ஞாயிறு, 24 மே, 2020




                               6. 10. வள்ளித்  திருமணம் 


1.     ஊரூரை!      பேருரை!         சீறூர்     வழியுரை!
        வாரிருங்       கூந்தல்     மதி!

2.     நம்பிவந்தான்      தன்மகள்      காண;     முருகனோ 
        செம்புயல்சூழ்      வேங்கை     மரம்.

3.     காணா      நனிமரம்         கன்னியைக்       காத்திடும்;
        போனான்    புதுமரமும்    போ.

4.     கெஞ்சல்      நடுவே    கிளர் தாதை      வந்திடப்
        பஞ்சுமுடி     அஞ்சுகக்    காப்பு.

5.     நீடருவி        வந்துற்றாள்;    நிர்மலம்     காணாதாள் 
        நாடவைக்க,      யானைமுகன்    நாடு.

6.     அணைகரத்தாள்     தொட்டுத்     துணையாக்கிக்     காட்சி;
        பிணைநெஞ்சு     கூடி    மகிழ்.

7.     மடலேறும்      மாச்சினம்       மங்கையைத்      தோழி 
        உடன் போக்கு  ஏற்றாள்    இருள்.

8.     சினவேடர்       சீற்றத்தால்     செம்போர்     அழிவு;
        நனியுணர்       நற்காட்சி     நேர்.

9.     நாரதன்     பண்பாடு,        நல்லூர்      மகிழ்வடையக்
        கார்மகள்     கடவுளாய்க்        காண் .

10.   நம்பி       கொடிச்சி     நறுநீரத்       திருத்தாரை 
        அம்புயம்    ஆறுமுகன்    அன்பு.

                                           வேறு 

                                        நேரிசை வெண்பா 
  
   மணம்கொண்ட     மாமுருகன்    மாமலர்     வாழ்க.
   அணங்குவள்ளி     அன்புள்ளம்     வாழ்க.   ------  வணங்கும் 
   கணநாதன்        கைலாயன்    கல்யாணி    வாழ்க.
   குணநம்பிக்      கூட்டமும்      வாழ்.



                                             பொருள்

1.  வள்ளிமலைச்  சீறூரின்   தினைப்புனக்    காட்டிலே   வள்ளிநாயகியைச் சந்தித்தான்  முருகன். தனியே   நிற்கும்   அவளிடம்   காதல்   மொழி  பேசினான்;  அவளோ   அதனைக்   காதில்   வாங்கிக்  கொள்ளாமல் சுற்றிச் சுற்றி  வந்தாள்.  அவனும்   அவளைத்   தொடர்ந்து சென்றபடியே   அழகியே!
உன்   பெயரென்ன?  உன்   ஊர்   எது?  இரண்டிற்கும்   விடை   அளிக்காத  பெண்ணே!  உனது   சிற்றூருக்குச்   செல்லும்  வழியையாவது   சொல்வாயாக"  என்று கெஞ்சினான்.  அவளது   அழகைப் புகழ்ந்தான்.எதற்கும்   அவள்   பதில்   சொல்லவில்லை;

2. தன்னை   விடாது   பின்   தொடர்ந்து   வரும்   ஆடவனைப்  பார்த்து   அவள்
அஞ்சினாள்;  அந்த நேரம்   படை  முழக்கமும்,  ஊதுகுழல்   ஊதும்   ஒலியும்
கேட்டது.  அந்தோ!  என்   தந்தையும்,  சுற்றத்தாரும்   வருகின்றனர்: உன்னைப்  பார்த்தால்    அடித்து  நொறுக்கி விடுவார்கள்;  ஓடிப்போய்விடு !
என்று   முருகனை   எச்சரித்தாள்.  அதற்குள்   தனது   பெண்ணைப்   பார்க்க நம்பியரசன்    படை  பரிவாரங்களுடன்   தினைப்புனத்திற்குள்  நுழைந்துவிட்டான்.   அஞ்சிய   வள்ளி   பார்த்துக் கொண்டிருக்கையில்  முருகன்  ஒரு  வேங்கை  மரமாக  அங்கு   தோன்றி  நின்றான்.



3.     வள்ளி நலம் கண்டபின்   நம்பி   வள்ளியிடம்   இந்த   மரம்   இங்கு  புதிதாய்   இருக்கிறதே! என்றதும்   பணியாளர்கள்   இம்மரம்   வேங்கை   மரமாகும். இது  இப்படி நடுவில்   இருக்கக் கூடாது.  இதனை   வெட்டிவிடுவோம்"  என்றனர்.அதனை   ஏற்காத   நம்பி,  வள்ளியிடம்  ஏனம்மா!  இதை  இங்கு   முன்பே  பார்த்திருக்கின்றாயா? என்று     வினவினான். இல்லையப்பா!  இது  புதிதாய்த்  தோன்றியிருக்கும். என்றாள்.  நம்பியோ   சரி!  இம்மரம்   உனக்குப்    பாதுகாப்பாக   இங்கேயே   இருக்கட்டும்"  வாருங்கள்.   போகலாம்"என்றபடிப்புறப்பட்டான். அவன்   மறைந்ததும், மரம்   முருகனாகி   வள்ளிமுன்   வந்துநின்றது.


4.    மீண்டும்   வள்ளியிடம்   கொஞ்சல்  மொழிகளை  முருகன்   பேசத் தொடங்கினான்.   சென்று   விடுங்கள; என்  தந்தை   மீண்டும்   வரலாம்.என்   அண்ணன்மார்களும்   வருவார்கள்;  அவர்கள்  உங்கலளைப்   பார்த்து விட்டால்   உங்கள்   உயிருக்கே   ஆபத்து ;  ஆதலின்   சென்று  விடுங்கள்" எனக் கெஞ்சினாள்;  அந்த  நேரம்   வள்ளிக்கு   உணவாகிய   தேனும்,தினைமாவும்   எடுத்த்துக்   கொண்டு   நம்பி   மீண்டும்   வந்தான்;
அஞ்சி நிற்கும்   வள்ளிக்கும்   நம்பிக்கும்   நடுவே   ஒரு   பழுத்த  கிழவர்   நின்று   கொண்டிருந்தார்; யாரம்மா   இவர்?  என்றபடி   வந்த  நம்பி,  அவரையே  கேட்டான்.  ஐயா!  இந்த வயதான   முதிய   காலத்தில்   இந்தக்
காட்டிற்குள்   என்ன  செய்கிறீர்கள்? எதற்காக   இங்கு   வந்துள்ளீர்கள்?
என்று  கேட்டான். முதியவர்   சொன்னார்,  ஐயா!  நான்   புதிய   நீர்நிலைகளில்   நீராட   வந்துள்ளேன்.  இங்கு   வள்ளி சுனை  என்று   ஒன்று
உள்ளதாம்.  அதனில்   நீராடி  மகிழ  வந்துள்ளேன். என்றார்.   நம்பியும்,
பணிவுடன்   அவரை     வணங்கியதோடு  வள்ளியையும்     வணங்கச்  சொன்னான்.  அம்மா!  இம்முதியவருக்கு   உதவி   செய்.  அவரும்   உனக்குப்  பாதுகாப்பாக   இருப்பர்.  நீ   அவருக்குத்   தேனும்,  தினை  மாவும்  கொடு"
என்ற்படிப்    புறப்பட்டான்.  அந்த   முதியவருக்கு   வள்ளி,   தேனும், தினை  மாவும்   கொடுத்தாள் .மாவைத்   தின்ற   கிழவருக்கு   விக்கல்  வந்தது.நீர்  பருக   அருகில்   உள்ள   சுனைக்குச்   செல்லச்  சொன்னாள்;  அவரும்   வழி காட்டச்  சொன்னார்;

5.    இருவரும்   அருவிச்  சுனைக்குச்   சென்றார்கள்;நீர் பருகிய  கிழவர்   தாகம்    தணி த்த     நீ   மோகம்   தவிர்க்கக்   கூடாதா? என்றதும்  சினந்தபடி.வள்ளி   புனம்   நோக்கிச்  செல்லத்    தொடங்குகிறாள்.
தனது   நிர்மலமான   காதலை   உணராத   வள்ளியின்   மனதை   அச்சத்தால்
மாற்றலாம்" என்று  முடிவு  செய்த  முருகன்  தனது   அன்னான்  விநாயகப் பெருமானை வணங்கி  வேண்ட,  அவரும், யானையாக    மாறி,  வள்ளிமுன்  வர, அஞ்சுகின்ற   வள்ளி.முதியவரிடம்,   தன்னைக்  காப்பாற்ற வேண்டுகிறாள்'  அதற்காக   அவர்   என்ன  சொன்னாலும்  கேட்பதாகச்  சொல்கிறாள்;

6. தன்னை    அணைத்தபடி   இருந்த   வள்ளியின்   அச்சத்தைப்  போக்கி அண்ணன்   கயமுகனை   அனுப்பிய  முருகன், அவளைத்   தானும்   
அணை த்துக்   கொண்டான்;  மயில் மீது   அமர்ந்திருக்கும்   ஆறுமுகத் தோற்றத்தைக்   காட்டுவித்து ,அவளின்  முற்பிறவி   வரலாற்றைக்  கூறி,அவளை அடையவே   தான  வந்த   வரலாற்றைச்   சொல்லியபின் 
இருவரும்   மகிழ்ச்சிக்    கடலில்   திளைத்தார்கள் .

7.    அறுவடை    ஆகிவிட்டது;  அதனால்   இனி   தினைப்புனக்   காவல்  இல்லை;  முருகனை   நினைத்தபடியே   வள்ளி  ஊர்   திரும்புகிறாள்;
முருகனும்,   தினைப்புனம்   வந்து   வள்ளியைக்   காணாது  நள்ளிரவில்  
 சீறூ ரை     அடைகிறான்.அங்கு   தோழியிடம்    வள்ளியைத்   தன்னோடு   அனுப்புமாறு   வேண்டுகிறான்.  அவளோ   மறுக்கிறாள்.அவளைத்   தன்னோடு   அனுப்பாவிடில்   மறுநாள்   மடல்  ஏறுவதாக   அச்சுறுத்துகிறான்.
அதனால்   அஞ்சிய   தோழி  நள்ளிரவில்   தலைவியான    வள்ளியை  "உடன்போக்கு "  செல்ல   உடன்படுகிறாள்.இருவரும்   ஊரெல்லாம்  உறங்கியபிறகு  வெளியேறுகிறார்கள்.

8.  மறுநாள்   வள்ளியைக்    காணாத  பெற்றோரும், ஊர்மக்களும், அவளைத்  தேடி  அலைகின்றனர்,   தோழி   வாயிலாக   உண்மை  அறிந்து  அவ்விருவர்  சென்ற்   வழியில்  சென்று, அவர்களைத்  தடுத்து, நிறுத்த, அங்கு  பெரும் போர்  ஏற்படுகிறது. வள்ளியின்    அச்சத்தைப்  போக்கிய   முருகன்  சூரன்
படையையே  அழித்தவன்" இவர்களைப்   பார்! என்று   கூறிவிட்டு, அப்படைகளை   நம்பியை,  அவனது   மகன்களை  அழித்து விடுகிறார்,
தனது   தந்தை, அண்ணன்  சுற்றம்  அழிந்த  நிலை  கண்டு, வள்ளி   துயர்  கொள்கிறாள். ஆயினும்   முருகனைப்   பின்  தொடர்கிறாள். அவ்வழி  வந்த   நாரதரின்   சொல்லினால்  முருகன்   வள்ளியைக்   கொண்டே  அவர்களை   எழுப்ப  வைக்கிறான். அவர்கள்   அனைவரும்   உயிர் பெற்று   எழுகின்றனர்
அவர்களுக்கு  முருகன்,  ஆறுமுகங்களும், ஆறிரு  கரங்களும்,
கொண்டு,மயில் மீது    காட்சி   அளிக்கிறார்.

9.    பண்பாடு   மிக்க   வேட்டுவர்   குல  மரபை   எடுத்துக்   கூறி, அக்குலப்
பெண்ணை  இவ்வாறு,   அழைத்து வருதல்   அவர்களை  மிகவும்  தாழ்மைப் படுத்தும். ஆதலின்   மீண்டும்   அவர்கள்   ஊரான   சீறூருக்குச்   சென்று  அங்கேயே   வள்ளியை   மணந்துகொண்டு   வருவதே  முறை"   என  நாரதர்
கூறியதும்,எல்லோரும்   சீறூர்  செல்கின்றனர்.  அங்கே   அவ்வூர்   மக்கள்
வள்ளி. கடவுளின்  மனையாளாய்   ஆகி, தேவகுலப்   பெண்ணனாக   ஆகப்
போகும்   வள்ளியைப்   போற்றி வணங்கி  மகிழ்கின்றனர்.

10.     மறுநாள்   வானத்திலிருந்து   விண்ணவர்களும், எம்பெருமான்  பார்வதியுடன்  வாழ்த்த, கொடிச்சியும், நம்பியும், தங்கள்   மக்களை  ஆறுமுகக்   கடவுளுக்குத்   தாரை   வாரத்துக்   கொடுக்க  வேடர்குலம் வாழ்த்தி வணங்க, வள்ளித்   திருமணம்   நன்கே     நடைபெற்றது.

           இறுதியாக   போற்றிடும்   வாழ்த்துப்பா   நேரிசை  வெண்பாவால்
அமைகிறது,
           வள்ளியைத்       திருமணம்   செய்துகொண்ட   ஆறுமுகக்  கடவுளின்
சேவடி  மலர்கள்  வாழ்க.   வள்ளியம்மை  நெடுந்தவம்  இருந்து, முருகனையே  கணவனாகக்  கொண்ட  அன்பு   உள்ளம்    வாழ்க. கன்னியாகுடி   என்னும்   ஊரிலே   வீற்றிருக்கும், விநாயகப் பெருமான்   வாழ்க. கைலாசநாதர்  கல்யாணி   அம்மை   வாழக். வாழ்க.


                                                        விளக்கம்

1.    வாரிருங்கூந்தல்                                      = அழகிய,கருமைக் கூந்தல்
2.    செம்புயல்                                                   =  மேகம்(கருணை)
3.    காணா                                                          =   கண்டு,
4.    பஞ்சுமுடி                                                     =   வெள்ளை முடி
5.    நிர்மலம்                                                       =    தூய்மை
6.    பிணை நெஞ்சு                                          =    ஒன்று பட்ட மனம்
7.    இருள்                                                              =    இரவு
8.    நேர்                                                                  =    உயிரளித்து,ஏற்றுக் கொண்டது.
9.    கடவுளாய்                                                     =    தேவகுல மகளாய்
10.   அம்புயம்                                                       =    வள்ளி


                                                        இலக்கணம்

1.    உரை  ........................................முன்னிலை ஒருமை  வினைமுற்று
3.    காணா ......................................செய்யா   என்னும்  வாய்ப்பாட்டு                                                                                                 வினையெச்சம் 
        அஞ்சுகம்,  அம்புயம் ....................உவமை   ஆகுபெயர் கள்.
9.    நனிஉயிர் ..........................................உரிச்சொற்றொடர் .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக