செவ்வாய், 19 மே, 2020



                   6. 7. வேள்விச்சாலை   அழித்தல் 


1.    குமரன்போல்    குட்டினான்     சிட்டனைக்      கையால் 
       தமரெனத்     தாள்பணி    தாழ்.

2.    கலைமகள்      மூக்கும்,     முலையும்    சிதைத்தான்;
       அலைமகள்     அவ்வழி   கேடு.

3.     நிலவினைக்     காலால்    நிலத்தினில்     தேய்த்து,
        வலம்  வரும்    ஆதவன்    வாட்டு.

4.     கூற்றுவன்      அச்சத்தால்   அங்குமிங்கும்    ஓடவே,
        கூற்றெனக்      கொய்தான்    தலை.

5.     மாங்குயிலாய்    இந்திரன்     மாடம்      மறைந்தகாலை 
        வாங்கினான்       வாளால்      கரம்.

6.     அழலின்      கரமும்,      அருநாவும்       சிதைத்து,
        அழல் தேவி       மூக்கும்    மறை.

7.     நிருதிப்       புடையல் ;   வருணன்   உடை, கால்,
        பெருவேள்வித      தீத்தலை    போக்கு.

8.     புலம்பியழு     தக்கன்      புன்தலை    வெட்டி,
        நல வேள்வித்   தீயில்    எறி .

9.     வேதவல்லி,   வியன்சுற்றம்    விண்ணவர்    கூட்டம் 
         பூத,  காளி    பொன்னுயிர்    நீக்கு.

10.   நெடும்போர்     புரிந்த    நெடுமால்     துவண்டு,
         நடுங்குகாலை     வான்தோன்று    சொல்.


                                                 பொருள்

1.  தனது   கதையினால்  தக்கனது   மார்பில்   அடித்து, அவனை நிலத்தில்
வீழ்த்திய  வீரர்,  வேள்விக்கு   முன்னாள்   அமர்ந்துகொண்டு,  இதுவரை  வேள்வி புரிந்த  ஆசானாக  அமர்ந்திருந்த   நான்முகனைச்   சீற்றத்துடன்  பார்த்தார்.  அன்று   பிரணவப்   பொருள்   தெரியாமல்   விழித்தகாலை  எம்பெருமான்  திருக்குமரன்  தலையில்   குட்டியதைப்  போலத்    தானும்,
பிரமன்   தலையில்  ஒரு   குட்டு     குட்டினார்.  பிரமனோ   அப்படியே  சாய்ந்து ,வீரபத்திரர்     காலில்   தஞ்சம்   அடைந்தார். 

2.   நான்முகன்    பக்கத்தில்   அமர்ந்திருந்த   கலை வாணி  அவளின்  மூக்கைக்  கொய்தார்;  மார்பகத்தைச்    சிதைத்தார்.  அது போலவே  திருமால் பக்கத்தில்    அமர்ந்திருந்த   இலக்குமியின்   மூக்கையும்,
மார்பகத்தையும்    சிதைத்தார்.

3.   அமர்ந்திருந்த   சந்திரனை   அப்படியே   தன்    காலால்  உதைத்து, நசுக்கி,
நிலத்தோடு     அழுத்தித்   தேய்த்தார். ஆதவனைக்   கண்டார்; அவன்  கண்களைப்   பிடுங்கினார்; கன்னத்தில்   அறைந்து   பற்களை   உதிர  வைத்தார்.

4.   இவைகளைக்   கண்ணுற்ற   யமன்,  அஞ்சியபடி   ஓடினான். அவனது   தலையைத்   தனது  அம்பினால்  கொய்து  எடுத்துத்    தூர   எறிந்தார்.

5.  வீரபத்திரரின்   செயலைக்   கண்டு கொண்டிருந்த  இந்திரன், உயிருக்கு  அஞ்சி, ஒரு   குயிலாக   உருவெடுத்தபடி  மாடம்   நோக்கிப்  பறந்தான்.
அவனது   கைகளை   வாளால்   வெட்டி   வீழ்த்தினார் வீரர்.

6.      அக்கினி    எரியும்    அவனது   தீ  நாவைத்    துண்டித்தார்; கரத்தை  வெட்டினார்.  அவனருகே    அமர்ந்திருந்த   அவனது  மனைவியின்   மூக்கைக்   கிள்ளி   எடுத்தார்.

7.   நிருதியைக்  கண்டு, அவனை  நன்கு   அடித்துத்   துவைத்தார். வருணனது
கால்களை   வெட்டி  அவனை  வீழ்த்தினார்."யாக புருஷன்"  என   அழைக்கப் படும், வேள்வித்தலைவன்    தலையை    வெட்டி   அவ்வேள்வியிலேயே  போட்டார்.

8.  மயக்கம்   தெளிந்த   தக்கன்,   தான்   தவறு   செய்து  விட்டதாகவும்,தந்தை நான்முகன்   சொல்லைக்  கேட்டு  இறைவனுக்கு  அவிர்ப்பலி  கொடுத்திருக்க வேண்டும், என்றும், ததீசி   முனிவரது   சொற்படி   நடந்திருக்க   வேண்டும்  என்றும் புலம்பினான்.  எம்பெருமானை   ஏளனம்  செய்த   நீ   அழிந்துபோக  வேண்டும்"  என்று   சொல்லியபடி,  அவனது   தலையை  வெட்டி, அதனைத்  ததனது  கையிலே  வாங்கி,வேள்வித்    தீயிலே  விட்டெறிந்தார்.

9.  தக்கனின்   மனைவி, வேதவல்லி,  இன்னும்   பல  மனைவியர், உறவுக்காரப்
பெண்கள்   போன்றோரை   ஒரே   அடியாக   அடித்து, பத்ரகாளி   கொன்றாள்.
 விண்ணவர்களை,  அந்தணர்களை,  முனிவர்களை   எல்லாம்  பூதப்படைகள்    அடித்து   உதைத்து, மாள  வைத்தனர்.

10.  எல்லாவற்றையும்    கவனித்துக்   கொண்டிருந்த   திருமாலுக்கு,வந்தது சினம்.  தனது   கருட   வாகனத்தின் மீது   ஏறி   அமர்ந்தபடிப்    போருக்குத்
தயாரானார். வீரபத்திரர்க்கும்,  திருமாலுக்கும்   நெடுநேரம்  போர்  நடந்தது.
மாற்றி,மாற்றி   அத்திரங் களை   எய்தனர். சக்கரப்  படையை  மாலவன்  விட அதை   அப்படியே   கையில்  வாங்கிக்கொண்டார்  வீரர்.முடிவில்  தோற்றுக்
களைத்துப்    போன   திருமாலை  தனது   "ஹும் "  கார   ஒலியால்  அழிக்க வீரர்   முனையும்   பொழுது,  வானத்திலே   தோன்றிய   சிவபெருமான் " நிறுத்து  வீரபத்திர!"  என்றதும்  திருமால்   உயிர் பிழைத்தார்.  வீரரும் இறைவனை   வணங்கியபடி  நின்றார்.


                                                   விளக்கம்

1.     சிட்டன்                                             = நான்முகன்
2.     கேடு                                                  =  துயர்
7.     நிருதி                                                =  எண்திசை  அதிபதிகளுள்   ஒருவர்
9.     வேதவல்லி                                     =   தக்கன்   மனைவி
10.   சொல்                                               =   அசரீரி


                                                 இலக்கணம்

பொன்னுயிர்..............................................உவமைத்தொகை






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக