4. 35. மூன்றாம் நாட்போர் ..பானுகோபன்.
1. அவ்வை!கேள்! அத்தூதன் ஆற்றல்முன் நில்லாது,
வவ்வினேன் தோல்விப் பழி.
2. படைமாயம் போக்கும், உணர்வைப் பறக்கும்
கடையொலித்தாள் தள்ளிடும் தூது.
3. ஒற்றன் துணைவர் ஒழிவர்; உயர்வாய், நீ!
பெற்றாளைப் போற்றிப் புகழ்.
4. இற்றைநாள் ஒற்றன் இறுதியைப் பெற்றிடுவான்;
கொற்றவன் கூற்றுப்போர் காண்.
5. என்றசெய்தி எட்டியதும், என்னிளையோய்! ஏற்றமுடன்
சென்றிடுக. செவ்வேல் துணை.
6. சூர்மகன் வாருண மாருதம்; வீரவாகு
பேரக்னி சீறு நாகம் மாற்று.
7. கருடனெதிர் நந்தி, அயன்படை மாலோன்,
அருபத்ரர் ஆயதெல்லாம் ஆள்.
8. இருவரும் தொட்ட சிவப்படை ஒன்றி,
இருவர் கரத்தில் இணை.
9. மாயம் விடுத்தான் மனதுடல் மாற்றியே
தூய கடற்கரை தூவு .
10. சூரன் மகிழ்வுமாட்சி; சிங்கார வேலருள்
வீரரும் பெற்றார் வரம்.
பொருள்
1. பானுகோபன் தன்னிலை அறிந்து மிகுந்த துயருக்கு உள்ளானான்.
மூன்றாம் நாள் போரிலே வீரவாகுவை வென்று தன்னிலை உயர்த்தவேண்டும்" என விரும்பினான். அவனுக்கு எப்பொழுதும் உதவி புரியும் தனது பாட்டி மாயையை மனமுவந்து வணங்கினான். தன்முன் வந்துநின்ற அந்த மாயக்கிழவியிடம் பாட்டி! நான் நேற்றைய போரிலே அந்தத் தூதுவன் வீரவாகுவிடம் தோற்றோடி வந்துவிட்டேன். தோற்றது மட்டுமல்ல களத்தை விட்டு ஒடி வந்ததும் மிகப்பெரிய பழியாக வந்து விட்டது. இன்று நான் அவனை வென்றாக வேண்டும்" தாங்கள் தான் நல்ல மாயவழி காட்டவேண்டும்" என்று வேண்டினான்/
2. பானுகோபா! நீங்கள் தவறான பல செயல்களைப் புரிந்து இன்று தோற்கும் நிலையை அடைந்துள்ளீர்கள்; ஆயினும் உனக்கு ஒரு மந்திரம்
உபதேசிக்கிறேன்.அதைச் சொல்லி நீ அம்பு எய்தினால் அது உன் பகைவன் வீரவாகுவையும் அவனைச் சார்ந்தோரையும் ஏழுகடல் தாண்டி. அமைந்துள்ள நல்லநீர்க் கடலின் கரையிலே தூக்கி எறிந்து விடும்" அவர்களது உணர்வுகளையும் நீக்கிவிடும்" இதைப் பெற்றுக்கொள் என்று மாயை அருளினாள் .
3. ஒற்றனும், அவனது துணைவர்களும் அழிவர்; நீ! உயர்வடைவாய்!" என்ற மாயைப் பாட்டியைப் போற்றி வணங்கினான் பானுகோபன்.
4. தனது மாளிகையை அடைந்த பானுகோபன் போருக்குப் புறப்பட
ஆயத்தமானான். நால்வகைப்படைகளுடன் புறப்பட்ட அவன் களத்தை
அடையும் முன் ஒரு செய்தியைத் தூதன் வாயிலாகப்பகைவன் பாசறையில் அறிவிக்கச்செய்தான்."இன்று வீரவாகு பானுகோபனால் அழிக்கப் படுவான்; சூரனின் மகன் பானுகோபன் கூற்றுவன்போல் களத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்." என்ற அறிவிப்பை அங்கு
பறை சாற்றினான்.
5. இந்த செய்தியை எடுத்துக் கொண்டு முருகனிடம் ஓடினார் நாரதர்.
முருகன் வீரவாகுவை அழைத்தார் , வீரவாகு! வீரத்தோடு களம் காண்பாய்; போரிலே மாய அமைப்புகள் உனக்குத் தீமை செய்ய முற்பட்டால் எமது வேல் வந்து உன்னைக் காக்கும்" வீரத்தோடு போரிடுக" என்று கூறிப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தார்.
6. இருவரும் போரினைத் துவக்கினார், ஆயிரம் ஆயிரம் கணைகளை
ஏவினர்; பானுகோபன் வீரவாகுவின் மீது வருணப் படையை எய்தான்;
அக்கணை உலகையே மழையால் அழித்தபடி வந்தது; வீரவாகுவோ நெருப்புக் கணையை ஏவி நீரைக் குடிக்கச்செய்து தடுத்தார். பானு
காற்றுப்படையை ஏவினான்; பூகம்பம் ஏற்பட்டாற்போல அக்கணை உலகையே அசைத்து நடு நடுங்க வைத்தபடி வந்தது; வாகுவோ நாகக்
கணையை எய்திக் காற்றைத் தடுத்து, விடத்தை வீசியது.
7. கருடப்படையை ஏவினான் அரக்கன்; அதனை நந்திப்படையை ஏவித்
தடுத்தார் வாகு. மற்றும் பிரமப்படை ,திருமால் படை, வீரபத்திரப்படை
என மாறி மாறி இருவரும் ஏவினர்.
8. முடிவில் வெற்றி நமக்கே என்ற நிலையில் இருவரும் ஒரே நேரத்தில்
சிவப்படையை எய்தனர்; அப்படைகள் உலகையே அழித்துத் தூளாக்கியபடி சந்தித்துக் கொண்டன; இரண்டும் சமநிலையில் நிலைத்ததால் மீண்டும் அவரவர் கைகளுக்கே திரும்பின.
9. எதிலுமே வெல்ல முடியாத நிலையை அடைந்த பானுகோபன் முடிவாக தனது பாட்டி உபதேசித்த மாயமந்திரத்தைப் பணிந்து போற்றி அதனை வீரவாகு நோக்கி அம்பில் இணைத்து ஏவினான்.
அக்கணை வீரவாகுவின் மீது பட்டதும், அவர் அப்படியே மயங்கி விழுந்தார்; அச்சாயல் பட்டு, வீரவாகுவைச் சுற்றி நின்று போரிட்ட துணைவர்களும் மயங்கி விழுந்தனர்; விழுந்த அவர்கள் அனைவரையும்
சுமந்து சென்ற அம்மாய அம்பு அவர்களை ஏழு கடல் தாண்டி அமைந்துள்ள தூய நீர்க்கடலின் கரையிலே போட்டுவிட்டுத் திரும்பியது.
10. பெரும் மகிழ்ச்சி அடைந்த பானுகோபன் தனது தந்தையிடம் ஓடோடிச் சென்று தான் பெற்ற வெற்றியையும், வீரவாகு அழிந்ததையும் சொல்லி மகிழ்ந்தான்; சூரபன்மனும் மிக்க மகிழ்ச்சியுற்று நாளை அந்தக் கந்தக குழந்தையையும் அழித்துவிடுவோம்" என்று அகமகிழ்ந்தனர்.
செய்தி அறிந்த முருகன் தனது வேல் படைக்கு ஆணையிட, செவ்வேல் பிரமப்படை ,மால்படை,வீரபத்திரப் படை தொடர்ந்து வரப்
பறந்துபோய் வீரவாகு முதலியோரைக் காத்து, நல்ல உணர்வு உடையவர்களாக மாற்றி முருகனிடம் அழைத்து வந்தது.
விளக்கம்
1.அவ்வை = பாட்டி
2. படைமாயம் = மாயப்படை
3. பெற்றாளை = மாயைப் பாட்டியை
4. கொற்றவன் = பானுகோபன்
5. துணை = துணையாக வரும்
6. வாருணம் = நீர்ப்படை
7. அருபத்ரர் = வீரபத்திரப்படை
8. ஒன்றி = சமநிலையாகி
9. மனதுடல் மாற்றியே = மனதை,உடலை உணர்வற்றதாக்கி
10. வரம் = நல்லுடல்,நன்மனம் பெற்றமை.
இலக்கணம்
1. சென்றிடுக .............................வியங்கோள் வினைமுற்று
2. செவ்வேல் .............................. பண்புத்தொகை
3. வீரரும் ................................... எச்சவும்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக