சனி, 23 மே, 2020




                                   6. 9.  வள்ளித்திருமணம் 


1.    பழம்பதி     தொண்டை;   வியன்படை,மேற்     பாடி,
       தழைவெள்ளிச்     சீறூர்    மலை.

2.    வேடர்   குலத்துநம்பி,    வேலன்தாள்    போற்றுபவன் 
       ஆடுமகள்     ஆசை    வணங்கு.

3.    சிவமுனி    சிந்தை    நவநவ்வி    ஈர்க்கத் 
       தவமகள்     தங்கினாள்     சூல்.

4.    நிறைத்திங்கள்    நித்திலப்      பெண்குழவி    ஈன்று,
       குறைகண்டு     அஞ்சிமருள்   மான்.

5.    கிழங்ககழ்      பள்ளம்    குழந்தை    அழவே 
       குழுவுடன்       நம்பிகண்டான்    சேய் .

6.    வேல்தந்த    சீலப்பெண்    ஓலவெறி    யாட்டயர்ந்து 
       கோலவள்ளி      கொண்டுமகிழ்    சூடு.

7.    ஆடினாள்;     பாடினாள் ;    ஆயகாலை     அந்தினை 
       நாடிவரும்     நற்பறவை   ஓட்டு .

8.   தினைப்புனம்     காவலாளி   திவ்யமுத்து   பார்த்து,
      வினைக்கலகர்    வேலன்தாள்    பற்று.

9.   வேடனாய்     மாற்றுரு     வெள்ளிமலை    நாயகிச் 
      சீடனாய்ச்     சீறடி      சுற்று.

10. செஞ்செல்வத்     தன்புதையல்    சென்றுதேடும்    வேட்கைபோல் 
      அஞ்சொல்      இளமஞ்ஞை    நாடு.


                                               பொருள் 

1.     சான்றோர்கள்   நிறைந்த   தொன்மை   நாடு   தொண்டை  நாடாகும்.
அந்த   நாட்டில்  வீரர்களும்,  வீரக்களமும்   நிறைந்த      "மேற்பாடி"
என்ற    நகர்   இருந்தது.  பசுமையும், வளமும்   நிறைந்த  நீண்ட   மலைத் 
தொடர்; அதன்பெயர்   வெள்ளிமலை.   அதன்   அடிவாரத்தில்   அமைந்துள்ள 
ஒரு   சிற்றூர்     "சீறூர்"  ஆகும்.  எயினர்  நிறைந்த  வாழும்   பகுதி   அது.

2.     அந்த   வேடர்   மலை நாட்டை  "நம்பிராஜன்"  என்ற   வேடர்குல   மன்னன் 
சீரும்  சிறப்புமாக   ஆண்டுவந்தான்;  முருகனே   அவர்களது  குலக்கடவுள்   ஆகும்.  எல்லாச்செல்வங்களும்   பெற்று  வாழ்ந்த   அந்த  மன்னனுக்குப் பெண்   குழந்தையே   இல்லை;நிறைய   ஆண்மகன்கள்  பெற்றிருந்தும்,
பெண்   குழந்தை   இல்லாத   ஏக்கம்  மன்னனை   வாட்டியது. அவன்  முருகனிடம்  தனக்குப்    பெண்குழந்தை  அருளவேண்டும்  என   வேண்டி  வழிபட்டான்.  வெறியாட்டம்   நடத்தினான்.அருள்  வந்த   பூசாரி   விரைவில்  அப்பாக்கியம்  கிடைக்கும்" என   ஆசி  கூறினான்.

3.   அந்த   வெள்ளமலையில்   "சிவமுனி"  என்ற  முனிவர்   தவம்   செய்து கொண்டிருந்தார்.  கலங்காத  மனம்  கொண்ட   அவரின்   மனம்  ஒருநாள் 
காமவயப்பட்டுத்   திரிந்தது. அந்த   நேரம்   காட்டுச்   சாரலில்   ஒரு  அழகான 
பெண்   மான்  மேய்ந்து  கொண்டிருந்தது. அதன்   அழகு, முனிவரை  ஈர்த்தது;
மானசீகமாக   அம்மானோடு    அம்முனி   உறவு கொண்டார். அடுத்த   நொடி 
அம்முனிவர்   தவத்தில்   ஈடுபட்டார் .  அம்மானோ     முனிவரது  உறவால் 
வயிற்றிலே   கருவைச்    சுமந்தது  .  முருகனையே  கணவனாக  அடைய வேண்டித்   தவம் இருந்த   சுந்தரவல்லி   என்னும்  திருமாலின்   மகள்,  இப்பிறவியில்   மானின்   வயிற்றிலே   கருவாக   வந்தமைந்தாள்.

4.     மான்   நிறைந்த  கர்ப்பத்துடன்   இங்குமங்கும்   அலைந்தது; அதனுடைய 
குட்டிபோல்   அல்லாமல்   நிறைய  கனத்தது. மிகவும்   நொந்து,வருந்திய  அம்மான்  காட்டிலே   வள்ளிக்கிழங்கைப்    பறித்து   எடுத்த   பள்ளத்தில் குழவியை   ஈன்றது; குட்டியை   நக்கிக்   கொடுக்கப் போன   மான்   அங்கு தன்னிலம்    அல்லாத   ஒன்று  கிடப்பதைக்  கண்ட மான் மருண்டு   அஞ்சி ஓடியது;  

5.    வள்ளிக்கிழங்கு    தோண்டி   எடுக்கப்பட்ட   குழியில்  கிடந்த  குழந்தை
அழுதது.  அவ்வழுகை      காட்டிற்குள்   தனது   சுற்றத்தாருடன்  வந்து கொண்டிருந்த   நம்பியின்   காதுகளில்  அமுதமாக    விழுகிறது.ஓடோடி  வந்து  பார்த்தான்.  குழந்தை;  அதுவும்  பிறந்து   சில   நொடிகளே    ஆன
பெண்  குழந்தை;  வாரி  எடுத்தான்  கொடிச்சியின்   கைகளிலே  கொடுத்தான்.

6.     வேலவன்   அருளால்  தோன்றிய  நற்குல   தேவதை; முருகனுக்கு   நன்றி
தெரிவிக்கும்    முகமாக   வெறியாட்டு   நிகழ்ச்சி   நடைபெற்றது.  அதில் அவ்வூர்   முதிய  சான்றோர்  வள்ளிக்கிழங்கு  அகழ்ந்த  குழியில்  தோன்றியதால்   குழந்தைக்கு  "வள்ளி"     என்று   பெயர்   வைத்தனர்.

7.    வள்ளி   வேட்டுவர்   குலத்திலே   வளர்ந்தாள்;   ஆடினாள் ; பாடினாள் ;
பருவ   வயதடைந்தாள். குல  மரபுப்படி,  தினைப்புனம்    காவல்   காக்கும்பணிக்கு    அனுப்பப் பட்டாள் .பரணில்   நின்றபடி   "ஆலோலம்"
பாடிக்   கிளி களையும்   பறவைகளையும்   விரட்டினாள் .அங்கேயே   தங்கியிருக்கும்  அவளுக்கு,  தேன்   தினைமாவு, தண்ணீர்,  பிற  உணவுகள்
வீட்டிலிருந்து   உறவினர்கள்   கொண்டுவந்து  கொடுப்பார்கள்;வள்ளி  செல்ல மகள்    ஆதலின்   நம்பி    தானே   வந்து கொடுத்துவிட்டுப்   போவார்.

8.    உலகைக்    காக்கும்   கந்தனின்  மனைவி, அழகுப்  பெட்டகம், தினைப்புனம்  காவல்   காக்கும்   அழகைப்   பார்க்கிறார்  நாரதர், அவரால்
பொறுத்துக்க   கொள்ள  முடியவில்லை;ஒளி  விடும்  இரத்தினைக்  கல்லைக்
குருவிக்கூட்டில்   விளக்குபோல்  வைத்த நிகழ்வுபோல்  மாதரசியை   இப்படிக்   காட்டில்  காவல்   காக்க  வைத்துவிட்டார்களே,  இந்த   செய்தியை
முருகனிடம்   உடனே   தெரிவிக்க வேண்டும்"  என்று   திருத்தணிகை  மலைக்கு   ஓடுகிறார் .முருகா!  உன்னையே   நினைந்து   தவம்   இருந்த   சுந்தரவல்லி    அழகு  தேவதைப்  புனத்தில்   கிளியோட்டியபடி,மழையிலும்,
வெய்யிலிலும்   வாடுகிறாள்;  அந்த  அம்மையை  உடனே   சென்று  மணந்து  வருவாய்!" என்று  வேண்டுகிறார்.

9.    தனது   வீர  விளையாட்டோடு  சற்றே   காதல்  விளையாடலும்   புரியத்
திருவுள்ளம்   கொண்ட  முருகன்,தன்னை   ஒரு   வேடுவனாக   மாற்றிக் கொண்டு    வள்ளிமலை   நோக்கி  நடக்கிறார்.  அந்த  தினைப்புனத்தை அடைந்து  அங்கே   காவல் புரியும்   வள்ளியிடம்   காதல்  மொழி  பேசுகிறார்.
பெயர்  என்ன  என்று கேட்கிறார்; அவளது   அழகைப்   பாராட்டுகி றார்;அஞ்சி   ஓடும்   அவளைப்   பின்  தொடர்ந்து   ஓடுகிறார்;எனக்கு   நீயே   கதி"  என
அவளின்   கால்களைப்   பற்றிக்கொண்டு  காதல்  பிச்சை கேட்கிறார்.
பல   நாட்கள்   அவள்  வெறுத்து  ஒதுக்கியபோதும்  அவளைச்   சுற்றி சுற்றி
வருகிறார்..

10.     தனக்குச்   சேரவேண்டிய   செலவப்புதையல்  இருக்கும்   இடம்   அறிந்து அதனைத்  தேடி   அலைந்து  அச்செல்வத்தை   அடையவிரும்புபவன் போல்
முற்பிறவியில்  சுந்தரவல்லியான    திருமாலின்  மகள்   இப்பிறவியில்   வள்ளியாகப்   பிறந்து  வளரும்  வல்லைமலையில்   அவளைத்  தேடி வந்து  அவளை  அடைய  அவளையே  சுற்றிசுசுற்றி   வருகிறார்,

                                                               விளக்கம்

1.   வெள்ளிச்சீறூர்  மலை                          =   வள்ளிமலையில்  அமைந்த சீறூர்
2.   ஆடுமகள்                                                   =    பெண்குழந்தை
3.   தவமக்கள்                                                   =   சுந்தர வல்லி   என்னும்   வள்ளி
4.   குறை கண்டு                                              =   மான்குட்டியாக இல்லாமல்,
                                                                                      மனிதக் குழந்தையாக இருப்பது
5.   சேய்                                                                =    வள்ளிக்குழந்தையை
6.   சூடு                                                                  =    பெயர்   சூட்டு
7.   காட்டினை                                                    =    தினைப்புனத்தை
8.   வினைக்கலகர்                                            =    நாரதர்
9.   சீடனாய்                                                          =   தொண்டு செய்பவனாய்
10. இளமஞ்ஞை                                                  =    வள்ளி நாயகி

                                                      இலக்கணம்
சீறூர் ....................................................................பண்புத்தொகை
ஆடுமகள் ...........................................................வினைத்தொகை
இளமஞ்ஞை .......................................................அன்மொழி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக