வியாழன், 4 ஜூன், 2020



                                ஐந்தாம்   நாள்  

              4. 38.  பானுகோபன்  அழிதல் 



1.    துன்பமதில்      ஒன்றிட்ட    தூயதந்தை      தாள்வணங்கி,
       என்சொல்       இதனைக்     கேள்.

2.    பானுகோபன்,     வன்போர்       தவிர்த்திட்டுச்     சண்முகன் 
       வான்புகழ்         போற்றின்     வரம்.

3.    சினமுறு         சூரனோ      அஞ்சுமொழி       அற்ப!
       தனிவெல்வேன்;     துணை காண்    பகை.

4.    மாற்றும்    விதிதான்;    மனத்தகு        ஆணவம் 
       கூற்றாகும்;     கொள்வேன்       குலம். 

5.    சென்றிடுவேன்;     வென்றிடுவேன்;      பொன்மனத்     துன்புவேண்டா.
       கன்றுபோல்         ஆசிபெற்றான்    கோபு.

6.    கோமகன்       கண்டான்,     களத்தில்     வீரவாகு.
       பூமகள்        நொந்திடப்    போர்.

7.    வரைபுக்கு,       வான்புக்கு,        மேகத்     திரையும்,
       தரையும்          புகுந்தன     கோல்.

8.    காலொப்ப;      கூற்றொப்ப;         குன்றத்தைக்      கொன்றதொரு 
       வேளொப்ப      வீரிருவர்     நாண்.

9.    கரமது        வீழத்       தடமார்பு     தாங்கிச் 
       சிரமும்       இழந்துமாண்டான்     சேய் .

10.  வீரவாகு     வேலன்      விரைந்துசென்று     வணங்கினான்;
       சூரன்        புலம்பி       அழு.


                                   பொருள்

1.     புதல்வர்களும்,  அமைச்சனும், போரில்   மாண்டுபோன   நிகழ்வால்
துன்பத்துயரில்   நிலை குலைந்துபோன    தந்தையை  வணங்கிய   பானுகோபன்   தந்தையே!   சினமில்லாமல்  நான்  சொல்வதைக்   கேளுங்கள்,  எனப்பணிவோடு  சொல்லத்   தொடங்கினான்.

2.   ஒரு   தூதன்   நமது   படைகளையெல்லாம்   அழித்துவிட்டுச்  சென்றான்;
முன்னரே   தாரக  மாமன்னனையும்,  கிரௌஞ்ச  மலையையும்  முருகனால்
இழந்துள்ளோம்;  என்னால்   ஏழுகடல்  தாண்டி   வீசப்பட்ட   வீரவாகுவும்
அவனைச்   சார்ந்தோரையும்   முருகன்   வேல்   காப்பாற்றியிருக்கிறது;
நேற்றைய   போரில்   தாங்களே   தனியனாயத்  தலைகுனிந்து  ஒடி வந்துள்ளீர்கள்;   தம்பிமார்களும்,  அமைச்சரும்  மாண்டுபோய்   இருக்கிறார்கள்;  இவையெல்லாம்   ஒரு   தன்மனிதனால்   ஆற்றிட
இயலுமோ?  சிவனின்   மகனாகிய   முருகனே  இவ்வரிய   செயல்களை
ஆற்றியுள்ளார்.  ஆதலின்   இந்தப்   போரை   நிறுத்திவிட்டு,  விண்ணவர்களை  விடுதலை   செய்துவிட்டு,  அந்த  ஆறுமுகக்  கடவுளைப்
பணிந்து போற்றுவோம்; அவர்   நமக்கு   அருள்   காட்டுவார்;  இன்றைய   நிலையில்   இதுவே   நாம்    செய்யும்   செயலாக   அமையட்டும்,  என்று  பணிவோடு   பானுகோபன்   சொன்னான்.

3,   பானுகோபன்   சொன்ன     சொற்களைக் கேட்ட   சூரபன்மன்   மிகுந்த  சினமுற்றான், மாற்றானைப்   புகழ்ந்து  தம்மைத்   தாழ்த்திக் கொள்ளும்
மகனின்   மன  நிலையை   அவன்  விரும்பவில்லை, அதனால். மாற்றானுக்கு
அஞ்சி   நடுங்கும்   கோழையே!  ஓடிவிடு!  என்முன்   நில்லாதே! பெருவரங்களைக்   கொண்ட   நான்   தனியே  நின்று  அந்த   முருகனை   வென்றிடுவேன்,  அப்பகைவனோடு    உறவாடி   அவன் புகழ்   பாடி   நீ உன்னை  வளர்த்துக்கொள்!  போ! என்று  அவனை  விரதிட்டினான்.

4,    தந்தையை   மீண்டும்   வணங்கிய   பானுகோபன்   மனத்திலே  தோன்றிய  எண்ணத்தால், ( விதி   வலியது; அது   தந்தையை  விடாது;  ஆணவம்  வேறு  ஆட்டிப்படைக்கும்; முடிவு   பிறப்பிலேயே முடியும்;தந்தை  மட்டும்   அதற்கு  விலக்காக   மாட்டாரே !"என்ற எண்ணம்) தந்தையே!  என்னை   மன்னித்து விடுங்கள், உங்களைக்   காட்டிலும்  உலகில்   யார்   உயர்ந்தவர்   ஆவார்கள்,   குலப்பெருமை   காப்பேன்" என்று கூறினான்.



5,   நான் இப்பொழுதே   களம்    செல்கிறேன்; வெற்றியுடன்   வருவேன்; விடை கொடுங்கள்" எனப்பணிந்து   வேண்டினான், உங்களது   மனத்திலே   துன்பம் தோன்றக்கூடாது; எனக்கு    ஆசி   அளியுங்கள்; என்று  பானுகோபன்  தந்தை
சூரனை   வணங்கி   விடை பெற்றான்.

6,    ஆரவாரத்துடன்    அசுரப்படை     சூழ்ந்துவரப்     போர்க்களத்துள்   நுழைந்த  பானுகோபனைக்   கண்டார்   வீரவாகு. தன்னெதிர்   நிற்கும்   வீரரைக்  கண்டான்   பானு.   அங்கே   விற்போரும்   மற்போரும்   வெடித்தன;
உலகம்   நடுங்கியது;  கடல்கள்   கொந்தளித்தன; எரிமலை    சீறியது; இருவரும்   ஒருவருக்கொருவர்     சளைக்காமல்  போர்  புரிந்தனர்.

7,    இருவரும்   ஏவிய   பாணங்கள்       மலைகளில்   சென்று  மோதி, மலைகளைப் பிளந்தன;  மேகத்தூடே     சென்று   மழையைக் கொட்ட   வைத்தன;  கடலிலே   பாய்ந்து   கடலைக்    கொந்தளிக்க    வைத்தன;
விண்ணுலகம்,  மண்ணுலகம்   பாதாள   உலகம், என   மூவேழ்   உலகெங்கும்
பரந்து    பாய்ந்து   அழித்தன; கடுமையாகப்   போர்  புரிந்தனர்,

8,   அவர்கள்   வில்லிலே   ஏற்றி விடுத்த    நாண்களெல்லாம்    சூறைக்காற்று போல   விரைவுடன்   பாய்ந்தன; கூற்றுவன்   போல்   அவ்வம்புகள்   பலரின்
உயிரை   ஒரே   நேரத்தில்   எடுத்தன; தாரகனின்    கிரௌஞ்ச   மலையை அழித்துப்   பொடியாக்கிய   குமரனின்   வேலைப்போல   போர்க்களத்தையே    அழித்தப்பொடியாக்கின;கண்டவர்கள்   வியக்கும்  அளவு   அவ்விருவர் அயராது   போராற்றினர்,

9,     வில்லிழந்தனர்;  தேரிழந்தனர்;  மற்போர்   புரிந்தனர்; இருவரும்   உடைவாள் எடுத்துப்   போரிட்டனர்; வீரவாகுவின்   தோளிலே  வாளால்  வெட்டினான்   பானுகோபன்; பானுகோபன்   வலக்கரத்தை  வெட்டி   வீழ்த்தினார்   வாகு. இடக்கரத்தில்   வாளெடுத்துப்   போராற்றினான்   கோபன்.   அவனது   பருத்த   மார்பிலே   கதையால்   அடித்த   வாகு அவனது
தலையைக்  கொய்தார் . மாயமந்திரத்தை  அவன் தொடும் முன்னரே  அவன் தலை   பூமியில்   விழுந்தது;

10,    பானுகோபனை    வீழ்த்திய   வீரவாகு   விரைவாகச்   சென்று   முருகன்   காலடியில்   வீழ்ந்து   வணங்கினார், பானுகோபனை   வீழ்த்தாமல்   முருகனைத்    தரிசிக்க மாட்டேன்"  என்ற  சபதத்தை  நிறைவேற்ற   முருகன்
அருளிய   பல்வேறு   அருளை   மனதில்   நினைத்தவாறு   முருகனைப்   போற்றினார்;   முருகனும்   தம்பியைப்  பாராட்டி   அருள் புரிந்தார்,
மகன்   வீழ்ந்தான்   என்ற செய்தியைக்   கேட்டுச்   சூரன்  புலம்பி   அழுதான்;
தேவர்களும், திருமாலும்   உன்னைக்   கண்டாலே   நடுங்குவார்கள்!  நீ போய்
விட்டாயே!  வீரர்களே!   இந்த   உடலைப்   பத்திரப்படுத்தி   வையுங்கள்!
வெற்றி  பெற்றபின்   எனது   ஆணையைக்   கேட்டு,  நான்முகன்  கூற்றுவன் எல்லோரும்   ஓடிவந்து   என் மகனுக்கு   உயிர்   தருவார்கள், என்று   பலவாறு
கூறிப்   புலம்பி   அழுதான், பதுமகோமளை   ஓடிவந்து   மகனே!  மகனே! என்று   மார்பில்   அடித்துக் கொண்டு   அழுதாள்,


                                                         விளக்கம்

1,   ஒன்றிட்ட                               =   இணைந்து  கலங்கிய
2,   வரம்                                        =   நன்மை  தரும்.
3,   அஞ்சுமொழி                       =    பயந்து உளறும்    மொழி
4,   குலம்                                      =    குலப்பெருமை   காக்கப் போருக்குச்செல்லல்
5,   ஆசி                                         =    வாழ்த்து
6,   பூமகள்                                  =     மண்ணுலகு
7,   கோல்                                     =     சூலம்,அம்பு,கதை   போன்றன
8,   வீரிருவர்                               =     வீரவாகு,  பானுகோபன்
9,   சேய்                                       =     சூரன் மகன்
10,  வெஞ்சபதம்                      =    பானுகோபனை  வென்ற பிறகே முருகனைத்
                                                              தரிசிப்பேன்   என்ற   சபதம்

                                                   இலக்கணம்
வான்புகழ் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உவமைத்தொகை
பூமகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உருவகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக