நாலாம் நாட்போர்
4. 37. தரும கோபன் அழித்தல்
1. அமைச்சன் தருமகோபன் ஆண்டகை தேற்றி,
உமைபதி சீர்வரம் உள் .
2. அடியனேன் சென்றே அமரரை வீழ்த்தி,
முடிச்சூரன் வென்றியும் நாட்டு.
3. புண்டரீகப் பேர்யானை மேலேறிப் பண்ணுற்ற
விண்தலைவன் போலமர்ந்தான் கோபு.
4. கங்குல் பகல்மாலை பொங்கு கடலன்ன,
சங்கொலி கொட்டரக்கர் ஆர்த்து.
5. கோடுநான்கு குத்திடக் கால்நான்கு எற்றிட
நீடுகை நீக்கும் கரி.
6. ஆர்த்தவில் வீரவாகு கார்யானை சோர்வடையச்
சூரக்கோபன் போராற்றும் வில்.
7. அழித்தனை மாபுரி; ஆற்றலால் சூரன்
பழித்தனை போர்த்திறம் பார்.
8. சொற்றிறம் பற்றாது, விற்றிறம் பற்றுவேன்;
கற்றபோர் காட்டிடுக நீ.
9. கதையால் கரத்தால் கவிழ்ந்தான் கசடன்;
உதையால் உயிரவிட்டான் கோபு.
10. அசைவுற்ற புண்டரீகம் ஆன்றசொல் கூறி,
வசையுற்ற வாழ்வுநீங்கி வாழ்.
பொருள்
1. போரிலே மாண்டுபோன மகன்களையும் மற்றவரையும் நினைந்து
வருந்திக் கொண்டிருந்த சூரனைக் காண வந்த அமைச்சன் தருமகோபான் மாமன்ன! ஏன் கலங்குகிறீர்கள்? எம்பெருமான் கொடுத்த வரத்தால் நீண்ட ஆயுளும், அழியா யாக்கையும், பெற்று விளங்கும் தங்கள் கலக்கம் தேவையில்லாதது;மூவேழ் உலகமும் உங்கள் காலடிக் கீழ் அல்லவா உள்ளது. என்று தேற்றினான்.
2. மன்னா! இன்று நானே போருக்குப் புறப்படுகிறேன்; தேவைப்பதர்
களை வீழ்த்தி தங்களுக்கு வெற்றி தேடித் தருவேன்; எனக்கு விடை
தாருங்கள். என்றதும் மன்னன் ஆசி வழங்கப் புறப்பட்டான்.
3. "புண்டரீகம்" என்ற தனது யானையை அழைத்துவரச் சொல்லி, அதன் மீது அமர்ந்தபடி ஏனைய அமைச்சர்களும், படைவீரர்களும் புடைசூழ விண்ணவர் தலைவன் போல் களம் நோக்கிச்சென்றான் தருமகோபன்.
4. நான்காம் நாள் மாலைப் பொழுது தருமகோபன் படை கடல்போல் சங்கொலி எழுப்பிக் கொண்டு ஆரவாரத்துடன் போர்க்களத்தை அடைந்தது.
5. களத்தில் இறங்கிய புண்டரீக யானை பூதப் படையைச் சின்னாபின்னமாக்கியது. நான்கு வளைந்த தந்தங்களால் பலரைக் குத்தியது; சிலரைக் காலால் மிதித்தது;துதிக்கையால் பலரைத் தூக்கி எறி ந்தது; பலரது உயிரை நீக்கி அழித்தது.
6. பூதப்படை தருமகோபனுக்கும், அவனது யானைக்கும் அஞ்சி அங்குமிங்கும் ஓடித் தடுமாறும் நேரத்தில் வில்லொலி எழுப்பியவாறே
வீரவாகு வந்தார். அவரது அம்புகள் தாக்கியதில் சோர்வடைந்தது யானை; அது கண்ட தருமகோபன் சூரனின் புகழ் காக்கப் போர்
ஆற்ற வந்தான்.
7. தன்முன் வந்த வீரவாகுவை நோக்கிக் கூறினான்" எங்கள் மாநகர்
மகேந்திரபுரியை அழித்தவனே! ஆற்றல் மிக்குற்று எம் மன்னன் சூரனை இகழ்ந்தவனே! உன்னை அழிக்க நான் வந்துள்ளேன்; வா! என்னோடு போர் புரிந்து வெற்றி பெறு ! பார்க்கலாம்! உன் வீரம்" என்றான்.
8. அமைச்சரே! வீண் சொற்கள் பயனற்றவை;எனது வில்லாற்றலை
அறிந்து போராற்று ங்கள்..வெற்றி பெறும் அளவு கற்ற வித்தைகளை
வெளிக் கொணருங்கள் " என்று பேசியபடியே வில்லை வளைத்தார் .
9. வீரவாகுவை ஒரு கதையைக் கொண்டு தாக்க முற்பட்ட தருமகோபனின் கரங்களைப் பற்றியவாறு மற்றொரு கரத்தால் கதையை
எடுத்து மார்பில் அடித்தான்.கீழே விழுந்த கோபனைக் காலால் ஒரு
உதை விட்டான்;அமைச்சன் உயிரை விட்டான்.
10. கீழே விழுந்திருந்த யானை எழுந்தது; வீரவாகுவை வணங்கியது;
வீரரே! நான் எட்டுத் திசைகளையும் காக்கும் திசைக்காவல் யானை நான். இவ்வரக்கன் என்னை அடிமைப்படுத்தி என்னை அவனது ஊர்தியாகப் பயன்படுத்தி வந்தான்; அவன் சொல்லும் பணிகளை
எல்லாம் நான் செய்து வந்தேன்; இன்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. உங்களால் மட்டுமே இவனை வெல்லமுடிந்தது. வாழ்க நீவிர். உங்களுக்கே வெற்றி; நான் எனது திசைக்குச் செல்கிறேன்" என்று கூறி விட்டுச் சென்றது.
விளக்கம்
1. ஆண்டகை =சூரபன்மன்
2. அடியனேன் .........................................= தருமகோபன்
3. கோபு = தருமகோபன்
4. பகல் மாலை = நாலாம் நாள் மாலை
5. நீடுகை = தும்பிக்கை
6. சூரக்கோபன் = சூரனின் அமைச்சன்
7. மாபுரி = மகேந்திரபுரி
8. பற்றுவேன் = வீரவாகுவாகிய நான் பற்றுவேன்
9. உதையால் = காலால் விடுத்த உதை
10..ஆன்ற சொல் = வரலாறு
இலக்கணம்
1. உமைபதி .............................................ஆறாம் வேற்றுமைத் தொகை
2. நீடுகை வினைத்தொகை
3. மாபுரி உரிச்சொற்றொடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக