வியாழன், 4 ஜனவரி, 2018

                                திருமணம்

எழுமுனி   எண்ணிய    ஏதிலான்    ஏவ
விழுப்பணி    ஆற்ற   விரை.

மேனை    மனத்துயர்    மெல்லவே    நீக்கியே
மானின்    மணக்கோலம்    மாண்பு.

மாலயன்   விண்ணோர்    முனிவர்   கந்தருவர்
ஆலயம்     நாடினர்     ஆங்கு.

பங்குனி    உத்திரம்   மங்கள   சங்கமம்,
எங்குமே   மகிழ்ச்சி   இறை.

நான்முகன்    நல்கிய    நல்லா    பரணங்கள்
தானணி   தத்துவச்    சால்பு.

மூவேழ்   உயிர்கள்    முதிர்மலை    நாடவே
ஓவென்    றமிழ்நிலம்    கா.

குறுமுனி    நின்றதும்     வடதென்     குணமே:
உறுபணி      மேலோன்    அருள்.

மனையாள்    புடைசூழ்    இமவான்      அளித்த
மனையறம்    ஏற்றான்     மணம் .

மறைமுதல்   மாண்புற    மாவேத   வேள்வி
குறைவிலா    தாற்றினான்   காண் .

காட்சிக்    கணவன்   கலையுடன்   காணுவர்
மாட்சி     மறைவில்   மனம்.

                                 பொருள்

1.   தனது  மணம்பற்றிப் பேசத்    தகுதியுள்ள     ஏழு    முனிவர்களைத்
   தன்முன்  வருமாறு  மனதில்    நினைத்தான்,நினைத்த      அளவில்
  இறைவனை   வணங்கியபடி   ஏழு முனிவர்களும்  நின்றனர்.அவர்களை
நோக்கிய     இறைவன்,"முனிவர்களே! எமக்கும்,  மலைமகளுக்கும்  மணம்
பேசிவர,  இமவானிடம்   செல்லுங்கள்.செய்தியைத்   தெரிவித்து    அவர்களிடம்   அனுமதி  பெற்று   வாருங்கள்"   என்றான்.அச்செயல்
தங்களுக்குக்   கிடைத்த   பாக்கியமாகக்   கருதி, மகிழ்வோடு    புறப்பட்டனர்.

                                                  விளக்கம்
எழுமுனி .........


2.   இமவானிடம்  சென்று    இறைவன்   மனத்தெழுந்த   மண  நிலையைக்
கூறினர் .அவன் மகிழ்வுடன் ஏற்றான்.  அவன்  மனையாள்   மேனை
மகளை  அளிக்கச்  சற்றே  தயங்கினாள்.தக்கன்  மக்களை   மணந்த   இறைவன்  அவனையே     சம்ஹாரம்   செய்ததை நினைந்து  தயங்கினாள்.
ஏழு முனிவர்களும்,அவளது  தயக்கத்தைப்  போக்கினார். இறைவனைத்
தக்கன்   அலட்சியப்  படுத்தியது,வேள்வி  வளர்த்து,சிவனுக்குச்  சேர
வேண்டிய   ஹவிர்பாகங்களை     அளிக்காதது,தாக்ஷயணியை    அலட்சியம்
செய்தது  முதலான   காரணங்களால் தக்கன்  தலையை    வீரபத்திரர்
தம்மால் கொய்தார்,  என விளக்கி,மேனையின்   ஐயப் பாட்டைப்  போக்கி,
அவளின்  ஒப்புதலுடன்   மண  நாள்  பேசி  முடித்தனர்,

                                         விளக்கம்
மான்......உவமை ஆகுபெயர்.மலைமகளைக் குறித்தது.

3. மணச்செய்தி    அறிந்ததும்,   பிரமன், திருமால்,இந்திரன்,முதலிய
விண்ணவர், கந்தருவர்,முனிவர்கள்     அகில   உலகமே   மணம்   காண
இமயமலையில்  ஒருசேரக்   கூடினர்.

4.   பங்குனித்    திங்கள்,   உத்திர    நன்னாளில்   சிவபெருமான்,மலைமகள்
திருமணம்    நடைபெறும்,  என,நான்முகன்   விதித்த  நாள்படி    மணம்
நடைபெறும்   என்பதை   அறிந்து   மூவேழ்   உலகங்களும் மகிழ்ச்சிக்
கடலில்     ஆழ்ந்தன.

5.  சிவபெருமானை   அழகு  படுத்த   எண்ணிய   நான்முகன்,"ஐயனே! இந்த
நல்லணிகலன்களை   அணிந்து கொள்ள  வேண்டும்,"  எனப்    பணிவோடு
முத்து,மாணிக்க,  வைரங்களால்   ஆன  அணிகலன்களைச்     சமர்ப்பிக்க,
இறைவனும்,  மகிழ்ந்தபடி,ஏற்றோம்"  இதனை   எனக்    கூறிய    மறுகணம்
பாம்பும்,ஊமத்தையும்,ஓடும்,மறைந்து,    அழகிய   அணிகள்   அணிந்து
விளங்கும்    அழகேசனாகக்    காட்சி   அளித்தார். பற்றற்றான்     பற்றிய
பற்றே    தத்துவமாகும்   அன்றோ!

6.  சிவபெருமான்     திருமண   நிகழ்வைக்   காண     மூவேழ்   உலக  உயிரினங்கள்    ஒருசேர   இமயமாம்   பெருமலையை   அடைந்தன.
அதனால்   வடக்குப்    பகுதி   தாழ்ந்தது.தென்பகுதி   உயர்ந்தது.சமநிலை
இல்லாமல்   உலகு    தவித்தது.

                                                   விளக்கம்
ஓ வென்று ......குறிப்பிடைச்சொல்

7.   உலகின்   துயர்   அறிந்த    சிவனார்   அகத்திய   முனிவரை   மனதில்
நினைத்தார்.வந்து,வணங்கிய  முனிவரை   நோக்கி,"அகத்திய! எம்
திருமண   நிகழ்வைக்  காண  அனைத்து  உயிர்களும்,வடமலையை
அடைந்ததால் ,தென்பகுதி   உயர்ந்தும்,வடபகுதி  தாழ்ந்தும்  உலகு
துன்புறுகிறது.நீ  உடன்  தென்பகுதி  நோக்கிச் சென்று   அங்கேயே  அமர்.
உலகம்  சமநிலை  பெறும் "  என்றதும்,மண  நிகழ்வைத்     தானும்   காண
விரும்பிய   அவர்  மணக்குறிப்பறிந்து, உனக்கு  அங்கேயே   மண   நிகழ்வைக்
காண   வழிவகுப்போம்,"என்ற    இறைவன்   சொல்லைத்     தலைமேற்கொண்டு,  தென்பகுதி  சென்றார்   அகத்தியர்.இருபக்கமும்
சமநிலையைப்  பெற்றது.உலகு  மகிழ்ந்தது.  இறைவன்    அருளும், அகத்திய
முனிவரின்    தவ  வலிமையும்  உலகைச்    சமப்படுத்தின.

8...மேனை     துணையோடும்,சான்றோர்   விருப்பதோடும்,தேவர்   குறை
களைதல்  என்னும் செயலோடும்,தன்மகள்   மலைமகளை   இறைவன்
கையில்   மணமகளாய்த்    தாரை   வார்த்துக்  கொடுத்தான்   இமவான்.
இறைவன்,  மலைமகள்  திருமணம் இனிதே  நிறைவேறியது.

9.   வேத  முதல்வனாகவும்,எல்லாச்    சடங்குகளுக்கும்   முதல்வனாகவும்
விளங்கும்    சிவபெருமான்,திருமணம்  முடிந்ததும்,முனிவர்கள்    வழிகாட்ட,
மணச்சடங்குகளை,முறைப்படி  இயற்றினார்.  வழி வழி   மரபுகளைக்
கடைப்பிடித்த   இறைவனின்   பெருமையைப்  போற்றி   வணங்குவோம்.

10.   மண   நிகழ்வு   முடிந்து,எல்லோருக்கும்   அருள்  வழங்கிய  சிவனார்
தன்   துணையாள்   தொடர்ந்து  வரக்   கயிலை  புறப்பட்டார். வழியில்
துயரே   உருவாய்   நிற்கும்   இரதியைப்     பார்த்து,"இரதியே!  இதோ  உன்
கணவன்   மன்மதன் .உயிர்த்தெழுவான்.அவன்  உனக்கு   மட்டுமே  உருவாய்க்  காட்சி  தருவான்.உலகோர் அவனைக்  காண  இயலாது.தென்றல்,
இளவேனில், நிலவு,போன்ற  மனமயக்க   இயற்கை அமைப்பில்   அவன்
காட்சி  தருவான்.  கவலற்க "  என்றருளி,இரதிக்கும்  மகிழ்வை   வழங்கினார்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக