ஞாயிறு, 28 ஜூன், 2020

4. 44. தேவர்கள் போற்றல்

        

                   4.   44.  தேவர்கள்   போற்றல் 


1.   சூருடல்     ஈராகிக்       கார்மயில்     ஊர்தியாகிப் 
      பாருலகு     சீர்த்தவா!    வாழ்.

2.   வேல்கண்டோம்     நாளகன்ற     சூல்மேகச்     சால்பற்றோன் 
      கால்பணிந்த       காலமகல்    நாள்.

3.   இறையே!      நிறையே!       மறையே!       குறையாய் 
      அறைசூர்      சிறைமீட்ட,  ஆறு.

4.   சினச்சூர்      வினைவேர்        இணைச்சீர்     நனைநீர் 
      மனக்கார்     பணையருள்     வேல்.

5.   நூறு      முகத்தாலே      ஊறு       விளைத்தோரே 
      ஆறு     முகத்தாலே      கூறு.

6.   நீதி      உணராது       தீது,பழி       வேதனை 
      வேதமுதல்       வேலால்     விலக்கு.

7.   மாலொடு      மாத்தேவர்       மாமலரோன்       மாமகிழ்வில் 
      மாமயிலோன்      தாள்வணங்கி     வாழ்த்து.

8.   செய்வானும்,    செய்பொருளும்,     செய்தவமும்     சேயவனே!
      உய்ந்துநின்றோம்     பைந்தமிழே!    வாழ்.

9.   மேலாய     வேலவனே!     ஆளானோம்      நின்னடிமை;
      கால் கழலே     வேலணியே      சால்பு.

10.  என்றெல்லாம்     போற்றிநின்ற    நற்றேவர்    பொற்றிறத்தை 
       நன்றேற்று        வேலன்     அருள்.


                                                  பொருள்

1.   திருமுருகக்   கடவுளின்   வேலாயுதம்   சூரனின்   உடலை   இரு கூறாகப்
பிளந்தது; ஒருபகுதி   மயிலாகவும், மற்றொரு பகுதி   சேவலாகவும்   மாறியது.
ஊர்தியாக   மயிலை   ஏற்றுக் கொண்ட  முருகன்   தனது   கொடியாகச்
சேவலையும்   ஏற்றுக்கொண்டார்.அவ்வாறு   வர பலம்     மிக்க    சூரனை மாற்றித்    தன்னோடு   வைத்துக் கொண்டு   உலகைக்   காத்த   முருகனே   உம்மை    வணங்குகிறோம்.  வாழ்க   உமது புகழ்   என்று   தேவர்கள்  வெற்றி   அடைந்த   குமரனைப்     போற்றினர்.

2.    நெடுங்காலம்   கரும் மேகம்போல்   அரக்க குணம்  கொண்ட  பண்பில்லாச்    சூரனைப்   பணிந்து, வணங்கி, வாழ்ந்து வந்த   தேவர்களின்
அடிமைத்   தனத்தை  மாற்றி,அரக்கனை    அழித்து  எங்களைக்    காத்த  வேலாயுதக்     கடவுளே!  எமது    வாழ்நாள்  முழுவதும்   உம்மைப்   போற்றி 
வணங்குவோம்"   என்று   பணிந்து   போற்றினர்.

3.     எங்களது    இறைவனே!    தாழ்ந்த    எங்களுக்கு   நிறைவைத்    தந்த  தலைவ !    பிரமனுக்கே    மறைக்குப்   பொருள்   உபதேசித்து  உயர்ந்த   மறைபோல்    விளங்குபவனே!     எங்களுக்கு    ஏற்பட்ட   மாபெரும்   குறையாய்   சிறையிலே    அடைத்துக்   கொடுமைப   படுத்திய  சூரனின்
உயிரைப்போக்கி   எங்களை   மீட்ட  ஆறுமுகக்    கடவுளே!  உம்மைப்   பணிந்து     வணங்குகிறோம்.


4.      சினமுற்ற    சூரனின்   செயலினால்  துன்பங்களை   நீண்டகாலம்  அனுபவித்துவந்த    தேவர்களாகிய   நாங்கள்  தங்களது    திருவடியில்   விழுந்து,  அழுது,     எங்கள்   கண்ணீரால்  தங்கள்   சேவடியை   நனைத்தோம்
கருணை   கொண்ட  மனத்திலே   பேரருள்  கொண்டு, வேலாயுதத்தால்
சூரனை   அழித்து,எங்களைக்    காத்த  வேலவனே!  வணங்குகிறோம்.

5.    நூறுமுகமும்,   ஆயிரம்  முகமும்   கொண்டு, எங்களைப்   படாத   பாடு .
படுத்திய   அரக்கனை    இருகூறாகப்   பிளந்து    தேவர்களைக்   காத்த   ஆறுமுக   தேவனே!   வணக்க்குகிறோம்.

6.     சிவனே   முதற்கடவுள் :  அவனை   வணங்குதல்   சிறப்பு"   என்னும்   நிதியை   உணராமல்  தக்கன்    செய்த   வேள்வியில்   கலந்து  கொண்டு,
பழியும்,  வேதனையும்   அடைந்த   எங்களின்   துயரைப்   போக்கிய   முதலே!   வேலால்   வினை தீர்த்த   வேலவா!  வணங்குகிறோம்.

7.    திருமாலும், தேவர்களும், பிரமனும்,     தாங்கள்    அடைந்த   வெற்றி   மகிழ்வில்   முருகனை   வாங்கிப்   போற்றினர்;வாழ்த்தினர்.

8.   சித்தாந்த    அடிப்படையில்   செய்பவன்,    கருவி,  செய்பொருள், ஆகிய   அனைத்தும்   கொண்ட   முழுமுதல்!  ஆற்றும்   தவத்தின்   மூலப்பொருள்!
பசுந்தமிழாய்   விளங்குபவனே!   உனது   பெருமையைச்   சிறப்பை  நினைந்து நினைந்து   போற்றுகிறோம்.  வாழ்க; வாழ்க.

9.   மூவர்க்கும்   மேலான   கடவுளே!   என்றும்   உமக்கே   தொண்டராக ஆளானோம்;   கால்   காட்டும்   கருணையும்,   வேல்  காட்டும்   வெற்றியம்,
சால்பாய்க்   கொண்ட   முருகா!  வாழ்த்தினோம்   உமது புகழ்; வணங்குகிறோம்    உமது   திருவடி;   என்றும் தேவர்கள்   போற்றினர்.

10.    என்றெல்லாம்    பலவாறு   போற்றிநின்ற   தேவர்களின்   நல்லுள்ளத்தை,
நற்பணிவை,  வணக்கத்தை    ஏற்றுக்கொண்ட   முருகன்   அவர்களுக்கு
அருளும்,  ஆசியும்  வழங்கிக்   கருணை   காட்டினார்.
 

                                                          விளக்கம்
1.   சீர்த்தவா                               =     காதவனே!
2.   சால்பு                                      =     கருணை
3.   ஆறு                                         =     ஆறுமுகர்!
4.   நனைநீர்                                =     கண்ணீரால்  நனைத்து
5.   கூறு                                         =      அழித்தாய்
6.   வேதமுதல்                            =     மறைகளின்   முதல்வன்
7.   மாமகிழ்வு                            =     சூரனை  வென்ற  மகிழ்வு
8.   உய்ந்து  நின்றோம்           =    நினைந்து  போற்றினோம்
9.   சால்பு                                       =    சான்று
10.  பொற்றிறம்                           =   நல்ல  குணம்  நல்ல  பணிவு


                                                          இலக்கணம்

1.   ஊறு ............................................முதனிலை திரிந்த  தொழிற்பெயர்
2.   வேதமுதல் ................................ உருவகம்
3.   பைந்தமிழ்  ................................ அன்மொழி


   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக