6. தக்ஷ காண்டம்
1. உபதேசம்
1. வேதத்தான் வேண்டிநின்ற தக்கன் வியன்பெற
நாதத்தான் நற்றவமே நாடு.
2. நாடினான் நல்லடி; தேடினான் செல்வங்கள்;
கூடிவாழ் கோமகள் ஏற்று.
3. மாவரத்தால் தேவரும், மாதவன் மற்றோரும்
சேவடி போற்றச் செருக்கு.
4. ஆயிரம் ஆயிரம் ஆன்ற புதல்வர்கள்
காய்தவ வீடடைந்தார். ஊறு.
5. நாரத நாட்சாபம் நாடவைத்த நங்கையர்
பேர்முனி பற்பலர் பெற்று.
6. இருபத்தேழ் கன்னியர் ஏற்றான் மதிதான்;
அருவிதி மீ றி எழுந்து.
7. நிலவைச் சபித்தான்; நிலவோ சிவனால்
கலைவளர் காட்சியால் கனல்.
8. கண்பொத்திக் கோலமாட்சி கண்மறைக் காருலகு;
தண்டனை த் தொல்லரசி தான்.
9. ஆறுநலக் காளிந்தி நாறுமலர்த தாமரை
பேறு மகள் தக்கன் கரம்.
10. கற்றுநீ நற்றிரு உற்றகாலை வந்துநான்
பற்றுன்னைப் பெற்றிடுவேன் போ.
பொருள்
1. நான்முகனின் புதல்வர்களில் மூத்தவனும், ஞானவானும் ஆகிய
தக்கன் மூவருள் முதல்வன் யார்/ எனப் பிரம்மனிடம் வினவினான்.
பிரமன் சொன்னான், "முத்தொழில் ஆற்றும் எங்களில் மூத்தவரும்,
திருமால், பிரமன் தேவர், மனிதர்,நரகர் போன்றோரைப் படைத்தவரும்,
சோதி வடிவாகித் தன்னைப் பரம்பொருளாகக் காட்டி அருளியவரும்,
சிவபெருமானே ஆகும்.அவரைப்பணிதலே உயர்வினைத் தரும். மகனே!
நீயும் எம்பெருமான் சிவனைக் குறித்துத் தவம் இருந்து அவரருள் பெற
முயற்சிப்பாய்! அதுவே உன்னை உயர்த்தும்" என்று சிவப்பெருமையை
மகனுக்கு உபதேசம் செய்தார்.
2. தக்கனும், இமயமலைச் சாரலை அடைந்தான்; "மானசரோவர்" எனப்
படும் நீர்நிலையில் நீராடி, அன்றாடம் ஆற்றவேண்டிய முறைத்தவறாப்
பூஜைகளைச் செய்தான்; சிவலிங்கம் நிறுவி, அதற்குப் பூஜை செய்தான்;
அப்படியே சிவனின் பெயரை உச்சரித்தபடியே ஆயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினான்; அம்மை பார்வதியுடன் தக்கன் முன் தோன்றி
அவன் வேண்டிய வரங்களைக் கொடுத்தார்.அவன் கேட்ட வரங்கள்
1, சிவனைப் போன்ற உயர்வு
2. எந்த சக்தியாலும் அழிக்க இயலாத உடல்
3. திருமால்,பிரமன், தேவர்கள் போன்றோர் அடிபணியும் சிறப்பு
4. செல்வம், மனை, நாடு , ஆட்சி போன்றவை
5. பார்வதி தேவி, தனக்கு மகளாகப் பிறந்து, அவளை ஈசனே
மணந்து,தனக்கு மருமகன் ஆகுதல்.
போன்ற பலப்பல வரங்களைப்பெற்றான் .
3. இறைவன் அளித்த வரத்தால் திருமாலும்,தேவர்களும் உலகோரும் தன்னை வணங்கிப் போற்றியதால் தக்கன் மிக்க செருக்கு உற்றான்.
தானே முதல்வன் என்ற எண்ணம் அவன் மனத்திலே தோன்றியது.
தந்தைக்கு ஆணையிட்டு, நாடு,நகரங்களை பெற்றான்."தக்கமாபுரி"
என்னும் நகரை உருவாக்கி ஆண்டான்; "வேதவல்லி" என்னும் பெண்ணை மணந்து கொண்டான்;
4. ஆயிரம் புதல்வர்களைப் பெற்றெடுத்தான்; அவர்களைத் தவம் செய்து
இறைவனிடம் இன்பங்களைப் பெற்றுவர அனுப்பினான்;தவம் செய்துவந்த சிறார்களைச் சந்தித்த "நாரதர்" முக்தி பெறுதலே நோக்கமாகத் தவம் செய்யுமாறு அவர்களது மனத்தை மாற்றித் தவம்
செய்ய வைத்து, அவர்களுக்கு வீடுபேறு அடைய வைத்தார்.
தனது மகன்கள் வராமை கண்டு, செய்தி அறிந்த தக்கன் மீண்டும் ஆயிரம் புதல்வர்களை பெற்றெடுத்தான் அவர்களும் முன்னர் நடந்த முறையிலேயே முக்தி அடைந்தனர்.தனது செயல்கள் தடுக்கப் படுவதை நினைந்து வேதனை அடைந்த தக்கன் அதன் மூல காரணம் நாரதர் என்பதை உணர்ந்தான்;
5. நாரதருக்கு சாபம் கொடுத்த தக்கன் இனி தமக்குப் பெண்
குழந்தைகளே போதும் என்று முடிவு செய்து நிறைய பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களை, நற்றவ முனிவர்களான
பிருகு, மரீசி,புலத்தியன், வசிட்டன், அத்திகிரி, பிதரா போன்றோருக்கு,
மணம் செய்து வைத்தான். அவர்கள் பெரிய பரம்பரையை உருவாக்கினர்.
6. அதன் பின்னர் இருபத்தேழு பெண்களைப் பெற்றெடுத்தான்.
அவர்களை, வான்மதியாகிய சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
ஒரு நிபந்தனையுடன் தன் பெண்களைச் சந்திரனுக்குக்கொடுத்தான்
இருபத்தேழு மகள்களையும் ஏற்றத்தாழ்வு காண்பிக்காமல் ஒரே
மனநிலையில் நடந்து கொள்ள வேண்டும்; ஒருவர் மீது நிறைய அன்பும்,
மற்றவள் மீது குறைந்த அன்பும் காட்டக்கூடாது. என்னும் விதி வகுத்துக் கொடுத்தான் அவ்விதியை மீறி.இருபத்தேழு கன்னியர்களில் "உரோகிணி"
மீது மட்டும், பெருங்காதல் கொண்டு மற்றவர்களை அலட்சியப்
படுத்தினான் அதனை அவர்கள் தக்கனிடம் அழுகையோடு தெரிவித்தனர். சினமுற்றான் தக்கன்.
7. தக்கன் சந்திரனைச் சபித்தான். அவனது அழகுக் கலைகள் அவனை விட்டு மறையட்டும். அழகற்று அவன் விளங்குக"
என்று. அதனால் மனம் வருந்திய சந்திரன் பிரம்மனிடம் சென்று, தன்னைக் காக்குமாறு வேண்டினான்; பிரமனோ தக்கனுக்கு அஞ்சி,
அருள் காட்டவில்லை. திருமாலிடம் சென்று சந்திரன் கெஞ்சினான்;
திருமாலும், தக்கனுக்கு அஞ்சி இவ்வுதவியும் செய்யவில்லை; நாரதர்
கூற்றிற்கு இணங்க, அவன் சிவபெருமானைப் போற்றி வணங்கித்
தனது அவலத்தை எடுத்துரைக்குத்தான்;
கருணையே வடிவான நம்பிக்கையோடு அமர்ந்திருந்த சிவனார் அழியும் நிலையில் அமைந்திருந்த அவனது கலைக்கோட்டை, பிறையை,மூன்றாம் கலையை எடுத்துத் தனது தலையிலே சூட்டிக் கொண்டார்.மேலும்,
அவனது அழகுக்கலைகள் வளர்ந்தும், தேய்ந்தும் அமையும்" என்றும் அவனது அழகை அவனுக்கே அளித்தார். அதனால் சிவன் மீது தக்கனுக்குப் பெருங்கோபம் உண்டாயிற்று.சிவனை வெறுக்கத் தொடங்கினான்.
8 கயிலையில் அம்மையப்பர் தனியே அமர்ந்திருந்தனர்; அன்னை
விளையாட்டாக, இறைவன் கண்ணைத் தன் இருகைகளால் பொத்தினாள். உலகே இருண்டது; சூரியன் ஒளி இழந்தான்; நிலவைக் காணவில்லை; விண்மீன்கள் ஒளிரவில்லை; காக்க மறந்தார் திருமால்;
படைக்க முடியவில்லை நான்முகனால்; கோள்கள் இயங்கவில்லை;
உண்மை உணர்ந்து அஞ்சி நடுங்கிய உமையம்மை பொத்திய ளள்ள கைகளை எடுத்தாள்; மீண்டும் உலகு இயங்கத் தொடங்கியது.
ஒரு நொடிக்குள் ஏற்பட்ட இந்நிகழ்வுக்குத் தானே காரணம்"என்பதை
உணர்ந்த அம்மை,ஈசனை வணங்கித் தனது,செயலுக்கு மன்னிப்பு
வேண்டினார்; அச்செயலுக்காகத் தனக்குத் தண்டணை அளிக்கவேண்டும்" எனவும் விண்ணப்பித்தாள்.
9. இறைவியின் உயர்ந்த நோக்கத்தை உணர்ந்த இறைவன்,அவளுக்குத் தண்டனையும், அதிலிருந்து விடுப்பும், வழங்கினார். "உமையே! நீ நிலவுலகில் உள்ள காளிந்தி என்னும் புனித நதியின் கறைக்குச் செல்;
அங்கு நீரில் மலர்ந்துள்ள தாமரை மலரில் குழந்தையாக மாறி அமர்ந்து கொள் ; அங்கு நீராட வரும் தக்கன் உன்னைக் கண்டு மகிழ்ந்து உன்னைத் தன் மகளாக வளர்ப்பான்;அங்கு வளர்ந்து கொண்டிரு.
10. உன்னை மகளாக அடையவேண்டி அவன் தவம் இருந்தவன்; ஆதலால் அவன் உன்னைச் சீரும் சிறப்புமாக வளர்ப்பான்.ஐந்து வயது
ஆனதும் தாய்தந்தை உதவியுடன் எம்மை நினைந்து தவம் செய்;
பன்னிரண்டு வயதான காலத்தில் நாமே வந்து உம்மை மணந்து,எம் உடலில் சரிபாதியை உனக்கு அளிப்போம்.செல்! என்று சொன்னதும் உமையம்மை புறப்பட்டாள்.
விளக்கம்
1. வேதத்தான் = பிரமன்
நாதத்தான் = சிவபெருமான்
2. நல்லடி = சிவன் சேவடி
3, செருக்கு = ஆணவம்
4. காய்தவம் = கடுமையான தவம்
5. பேர்முனி = பெருமையான முனிவர்கள்
6. அருவிதி = இருபத்தேழு பெண்களிடமும் ஒரே மாதிரியான அன்பு செலுத்துதல்
என்னும் விதி.
7. கனல் = தீயன்ன சினம்
8. தொல்லரசி = பார்வதி
9. பேறு மகள் = இறையருளால் கிடைத்த மகள்
10, பற்று = பாதியுடல் பற்று
இலக்கணம்
மாவரம்................................................உரிச்சொற்றொடர்
சேவடி....................................................பண்புத் தொகை
ஆயிரம் ஆயிரம்..............................அடுக்குத்தொடர்
நாறுமலர் .............................................வினைத் தொகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக