அவர்கள். காலடியே  கதி ,எனக் கிடந்தேன்.
  தீய. வழி. காட்டும், நல்ல உயர்ந்த. நோக்கமில்லாத   நண்பர்கள்   கூட்டத்தோடு ,
உறவாடி,,அதுவே   வாழ்க்கை  என்று  இறுமாந்திருந்தேன்.
    ஆறுமுகக். கடவுள். வீற்றிருக்கும்  ஞான  மலையின் பக்கத்தில்   ஒருநாள் சென்றேன்;
அந்த  நாள்   எனது   வாழ்வின். நல்ல. நாளாக. மாறிற்று.
  எனது. கர்வம், அடக்கமில்லாத   ஆணவம், இவையாவும் என்னை விட்டு   ஓடின;
அடியற்ற   மரம்போல  எனது   தீய  எண்ணங்கள்,  நோக்கங்கள், வீண்பேச்சு, ஆகியன 
அடியோடு  சாய்ந்தன; வீழ்ந்தன;  என்னை விட்டு   விலகின.
     ஒரு தடவை   ஒரேயொரு  முறை  "திருமுருகா" என்று  வாய்விட்டுக்   கதறினேன்;
உள்ளம். நிறைந்து. அவன்   பெயரைபலமுறை   ஓதினேன். தாழ்ந்த  அப்படுகுழியில் 
இருந்து. மீண்டேன்;உயர்நிலையை. அடைந்தேன்.
     "ஓம்". என்ற. பிரணவ  மந்திரம், முருகா, என்னும்  மந்திரச்சொல்  நன்மை   நல்கும் 
தாரக  மந்திரமாகும்.  இதை   உணர்ந்திடு!  உலகோருக்கு  விளக்கமாக  உரைத்திடு.
   குருவாய். வந்து   அருள்வான்  குகனே.

                                                  பாடல்--21

உரைக்கும்   ஓங்காரம்   உணர்த்தும்   மறைகளை;
                     உயர்நிலை  அறிந்தே   ஓதிடு ;
இரைக்கும்  உயிர்மூச்சில்   இருநாடி   பயின்றிடு;
                    இனிய    சுழுமுனை   தேடிடு ;
குரைக்கும்  நாய்க்குணம்   குணத்தில்   கொள்ளாதே!
                   குவித்தகை    குமரனைக்    கும்பிடு ;
இரைப்பை சுருக்கு;   இறைமை   பெருக்கு ;
                   இறைஞான  மலைதனை   ஏகிடு .

                                               பொருள் 

       ஆலமரத்தடி    ஆசானுக்கு   ஆறுமுகன்  உபதேசித்த  ஓங்காரப்  பிராணவப் 
பொருள்  நான்கு  மறைகளையும்,  அதன்   சாகைகளையும்  உள்ளடக்கியது   ஆகும்.
    அந்த  உயர்ந்த   தன்மையை   உணர்ந்து  ஓதுதல்  முறைமையாகும்.
    மனிதன்   தோன்றியது  முதல்   இறுதி வரை   விடுகின்ற   உயிர்  மூச்சு.  அதனை 
அதன்போக்கில்  விடாது,சூரியகலை,சந்திரகலை  என்ற  வலது மூக்கினாலும்,
இடது  மூக்கினாலும்  விட்டுப்   பழகி  அம்முறையைக்   கைக்கொள்ளுங்கள்.
    மூக்கின்   இரு துவாரங்களிலும்   இணைந்தே  செல்கின்ற   மூச்சுப்  பயிற்சி 
"சுழுமுனை"  எனப்படும். அதனை  நாம்   பயில்வோமானால்  இறையருள் கிட்டும்.
தவநிலை  உயரும்; 
     பயனின்றிக்  குறைக்கின்ற  நாயின்  குணத்தை, வயிறு  வளர்ப்பதற்காகப்  பிறர் 
பங்கைக்  கைப்பற்றச்   சண்டையிடும்  அவலத்தை, ஒருபோதும்  கைக்கொள்ளாதே.
   பிறந்ததின்  பயன்   முருகனை  வணங்கலே ,முருகன்  போற்றலே ,என்று  கொண்டு 
வாழ்வாய்.
     வாழ்வதற்கு  உடல் வேண்டும்; அதற்கு  உணவு  வேண்டும்; என்ற நிலையில் 
உணவு  உண்ணுவாய்; அதுவே  ஆரோக்யம்  ஆகும்;
     வாழ்வதற்கு   இறைவன்  கருணை  வேண்டும்; அக்கருணையைப்  பெற்றிட 
இறைவன்  போற்று; இறைவனை   நினை; மனமெல்லாம்  இறை நினைவுகளே 
நிறைந்து  இருக்கட்டும்.
      மறைகளை  அறிய,தவநிலை  ஒங்க, நல்லகுணம்  வளர, முருகனை  நாடிப்போற்றுக.
அவன்   வீற்றிருக்கும்   ஞானமலை   அருள்  நிறைந்த   மலை;  அதனை   அடைந்து 
ஆன்மசுகம்  அடைவாயாக.
           ஞானமலையே  ஞானம்  அருளும்  மலையாகும்.

                                                       பாடல் -22

 ஏகினேன்     ஏரகம் ;  இதயத்        தாரகம்;
                          எண்ணி  எண்ணி    விம்மி   அழுதேன்;
ஆகு லம்       கொண்டே    அற்புத     ஞானமாம் 
                         ஆறுமுகன்    கண்டேன்;   ஆனந்தம்    கொண்டேன்;
 பாகுபோல்   உருகியே      பாதம்      பணிந்தேன்; 
                          பாசியாய்ப்   பற்றினேன்; பரமசுகம்   பற்றியது;
மாகுகன்      மங்கை      வள்ளி      மணாளன் 
                       மலைவாழ்   மா ஞானி   மாப்புகழ்    போற்றுவமே!

                                                        பொருள் 

உலக மக்கள்  அடைய வேண்டிய  இடமாகிய   சுவாமிமலை  நோக்கிச் 
சென்றேன்;  நெஞ்சின்   நித்திய  புருஷன்  ஜீவாதார  ஸ்வரூபி  அங்கு 
வீற்றிருக்கக்   கண்டேன்;  
      அம்மூர்த்தியை  அவன்  அமர்ந்துள்ள   மலையை  எண்ணி, எண்ணி 
வாயாரப்   போற்றிப்போற்றி   அவன்  திருநாமத்தைச்  சொல்லி உரைக்க 
முடியாமல்  விம்மிவிம்மி   அழுதேன்; நெக்குருகிய   நெஞ்சத்திலிருந்து 
பீறிட்டு  எழுந்தது   அழுகை.
       உரோமப் புளகாங்கிதம்  அடைந்த  நான்கொண்ட   மயக்கத்தை 
மனஇறுக்கத்தை  அனுபவித்தபடியே   வானளாவிய   உயரம்,  வாயளாவிய 
வேதமொழி, கண்ணளாவிய   கருணைப்பார்வை,  இரக்கமனம்  ஆகியன 
நிறைந்த   அற்புத  ஆனந்த   மூர்த்தியை, ஞானப்பேராசானை, ஆறுமுகனைக்
கண்ணாரக்  கண்டேன்; களி   கொண்டேன்.
     பரமனைக்  கண்டதும்   அருட்சுடரிலே  வெல்லப்பாகு போல   உருகினேன்;
சாஷ்டாங்க   நமஸ்காரம்   பண்ணினேன்;   கண்டது, கோலம், கருணை,
அருட்பார்வை  இப்படிப்பட்ட   நித்திய  சுகம்,மாறாத   இன்பம்  என்னைப் 
பற்றிக்கொண்டது.
       உயர்ந்த  முருகன்,  வள்ளிமலை  நாயகியின்   கணவன்,சுவாமி மலையில் 
நிற்கும்  உயர் ஞான  முருகன், அவன்   புகழ்   போற்றுங்கள்; 
         முருகனைப்    போற்றினால்   அருளெல்லாம்  கிடைக்கும்.

                                                          பாடல்-23

போற்றும்   புதுமயில் ;  சீற்றொலி   சிறுசேவல்;
                        போற்றும்   சூரனின்    தேற்றாத்    திருவுளம்;
காற்றும்,     கனலும்,      கங்கையும்,  தாங்காச் 
                        சீற்றச்      செம்பொறி   ஏற்றிடு   சரவணம் ;
கூற்றும்      கலங்கிடும்     ஆற்றிய     போர்முகம்;
                       கூற்றான     வேல்முகம்;   கூறான   மலைமுகம்;
சாற்றும்     கவிப்புகழ்,     சாத்திர    நான்மறை;
                       சாற்றும்    செவ்வரளிச்   சண்முக   நாயகனே!

                                                         பொருள் 

       தலைவனே! என்மீது   அமர்க ; என்று சுமந்து  போற்றும்  சூர மயில்;
கொக்கு  அறுகோ "  எனக்கூவிக்  குரல் எழுப்பி முருகன்   புகழ்   பாடும்,
சூரச்சேவல்;  ஆராயாமல்  தாழ்ந்த   மனம்  கொண்ட  ஆணவச்சூரன் 
ஆறுமுகன்  கருணையால்   அனைத்தும்   அறிந்து  பணிந்து   போற்றினான்.
        பரம்பொருளாகிய  சிவனின்   நெற்றிக்     கண்ணிலே  தோன்றிய  தீப் 
பொறியின்   அனல்   பிழம்பை ,ஏற்றுத்   தாங்க   முடியாத   காற்றும்,  அக்கினியும்   நடுங்க,கங்கையின்   குளிரும்  தவிக்கச்    சீறி  வரும்   செம்பொறியை   ஏற்றும், வாழ்த்தியும், தனது  அலைக்கரங்களால் 
அன்பு  காட்டியும்  ஏற்றதோ  சரவணப்  பொய்கையாகும்.
        செந்தூரில்  புறப்பட்ட   ஆறுமுகப்   போர்ப்படை   கண்டு, கூற்றுவனே 
கலங்கினான்; அரக்கர்களுக்கு   இறுதியை  வழங்கும்   கூற்றுவன்போல் 
அன்னை  தந்த   ஆறுமுக   வேலாயுதம்  விளங்கிற்று.  வேலின்  கூர்மையால் 
கிரௌஞ்ச   மாய மலையும் .  மாயத்தாரகனும்   இருகூறாகி  விழுந்து 
மடிந்தனர்.
         ஞானமலை  முருகனின்  பாதங்களில்  தமிழ்  மாலைகளைக்  
கவிஞர்கள்  புனைந்து  சாற்றுகிறார்கள். சாத்திரங்களும்,  நான்மறைகளும் 
முருகன்  புகழை  வானளாவிப்  புகழ்கின்றன. அடியவர்களோ  அவனது 
மேனியெல்லாம்  செவ்வரளி  மலர்   மாலைகளைப்  படைக்கின்றனர்.
மனத்தில்  கருணை  கொண்டு, நிலவுலகத்தைக்   காத்திடுவாய்  முருகா!
ஆறுமுகம்   கொண்ட   அன்புடைப்  பெருமானே!

                                                      பாடல்--24

நாயகியை     நான்நாடி,     நேயமுடன்    விளையாடி,
                            நற்கொங்கை    விற்புருவம்,     சிற்றிடை,   முற்றடிமை;
வேயதோள்   விரிகூந்தல்,   தேய்பிறைத்    தேன்சிரிப்பு,
                           விருந்தளி     வெவ்விதழ்,    வேண்டிவேண்டி   அலைந்தேகி,
மாயசுகம்     மகிழ்வாலே    காயமெலி    பித்தனானேன்;
                          மாயமனம்     மாற்றிட்டாய்;    ஆயவழி     அளித்திட்டாய்;
தீயறிவைத்  தீயிட்டாய்;   தாயினுமோர்    சான்றாகித் 
                         தூயவாழ்வு,   தொண்டுவாழ்வு   தந்திட்டஞா   னமுருகா!


                                                   பொருள் 

       சிற்றின்ப  வேட்கை  கொண்டு, அழகிய  பெண்ணொருத்தியை 
நாடினேன்;  அவளோடு  இரவுபகலாய்   களியாட்டம்   ஆடினேன்; 
அவளது  அழகிய   மார்பகங்கள்,  வில்போன்ற  வளைந்த  புருவம்,
இல்லை  என்னும்படி  அமைந்த   சிறிய   இடை,   இவைகளுக்கு   நான் 
அடிமை   ஆனேன்;
      வளப்பம்  மிகுந்த  வேய் போன்ற  தோள் ,  கருமைசார்ந்து   காற்றிலே 
பறக்கும்   கூந்தல்,  தேய்ந்த  பிறைச்சந்திரனின்  தோற்றம் போல்  இனிக்கும் 
இனிய  சிரிப்பு,விருந்து   அளித்து   இன்பமூட்டும்,  செவ்விதழ்கள், இவைகளை 
மீண்டும்  மீண்டும்  வேண்டி,வேண்டி   அவள்  பின்னர்   அலைந்தேன்; அவளையே  சுற்றிச்சுற்றி  வந்தேன்.
          மாயையாம்   சிற்றின்ப  மகிழ்ச்சியிலே   அவளது   பாதம்   பணிந்து.
அவளருகே   கிடக்கும்   பெண்பித்தனானேன்.
        இப்படிக்   காமுகனாய்க்   கிடந்த   என்  மீது   உன்   அருள்   பார்வை  
பட்டது  போலும்!  குற்றமுடைய  மாயமனம்   மாறிற்று;  அன்பும்,பண்பும் 
கலந்த   நேர்வழி  எனக்குப்   புலப்பட்டது;  எனது   தீய  செயல்கள்  என்னும் 
அறியாமை  அறிவு   தீயால்  எரிக்கப்பட்டது; 
      தாயினும்   மேன்மை   மிக்க  அன்பினை.  அருளை,  நோக்கத்தை, 
பரிவை, பண்பு  போற்றும்   வழியை  எனக்களித்தாய்.
    தூய்மையான   வாழ்வு,  முருகனடிமைத்   தொண்டு   வாழ்வு,  உன்னருளாலே   உன்னைப்புகழும்   தொண்டு   எனக்கு   அளித்தாய்; ஞானமலை 
ஞான   முருகனே! உன்னடியே  சரணம்.   


                                                       பாடல்--25.

ஞானம்     தந்தை     வணங்க      வழங்கினான்;
                    ஞாயிற்றின்    பேரொளி     புகழினால்     நிகர்த்தான்;
மோனத்  திருமாலோ     மூவேழ்  உலகுபெற.
                   மூதறி     பிரமன்    முதல்ஞானம்     அடைந்தான்;
கானக     வள்ளி       காதலைக்    குவித்தாள் ;
                   காருடைத்      தாரகன்     சீர்மலை     இழந்தான்;
வான      வளநாட்டாள்     வதுவை      ஆனாள் ;
                 வான்மழை        வள்ளல்     வந்துறை    வார்குன்றே!


                                                      பொருள் 

           பிரணவப்   பொருள்   அறிய  விரும்பிய   தந்தை   ஆகிய   
சிவபெருமானுக்கு,  ஆசானாய்  அப்பொருளை   உபதேசித்தான்;
           மூவேழ்   உலகங்களையும்   தனது  பேரொளியால்  பிரகாசிக்கச் 
செய்யும்   சூரியனின்   பெருமையைத்    தனது   வெற்றிமிக்க   போர்ப் 
புகழினால், அடியவர்களுக்கு   அருளும்  கருணைப்   புகழினால், தகர்த்துத் 
தானே  உயர்ந்தவன்  என்பதைக்  காட்டினான்.
        அரக்கர்களிடம்   வைகுந்தத்தையும்   இழந்த   திருமாலுக்கு, அரக்கர்களை 
வென்று   மூவேழ்  உலகையும்   காக்கும்   கடவுள்   நிலையை   வழங்கினான்.
       மூதறிஞன்    ஆகிய   பிரமன்   ஆணவத்தால்  முருகனை   அலட்சியப்
படுத்த,முருகனோ   அவரிடம்   பிரணவப்  பொருளைக்   கேட்க, அறியாது 
தவித்த  நான்முகனைச்   சிறையில்   அடைத்தான்;   தந்தையின்   சொல் 
கேட்டு,  அவனை  விடுவித்தபொழுது,  வணங்கிய   பிரமன்  பணிந்து   கேட்க,
அவனுக்கு   ஞான   உபதேசம்  செய்தான்   முருகன்.
      வள்ளிமலைக்   காட்டிலே  நின்ற  குறவள்ளி   முருகனைக்   கண்டு,
அவன் காதலை  ஏற்காதது போல்  நிற்க,  முருகனோ   அவளைச்சுற்றிச்  சுற்றி 
வந்து  காதலிக்க,  அவளும்  அக்காதலை  ஏற்றாள் .
     அரக்க  குணம்   கொண்ட தாரகன்   முருகனோடு   போர்   புரிந்து, தனது 
மாயத்தை   இழந்தான்; மாயமலையாம்   கிரௌஞ்சத்தை   இழந்தான்;
முடிவில்   தனது  உயிரையும்   இழந்தான்.
       விண்ணக  வேந்தன்   இந்திரன்   மக்களாகிய   தேவயானை ,  போரில் 
பெற்ற   வெற்றிப்பரிசாக  முருகனுக்கு   அளிக்கப்பட்டாள். முருகனின் 
மனையாக ,மனமாக   உயர்ந்தாள் .
    தந்தைக்கு   உபதேசம், ஞாயிறுக்கு   நிகரான புகழ், திருமாலுக்கு   மூவுலக 
ஆட்சி, பிரமனுக்கு  ஒங்கார   உபதேசம், வள்ளிக்கோ   காதலனுக்கிரஹம்,
தாரகனை   வீழ்த்தல், தெய்வயானையை   மணத்தல்   ஆகிய  செயல்களினால் 
வானமழை   போன்று   வள்ளன்மை  காட்டும்   மாமுருகன்  வந்தமர்ந்து 
வரம்பல   நல்கும்   மலை  ஞான  மலையே  ஆகும். வள்ளல்   முருகன்    பாதம் 
பணிவோம்.


                                                                   பாடல்--26


குன்றம்     எறியக்   குரைகழல்    அணிந்ததாள்;
                     குறையுடைப்      படைப்போன்    உதைபடு    சிறுதாள்;
நன்றோ?  இம்முறை?       நாடேன்     நலமுறை ,
                     நிற்பேன்       குன்றம்;  நின்ற   நீள்தாள்;
கன்றாய்க்  கலையாய்க்    கருணைக்   கரம்தொட்டுக் 
                    கவினாய்க்     கார்த்திகை   வாய்முத்தக்    கனிதாள்;
மன்றம்    சென்று     மண்டியும்     இட்டே,
                    மான்மகள்    பணிந்த    மாமலை   மலர்த்தாள் .


                                                                  பொருள் 

           அரக்கன்  தாரகனையும்,  கிரௌஞ்ச  மலையையும்   அழிக்க,
வீரக்கழல்  அணிந்த   வீறுடைப்  பாதங்கள்;
         பிரணவப்    பொருள்  அறியாது  குறை  அறிவோடு,  ஆணவம்   கொண்ட  நான்முகனைக்    குட்டியும், உதைத்தும், ஞான  தீக்கை  வழங்கிய   பாதங்கள்;
         ஞானப்பழத்தைப்   பெற்றிட, இறைவன்   நடத்திய   நாடகத்தால்  வெகுண்ட   முருகன்,  அண்ணனுக்கு   அளித்தது  முறையாகுமோ ?
இந்த   முறை  ஏற்கத்தக்கது  அன்று; வழிவழியாகப்   பெற்றோர்   போற்றி 
அவர்  சொல்லைத்   தலைமேல்  ஏற்கும்  முறையை  நான்  கடைபிடிக்க 
மாட்டேன்; தனியே   செல்வேன்;  தனியே   வாழ்வேன்; பெற்றோரோடு 
இணையேன்  என்று  சினமுற்றுப்    பழனி   மலையிலே  ஆண்டிக் 
கோலத்துடன்   நின்ற  உயரிய   ஞானப்பாதங்கள்;
           இளங்குழந்தையாய்,  அழகேயுருவான தன்மையாய்க்   கருணைகொண்டு   உயிர்களைக்   காக்கும்  மென்மைவாய்ந்த 
பிஞ்சுக்  கரங்களைத்   தொட்டும்,கண்களில்  ஒத்திக்கொண்டும்.
பாலூட்டிச்சீராட்டி   வளர்த்த  கார்த்திகைப்பெண்டிர்கள், அந்தச் 
சரவணப்  பொய்கையில்  முருகனை   வளர்த்தபொழுது, அருளும்,
கருணையும்  கொண்ட  இனிய   கனிபோன்ற   பாதங்களை  முத்தமிட்டுக் 
கொஞ்சினர்;  கார்த்திகைப் பெண்கள்   கொஞ்சிய   அழகுப்  பாதங்கள்;
        வள்ளிமலை  சென்று,  வடிவுடைய  வள்ளியைக்   கண்டு, காதலித்து,
உள்ளமெல்லாம்  அவள்   நினைவாக   அவள்   பின்னே  சென்று, கோபத்தால் 
சிவந்த   அவளின்   பாதங்களில்  விழுந்து   வணங்கி,மாறாத   காதலுக்காக 
மண்டியும்   இட்ட   மாமுருகனின்   மலர்ப்பாதங்கள்.
     ஞானமலையிலே    அடியவர்களுக்கு   ஆறுதல்   அளிக்கும்   அன்பு  ஞானப் 
பாதங்களை  வணங்குவோம்.


                                                           பாடல் -- 27.

தாள்பதித்தத்     தண்பழனி     தத்துவப்   போகனே!
                               தாமரையாள்   தான்கற்கும்    தவமுனி    யோகனே !
நாள்பணியும்  நல்லடியார்    நாவிலூரும்    தாகனே!
                            நால்வேத      நற்பொருளின்    நல்லமுது    பாகனே!
முள்போரில்  வேலெடுத்து     வினைதீர்த்த  வேகனே !
                            மூண்டகனல்     ஞானமுனி    மனத்திலுறை    மோகனே !
மீள்சிறையால்   மேதக்க    வாழ்வளித்த     மேகனே !
                             மீளாத   பிறவியறு     ஞானமலை     ஏகனே!


                                                              விளக்கம் 

      கருணையும், அருளும்  நிறைந்த,குளிர்ந்த   பழனி   மாமலையில் 
பழத்தால்   சினந்து, தனியே  நின்று,  தனது  ஆசார்ய  தத்துவச்   சீலத்தை 
உலகிற்கு   உணர்த்திய   போகனே!
         போக  மாமுனிவனால்   நித்திய  ஸ்வரூபமாய்,  நின்றருளும்  தத்துவ 
மூர்த்தியே!
       கலைமகளுக்கு,   உபதேசம்  அளித்து, ஞானம்  வழங்கிய   ஆசானே!
      நாளும்  தவறாமல்   உன்னையே  வணங்கும், அடியார்களது   நாவில் 
எந்நேரமும்  நின்று,நடமாடி, முருகா!  முருகா!  என்று  விளங்கும்   தாகமான 
தண்குளிர்ச்சியே!
     நான்கு   வேதங்கள்,  அவற்றின்   சாகைகள், உபநிஷத்துக்கள்  
ஆகியவற்றின்   பொருளாக   நின்று, அப்பொருளை   உலகிற்கு   அளித்த 
ஆசானே!  நல்லமுதாம்   அழியாத  ஞான  உணர்வை, உணவை   அருளியவா !
      தேவர்களுக்கும்,  அரக்கர்களுக்கும்  மூண்ட  பெரும்  போரிலே  அன்னை 
அளித்த   ஞானவேலோடு  படைத்தளபதியாகிப்   போராற்றி,  வெற்றியை 
அளித்தும்,  தேவர்களது   துயரை,  ஆற்றிய   பாவத்தை  அறவே   நீக்கிய 
வேகம்   கொண்டவனே!
    எரியும்   நெருப்பாய்,  மோனத்தை  மனத்தில்   கொண்ட   ஞான  முனிவர்களுக்கு  அதிதியின்   ஸ்வரூபமாயும், அது   சேரும்   இடமாயும் 
ஆகி,  அவர்கள்   மனத்திலே   குடிகொண்டு, தானாயும்,  வேறாயும்,
ஒன்றியும்   நிற்கும்  மோகத்தன்மை   கொண்டவனே!
     சூரனின்   சிறையிலிருந்து  தேவர்களை  விடுவித்து, நல்வாழ்வளித்த  மேகம்  போன்ற  கருணை   உடையவனே!
      ஆன்மாக்களின்   பிறவி   என்ற   சிறையிலிருந்து  அவைகளை   விடுவித்து,
ஞானக்கழல்   காட்டிச்   சிவப்பேறு   அளிக்கும்   மேகம்   போன்ற   கருணை 
உடையவனே!
      ஞானமலையில்  வீற்றிருந்து, மூவர்க்கும்   முதல்வனாய்   ஏகனாய்  நின்று,
உலக   ஆன்மாக்களைக்   காத்துப்  பேறு   நல்கும்   பேராசானே !
      என்று போற்றி   வணங்குவோம்;  ஞான   அருள்  பெறுவோம். 


                                                            பாடல்--  28.

ஏகனே!   அனேகனே !   ஏதம்    களையும் 
                   ஏறுமயில்    வாகனனே!
மேகமே! மேதினி    மீதுறப்     பொழியும்,
                   மேலாம்    கருணையே!
மோகமே  கொண்டு    மோகன    மாதர் 
                    மேனி    விழுந்தேனை 
யாகமாய்ப்    பொசுக்கி,  ஏற்பவ!  ஏழைக்கு
                    யோகமும்   அருள்வாய். 


                                                          பொருள் 

  நிகரில்லாத   ஒருவனே! மூவர்க்கும்   முதல்வனே! உன்னை   வணங்கும் 
அடியவர்களின்  துன்பங்களைக்   களையும்   மாமயில்   மீதமர்ந்து  அருள் 
புரிபவனே ! (சூரனின்   ஆணவம்   அழித்து,  அவனையும்  தன்னைத்  தாங்கும் 
மயிலாக  மாற்றிக்  காத்தது   போல்   அடியவர்களையும் காப்பான்)
       உலகெல்லாம்   பொழிந்து  வளமும் வாழ்வும்   நல்கும்,  மழை  போன்று,
உலக   ஆன்மாக்களின்  பிறவி  வெப்பம்,பிணி வெப்பம்,  தணிக்கும்  கருணை 
மழையைப்   பொழிந்து  காப்பவனே!
      மனச்சறுக்கலால்   மோகமாகி, மோகம்  கொண்ட   பெண்களின்  பார்வையில்  சிக்கி, அவரே   கதி "  என்று  அவர்காலடியில்   கிடந்த   என்னை 
ஈடேற்ற  மாயவலையைப்   பொசுக்கி, நோக்கினால்  தூய்மைப்  படுத்தி,
என்னையும்   உனது  அடியவனாக   ஏற்றுக்கொண்ட  ஏந்தலே!
      இந்த   அறிவற்ற  ஞானமற்ற  இழிபிறவிக்கு  உனது   அருள்  பார்வையால் 
உன்னை வணங்கும்,  உன்னைப்போற்றும் ,  உன்பாதங்களே  கதி,  எனக் 
கிடக்கும்  பக்தி யோக  வாழ்வைத்   தந்தருள்வாய்   ஞானமலை  மாமுருகா!


                                                         பாடல்--29.


வாயதுவோ   செம்மை;   வரமதுவோ   வாய்மை;
                            வாளதுவோ   வரம்பெற்ற   வாழ்வோடு   வீறுடைத்து;
தாயவளோ   தவமேன்மைத்   தூயவேல்   தானளித்தாள்;
                           தந்தையோ    தலைதாழ்ந்து,   தான்பணிந்த   தலைச்சீடர்;
ஆயமறை     ஆய்ந்தாய்ந்து    ஆறுமுகம்   என்றோதும்;
                          ஆணவமோ    அடிபணிந்து    கூவுசேவல்    தாவுமயில் ;
சேயவனோ சீர்வள்ளிச்     செம்பாத     ஞானமலை;
                          சேந்தனவன்   சேவடிகள்   சேர்ந்திடுவோம்;  போற்றிடுவோம்.


                                                           பொருள் 

            மாமுருகன்   மணிவாய்,  மலர்வாய்,  செவ்வாய், மறையோதுவதால் 
மணிவாய்; நறுமணமும், கருணைக்குளிர்வும்   கொண்டதால்  மலர்வாய்;
தூயசொல், அருள்பாலிக்கும்  இரக்கச்சொல், தேவயானையிடமும் ,
வள்ளியிடமும்  இனிய சொற்கள்  பேசும்  கனிவாய்;  ஆதலின்  செம்மை 
மிக்க  செவ்வாயாக   விளங்குகிறது.
            போர்க்களத்திலே  ஏந்திய   வாளாயுதம்  வரம்பெற்று  ஆணவத்தில் 
தீயன  புரிந்த  அரக்கர்களை   வீழ்த்திய   வீரம்  மிக்க  வாளாகும் .
            போராற்றல்  மிக்க   மகனுக்குத்   தாயான   பார்வதியம்மை, நீண்ட 
தவமிருந்து   பெற்ற   வேலாயுதத்தை  வெற்றி  ஆசிகள்  கூறி ,  அளித்தாள்.
அரக்கர்களை   வீழ்த்த  அன்னை அளித்த வேலே  துணையாக   நின்றது.
           பிரணவப் பொருள்  அறிந்திடத்   தந்தையான   சிவபெருமான், மகனை 
ஆசானாக  ஏற்றுத்   தாழ்ந்து,பணிந்து  வாய்பொத்தி மறை   உபதேசம் பெற்று,
சுவாமிநாதனாக   முருகனை  உயர்த்தி, முருகனின்   முதல்   மாணவனாகத் 
திகழ்ந்தார்.
            எழுதா   மறையாகிய   வேதங்கள்  யுகம்  யுகமாய்  ஆய்ந்து, முழு முதல்வன்   முருகனே" ஆதிஅந்தமில்லாத  ஆறுமுகனே   மூத்தவன் 
என்றோதும்.
           ஆணவத்தின்   சான்றாக  விளங்கிய  அரக்கனான   சூரபன்மன்,
முருகனிடம்   தோற்று, மாயமரமாகி  நின்றபோதும்  அவனை   இருகூறாக 
ஆக்கினார்  ஐயன் . அவ்விரண்டு   கூறுகளும்   முருகனது   தீக்கைப் 
பார்வையால்  ஆணவம்  அற்று, மயிலாகவும், சேவலாகவும்   மாறி  முருகனைப்    பணிந்தன.மயில்   ஊர்தி ஆயிற்று.சேவல்  கொடி ஆயிற்று.
          நல்ல   தலைவனான   முருகனோ,  தினைப்புனம்  காவல்   காக்கும் 
குறவள்ளியின்   அழகிய  பாதங்களை  வணங்கி,  மணந்து, 
வள்ளி  மலையிலிருந்து   திருத்தணி  மலை  செல்லும்   வழியில்  தங்கி,
இளைப்பாறி, அருள்பொழியும்  இடமாக  அமைந்த   ஞானமலையில் 
அருள்  பாலிக்கிறான்.
          செம்மை  வாய்ந்த  செந்தூர்   முருகனாய்க்   காட்சி   தரும், ஞானமலை 
மாமுருகனை  வணங்கிடுவோம்; அவனது  தாமரைப்பாதங்களை 
வணங்கிடுவோம்;முருகா! முருகா!  என்றே   போற்றிடுவோம்.


                                            பாடல்--30.


ஓமெனும்    பிரணவத்    துருவான   உயர்ஜோதி;
                        ஓமெனும்    வடிவத்     துலகப்   பரம்பொருள்;
ஓமெனும்    ஒலிகாட்டும்    ஓங்கிசை    தோற்றம்;
                        ஓமெனும்    உபதேச     மந்திரத்     தந்திரன்;
ஓமெனும்   மாப்பொருள்   உணரான்    ஒழிசிறை;
                       ஓமெனும்   உபதேசம்  உயர்தந்தை  செவிகளில்;
ஓமெனும்  தாயவள்    வழங்கிய   ஒளிவேல்;
                      ஓமெனும்   ஞான        மலையமர்    ஓங்காரா! 

                                                      பொருள் 

         சிவபெருமானின்   நெற்றிக்கண்ணில்   தோன்றிய   பொறி,
ஓங்காரவடிவம்   பெற்று  சரவணப்  பொய்கையில்  முருகனாக  மலர்ந்தது.
        மலர்ந்த   மறைவடிவம்   ஓங்காரப்   பேரொளியாகி உலகைக் காக்கும் 
பரம்பொருளாய்  வியாபித்தது.
         தோன்றிய  புகழுடைய   தோற்றம்  ஓமெனும்  உச்சரிக்கும்  ஒலியலைகளை   உலகெங்கும்  புகழாய்ப் பரப்பிற்று.
         ஓம்"  என்ற   பிரணவ   மந்திரத்தை உபதேசிக்கும்   ஞானகுருவாய் 
அமைந்தார் முருகன்.
       பிரணவப்   பொருள்  அறியாத   படைக்கும்   தொழிலாற்றும்  பிரமன் 
சிறையில்   அடைக்கப் பட்டான்.
       முக்கண்  முதல்வனாம்   தந்தைக்கும்  ஞான  ஆசானாகி ப்  பிரணவப் 
பொருளை   உபதேசித்தான்  சுவாமிநாத முருகன்.
       ஓங்காரஸ்வரூபியாகிய   உமாதேவியார்  தவமிருந்து  தான்  பெற்ற 
ஞானவேலாயுதத்தை   மகனாம்  முருகனுக்கு   அளித்தாள் .
        ஓங்காரமாய்   விளங்கும்   ஞானமலையில்   ஓங்காரனாம்   மாமுருகன் 
அமர்ந்து   ஆன்மாக்களைக்   காக்கின்றான்.
           ஓங்கார  ரூபாய   நமோ  நம:

                                                         பாடல்-  31.

காருடைக்    கனல்மனம்   கண்டதும்,    கசிந்துருகிக் 
                          கருணைக்    கழல்கள்   கனியமுதம்     பருகுமே.
போருடைச்  சூரனும்,       பொய்மை   ஆணவம் 
                          போன்றன     போக்கிப்   பேறடி     வீழ்ந்தானே!
சீரழகுச்         சுகம்கண்ட    சீரருண     கிரியானும்,
                          சீறடி      தீக்கையால்     சீர்ப்பாதம்    சார்ந்தான்.
ஏரழகு           ஊரழகுத்         தேரழகு;    பேரழகு 
                         ஏரகத்    தாரழகன்    இலங்குமலை    ஞானமே.


                                                              பொருள் .

        கசப்பும்,  ஆணவமும்  கொண்ட   இருள்மனம்,  அனல்போல்   தகிக்கும்  மனம் .  கருணையே   உருவான   கந்தனின்   கால்களைக்   கண்டுவிட்டால்,
உள்ளமெல்லாம்   கசிந்து.  அன்பால்   உருகி,  அமுதம்  பொழியும்  அக்கால் 
--களாம்   இனிக்கும்  கனியைச்   சுவைத்தபடித்   தனது   தீமை  நோக்கத்தை 
மாற்றிக் கொள்ளும்.
        இதற்குச்   சான்று  சூரபன்மன்.  பொய்மை மிக்க   ஆணவத்தால் 
தீய  நோக்கால்,  செருக்கு மிகுதியால்  விளங்கிய   அவன்   முருகனின்  
கழல்களைக்   கண்டதும், இரும்பு   தகிக்கும்   பொன்னோடு   சேர்ந்து   காயும் 
பொழுது  தனது  குணத்தை   விட்டுப்   பொன்னாவதுபோல  கழலே   கதி;
கந்தனே  க தி  என்று  பாதாரவிந்தங்களைப்   பற்றிக்கொண்டான்.
       இளமை  வேகத்தில்   இல்லற  சுகானுபவத்தில்   வீழ்ந்து   கிடந்த  
அருணகிரியானும்,  முருகனது    பாத   தீக்கையால்   பரிசுத்தம்   பெற்று,
ஆசாபாசங்கள்  நீக்கி   ஆறுமுகச்   சீறடி   அடைந்தான் 
      வயல்களை   உழும்   ஏர்கள்   எழிலார்ந்த   அழகு;  சுவாமிமலை   என்னும் 
ஊரின் பெயரும்,ஊரும்  அழகு; உயர்ந்த   புகழை  உடைய  முருகனின்   உயர்ந்த   தேரும்    அழகு;  இப்படிப்  பேரழகுகள்  நிறைந்து  விளங்கும், 
அந்த   ஏரகத்   திருக்கோயிலிலே   வீற்றிருக்கும்  மலர்மாலை   அணிந்த 
சுவாமிநாதக்   கடவுள்  வந்து  தங்கி,  அருள்பொழியும்   தெய்வமலை  
ஞான  மலையே   ஆகும்.
     அறுபடை  வீடுகளும்  ஒன்றிய   ஞானமலையை   நாமும்   போற்றுவோம்.



                                                                   பாடல் --32


ஞாயிற்றின்      பேரொளி   ஞாலத்தின்     நின்னாட்சி;
                               ஞாயிறும்    திங்களும்    நேயமிகு    நின்கண்கள்;
தாயினும்          சாலவே      பரிந்தூட்டும்   தண்கருணை;
                              தோய்நிலா   தானணி     தேவதேவன்    திருக்குமர! 
நாயினும்         கடையாய்க்   கிடந்த     வடியேனை,
                             நோயகற்றி,மாயப்      பிறப்பகற்றி,    ஏற்றாயே !
காயினும்        காரரக்கன்      கருணையைப்     பெற்றானே .
                            காயாத       கற்சுனைக்     கனிநீர்    மலையானே!

                                                            பொருள் 

        மூவேழ்   உலகங்களையும்  ஒளிர்விக்கும்,ஞாயிற்றின்    பேரொளி  போன்று,
மூவேழ்   உலகத்திலும்   உனது  கருணைமிகு    ஆட்சியே   நடைபெறுகிறது.
         தகிக்கும்,  சூரியனும், தண்மை  மிகு   சந்திரனும்  உனது   வீரமும், கருணையும்   மிக்க   இருக்கண்களாக   விளங்குகின்றனர்.
         பெற்றெடுத்த   தாயைக்காட்டிலும்,அன்பும்,பரிவும்   கொண்டு   உலகைக் 
காக்கும்   கருணை  நிறைந்தவனே!
          மூன்றாம்  பிறைநிலவை   தனது  சடையில்   அணிந்த , எளியோர்  மீது 
பற்று  கொண்ட  தேவாதி  தேவனாகிய  சிவபெருமானின்   செல்வக்குமர !
         இழிவான  பிறவி   எடுத்த   நாயினும்   கேவலமாய்க்   கிடந்த  இந்த 
எளியேனை, ஆர்வ  நோக்கால்  பார்த்து, ஆன்மா,மனம்,உடல்   பற்றியிருந்த 
நோய்களை  எல்லாம்   போக்கி, மாயத்  தன்மையால்   ஆசாபாசங்களைப் 
பற்றவைக்கும்  பிறவித்துன்பத்தையும்   போக்கி, உன்  அடியவனாக , அடிமைத் 
தொண்டனாக   ஏற்று  அருள்புரிந்த  ஞான  குருவே!
          பொறாமை, அகங்காரம், கொண்டு  பாலை   வெய்யிலினும்   கொடுமை 
மிக்கு   காய்ந்த   அரக்கன்   சூரபன்மனும், உனது   அருள்  நோக்கினால்   மனம் 
மாறி,  உன்னைச்சுமைக்கும்   மயிலாகவும், உனது  புகழ்   பரப்பும்   சேவலாகவும்  மாறியது  உனது   கருணைமிக்க   அருளாலல்லவா!
         வற்றாத   கற்சுனைகள்;  வளமான   செடி,கொடி மலர்க்கூட்டங்கள்;
இனிக்கும்   நீர்ச்சுனை, என்னும்  பெரும்  சிறப்புற்ற   ஞானமலையிலே 
வீற்றிருக்கும்   ஞான  மாமணியே!
      புண்ணியனைப் போற்றி   நல்லருள்   பெறுங்கள்.  


                                                       பாடல்-33.

யானேதும்      பிறப்பஞ்சேன் ;   இறப்பஞ்சேன்;   யாக்கை,
                            இனியசுகம்      வேண்டேன்;      இளந்தளிர்      மேனிகண்டு,
மானென்றோ மயிலென்றோ    வருணித்து     மாயவலை,
                              மாண்பிலே       மாளாத      மாத்துயர்      படுகில்லேன்;
தேனிநேர்        தீம்மழலை       ஊனிநேர்   மாமனையாள் 
                             தேடுபற்றுத்      தீண்டாத    தேமுனி    மனம்கொள்வேன்;
கானில்வாழ்  கற்பகத்தின்     கரம்கொண்ட     கந்தவேளே !
                            காலமெல்லாம்   காலடியே    போற்றிநிற்பேன்    பூமலையே !


                                                         பொருள் 

              என்றும்  எப்பொழுதும்   முருகனையே   நினைந்து    போற்றிவரும் 
முருகனடிமையாகிய    யான்   பிறப்பைப்   பற்றியோ, மீண்டும்  பிறந்து 
இறக்கும்   இறப்பைப்பற்றியோ   ஒருபோதும்   அஞ்சி,நடுங்கி  வாட மாட்டேன்.
      அழியும்   இந்த   உடல் விரும்பும்   இனிமை   வாய்ந்த   சிற்றின்ப   வேட்கை 
கொள்ளமாட்டேன்;கண்ணில்   கண்ட   காரிகை  கூட்டங்களைக்   கண்டு 
மையல்   கொள்ளமாட்டேன்;
     அவர்களது      அழகிலே    மயங்கி,  அழகைப்     பார்த்து,  நீ    மான்போன்ற 
கண்களைக்   கொண்டவள்;  நீ  மயில்போன்ற   சாயல்   கொண்டவள்  என்றெல்லாம்   ஒருபோதும்  வருணிக்கமாட்டேன்;வருணித்து,  அந்தப்பெண்ணின்    மாயவலையில்   சிக்கித்   தவித்து, நெடுந்துயரில் 
வீழமாட்டேன்;
       தேன்போன்று    இனிக்கும்,  மழலை   மொழி   கேட்டு,  இன்புறவும்,
உயிர்க்கு  உயிராய்  விளங்கி   உடலுக்கு   உடலாய்ச்   சுகம்   தரும்,
மனையாளைப்   பற்றிடும்   சுகமும்,  தருகின்ற   இன்பத்திலே 
துளிக்கூடப்    பற்றே   கொள்ளாத  மாமுனிவனின்   மனம்போன்று   எனது 
மனத்தையும்  கொள்வேன்.
      காட்டில்    வாழ்ந்த   கற்பகம்   போன்ற  வள்ளிக்   குறத்தியின்  பின்னால் 
சென்று,  காதலித்துக்   கரம்   பற்றி, இன்பத்தைப்   பற்றற்ற    வாழ்விற்கு 
எடுத்துக்காட்டாய்   நல்கிடும்   கந்தவேளே !
        என்  வாழ்நாளெல்லாம்   உன்  காலடியே   கதி,  எனப்போற்றி வாழ்வேன்;
ஞானத்தை  வாரி வழங்கும்   ஞானமாமலையை  மனமெல்லாம்   நிறுத்தி,
முருகன்   அடிமையாகவே   வாழ்வேன்.
     எல்லா  இனிய   சுகங்களும்   முருகன்   பாதார  விந்தமே   ஆகும்.


                                                            பாடல்--34.

பூமேவிப்    புனைவனப்      பூவினை    நுகர்ந்தாய்;
                       பூநாபிப்      பூமகள்     பொன்வரம்     காத்தாய்;
பாமேவிப்  பல்வினை    பாரிக்க    வேண்டியோன் 
                       பார்மேவு      புகழடையப்     பேரருள்      புரிந்தாய்;
கோமேவிக்   கோமகள்     கொடுத்திடக்     குன்றினில் 
                       கோலமே    ஆண்டியாய்க்    குவலயம்   காத்தாய்;
நாமேவு     நற்சொல்லே,      நான்மறை   ஆக்கினாய்;
                     நாடுநகர்      நல்லருள்    நல்கிடும்    நன்மலையே !


                                                           பொருள் 

                 நிலவுலகில்   நடந்துவந்து,  காட்டு,மலை   வெய்யிலில் 
விரைந்தேகி, வள்ளிமலைத்    தினைப்புனம்   சென்று, நித்திய   மலரான 
வள்ளியம்மையைக்   கண்டு, காதலித்து மனம்  மகிழ்ந்தவனே!
                பூப்போன்ற   தொப்புளை   உடைய   திருமாலின்   மகளாகத் 
தோன்றிய  இருவரும்   முருகனையே   மணக்கவேண்டித்   தவம்   இருந்து 
போற்றிய   காலை   அவர்களுக்கு   அளித்த  வரத்தின்படி   இந்திரன் 
மகளான  மூத்தவளையும்,  நம்பிராஜன்  மகளான   இளையவளையும் 
மணந்து   மகிழ்வித்தவனே!
                கெட்டழிந்த   பின்னாலே  முருகனே   கதி   என்று   தமிழ்ப்பாடல் 
பாடிப்புகழ்ந்த     அருணகிரியின்   புகழ்  உலகமெல்லாம்    பரவும்வகை 
அருள்  புரிந்தவனே!
              அரக்கர்களை   அழித்து   விண்ணவர்களுக்கு   வெற்றி  வாகை 
பெற்றிட   மூலகாரணமாகிய   முருகப்பெருமானுக்குத்    தன்மகள் 
தெய்வயானையைப்    பரிசாக,  மணப்பெண்ணாக   இந்திரன்   அளிக்கவும்,
அவளை மனைவியாக   ஏற்ற  முருகனோ    ஆண்டிக்கோலம்   கொண்டு,
பழனி  மலையில்   நின்று   உலகைக்   காத்திட்ட  பற்றற்றவனே!
                பிரணவத்தின்   பொருளை   உரைத்ததோடு,  தன்வாயாலே   நான்கு 
வேதங்களையும்   உலகோருக்கு  உபதேசித்த  உயர்   மறையாளனே!
          நாடும்,நகரமும்  உயிரினங்களும்    நன்கு வாழ   நல்லருள்   புரிந்தபடி 
ஞானமலையில்   அமர்ந்து, கருணை  பொழியும்   கந்தவேளே !
        ஞானபண்டிதனைப்   போற்றிட்டால்   நல்லருள்   கை கூடும்.


                                                           பாடல்--35.

ஏதமிலா         வேதஜோதி;       ஏறுமயில்       வாகனன்;
                           இயலிசை       அருணகிரித்    திருப்புகழ்       மோகனன்;
நாதனென    நாடிவரும்     நற்றொண்டர்   மேகமவன்;
                          நாதபிந்து     கலாதி      நமோநமப்      பாகனன்;
பாதம்பணி பக்தர்துயர்    போக்குகின்ற    ஏகனன்;
                          பால்நிலவு     மங்கைக்கை      பற்றிநிற்கும்    தாகனன் ;
தாதவிழ்       தண்மலர்த்     தென்றல்சூழ்     மலையினன்;
                         தாவுமனச்       செருக்கடக்கும்    தெய்வஞானத்  தேசிகனே !


                                                            பொருள் 


                    அப்பழுக்கற்ற    அனைத்து  மறைகளையும்  உலகோருக்கும்,
உயர்   முனிவர்களுக்கும்.  மூவர்க்கும்,  தேவர்க்கும்   உபதேசிக்கும்  
ஞான ச்சோதி   வடிவானவன்;
                 இயலாய்,இசையாய்,  நாடகமாய்,  முத்தமிழில்   அருணகிரி 
பாடிப்  போற்றிய   திருப்புகழிலே    மனதைப்   பறிகொடுத்தவன்;
                முருகா!  முருகா!  என்று   ஓலமிட்டு  ஓடிவரும், நல்ல  
 தொண்டர்களுக்கு    அருள்  புரிவதில்   கருணை  காட்டுவதில்   மேகம் 
போன்றவன்;
                 ஒலி ,   ஒலியின்   சாரம்,  கலை,  தத்துவங்கள்,  ஆகியவைகளின் 
உண்மை  உருவாய்   விளங்குபவனே!  உனக்கு   வணக்கம்; உன்னை 
வணங்குகிறேன்"  என்பார்க்கு   இளகிய   மனத்தோடு   அருள்பவன்;
              மலர்களையும்,  கனிகளையும்,  பாலையும்,  பலவித   நறுமணப் 
பொருட்களையும்   தனது    காலடியில்   வைத்து, வணங்கும்,  போற்றும்,
அடியவர்களின்    துயரையெல்லாம்   களைந்து,நீக்கிக்   காக்கும் 
முழுமுதற்கடவுள்   ஆவான்;
               வெண்ணிலவு  போன்ற   அழகு  மங்கையான  வள்ளியின்   கரம் 
பற்றிக்    காதல்  பேசிக்   காடுகள்  சுற்றிக்     கால் பணிந்து, அம்மங்கை  மீது     காதல்      தாகம்   கொண்டவன்;
                இதழ்களை   விரித்து  நறுமணம்   பரப்பும்,  குளிர்மலர்கள்  தழுவிய 
தென்றல்   காற்று   சூழ்ந்துள்ள   ஞானமலையில்   கோயில்   கொண்டவன்;
                தீயதை  நாடித்   துன்புறும்   ஆன்மாக்களின்   செருக்கை   அடக்கி,
ஆணவ  மலங்களைக்    களைந்து, நன்னெறி   ஞானத்தை   உபதேசிக்கும் 
ஞானமலை  ஞானமூர்த்தி ;  ஞானஸ்கந்தன்   அவனே.
             பரம்பொருளாம்   முருகனைப் போற்றுங்கள்.

                                                                   பாடல்--36.


தேடிய           செல்வமும்,     தேனிலா   இன்பமும்,
                         தேவநின்      காலடித்       தூசிக்கு      இணையாமோ?
வாடிய          பயிரைக்         கண்ட       போதெல்லாம்,
                        வாட்டம்         போக்கும்       வளமார்       உள்ளமே!
பாடிய          பாட்டின்        பல்பொருள்      பரம்பொருள் 
                        பாடினேன்     உன்புகழ்,       பாட்டுடைத்       தலைவனே!
ஆடிய          கூத்தனின்      ஆசானே!       அமுதே!
                       ஆறிரு        கர த்தானே!        ஆனந்த      மலையோனே!

                                                                      பொருள் 

              பாடுபட்டுத்    தேடியலைந்து,  சேர்த்துவைத்த  செல்வங்களும்,
மனைவி,  மக்கள்,  வாகனங்கள்,  சோலை,  நிலவு,  அருவி   என்றுள்ள 
பலவகையான    இன்பநுகர்வுகளும்,  கந்தனே!   உனது   காலடித் 
தூசிக்கு,  நிகராகுமோ?  இவை    அநித்யங்கள்;  நித்தியமாய்  என்றும் 
அழியாத   பெருஞ்செல்வம்   உனது    பாதாரவிந்தங்களே   ஆகும்,
            பிறப்பால், பிறந்து   படும்   துயரால்   வாடுகின்ற    ஆன்மாக்களைக் 
காணும்    பொழுதெல்லாம்,  அந்த  வாடிய   பயிர்களை   வளமான  அருள் 
என்ற   நீர்   ஊற்றிக்,  காத்து, அதன்   துன்பத்தை   மாற்றி   இன்பமாய்த் 
தனது    சேவடி நிழலில்   இடம்   தரும்   கருணை  உள்ளமே!
             கவிஞன்    பாடுகின்ற    பாட்டுக்களின்    அமைந்த   பற்பலப் 
பொருட்களும்    நீயேயாவாய்.   எங்கும்,எதிலும்   வீற்றிருக்கும்  ஸர்வ 
வியாபியான   பரம்பொருளே!  உன்   புகழைப்   பெருமையைப்   பாட்டில் 
வடித்தேன்.  பாட்டும்,   பாட்டுடைத்    தலைவனும்    நீயே    அல்லவா!
            உலகம்   அனைத்துமாய்    ஆனந்தக்    கூத்தாடும்  நடராசப் 
பெருமானுக்கு  ஓங்காரப் பொருள்   விளக்கத்தை   உபதேசித்த   ஞான 
குருவே! அமுதமாய்     ஆன்மாக்களைக்    காப்பவனே!  பன்னிரண்டு 
கரத்தைக்    கொண்டு  நல்லாட்சி   நல்கும்   நாதனே!  ஆனந்தமாய் 
வள்ளியம்மையோடு   வீற்றிருக்கும்   ஞானமலையானே!
உன்னடி    சரணம்.   
     போற்றுங்கள்     புண்ணியனை;  காத்திடுவான்    கருணையால்.



                                                                   பாடல்--37.


மலைமகள்        மனம்நிறை        மறையுறை        மகேசனின்,
                                மதிச்சடை        தனில்மறை        சலத்தவள்        மகிழ்மனம் 
அலைஅலை     புனல்துறை        அருள்நிறை        சரவணம் 
                                அறம்பயில்        திறக்கனி        நிறவொளி        அறுமகளிர் 
இலைமலர்        கலைமுகம்         சிலைபணி         நிலைகரம் 
                                இனியநல்          மணியொளி        இறைவனை        வணங்கிட,
மலைமலை       மனம்மனம்      உறுதவ              நனியழகா!
                                மலர்மணம்       மகிழ்துணை       மனம்உறை     மயிலோனே !

                                                                பொருள் 

                மலைமகளாம்     பார்வதி   தேவியின்    மனமெல்லாம்    நிறைந்து 
விளங்கும்,  மகேசன்;  மறைகளின்   நாதனாய்,  மறைகள்   நிலைத்து 
அமர்கின்ற   இடமாகவும், தோற்றுவித்த  ஆசானாகவும்   விளங்கும்  மகேசன்;
அவனது    செஞ்சடையில்  அழகே உருவான  சந்திரன்  ஒருபுறம்   விளங்க,
அச்சடைக்குள்  அடங்கி,ஒடுங்கி,  மறைந்து  வாழும் கங்கையும் மறுபுறம் 
விளங்குகிறாள்.
     (அக்கங்கையிலே   அக்கினியும்,வாயுவும்    தாங்க முடியாமல்   சுமந்து 
வந்து   விட்ட .அந்த   மகேசனின்   நெற்றிக்கண்   பொறியைத்     தானும் 
தங்கி   ஏற்க  மாட்டாதவளாகிய  கங்கை)
          அப்பொறியை   அலை அலையாய்   நீர்த்துறைகளில் ,  அருளும், அன்பும் 
கொண்டு விளங்கும்  சரவணப்  பொய்கையில்  விடச்சொல்ல, ஏற்ற   அச் 
சரவணத்தில்  அச்சுடர்   குழவியாய்   மிளிரவும்,  அறம்   பயில்கின்ற 
திறன்  பொழிகின்ற   ஞானக்கனிகளாய்   அவை விளங்கின.  அக்கனிகளைப் 
பாலூட்டிச்  சீராட்டி   வளர்த்திட,  ஒளிமிக்க  ஆறு   விண்மீன்கள்  வானத்திருந்து   இறங்கிவந்து,  தாமரை   இலைகளில்   மலர்ந்துள்ள   அழகு 
பொழிகின்ற   முகங்களையும்,  படைகளும், வில்லும்,வாளும்   ஏற்கின்ற  வீரம் 
மிக்க   நிலைத்த  கைகளைக் கொண்டும், இனிமையாகிய  நல்ல   நவரத்தின 
மணிகளைப் போன்று   ஒளி  விடுகின்ற   ஜோதி  ஸ்வரூபமாகவும் அவதரித்த 
ஆறுமுகக்  கடவுளை,  வணங்கி,  வாரியெடுத்து,  உச்சி முகர்ந்து,வளர்த்திட,
மலைகளில்  மனத்தை   மகிழ்வோடு  மழலைப்   பிராயத்திலேயே 
வைத்து, பற்றற்ற   முனிவனாகவும்,  பற்றினை   மற்றவர்  மனதிலே 
வளர்க்கும்   அழகே   உருவானவனாகவும்   அவதரித்த   அழகு   முருகா!
            மலரின்  மணம்   போல   அழகும்,மென்மையும், நறுமணமும்   கொண்ட 
இரு   கன்னியர்களைக்   கரம்பிடித்து   மணந்துகொண்டு  மகிழ்வை 
தேவயானைக்கும்,  வள்ளிக்கும்   அளித்தவனே! அம்மங்கையர்  தம்   மனதில் 
என்றும்  துறைபவனே! மங்கையர்  இருவரோடும்  மயில்  மீதமர்ந்து  உலகம்  காக்கும்   ஞானமலை  மாமுருகா!
    அருளும்,அன்பும்   துணைவியராய்க் கொண்ட  முருகன்   நம்மைக்காப்பான்.


                                                             பாடல்--38.


மயிலன்னாள்        மகிழ்ந்தெடுத்த      பயில்சுகமே!       எயிலழிக்க,
                                     மயிலாக்க,            மாவேலைக்      கையிலளி       மாதரசி;
மயிலன்னாள்       மாவேந்தன்         மகளாகி,          மாப்போரின் 
                                    மகிழ்பரிசு          தானாகி,    ஒயிலாகி     உயர்ந்தாள் ;
மயிலன்னாள்      மலைநாட்டுக்       குயிலன்னாள்      காதலினால்,
                                   துயிலாத         தத்துவத்தால்     கையேற்ற       காரிகையாள் '
மயிலன்ன            மடமகள்நான்        மயிலேறி      மனத்தினிலே 
                                  பயிராகப்       பத்தியானேன்;       பதமளி!        சுகஞானி!

                                                              பொருள் 

                      மயில்    போன்ற   அன்னை    பார்வதியின்    அன்புமகனே!
அழகு  விளையாட்டமர்ந்து    சுகம்  நல்கும்   ஞானக்குழந்தையே!
தாரகனின்   மாயக்கோட்டையையும்    அவனையும்    அழிக்கவும்,   ஆணவச் 
சூரனை  மாற்றி,   மாசு  நீக்கி, அன்புடைய   ஊர்தியான   மயிலாக   ஆக்கிக் 
கொள்ளவும்   தவமிருந்து  பெற்ற   வேலாயுதத்தைக்    கையில்  அளித்த   
மாதரசியாகிய    மாதா   பார்வதி தேவி.
                  மயில்போன்ற   சாயலை  உடைய  அழகு   தேவயானை    இந்திரன்   
மகளாகப்   பிறந்து,  அரக்கர்களை   அழிக்கும்     மாப்போரிலே   படைத்தளபதியாய்    நின்று, போராற்றி,வெற்றி   தேடித்    தந்த   முருகனுக்குப் 
பரிசாக   இந்திரனால்   அளிக்கப்பெற்று, மணமகளாகி     அழகாய்   உயர்ந்த 
நிலை   அடைந்த   தேவயானை;
                மயில்போன்று     தோகைக்குழல்   விரித்துக்     காட்டினிலே,
மலைக்காட்டினிலே   ஆடிக்    குயில்போல்    பாடும், வள்ளிப்பிராட்டியார். 
அவரைக்கண்டு,    காதலித்து,  இரவுபகல்  துயிலாது,  அவளின்பின்னே 
நடையாய்   நடந்து  காதலித்த   தத்துவ   முருகனால்  தளிர்க்கரம்   பற்றப்பட்ட 
மணக்கப்பட்ட   அழகுக்   காரிகை  குறவள்ளி .
          அன்னை    ஒரு மயில்;  இருமனைவியரும்   திருமயில்கள்;  முருகா!  
நானும்   மயில்போன்ற    தோகைக்   குழல்   உடையவள்; உன்மீது     காதல் 
கொண்ட   மடமகள்;   மயில் மீது    பவனி  வரும்    உன்னை   மனத்திலே 
சிறைவைத்துள்ளேன்;மனமெனும்   தோட்டத்தில்   முருகன்   என்னும் 
அழியாப்   பயிரைப்    பாத்தி   பாத்தியாய்ப்   பயிரிட்டு     வளர்க்கிறேன்;
எனக்கும்  உன்     மனத்தில்   ஒரு  இடம்   அளிப்பாயா?  ஞானமே     சுகம் 
என்று   விளங்கும்   ஆண்டியே   இந்த   பேதைப்பெண்ணை   ஏற்று 
அருள்வாய்!  என்று   வேண்டுவதும்  ஒருமயில்.
        (மயிலேறி   மாமுருகனை   என்  மனமென்னும்    தோட்டத்தில்   
பயிராகப்   பக்தியோடு   வேறு   சிந்தனை   இல்லாமல்  வளர்க்கும்  பெண் 
நான்.  எனக்கும்   உன்  சேவடி   நிழலில்   இடம்   தந்தருள்!  என்று வேண்டுகிறாள்.)


                                                           பாடல்-- 39

சுகஸ்வரூப!    சுந்தர!     மயூர     வாகனனே !
                             சுபாஷித    சுமுக!        சுலலித     சோபன!
ஜகமதின்         சாக்ஷியே !   ஜலமதில்       ஜனித்தவ !
                             ஜனனியின்    சத்புத்ர !    ஜயகோஷ    ஸேனாபர !
யுகமெலாம்   கடந்த          யோகயோக்ய     சாதன !
                            யகார        யந்த்ர,     சாந்நித்ய!   யஜமான!
ககனக்             கஜகுஞ்சரி,        வனபுத்ரி       நாயக !
                            கரதலம்     காருண்யம்,     கமலபாதம்    அருள்வாயே.


                                                            பொருள் 

           ( முழுவதும்  தத்பவ   வடசொற்களால்   ஆன  கவிதை)

            உலகமக்களை   இன்பத்தில்   நிறுத்திக்   கர்மவினைகள்   என்னும் 
துன்பத்தைக்    களையும்   இனிய குணத்தின்    உருவமாய்    விளங்குபவனே!
          அழகே!   அழகனே!   அழகிய   மயிலை   ஊர்தியாய்க்    கொண்டவனே!
      தன்னை    நாடிவரும்   அடியவர்களிடம்   அன்பொழுகப்    பேசும்  பண்பு 
கொண்ட   இனியவனே !  
      அழகான   தோற்றம்;   அழகான    அணிகலன்கள்;  அழகான   சிரிப்பு;
இவைகளால்   பக்தர்களை    வசீகரிக்கும்   தோற்றம்    கொண்டவனே!
         கோடான    கோடி   யுகங்களாய்  நின்று  அருள்பாலிக்கும்   மூவேழ் 
உலகங்களின்   சான்றாகிக்    காட்சி   தரும்   நித்தியமான   கடவுளே!
        சரவணம்    என்ற    நீர்த்தடாகத்தில்     மலர்ந்த    தாமரைகளில் 
முக்கண்ணனின்   நெற்றிப்பொறியால்   தோற்றுவிக்கப்பட்டவனே!
      உலக    அன்னையாகிய   பராசத்தியின்   குணங்கள்  நிறைந்த   புத்திரனே!
    சூரபன்மனோடு   ஆற்றிய   தேவாசுரப்   போரிலே   அரக்கர்களை    அழித்து,
வெற்றிகொண்டு,  வீரவேல்!     வெற்றிவேல்!  என்னும்   வெற்றி   முழக்கத்தைப் 
பெற்ற     தேவசேனாபதியே!
     நெற்றிக்கண்ணிலே    தோன்றி, நித்தியன்    ஆக,   அழியாத   தெய்வ  
உருக்கொண்டவனாக, நிலைத்து  நின்று, ஊழிக்காலமும்     தாண்டி,
மஹா    பிரளய   காலத்திலும், சங்கார   மூர்த்தியாகித்    தான்மட்டும்  நின்று,
மீண்டும்    உலகைத்    தோற்றுவிக்கும்  யோகியே!  
       சரவணபவாய"   என்னும்   மந்திரத்தின்  "யகார "  யந்த்ர   மந்த்ர  மகிமையில்    தங்கி, வழிபடும்   அன்பர்களுக்கு  "குகஸ்வரூபம் "  அருளி,
ஆன்மாக்களைத்     தன்வயப்படுத்தும்   தத்துவ   மூர்த்தியே!
      மூவருக்கும்,  மூவேழ்    உலகங்களுக்கும்,   விண்ணவருக்கும்,
மண்ணவருக்கும்   முதல்வனாய், மாபெரும்   தலைவனாய்   விளங்குபவனே!
       விண்ணகத்தில்    வெள்ளை  யானையால்   வளர்க்கப்பட்ட  தெய்வயானைக்கும்,    வள்ளிமலைக்    குறவள்ளிக்கும்   அன்பு  கொண்ட 
கணவனாய்    விளங்குபவனே!
    உனது    அருள்வழங்கும்   கரங்களாலும்,  தாமரை  போன்ற   குளிர்ந்த 
சேவடிகளாலும், அடியவனாகிய    என்மீது   கருணையும்,  இரக்கமும் 
கொண்டு   அருள்   பொழிவாய்! என்றும்   என்போன்றோரைக்    காத்திடுவாய்! 


                                                                   பாடல்--40

அருள்முனி    அகத்தியன்    அறிந்தநல்     ஞானமே!
                            அருந்தமிழ்       கீரனின்     பெரும்பாட்டு    ஞானமே!
அருண            கிரியான்          ஆன்மபல      ஞானமே!
                           அருங்கச்சி     ஆசார்யன்     அறுபுராண     ஞானமே!
குருபரன்       குறைஊமைக்      கலிவெண்பா     ஞானமே !  
                          குறக்குருவி       குணயானை    குளிர்மன      ஞானமே!
அருள்நிறை     நாயேனின்      ஆத்மார்த்த    ஞானமே!
                           அருளும்             பொருளும்      ஆன,குக          ஞானமே!

                                                        பொருள் 

         சிவனருள்   பெற்ற   மாமுனிவன், அகத்தியன்   சிவனவன்  பிரணவ 
உபதேசம்   பெற்றதை    உணர்ந்து,  தனக்கும்   உபதேசம்   அருளுமாறு 
முருகனை  வேண்ட ,   அவருக்கு உபதேசித்த  ஞானமாமணியே!
        மதுரைத்   தமிழ்ச்சங்கத்     தலைமைப்   புலவனாகிய   நக்கீரன்,
முருகனின்   பெருமையைத்  "திருமுருகாற்றுப்படை"  என்னும்  நூல் 
வாயிலாகப்  போற்றினான்.அவ்வாற்றுப்படையின்   ஞானமுதல்வனே!
          ஆண்டாண்டு   அல்லல் பட்டு, இன்பசுகத்திலே  சிக்கித்   தவித்த 
அருணகிரியார்  ஆறுமுக   அருளைப்   பெற்றபின்  அவ்வடியானுக்கு 
ஆன்மபலமாக   நின்று  காத்தருளிய  ஞானமாமுகனே!
          அருமைமிகு    காஞ்சி  மாநகரத்திலே  தோன்றி, சைவசமய  ஆசானாக 
சிவாசார்யனாக  அரும்பூஜை  செய்து,   ஆறுமுக   அருள்   கூடிடவே  "கந்த 
புராணத்தை"  ஆறுகாண்டமாக  இயற்றிப்  போற்றினார்.அந்தக்   கந்த 
புராணத்   தலைவனான   ஞானஸ் கந்தனே!
        செந்தூர்   முருகனை   வணங்கும்  அடியவர்   குலத்திலே     தோன்றி,
ஐந்து    வயது   வரை,  ஊமையாக  விளங்கிய  குழந்தை, செந்திலாண்டவன் 
வேலாசியால்  வாயைத்    திறந்து   வளமான   தமிழ்ச்   சொல்லாக, வரமான 
முருகன் ஆசியால்  பாடிய  "கந்தர் கலி  வெண்பா"  என்னும்   நூலின்  
ஞானமாய்    விளங்கும்  செந்திலாதிபதியே!
          வள்ளிமலையில்  உதித்த  வள்ளியம்மைக்கும், விண்ணக  நாட்டிலே  உதித்த  தேவயானைக்கும்,  மனமகிழ்வைத்   தந்து,மணந்து,அவர்களின்   
மனமெல்லாம்   குளிர்வித்த   காதல்   ஞானமே!
         உனது    அருளைப்  பெற்ற   உன்னடிமையாகிய    அடியேனின்   ஆன்மாவில், மனத்தில்   நின்று, நடமாடும்   ஞான வள்ளலே!
       அருளும்    பொருளும்  ஆகி  அகில    உலகையும்   காக்கும்  குகனே!
முருகனே! ஞானமா   மலைத்தலைவனே!

                                           பாடல்--41.



மேதினியின்      ஆதியே !       மேலமலைச்        சோதியே!
                                 மேகராகக்    குறிஞ்சியே!
ஓதினிய               வேதமே!        ஒதுங்குரு         நாதமே!
                                 ஓங்கார        வானமே!
காதினிய            கீதமே!          காட்டுமலர்க்         காதலே!
                                கார்க்களிற்றுக்     குளிர்வே!
தீதினிய             சேவலே !       மீதமர்                      மயிலே!
                               தீஞ்சுவைப்     பாதமே!


                                                            பொருள் 

       மூவேழ்     உலகங்களின்    முதலானவனே!  உயர்ந்தோங்கிய   
மாமலைகளின்    சோதி    ஒளியாய்    நின்று   உலகைக்     காப்பவனே!
பண்களில்  முதலானதாகவும்,  இனிமையும்,  குளிர்ச்சியும்  உடைய 
மேகராகக்    குறிஞ்சிப்    பண்   போல  விளங்கி,   ஆன்மாக்களின்   மனத்தைக் 
கொள்ளை   கொள்பவனே!
        ஓதுவதற்கு   இனியதாகவும், உயர்ந்ததாகவும்   விளங்கும்   நான்மறை 
போன்றவனே!  வேதத்தை   உலகோருக்கு   உபதேசித்து   உயர்ந்த  ஆசான் 
சிவபெருமானுக்குப்   பிரணவ  மந்திரப்    பொருளை  ஆசானாகி   அமர்ந்து 
உபதேசித்த   ஞான  சுவாமிநாத  குருவே! வானவீதிகளின்   அளப்பரிய 
ஒலியாய் ,   ஆழ்ந்த   ஞான   ஒலியாய் ,  விளங்கும்,   ஓங்காரத்தின்  பொருளாய்,
ஒலிக்கும்   முறையாய், உருவமாய்,க்   காக்ஷி   தரும்   பேரானந்த   ஒலியே !
      குமரா!   என்றும்,  குகா!   என்றும்,  கந்தா!  என்றும், ஷண்முகா!  என்றும் 
இனிமை.அருள், கருணை,  நல்கும்   இனிமை வாய்ந்த   பெயர்களால்  
உலக    மக்களின்    காதுகளில்    எல்லாம்   இனிமையாக   இனிய   கீதமாக
ஒலித்து   ஆன்மாக்களைத்    தன்வயப்படுத்துபவனே! காட்டினுள்   மலர்ந்த 
வள்ளி   என்னும்  மணம் மிக்க    மலர்மீது   மனம்  கொண்டுக்   காதலித்து,
அவள்பின்னே   காடு மேடெல்லாம்  சுற்றித்  திரிந்தவனே !  செல்வமும் 
வனப்பும்    மிக்க   இந்திரபுரியிலே   தோன்றி,இந்திரன்  மகளாகி, ஐராவதம் 
என்ற  யானையால்   வளர்க்கப்பட்ட  தெய்வயானையை   மணந்து, குளிர்ந்த 
மனத்தை   உடையவனே!
          தீதான   அரக்கனாகிப்   பின்னர்  இனிய   சேவலாக   மாறிய   சூரனின் 
வாயால்   போற்றப்படும்   முருகா! (சேவல்   முருகனாக   உருவகிக்கப் படுகிறது)   இருகூறான   சூரமரம்   மற்றொரு   கூறால்   மயிலானது.  அதுவோ 
நாளெல்லாம்   முருகனைச் சுமந்தது.(அம்மயிலும்   முருகன்   தானே.  இனிமை 
வாய்ந்த   வீடு   என்னும்   பதத்தை    அளிக்கும்  நறுமணமிக்க   நாதனாம் 
மாமுருகனின்   பாதாரவிந்தங்களே!  போற்றினேன்; போற்றி.

                                                  பாடல்--42

பாடினால்       பழனி;     பேசினால்     ஏரகம் ;
                            பால்நிற   வெண்ணீறு    பற்றினால்    செந்தூர்;
நாடினால்      நற்குன்றம் ;     நங்கை     மணமலை ;
                           நாணுவாய்      நொடிதான்     நற்பெயர்      மறந்தால்;
தேடினால்     திருத்தணி;      தெய்வீகத்       திருவருள்;
                          தெவிட்டாத்      தீங்கனி          உதிரும்       சோலை;
மாடாகி        மரமாகி             மாண்டது        வாழ்வு;
                         மாடமலி            கூடுவருள்      தேடிவா      ஞானமலை.

                                                      பொருள் 

         பாட்டைப்   பாடத்   துவங்கினால்   அப்பாட்டாய்ப்  பாட்டின் 
பொருளாய்  நிற்பவன்   பழனி  மாமலை   முருகன்.
      பேச்சு  என்று   எந்த   உருவில்   பேசினாலும்,  அப்பேச்செல்லாம்  
சுவாமிமலை   முருகனே   ஆவான்.
     வெண்மை   நிறமுடைய   திருநீற்றைத்     தொட்டால்,   பூசினால்,
முருகா!   என்றபடி   வாயில்   போட்டால்   அங்கெல்லாம்   வந்து  நின்று,
அருள்புரிவான்  செந்தூர்  முருகன்.
  தேடி,நாடி, அடைந்து  அடைக்கலம்   காண வேண்டிய  மலை திருப்பரங்குன்றம்.  நங்கையாகிய    தெய்வ  யானையை   மணந்த 
அம்மலையே   ஆன்மாக்களுக்கு    அடைக்கலம்   கொடுக்கும்   ஆனந்த 
மலையாகும்.
     நொடிப்பொழுதேனும்  " முருகா"  எனும்   தாரக   மந்திரத்தை,"ஷண்முகா"
என்னும்    ஆறெழுத்தை, மனமே!   மறந்துவிடாதே!  மறந்துவிட்டால்  அந்த 
நொடிப்பொழுதிற்காக,  வாழ்நாளெல்லாம்    வருந்தவேண்டி   இருக்கும்.
    தெய்வீகத்     திருவருளை, அன்புகலந்த    கருணையை, ஆன்ம சுகத்தை 
நாடித்    தேடி   அலையாதே.  திருத்தணி   மலையை   அடை ; வள்ளிமணாளனை  வாயாரப்போற்று;  வளமெல்லாம்   சித்திக்கும்.
     இனிய    பழங்கள்   உதிரும்   சோலைக்குச்செல்!  ஞானக்கனியான 
முருகனை   வணங்கு!போற்று!  பாடு !  அம்மலைக்  கனிகள்   திகட்டும்;
அம்மலைவாழ்    முருகனோ   திகட்டான்; இனிமை  கலந்த  அருளைப் 
பொழிவான்.
       விலங்காயும் , மரமாயும்   வாழ்ந்து   பெறற்கரிய   பிறப்பை  வீணே 
கழித்துவிட்டாய். உன்  வாழ்வு  பேறு   பெற்றதாக   அமைய   வேண்டும் 
எனில்   மாட மாளிகைகள்  நிறைந்த   ஞானமலையைத்   தேடி    வா!
அருள்   கூடும்;  அன்பு   கூடும்;  அமைதி   கூடும்; ஆன்ம  ஞானம்   கூடும்.
        உயர்    ஞானம்   பெற்றிட   ஞானமலையை   அடைந்து  ஞானமா முருகனைப்  போற்றுங்கள்.

                                                          பாடல்  43.  


ஞான மலை     ஞானமலை      ஜகத்தின்     நேயமலை;
                               ஞாயிறாய்த்    திங்களாய்    ஞாலஇருள்    நீக்குமலை;
மோனமலை    மோனமலை    மோகத்தின்    மீட்சிமலை;
                               மோகனத்தைச்     சீதனமாய்த்   தான்சுமந்த   வள்ளிமலை'
தானமலை       தானமலை       தன்னடியார்ப்    பேணுமலை ;
                              தாவுமான்          கூவுகுயில்      மேவுலாவு     சோலைமலை ;
கானமலை     கானமலை        கவின்மேகச்     சாரல்மலை ;
                             காத்தாளும்       கந்தபிரான்    கால்பதித்த    கருணைமலை.

                                                      பொருள் 


          உலகோரைக்    காக்கும்   கந்தபிரான்   ஞான   குருவாய், பண்டிதனாய்,
விளங்கும்   மலை. ஞானமே   மலையாயிற்று;  மலையே   ஞானமாக உரு 
எடுத்தது; அன்பும்,கருணையும்   கொண்ட   கருணைக்கடவுள்  நின்றருளும் 
மலை .
       அகில  உலகங்களிலும். அண்டங்களிலும்   இருளைப்   போக்கி  ஒளியை 
வழங்கும்   ஞான   சூரியனாய், மதிச்சந்திரனாய்  விளங்கும்  மலை; அறியாமையைப்    போக்கும்   ஞானபண்டிதனாகிய  முருகன்  அன்பாகிய 
இனிமை  கலந்த  நிலவு  போன்ற   மென்மையும்   கொண்டு   விளங்கும்  மலை;
 
      மௌனம்   யோகம்   தவம்   மூன்றும்   கலந்த   அமைதி   ஆலமரத்தடியில் 
அமர்ந்து   சனகாதி   முனிவர்களுக்கு   ஞானம்   உபதேசிக்கும்  
தட்சிணா மூர்த்தியாம்   தந்தை   போன்றே  பற்றற்ற   முனிவனாய்ப்   பழனி 
ஆண்டியாய்த்   தானும்  நின்று, மோகமெனும்   ஆசாபாசங்களை    அழித்து,
மெய்ஞானத்தை   அருளும்  முருகன்,  ஆன்மாக்களை  மோகத்திலிருந்து 
மீட்டெடுத்து, மேலான   வீட்டிற்கு   வழிகாட்டும்  ஞானபண்டிதன்  
வீற்றிருக்கும்   மலை.
   மோனம்  தொடாதவன்,  ஞான  பண்டிதன்;  ஆயினும்   தமிழ்க்காதலில் 
அன்புற்று, மோகன   வள்ளியின்   பின்னே   அலைந்து,திரிந்து  காடெல்லாம் 
ஓடி ஆடி, வள்ளிமலை  நாயகியாம்   குறமகளை  அன்புச்சீதனமாகக்  கொண்டு,  ஞானமலையிலே  கால்   பதித்த  காதல்   மலை.
    தானம்  புரிவோர்,   தவம்  புரிவோர்   அவ்வவற்றின்   பயனாய்   விளங்கும் 
ஞானமலையைப்  போற்றுவோர்  ஆவர்;தனது    அடியார்களுக்கு   ஞானமும்,
கல்வியும், வாழ்வும், வீடுபேறும், தனமாய்    வழங்குகின்ற  தானசீலன் 
முருகன்   வீற்றிருக்கும்   மலை.
     ஓடியாடித்    தாவுகின்ற   மான்களும்,  முருகன்   புகழைக்   கூவிப் 
பாடுகின்ற   குயில்களும்   நிறைந்து விளங்கும் சோலைகளை  உடைய 
பழமுதிர் சோலை  மலை  இதுவே.
     காடுகள்   நிறைந்து விளங்கும்   மலை;  அங்கே   இனிய    பாடல்கள் 
ஒலிக்கின்ற  இயற்கைக்   சாரல்கள்   மேகங்கள், பறவைகள், வானம்பாடிகள்,
நிறைந்து   ஒலி   எழுப்பும்  குளிர்   சாரல்  மிகுந்த   மலை.
உலகைக்   காத்தும், உலக    ஆன்மாக்களுக்கு   நல்லருள்  வழங்கியும் 
கருணை  புரியும்   கந்தபிரான்   வள்ளிமலையிலே    மணந்த   வள்ளிப் 
பிராட்டியாருடன்  தணிகை   செல்லும்   வழியிலே   கால்   பதித்து   நின்று 
கோலம்  காட்டிய   கருணை   மலை  ஞானமலை   ஆகும்.
    ஞானமா   முருகன்   உருவாய்  விளங்கும்   ஞானமலையைப் போற்றுவோம்.


                                                       பாடல்-44 



கருணையினால்      சூரபன்மன்    கடவுள்   நிலைபெற்றான்;
                         கனிவினால்       குறவள்ளி       கரம்தொட்டுத்   துணையானாள் ;
ஒருமையினால்         தந்தையோ     உயர்ஞானச்     சீடரானார்;
                         ஊமையவன்      திருவருளால்     நாமமது         போற்றிநின்றான்;
அருளதுவால்              அழிபோகி      அருட்கவி    கிரியானான்;
                         அன்பதுவால்    நக்கீரன்      ஆற்றுப்படை     தனில்நின்றான்;
பெருந்தவத்தால்      பேரரசிப்        பெருவேலோ    பேராயுதம்;
                          பெருஞ்சங்கம்       பேறுற்றது,       பெம்மானின்   ஞானநூல். 

                                                    பொருள் 

       மாமுருகன்   கொண்ட   அளவுகடந்த   கருணையினால்   அரக்கனான 
சூரபன்மன்  கந்தனின்   ஊர்தியாகவும்,  கொடியாகவும்   உருவைப்பெற்று 
ஆண்டவனை  வணங்குவோரெல்லாம்    அவனையும்   வணங்கும்  கடவுள் 
தன்மையைப் பெற்றான்.
      காலமெல்லாம்   கடுந்தவம்   இருந்து, முருகனையே   மணாளனாக 
மனதில்   எழுதிப் பூஜை  செய்த   பாக்கியத்தால்   மால்மகளான  
வேடன்   மகளாகி  முருகன்   காட்டிய   கனிவினால்  முருகனின்   மனையாள் 
ஆனாள் .
         சிவோஹம்" என்ற   பாவத்தால்     தானே  சிவம்  என்னும்   நிலையிலே 
தந்தையான   சிவபெருமானுக்கே   பிரணவப்  பொருளை   உபதேசிக்கும் 
சுவாமிநாதனாக நின்று, சிவபெருமானைச்    சீடராகப்  பெற்றான்.
        ஐந்து வயது வரை  ஊமையாக   விளங்கிய   அச்சிறுவன்,  திருச்செந்தூர் 
சன்னதியில்   முருகனின்   அருட்பார்வையினாலே   ஊமைத்தன்மை    நீங்கப் 
பெற்று, முதற்சொல்லே   முருகனாகக்   "கந்தர் கலிவெண்பா"  பாடிய 
குமரகுரு  சந்ததம்  எல்லாம்  செந்தமிழ்   மாலையாகப்   பாடிப்போற்றினான்.
       அழிவைத்   தரும்   சிற்றின்ப  வேட்கையிலே   மூழ்கி  வாழ்ந்த  மனிதன்,
முருகன்   கடைக்கண்  நோக்கினால்  அருணகிரியாக    மாறித்   திருப்புகழ் 
பாடிப்   பெம்மானைப்  போற்றினான்.
     தந்தையின்  சினத்திற்கு    ஆளான   சங்கப்  புலவன்  நக்கீரன்  திருப்பரங்குன்றப்   பொய்கையில்  நின்று   மகனான   முருகனைப்  போற்றிப் 
பாடியதே   திருமுருகாற்றுப்   படை நூலாகும்.அவன்    இறை   மீது   கொண்ட 
அன்பு  தந்தையின்  சினத்தையும்   போக்கி   அருள் பெற   வைத்தது.
     நீண்டநாள்   தவம்   இருந்து  மகனின்   வெற்றிக்காக   வேலாயுதத்தைப் 
பெற்றவள்  அன்னை   பராசக்தி. அதுவே   சூரபன்மாதி   அரக்கர்களை 'வீழ்த்தியது.   என்றும்   முருகன்   கையிலே   அணியாகவும்,  ஆயுதமாகவும் 
நின்றது.
     இறையனார்   களவியல்  என்னும்   நூலுக்குப்   பல்லோரும்   உரை 
எழுதியிருந்த   காலத்தில்   சிறந்த   உரையைத்   தெரிவு  செய்ய,
உருத்திர சன்மனாக   அவதரித்து, நக்கீரன்   உரையே   சிறந்தது. என்று 
உரைத்த   ஞானப்  புலவன்   முருகனே   ஆவான். அதனால்  பேறு   பெற்றது 
மதுரைத்   தமிழ்ச்சங்கம்.
   பல்வேறு   நிலையில்   அருள்புரிந்த   முருகன்   வீற்றிருக்கும்   ஞான மலையைப்  போற்றுவோம்.

                                                             பாடல்-45

நூலணி       மார்பன்;         நுதல்விழிப்     பொறியான்;
                       நுண்கலை      வாணன்;
மாலணி     சக்கரத்           தாரகன்             மாய்த்தும்,
                      மாயமலை     அழித்தும்,
வேலணி   வேந்தன்;         விரிதோகை     ஊர்தியான்;
                     வேதாந்த         மூலவன் ;

 காலணி     கழலில்         கருணை     மிக்கவன்; 

            காக்குமலைக்    கந்தனே! 


            பொருள் 


    ஓங்கார   மார்பினில்  புண்ணியப் பூணூல்   அணிந்தவன்; 

நெற்றிக்கண்ணில்   சிவபெருமான்    தோற்றுவித்த  நெருப்புப் 

பிழம்பானவன்;

இசை,நடனம், கூத்து   ஆகிய   நுண்ணிய   திறன் வாய்ந்த   கலைகளில் 

தந்தையைப்  போல்  பெரும் பெருமை பெற்றவன்;

திருமாலின்   சக்கரத்தைப்   பறித்துத்   தன்  வெற்றியைப்   பறை  சாற்றிய 

தாரகனையும்,   மாயங்கள்   நிறைந்த   அவனது   கிரௌஞ்ச  மலையையும் 

அழித்த   வேலாயுதத்தைக்     கரத்திலே   ஏந்தியவன்;

அழகே   உருவான   தோகையை    உடைய   மயிலை   ஊர்தியாகக் 

கொண்டவன்;

மறைகளுக்கும்,   ஞான சாத்திரங்களுக்கும்  மூலமாயும், முதல்  குருவாயும் 

விளங்குபவன்;

அடியவர்களைக்   காப்பதற்காகத்    தனது   பாதங்களில்   அணிந்த  வீரக் 

கழலணியையும்  கூடக்  கருணை  கொண்டதாக   அமைத்துக் கொண்டு 

உலகைக்காப்பவன்;  

அப்பெருமான்   வீற்றிருக்கும்   ஞானமலையில்   வீற்று   அருள்   பொழியும் 

கந்தப்பெருமானே!  உன்   சேவடிகளைப்   போற்றுகிறோம்.


                                                      பாடல்- 46 


கந்தா!      கடம்பா!        கார்த்திகை      மைந்தா!

                     காங்கேயா!   ஒற்றைத் 

தந்தனின்   தம்பியே!    தத்துவ       மூலமே!

                        தங்கவள்ளி     காந்தனே!

தந்தையும்  தாயும்       ஆனவனே!    தர்மச் 

                       சிந்தை     வாழ்பவனே!

செந்தீயே ! செந்தூர்த்     தலைவ!  போற்றினேன். 

                       செம்மலைச்    செவ்வேளே.


                                        பொருள் 


     கந்தனே!    கடம்பனுக்கு   அருள்புரிந்து   ஆட்கொண்டவனே! கார்த்திகை 

விண்மீனில்   அவதரித்து,  வானத்து   விண்மீன்களான   கார்த்திகைப் 

பெண்களால்  வளர்க்கப்பட்ட  மைந்தனே!  கங்கையின்   புதல்வனே!

ஒரு  தந்தம்   கொண்டு   உலகைக்   காக்கும்   விநாயகப்  பெருமானின் 

தம்பியே!  தத்துவார்த்தங்களின்    மூலமாகவும், முதற்  காரண கர்த்தாவாகவும்   விளங்குபவனே!  அழகே   உருவான  வள்ளியம்மையின் 

மனத்தைக்  கொள்ளை   கொண்டவனே! மூவேழ்  உலக   மக்களின்  

தாயாகவும்,  தந்தையாகவும்  ஆகிக்    காப்பவனே!  அறத்தை   வளர்க்கும் 

சிந்தையிலேயே   வாழும்  கடவுளே!   சிவனின்    நெற்றிப்பொறியில்  உதித்த 

தீச்சுடரே !  திருச்செந்தூரில்    குடிகொண்டுள்ள   தலைவனே!  செம்மை 

வாய்ந்த   மலைகளில்   எல்லாம்   வீற்றிருந்தாலும்   ஞானமலையில் 

வீற்றிருப்பதையே   விரும்பும்   ஞான   பண்டிதனே!  உன்னை ப்போற்றி

வணங்குகிறேன்.  முருகனைப்   போற்றினால்   முத்தியும்   கிடைக்கும்; 

முழுமையும்   கிடைக்கும். 


                                                       பாடல் --47


செவ்வாய்     மலர்ந்ததால்     சிறந்தது   ஏரகம்;

                           செவ்வாய்ச்      செவ்வரளி    சிறந்தது     செந்தூர்;

செவ்வாய்     இதழில்             சிலிர்த்தது      திருத்தணி;

                          செவ்வாய்        விரதம்      சிறப்பளி       பழனி;

செவ்வாய்த்  தேவாள்         சேர்ந்தது    குன்றம்;

                          செவ்வாய்த்    தேங்கனி    சிதறும்       சோலை;

செவ்வாய்க்  கதிபதிச்        செவ்வேள்    வேளூர் ;

                           செவ்வாய்      ஞான      பண்டித      மாமலையே.


                                          பொருள் 

    பிரணவத்தின்    பொருளைத்    தந்தை    ஆகிய    சிவபெருமானுக்கு 

விளக்கி  உபதேசித்த  செம்மையும்    சீர்மையும்    வாய்ந்த   திருவாயை 

உடையவன்  சுவாமிநாதன்   வீற்றிருக்கும்   மலை   சுவாமிமலை.

     செவ்வாய்க்கிழமை   தோறும்    செவ்வரளி   மலர்மாலை   சார்த்தி 

வழிபட்டால் , அந்தச்  செந்திலாதிபதி   நலமும்   வளமும்   நல்குவான்.

     அழகும்   இளமையும்   வாய்ந்த   வள்ளிமலைக்    குறவள்ளியின் 

செவ்வாயில்  மேன்மை  உதடுகளில்   இன்பம்  அனுபவித்து, மகிழவடைந்து  

தணிகைமலையில்  வீற்றிருக்கும்     முருகன்    மலை  திருத்தணிகை  

மலையாகும்.

செவ்வாய்க்    கிழமை   தோறும்   உண்ணாநோன்பு  மேற்கொண்டு, 

கோயில்   சென்று,  முருகனை  வணங்கிப்   பூஜித்தால்  அருளும்  வரமும் 

நல்குவான்  பழனி  ஆண்டவனாகிய  முருகன்.

   செம்மை   ஆகிய   அழகு முகமும், அருட்கண்களும்  அன்புச்சொல்  பேசும் 

வாயும்  கொண்ட  இந்திரனின்   மக்களாகிய   தெய்வயானையை  மணந்து 

மகிழ்ந்தான்  திருப்பரங்குன்றத்திலே  எம்பெருமான்   முருகன்.

     செவ்வாயால்    சுவைத்தால்    தேன்   போல்  இனிக்கும்     பழங்கள்   

தானாகவே   பழுத்து,  மரங்களில்   இருந்து  சிதறி   உதிரும்  பழமுதிர் 

சோலையிலே   அடியவர்கள்   வேண்டும்   வரங்களை   அருள்கின்ற 

முருகன்    வீற்றிருக்கின்றான்.

    செவ்வாய்   என்னும்    அங்காரகனின் தலைவனாகி   அவனையும்,

அடியவர்களையும்   காத்து   அருள்புரிகின்ற  செல்வ முத்துக்குமாரசாமி 

வீற்றிருக்கும்  புள்ளிருக்கு  வேளூர்   என்னும்,  வைத்த்தீஸ்வரன்   கோயிலை 

வணங்கி   அருள்பெறு க.

கருணை,இரக்கம்,  ஈகை,  அருள்  ஆகிய   அத்தனைச்    செல்வங்களையும் 

வழங்குகின்ற   ஞானபண்டித   மாமுருகன்   வீற்றிருக்கும்   மலை  

ஞானமலையே   ஆகும்.

   அறுபடை  வீடுகளுக்கு   நிகரான    ஞானமலையைப்   போற்றுவோம்..


                                                        பாடல்--48.


மாமரம்          பட்டது,        மயிலாய்ச்     சேவலாய்;

                          மாங்கனி     விட்டது,    மாப்பழனி    உதித்தது;

மாம்பூ          மலர்ந்தது ,      மாக்குன்று      மனத்தே;

                         மாவிலைத்      தோரணம்,      மாவள்ளி     திருத்தணி;

மாம்பிஞ்சு  மாப்பிறவி;      மாங்காய்ச்    சஞ்சலம்;

                        மாம்பழம்          சாயுஜ்யம்;      மாங்கொட்டை   முற்றுதவம் ;

மாஞ்சோலை  மாநிழல்    மனவமைதி     மாக்கருணை;

                       மாமலையே     ஞானமலை;மனம்குளிரப்     போற்றுவமே.


                                                  பொருள் 


   போரிட  இயலாத   சூரபன்மன்  மாயத்தால்   மாமரமாக   மாறி நின்றான்;

அம்மாமரத்தை   முருகனின்   வேல்   இரண்டாகப்பிளந்தது. சிவபெருமானிடம் 

பெற்ற   வரம்,  முருகன்   கருணை    ஆகியவற்றால்   சூரமரம்   மயிலாகவும்,

சேவலாகவும்   மாறியது. மயிலாக  நாளெல்லாம்  முருகனைச்  சுமந்தது;

சேவலான   சூரன்  முருகன்  தேர்க்கொடியாகி   முருகன்   புகழை 

"கொக்கு   அறு   கோ"  என்று   நாளும்   கூவிற்று.

        சிவபெருமானிடம்   நாரதரால்    ஒரு   ஞானப்பழம்   காணிக்கையாய்க்  

கொடுக்கப்பட்டது.  அப்பழத்தைப்   பெற   விநாயகனும்   முருகனும்  

விரும்பினார்கள்.   இறைவனோ,யார்   உலகை  முதலில்   சுற்றி 

வருகிறார்களோ,அவரே   இக்கனியை   அடையலாம் ." என்றார்.

உடன்  முருகன்   தனது   மயில்   வாகனத்தில்   உலகைச்   சுற்றப் 

புறப்பட்டான். சிந்தனை     செய்த   விநாயகர்  தனது   தாய்   தந்தையர் 

ஆகிய   பார்வதி,  பரமேஸ்வரனைச்  சுற்றிவந்தார்; உலகே    இறைவன்'

இறைவனே   உலகு" அவர்களைச்    சுற்றிவந்தால்   உலகைச்   சுற்றியதற்குச் 

சமம்"  என   மனத்தில்   கொண்ட  அவர்  செயலைக்  கண்டு   வியந்த  

இறைவன்   அவருக்கு   அப்பழத்தை  அளித்தார்.மகிழ்வோடு  பழத்தை 

விரும்பிச்சுவைக்க   ஆரம்பித்தார். மூவேழ்  உலகத்தையும்   மிக மிக 

விரைவாய்ச்   சுற்றிவந்த   முருகன்  கயிலை  வந்தவுடன்   கண்ட 

காட்சியால்  மிகுந்த   சினம்   கொண்டார்; கனி,  உறவு,தந்தை,தாய்,

போன்ற   ஆசைகளை   விட்டுவிட்டு   நிலவுலகிற்கு   வந்து   தனியே 

ஒரு மலையில்   அமர்ந்துவிட்டார்.  அம்மலையே   முருகன்   விரும்பும்   மலை 

ஆயிற்று. சிவபார்வதிகள், தேவர்கள்  எல்லோரும்   வந்து  முருகனை 

இங்கேயே   போற்றுகின்றனர்.எல்லோரும்   முருகா!  நீயோ   ஞானக்கனி;

உனக்கு   எதற்கு   மாங்கனி ? என்று   வினவியதோடு, மலையும் 

பழம்   நீ"  பழனி  என  ஆயிற்று.

   மாமரங்களிலே   பூக்கள்  மலர்ந்தன; வசந்த  காலம்   வந்தது; அரக்கர்களை 

அழித்து  மாமுருகன்   வெற்றி பெற்றான்; அதனால்   மகிழ்ந்த  தேவேந்திரன் 

முருகனுக்கு   போர்வெற்றிப்   பரிசாகத்    தன்மகள்    தேவயானையை 

அளிக்க   விரும்பினான்;  மலர்ந்த   முகத்துடன்  நாணம்  கொண்டாள்  தேவா.

திருப்பரங்குன்றம்   விழாக்கோலம்   பூண்டது; தேவர்களும், முனிவர்களும் 

வாழ்த்த தெய்வயானையை   முருகன்  மணந்தான்.

    தினைப்புனத்திலே   வாழ்ந்த   வள்ளியின்  தவத்தை   நாரதர்   எடுத்துரைக்க,

வள்ளிமலை   சென்று,  வள்ளியின்    காதல்  வேண்டி  அவள்பின்னாலே 

பலகாலம்   சுற்றி   அண்ணன்   விநாயகன்   உதவியால்  அவளை   மணந்து 

திருத்தணிகை   வந்த  வள்ளிமணாளனை  மாவிலைத்   தோரணம்   கட்டி 

வரவேற்று   மகிழ்ந்தனர்   திருத்தணி   அடியார்கள்.

  மாமரத்திலே   மலராகிப்   பிஞ்சாகி   வெளிவந்த    அனைத்தும்

காயாவதில்லை; கனியாவதில்லை; உருவும்  பெறும் ;உதிர்ந்தும்  போகும்;

மானுடத்   தன்மையும்  மீண்டும்   மீண்டும்   பிறவி  எடுத்து  வீணே 

அழிகின்றன;  பிறவி   பிஞ்சுபோல்   ஆகும்;  மாங்காயோ   இனிப்பதில்லை;

புளிக்கும்; துவக்கும்; இனிக்கும்   இப்படி   மாறி   மாறி அமைவதைப்போல் 

மனித   மனமும்   சஞ்சலத்திற்கு   உட்பட்டு  உழன்றுத்   துன்பம்  அடைகின்றன.

    மாங்கனியோ   இனிமை  கொண்டது; பிறவி   எடுத்த   பயனை    அடைந்து,

சிவப்பேறு   பெறுகின்றது. சில   புளித்து  விளங்குவதைப்போல் இடைப்பட்ட 

ஆசாபாசங்கள்  சிவப்பேற்றை   அடைய விடாமல்   தடுக்கும்.

    மாங் கொட்டையோ   வற்றி,உலர்ந்து  முற்றிய   முனிவன்போல்   காட்சி 

அளிக்கும்.

   குளிர்தரும்   மாஞ்சோலைபோல்   ஞானமலை  அருள்  அளிக்கும்; 

மாமர  நிழல்போல்   கருணைநிழல்   நல்கும்; குளிர்ச்சியும் நிழலும் 

மனதிற்கு   அமைதி  அருளும்;கருணை மிக்க   மலை    ஞான மலை;

அங்கே    வீற்றிருக்கும்   மாமுருகனைப்   போற்றி  நீண்ட  நலவாழ்வு 

பெறுவோம்.

  

                                                  பாடல்-49.


போற்றிடப்    பொன்னாய்ப்    பொருளாய்ப்   புலர்ந்தவன்,

                           போற்றாது    நிற்போமோ?

போற்றிட்ட    தவச்செயல்    போற்றிய    தாற்றுப்படை 

                           போற்றுகின்ற    புத்தமிழோ!

தூற்றிட்ட      தீயரக்கன்       ஏற்றிட்டான்      போற்றிட்டான்;

                         காற்றூர்தி;       வீறுகொடி.

மாற்றிட்ட   மாலைகளும்,   மாதவத்தின்   மாப்பரிசோ!

                        ஊற்றுமலை     உயர்ந்தோனே !



                                           பொருள் 

போற்றிடும்    அடியவர்களுக்குப்    பொன்னையும்,பொருளையும் 

அருள்பவன்,  போற்றும்    அடியவர்களுக்கு  அவன்  அளிக்கும்  ஆனந்தக் 

காட்சியே   பொன்னாகவும் ,பொருளாகவும் விளங்குகிறது; அப்படிப்பட்ட 

ஆறுமுகனைப்  போற்றாமல்  வாழ்வை இழப்போமா? போற்றுவோம்.

         முருகனைக்   காணவே, அவனருள்  பெறவே   பலகாலம்   தவம் 

இருந்தார்   நக்கீரர்.  அவரது    தவம்   பலித்தது. நேரே  காட்சி 

தந்தான்  முருகன்; கண்ட   காட்சி   அவரைக்   கவிதை  பாட 

வைத்தது.  அதுவே   அழகிய  திருமுருகாற்றுப்படை.  பத்துப் 

பாட்டிலே   முதல்  பாட்டான   புத்தம்  புதிய  செந்தமிழ்  முருகன்  புகழை 

முருகன்   சிறப்பை  விரிவாகப்  பாராட்டியது.

       போரிலே   தோற்றுத்   துவண்ட   சூரபதுமனுக்கு   முருகன் 

கருணையோடு, தனது  விஸ்வரூபத்தைக்   காட்டினார். சற்றே   மனம் 

மாறிய   சூரனின்   ஆணவம்  மீண்டும்   தலைக்கேறியது.

வஞ்சகத்தால்   தன்னை   ஏமாற்றவே   இது  செய்தாயோ? என்று 

முருகனைத்   திட்டினான்.  மாயப்போர்  புரியத்  தொடங்கினான்;

கடல்நடுவே   விண்ணையும்   மண்ணையும்   தொடும் மா   மரமாய் 

நின்றான்; தனது   வேலாயுதத்தால் அவனை   இருகூறாக்கினார்.

சிவனருள்,  முருகன்   கருணை   ஆகியவற்றால்   மாண்டுபோகாத  

அவன்,மயிலாகவும்,சேவலாகவும்   மாறினான், முருகன்   கருணையினால்.

மனம்   மாறி  அரக்கனும்   முருகனை  முதுகிலே   நாளெல்லாம்   சுமக்கும் 

மயிலாகவும், முருகன்   புகழைக்   "கொக்கு  அறு கோ"  எனப்போற்றும் 

சேவலாகவும்  மாறினான்.


                                                   பாடல்-  50


உயர்ந்தமலை     உணர்ந்தமலை   உறுமுனிமலை  ஒருமலையே;

                  உபதேச     ஞானமலை    உலகாளும்    முருகமலை;

மயக்கமனம்       மாற்றுமலை     மலைவள்ளி      மகிழ்ந்தமலை;

                  மலர்க்கூட்ட     மணமாமலை     மழைச்சாரல்   குளிர்ந்தமலை ;

புயசயிலப்       பன்னிரண்டான்    புளகாங்கிதம்     அடையுமலை;

                  புள்ளினங்கள்       துள்ளுமலை     புகழ்த்தோகை     ஆடுமலை;

கயமுகனின்     கருணையால்      கல்யாணம்     கண்டமலை ;

                 கவித்தமிழ்க்    கவிதைமலைக்    கந்தனுக்குக்    கரம்குவிப்போம்.


                                             பொருள் 


   தோற்றத்தாலும்   புகழாலும்   உயர்ந்து விளங்கும்   மலை;  பண்பை 

ஞானத்தை, உணர்ந்தோர்கள்   அமர்ந்து, தவம்  இயற்றுவதால்  எல்லாம் 

உணர்ந்த  மலை;முனிவர்களுள்   மிக உயர்ந்த  குறுமுனி   அகத்தியர் 

போற்றும் மலை; கயிலை, இமயம்,மேரு   என்று  போற்றத்தக்க  மலைகளுள் 

இம்மலையும்   ஒன்றாகக்  கருதும்  சிறப்பினைப்  பெற்ற மலை.

        முருகன்   ஞானபண்டிதனாக    அமர்ந்து மூவருக்கும்,முப்பத்து  முக்கோடி 

தேவர்களுக்கும், மூவேழ்   உலக  மாந்தர்க்கும், மூவா  முனிவர்களுக்கும்  

ஞான  உபதேசம்   அருளும் மலை; தனது  பராக்கிரமத்தால்  ஆணையால்,

அனைத்து   உலகத்தையும் ஆட்சி  செய்யும்   ஆறுமுகக்   கடவுள்  வீற்றிருக்கும் 

மாமலை;

       மும்மலங்களில்   மயங்கித்  தவிக்கும்   ஆன்மாக்களின்  மயக்கத்தைப் 

போக்கி  நல்லதெளிவை  அளித்து, நல்வழி காட்டும் மலை;  வள்ளிமலைக் 

குறத்திக்கு   வாழ்வளித்த    மாமுருகன்  திருத்தணிகை   செல்லும்  வழியில் 

தங்கி,இளைப்பாறி, மகிழ்வோடு   மணக்காட்சி  அருளிய மலை;

      மலர்கள்   பூத்துக் குலுங்கும்  மாமலையிலே   மணப்பெண்   வள்ளியோடு 

வந்து நின்று, மணக்காட்சியை  அடியவர்களுக்கு  அருளிய  மலை;  மேகக்

கூட்டம்  நிறைந்த  மலையாதலால்   மழை பொழிந்துகொண்டே   இருக்கிறது;

மலையில்  அருள்பாலிக்கும்   முருகனது   கருணைபோல   மலையெங்கும் 

குளிர்ச்சிச்   சாரல்   வீசுகின்ற  மலை;

      மலை   போன்ற   பன்னிரண்டு   கரங்களை  உடைய  வெற்றி   வீரனாகிய 

முருகன்,இங்கு  தங்கி நிற்பதாலும், வள்ளியின்   அரவணைப்பு   கூடியதாலும்,

மலையின்   செழுமையாலும்   மனமெல்லாம்  நிறைந்து  பெரும்  மகிழ்வோடு 

வீற்றிருக்கின்ற மலை; வளமான   மலை  ஆதலின்  மான்போன்ற   அழகு 

விலங்கினங்களும், மயில்போன்ற   பறவையினங்களும் துள்ளிவிளையாடியும்,

தோகை விரித்தாடியும்,மகிழ்கின்ற மலை;

     வள்ளியை  மணக்க  வந்த   முருகன் வேடனாய்,  விருத்தனாய்  மாறியும் 

மயங்காத குறத்தியைக்  கரம் பிடிக்க,அண்ணன்   விநாயகப்  பெருமானை 

வேண்ட,அண்ணன்   யானையாய்த்  தோன்றிட,  அஞ்சி,அலறி  ஓடிய 

காதலியை, அணைத்து  ஆறுதல் கூறிக் கரம்பற்றிக் கல்யாணமும் செய்து 

கொண்ட வள்ளிமலை போன்ற வடிவு  உடைய மலை, முக்கனிபோல் 

இனிமை,செழுமை,சுவையும் கொண்ட முத்தமிழ்க்  கவிதைகளைத்  தமிழ்க் 

கவிஞர்கள்  பாடிப் போற்றும் தமிழ் மலை .

    இம்மலையில்  வீற்று,அருள்பாலிக்கும் வள்ளிமணாளனைப்  போற்றி 

நாளும்   வணங்குவோம்.


                                                 பாடல்-51


குவியிதழ்க்   கூடின்பக்    குளிர்சுகம்    வேண்டிநின்று,

                           குசம்பற்றிக்   குறுகிடைக் குலாலச்   சேற்றினில்,

அவிவாழ்வை   அணுஅணுவாய் ஆய்ந்த   பின்னரும்,

                                அவிழாடை     நினைவினிலே    அலைந்தே   திரிந்தேன்;

புவிபோற்றும்  புண்ணியனைக்   கவிகற்றுப்    போற்றவில்லை;

                               புதுமலர்      சாற்றவில்லை;   புன்னகை       புகழவில்லை;

செவிடன்          காதிலூது    சங்குபோலப்    பயனற்றேன்;

                             செவிசாய்க்கத்    திருவுளமோ?  செம்மலைச்    செவ்வேளே!


                                                பொருள் 


        இன்பத்தைக் குவிக்கும்  இதழும்,உதடும் சுவைத்தேன்;கூடிக்கூடி  இன்பம் 

அனுபவித்தேன்;குளிர்காலத்தில்  அணைக்கும்  சுகம் வேண்டிப்  பலநாள்  

காத்துக்  கிடந்தேன் ; குசம்(முலை ) பற்றினேன்; ஒடிந்த   இடையைப் 

பற்றினேன்;

பானை  செய்வோர்   பிசையும்  சேறுபோன்ற  அவ்வங்கத்திலே   பலநாள் 

படுத்து  அனுபவித்தேன்;

    அவிந்துபோக  வைக்கும்   சிற்றின்ப   வாழ்வை    அணு அணுவாய் ஆய்ந்து,

ஆய்ந்து சுவைத்த பின்னரும்   ஆடை  அவிழ்க்கும்  ஆசை  எண்ணத்துடனே 

அதனைத்   தேடித்தேடி அலைந்தேன்;  திரிந்தேன்;

      புவிபோற்றும்  புண்ணியனே!  உன்னைப்  போற்றும்  பாடல்களைக் 

கற்கவில்லை; மனமுருகிப் பாடவும்  இல்லை;  புத்தம்  புது  மலர்களைப் 

பறித்து,உன்  சேவடிகளில் சார்த்தவில்லை;  புன்னகை    தவழும்  உனது 

அழகுமுகத்தைக்  கண்டு ,மகிழ்ந்து  அழகினைப்  போற்றிப்   பாடவில்லை;

      சான்றோர்கள்    கூறிய  சாத்திரச்    சொற்கள்  எல்லாம்  செவிடன்   காதில் 

ஊதிய  சங்க   நாதம் போலப்   பயனற்றுப்  போயின;  தவற்றிற்குமேல் 

தவறு  புரிந்த  அடியேனை  மன்னித்து  ஏற்பாயா  எம்பெருமானே!

இந்த  ஏழையின்  சொல்லை  செஞ்செவியில்  ஏற்றருள்வாயா?

செம்மை  ஞானமலையில்  எழுந்தருளி,அடியவர்களைக்   காக்கும் 

செவ்வேளே!என்னையும்  ஏற்று  அருள்புரிவாய்.



                                                    பாடல்- 52


செங்குருதிச்       சேறுற்ற        செந்திப்      பதியினிலே 

                           செம்படையின்    செம்பதியாய்     நிற்குமுன்னைப்  பார்த்தேனோ !

மங்களம்       முழங்குகின்ற     மாக்குன்றச்      சோலையிலே 

                           மாதங்க      மகளுடனே     மாமணமும்        கண்டேனோ!

பொங்குகனிச்   சீராசை,    பொலிவுற்ற  அண்ணனாலே,

                                  இங்குநின்ற      ஆண்டியே!    தங்குகால்    மண்ணோ நான்!

எங்கும்புகழ்    ஞானமலை  ஏந்தலே!     எந்நாளும் 

                                 சங்கவேள்        சார்ந்துவாழும்,   சங்குமலர்ச்    செடியோ நான்!


                                            பொருள்


    சூரபதுமனை  அவன் சார்ந்த அரக்கர்களை   அழிக்கப்   போர் தொடுக்கமுடிவு செய்த  முருகன்  வீரவாகு  முதலிய   தேவர்களோடு புறப்பட்டுப் போர்க்களக்  குருதிச்  சேறு   நிறைந்த  திருச்செந்தூர்ப்  பதியிலேசீரிய  விண்ணவர்ப்  படைக்குத்   தலைமை   ஏற்றுத் தேவசேனாபதியாக நின்ற  கோலத்தைக்   கண்டேனே.

    எப்பொழுதும் ஒலிக்கும் மங்கள ஒலிநிறைந்த  பெருமை பெற்ற  திருப்பரங்குன்றத்தில் மணவறைச் சோலையில்மணமாலை அணிந்துகொண்டு தேவயானையை   மணக்க நின்ற  காட்சியும்,

மண நிகழ்வும், கண்டேனே. 

    தந்தையின்  கையில் உள்ள  கனியைப் பெற முந்தி நின்ற 

அண்ணன்  கணபதியின்  ஆசைமிக்க   அறிவுச்செய்யலால் சினந்து  பழனி  மலையிலே   வந்து  ஆண்டிக்கோலத்தில் 

நின்றமுருகா!  உன்  பாதாரவிந்தங்களில்  ஒட்டிநிற்கும் 

மண்  அல்லவா  நான்.

     எல்லாததிசைகளிலும்  புகழ்  பெற்று விளங்கும் ஞானமலைத்    

    தலைவா!  நாளெல்லாம்  தமிழ்ச்சங்கத் தலைவனாய்  விளங்கிய 

உனது   சேவடிகளே   கதி,  எனக்கிடக்கும் நான்   உனது   பாதங்களை 

அலங்கரிக்கும்,  அருச்சனை  மலராக அர்ச்சிக்கப்படும்   சங்கு 

மலர்  பூக்கும்   செடியாக மலையிலே   வளரும் செட்டியல்லவா  நான்!


                                               பாடல்-53


 செடிவேர்ச்  செந்தூரில்;  செடிமலர்த்  திருத்தணியில்;

                           சிந்தை    நின்றாடும்,

அடிவேர்        நடிப்பனவால்,    அடிவணங்கும்   சுவாமிமலை;

                          ஆன்மஞான     மாபலத்தால்,

வடிவேலை  வழங்கியருள்   வடிவன்னை    வளச்சிக்கல்;

                          வடிவெல்லாம்   கூடிநின்ற,

துடியிடையாள்  தூயபாதம்,   தொட்டுபோற்றும்    ஞானமலை;

                          தோத்தரிக்கத்    தீதகலும் .


                                                    பொருள் 


              அரக்கர்  அழிப்பதிலும், ஆன்மஞான  வளர்விலும், செம்மை,

இளமை,குளிர்வு, இரக்கவுணர்வு  ஆன பலவும்  நிறைந்த ஞானபோகச்

செடி,  திருச்செந்தூரில் செந்திலாதிபதியாக  அருள் பொழிகிறது.

ஞானபோகச் செடியும், கான போகமலரும் இணைந்து, 

திருத்தணியில்  வள்ளி,மணாளனாக  வரம் அருள்கிறது.

          உலக  ஆன்மாக்களின் மனங்கள்   அனைத்திலும்  நின்று 

ஆனந்த  நடனமாடும்   வேர், மூவர்க்கும்,மூவேழ்  உலகிற்கும் 

முதல்வனாகிய  அந்தச் செஞ்சடைச்  சிவனார்,தனது   ஆடல்களில் 

மிகச்சிறந்த  ஒன்றாக, தட்சிணாமூர்த்தியாகிய  தான்  தனது  மகனைத் 

தன்னுடைய   ஞான   ஆசானாக ஏற்று,அடிபணிந்து, தோளில்   சுமந்து,

ஓங்காரத்தின்   பொருளை  அறிந்து  மகிழ்ந்தது; தந்தைக்கே  மகன் 

உபதேசித்த  சுவாமி  நாத  மாமலை .

     கடுந்தவம் புரிந்து,  ஞானாம்பிகையாகி, அத்தவ   பலத்தால்  தானடைந்த 

வேலாயுதத்தை  வடிவாம்பாளாகிய  பார்வதி  அன்னை,வழங்கிய  பதி 

சிக்கல்.அங்கு   வீற்றருளும்   சிங்காரவேலன் சேவடி போற்றுவோம்.

         அழகெல்லாம்  ஒருங்கு  சேர்ந்த  மெல்லிடை  கொண்ட  வள்ளிநாயகி 

அம்மை, வள்ளிமலையிலே  மணந்துகொண்ட  மாமுருகனோடு  புறப்பட்டுத் 

திருத்தணிகை   செல்லும் வழியில்   சற்றே  இளைப்பாற, அடியவர்களுக்கு 

அருள்புரிய அன்னையின்  பாதங்கள் தொட்டுநின்ற  ஞானமலை;

வள்ளி மணாளனை,  வாழ்த்தி,  வணங்கிப்  போற்றுவோம்;நமது   தீமைகள் 

அகலும்;நன்மை கிடைக்கும். 


                                                   பாடல்-54


தீதென்செயும்?    தீயரக்கர்  போரென்செயும்?தீச்சுடர்வேல் 

                                        திருப்பார்வை    தீண்டிவிட்டால்;

வாதென்செயும்?    வழக்குதான்     என்செய்யும்?    வடிவேலின் 

                                       வரக்கருணை   வளம்பெற்றிடின்.

சீதச்சுரமும்,            சீக்குநோயின்   படுத்தலும்    என்செய்யும்?

                                     செஞ்சேவடி     பற்றிடினே .

சூதென்செயும்?    சூழ்ச்சிதான்     என்செய்யும்?    சூலாயுதம் 

                                     சூழ்கருணை    மலைபோற்றின்.


                                                பொருள் 


          நம்மை   நாடி  வரும்   தீமைகள்   நம்மை   என்ன   செய்து விடமுடியும்?

தீயவர்கள்,  சமூகவிரோதிகள்  நமக்கு  எதிராகச்   சதி செய்து, சண்டை 

இடுதல்  நம்மை  என்ன செய்யஇயலும்? நாம்  வணங்கும்  ஒளி மிகுந்த  

வேலினை   ஏந்திய   மாமுருகனின்  கருணைப்    பார்வை  நம்மீது  பட்டு,

விட்டால் இவைகள்  அஞ்சி   அகன்றுவிடும்.

       நம்மீது  வீணே   போடப்பட்ட  வழக்குகளும்,  அதற்கான  வாதங்களும் 

நம்மை ஒருபோதும்  தண்டிக்காது;நாம் வணங்கும் வடிவேல்  முருகனின் 

வரத்தால்,கருணையால்,  நாம் எதிலும்   வெற்றி   பெறுவோம்.

      நம்மைத்  தாக்கும் சுரம்,  தீராதநோய், படுத்த  படுக்கை   இவை 

எல்லாம்   நம்மைவிட்டு   நொடிப்பொழுதில்  அகன்றுவிடும்;நாம்   நாளும் 

முருகன்  சேவடியைப்  பற்றிக்கொண்டு, அவனைப்    பூஜித்து,வழிபட்டு 

வந்தால் நோயெல்லாம்   அகன்றோடிவிடும்.

     நமக்கு  எதிரான   சூழ்ச்சிகள், மந்திர,தந்திரங்கள்,போன்றவைகளும் 

நம்மை   ஒருபோதும்   தீண்டாது;தீமை  புரியாது;நாம்    ஞானமலையில் 

வீற்றிருக்கும் கருணையுள்ளம்  கொண்ட   முருகனை  வணங்கினால்,

அவனது  சூலாயுதம்   நமக்குத்  துணையாய்  நின்று நம்மைக் காக்கும்.


                                                          பாடல்-55


போற்றியோ      பூங்கழல்கள்;    போற்றியோ     பொலிவிரல்கள் ;

                                 போற்றியோ    முடிமணிகள்  பணிபாதம்    போற்றி;

ஆற்றல்               முழங்கால்,       அழகுவாழ்    தொடைபோற்றி ;

                               ஆதார        சுருதியிசை,        ஆன்மநடு     போற்றி;

சேற்றிதழ்க்      கமலச்         செம்பட்டுடை     போற்றி;

                              செங்குருதிச்     செம்போர்ச்       செவ்வியவேல்   போற்றி;

நாற்றமலர்,    நறும்பூணூல்       நாணிமார்பு     போற்றி;

                             நலமருள்         நல்முகமும்   போற்றியென   வாழ்த்தினனே.


                                                  பொருள் 


          வெற்றிக்   கழல்களை   அணிந்த  மாமுருகன்  கால்கள்  போற்றி;  

பாதங்களில்  பொலிந்து   விளங்கும்  அழகுமிகு  விரல்கள்    போற்றி;

போற்றியோ  போற்றி  என்று பக்திக் குரல்  எழுப்பியபடித்    தமது 

கிரீட மணிகள்  படும்படி  மூவேந்தர்களும்  வணங்கும்  முருகனின் சேவடி 

போற்றி.

     அழகும்,ஆற்றலும்  உடைய  முழங்கால்கள் , செம்மையும்,சிருங்காரமும் 

குடிகொண்ட  தொடைகள்  போற்றி; உலகின்   படைப்புத்   தொழிலின் 

ஆதாரமாய், ஆன்மாவின்   நடுவாய்   நின்று, மூவேழ்  உலகத்தையும்

படைத்துப் புத்துயிர்  ஊட்டும்  நல்லிசைச்சுருதியே  போற்றி.

       சேற்றில்  தோன்றும்   செந்தாமரை  இதழ்கள் போல  அழகும்,வண்ணமும்,

குளிர்ச்சியும் கொண்ட  முருகன்  அணிந்துள்ள  சிவப்புப்  பட்டுடையே போற்றி.

சூரபன்மன்  முதலாய  அரக்கர்களை  அழிக்க,  எடுத்த  தேவாசுரப்   போரிலே,

வெற்றி பெற்று  விளங்கும்,செந்தூர்  முருகன்  கை   வேலாயுதமே  போற்றி.

       நான்மறை  நறுமலராய்  ஆறுமுகன்   அணிந்துள்ள  பூணூல்  போற்றி.

அடியவர்கள்  வாழ்வையே  என்றும்  நினைத்து,  அவர்களுக்கு  அன்பும் 

கருணையும்   காட்டும் நல்ல   இதயமே  போற்றி.   தன்னை    நாடி வந்து,

போற்றிப்புகழும்   அடியவர்களுக்கு   எல்லாம்   ஆனந்தம்   வழங்கும் 

ஆசிகூறும்   ஆறுமுகங்களும்   போற்றி  போற்றி   என   ஞானமலை 

முருகனை      வாழ்த்துகிறேன்.


                                                   பாடல்-56


வாழ்த்துபெற      வந்துநிற்பேன்;     வாட்டமுகம்     வழிந்தோடும்,

              ஆழ்கண்ணீர்     அலைமனம்    பாழ்துயர்கள்    பார்வையால்,

வீழ்த்திவிட்டு,    வியன்பெருமை,   வீறுபுகழ்     வழங்குகின்ற.

            விரிகருணை    வடிவேலே!   அறுமுகனே !   திருகுகனே!

ஏழிசையும்,      யாழிசையும்    இருபக்கம்     கொண்டவனே!

          ஏறிவந்தேன்    உன்மலையை;    இறக்கிடுவாய்     என்சுமையை;

ஊழிமுதலாய்     ஓங்கிநிற்கும்      உயர்ஞான    மலைமீது,

       தோழியுடன்      அமர்ந்தவனே!   துதிக்கின்றேன்   தூயபாதமே.


                                         பொருள் 


      ஞானமலை   மீது  வீற்றிருக்கும்   ஞான பண்டிதா!  உன்னை  வணங்கி 

உன்  ஆசிபெற   உன்  சன்னதியில்  நிற்பேன்;   துயரமே    உருவான   தன்மை

அடைந்ததால்  வாட்டமுற்ற   எனது  முகத்தைப்  பார்ப்பாய்; வழிந்தோடும் 

அழுகைக்   கண்ணீரைப்    பார்ப்பாய்; அலை   பாயும்   மனத்தைப்  பார்ப்பாய்;

பாழ்படுத்தும்  என்  துயர நிலையைப்  பார்ப்பாய்'   அருளும்,   கருணையும்,

இரக்கமும்,  அடியவர்மீது    அன்பும்  கொண்ட  உனது  நோக்கம், பார்வை,

இந்த   ஏழையின்மீது   படும்;  அப்பார்வையால்     எனது     துயர்களை   எல்லாம் 

வீழ்த்திவிட்டு,  உயர்ந்த  வாழ்வாம்    பெருமையும்,  உலகோர்   போற்றும் 

புகழும்   அருள்வாய்;    இவ்வாறு   என்னைப்போன்ற   அடியவர்களுக்கு 

வரையாது,  அருள்  வழங்கும்  கருணை  கொண்ட   வேல்முருகா! ஆறுமுகா !

நலமோங்கிய   நல்குகனே!

     ஏழிசையாய்,இசைப்பயனாய்    விளங்கும்  தேவயானையையும், யாழ் 

போன்று  மென்மைக்   குரல்வளம்    கொண்ட  வள்ளியையும்  

 இருபக்கங்களிலும்     அறத்துணையாகக்  கொண்டு  விளங்குபவனே!

உனது   பாதங்களைப்   போற்றிட,  அருள்  ஞான  மலைமீது   எறிவந்தேன்;

எனது   துயரத்தைக்    கலைகளை   எல்லாம்  என்னைவிட்டு   நீக்கிடுவாய்.

         மிகவும்    தொன்மை   வாய்ந்த  வானளாவி    உயர்ந்த  ஞான மலை 

மீதினில்  வள்ளிமலைத்   தோழியாகிய   வள்ளிப்பிராட்டியுடன்  

அமர்ந்தவனே!  உனது     தூய்மை    மிக்க   சேவடிகளை ,ஞானபாதங்களைப் 

போற்றி   வணங்குகின்றேன்.


                                                         பாடல்-57


தூயபாதம்       துதித்துநின்ற       தூயமணி       வாசகரும்,

                             தோத்திரப்பா       பாடிய,       திருவிசைப்பா       புலவர்களும்,

சாய்ந்தநிலைச்      சமணர்க்குச்       சாய்ந்தநிலை       தந்ததோடு,

                             சாய்ந்தநிலைச்       சைவமும்     ஆய்ந்துயர்த்திய  சம்பந்தரும்,

தோய்ந்தகல்லைத்    தெப்பமாக்கிய   திருநாவுக்     கரசரும்,

                           பேய்சூழும்       பித்தனைத்       திட்டிட்ட       சுந்தரரும்,

மாயமாம்     பிறப்பறுக்கும்,    மருந்தாகிய       மகேசனின் 

                          மா குருவாம்       மழலையே 1      மகிழ்ஞான      கிரியோனே!  


                                                              பொருள் 


   ஆனந்தக் கூத்தாடும்  நடராசப் பெருமகனைத்  துதித்துப்   போற்றும் 

திருவாசகம்    பாடிய   மாணிக்கவாசகரும், திருவிசைப்பா"   என்னும் 

பதினோறாம்   திருமுறையைப்   பாடிய   புலவர்களும்,

தாழ்ந்த  மனம்  கொண்ட  சமணர்களின்   ஆதிக்கத்தைச்    சாயவைத்து,

சாய்ந்த  நிலையில்    விளங்கிய  சைவசமயத்தை   உயர்த்தியும்,சைவம் 

தழைக்கச்செய்த   திருஞானசம்பந்தரும்,கல்லிலே      கட்டிக்   கடலில் 

தன்னை  எறிந்த   சமணர்களின்  இழிசெயலை,  இறைவன்   அருளால் 

கட்டப்பட்ட  அக்கல்லையே  தெப்பமாகக்  கொண்டு,  கடலில்   மிதந்து வந்து,

சைவப்பெருமை  நிலை    நாட்டிய   திருநாவுக்கரசரும், பேய்கள்  சூழச் 

சுடுகாட்டில்   ஆடும்   சிவபெருமானை, பித்தனே!  பேயனே!  என்று 

திட்டிய   சுந்தரரும்,   மனத்தாலும்,  வாக்காலும்,  காயத்தாலும்  பலவாறு 

போற்றிய   பெருமைகள்   உடையவர்;  மாயப்பிறப்பறுக்கும்    மருந்தாக 

விளங்கும்  மகேஸ்வரனின்   ஞான    மஹா   குருவான   குழந்தை   முருகா!

மிக்க    மகிழ்வுடன்   ஞானமலையில்    வீற்றிருக்கும்   ஞான  பண்டிதனே!

உன்னடி   போற்றினோம்;வணங்கினோம்.  


                                                                 பாடல்-58


கிரௌஞ்சம்         பட்டது,          கிரிமகள்      அருள்வேலால்;

                                  கிராதன்        உயர்ந்தான்         தினைமகள்     காதலால்;

கிரௌஞ்சம்       காத்த            தாரகன்         வீழ்ந்தான்;

                                கிரௌஞ்சம்       சபித்த     குறுமுனி          உயர்ந்தான்;

கிரௌஞ்சம்     வளர்த்த          கீழ்மை       மாயையைக் 

                              கிரிபுயச்          சூரனை,     அரிமுகக்         கன்மத்தைக் 

கிரௌஞ்சம்   போலவே        அழித்தது     ஆறுகரக்      குலிசம்;

                            கீழாணவம்    அடங்கி          மயில்சேவல்       ஆனதுவே.


                                                           பொருள் 


           கிரௌஞ்சமலையும்,  அதன்   மாயமும்   உமாதேவியாரின்    தவத்தால் 

பெற்ற    வேலாயுதத்தால்    முருகன்   அழித்தான்; நம்பிராஜனாகிய   கிராதன் 

வள்ளிமலை  வேடன்  தனது   மகள்    வள்ளியின்   தவமுடைக்   காதலால் .

முருகனுக்கே     மகளைக்   கொடுத்து,  உயர்  புகழ்    பெற்றான்.

           கிரௌஞ்ச    மலையைக்  காத்துவந்த    தாரகாசுரன்   மலை    வீழ்ந்த 

பொழுது     தானும்   வீழ்ந்து   மடிந்தான். இந்த    இரண்டு  நிகழ்ச்சிகளாலும் 

முன்னொருகாலத்தில்   கிரௌஞ்ச     மலைக்கு,   சாபம்   கொடுத்தான் 

அகத்திய   மாமுனிவன். குறுமுனிவனும்    உயர்ந்த   புகழ்  முனிவன்  ஆனான்.

           கிரௌஞ்சமலை    மாயை,  மாயை   வளர்த்த   மலை,   இரண்டும் 

அழிந்தன.மாயயமகனான    தாரகன்    அழிந்தான்; மலைபோன்ற   

கரங்களை  உடைய   சூரபன்மனின்   மற்றொரு   தம்பியான  சிங்கமுகன் 

கன்ம  மலம்  சார்ந்தவன்;அவனையும்   தாராமனை    அழித்த,  ஆறுமுகனின் 

கரங்கள்   குலிசாயுதத்தால்   அழித்து   வீழ்த்தியது, பலப்பல    மாயப் 

போர்களையும்   ஆற்றிதுவண்ட   ஆணவச்சூரபன்மனை  அன்பால்   அடக்கி,

ஆட்கொண்டு, தனது   ஊர்தியாக   மயிலாகவும்,  கொடிச்சேவலாகவும் 

முருகன்   ஏற்றுக்கொண்டான், முருகனை  வணங்கி  அவனது   காலடியில் 

போற்றிக் கிடந்தான்   சூரன்.


                                                    பாடல்-58.

                    (  58,,,இரண்டு பாடல்கள் )


கிரியோ       ஞானம்;     கிடைத்தது     பாதம்;

                         கிரியோ     வைரம்;        கிடைத்தது     மாதவம்'

கிரியோ       தானம்;       கிடைத்தது      தேவாள் ;

                         கிரியோ      முள்ளி;         கிடைத்தது      வள்ளி;

கிரியோ       குளிர்வு;       கிடைத்தது      கருணை;

                         கிரியோ       செந்தழல்;       கிடைத்தது      வீரம்;

கிரியோ      உயர்வு;          கிடைத்தவன்     கந்தன்;

                        கிரியோ         அருவி;                கிடைத்தது      அருளே.     

        


                                                  பொருள் 


            மலையின்    பெயரோ   ஞானம்;ஞானமலை;  அம்மலையில் 

கிடைத்தற்கரிய   செலவமாம்   முருகனின்   ஞானபாதம்   தோன்றிற்று.

            வைரக்கற்கள்    நிறைந்து  ஒளியூட்டுவது   ஞானமலை;  இங்கோ 

பெறற்கரிய    முனிவர்கள்   ஆற்றிய    தவமும்,  யோகமும்   கிடைத்தது.

           தன்னை     நாடி    வருவோர்க்கெல்லாம்   வாழ்வும்,   வளமும்  

தானமாகத்  தருவது   ஞானமலை ;  முருகனுக்கோ   போர்ப்பரிசாய்,

கொடையாய்த்  தானமாய்   வந்து  சேர்ந்த   இந்திரன்  மக்கள்  தேவயானை 

அடியவர்களுக்கு   வரங்களைத்    தானமாக    வழங்குகிறாள்.

           முட்செடிகள்    சூழந்து,  நடுவில்   ஞானமாய்  மிளிரவைத்து   ஞானமலை;

கிடைத்ததோ   வேடர்குலத்திடையே     தோன்றிய   தவச்செல்வி   வள்ளிப் 

பிராட்டியார்.

       குளிர்ச்சி   மிக்கது   ஞானமலை;  இங்கு   காலம்   காலமாய்க்  கிடைப்பதோ 

முருகனின்   கருணை.

            செந்தழலாய்    ஜொலிப்பது    ஞானமலை; கிடைப்பதோ ,

மாவரக்கர்களை   அழித்து வெற்றிபெற்ற   மாமுருகனது    வீரம்.

        விண்ணைத்   தொடும்   அளவு   உயர்ந்தது    ஞானமலை;   மலை 

பெற்றதோ  மூவர்க்கும்,  முப்பத்து  முக்கோடி    தேவர்களுக்கும் 

முன்னவனாய்,முதல்வனாய்,  உயர்ந்தோங்கிய  புகழ்  உடைய வேலவனை..

        அருவிகள்  பொழியும்   அழகு  மலை   ஞானமலை;  அங்கு 

கிடைப்பது   கந்தன்  அருள்;   முருகன்   சேவடி   வெல்க.


                                                



          

                              








       


         


                                                      

   




                                                    பாடல் -59 . 

அருள்தனை    அடியவர்க்கு     அளிக்கும்   பாதம்;

                              அமுதஇசை  ஒலிக்கும்   அழகுமிகு    கிண்கிணி;

விருப்பமுடன்   தேர்ந்தெடுத்த    வெம்போர்   வீரக்கழல்;

                               விரியொளி   நறும்பட்டு    உடைமேவிய    வீரிடை;

அருவேதத்        திருமார்பு;    ஆறங்கப்      புரிநூல்;

                              அழகுகாது ;   நிலவுதோடு ;  செழுங்கருணைச்  செவ்வாய்;

பெருவெற்றித்  திருத்தோள்கள்;  புகழ்காக்கும்   பெருவேல்;

                              பேரருள்     பொலிமுகம் ;  பெருமையோன்   மலையூரே .


                                                     பொருள் 

   தன்னை     வணங்கும்  அடியவர்களுக்கு   மகிழ்ச்சி, நிம்மதி,  போன்ற 

வரங்களை   வழங்குகின்ற  இரக்க  உணர்வு  கொண்ட முருகனின்  சேவடிகள் 

வாழ்க. 

முருகனது   கால்களை  அலங்கரிக்கும்   சதங்கை, கொலுசு   

போன்றவற்றிலிருந்து    எழுகின்ற   ஒலியானது   அடியவர்களுக்கு  அமுதம் 

போல்  ஒலித்து   நல்லருள்   வழங்கும். கிண்கிணி  ஒலியே போற்றி.

   தேவர்களுக்கு   அரக்கர்களோடு   ஏற்பட்ட   போரிலே, தந்தை 

சிவபெருமானின்  வேண்டுகோள்   ஏற்றுத்    தானே   விருப்பமுடன்  போர்ப்

படைத் தளபதி ஆகிய   முருகன் வெற்றிக்கு   வித்தாகத்   தனது   கால்களில் 

வீரக்கழலை  அணிந்தார். வெற்றி   தந்த   வீரக்கழலே   போற்றி.

    பரந்துபட்ட   வீர்யமுடைய   தனது   இடுப்பினில்   ஒளிமிகுந்த  நறும் 

பட்டாடைகளை  அணிந்தார். பட்டாடை  அணிந்த   இடையே   போற்றி.

   அருமை ஆகிய   நான்கு   வேதங்கள் போன்று  விளங்கும்  முருகனின் 

திருமார்பே   வணங்குகிறேன்.

     வேதத்தின்   உட்பிரிவான   ஆறங்கங்கள்   போல  நல்லறம்    காட்டும் 

முருகன்   அணிந்துள்ள   பூணூலே  போற்றுகிறேன்.

    அழகுடைய     காதுகளும்,  அக்காதுகளில்    ஒளிர்விட்டுப்   பிரகாசிக்கும் 

நிலவுபோன்ற   தோடுகளே வணக்கம்.

    அடியவர்கள்  மீது   கொண்ட  கருணையால்   அவர்களுக்கு   நல்ல 

வரங்களை   நல்கும்   மாமுருகன்   செம்மை வாய்ந்த  பவளவாயே 

வணங்குகிறேன்.

   தாரகன்,சிங்கமுகன்   போன்ற  கொடிய   அரக்கர்களைப்  போரிலே 

அழித்தும், சூரனை   மயிலாகவும்,சேவலாகவும்   கொண்ட முருகனின் 

வெற்றித்    தோள்களே! வீரம்   பதித்த   வெற்றியை   வாழ்த்துகிறேன்,

   முருகனின்    மாப்புகழை   மூவேழ்  உலகங்களிலும்  நிலைநிறுத்தும்,

வேலாயுதமே !  வணங்கிப் போற்றுகிறேன்.

     போற்றுவோருக்குப்   பேரருள்   அளிக்கும்  அருமை   முகமே!  ஆறுதல் 

நல்கும்    ஆறுமுகங்கள்   வாழ்க  வாழ்க   என   வாழ்த்திப்  போற்றுகிறேன்.

  பெருமை   பெற்று உலகெலாம்   வணங்கக் கூடிய   பெருமை   கொண்ட 

ஞானமலை  முருகா! முருகன்    வீற்றிருக்கும்    ஞானமலையே! வணங்கிப் 

போற்றுகிறேன்.


                                                            பாடல். 60.


ஊரெனின்       ஓங்காரம்     ஒலிக்கும்     கோயில்;

                              ஊழெலாம்     பாழுற்று     அடிபணியும்     வாயில்;

காரெனில்       மாமயில்;        கதிரெனில்    சேவல்;

                            காடெனில்       குறவள்ளி;     தினைப்புனம்     காவல்;

சீரெனில்        செவ்வந்தித்     தேவாவெனும்    செம்மை;

                           சீலமெனில்       செந்தூர்       அருளாட்சி      உண்மை;

கூறெனில்    கூறாத        நான்முகன்      வெஞ்சிறை;

                         கூவிடும்     குமரநாமம்     சேர்ப்பது      செஞ்சிறை.


                                                    பொருள் 


           ஓமெனும்   மந்திர   ஒலி  ஒலிக்கும்   கோயில்   கொண்டதே   ஊர் 

எனப்படும்.

        முற்பிறவி  வினை,  இப்பிறவி   வினை  ஆகிய   விதிப்   பாவங்கள் 

எல்லாம்  குறைந்து.அழிந்து, இல்லாமல்   குறைந்து, தமது   பலத்தை இழந்து,  

குமரக்கோட்ட வாயிலில்  ஆணவ மலங்களும்,  விதியும்அடிபணிந்து  வணங்கி 

நிற்கும். 

    மயில்   தொகை   விரித்தாடும்   மகிழ்வுக்காலம்   கார்காலம்   ஆகும்.

மேகம்போன்ற  கருணை கொண்ட  முருகனது   பெருங்கருணை , 

பகைவனான   சூரபன்மனை   அழிக்காமல்  மரமாக்கி ,இருகூறாக்கி,

ஒருகூற்றை   மயிலாக, மாற்றித்   தனது   ஊர்தியாகவும்    கொண்டது.

    கதிர்   அடிவானத்தே   தோன்றும்   காலை, சேவல்   கூவும். பராக்கிரமம் 

கொண்ட  மாமுருகனோ  பகைவனுக்கும்    அருள் காட்டி  அவனைச் 

சேவலாக   மாற்றிக்   கொடியாய் ஏற்றுக்கொண்டான்.

      காடு   என்றவுடன்   நினைவுக்கு   வருவது   வள்ளிமலைக்காடு;

வள்ளிமலை  என்றதும்   நினைவுக்கு   வருவது   தினைப்புனம்; 

தினைப்புனம்  என்றதும்   நினைவுக்கு  வந்து   அருள் புரியும்  பிராட்டி 

வள்ளியம்மை; 

    சீர்மை,அழகு, செல்வம்   என்ற   உயர்ந்த   இந்திரன்   மகளாகி, முருகனையே 

மணந்த   செவ்வந்தி  மலர்போன்ற  தேவயானையின்   செம்மை கொண்ட 

பக்தியைப் போற்றுவோம்.

     தந்தை  சொல்லையே   மந்திரமாகக்   கொண்டு, அரக்கர்களை   அழிப்பதை 

நோக்கமாக ,பணியாக  மனத்தே   கொண்டு,போர்புரிந்து,தீமைகளை 

அழித்து, வெற்றி பெற்று,  வீரனாக   அமர்ந்து  மாமுருகன்   அரசாட்சி 

புரியும்  சீலம் மிக்க   ஊர்   செந்தூராகும். திருச்செந்தூர்   முருகன் போற்றி.

    தன்னை   வணங்காது,  கர்வத்துடன்   சென்ற   நான்முகனை   அழைத்து,

ஆற்றும்   தொழில்   கேட்டதும்,ஆணவத்துடன்   படைக்கும்   தொழிலைப் 

புரியும் பிரமன், எனக்கூற,வேதம்   உரைக்குமாறு கூற, நான்முகனோ 

ஓம்"  எனத்தொடங்க,   இடைமறித்த  முருகன்   அந்தப்பிரணவத்திற்குப் 

பொருள் கூறுக, என்றதும்,  பதட்டத்தினால்  சொல்ல இயலாது   பிரமன் 

தவித்திட,  உரை   தெரியாத  நான்முகனைச்  சிறையில்  அடைத்தார் 

முருகன்.

  குமரா!  முருகா!  கந்தா!  என்று   எழுப்பும்   முருகனின்   நாம  ஒலியானது

ஆன்மாக்களை   அழகிய   ஆறுமுகப்   பாதங்களாகிய   நல்வீட்டை நல்கும்.

   முருகா!   என்போம்   முத்தி   பெறுவோம். 


                                                                    பாடல்-61


சிறைப்பட்டேன்         சிற்றின்பக்         கோட்டைக்குள்;       செயலிழந்தேன்;

               சித்திரமே!     செந்தேனே!       சுற்றி சுற்றி         வந்தேனே;

கறைப்பட்ட                என்வாழ்வு,         கவிழ்கலம்           ஆயிற்று;

              கடுநோயும்,  பெருநோயும்,   கலங்கவைக்கும்     கசடானேன்;

குறையுற்றேன்;        குணமிழந்தேன்;   குன்றுசெல்வம்      குறைந்ததுவே;

              குறையுடலாய்க்     கோயிலடிக்        குப்புற         வீழ்ந்தேனே!

மறையொலி            மாமுருகன்           கோயில்மா              மணியோசை 

              மறுபிறவி       நலம்காட்ட        மனத்தினுள்ளே      ஞானஒலி .


                                                       பொருள் 

       

                என்மனத்தைப்    பற்றியது     சிற்றின்பம்;  அச்சிற்றின்பக்  

கோட்டைக்குள்   சிறைப்பட்டேன்;   நல்லன   பற்றும்    மனநிலை   இழந்தேன்;

கன்னியரைச்     சித்திரம்,என்றும்,  செந்தேன்   என்றும்  வானளாவிப்  புகழ்ந்து,

அவர்தரும்     அல்ப   சுகத்திற்காக   ஏங்கி,அவர்பின்னே    சுற்றித் திரிந்தேன்;

           இல்லற  வாழ்வின்   பெருமைக்குக்    களங்கம்     ஆனேன்; குற்றமும் 

குறையும்,சேர்ந்தன'கீழ்க்குணம்    கொண்ட    என்  வாழ்வுக்கலம்   கவிழ்ந்தது ;

 கடுமையான   நோய்களுக்கு    ஆளானேன்;  பெருநோயும்  பற்றிக்கொண்டது;

துன்பத்தால்   கலங்கினேன்;   சமுதாயத்தில்   ஒதுக்கப் பட்டேன்;

         குற்றவுணர்வு    குணம்   இழக்க வைத்தது;   மூதாதையர்     சேமித்து

வைத்த  செல்வமெல்லாம்   இழந்தேன்;  வீட்டுவாசல்    எல்லாம்    இழந்து 

கால்கள்  நிற்க   மறுத்தன;   கைகள்    செயலிழந்து,  குறைந்தன; பண்பும்,

பாசமும்   செல்வமும்   ஒழுக்கமும்   இழந்த    நான்  நடக்கவே    முடியாமல் 

ஞானமலைக்   கோயில்     வாசலிலே  நினைவின்றி    வீழ்ந்தேன்;

               தன்னை     நாடி   வருவோர்க்கு,  இரக்கமும்,   கருணையும்,

பொழியும்   மாமுருகன்   கோயில்    மணியோசை,  மறையொலிபோல் 

என்  காதுகளில்    விழுந்தது;   அவ்வொலியும்   முருகன்    அருளும்  என்னைத் 

தீண்டின.  முருகனின்      கண்   நோக்கம்    என்   மீது    பட்டது;  மறுபிறவி 

எடுத்ததைப்போல்   எழுந்தேன்; நலங்கள்    நாதனின்    கருணையால் 

என்னை    நோக்கி வந்தன;   மனமெல்லாம்   நிறைந்தது    முருக   ஒளி;

அறிவெல்லாம்   நிறைந்தது  மறை   ஞான  ஒலி ;   

         நானும்  மனிதன்    ஆனேன்;   மாண்பு  பற்றிய  புதுப் பிறவி  எடுத்தேன்;

முருகா!  சரணம்.  


                                                                பாடல்-62.


ஒலியோ       உயர்ஞான       மலைவீசு        காற்றோ!

                         ஒளியோ        ஓங்கார        நாதன்மலை       விளக்கோ!

ஒலியோ      உன்னத         மாமறை      உருவோ!

                        ஒளியோ        அளிமார்     பழகுசுடர்              மணியோ!

ஒலியோ     கந்த                புராணக்      கவசமோ!

                       ஒளியோ        ஓராறு           முகத்தொளிர்        அருளோ!

ஒலியோ    ஒண்தளிர்     ஓங்குகனி    உபதேசமோ!

                      ஒளியோ       ஓரன்னை      அளிவேல்               புகழே.


                                                              பொருள் 


         பிரணவ     ஒலியென்போமா?  இல்லை;  அதனை   ஞானமலை  மீதில் 

வீசும்   முருகன்  புகழ்   பேசும்   காற்று   என்போமா?

       முச்சுடர்    ஒளி  என்போமா?     நாதன்   முருகன்   ஞானமலை  மீது,

ஒளிரும்   ஓங்கார   விளக்கொளி  என்போமா?

      புண்ணிய    ஒலி   என்போமா?  உன்னத  ஞான  மலையில்   எழும் 

வேதங்கள்  பயிலும்   மாணவர்களின்    இருமுறை,மும்முறை   உருப்போடும் 

மறை  ஒலி என்போமா?    மாமறையே   உருவாய்க்கொண்ட  மகேஸ்வர 

மாமகனின்    உன்னதக்   காட்சி    என்போமா?

      சுடர்  விடும்   சூரிய   ஒளி   என்போமா?   ஞானமலையில்    வீற்றிருக்கும் 

வேலவனின்    கருணை  கொண்ட   மார்பினிலே   சுடர்விட்டுப்   பிரகாசிக்கும் 

நவரத்தின   மணி   என்போமா?

     வழிகாட்டும்      விண்ணக   வளக்குரல்   என்போமா?  வாழவும்,  வளம் 

மிக்க  வீடு   பேறு    அடையவும்  வகைப்படுத்தும்   கந்தனின்  வரலாற்றைக் 

கூறும்    புராணமா?  கந்தர்   ஷஷ்டி   கவசப்   பாராயணமா?

        அக்கினி,   ஆதவன்,  விளக்கு  இவை   கூட்டும்  ஒளியோ?  ஞானமலையில் 

வீற்றிருக்கும்   ஞானபண்டிதனின் ,  ஆறுமுகனின்  ஆறுமுகங்களிலும் 

அருவியாய்ப்   பொழியும்   அருள்    ஒளியோ?

     ஆசிரியர்   குரலோ?  அன்னையின்   அன்புக்குரலோ?  அழகிய    இளமைப் 

பருவத்திலே   புண்ணியக்   கனிக்காகப்   போட்டியிடுகையில்   அண்ணன் 

கணபதி  ஞான  நிலையில்  அதனைப்  பெற்றுவிட,  உலக்கைச்  சுற்றி வந்தும் 

கிடைக்காத   கணிக்காகச்   சினந்து   மலையிலே  நின்ற  கோலமா? அதே 

கோலத்தில்  அப்பனுக்கே   உபதேசித்த  சுவாமிநாதன்   கோலமா?

ஆசானாய்  மாறி   உபதேசித்த   மௌன  ஒலியோ ?

       சரவணப்   பொய்கையிலே   ஒளியோ?  சங்கத்தமிழில்   ஒளியோ?

பெருமைமிக்க     பார்வதி   அன்னை   பலகால்   தவமிருந்து,    தான்  பெற்ற 

வேலாயுதத்தை  மகனுக்கு    அளித்ததால்  அரக்கர்களை    அழித்து,   அறம் 

நிலைநாட்டிய   புகழின்    ஒளியோ?

  ஒலியெல்லாம்   உறைவிடம்    முருகனே.  ஒளியெல்லாம்   ஒளிர்விடும் 

இடம்   முருகனே. முருகன்    தாள்   வாழ்க.   


                                                   பாடல்-63.


புகழ்பாடிப்       புண்ணியம்       நாடிப்       பேறுற்றான்;

                              புல்லிதழ்ப்          பூவாலே   பதம்போற்றிச்        சீருற்றான்;

அகழ்பொய்கை   ஆற்றுப்        படைபாடி    மேலுற்றான்;

                              அறுமுக           வரலாற்றுத்    திறம்பாடி            அடியுற்றான்;

இகவாழ்வே     காவடியாய்க்     குகசேவடி  நிழலுற்றான்;

                              எழில்மயில்     சேவலாகி       இறுமாப்பு,         பொழிலுற்றான்;

முகக்கருணை   முன்னவனோ      மூதாசான்   பணிந்துநின்றான்;

                                 முகமாறு        வுடையோனே!     முதுஞானம்     நீதானே. 


                                                    பொருள் 


           புகழ்  மிக்க   உனது பெருமைகளைப்   பாடிய    அருணகிரி   புண்ணியம் 

நாடினான்; பெறற்கரிய   உனது   சேவடி    அடைந்தான்.

     விரிந்த   இதழ்களைக்   கொண்ட   குளிர்ச்சியும்,  நறுமணமும்  நிறைந்த 

பூக்களாலே    உனது  பாதங்களைப்    போற்றி  அர்ச்சித்த       

உன்கருணையால்   உயர்ந்தோங்கினான்.

      அழகிய     சரவணப்பொய்கையிலே   நின்று   திருமுருகாற்றுப்படை   பாடி,

உன்னருளாலே  நக்கீரமாமுனிவன்    மேல்நிலையுற்றான்.

    உயர்வுமிக்க   கந்தபுராணத்தைப்    பாடிய   கச்சியப்ப சிவாசார்யார் 

உன்   சேவடி   அடைந்தார்.

    முருகக்     காவடிக்காகவே    தன்னை   அர்ப்பணித்த   இடும்பன்   உனது 

சேவடியில்   மாறாது  நிற்கும்   நிலை   பெற்றான்.

     ஆணவச்சூரனோ,   தனது   இறுமாப்பைக்   கைவிட்டு, உன்   அருளால் 

மயிலாகவும்,சேவலாகவும்    மாறி, நாளெல்லாம்   உன்னோடே    திகழ்கிறான்.

        கருணையே  உருவான  கந்தபிரானின்  தந்தையான  முதற்கடவுளாகிய 

சிவபெருமான், ஓங்காரப்    பொருள்  அறியவேண்டி,முருகனையே    

ஆசானாகக்  கொண்டு, அடிபணிந்து,வாய்பொத்திச்    சீடனாக   ஆனான்.

    ஆறுமுகம்   கொண்ட   அன்புடைய  முருகா!  நன்குணர்ந்த   நல்   ஞானம் 

என்பது    நீயேயல்லவா!  ஞானமலை     ஞானபண்டிதனே!  உன்னைப் 

போற்றி  வணங்குகிறேன்.


                                                          பாடல்--64.


நீலமலர்ப்       பார்வையிலே      நீண்டநாள்    நீந்திநின்று,

                            நிம்மதி             இழந்தேனே !

கோலவளை அரவணைப்பில்    கொண்டசுகம்    தனில்புரண்டு,

                           குணமெலாம்    இழந்தேனே!

சீலமிழந்து,  செல்வமும்         சீர்மையும்        போயிற்றே

                          சிவவாக்கியர்     சொல்போலக் 

காலமெலாம் கடந்தபின்       காலடியில்     விழுகின்றேன்;

                         கந்தஞானமே     காத்திடுவாய்.


                                                        பொருள் 


           குவளைமலர்க்   கண்களின்  கொஞ்சும்    பார்வை     புரியும்  பெண்களின் 

வலையிலே  விழுந்து, திளைத்து,  பலப்பல    ஆண்டுகள்   இன்பநதியிலே 

நீந்தி  விளையாடினேன்;  இன்றோ    நிம்மதியின்றித்     தவிக்கிறேன்;

            அழகே  உருவான   மகளிர்களின்    வளைக்கரங்கள்     அணைத்த 

காலத்தில்   பெற்ற     சுகமே,  பெரும்பேறு   என   அதிலேயே    புரண்டேன்;

குணமும்,குடிப்பிறப்பும்   இழந்து  இழி நிலைக்கு ஆளாகித்  தவித்தேன்;

        சிவ வாக்கியர்  என்னும்    ஞானி   "  இறை   பக்தி   கொள்ளாது,

காம   இச்சையிலும்,   சிற்றின்ப   வேட்கையிலும்  மனம்   கொள்பவன்,

பண்பிழப்பான்;செல்வமிழப்பான்;  என்று    தர்மோபதேசம்  செய்தது  போல,

நானும்,  சீலம்   இழந்தேன்;செல்வம்   இழந்தேன்;குலப்பெருமையும்  

இழந்தேன்.

          வீணே   வாழ்நாள்   கழிந்தது;   இளமை   கழிந்தது;  உடலும்   உள்ளமும் 

சோர்ந்திட,  முருகா!  முருகா!  என்று    கதறியபடி    உன்  காலடியில் 

விழுந்து விட்டேன்; ஞான  பண்டித  ஞான   மலை   முருகா! இந்த 

ஏழையைக்   காத்து  அருள்வாய்.


                                                              பாடல்--65.


காத்தருளும்          கறைக்கண்டன்      கயிலையின்      இளங்குமரா!

                                     கற்பகத்தாய்          நற்புதல்வா!

மூத்தவன்               கணபதியின்           முகிழ்ஞான        சோதரனே!

                                    முதுமுனிவன்          பதிகுருவே!

பூத்தமலர்              மீதமர்ந்தோன்         புகுநெறி             உரைத்தவா!

                                   பூணணி                    வேலாயுதா!

பூத்ததிரு               வள்ளிமலர்              ஈர்த்ததிரு             மணவாளா!

                                  பூஞ்சோலைத்       தீஞ்சுவையே.


                                                        பொருள் 


         அண்ட    சராசரங்களையும்     காத்துக்    கடையேற்றும்  நீலகண்டனது 

கயிலைமலையில்    தவழ்ந்து    விளையாடும்   மழலைக்   குமரனே!

கற்பகாம்பிகையின்   நற்றவப்   புதல்வா!

       மூத்தவனான    கணபதிக்கும்,  ஞான   உபதேசம்   அருளிய  தம்பியே!

பெரும்   ஞான  அகத்திய   மாமுனிக்கே  ஆசானாகி  பிரணவ   ஞானம் 

உபதேசித்தவா!

     தாமரைமீதில்    அமர்ந்து,  படைக்கும்   தொழிலாற்றும்  நான்முகனின் 

அகந்தையை   அடக்கி, அவனுக்கும்   ஞான    உபதேசம்  செய்து, பண்பு 

தழுவிய    படைப்பாற்றல்   வழங்கியவா! அழகுமிகுந்த    கரத்தினிலே 

அணியாக, அரக்கர்   அழிக்கும்   படையாக,  அடியவர்    காக்கும் 

அன்பு  ஆயுதமாக,  வேலை வைத்திருக்கும்    வேலாயுதா!

       வள்ளி  மலையிலே    பூத்த  மலரான    வள்ளியின்   மனம்    கவர்ந்த 

மணவாளனே! பூஞ்சோலையாய்    விளங்கும்   ஞானமலையில் 

வீற்றிருந்து    அருள்புரியும்    இனிய  கருணைச்சுவையே!  ஞான  பண்டிதா!

உன்னடி   போற்றி  வணங்குகிறேன்.


                                                              பாடல்-66


தீந்தமிழ்த்          தீம்பாட்டின்           தெள்ளுரை        தேர்ந்தெடுத்த,

                                தீந்தமிழ்               மாப்புலவ!

தீந்தமிழ்த்         தவ்வைக்குச்           சுடாத               தீங்கனியைத் 

                              தந்தருளிய            தமிழ்வேடா!

மாந்தளிர்        மாமேனி                  மாசுறவே         காடதனில்,

                             மான்வள்ளி            பின் நடந்தவா!

காந்தம்போல்  பற்றுற்ற             காரரக்கனைக்     காலடியில் 

                             காலமெலாம்       காப்பவனே!


                                                       பொருள் 


       மதுரைத்   தமிழ்ச்சங்கத்தில்   இல்லாத   களவியல்   நூலை, சிவபெருமான் 

இறையனார்  களவியல்"  என்று   அருளிய   காலை,  அதனை    விளக்க 

முற்பட்ட   சங்கப்புலவர்கள்   பலரும்   அதற்கு   உரை   எழுத, 

எவ்வுரை   சிறந்தது?  என்ற  நிலையில்   "உருத்திரசன்மன்"  என்ற   பெயரைத் 

தாங்கித்    தானே  ஒரு  புலவனாக   வந்து,  அத்தனை   உரைகளையும் 

ஆய்ந்து  நக்கீரர்     எழுதிய    உரையே   சாலச்சிறந்தது"  என்று  தமிழ் 

வளர்த்த  சண்முகப்புலவனே !

      காட்டுப்பாதையில்   நடந்துவரும்    ஒளவைப்    பாட்டி,  களைப்பு 

மேலிட   ஒரு  மரத்தடியில்   அமர்கிறாள். மரத்தின்  மீதமர்ந்து  இருந்த 

வேடனாகிய   முருகன்,"  களைத்து  இருக்கும்   பாட்டியே! உன்   களைப்பும் 

சோர்வும்   போக,  நாவல்  பழம் போடவா!  என்றுகேட்டான்; பாட்டி   சரி.

போடு!  என்றாள் .உனக்கு   சுட்ட  பழம்   வேண்டுமா?  சுடாத  பழம் 

வேண்டுமா?  எனக்கேட்ட   வேடச்சிறுவனைப்   பார்த்து   இங்கு 

பழத்தில்  சுட்டது,  சுடாதது   என்று   உள்ளதோ!  எனக்கு  சுடாத   பழமே 

போடு!  என்றாள்   பாட்டி. வேடன்  மரத்தை  உலுக்கினான்;  நாவல் 

பழங்கள்  கீழே  விழுந்தன;   அவற்றைப்   பொறுக்கிய   அவ்வை, அவைகளின் 

மீது,ஒட்டியிருந்த  மண்   போக   வாயால்  ஊதினாள். மரத்தின்  மீதமர்ந்த 

வேடன்   காய்   கொட்டிச்   கிரித்தபடியே   "என்ன  பாட்டி!  சுடாத   பழம் 

கேட்டுவிட்டுச்    சுட்ட  பழத்தை எடுத்துக்  கொள்கிறாய்!  என்றான்.

பொருளை    உணர்ந்த   பாட்டி,  அப்பா! ஞானபண்டிதா!  என்னே   உன் 

விளையாட்டு!  என்று  புகழ்ந்து  முருகனைப்போற்றினாள் .

         வள்ளி மலைக்   காட்டினிலே   தினைப்புனம்   காவல்   காத்துவரும் 

வள்ளியைக்   கண்டு,  அவள்  மீது  மோகம்    கொண்டு,  அவளது    காதலை 

வேண்டிக்   காடெல்லாம்,  மலையெல்லாம்   தனது   அழகு  மேனி,

கருக்கவும்,  செம்பாதங்கள்   தேயவும்,  வெய்யில்,மழை  எனப்பாராது 

சுற்றிச்சுற்றி  வந்த  தமிழ்க்காதல்  முருகா!

         கொடுமை   வாய்ந்த   அரக்கன்    சூரபன்மன்   உன்னருளால்    உன்மீது 

பற்றுகொண்டுக்   காந்தம்  இரும்பினைப் பற்றியிருப்பதுபோல  உன் 

காலடிகளை ப்  பற்றிக்கொண்டுக்     காலமெல்லாம் ஊர்தியாய்க்  கொடியாய் 

வலம்  வருவதும்   உனது  பேரருள்  அல்லவா! 

   அருள்கொண்ட    ஆறுமுகர்!   உன்னடி   பணிகிறேன்.


                                                   பாடல்--67


பவனே!         பதியே!      பரமே!       பழமே!

                பணிவோர்த்        துணையே!

சிவனே!        சிலைவேல்      மகனே!   சகமே!

                சின்மயக்           குருவே!

தவமே!            தவத்தின்       பயனே!    தகையே !

                தத்துவத்            தலையே!

நவமே!            நவமணிச்        சுடரே!      நலமே!

               நன்ஞான           நாயகனே!


                                                பொருள்


      அருளுடையவனே!    அனைத்து     உலகங்களுக்கும்    தலைவனே!

ஆதிமுதலானவனே!     முது ஞானப்பழமே !  தன்னை  நாடி    வந்து   

போற்றுபவர்களுக்குத்    துணையாக   நிற்பவனே!

        சிவஸ்வரூபம்   கொண்டு மங்களங்கள்   கொண்டவனே! மேருமலையை 

வில்லாகக்   கொண்ட  சிவபெருமானின்   மகனே!   மூவேழ்   உலகாயும்,

அவற்றில்  வாழும்  சராசரங்களாயும்    விளங்கும்,  பேருரு   கொண்டவனே!

அழியாத   பேரானந்த   ஞானத்தின்  ஆசானாய்   விளங்குபவனே!

        தந்தைக்கே     ஆசானான    தவமுதல்வனே! முனிவர்களும்,  பிறரும் 

தேவர்களும்    ஆற்றும்    தவங்களை   ஏற்று,  அதனதன்   பயனை   அளிக்கும் 

பயன்களும்,  வரமுமாய்க்    காட்சி    அளிப்பவனே ! நேர்மை,நடுவுநிலைமை,

பண்பு, ஒழுக்கம்   ஈகை  கொண்ட   தகைமை சால்  தெய்வமே!அனைத்துத்

தத்துவங்களுக்கும்   தலைமை  அருள்நோக்கு   கொண்டவனே!

       புதிய   செயல்,எண்ணம், கொண்டு  விளங்கி   அடியவர்களை   நல்வழிப் 

படுத்துபவனே!  நவரத்தினங்களின்    ஒளிபோல்     பிரகாசிப்பவனே!

நலமெலாம்   ஒருங்கு   கூடிய  மனம்  கொண்டவனே!  நல்ல   ஞான  மலையில் 

நாயகனாய்   வீற்றிருந்து   கருணை  பொழியும்   ஒளி  மிகுந்த  மாமுருகா!

   உன்னடி   போற்றிப்    புகழ்கிறேன். 


                                                            பாடல்--68.


நாயகன் ;       நான்முகன்        நாவரசி,      நாவிலே 

                          நவின்றேத்தும்,  நாவலன்;

மாயவன்      மலர்மகள்          மகள்களின்       மாதவன்;

                         மாமறை              மேலவன்;

தூயவன்      நாயகித்           தொல்பொருள்      சேயவன் ;

                        தேவசே            னாபதி ;

ஆயகலை   ஞானமலை        மேயபுகழ்ப்       பண்டிதன்;

                         ஆறுமுகன்        தாள்பணிவோம்.


                                                           பொருள் 


         மூவர்க்கும்,    மூவேழ்    உலகங்களுக்கும்,  முருகனே    தலைவன்;

பிரும்மதேவனது   நாவிலே    வசிப்பவளாகிய   சரஸ்வதி    தேவியின்,

நாவிலே     ஓங்காரத்தை   எழுதி,  வித்யா   செல்வத்தை   அருளியவன்;

       திருமால்,மகாலட்சுமியின்       மகளிரான  இருவருக்கும்   மனத்தில் 

குடிகொண்ட   தலைவன்;  நான்குவேதங்களுக்கும்  மேலான  பிரணவத்தின் 

பொருளாய்    விளங்குபவன்.

         ஆணவக்கன்ம   மாயா  மலங்கள்   பற்றாத தூயவனாகிய  சிவ 

பெருமானுக்கும், இமவான்  மக்களாகிய   பார்வதி   தேவியாருக்கும், 

மறைப்பொருள்   உபதேசித்த   ஞானக்குழந்தை; அரக்கர்களை     அழிக்க,

தேவர்களின்    படைத்தலைவனாகி  வெற்றி      வாகை    சூடியவன்.

         அனைத்துக்   கலைகளும்   ஒருங்கு   சேர்ந்த  மாப்புகழ்    கொண்ட 

ஞானபண்டிதனாக   ஞான மலையில்   வீற்று   அருள்புரியும்   ஆறுமுகக் 

கடவுளை  வணங்குவோம்;  அவனது   சேவடிகளைப்  போற்றுவோம்.


                                                          பாடல்--69


தாளாற்றித்          தந்த            பொருளெல்லாம்           தக்கவனாம் 

                                  வேலவன்    திருவடிக்கே.

கோளா                றில்லாது       குவித்த             கொழுஞ்செல்வம் 

                                வேலவன்      திருவடிக்கே.

ஆளுயர              நெற்பயிரும்,  ஆணையடி       நெற்களமும்,

                               வேலவன்        திருவடிக்கே.

நாளெல்லாம்   நலம்காக்கும்,  நல்லுடல்          அடிமையும் 

                                வேலவன்       திருவடிக்கே.


                                                              பொருள் 


        சோம்பேறித்தனம்    இல்லாமல், உழுது,   பயிரிட்டு, அறுவடை  செய்து,

வந்த  நெற்குவியல்   விற்று வந்த   வானளாவிய  செல்வம்   அத்தனையையும் 

முருகன்    காலடியிலேயே    சமர்ப்பிப்பேன்.

       தவறான   வழிநீக்கி,  நேர்மையான   நல்ல    வழியில்    ஈட்டிய   எனது 

எல்லாச்செல்வமும்     முருகனுக்கே     அர்ப்பணம்.

     வயல்களில்   வளமாக    வளர்ந்துள்ள      நெற்பயிரும் , அதனை   அடித்து 

நெல்லாக்கப்    பயன்படுத்திய    யானைகள்   கட்டிப்போரடித்த  களமும்,

நெல்லும்   நல்ல  முருகன்   சேவடிக்கே   சொந்தம்.

    அழகிய   உலகிலே    தோன்றி,உருவாகி,  பணியால்,  பதவியால்,

செல்வத்தால்   உருவான  நலமிகு   இவ்வுடல்    முருகனுக்கே.  அவன்பணி 

தவறாது,  ஒழுக்கமுடன்    செய்யும்  அடிமை   நான். கோயில்   கூட்டல்,

மெழுகல், கோலமிடல் , தோட்டவேலை,   மலர்   பறித்தல்,  மாலை   கட்டல் 

போன்ற  பணிகளைச்   செய்வதே  நான்  பிறவி  எடுத்ததின்   பயன்'

என   உணர்ந்து, என்றும்  அடிமைத்தொழில்   மகிழ்வோடு   ஆற்றுவேன்.


                                                           பாடல்--70.


திருவடி        வைத்துத்         திரள்ஞானம்         அருளியத் 

                       திண்ணிய       மதுரமலை ;

திருவடி      இணைந்த       தினைப்புன           மலராள்,

                      நண்ணிய        நலமலை;

திருவடி     தேடிய               திருமாலும்              வந்துநின்று,

                      பெருவணக்கம்     புரியுமலை;

திருவடி     நாடியே            குறுமுனி                 போற்றியதால்

                     உறுஞான        மாண்புமலை.


                                                                பொருள் 


            வள்ளிமலையிலே   வள்ளியை    மணம்   புரிந்து  கொண்டு, 

திருத்தணிகை   புறப்பட்ட   காலை,   வழியிலே   திருப்பாதம்    பதித்து,

நின்ற  ஞான  பண்டித மாமுருகன்   உலகோருக்கும்,முனிவர்களுக்கும்,

தேவர்களுக்கும்   ஞான   உபதேசம்   அருளிய  வலிமையையும், இனிமையும் 

வாய்ந்த   மலை. 

                 முருகனோடு  இணைந்த    தினைப்புன   வள்ளியம்மையும், 

மலர்போன்ற   தனது  திருவடிகளைக்   கணவரோடு    தானும்   பதித்து,

ஞான   மாதாவாக  விளங்கும்  மங்கள  மலை.

           எம்பெருமான்    அண்ணாமலையாரின்   அடிப்பாதங்கள்  தேடி,

வராக   உருவெடுத்துக்   காண  இயலாது    தவித்த ,திருமாலும்,  ஞான மலை 

வந்து, தந்தைக்கு   நிகரான  ஞானமகன்   சுப்பிரமணியரை    வண ங்கிப் 

போற்றும்  புனித  மலை.

        ஆசானுக்கு   ஆசானான   ஆறுமுகக்   கடவுளை   நாடி  வந்து, அகத்திய 

மாமுனிவன்  போற்றுகின்ற    காரணத்தால்  உயர்ந்த   ஞான   மாண்புகள் 

நிறைந்த  சுவாமிநாதக்    கடவுள்   வீற்றருள்கின்ற   ஞானமலையைப் 

போற்றி வணங்குவோம்.


                                                        பாடல்--71


மாணவராய்       மகேசன்       மலரடி        சுமந்தார்;

                                மாமறை        உணர்ந்தார்;

வீணவா             நான்முகனோ   வியன்பாதம்      தொழுதெழுந்து,

                              விரியுலகு        படைத்தார்;

பூணழகுக்       கருநீலன்         தேனழகுப்         பெண்களால்,

                            புவிகாக்கும்   பேறுற்றார்;

கோணல்       கூனழகுக்        குறைஞான        அடியேனும்,

                         கவிபாடி,          அடியுற்றேன்.


                                         பொருள் 


       பிராணவப்பொருளை   நன்கறிந்துகொள்ள, முருகனின்  மாணவச் 

சீடனாகி, அவரைத்  தோளிலே   சுமந்து,  மலர்போன்ற   பாதங்களைச் 

சுமந்து, மாமறைப்பொருளை   மகன்  உபதேசிக்கத்    தந்தை 

தலைவணங்கிக்    காதால்   வாய்பொத்திக்  கேட்டார்.

       ஆணவமும்,அகம்பாவமும்    கொண்ட  நான்முகன், முருகனைக்   

கண்டு    வணங்காது,  சிவபெருமானைத்     தரிசிக்கச்    சென்றபொழுது,

அவனைத்   தடுத்து  நிறுத்திய   முருகன், படைப்புத்   தொழில்   ஆற்றுகிறேன்"

என்ற    மமதை   கொண்ட  பிரம்மனிடம்,பிரணவத்தின்    பொருளைக்  

கேட்கத்   தெரியாது விழித்த  நான்முகனைச்   சிறையிலே    அடைக்கத் 

தந்தை  சொல்  கேட்டு,விடுவிக்க,  மாமுருகனை   வணங்கினான்  பிரமன்.

தொழுது   எழுந்த   நான்முகனுக்கு   மீண்டும்   படைப்புத்    தொழில் 

ஆற்றும்   பொறுப்பை    அருளினார்.  நான்முகனும்    ஆணவம்   நீக்கித் 

தனது  படைப்புத்  தொழிலைத்   துவங்கினான்.

      ஆடை  ஆபரணங்களின்   அழகுத்    தோற்றம்   கொண்ட  கருநீல 

நாரணனோ   தனது     இரண்டு   மகள்களின்   தவபலத்தால்   மணாளனாகப் 

பெற்ற   மாமுருகன்   பேரருளால்   உலகைக்   காத்துவரும்   தொழிலைப் 

புரிகிறான்.

       எதற்கும்   பயன்படாத   கோணல்,   கூனல்,  அழகும்  குறைந்த   அறிவும்,

கொண்ட   இந்த   ஏழையும்   மாமுருகன்  மீது    கவிதை,பாடிப் புகழ்ந்து,

அவனது,அருட்சேவடியை  அன்றாடம்   போற்றும்   கருணையைப்  பெற்று 

முருகனடிமையாய்    வாழ்கிறேன்.  முருகா!  சரணம்.


                                                                 பாடல்--72.


உற்றது         ஓருடல்;          பெற்றது          பேருயிர்;

                        உடலுயிர்       அவனன்றோ!

கற்றது        கடல்கல்வி;    பெற்றது         பெரும்புகழ்;

                      கல்விப்புகழ்க்     கந்தனன்றோ!

விற்றது     வியர்வை;        ஏற்றது             பெருஞ்செல்வம்;

                     சேரிரண்டு      ஆறிரண்டோ!

நற்றிணை   தானம்;        நாடலோ          நற்றவம்;

                     நல்லாறும்       ஓராறே .


                                             பொருள் 


      உலக  வாழ்விலே   மனிதன்    என்றபிறவி    மட்டுமல்ல;  எல்லா 

உயிர்களும்   பெறுவது  ஒரு  உடலைத்தான். அவ்வுடல்     நின்று   நிலவ,

இறைவன்   அளித்தது   உயிர்.  அந்த    உடலும், உயிரும்   இறைவன் 

அல்லவா!  முருகன்  அல்லவா!

         பிறந்த   உலகிலே   பிறவிப்பயனாய்,  மனிதன்   பெறுவது   கல்வி;

கடல்போல்   பரந்த,   ஆழமான   அறிவு   சார்ந்த  கல்வியால்   பெறுவதோ 

நிலைத்த    பெரும்புகழ்; அந்தக்கல்வியும்,  கல்வியால்   வரும்   புகழும் 

கந்தனல்லவா!

       உழைப்பின்  பயன்பாடு  தருவது   வியர்வை; நெற்றி   வியர்வை 

நிலத்தில்   சிந்தப்  பாடுபட்டால்   குவிவது  குன்றனைய    செல்வம்.

உழைப்பையும், உழைப்பின்    பயனாம்   செல்வத்தையும்   உயிர்களுக்கு 

வழங்கி, அருள்  புரிவது   ஆறுமுகனின்   பன்னிரண்டு    கரமல்லவா!

      உயிர்களின்   நல்லொழுக்கம்   நற்பண்பு   என்பன   ஈகை  என்னும் 

பிறர்க்களிக்கும்   குணமே    ஆகும்; தானம்  செய்வதால்  தவம்   

முற்றுகிறது;  முற்றிய  மோகனம்  தவிர்த்த   தவம்  பேற்றினை 

வழங்குகிறது. தானம்,தவம்,  என்ற   நல்ல   வழிகளைக்   காண்பித்து,

பேறு   வழங்குவது    ஆறுமுகக்   கடவுளன்றோ!

       எல்லாம்   வழங்கிய   ஞான  பண்டித  மாமுருகனைப்   பணிவோம்.


                                                     பாடல்--73.


ஆறெல்லாம்     வழிந்தோடும்,       ஆகாய       கங்கையோ!

                               ஆறுமுக,       அருட்பெருக்கோ!

சீரெல்லாம்      சிறந்தோங்கும்,     செல்வநிலைச்   செழிப்போ !

                             சீராளன்         செங்கரமோ!

காரெல்லாம்   பொழிந்தோங்கும்,   கார்மேகக்     கூட்டமோ!

                             கார்த்திகேயன்         கரவருளோ!

பேறெல்லாம்   பெற்றுமகிழ்      பெருமுனிவர்     நற்றவமோ!

                               பெருஞான        மலையருளோ!


                                                            பொருள் 


            விண்ணிலும்,   மண்ணிலும்   நிறைந்த   நீரோட்டத்தால்   வழிந்து 

குளிர்க்கருணை   பொழியும்,  வான்நீர்க்   கங்கையோ?  அன்று  அன்று 

இக்குளிரும்,  கருணையும்  பொங்கி   வழிவது, ஆறுமுகக்   கடவுளின் 

அருளும்,   அன்பும்  பெருக்கெடுத்து   உலகெலாம்   ஓடுகிறது.

           சீர்மையும், சிறப்பும்   சிறந்து  விளங்கிட   உயர்ந்து   ஓங்கிய 

செல்வத்தின்  செழிப்பு  நிலை    காரணம்   ஆகுமோ?  அன்று.

சீர்மையும்,   சிறப்பும்   மனத்திலே    கொண்ட  வள்ளல்  மாமுருகனின் 

வற்றாத   வளக்கரங்கள்   வழங்கும்   அருட்கொடையே  காரணம்    ஆகும்.

          காட்டும்,நாடும்    செழிக்கப்   பொழிந்து,  ஒங்கச்   செய்வது   கருணை 

கொண்ட  மேகமழைக்   கூட்டம்    காரணமோ?  அன்று.   கார்த்திகேயனின் 

மனத்தில்   தோன்றிய   ஈகை,   வள்ளல்    செங்கர  வழியே    பொழிகின்ற 

கருணையே    ஆகும்.

        நீண்ட   நாள்   தவம்   இருந்து,  பெரும்   முனிவர்கள்;  எல்லாம்  பெறுகின்ற 

பேறும்   மகிழ்வும்   தவப்பயன்   ஆகுமோ?  ஆகா.  ஞான மலையில் 

வீற்றிருக்கின்ற  ஞான  பண்டித   மாமுருகனின்  அருளையே    தவப்பயனாகக் 

கருதுவர்.

       எல்லாம்   வல்ல   ஆறுமுகனை    வணங்கி  நல்லருள்    பெறுவோம்.


                                                  -பாடல்-74.


மலையழகோ?     மகரந்த      மலரழகோ?      மாசில்லா 

                               மணியழகோ?    அணியழகோ?

கலையழகோ?     கவியழகோ?      கரமழகோ?      குறையில்லாக் 

                             கருணைமிகு       குணமழகோ ?

சிலையழகோ?      வேலழகோ?      சிரிப்பழகோ?      செதுக்காத,

                              சிலைமாந்தர்       இடையழகோ?

நிலையழகோ?      நிதியழகோ?      நிதமழகோ?      நிலையான,

                             நித்தில       முத்தழகனே!


                                                       பொருள் 


        ஞானத்தை  வாரி  வழங்கும்,  ஞானமலை   வளத்தால்,  அறிவால் 

உயர்ந்த  தோற்றத்தால் ,  அழகாக  விளங்குகிறது.

    அம்மலையிலே    பூத்துக்குலுங்கும்    மகரந்தம்   நிறைந்த   மலர்களின் 

அழகு உள்ளத்திற்கு  மகிழ்வும்,ஆனந்தமும்   தருகிறது.

     குற்றமற்ற   நவரத்தின   மணிகளை   விளைபொருளாகப்  பெற்ற 

மலையின்  ஒளி  ஓங்கும்  அழகே  அழகல்லவா!

    ஞானத்தை,மலர்களை, மகரந்தங்களை, மணிகளை    அணிகலன்களாக 

உடுத்து,  வானோங்கித்  திகழும்  மலையே   அழகுதானே !

   ஓவியம், சிற்பம், அருவி,சோலை, போன்ற   கலைவண்ணத்தைத்  

தன்னகத்தே  கொண்ட அழகே  கலை மயம்  தானே!

       மலையும்   கவிதைப்பொருள்;  மலைமேல்  வீற்றிருக்கும்    முருகனும் 

கவிதைப்பொருள்; மலையை,  முருகனைப்   பாடுகின்ற  கவிதையும் 

அழகல்லவா!

    வரமருளும்  கரம்  கொண்ட   முருகன்   மலை   இம்மலை;இங்கு 

அழகிற்கெல்லாம்    அழகூட்டுவது   ஆறுமுக   அன்புக்கரமல்லவா!

          அடியவர்களின்    குறைதனைப்    போக்கி, அன்பும்,    ஆதரவும் 

வழங்குகின்ற  கருணையாளன்;  கருணையே  மனமாகக்  கொண்டவன்;

கருணையே  குணமாகக்   கொண்டவன்  அழகிற்குச்   சான்றல்லவா!

     வீரத்தின்   நிலைக்களனான   மாமுருகன்   கரத்திலே    ஏந்திப் 

போராற்றும்   வில்லும்    அழகுடையது  அன்றோ!

     அன்னை   அருளிய  வேல்;  அரக்கர்  அழித்த  வேல்;  தேவர்  சிறை  மீட்ட 

வேல்;  வேளே  அழகு;  அதுவும்    முருகன்    கரத்தில்  திகழ்வதால் 

அழகோ  அழகல்லவா!

    அடியவர்க்கு   அருள்;  அப்பனுக்கு   உபதேசம்;  தேவயானைக்கு 

மங்கள  நாண் ;  குறவள்ளிக்கோ   அன்புடைக்காதல்; அரக்கன்   சூரனுக்கோ 

அருகமரும்   இடம்;   இவை  அனைத்தையும்   வழங்கியது,  குகவேளின் 

சிரிப்பல்லவா!  அச்சிரிப்பு   அழகின்  சிரிப்பு.

        செதுக்காத   அழகுப்பதுமைகள்  அன்புமாந்தர்  இருவர்  முருகனின் 

இருபக்கத்தில்;  அழகே   உருவான    அவர்களின்   உருவ  அழகைப்   

பாராட்டுவதா? அழகையெல்லாம்   தனக்குள்    அடக்கிய   அம்மைகளின் 

இடையழகைப்  பாராட்டுவதா?

      பேரூழிக்   காலத்தும்,   தந்தை  சிவபெருமானைப்   போலவே   நிலைத்து 

நிற்கும்  முருகனின்   அழகே   பேரழகு.

     அன்பு,அருள்,  கருணை, இரக்கம்,   ஆதரவு,  போன்ற  நிதிக்குவியல்களைத் 

தன்னகத்தே   கொண்டு  விளங்கும்  செவ்வேளின்   செல்வமே   அழகாம்.

      நித்யம்  என்ற சொல்லின்   பொருளே   முருகன்; நேற்றும்,இன்றும்,

நாளையும்   என்றென்றும்   அழியாத   அழகனாய்   விளங்கும்  அழகே  அழகு.

        மூவர்க்கும்   முதல்வனாய்,மூவேழ்  உலகிற்கும்   தலைவனாய்  

நான்மறைகளின்   தலைவனாய்   விளங்கும்  நிலையான   தெய்வமே!

தூய்மை  வாய்ந்த   முத்துமாலை  அணிந்த   பேரழகனே !

  அழகென்றால்  அது    நீ தானே.  அழகே!   அழகனே!  உன்னை    

வணங்கிப் போற்றுகிறேன்.


                                                    பாடல்--75


முத்தே,       முகிழும்          முறுவல்          சிரிப்பாம் :

                     மோகனத்       தந்தமாம்:

சித்தே      சிரிப்பினுள்   விளையும்,      செயலாம்:

                    செவ்வாய்ச்       சொல்லாம்:

சத்தே       சதாசிவச்      சத்புத்ரச்           சாக்ஷியாம்:

                   சுவாமி           நாதமாம்:

வித்தே!  வியனே !       விரிமலை         விளைவே!

                 வில்,சொல்    ஏருழவ!


                                          பொருள் 


       ஞானமும்    வெண்மையும்   வாய்ந்த  முத்து,  முறுவல்   பூக்கும் 

முருகனின்  சிரிப்பாயிற்று.  மயக்கும்   வசீகரம்  கொண்ட  செவ்வாய்ப் 

பற்களும்  முத்துக்களே.

      அடியவர்களுக்கும்,   அன்புகொண்டவர்களுக்கும்,  மகிழ்வளிக்கும்,

சித்து  விளையாட்டே முருகனது   சிரிப்பின்   விளைபொருள்கள்    ஆகும்;

செவ்வாய்   அளிக்கும்  வரங்களும்,    வாய்ச்சொற்களும்   மறை பொருளாகவே 

வெளிவரும்.

     சத்"    என்பது  சதாசிவம்   ஆகும்;  அந்த   சதாசிவப்  பரம்பொருளுக்கே 

ஆசானாகி,  மந்திர     உபதேசம்    அருளிய   சுவாமிநாதன்  சத்"  ஆகிறான்;

சத்"  புத்திரனும்  ஆகிறான்; சத்தைச்    சாக்ஷியாய்க்     காட்டித்     தானே 

சதாசிவமுமுமாய்    விளங்குகிறான்.

        மூவேழ்   உலகங்களையும்  படைத்த  முழுமுதலே ! அரக்கர்களை 

அழித்து,  அறம்   காத்த  அதிசய  மழலையே!   பரந்துபட்ட   ஞான மலையின் 

விளக்கமாம்   ஞானப் பொருளே! அரக்கர்களை  அழித்ததால்   வில்   என்ற  

படையைப்  பயன்மிக்கதாக   ஆக்கிய   வீரனே! தமிழ்ச் சங்கம்  காக்கப் 

புலவனாய்    வந்ததால்   சொல்  என்ற  ஏரினை   வளம்  என்ற   வயலில் 

பயன்படுத்திய  புலவனே!  வணங்குகிறோம்  உன்   சேவடிகளை.


                                                     பாடல்--76.


ஏரகம்             எழுந்தது           ஞான          பீடமாய்;

                          எழில்மறை      அருளிலே.

சீரகம்           செயிர்த்தது      செம்போர்க்    களமாய் ;

                        செந்தூர்ப்          போரிலே.

சூரகம்          ஏற்றது                ஆணவம்        பணிந்தது;

                        சேவல்மயில்     காலிலே.

ஈரகம்          தவத்தால்           இருபுறம்         இணைந்தது.

                       ஈர்த்தபுகழ்         ஆர்த்தவா!


     எழில்   வேத   முன்னொலி  ஓங்காரப் பொருளைத்  தந்தை ,  ஆசான்,

ஆகிய  சிவபிரானுக்கே   உபதேசித்ததால்   சுவாமிமலைத்    தலம் 

ஞான  பீடமாய்   விளங்குகிறது.

        அரக்கர்களின்     சிறுமை  கண்டு   பொங்கி  எழுந்த   மனம்,

போர்க்களமாகிப்    புறப்பட்டது  செவ்வேள்    முருகன்   தலைமையில் 

தேவர்ப்படை . செந்தூர்  போர்க்களம்   ஆயிற்று.

      அரக்கன்,  வரம்பல  பெற்ற   சூரன்,  அவனது   கொடுமை  மிக்க  மனம்,

ஆணவம்  விட்டது.   அடிபணிந்தது ; சேவலும்,மயிலும்   ஆகி,

நாளெல்லாம்  முருகன்   சேவடி  பணிந்து   போற்றுகிறது.

         இளகிய,இளம்  இரண்டு   மனங்கள்   தவமிருந்து,  முருகன்   அருளும்,

அன்பும்   பெற்று,  முருகனின்   இருபுறமும்   என்றும்   நின்று   அருள் 

புரியும்  தேவியராக  இணையற்ற  பதத்தைப்  பெற்றது. 

     ஆசானாய்,போர்த்தளபதியாய், பகைவனுக்கும்  அருளிய 

பண்பாளனாய், காதல்  மனம்   கனிந்த   காருண்யனாய்   விளங்கிப் 

புகழை  எல்லாம்   தன்னகத்தே     கொண்ட மாமுருகா!  உன்னடி 

போற்றினோம்.


                                              பாடல்--77


ஆர்வத்தால்       அலகு,குத்தி       ஆருடலைச்       சிதைத்து,

                                 அரும்பக்தி       மேம்பாட்டால்,

ஆறுமுகா!          ஆறுமுகா !       என்றோதிப்        பாடிவரும்,

                                 அருங்காவடி    எடுத்துவந்தும்,

தேரிழுத்தும்,     தார்மாலை       தானணிந்து,     தீநெருப்பில் 

                                தாவியாடி          மிதித்துவந்தும்,

ஊரெல்லாம்     ஓங்கார               உன்நாமம்         போற்றுவரே :

                               உன்னருளை      நாடுவரே.


                                              பொருள் 


         முருகனடிமை, முருகபக்தி,  பூண்டு,  ஆர்வமேலீட்டால்  விரதம்  இருந்து,

திருவிழா   நாட்களிலே,  மார்பு,கைகள், முதுகு,  வாய்,  நாக்கு   போன்ற 

இடங்களில்  கூர்மையான    அலகு  குத்திக்கொண்டு, அழகே   உருவான 

உடலைச்   சிதைத்துக்கொண்டு, மிகப்பெரிய   காவடியைத்   தூக்கிக் 

கொண்டும், ஆட்டம்போட்டும்,  முருகா!குகா!   ஷண்முகா !  என்று   பக்திக் 

குரல்  எடுத்துப்  பாடியும்,  வருவோரும்,

   அலகு    குத்திய  முதுகில்    அலங்கரிக்கப்பட்ட   முருக விக்ரஹம்  வைத்து,

அழகே  உருவாய்   அமைந்த   தேர்   நாணைக்  கட்டி  இழுத்தபடி   வீதியில் 

வலம் வருவோரும்,

   விரத மாலை  அணிந்துகொண்டு. கொழுந்து விட்டு   எரியும்   தீக்குள் 

இறங்கி  நடந்து,  ஆடிப்பாடி ஓடிவந்து   தீ    மிதி  மிதிக்கும்  பக்தர்களும்,

  ஊரெல்லாம்    ஓங்காரப்   பிரணவ  மந்திரத்தை, உன்   பெயரோடு,

உச்சரித்துப்  போற்றுபவர்களும், 

     உன்னருளை   நாடி  வந்து போற்றுவார்கள்.  அப்படிப்பட்ட  ஈடில்லாப்  புகழ் 

உடைய   ஞான  மலை  முருகா!  வணங்குகிறோம்  உன்   பாதங்களை.


                                                         பாடல்-78.


நாடு         கூடி,       நற்றேர்        இழுத்து,

                   நல்வீதி       சுற்றி,

ஆடுவார்   அன்போடு    "அரோஹரா"    என்றே 

                 ஆட்டமும்      போடுவாரே !

வீடு        வீடாய்        விளக்கேற்றிக்    கோலமிட்டு,

                விழாவும்,      எடுப்பாரே !

ஆடுமாடு      சேவல்     எல்லாம்        ஆலயத்தில் 

               அளிப்பார்க்கும்      அருள்வாயே.


                                                       பொருள் 


            முருகா!   உன்கோயில்    திருவிழா   வந்துவிட்டால்   நாட்டு மக்கள் 

ஒன்றாகக் கூடுவர்;   உனது   வீதி   உலாவிற்காக   அனைவரும்   ஒன்றுசேர்ந்து 

அலங்கரிக்கப்பட்ட     அழகிய பெருந்தேரை  அன்போடும், பக்தியோடும் 

கோயிலைச்   சுற்றி  அமைந்துள்ள   நான்கு   வீதிகளிலும், முருகா!

முருகா    என்று  போற்றியவாறே  இழுத்து  வருவர் .

     வழியெல்லாம்   ஆடுவார்கள்;  முருகனுக்கு   அரோஹரா"  கந்தனுக்கு 

அரோஹரா"  என்று   குரல்  எடுத்துப்   பாடி    ஆட்டமும்   போடுவார்கள்;

அன்பும்,பக்தியும்   கலந்தது  அந்த  ஆட்டம்.

    தேர்  வரும்    வழியெல்லாம்   அமைந்துள்ள   தத்தம்  வீட்டு   வாயில்களில் 

நீர்  தெளித்துப்  பெருக்கித்    தூய்மை  செய்து, கோலமிடுவார்கள்; வீடுதோறும்,

வாயில்களில்  அழகிய   குத்துவிளக்கு   ஏற்றி வைப்பார்கள்; மாவிலை,

தோரணம்  கட்டி, விழா  எடுப்பார்கள்.

      தேரோடு  கூட்டம்   கூட்டமாய்   மக்கள்  வருவார்கள்;  கோயிலுக்குள் 

சென்று   வழிபடுவார்கள்;சிலர்    ஆடு,மாடு,சேவல்கோழி   போன்ற 

வீட்டுப்பிராணிகளை   வேண்டிக்கொண்டு  உன்னிடம்  சமர்ப்பிப்பார்கள்;

அனைவருக்கும்   ஞானமலை   ஆறுமுகா !   நீயோ   அருள்வளங்களை 

வாரி   வாரி    வழங்குவாய்.  முருகா    போற்றி.


                                                       பாடல்--79.


வாய்பெற்றது     வளமுருகன்     பேர்சொல்ல;    வற்றாத 

                                  வேலனருள்      பெற்றிடவே;

தாய் பெற்றாள்   இந்தவுடல்     தண் முருகன்    போற்றுபணி 

                                   தளராது,      ஆற்றிடவே;

வேய்க்கரங்கள்  வேலவனின்     வியன் தொண்டு    விரிவாக 

                                   வேலையைப்  போற்றிடவே;

மாயவாழ்வு       மனத்திருத்தி,    மாமுருகன்     தாள்பணிக; 

                                 மாப்பதமும்        உற்றிடவே.


                                                             பொருள் 


           மானிடப்    பிறவி எடுத்த   இவ்வுடல்  பல  அங்கங்களைப்  பெற்றுள்ளது 

அவைகளில்   வாய்  பெற்ற   பயன்,  எப்பொழுதும்  முருகா!  முருகா  என்று 

அவன்பெயரைக்    கூறிக்கொண்டே  இருத்தல்  ஆகும்.என்றும்   துணை 

செய்யும்  முருகன்   நாமம் ,அவனருளையும்   குறையில்லாது    அளிக்கும்.

   இந்த  ஆன்மாவின்  உடலை  ஈன்றெடுத்தவள்  தாயாவாள். முருகனது  

பணிகளைத்   தவறாது,  ஆற்றி, முருகன்  அடிமையாய்   வாழ்வதற்காகவே 

இவ்வுடலும்  உலகில்  ஜனித்தது .

       மூங்கிலன்ன    கரங்கள்;  எதற்கு?  எம்பெருமான்  முருகன் கோயிலிலும் 

தொடர்பான  எல்லா  இடங்களிலும்,  வேலவன்  போற்றியபடியே 

அவனடிமைத்   தொட்டு செய்து, வேலைப்   போற்றுவதோடு,  வேலைகளையும் 

விருப்புடன்   ஆற்றுவதற்கே   கரங்கள். கரங்களைப்   படைத்த  கந்தன் 

தாளினைப்  பற்றுவோம். அவனது  அருள்  பிறவியை  நீக்கிப்  பேரின்பம் 

வழங்கும்.  முருகா  சரணம்.

      மனிதனின்   வாழ்வு   நிலையற்றது;  அழிவுடையது;  இதனை  உணர்ந்து,

மனத்திலே    ஆணவமும்,  ஆசையும்   கொண்டு அழிய  வேண்டாம். மூவேழ் 

உலகங்களையும்  காக்கின்ற  முருகன்   சேவடி  போற்றுவோம்.


                                                    பாடல்-80



பெற்ற ஞானம்   பேசவைத்த   பெரும்பாட்டுக்    கலிவெண்பா,

                                  பேசாத     திருமகன்;

உற்ற ஞானம்      உயரவைத்த   ஓங்குபுகழ்த்        திருப்புகழ் 

                                   ஓர்பாவச்      சிறுமகன்;

கற்ற ஞானம்       கனியவைத்த    கன்னித்தமிழ்   ஆற்றுப்படை,

                                  கண்ணுதலோன்    சாபமகன்;

கண்ட ஞானம்    காலமெல்லாம்      காலடியில்    போற்றவைத்தது,

                                  காரான          சூரனையே.


                                                    பொருள் 


              ஐந்து  வயது  வரை,பேசாத  குமரகுருபரனை,  முருகனது   அருட்பார்வை 

ஞானத்தைத்  திருச்செந்தூரில்   வழங்கிட,  வாய்  திறந்து   பேசாத

அக்குழந்தை   கந்தனின்  புகழைக்  கலிவெண்பாவினால்   பாடிப் போற்றியது.

            சிற்றின்ப  வேட்கையிலே  சுற்றித்  திரிந்த    பாவச்சிறுமை   கொண்ட 

அருணகிரியான்   ஆறுமுகம்  கண்டான்;  அருஞானம்   உணர்ந்தான்;

அங்கே  எழுந்தது   முருகன்  புகழ் ;  திருப்புகழ்.

            பாடலில்  குற்றம்  கண்டு, பரமனையே   சாடிய   நக்கீரன்  சிவனால் 

சபிக்கப்பெற்றான்; திருப்பரங்குன்றப்    பொய்கையில்   நின்று   முருகன்  மீது 

திருமுருகாற்றுப்படை"   பாடிச்     சாபநீக்கமும்  இருவர்    அருளும்   பெற்றான்.

        ஆணவத்தால்  ஆட்கொள்ளப்பட்ட    சூரபன்மன், போர்க்களத்தில் 

கந்தனைக்   கண்டான்; கர்வம்  தொலைந்தது;  ஆயினும்   விதி   விடவில்லை;

மாயமனம்   மாயப்போரை   ஆற்றியது; மரமான   அவன்  இரு கூரானான் ;

முருகனது     அருட்பார்வை,ஒருகூர்  மயிலாயிற்று;மற்றொன்று   சேவலாயிற்று;

காலமெல்லாம்  கந்தன்   சுமந்து வரும்   மயிலாயிற்று.புகழ்  பாடும்   கொடி 

ஆயிற்று  சேவல்.  அருளே,இரக்கமே  முருகனல்லவா!


                                                              பாடல்--81.


சூரைக்       காட்டுள்         ஆர்வத்       தாடலன் 

                      பேர்பெற்ற     பிள்ளையே 1

காரிளம்   குழலாள்,         பேரிளம்     தவத்தால்,

                      சீர்வேல்           பெற்றவா!

ஊருடை   முதல்வன்       நேரிடை      அருளால்,

                     உறுமணம்      கண்டவா!

பேருடைப்  பெருமலை   வீறுடன்      அமர்ந்து,

                     பெருவரம்        அருள்பவனே!


                                                            பொரூள் 


           காரை,  சூரை    ஆகிய  முட்செடிக்  காடு;   சுடுகாடு;    அங்கே 

ஆனந்தத்தோடும்   விருப்பத்தோடும்   தாண்டவம்    ஆடுகின்ற  

அம்பலவாணருக்கு  அருள்  ஞானம்  உபதேசித்துத்    தகப்பன்    சாமி"

என்று  பெரும் பெயர்  பெற்ற   பிள்ளையே!

        கரும்குழலைக்    கொண்ட   கல்யாணி   அம்மை,   இளமை   தொட்டு,

விடாது   ஆற்றிவரும்   மிகப்பெரிய    தவத்தினால்  பெற்ற   வீரவேலை,

ஞானவேலை,  அன்னையின்  ஆசியோடு    பெற்றவனே!

       ஊருக்கும்,  உலகிற்கும்   முதல்வனாகிய  விநாயகப்   பெருமான்,

தினைப்புன   வள்ளியை  நீ   மணப்பதற்காக   யானையாகி,   நேரே 

வந்து,வள்ளியை  அச்சுறுத்தி,  அடைக்கலமாய்   உன்னை  அடையவைத்து,

மணக்கவும்   நல்வழி  காட்டியதால், வள்ளியை   மணம்   புரிந்து 

கொண்டவனே!

          பேரும்    பெருமையும்   கொண்ட   ஞானமலையில்    வீரமும்,விவேகமும் 

கொண்டு, அமர்ந்து,  உலக   மக்களுக்குப்   பேரருள்    புரிகின்ற   ஞானபண்டித 

சுவாமியே! போற்றி போற்றி!


                                                       பாடல்--82.


பவமான       சேவலும்,       அவமான      மயிலும்,

                         ஆட்கொண்ட   முருகா!

நவமான     தினையும்,     நலமான        விண்ணும்,

                       ஆட்கொண்ட     முருகா!

சிவமான   தந்தையும்,     தவமான       தாயும்,

                     ஆட்கொண்ட       முருகா!

சிவமும்   தவமும்     சண்முகன்     எனவாழும் 

                   சிறியேனைச்    சீரடிகொள் !


                                                 பொருள் 


       ஆணவத்தால்   தாழ்ந்த  சூரனின்   அடுத்த   உரு;  முருகனின் 

கண்ணோக்கு  பெற்ற உரு;  சேவலையும் ,மயிலையும்  கொடியாகவும்,

ஊர்தியாகவும்   ஆட்கொண்டு   அருள்புரிந்த   முருகனே!

       புதுமை   வாய்ந்த   தினைப்புனத்திலே   புதுமையாய்    மான்  மகளாய்ப் 

பிறந்த  வள்ளியை   அன்போடு  காதலித்து    மனையாளாக  ஆட்கொண்டாய்;

செல்வக்குடியில்  பிறந்த  இந்திரன்  மகளான   தேவயானையையும் 

போர்ப்பரிசாக  ஆட்கொண்டு  மனையாளாக   ஆட்கொண்டாய்.

        மூவர்க்கும்  முதல்வனான   சிவனாம்   தந்தைக்கே   பிரணவப் பொருள் 

உபதேசித்து  சீடனாக   ஆட்கொண்டாய்;  தவமிருந்து   தாயாம்  பார்வதி

தேவியார்  பெற்ற   மாணிக்கவேலைப்   பெற்று, அரக்கர்களை    அழித்து,

அந்த     அன்னையின்  தவத்தை  நிறைவு  செய்து,  ஆட்கொண்டாய்.

           சிவநாமமும்,  சிவஸ்வரூபமும்,  தவமும்,  தவப்பயனும்   சண்முகனே"

என்று  உன்னையே   போற்றி  வாழும்   இந்தச்சிறியேனுக்கும்   அருள் 

புரிந்து,  ஆட்கொண்டு,  யான்  ஈடேற  வழி   காட்டுவாய்  ஞான  மலை 

முருகனே!


                                            பாடல்--83.


அடிதேடி       அகழ்ந்தானும்,     முடிதேடிப்      பறந்தானும்,

                         அகந்தையை        அகற்றவில்லை;

அடிமுடி       காணா         அண்ணா       மலையை,

                      அன்பாலே    கண்டிடலாம்;

இடிஇடி     அரக்கனும்,    படிப்படியாய்ப்      பக்குவம் 

                     பெற்றதைப்   பாரறியும்;

தொடித்துடி   இடையாள் விடிவிடியல்        பெற்றதால்,

                      கடித்துயர்      கலைந்ததே.


                                           பொருள் 


                    திருமாலுக்கும், பிரமனுக்கும்    போட்டி.  யார்  பெரியவன்?

என்பதில்;  அவர்களுக்கு    இடையே   ஒரு  சோதி   தோன்றியது; அத்துடன் 

சொல்லும்  அசரீரியாய்    வந்தது; இச்சோதியின்   அடியையும்,  முடியையும் 

யார்  முதலில்  காண்கிறார்களோ?   அவரே  பெரியவர்" என்று.  பன்றி 

உருவெடுத்துத்   திருமால்    அடியைக்  காண   பூமியைத்   தோண்டலுற்றார் 

நான்முகனோ    அன்னப்பறவை   உருவெடுத்து,  விண்ணில்  பறந்து ,

முடியைத்  தேடலுற்றார்; யுகங்கள்  பல  கடந்தும்   அவ்விருவரால்  அடிமுடி 

காண  இயலவில்லை;  எளிமையே    உருவான   பரம்பொருளின்   மீது,

அன்பு  கொள்ளாமல்  அகந்தை,  ஆணவம்  தாங்கிச் சென்ற   இருவரும் 

தலைகுனிந்து  நின்றனர்.

    அண்ணாமலையென    வளரும்  அக்னிச்சோதியை   அன்பும்,பக்தியும் 

கொண்டால்   கண்டிடலாம்;  பெற்றிடலாம்.

   இடிபோல்   இடித்து,  ஆணவச்  சூரனாம்    அரக்கனும்,  முருகனின்   அருள் 

பார்வை  பட்டதருணம்  முதற்கொண்டு  படிப்படியாக   மாறி,அரக்க குணம் 

விட்டதோடு,சேவலாயும்,  மயிலாயும்   மாறி  நாளெல்லாம்  முருகன்  

சேவடி  போற்றுகிறான் .

    மத்தளம்  போன்று, ஒடுங்கிய  இடையினை  உடைய  அன்னை,  பார்வதி 

அம்மை,மூவேழ்  உலகிற்கும்   விடியும்   விடியலாக    முருகனைப் 

பெற்றெடுத்தாள்;தவத்தாய்  பெற்ற   மகனால்  விண்ணும்,மண்ணும் 

அரக்கர்களிடம்  இருந்து  பிழைத்தது; விடுபட்டது; ஞானமலையில் 

வீற்றிருக்கும்   முருகனது  தோற்றத்தால்  உலகே  மகிழ்ந்தது.

      முருகா  போற்றி.


                                                      பாடல்--84.


செயலெலாம்     சண்முகச்     செம்மலைச்     சார்ந்திடுக;

                                     செல்வமெலாம்     சேவடிக்கே.

வயலெலாம்           விளைவிளைச்சல்     வடிவேலன்     திருவடிக்கே;

                                   வளமெலாம்       சேவடிக்கே.

இயலெலாம்       எடுத்தியம்பும்     இலக்கியம்   ஈசனுக்கே;

                                 எழில்தமிழ்           சேவடிக்கே.

கயலெலாம்      கரைபிறழும்      கழனியான      ஞானமலைக் 

                                காட்சிதரும்        சேவடியே .


                                                 பொருள் 


அடியேனும்,என்னைச்சார்ந்தவர்களும்    ஆற்றுகின்ற   செயல்கள்,

அதனால்  விளையும்   பயன்கள், எல்லாம்  எம்பெருமான்  முருகனுக்கே 

சாரட்டும்;  சேரட்டும்; பழைய  செல்வம்,  நான்  சம்பாதிக்கும்  செல்வம்,

என்னைச்சார்ந்த   அத்தனைச்செல்வங்களும்  கந்தன்  காலடிக்கே 

சமர்ப்பணம்.

           வயல்களில்  விளையும்  எல்லாப்பயிர்களும்   வடிவேலன்  

திருவடிக்கே    சமர்ப்பணம்;எனது  வளம்,  நலம்,  பலம்  எல்லாம் 

குமரன்   பாதரவிந்தங்களுக்கே   சொந்தம்  ஆகும்.

                 இயல்,இசை.   நாடகம்  என்ற  முத்தமிழ்   இலக்கியங்கள் 

தலைவன்  முருகன்  புகழையே  போற்றட்டும்;  அழகும்,அறிவும்,  ஆன்மிகமும் 

வாய்ந்த    அழகுத்தமிழ்    முருகனுக்கே   உரித்தாகட்டும்.

               கரைகளெல்லாம்   கயல்   மீன்கள்   துள்ளியாடும்   கழனிகள் 

நிறைந்த  ஞானமலையில்   வீற்றிருந்து, நற்காட்சி    அருளும்,முருகன் 

சேவடியை   மனமெல்லாம்  நிறைத்துப்  போற்றுவோம்.


                                              பாடல்--85


சேவடி      சேவிக்கிலேன்;      செந்தூர்      நேசிக்கிலேன்;

                    செவ்வேள்          தரிசிக்கிலேன்;

காவடி     சுமக்கிலேன்;       கூரலகு           குத்தலேன் ;

                   கரகாட்டம்         ஆடலேன் ;

பூவடித்தீ மிதிக்கிலேன்;  பொன்மேனி  வாடலேன்;

                  புதுநீர்         சுமக்கிலேன்;

தூவடித்  தொண்டாற்றாத்    தொன்முருக   பக்தனோநான்?

                 தேன்மலையான்     தேடுகிறேனே!


                                       பொருள் 


             செம்மை   மிகுந்த  முருகனது    திருப்பாதங்களை   வணங்காது 

வீண்  பொழுது   போக்கினேன்; செம்மைப்  போர்க்களம்   அமைத்து,  உலக  

மக்களை  அரக்கர்களிடம்  இருந்து   காத்திடத்    தேர்ந்த  நற்பதியாகிய 

திருச்செந்தூர்   மீது  பற்றும்,  ஆசையும்   கொண்டு,  சென்று, வணங்க,

மறந்துவிட்டேன்;  சீரிய  போராற்றலினாலே   தேவசேனாபதியாக 

விளங்கிய   எம்பெருமான்   முருகனைக்    கண்டும்,  போற்றியும்,

வாழ்த்தியும்,வணங்கியும்   நடக்கவில்லை.

      முருகனுக்கு,  "  அரோஹரா"  என்று   மனமார்ந்து  கூவிக்கொண்டு 

பால்காவடியோ,  பழக்காவடியோ,  பன்னீர்க்காவடியோ   சுமக்கவில்லை;

அலகு காவடி   சுமந்து,  அதன்  கூர்மையான    அலகுகளை   உடலெல்லாம்  

ஆழப்பதித்து முருகனருள்  தேடவில்லை; கரகம்   சுமந்தபடி  ஆறுமுகன் 

அரும்பெயரைக்    கோஷமிட்டபடி   ஆட்டம்  ஆடவில்லை.

          மரங்களை   வெட்டிப்போட்டு,  தீமூட்டி,  நெருப்புக்   கட்டிகளை 

உருவாக்கி,  பக்தியோடும்,  தூய்மையோடும் அந்தப்   பூக்குழியிலே 

இரங்கி  முருகன்  புகழைப்பாடி  ஆடியபடிச்   செல்லவில்லை; பட்டினி 

கிடந்தும்,  விரதம்  இருந்தும்,  கோயிலில்    பணிகளைத்    தாமாகவே 

முன்சென்று  ஏற்று,நன்கு  செயலாற்றியும் உடல்  வாட ,  தொண்டுகள் 

ஆற்றவில்லை;திருமஞ்சனத்திற்கும்,  கோயிலின்  பிறப்பணிகளுக்கும் 

குடம் குடமாகத்    தண்ணீர்  சுமந்து    செல்லவில்லை.

        இப்படிப்   பலப்பலத்   தொண்டுகள்  செய்து  முருகனது    அடிமையாக 

ஆற்றவேண்டிய  பலவும்    ஆற்றாத  நான்  எப்படி  முருக  பக்கதனாக 

முடியும்? போற்றவும்  இல்லை;  வணங்கவும்  இல்லை; தொண்டுகளும்

ஆற்றவில்லை;இனிக்கும்   அருளை  பொழியும்   ஞானமலை  முருகனின்   

அருள்  வேண்டி,அவனைத்  தேடித்தேடி   அலைந்தால்    அவனருள்  கிட்டுமோ?

தெய்வீகத் தேடலைத்   தொண்டின்  வழியாகவே  பெற  இயலும்,  என்றும் 

பணிவோம்;அன்பு கொண்ட  முருகனின்  அரும்பணி  பலவும்   புரிவோம்;

ஆனந்தம்  அடைவோம்.


                                                பாடல்--86,


தேடிய       செல்வமும்      தேய்ந்ததே     பனியாய்;

               தேடிய      வலிமையும்      தேய்ந்தது      முதுமையாய்;

தேடிய       உறவும்         தேய்ந்ததே         பகையாய்;

               தேடிய      இன்பமும்         தேய்ந்ததே      நலிவாய்;

தேடிய     யாவும்          தேய்ந்த      பின்னரே,

               தேடித்       தேடித்          தேய்ந்தே    அலைகிறேன்;

தேடியும்,   பாடியும்,        நாடியும்      கிடைக்காத 

               தேடுபொருள்    மாமுருகன்   தரிசனம்    கிடைக்குமோ?


                                                 பொருள் 

        பாடுபட்டுத்   தேடிச்     சேர்த்த    பொன்னும்,பொருளும்  நிலைக்காமல் 

பனிக்கட்டி  போல  ஒருநாள்   தேய்ந்து   போய்விட்டது;

         உடலை  வளர்த்தேன்"   உயிர்  வளர்த்தேன்"  என்னும்   திருமூலர் 

வாக்கிற்கேற்ப, உடற்பயிற்சிகளால்   வலிமையான    உடல்   வளர்த்தேன்;

அந்தோ!  அவ்வலிமை  முதுமையில்   தேய்ந்து  போய்விட்டது.

     அண்ணன் ,தம்பி,  அக்காள்,தங்கை    என்று   உறவு  நீண்டு  வளர்ந்தது ;

நிலம்,  சொத்து,பாகப்பிரிவினை   என்ற  நிலையில்   உறவெல்லாம்   

பகையாகிப்  போய்விட்டது.

      இளமை   வேகத்தில்   இன்பம்  எங்கே?  எங்கே?  என்று  தேடித்தேடி 

அலைந்து   அவ்வின்பமே    மனைவி  என்ற  பெயரிலும்   கண்ட  இன்பமும்,

உடல்  நலிவு,  சோர்வு,  நோய்,  என்றுவந்த   தன்மையில்  அழிந்து  தேய்ந்தது.

     ஆக,   இளமை  முதல்    தேடித்தேடிப்     பெற்ற   அனைத்தும், கொஞ்சம் 

கொஞ்சமாக,  அழிந்தபின்னரே ஞானமலை  முருகன்  பாதமலரைத் 

தேடமுற்படுகிறேன்;  அங்கும்,இங்கும்   இரவும்,பகலும்   நாடி  ஓடுகிறேன்;

பாடுகிறேன்;ஓம்  முருகா!என்று  கூச்சலிடுகிறேன்;கோயில் கோயிலாக   

அலைகிறேன் ; ஆசானை  நாடுகிறேன்; அது  அப்பொருள்    அழியாத 

நித்தியமான   அந்தப்  பொருள்    கிட்டவில்லை; கிடைக்கவில்லை;

மாமுருகன்  என்னும்  மாப்பொருள்   எனக்குக்கிட்டுமா? அந்த  முருகனது 

கருணைப்பார்வை    என் மீது    விழுமா? காண்பேனோ  கருணைக்கடவுளாம் 

கந்தப்பெருமானை.  வருவாய்    அருள்வாய்   குகனே!


                                                    பாடல்--87.


கிடைத்த     வாழ்வைக்      கிறுக்கனாய்த்      தொலைத்தேன்;

                        கிடைக்காத     இன்பசுகம்       கிறங்கித்      தவித்தேன்;

அடைத்த    கதவினை         அன்புடன்        அணைத்தேன்;

                       அடைகாயை    அருங்கனியாய்      அன்றாடம்      சுவைத்தேன்;

படைத்த    பரம்பொருள்     பண்பினை     அளித்தும்,

                       படைக்கலச்     சீர்குலைவால்     பலப்பல     இழந்தேன்;

கடையனின்     கடையனாய்க்     காலம்      கழிக்கிறேன்;

                       கடைக்கண்     கருணையால்     கரையேற்று!    கந்தவேளே !


                                                   பொருள் 


      கிடைத்தற்கரிய   மானிடப்பிறவி   கிடைத்தது; அறமாகிய     வாழ்வை 

அறமற்ற  வழியிலே சென்று, பித்தனைப்போலத்   தொலைத்தேன்;

கிடைக்காத  இறையருள்  போல,  தாழ்ந்த இன்பசுகத்தை   நினைந்து 

நினைந்து   அதனுள்  மூழ்கி, மதிமயங்கி   நின்றேன்; கிடைக்காவிடில் 

புலம்பித  தவித்தேன்.

            வராதே!  என்று  விரட்டியடித்தவர்கள்  காலிலே   விழுந்து,  அன்பும்,

பொருளும்   அளித்து,  அன்புகொண்டு   அணைத்து   இன்பம்  கண்டேன்;

புளிக்கும்   கசக்கும்   காய்களை   எல்லாம்  கனியெனவே   நினைத்து 

நாளும்   நாளும்  சுவைத்தேன்;

       என்னைப்    படைத்த,  பரம்பொருள்     பண்போடு,    என்னைப் 

படைத்தான்;என்னைக்  காக்கும்  அன்பு,அறம் ,இரக்கம், பண்பு,ஒழுக்கம் 

என்னும் படைக்கலன்கள் சீர்மையை இழந்த   என்னை  விட்டு   விலகின;

உயரிய  குணங்கள்  விலகியதால்  நல்வாழ்வு   அணிகலன்களை  இழந்தேன்;

         ஒழுக்க  மேம்பாட்டில்  கடையனுக்கும்  கடையனாக   ஆளாகி 

அலைந்து  திரிகிறேன்; காலத்தை   வெல்ல  வழி  தெரியாமல், இழி  

வாழ்வு   வாழ்கிறேன்;

        கந்தவேளே !  ஞான  பண்டிதா!  இந்த  ஏழையின் மீது    இரக்கம்    காட்டு!

கருணைக்கண்   கொண்டு  பார்! கசட்டுக்   குழியிலிருந்து   அடியேனைக் 

கரையேற்று!  காலமெல்லாம்  உன்   காலடியே  கதி   என   ஞானமலை  

வாயிலிலே   கிடக்கிறேன்;  குற்றம்  பொறுத்துக்   குணம்  நல்குவான் 

குமரன்.


                                                    பாடல்--88.

கந்தனைக்    கடம்பனைக்     கார்த்திகை    மைந்தனைக் 

                           கல்லாலன்     குருவை,    நல்லோர்     நாதனைச் 

சுந்தரனைச் சுத்த          சன்மார்க்க       பந்துவைச் 

                           சுந்தரச்      சங்கரி      புதல்வனைச்    சண்முகனைச் 

செந்தமிழ்ப்  புலவனைச்      சந்தக்     கவிஞனைச் 

                           செந்தூர்ப்     பதியைத்      செந்தேன்      மலையைச் 

சந்ததம்       பணிந்திடச்      சிவப்பே      றணிப்பவனைச் 

                         சிந்தும்      கருணையைச்     செம்மலையில்      கண்டேனே.


                                                     பொருள் 


            செம்மலை,   ஞானமலை;  கருணையில் செம்மை;  செயலில்  செம்மை;

வீரத்தில்  செம்மை; செம்மலையில்   வீற்றிருக்கும்   ஞான  பண்டிதன்  மூவேழ் 

உலகிலும்  எப்படி விளங்குகிறான்,  என்பதையே  அவன்பெருமையாக 

விளக்குகிறது   இப்பாடல்,

     இளமையிலேயே   ஞானம்  வீரம் கருணை  நிறைந்து   விளங்கும்  கந்தன்;

கடம்பன்   என்னும்   அரக்கனை  அடக்கித்    தனது  சேவகனாக   மாற்றியவன் 

கடம்பன்; கடம்பமரங்கள்  மிகுந்த   வனத்திலே  குடி கொண்டவன்;  சரவணப் 

பொய்கையில்  அவதரித்த  காலத்தே   கார்த்திகைப்  பெண்களான   ஆறு 

விண்மீன்களால்   காக்கப்பட்டதால்  அவர்களின்  அன்பு  மகனாவான்;

கல்   ஆலமரத்தின்  அடியில்   அமர்ந்து  நான்கு   முனிவர்களுக்கு   ஞான 

உபதேசம்   செய்யும் சர்வேஸ்வரன்  தமக்குக்   குருவாகி, ஓங்காரப் 

பிரணவத்தின்  பொருளை  உப்பு[தேசித்த   மஹா  ஞான  குரு ; நல்லோர்கள் 

முனிவர்கள்,  தேவர்கள்,  ஞானிகள்   இவர்களுக்கெல்லாம்   தலைவன்;

             மும்மலங்கள்   அண்டாத    தூய்மையே  வடிவானவன்; தூய்மை,

தூயமனம், நல்வழி   இவைகளை   உலகோருக்கு  அளிப்பதால்  அவர்களுக்கு 

உறவாக  விளங்குபவன்; அழகே  உருவான  அன்னை ,நன்மையையே 

அடியவர்களுக்கு   அருளும்   அன்னை,  அந்தப்  பார்வதி   தேவியாரின் 

புதல்வன்;ஆறுமலர்களில்   ஆறு  உருவாகி   அவதரித்து,   அன்னையின் 

கரங்களால் அன்புடன்   அணைத்துத்   தூக்கிய  காலத்து,  ஒன்றாகி 

ஆறுமுகம்   ஓருரு கொண்டு   விளங்கியவன்;

       மதுரைத்  தமிழ்ச்சங்கத்தின்   தோன்றிய    "களவியல்"  நூலின்  உரை 

எழுதியோர்களின்   உரையைப்   படித்துச்  சிறந்த   உரையாக   நக்கீரன் 

உரையைத்  தேர்ந்தெடுத்த  "உருத்திர சன்மன்"  என்ற  புலவனாக வந்தவன்;

அவ்வுரை   சந்தக்கவிதை  போல்  விளங்குவதால்   அன்றே   புதுக்கவிதை 

வடித்த  சந்தக்    கவிஞனாகவும்  விளங்குபவன்;திருச்செந்தூர்   நகரத்தின் 

அரசன்;ஆண்டவன்; காவலாளி, தேனொழுகும்  பழமுதிர்  சோலை  மலையில் 

தேன்போன்ற  வள்ளிநாயகி   வளர்ந்த   வள்ளிமலையில்,  இனிக்கும் 

குறமகளை   மணந்துகொண்ட   திருத்தணி  மலை,   வண்டின்  வாய்த் 

தேன்போல்  தந்தைக்கு ஓங்காரத்தை  உபதேசித்த   சுவாமி மலை,

அருவிகளும்,  ஓடைகளும்,  தித்திக்க,  மலர்களும்,கனிகளும்  தேன்போல் 

தித்திக்கும்  ஞானமலை,தேன்பழமே   குடிகொண்ட   பழனிமலை,

வீற்றருளும்  வேலன் ;

        நாளும்,பொழுதும்,  மனமெல்லாம்  உருகி  வணங்கிப்   பணிந்து 

போற்றிட,  அடியவர்களுக்குச்   சிவபதம்,  தந்தையைப்  போல்   வழங்கும் 

நிர்மலன்;   ஆறுதலே   கரங்கள்;    கருணையே   நெஞ்சம்;  இரக்கமே  கண்கள்;

என  விளங்கும்  கருணையாளன்.

          இப்படிப்பட்ட   எழில்  முருகனை  நான்   ஞானமலையில்    

கண்டுகொண்டேன்; காலடி வணங்கினேன்.

  அவனடி   தொழுங்கள்;    ஆனந்தம்   பெறுங்கள்.


                                                பாடல்--89.


கண்டன      கண்கள்;      குவிந்தன      கரங்கள்;

                        கனிந்தது     மனமே;          கலந்தது       உறவே.

கண்களோ கார்மழை;  கார்மேகம்   கலைந்தது;

                        கல்லுடல்      சரிந்தது;       கருங்குணம்     சிதைந்தது;

மண்ணெலாம்    மக்கிற்று ;        மாளிகை       விழுந்தது;

                         மனைப்பாசம்     மாண்டது;     மமதை      மடிந்தது;

விண்வாயில்   வியன்செல்வம்      வீணவா    விலகின;

                        வேலொன்றே     நின்றது;        மாலன்றே     மறைந்ததுவே. 


                                              பொருள் 


        ஞானமலை    முருகனின்   காலடியில்   நின்று,  கண்கள்  ஆண்டவனைக் 

கண்டன;  இருகரமும்   குவிந்து  வணங்கின;  மனமெல்லாம்   கனிவுடைக் 

கந்தன்   கருணையால்   கனிந்தது; கனிந்த மனம்   கடவுளோடு   ஒன்றாகிக் 

கலந்தது.

          அந்த     ஆறுமுகனின்    கண்கள்   கார்காலக்   குளிர்மழையாக   அருளைப் 

பொழிந்தன;  அப்பொழிவிலே    கருமை  நிறைந்த  எண்ணங்கள்  கொண்ட 

மனம்   சற்றே   மேகமாய்க்   கலையத்     தொடங்கிற்று;  கந்தபிரானின்   

கால்களைப் பற்றிக்    கண்ணீர்   சிந்தி  அழுதிடப்    பாறை போன்ற    பேருடல் 

அப்படியே    சரிந்து   கீழே   விழுந்தது.

       காலடி   தீக்ஷை   தலையில்   பட்டதும்,நிலம்,  காடு ,கழனி, விளைச்சல் 

எல்லாம்  மனத்தை  விட்டு  அகன்றன;மாளிகை,   மாட்டிக்கட்டிடம், தோட்ட 

வீடு    எல்லாம்  மனத்தை   விட்டு   நீங்கின.  மனைவி,  மகன்,   மக்கள், உற்றார்,

உறவினர்,பாசமெல்லாம்    பறந்து  போயின; நான்"   எனது"  என்ற

அகம்பாவம்   அப்படியே  நிலைகுலைந்து    விழுந்தது.

          வானைத்தொடும்   மாடமாளிகைகள், வங்கியிலும்  பிற   இடங்களிலும் 

சேர்த்து  வைத்த   செல்வங்கள், அதுவேண்டும்"  இதுவேண்டும்"  என்ற 

பேராசை, யாவும்  மண்ணோடு  மண்ணாயின;

    கண்முன்னே   காண்பது   வேலொன்றே.  மனத்திலே   நிற்பது     வேலொன்றே.

பந்த   பாச,   சொத்து,சுக   மயக்கங்கள்   மனதை  விட்டு    அகன்றன.

நித்தியத்   தலைவனாம்   முருகன்  மட்டுமே  நெஞ்சகக்    கோயிலிலே  

குடி   கொண்டான்.   முருகனடி   வெல்க.


                                          பாடல்--90


மறைந்த     நிலவை,     மணிக்குழை      காட்ட,

                       மறையாக்  கருணை      மாதா      மடியினில்,

நிறைந்த   சுடராய்       நாளும்,       அமர்ந்தே,

                     நீள்வேல்      பெற்றே       நிலமதை      மீட்டவன் ;

சிறைப்படு   தேவர்,     நிறைப்பட      நெற்றி 

                  மறைக்கண்      மாப்பொறி ;    மலர்ந்தது     சரவணம் .

குறையொளிக்    கூட்டம்,    தரைப்பட      வெற்றிக் 

                குணம்படக்      குவலயம்     காத்த    குமரனே!


                                       பொருள் 


      அன்னை   அபிராமியிடம்    பக்திகொண்ட    அபிராமிபட்டர்; அன்னையின் 

அழகு  ஜோதியில்    மனதைப்   பறிகொடுத்து  அமர்ந்திருக்கும்  வேளை,

ஆணவ   அரசன் வந்ததும்  கவனிக்காத   மனம்;ஒளியில் ஒன்றிய மனம்;

அந்த  நேரம்   மன்னன்  கேட்டான்,"இன்று  என்ன   நாள்? திதி?

ஒளி  தெரிகிறதே! தெரியவில்லையா   உனக்கு? இன்று   பௌர்ணமி"

உள்ளம்  உணர்ந்த விடை. கொதித்தான்   மன்னவன்;அமாவாசை  இன்று;

அதுகூடத்  தெரியாத  நீர்  பட்டரோ? இன்று  மாலை  நிலவு   வானிலே  உதிக்க 

வேண்டும்; உதிக்காவிடின்  உன்  தலை  மண்ணில்  புரளும்' , நடந்தது 

உணர்ந்த  பட்டர்  அம்மையிடம்   புலம்பினார்;  அழுதார்;  புரண்டார்;

அபிராமி  அந்தாதியை  மனமுருகப்பாடினார்;  மாலை  வந்தது;  வானிலே 

வட்டநிலவு  வடிவோடு  தோன்றியது.  பட்டரின் சொல்லை   மெய்ப்பிக்க,

அம்மை,  தனது  தாடங்கம்   என்ற    தோட்டை  வானிலே  வீசினாள் .

இருள்   அகன்றது; இப்படி  அடியவர்  மீது    மாறாத    கருணை   கொண்ட 

அன்னை   பார்வதி  தேவியின்  மடியிலே  நெற்றிச்சுடரில்  தோன்றிய 

குழந்தை குமரன்   அமர்ந்து   விளையாடினான்;அரக்கர்களை   அழித்து,

மூவேழ்  உலகையும்   மீட்டிடக் கருணை  கொண்ட   அன்னை   அருந்தவம் 

இருந்து   பெற்ற வேலாயுதத்தை அளித்தாள் ;

          சூரபன்மன்  என்ற  அரக்கனால்  சிறைபிடிக்கப்பட்ட    தேவர்கள்  

விடுத்தலை   பெறவும், அரக்கர்  குலம்   அழியவும், ஒருவீர    மகனைத் 

தோற்றுவிக்கத்   தனது    நெற்றிக்கண்ணைத்   திறந்தார்   சிவபெருமான்.

அங்கே தோன்றிய  பொறி  தீயாலும்,  காற்றாலும்,கங்கையாலும்   ஏற்க  

இயலாத   வெப்பச்சூழலிலே  சரவணப்  பொய்கை    அதனை  ஏற்றது.

      வானத்து   விண்மீன்கள்   கூட்டத்தில்  கார்த்திகைப்  பெண்கள்   அறுவர் 

கீழிறங்கி வந்து  மலர்களில்   மலர்ந்திருந்த   ஆறு  குழந்தைகளையும்  

பாலூட்டிச்   சீராட்டி வளர்த்தனர்;  அப்படி  வளர்ந்து  வீரமும்   விவேகமும் 

பெற்று,  விண்ணையும்   மண்ணையும்   காத்த  குமரனே!  உனது 

மலர்ப்பாதங்களுக்கு   வணக்கம்.


                                               பாடல்--91.     

குமரா!   குழந்தைக்     குகனே!     குறிஞ்சிக்

                 கிழவா!      கிருத்திகை      வாசா!     கிரௌஞ்ச 

மமதை   வீழ்த்திய      வீரா!        விண்ணவர் 

                மனத்துயர்    நீக்கிட     மகேந்திரம்    வீழ்த்தியவா!

அமரர்  சேனைத்     தலைவா!    அழகா!

                அழகுடைத்   தேவாள்   அங்கணவா!   புனத்தின் 

விமலை   வள்ளியை     விரும்பி   வேட்டவா!  

                 வியன்ஞான     மலையமர்      வெற்றிவேல்      பெருமானே!


                                        பொருள் 


    என்றும்   இளமை  கொண்ட   குமரனே!  குழந்தை  வடிவில்  குருவாய் 

விளங்குபவனே!   மலைநாடெல்லாம்   தலைவனாக  நின்று   ஆள்பவனே!

கார்த்திகைப்  பெண்களாம்   விண்மீன்களால்    வளர்க்கப்பட்ட  காரணத்தால் 

கிருத்திகை  விண்மீனின்  நாளைத்   தன்   நாளாகக்  கொண்டவனே!

        ஆணவத்தாரகனையும்.  அவனது  மாயக்    கிரௌஞ்ச  மலையையும் 

அழித்து, மமதை   போக்கிய   வீரனே!  தேவர்களின் , "அரக்கர்களின்   அடிமை 

ஆகிவிட்டோமே"  என்ற   மனத்துயர்  நீங்கிட, சூரபன்மனின்   மகேந்திர 

நகரை அழித்து  உயர்ந்தவா!

        தேவர்களின்  படைகளுக்குத்   தலைமை   தாங்கிய  தேவ  சேனாபதியே!

அழகென்ற   சொல்லின்  இலக்கணமே!  அழகுமிகுந்த   தேவசேனாவை 

மணந்தவனே!  

வள்ளிமலைத்  தினைப்புனத்தில்   தோன்றிய   வள்ளிப்பிராட்டியை 

விரும்பித்   தேடி   அலைந்து  காதல்  மொழி  பேசியவா!  பெருமைமிகு 

ஞானமலையில்  அமர்ந்தவனே!  வெற்றிவேலாயுதப்    பெருமானே!

உனது  பொன்னார்   திருவடிகளைப்   போற்றுகின்றோம்.


                                        பாடல்--92.


மானே!        மயிலே!      மனமெலாம்       நிறைந்த 

                       மலைக்குற  மகளே!     என்றிரங்கி       ஒடியும்,

யானே       வருவேன்"    யானை        முகத்தோன்,

                     தானே       காட்டிய,       தகவால்     பாடியும்,

கோனே  மகிழ்ந்து  கொடுத்த     பரிசால்,

                  கோமகள்   குவியிதழ்   கூட்டிய     சிரிப்பும்,

தேனே!  தமிழே!       திகழ்சுவை   அமுதே!

                 தேர்ந்திசைப்    பண்களாய்க்   கொண்டமலைச்   செல்வனே!


                                        பொருள்  

          மானென்றும்  மயிலென்றும்     அழைத்துக்   கொஞ்சிடும் 

சொற்கள்  பேசிப்பின்னால்    ஓடி ,மனமெல்லாம்    நிறைந்த  மலைவாழ் 

குறப்பெண்ணே! என்னைப்பார்!  என்று கெஞ்சிட,  அவள்  ஏற்காத   நிலையில்,

      "தம்பி!   நான்வந்து   உன்காதலுக்கு   உதவுகிறேன்"  என்று வந்த   கணபதி,

யானை  உருவில்  வள்ளியின்முன்   வந்து பயம்  காட்ட,அஞ்சிய   அம்மை 

அண்ணல்  மார்பிலே  சாயப்  பிறந்த   மகிழ்வும்,

         தேவேந்திரன்   போர்வெற்றி  ஆற்றித்  தந்த   தேவசேனாபதியாம் 

முருகனுக்குத்   தன்மகளைப்   பரிசாக  நல்கிப் பரிசம்   போட்ட  காலை,

தேவசேனாவின்   முகத்திலே   சிரிப்பைத்    தோற்றுவித்த  பாங்கும்,

       தேன்போல்   இனிக்கும்   கருணை  கொண்டவரே! தமிழ்போல்  முச்சுவை 

கொண்டவரே! எல்லாச்சுவைகளும்  நிறைந்த   அமுதம்  போன்றவரே!

இருபக்கத்திலும்  பண்களாய் ,  அருட்பெண்களாய்ப்   பெற்று  விளங்கும் 

ஞானமலைச்  செல்வரே! வாழ்த்தினோம்;போற்றினோம்;  போற்றி.போற்றி.


                                          பாடல்--93


செல்வம்       மல்கும்        சீர்ஞான        மலையின் ,

                         செம்பொன்      செழுஞ்சுடரே!      செவ்வந்திச்      செம்பவளமே!

அல்லல்        அறுக்கும்       அருமருந்தே!      அண்ணலே!

                        அன்பில்       விளைந்த       ஆரமுதே!      அருமுத்தே!

மல்கும்       கண்ணீர்       மாற்றும்       மருந்தே!

                      மனத்துள்      அமர்ந்த       மாசிலாச்       சோதியே!

கல்லும்     கரையும்       கருணைக்     கடவுளே!

                     கல்லான்       போற்றினேன்,      கழலடி       அருளே.


                                         பொருள் 

      அருட்செல்வமும், பொருட்செல்வமும்  நிறைந்து   விளங்கும்  சீர்மை பெற்ற 

ஞான மலையின்கண்  வீற்றிருக்கும், செம்பொன்  போல்   ஒளிரும் 

 செழுமையான    ஒளிச்சுடரே!  செவ்வந்தி  மலர்போன்று  நறுமணம்  கொண்ட 

தூய்மையான   பவளமணி போல்  ஒளிர்பவரே!

         அடியவர்களின்   துன்பத்தை    அகற்றி,இன்பம்   விளைவிக்கும் 

மருந்தாக  நின்று  காப்பவரே!(பிறவி  நோய்    அகற்றும்  மருந்து) மூவர் 

போற்றும்  பரம்பொருளே!அன்பெனும்    பயிர்  கொண்ட மன  வயலிலே  

விளைகின்ற   அமுதமே!  ஆழ்மனக்கடலில்   அன்பும்,  ஞானமும்   சேர்ந்து 

விளையும்  உயர்ந்த  முத்து  போன்றவரே!

         துன்பச்    சாயலை   அடியோடு   நீக்கி, வழிகின்ற   கண்ணீரைத்  

துடைத்துவிட்டு, இன்பநிலைக்கு  மாற்றி  அருள்  சுரக்கும்  மருந்தானவரே!

ஆன்மாக்களின்  மனத்தாமரை   மலரில்  அமர்ந்து, அறியாமை,  அஞ்ஞானம் 

அகற்றி, அல்லல்  நீக்கும்  வழிகாட்டும்   ஒளி வடிவானவரே!

       சூரன் போன்ற   அரக்கனையும்  தன்வயப்படுத்தும்   தளிர்க்குணம் 

ஊமையைப்   பாடவைத்த  பாங்கு, சிற்றின்ப  வேட்கை  கொண்ட 

அருணகிரியையும்  மாற்றியமை    போன்ற  அருள்களினால்    கல்லையும் 

கனியவைக்கும்  கருணைக் கடவுளாக  விளங்குபவரே!  கல்வி,பண்பு,

ஒழுக்கம்  பக்தி  ஆகிய  எதுவும்   கல்லாத   நாயினேன்   உன்னைப் 

போற்றுகின்றேன்.  என்னையும்  ஏற்று,  அருள்புரிந்து   மலரடி   காட்டி,

அருள்  புரிய  வேண்டுகிறேன்.

 முருகா!  என்றிட  முழுவினை    தீரும்"


                                          பாடல்-94.


அருளார்ந்த        சிந்தை,எம்       ஆதிப்       பிரானை 

                                அன்பார்ந்த       மனத்துள்ளே       ஆல்போல்       வளர்த்தேன்;

தெருளார்ந்த   என்னுள்ளம்       தெளிவினைப்     பெற்றதுவே;

                              தெற்காளும்        தேவனுமே       தீண்டிடத்       தயங்கினான்;

இருளார்ந்த     கண்டத்                திறைவன       தினியமகன்,

                             இருளார்ந்த        நெஞ்சத்தை       எழிலாக       மாற்றினான்;

மருளார்ந்த   மாசினைப்          போக்கிடும்        மலையானே!

                           சுருளார்ந்த         செஞ்சடையான்   தான்வணங்கும்   சுவாமிநாதா.


                                          பொருள் 


          அருளெல்லாம்    நிறைந்து   விளங்கும்   எண்ணம்   கொண்ட   எம்முடைய 

மூலப்பொருளை, மூர்த்தியை,  அன்பும்,பக்தியும்  நிறைந்த   நாயினேன்   என் 

மனத்துள்ளே   நிலைத்துப் பரந்து   விளங்கும்   ஆலமரம்போல்  வித்திட்டு 

வளர்த்து வந்தேன்.

        அதனால்    மயக்கமும், அறியாமையும்  நிறைந்த   என்மனம்   தெளிவு 

பெற்றது; அத்வைத  சித்தாந்தத்தை   அணுகி  நின்றது; அவனோடு,நானும்,

என்னோடு  அவனும்  ஒன்றினோம்;  இந்நிலையில்  கூற்றுவன்  கூட  என்னைத் 

தீண்டிட  அஞ்சினான்.

        விடத்தைக்   கழுத்திலே  நிறுத்தி,"நீலகண்டன்"  என்ற     திருநாமம்  உற்ற 

சிவபிரானின்  இணயமகன்,  இருள்  குகையாகி   ஒளிபுகாத  எனது   

பாழுற்ற   நெஞ்சத்தை, அறிவும்,அன்பும், கொண்ட  எழில்  நெஞ்சமாக 

மாற்றினான்;

       ஆணவ  மயக்க  மலங்களால்   மாசு  அடைந்திருந்த   என்மனமாசுகளை 

நீக்கி, சுத்தசன்மார்க்க  நிலையைத்   தோற்றுவித்த   ஞான    மலைப் 

பண்டிதனே!  சுருளான  முடிகள்  சூழ்ந்த  செம்மையாகிய   சடையை 

உடைய  பரமேஸ்வரனும், பாதம்  தொட்டு வணங்கினான்;  பிரணவப்

பொருள்  வேண்டினான்; தந்தைக்கும்  குருவாகி  உபதேசித்த குருவே!

சுவாமிநாதனை !  போற்றி!போற்றி.

    தகப்பன்  சுவாமியே   சரணம்.


                                            பாடல்--95.


நாதனே!       நான்முகன்       நாவின்        வேதனே!

                         நாவின்         நல்லாள்       நவின்ற        போதனே !

ஆதவ           ஒளிபோல்         ஆணவச்        சேதனே !

                       ஆனந்த         ஆன்மாவின்     ஞான        கீதனே!

மோதக       முன்னவன்        முதிர்வால்,    பேதனே !

                        முதுமை,      இளமை,        முகிழ்த்த       வேடனே !

வேதனை    வாதனை       நீக்கிடும்,         மாதவ!

                        சீத          மதியானே!      செம்மலைச்       செஞ்சுடரே.


                                       பொருள் 


               மூவேழ்   உலகிற்கும்    தலைவனாய்க்    கடவுளாய்  விளங்குபவனே!

ஆணவமுற்ற   பிரம்மதேவனின்     தலையில்    குட்டி, ஸ்பர்ச   தீக்கை  அளித்து,

நாவிலும்  ஓங்காரம்  எழுதி,  உபதேசித்த    மறைவடிவானவனே  ! கலைமகள் 

கலங்கிய   காலத்தில், குருவாகித்    தான்   அமர்ந்து   பிரணவத்தை, 

மறைகளை   உபதேசித்த   ஞான  ஆசானே!

      ஆன்மாக்களின்   ஆணவ  மலங்களை   ஆதவன்   இருளை    அழிக்கும் 

ஒளிபோல  அகற்றி,நீக்கித்   தூய்மை   ஆக்குபவனே!ஆன்மாக்கள்   ஆனந்தம் 

அடைந்திட   ஞானகீதம்   பாடிப்பேசி,      அருளி   ஆனந்தம்   கொள்பவனே!

          கொழுக்கட்டை   விரும்பும்   கண நாதன்  ,"உலகையே  ஓர்நொடிக்குள் 

சுற்றி வருவதற்கு   ஏற்பத   தன்    தாய்தந்தை  ஆகிய  பார்வதி  

பரமேஸ்வரர்களைச்   சுற்றிவந்து,பெற்ற   கனியால்   பேதம் (வேறுபாடு)

அடைந்து  பழனி  மலையில்  தனியே    அமர்ந்தவனே ! அம்மலையில் 

அமர்ந்து, இளமைமிகுந்த   அரசனாகவும், முதுமை மிகுந்த  ஆண்டியாகவும்,

வேட்கை  நிறைந்த   வேடனாகவும்    காட்சி  தரும் கந்தவேளே!

       பிறப்பு   என்ற  வேதனையையும்,இறப்பு என்ற    வாதனையையும் 

நீக்கிச்,   சிவப்பேறு    என்னும் பாக்கியத்தை    அளித்து,  ஆன்மாகளுக்கு 

நல்லருள்  வழங்கும்   தவ  மா  முனியே! இரக்கம்,அன்பு, கருணை,

என்னும்  குளிர்ச்சி  கொண்ட  மனம்  கொண்டவனே!  ஞானமலையில் 

சீர்வழிகாட்டி  நிற்கும்  செழுமை   வாய்ந்த  ஒளிச்சுடரே! நின் 

மலர்ப்பாதங்களுக்கு   ஆயிரம்  கோடி  வணக்கங்கள்.

      பாசம்  நீக்கும்  பைந்தவ   முருகனே போற்றி.


                        பாடல்--96.


செஞ்சுடர்ச்        செம்பொறி       தோற்றிய       செல்வா!

                                செம்மை          தாங்காச்       செவ்வாய்த்       தலைவா!

அஞ்சியோர்     அடிபணியப்     பொய்கை      உதித்தவா!

                               அஞ்சுகக்        கார்த்திகை       அரவணை       மழலையே!

மஞ்சமாம்         மலர்துயில்      மகிழ்முகக்       குழந்தையே !

                              கஞ்சமலர்க்     கரத்தால்        இணைந்த       கந்தா!

அஞ்சும்             பணிந்திட        ஆறும்          கொண்டவா !

                             அஞ்சேல்!          என்றருள்        அருமலைப்      பண்டிதா.


                              பொருள் 


        முக்கண்ணன்  மூன்றாம்  கண்ணிலிருந்து   தோன்றிய  

 சுடர்ப்பொறியிலிருந்து   அவதரித்த   செல்வனே!   தோன்றிய   பொறியை

ஏற்க  வந்த   தீ நாக்குச்  செம்மை  வாயினைக்  கொண்ட   அக்கினியால் 

தங்கி  ஏற்கமுடியாமல் ஆனபொழுது,  உன்னடிமை  ஆனானே ! அவனுக்கும் 

நீயே  தலைவன்  ஆகிறாய்.(செம்மையும்,  வீரமும்  தாங்கிய    அங்காரகனாம் 

செவ்வாயின்  தலைவனே!) என்றும் பொருள்  கொள்ளலாம்.

         சிவ சைதன்யச்   செம்பொறியைத்  தாங்க முடியாது,  வாயுவும்,  

கங்கையும்   அஞ்சி நடுங்கிட   ஏற்றுத்     தாங்கிய சரவணப் பொய்கையில் 

உதித்தவா !  அழகிய   கார்த்திகை  விண்மீன்களாம்   பெண்களால்  

அரவணைத்து   வளர்க்கப்பட்ட  மழலையே!

             சரவணப்   பொய்கையில்  மலர்ந்த   தாமரை    மலர்களே  துயிலும் 

மஞ்சமாக  மாறிட, குயிலும்,  வண்டும்   தாலாட்டுப் பாடிட, மகிழ்ந்த 

முகத்த்தோடு துயிலுற்ற   தெய்வக்குழந்தையே! காணவந்த   சர்வேஸ்வரன் 

பார்வதி  தேவியிடம்     ஆறு  குழந்தைகளையும்   காண்பிக்க,  அம்மையோ 

அன்பொழுக  ஆறுகுழந்தைகளையும்   அன்போடு  அணைத்துக்கொள்ள 

ஆறுமுகங்களும்  ஒன்றாகி  ஓர் முகமாய்க்    கந்தனாய் மலர்ந்தவா!

         நமசிவாய    என்ற  ஐந்தெழுத்து  கொண்ட    நாயகன்  பணிந்தபொழுது 

சரவணபவ    என்னும்    ஆறெழுத்து  உயர்ந்தோங்கி   உலகெலாம் 

கொண்ட  சுவாமிநாதனாக  மிளிர்ந்தது. அவ்வாறுமுகமே   ஞானமலையில்,

ஞானபண்டிதனாக     அமர்ந்து,அடியவர்களை    அஞ்சேல்!  யாம்  இருக்க 

பயம் ஏன் ?  என்று   காத்துவருகிறான்.

  ஞானபண்டித  ஸ்வாமி    நமோ  நம "


                                          பாடல்--97.


                            திருப்பரங்குன்றம் 

பண்ணவள்     பெண்ணவள்      கண்ணவள்      கரம்தொட்டு,

                       மண்ணவள்        மாதரசி         மகிழ்கொண்ட        மாமலை;

விண்ணவன்   வீரத்தின்         விளைநிலப்           பரிசானாள் 

                            வேழத்தாள்     விரும்பும்      பரங்குன்ற         மலையேயாம்.

                                                         திருச்செந்தூர் 

எந்நாளும்       இறுமாப்பு;      இயல்மீறிய           சூரரக்கன் 

                   அந்நாளே        அழிந்திட       அன்னைவேல்         தொட்டவூர்,

பொன்னாளாய்ப்    புதுமையாய்ப்    போர்வெற்றி     பெற்றவூர்,

                  செவ்வேள்      செற்றவூர்;           செந்தூர்       செம்மலையே.


                                              பொருள் 


      97,98,99  ஆகிய   பாடல்கள்    ஆறுபடை   வீட்டோடு  ஞானமலையை  

இணைத்துப்  பாடப்பட்டுள்ளது.

       பண்ணும்   அவளே,   உயர்குலப் பெண்ணும்   அவளே, விண்ணுலகக் கண்ணும்   அவளே,என,அவளது    அருட்கரத்தை  வணங்கி, மண்ணிலே 

வந்த  மாதர்குல  மாணிக்கம்  அவளே  எனப்போற்றும்  மகிழ்வோடு  அவள் 

புகழ்  பாடும்   மாமலை திருப்பரங்குன்றம்.

    விண்ணக  வேந்தன்   தேவேந்திரன்   தேவாசுரப்   போரிலே   வெற்றி 

தேடித்தந்த வீர விளைநிலமாம்  வேலவனுக்குப்   பரிசாகத்  தன்மகள் 

தேவயானையைக்  கொடுக்கஎண்ணி மனமும் செய்வித்தான்;அந்த 

தேவயானை  விரும்பிய   மலையான    திருப்பரங்குன்றம்  போன்றதே  இந்த 

ஞானமலை   என இதனையும்    விரும்புகிறாள்.

              இறுமாப்பு,ஆணவம்,வரம்பு  மீறிய  செயல்கள்,  வேதநெறி மனம் 

கொள்ளாமை   போன்றவற்றைக் கொண்டவன்,தேவர்களைத்  துன்புறுத்திச்    

சிறைப்பிடித்ததும் அவர்களை   விடுவிக்க  முருகப்பெருமான்   போர் 

தொடுக்க  எண்ணிச்  செயலாற்றிய   ஊர்;அன்னை     அளித்த   வேலைத் 

தொட்டுப்  போர்புரிந்து வெற்றியைப்  பொன்னாகப்   புதுமையாய் 

வெற்றி அடைய வைத்த  ஊர்;செவ்வேள்   போராற்றிச்   செங்குருதி 

பரந்த  நிலம்;அவ்வூர்  திருச்செந்தூர்.  அவ்வூருக்கு   நிகராக   முருகன் 

புகழ்  பாடும்  பெரிய  மலை   ஞானமலை   ஆகும்.


                                            பாடல்-98.

                                      பழனி       

மலையேறி       நான்நிற்பேன்     மற்றங்கே       வருகவே;

                      மாங்கனி       மாதேவன்       மனமுறு       சினம்தானே;

கலைக்கோல்     கோவணாண்டி;       கண்குறும்பு   இளவேடன் ;

                     கால்நடுங்கு    குடுகிழவன் ;     வேல்பழனி       நிகர்மலையே.

                                    சுவாமிமலை 

நிலைஞான       நித்தியமாய்        நீள்பிரமன்       சிறைவது,

                       நிர்மலத்       தந்தைக்கு       உபதேச         நீறளித்துத் 

தலையான       சுவாமிநாதன்        தன்கருணைப்        பேறாலே 

தத்துவ        சுவாமிமலை         தனக்குநிகர்    இம்மலையே.


                                       பொருள் 


      அண்ணனுக்கே   மாங்கனி;  எனக்கில்லை; தந்தை,தாய்  உறவுகளை 

மறந்தேன்;  சினம்  கொண்டேன்;தனிமலையில்   நான்  நிற்பேன்,  என்னைக்  

காண  எல்லோரும்   அங்கு வாருங்கள்"என்றுரைத்த  முருகன்  நின்ற  மலை;

      கையிலே    அழகுமிகுந்த   தண்டம்  ஏந்திய நிலை;கோவணம்  மட்டுமே 

தரித்த  ஆண்டிக்கோலம்;    மாறாக  கண்ணெல்லாம்   குறும்பு  நிறைந்தும்,

இளமை   ததும்பும்  பார்வையும்  கொண்ட   வேடனாகக்காட்சி; வள்ளியாகிய 

அன்புடைக்  காதலிக்காக   நடுங்குகின்ற  கால், வெண் தாடி; குடு குடு 

கிழவ   உருவம்;வேலவனின்    அழகு காணக்   கண்  ஆயிரம் போதா.அந்த 

முருகனைக்   காண  ஞானமலை   செல்லலாம்; பழனிக்கு   நிகரானது   

ஞானமலையாகும்.

               அழியாத  தன்மை;  நித்தியமாய்   விளங்கும்  உயர்வு; ஆகிய 

பெருமை  கொண்ட   வேதத்தை,அதன்  முதலாகிய    பிரணவத்தை  அறியாத 

பிரமன்  ஆணவத்தை  அடக்க   ஆறுமுகன்   அவனைச்சிறையில்   இட்டார்;

பிரமனை    விடுவிக்க  வேண்டிய  தந்தையாகிய    சிவபெருமானுக்கும் 

பிராணவப்பொருள் தெரியாது,வேண்ட ,அவர்  தோளிலே   அமர்ந்து   அவர் 

காதில்  பிரணவோபதேசம்   புரிந்தார்   முருகன். பரம்பொருளுக்கே 

ஞான  குருவான  முருகன்   சுவாமி நாதன்"  என  அழைக்கப்பட்டார்;

தத்துவ  குருவாம்   சுவாமிநாதன்   வீற்றிருக்கும் மலை  போன்றது 

ஞானமலையும்  ஆகும்.ஞானபண்டிதசுவாமி  வீற்றிருக்கும்    மலை  இது.


                                                        பாடல் --99.

                                         திருத்தணிகை 


மலைநாட்டுக்       குறவள்ளி       மனத்தாலே      போற்றிநிற்க,

                          மலைவேடன்       தானாகி,      மனத்தோடு       மனமொன்றி 

மலைவேழத்        துணையாலே        மகிழ்ந்தேற்ற       மலர்வள்ளி 

                       மணம்கண்ட       மணித்தணிகை       அணியாகும்       நனிமலை ;

                                            பழமுதிர்சோலை 

அலைமேகக்       குளிர்வோடு       அருவண்டு       சுழன்றாட,

                     அளவில்லாப்       பெருமரங்கள்     அற்புதமாம்       நற்கனிகள்,

அலைமோதும்       அழிதுயரை       நீக்கியருள்       ஆறுமுகன் 

                     அறஞானப்       பழமுதிரும்      அஞ்சோலை   நம்சுடரே .


                                       பொருள் 


  மலைநாட்டுக்  குறவள்ளியாக   அவதரித்த   மால்மகள், மனத்தாலே 

குமரனையே   நினைந்தபடி   வாழ, தக்க   தருணத்தில் தானே  ஒரு மலை 

வேடனாகி  வள்ளிமலை  சென்று,தினைப்புனம்  காவல் காக்கும் வள்ளி 

போகும்   இடமெல்லாம்  தானும் போகி,  மனக்காதலை  எடுத்துரைத்த   

பொழுது, அவள்  உடன்படாத  நிலையில்,  அண்ணன்  யானைமுகன் 

உதவி  புரிய  அஞ்சிய  அவளோடு  மனம்  ஒன்றி   மகிழ்ந்து, மணம் 

புரிந்துகொண்ட   திருத்தணிகை  மலை   நமது    அழகு மிகுந்த   ஞான 

மலைக்கு  அணியாகும்;  ஒப்பாகும்; 

               வானிலே   அலை அலையாய்க்   குளிர்மேகங்கள்;குளிர்ச்சியில் 

வண்டுகளின்  ரீங்காரங்கள்; வளர்ந்தோங்கிய     நல்மரங்கள்; மரமெல்லாம் 

அற்புதக்கனிகள்; மலையில்   அமர்ந்துள்ள    ஆறுமுகக்  கடவுள்,

அடியவர்களின்       மாளாத   பெருந்துயரைப்   போக்கி  அருள்பவன்;

அறமும்,  ஞானமும்   சிறந்தோங்கும்   பழமுதிர்சோலைக்கு   நிகராக 

நமது சுடர்மிகுந்த   ஞானமலை  திகழ்கிறது.


                                        பாடல்--100.


சுடராறு       சுவையாறு       சுகமாறு       சுனையாறு 

                சொல்லாறு       எழுத்தாறு       பொருளாறு       புதிதாறு 

தடமாறு       தலையாறு       திடலாறு       முடியாறு 

             மடலாறு       மணியாறு       மதியாறு       முகமாறு 

இடமாறு       குடமாறு       கடலாறு       வடமாறு 

             இலையாறு       மலராறு       கலையாறு       கனியாறு 

உடலாறு       நடமாறு       உயர்வாறு       உணவாறு 

             ஓராறு       ஈராறு      உடையோனே!      மலையருளே.


                                        பொருள் 

           ஆறுமுகனின்  பெருமைகளைப்  பட்டியலிட   இப்பாடலில்  "ஆறு"

என்ற  எண்ணிக்கைச் சொல்  பயன்படுத்தப்  படுகிறது.

             ஆறு  அதனைப்  பட்டியலிட்டால்  அதுவே   ஒரு  தனி  நூலாகும்.

குறிப்பால்  உணர்த்தப்படுகிறது.

      முருகனுக்கு,    ஒளிமிகுந்த   சுடர் ,  பிடித்தமான   சுவைகள், 

அடியவர்களுக்கு  அருள்கின்ற  சுகம்,   குன்றங்களிலே  அமைந்த சுனைகள்,

செவ்வாயில்  பழகும் சொல்,  குறிக்கும்  எழுத்து, சொல்லும்.எழுத்தும்   தரும் 

பொருள், புதுமை,    ஆனபலவும்   ஆறே.

        கால்பதித்த   தடம், தலைகள், போர் ஆற்றிய திடல்கள், கிரீடம்,

எழுதிய  மடல்,மணிகள்,நிலவுகள்,முகங்கள்,  ஆறு  உடையவனே!

     சிறப்பாக  அமர்ந்த  இடங்கள்   ஆறு;பூஜைக்கும்பங்கள்   ஆறு; அமர்ந்து 

ஆட்சி புரியும்  கடற்கரை ,    கழுத்து  வடங்கள்,   பூஜிக்கும்  இலைகள்,மலர்கள்,

அழகூட்டும்  கலைகள்,  நிவேதனைக்  கனிகள்   ஆகியன  ஆறு  கொண்டவனே!

         உடல்கள், ஆடும்   நடனம்,பெறற்கரிய  பெருமைகள்,நிவேதன உணவுகள்,

கருணைமுகங்கள்,  அன்புக்கரங்கள்   ஆறு   உடைய  ஞானமலை  முருகா!

வணங்குவோருக்கு   நலங்கள்   நாளும்  அளித்திட  வேண்டுகிறோம்.

     "ஆறுதலைத்     தரும்   ஆறுதலை"


                                              பாடல்--101,


நன்மை     தந்தருள்         நாயகன்          வாழ்க.

               நால்வேத       நற்றமிழ்       நாளும்    வாழ்க.

கன்னிவள்ளி       கார்வேழக்       கருணை       வாழ்க.

             கரவேல்,        இளமயில்,      சேவலும்      வாழ்க.

பன்னிரு       கரமும் ,   படையும்       வாழ்க.

            பழந்தமிழ்       நாவும்,     பண்பும்        வாழ்க.

சென்னியும்,      செவ்விதழ்ச்       செம்மையும்       வாழ்க.

           சென்னிமலை,     சொர்ணமலை    வாழ்கஞான      மலையே .


                                        பொருள் 


      உலக  உயிர்களுக்கு   என்றும்  நன்மையையே  தந்தருளும்  தலைவனாம் 

முருகன்  வாழ்க.

     நான்குமறைகளும்,பன்னிரு திருமுறைகளும், நிலைத்து    வாழ்க.

இளமையழகு   வள்ளிப்பிராட்டியும், கருணை மிகுந்த  தெய்வயானை 

அம்மையும்  வாழ்க.

  பொற்கரத்திலே  தாங்கிய  வேலும், ஊர்தியான   மயிலும், கொடியான 

சேவலும்  வாழ்க.

  பன்னிரண்டு  கரங்களும்,அக்கரங்கள்     தாங்கிய   படைகளும்   வாழ்க.

   தொன்மை  வாய்ந்த  தமிழ்   மொழி  அருளும்  செந்நா     வாழ்க.

 பண்பு  மிக்க  சொல்லாற்றல்   வாழ்க.

ஆறு  தலைகளும் வாழ்க.   செவ்வாய்,  செவ்விதழ்   பயிலும்  சீரிய  

அருளாக்கம்    வாழ்க.

சென்னிமலை   போலவும்,   சொர்ணமலை    போலவும்  விளங்கும்  ஞான 

மலை   வாழ்க,   வாழ்கவே.


                                               திருக்கடைக்காப்பு 


அணியாகும்       ஞானமலை       அலங்கார       நூலாதனில்,

                      அணியாக       வகுத்துள்ள,      அறவழிக்       கருத்துக்களில் 

மணியாக       ஒருகருத்தை,      ஓர்பாடலை       மனமுருகி,

                  மாமுருகன்       மாப்பெயரை      ஒருமுறை      உரைத்தாலும்,

பிணிபோகும்;      பகைநீங்கும்;      பழியகலும் ;      பலர்போற்றும்,

                 பெருமைகள்       வந்துசேரும்;      பெரும்பேறு     சித்திக்கும்;

கணித்தபடிக்       கடிமணங்கள்       காலத்தில்       நடந்தேறும்;

              கதிர்ஞான       பண்டிதனின்       கருணையைக்     காண்பீரே.


                                               பொருள் 


       அழகுத்தமிழ்க்     கவிதையிலே   உருவான   "ஞான  மலை  அலங்காரம்"

என்னும் இந்த   நூலின்  முறையாக  வகுத்துள்ள   அறவழி,  வழிபாடு, முருகன் 

பெருமை,   போன்ற  கருத்துக்களில்    ஒரு  கருத்தை,  ஒரு  பாடலை,

மனமுருகிக்   கூறினாலும்,  பாடினாலும்,  பாடலில்  வந்துள்ள    முருகன் 

பெயரை  மனதார    ஒருமுறை  கூறினாலும்,பக்தியோடு   கூறுவோரின் 

நோய்  அகலும்;  பகைமைக்   குணங்கள்  நீங்கி  அன்பு  வளரும்;

குற்றங்கள்  நீங்கும்;பலரும்  போற்றும்   உன்னத  நிலைக்கு    ஆளாவோம்;

இறைவனின்   அருள்  கூடும்;   சிவப்பேறு    கிட்டும்;  சந்ததியினருக்குத் 

திருமணங்கள்  காலத்தில்  நடந்தேறும்.   ஒளிமிகுந்த    ஞான  மலையில் 

வீற்றிருக்கும்  முருகனாம்   ஞான  பண்டிதக்கடவுளைப்   போற்றும் 

இந்நூலைப்  படித்துப்  போற்றி  இறையருள்  பெறுவீர்! 

   முருகா  போற்றி.  கந்தா  போற்றி.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக