வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

                                     தெய்வயானை  திருமணம்

1.   வெற்றிதந்த  வேலனுக்கு   விண்வேந்தன்   தன்மகளைப்
       பற்றுமனை  நற்பரிசு  என்.

2. மாலயன்    மாத்தேவர்   மண்டலங்கள்   தாமறியக்
    கோலமணம்   கூறினான்  மன்.

3. விண்ணவரோ   இம்மலையே   வேலன்   திருமணம்
    என்னதவம்   என்றுமகிழ்ந்   தார்.

4.  இந்திராணி   வந்துசேரக்   கந்தனின்  தாள்பணிந்து
     அந்திமலர்    ஏற்றிடுக  அன்பு.

5.  மூச்சிலும்   எம்மை   முதலாகக்   கண்டவள்
     மூச்சே   நுகர்மலர்  செல்க.

6.  தேவதச்சன்  குன்றத்தைத்   தேவநகர்   ஆக்கினான்;
      மூவுலகும்   மாமகிழ்வில்  கூடு.

7.   சோழன்    முசுகுந்தன்    வாழ்த்தி   வணங்கிட
      வேழமகள்     வேலன்   மணம்.

8.  பாலால்   அலம்பிப்  புடவையால்  ஒத்தியே
     கால்தொட்டுக்   கண்ணொத்தி   வா.

9. சிவசக்தி   முன்னால்   தவமுனிவர்  வேதம்
    புவனத்தின்   புண்ணியம்  பார்.

1௦. தேவாள்   திருக்கரம்    தேவன்   கரத்திட்டுப்
      பூவிட்டுப்  போற்றினான்  நன்று.

                                                பொருள்

1    நெடுநாள்  பகவனான   சூரபன்மனை   வீழ்த்தி,வெற்றிகண்ட  முருகப்
பெருமானுக்குத்   தனது  நன்றிக்கடனாக,வெற்றிப்பரிசாகத்  தன்மகள்
தெய்வயானையை   மணம்   செய்து கொடுக்க  விரும்பினான்   இந்திரன்,
   
 2. திருமாலையும்,நான்முகனையும்   வணங்கிய  இந்திரன் தேவர்கள்   அனைவரையும்  வரவழைத்துத்   தன்  மகளைச்   சுசுப்பிரமணியக்
கடவுளுக்கு  மணம்   முடித்துக்   கொடுக்க விரும்பும்  மங்கலச்  செய்தியைக்
கூறினான்.அதுகேட்டு   எல்லோரும் மகிழ்ந்தனர்.
   
3.  நல்ல   செய்தி   அறிந்த   தேவர்கள்   அந்த   சுப மங்கலம்  இந்த
திருப்பரங்குன்ற   மலையிலேயே  நடத்தப்பட வேண்டும், எனவும்   அதுவே
முருகனுக்கு   உகந்த   மலை   எனவும்  கூறினர். இத்திருமணத்தைக்   காண
மனத்திலே   தோன்றும்   மகிழ்வுக்கு   அளவே   இல்லை  என  மகிழ்ந்தனர்.

4.  மேருமலை யில்   தங்கியிருந்த   இந்திராணிக்கு, வெற்றிபெற்ற  செய்தியையும்,வெற்றியை  அளித்த   முருகனுக்குத்  தெய்வயானையை
மணம்  முடிக்க இருப்பதையும்  கூறி,அவளை  அழைத்துவரப்  பணித்தான்
இந்திரன். ஓடோடி   வந்த இந்திராணி மகன்  சயந்தனைக் கட்டித்தழுவி
அன்பு   பாராட்டிப்  பின் கணவனையும்  பணிந்தாள்.மங்கலப்  பொருட்களுடன்  மாமுருகன்   சன்னதி அடைந்து,நன்றியோடு   வணங்கினாள்   இந்திரனுடன். தங்கள்   மகள்  தெய்வயானையை  மணக்குமாறு  பணிவோடு   வேண்டினர்.

5.   முறுவலித்த  முருகன், நாளெல்லாம், நினைவெல்லாம்  என்னையே  நினைந்து  தவம்  இயற்றி,எமது   ஆணையால் உம மகளாகப்  பிறந்து வளர்ந்து  வரும் தெய்வயானையை  நாளையே   மணப்பென்" மகிழ்வோடு
செல்க.என   அவர்களுக்கு   விடையும்  கொடுத்தான்.

6. இந்திரன்   ஆணை   ஏற்ற  தேவ தச்சன்   திருமணம்  நடக்கவிருக்கும்   திருப்பரங்குன்றத்தை  விண்ணுலகம் போல்   ஆக்கினான்.மூவேழ்  உலகத்தவர்க்கும்   செய்தி   அனுப்பப்பட்டது. எல்லா உலகங்களிலும்  இருந்து
வந்த   மக்களும்,விஞ்சையரும் முனிவர்களும்,மன்னர்களும்  கூடினர்.

7. தனது   மகள்  திருமணச்  செய்தியைச்  சொழமன்னனும்,தனது நண்பனும்
ஆகிய முசுகுந்த மன்னனுக்கு இந்திரன்  அனுப்பிவைத்தான்.சூரனுக்காக
அஞ்சி  வாழ்ந்த  சோழன் மகிழ்வோடு திருமணம்   காணத்  திருப்பரங்குன்றம்  வந்தான்.

8.  காமதேனுவின்  பாலால்   இந்திராணி  மணமகன்  முருகன்   கால்களை அலம்பினாள் ;தனது   புடவைத்   தலைப்பால்  துடைத்துவிட்டாள்;பூக்களால்
இருவரும்  முருகனைப்   பூஜித்தனர்;

9.  திருமால்,பிரமன்   முதலான  தேவர்கள்   தத்தம் இருக்கையில்  அமர்ந்திருக்க,மகனது   திருமணம்   அறிந்த  அம்மையப்பன் வானிலே
எழுந்தருளினார்.அவையினர்   அனைவரும் எழுந்துநின்று  முதற்கடவுளை
வரவேற்க,முருகக்கடவுளும்  தாய் தந்தையரை   வணங்கி   வரவேற்றார்.

1௦.  தனது  மகளின் கரத்தை முருகன்  கரத்திலே   ஒப்படைத்து,இந்திராணி
நீர்வார்க்க,இந்திரன்  தேவயானை யைத்  கன்னிகா தானம்  செய்து கொடுத்தான், தெய்வ யானை   கழுத்திலே   மாலை சூட்டி, மண நாண்
தொடுத்து,தாய்தந்தையர்  தேவர்கள்  முனிவர்கள்   வாழ்த்த மங்கள் நாணும்
சூட்டி,மகிழ்ந்தான்  வேலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக