சனி, 2 டிசம்பர், 2017

     திரு ஞான சம்பந்தர் தேவாரத்தின் முழுமைப்பொருள் "இயற்கை எழிலே இறைவன் தோற்றம் " என்பதே .

நோக்கம் ......இறைவன் போற்றுவதே முழு நோக்கமாகக் கொண்ட தேவார ,
திருமுறைப் பாடல்களில் தலம் ,தீர்த்தம்,மூர்த்தி என மும்மைப் பொருள்
விளக்கமாய்ப் பேசப்படுகிறது.தலங்களையும்,தீர்த்தத்தையும் விளக்கப்
பெரிதும் பயன்படுவது இயற்கை வருணனை ஆகும்.அதுவே மூர்த்தியாம்
இறைவன் தோற்றம் சார்ந்த எழில்.இயற்கை வருணனையை இறைத்தன்மையோடு ஒருமித்துப் பார்த்தல் நோக்கமாகும்.

இறைவனும் இயற்கையும் ......இறைவனால் படைக்கப் பட்ட நிலவுலகம் ,
ஆங்கு  அழகும் கலையும்  இயைந்து இறைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. வெளிப்பாட்டின் விளைவு அழகெல்லாம் ஆண்டவன்.
அந்த அழகு செடியில்.பூவில்,காயில்,கனியில் நிலவில்,கடலலைகளில்
காணப்படுகிறது.பாடும் அடியவர் பரமனைப் போற்ற முனையும் பொழுதெல்லாம்  இயற்கையைப் போற்றுகிறார்.இயற்கையை விளக்கும்
பொழுதெல்லாம் இறைவனை எழிலாக்குகிறார்.இறைவன்...இயற்கை
இரண்டும் பிரிக்க முடியாத எழில் சேர்க்கை எனலாம்.

உவமை .....தெரிந்த ஒன்றால்  தெரியாத ஒன்றை விளக்குவதே உவமை .
தேவாரப்பாடல்களில் இயற்கை தழுவிய உவமை வாயிலாக,இறைவனது
வண்ணம்,கருணை,அருட்டன்மை போன்றன விளக்குவது தேவார ஆசிரியர்களின்  உயரிய நோக்காக அமைந்துள்ளது.

மறுப்பும்,வெறுப்பும்......இறைவன் இல்லை என மறுப்பவர்களை
,இயற்கையின்  அழகு காட்டி,வனப்பை விளக்கி அதுபோன்றவன் என்றோ.
அதுவாகவே விளங்குபவன் என்றோ கூறும் பொழுது மறுப்பு பலவீனம்
அடைகிறது. இறைவனை வெறுக்கும் உள்ளம் கொண்டவர்கள் கூட,
"மாசில் வீணை,மாலை மதியம்,வீசு தென்றல்,வீங்கிள வேனில் ,வண்டுறை
பொய்கை  "என்றதும் அங்கே ,அச்சொல் அழகில்,இயற்கை சூழலில்
அவரையறியாமல் ஈடுபாடு காட்டுவர்.வெறுப்பு விலகி,பற்று தோன்றும்.

கோட்பாடு.....இலக்கியக் கோட்பாட்டின் இன்றைய எழுச்சி மிக்க நிலையில்
இயற்கை  வருணனை,தனியிடம் பெறுகிறது.அதே கோட்பாடு இறைவன்,
இறைத்தன்மை ,போன்றவற்றை,சற்றே விலக்கி  வைக்கிறது.ஆனால்
இயற்கை கலந்த திருத்தலம்,இனிமை கலந்த சோலை,எழில்மிக்க பறவை.
இவைகளும் இறைவனும் ஒன்று,என்றோ,ஒரே தகுதி மிக்கவர்கள் என்றோ.
உவமை வாயிலாக இவற்றைப் படைத்து,இறைவன் கருணையை விளக்கவோ முற்படும் தேவாரப்பாடல்களை உயரிய கோட்பாடு கொண்ட
இலக்கியமாய் ஏற்கும் மனநிலையில் இறைத்தன்மையையும் ஏற்கிறது.

பயன்பாடு,....அறிவியல் ஆய்வின் பயன்பாடு  புதுப்புது கருவிகள்.நுணுக்க
மேம்பாடு என பலப்பல காட்டலாம்.இலக்கிய ஆய்வின் ,பயன்பாடு அறுதியிட்டுக்  காட்டல் இயலாது.ஆயினும் இறையுணர்வு இயற்கை 'உணர்வோடு ஒத்தது,இயற்கையைப் போற்றுதல் இறைவனைப் போற்றுதலுக்குச் சமம்.அழகிய சோலை,அழகிய நீர்நிலை,அழகிய
செடி கொடிகள் இவைகளை பராமரித்தல் இறைவனைப் போற்றுதல்
போன்றது.என்பதோடு,இயற்கையோடு ஒன்றிய வாழ்வும் வளர  வழி
வகுக்கப் பயன்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக