சனி, 30 மே, 2020




          4,34.  இரண்டாம் நாட்போர் சூரபன்மன் 


1.       உற்றவசை   மாச்சினச்    சூரன்     உளமுற்றான்,
          இற்றைநாள்    வாகைப்போர்   யான்.

2.       ஆயிர    நூறுவெள்ளம்      ஆன்றபடை;   தோன்றலர் 
          மாயிருவர்     மாஞால      வாழ்த்து.

3.       தொழுந்தலைவன்    தொன்முருகன்     குன்றனைய    தேரில் 
          விழுபடை     பின்தொடர   வேறு.

4.       வாரணச்      சூரனின்     வல்வில்     கணைதாக்கித் 
          தோரணத்     தேவரெல்லாம்    தோய்.

5.       மக்கள்   இருவர்     மலைந்தே     இறந்தனர்;
          மிக்கசீற்றச்      சூரன்    சுழல் .

6.       தலைவர்    பற்பலர்     மாண்டுவீழ     வந்தார் 
          சிலையுடன்     வீரகுல     வாகு.

7.       தூதனே!     தொல்லிறுதி      தேடவே    வந்துளாய்!    
          எதத்தைத்     தந்தான்    சூர்.

8.       ஆறுமுகம்     ஆனந்தம்;    அடுத்தநொடி     ஆணவம்;
          வேறுவேறு    வத்திரங்கள்   வீசு.

9.       தேரிழந்து,   வில்லிழந்து,    நாற்படை    தானிழந்து 
          சீரிழந்து     மாயமந்த்ரம்    மீள்.

10.     எரியூட்டு      மகேந்திரம்    புத்தாக்கம்    செய்து,
          கரிமுகத்துக்     காரரக்கன்    கா.


                                            பொருள்  

1.   பானுகோபன்   போர்க்களத்திலிருந்து   மறைந்து   மாளிகை  அடைந்த 
செய்தியைக்   கேட்டு மிகவும்   துன்பமுற்ற   சூரன்,  போருக்குத்    தானே 
போக   முடிவு  செய்தான். அனைத்து   அண்டங்களுக்கும்   செய்தி   அனுப்பிப்
படைகளைத்  திரட்டி   அனுப்ப   ஆணை பிறப்பித்தான்.

2.    ஆயிரம்   ஆயிரம்   வெள்ளம்   நால்வகைப்   படைகள்   வந்து  குழுமின.
    மிகப்பெரும்   படை   அணிவகுத்து   முன்சென்றன.  தாரகனின்   மகன் 
அசுரேந்திரனும், மற்றொரு  மகனான   அதிவீரனும்   படைகளுக்குத்   தலைமை  தாங்கி   முன்   சென்றனர். உலகெங்கிலும்    வாழ்த்தொலி 
ஒலிக்க   இந்திரஞாலத்   தேரில்   ஏறி   அமர்ந்து  போருக்குப்  புறப்பட்டான்.
சூரபன்மன்.

3.   மூவேழ்  உலகங்களும்  போற்றி வணங்கும்   கடவுளாகிய   சுப்பிரமணியக்
கடவுள்   மேருமலை   போன்ற   தேரின் மீது   அமர்ந்தார்; அவருக்கு   முன்னால்   பூதப்பட்டைகள்,  விண்ணவர்ப்   படைகள், செல்ல, அவரைச் சுற்றி  திருமால்,பிரமன்,இந்திரன்  முதலான   தேவர்களும், வீரவாகு  உள்ளிட்ட ஒன்பது   வீரர்களும்  சென்றனர்.

4.    போர்க்களத்தையே   கலக்கிக்   கொண்டிருக்கும்  அவுணர்   படைகளின் நடுவே   செல்லும்   சூரன்  தனது   வில்லொலியை   உலகம்   அதிருமாறு
ஒலித்தான்.    கணைகளை   ஆயிரக்கணக்கில்   பொழிந்தான்; தேவர்களும்,பூதர்களும்    ஓலக்குரல்   எழுப்பி   இங்குமங்கும்   ஓடினர்;
எதிர்த்து   வந்த   நூற்றெட்டு   பூதப்படைத்   தலைவர்களும்  தோற்றோடினர்;வீழ்ந்தனர்;

5.  கடுமையான   போரிலே   சிங்கன்  என்ற  பூதப்படைத்   தலைவர்  அசுரேந்திரனை   அழித்தார்;  அதுபோலவே  மற்றொரு  படைத்தலைவர் அதிசூரனை  அழித்தார்.  இச்செய்தி   கேள்வியுற்ற  சூரன்   மிகுந்த  சினமுற்றான்;  தனது   கணைகளால்   போர்க்களம்   முழுவதும்   சுற்றிச்சுற்றி வந்து   அழித்தான்.

6.   சூரனது   வீரத்தின்முன்   நிற்க   இயலாத நவ வீரருள்   எண்மரும் பிற  படைத்தலைவர்களும்  சோர்ந்து  விழுந்த  காலை  தேவப்படை   அஞ்சி நடுங்கி  ஒடுங்கியது.இந்த  நேரத்தில்   தனது   வில்லொலியை   எழுப்பியபடி
வீரவாகு    சூரன் முன்   வந்தார்.

7.  தன்முன்   நிற்கும்  வீரவாகுவைப்   பார்த்த   சூரன்,"  தூதுவனே!   வா!  வாழ்வின்   இறுதியை   அடையப்போகும்   வீரனே!  வா! என்கையால்   அன்று
மகேந்திரபுரியில்    அடைய   இயலாத   சாவை   இன்று   உனக்கு   அளிப்பேன்" என்றபடிப்   பாணங்களைப்   பொழிந்தான்;  வீரவாகு  சூரனுக்கு   நிகராகப்  போர்   ஆற்றினார்; அவர்  மனம்   இச்சூரன்  முருகன்   கையால்  மாள்வதே
முறை. அதனால்   நாம்   தெய்வீகப்  படைகளை  ஏவாமல் இருப்போம்   என
நினைப்பதற்குள்   சூரன்  எய்த  அம்பினால்   அடிபட்டுக்   கீழே   சாய்ந்தார்.
விண்ணவர்  வேதனை  அடைந்தனர்.

8.     இந்நிலையில்   தனது   தேரைச்   சூரன்முன்   செலுத்துமாறு  கட்டளையிட்ட   முருகன், சூரனுக்கு   அருள்  சார்ந்த   காட்சியைக் காட்டுகிறார்.  அப்படியே   அந்தக்   காட்சியில்   மனதைப்    பறிகொடுத்த
சூரனது   உள்ளம்   பெருமகிழ்வு  அடைகிறது. ஒரு  நொடிதான்   நல்மனம்.
அடுத்த  நொடி   ஆணவச்சூரன்   அவர்மீது   அம்புகளைப்   பொழியத் துவங்குகிறான். அவனது   வில்லில்  இருந்து   புறப்பட்ட  அத்துணை  அம்புகளும்  செயலிழந்து   மண்ணில்   விழுகின்றன; பிரும்மாத்திரம் ஏவ
அதனை அப்படியே   ஏற்றார்; நாராயணப்படை   அவரை   வணங்கி அவரிடமே  தங்கிவிடுகிறது;  சிவப்படை   ஏவுகிறான்; அதனை   அப்படியே
தனது   வலக்கரத்தால்   பற்றிக்  கொண்டார்.இப்படி  வீணான   படைகளை நினைந்து   போரிட  முடியாமல்   சூரன்   தவிக்கிறான்;

9.   முருகன்   அவனது   இந்திரத்தேரை   அழிக்கிறார்; வில்லை   அழிக்கிறார்;
அவனது    நால்வகைப்படைகளும்   அழிகின்றன;தனது   ஆணவம், பெருமை, வீரம்  எல்லாவற்றையும்   இழந்து   தனியனாய்   நின்றான்   சூரன்.ஆயினும்   அவனது  செருக்கு   அவன்   வாயிலே   மாயமந்திரமாக  மாறி,யாரும்   அறிய  முடியாத    உருவத்தை   எடுத்துக் கொண்டு   மகேந்திரம்   அடைகிறான்.

10.    மகனைப்   போலவே  தந்தையும்  ஒடி ஒளிந்ததைப்  பார்த்த   தேவர்கள் மகிழ்ச்சியில் ஆடிப்பாடிப்போற்றுகின்றனர்   முருகனை.  இதுவரை   அவர்கள் பட்ட   துயர்   வெறுப்பாக   உருவெடுக்கிறது. அப்படியே  மகேந்திரபுரி     சென்று, சூரன்   நகரை எரியூட்டி   அழிக்கின்றனர்.
அழிந்த   நகரை   மீண்டும்  உருவாக்கிய   சூரன்   மறுநாள்  போர்  பற்றிச்  சிந்தித்தான்.  திருமாலும்,பிரமனும்,இந்திரனும்,தேவர்களும் முருகனைப் போற்றி   வாழ்த்துகின்றனர்.


                                                         விளக்கம்

1.   உற்றவசை                                = பானுகோபன்  ஓடிவந்த  இழிசெயல்
2.   மாயிருவர்                                 =  அசுரேந்திரன்,அதிசூரன்.
4.   வாரணம்                                    =   யானை
5.   சுழல                                             =   களம்   முழுதும்   சுற்றல்
6.   மாண்டுவிழ                              =   சூரனது   போர்த்திறத்தால்  இறந்துபட
7.   ஏதத்தை                                     =   மயங்கி விழும் துன்பத்தை
8.   அத்திரங்கள்                            =   படைகள் ,தெய்வீகப் படைகள்
9.   மாயமந்த்ரம்                           =   மறைந்து போகும்  மாயத்தன்மை
10.  எரியூட்டு                                  =    பூதப்படைகள்  மகேந்திரத்தை அழித்தல்

                                                     இலக்கணம்

1.   விழுப்படை .....................................உரிச்சொற்றொடர்
2.   வேறுவேறு .......................................அடுக்குத் தொடர்
3.   வந்துளாய் .........................................இடைக்குறை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக