திங்கள், 15 ஜூன், 2020



          4.40.  ஏழு,எட்டு, ஒன்பது, பத்தாம் நாள் போர் 

                                    சூரபன்மன்   போர் 


1.    ஐயனை     வீழ்த்திடவே       ஆலகாலப்       படையோடு,
       வெய்யவன்     முன்னின்றான்    போர்.

2.    ஆர்த்துவரும்     சூரனின்       போர்ச்செயல்கள்      நீர்த்துவிட,
       மூர்த்தியவன்     நேர்நின்றான்   தேர்.

3.    பாய்ந்தவாகு     தேரில்;    பறித்தனன்       வில்லையே ;
       காய்ந்தவன்       தூக்கி    எறி.

4.    கைவிசை       கால்விசை     தேர்விசை     நாடிய 
       செவ்விசைச்    செவ்வேள்    விசை.

5.    சூலம்,      கணிச்சி,நேமி,      வச்சிரம்     சூர்ப்படை 
       நாலும்      அழித்தது     வேல்.

6.    அண்டகோள்       வாயில்        அடைத்து,    விழிச்சுடரால் 
       நுண்டுவெந்த      நூறுபடை      மாள் .

7.    மாயையால்       மந்த்ரகூட     சீதமலை    மீளுயிர்கள் 
       காய்த்த         கடவுட்      படை.

8.    ஞாலத்தேர்      காலன்      போலப்       படைகளையும் 
       சூலவேல்         மீட்டதம்மா     மேல்.

9.    ஊர்திமயில்      கார்ப்பறவை          சேருலகம்     சென்று,போர் 
       தேர்ந்தகுகன்     தீட்டினான்     சூர்.

10.   காற்றாய்க்       கடலாய்        மலையாய்,       மழையாகி,
        மாற்றான்       வழியாலே    மாள்.


                                                     பொருள்

1.    முருகனாம்     பரம்பொருளை    வென்றிடும்  முயற்சியோடு  சூரபதுமன்
பேரண்டங்களில்   இருந்து   திரண்டுவந்த    பெரும்படையுடன்   தானே    முன்   நின்று    போர் புரிய   வந்தான்.

2.   ஆரவாரக்   கூச்சலிட்டபடி   உலகையே   நடுங்க வைத்து  வரும்   அரக்கர்
படைகளும்,   அதன்   தலைமைகளும்,  சூரனும்   பலவாறு   போரிட்டும்  அவர்களது    செயல்களும்,  பல்வகைப்   படைகளும்   பொடிப்பொடியாகி
ஒதுக்கிவிட,  விண்ணவர்   தளபதியாம்   முருகப் பெருமான்,  சூரன்   முன்  தேரிலே   சென்று அவனுக்குக்     காட்சி   கொடுத்தார்.  அருள்முகம்   கண்டபின்னரும்   கசடன்    அவரோடு   போரிடத்    துவங்கினான். 

3.     இந்நிலையில்   போராற்றிக்   கொண்டிருந்த   வீரவாகு   சூரன்   தேரிலே
பாய்ந்தான்;  அவனைத்    தாக்கி,   அவனது   வில்லைப்    பறித்தான்; பறித்த வில்லை    முறித்தான்;  அதனால்   சினம்   கொண்ட   சூரன்    அவனை  அங்கேயே    நையப்  புடை த்தான்;   வீரவாகுவை   அப்படியே   தூக்கி  வெகு
தூரத்தில்   எறிந்தான்;  விழுந்த   வேகத்தில்   வீரவாகு   சோர்ந்து   அப்படியே
தரையில்   வீழ்ந்தான்.

4.     செவ்வேளும்   முருகனும்   கடுமையாகப் போர்   புரிந்தனர்;  இருவரது   கைகளும்    விரைவு   ஒன்றையே   பற்றி,  மாறி மாறி   அம்புகளை   எய்தன;
வானத்திலும்.  பூமியிலும்   மாறி   மாறிச்சென்று  விரவாய்ச் சென்று  போரிட்டனர்;   போரிலே    இருவரும்  ஒருவர்   தேரை  மற்றவர்   அழிக்க,வேறு வேறு   தேர்   ஏறி   விரைவாய்ப்   போரிட்டனர்;  சூர பன்மனின்     நேமையான போரையும்,  மாயப்போரையும்    செவ்வேளாகிய   முருகன்   தனது   சீரிய
போர்த்திறனால்   முறியடித்தார்.

5.     சூரன்    விட்ட   சூலம்,மழு, சக்கரப்படை,  வச்சிராயுதம்   போன்றவற்றை,
முருகனின்   வேற்பபடை      விரைந்து   சென்று   அழித்தது.

6.    சூரனின்    மாளாத   பெரும்படைகள்    மேலும்  மேலும்   தோன்றி விண்ணவர்   படைகளை   அழிப்பதைக்   கண்ணுற்றான்   முருகன்.  அவைகள்   தோன்றி   வரும்  இடமான   பேரண்ட  கோளின்    வாயிலை  ஒரு 
அம்பினால்   மூடினான்;வந்து குவிந்திருந்த   அரக்கர்   பெரும்படை   முழுவதையும்  தனது   தழல்   விழியால்   நோக்கினான்;  அப்படைகள்   முழுவதும்    எரிந்து  சாம்பலாயின.

7.   எல்லாப்   படைகளையும்   இழந்து,  மிகுந்த   சோர்வுக்கு   உள்ளான   சூரன்
தன்    தாய்   மாயையை   நினைத்தான்; வந்த   அவள்   போரைக்    கைவிட்டு,
முருகனை   வணங்குமாறு   அறிவுரை   வழங்கினாள்;  அதனைக்   கேளாத  சூரன்   இறந்துபோன   தனது   படைகளை   மீண்டும்   உயிர்  கொடுத்து   எழுப்பும்   வழியைக்   காட்டுமாறு   வேண்டினான்;  சூரனே!   ஏழுகடலும்
அண்ட   கோளங்களும்   தாண்டி   அமைந்துள்ள   "அமுத   சீத  மந்திர  கூட
மலையை"   அப்படியே   தூக்கி   வந்து  போர்க்களத்தில்  நிறுத்தினால் இந்நாள்  வரை   இங்கு   மாண்டவர்கள்   அனைவரும்  உயிர் பெற்று   எழுவர்":
உந்த   இந்திர  ஞாலத்தேரை   அனுப்பி,அம்மலையைப்   பெயர்த்து  எடுத்து
வரச்செய்!  என்று  கூறினாள்.   மகிழ்ந்த   சூரன்   தாய்க்கு   நன்றி  கூறிவிட்டு,இந்திரஞாலத்தேரிடம்   அம்மலையை   எடுத்து  வர ஆணையிட்டான்.   அதுவும்   விரைந்து   சென்று  அம்மலையைத்     தூக்கி
வந்தது;   அம்மலைக்    காற்று   பட்டவுடனேயே    இறந்துபட்ட  படைகள்  முழுவதும்    உயிர்  பெற்று  நின்றன;   பானுகோபன்,சிங்கமுகன், தருமகோபன்,   சூரனது   புதல்வர்கள், சூரனைச்   சூழ்ந்துகொண்டு,  அரசே!  தங்கள்    இங்கேயே   நில்லுங்கள்;  நாங்கள்   சென்று   அந்தத்   தேவப்பதர்களை   அழித்து வருகிறோம்"  என்று   சொல்லியபடிக் 
கள த்தினுள்     நுழைந்தனர்.  அதைக்   கவனித்த   முருகப்பெருமான்  தனது   தந்தைப்   படையாகிய   சிவப்படையை   அக்கூட்டத்தின்   மீது   வீசினார்.
சூரனது   மகிழ்வும்,  அப்படைகளும்   வீரர்களும்    சாம்பலாகிப்  போயின.

8.    சூரனால்   அண்டகோளகை   அருகே   சிறைவைக்கப்   பட்டிருந்த   வீரபாகு போன்றோரை  மீட்டுவந்த   முருகனது   வேல்   சூரனது   "இந்திரஞாலத்தேரையும் "   மீது   முருகன்   சேவடியில்   சேர்த்தது.
முருகனைத்   தனிமைப்   படுத்த  விரும்பிய   சூரன் வீரவாகு  போன்ற   அவனது   அன்புடைப்  படைகளைத்    தனது   மாயக்   கணையால்  மயக்கி,
அண்டகோளகை   அருகே  விட்டுவிட்டுக்    காவல்   காத்தபடி   அங்கேயே  நின்றிருந்தது.   அதை   அறிந்த  முருகன் அவர்களை   வேற்படை   வாயிலாக
மீட்டார்.

9.    படைகள்.  தேர், வில்,   கொற்றக்குடை, என   எல்லாம்   இழந்து   தனியனான    சூரன்   மாயஉருவம்   எடுத்தான்;  பேரலகும்.   நீண்ட  மூக்கும்,
அளவிட முடியாத   இறக்கைகளையும்    பெற்று," சக்கரவாளப்பறவை"  ஆகிய   சூரன்   உலகெங்கும்   சுற்றிசுசுற்றி   வந்தான்; பறவையான   அவனைத்   தேரில்  சென்று  தாக்குதல்  போரிடல்     போர்முறை   ஆகாது   என்பதை   மனதில் நினைத்த  முருகன்   இந்திரனை   நினைத்தார்.
இந்திரனும்      மயில்   உருவம்   எடுத்து   முருகனைத்   தங்கினான்;முருகனும்     சூரன்   போகுமிடமெல்லாம்   சென்று   போரிட்டார்.அதன்   சிறகை  வெட்டி  வீழ்த்தினார்.

10.    மாயப்போரிலே   ஈடுபட்டான்  சூரன்.  காற்றாக   வருவான்;  முருகன்   கன லாகி    அழிப்பார்;கடலாய்ப்  பொங்குவான்;  வடவைத்   தீ யாகி   அவனை   அழிப்பார்; மலையாகி   வருவான்   சீர டியால்     அவனைப்
பாதாள   உலகில்   அழுத்துவார்;   இப்படி   அவனோடு   நான்கு   நாட்கள்   போராற்றினார்    முருகன்.

                                                        விளக்கம்

1.   ஆலகாலப்படை                          = கடுமையான   விஷம்போல்  பகைவர்களை
                                                                       அழிக்கும்   படை
2.   நீர்த்துவிட                                       =    ஒன்றுமில்லாமல் போக,
3.   காய்ந்தவன்                                   =     சூரன்
4.   விசை                                                 =     விரைவு
5.   நாலும்                                                =     பலவும்,
6.   விழிச்சுடரால்                                 =      பார்வையால்
7.   மீளுயிர்கள்                                     =      மீண்டும்  உயிர் பெற்ற   அரக்கர்கள்
8.   ஞாலத்தேர்                                       =     இந்திரஞாலத்தேர்
9.   தீட்டினான்                                        =      அழித்தான்
10.  வழியாலே                                        =    சூரனது   உருவிற்கேற்ப


                                                               இலக்கணம்
செவ்வேள்                                     பண்புத்தொகை
நாளும்                                             முற்றும்மை
சூலவேல்                                        இருபெயரொட்டுப் பண்புத்தொகை .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக