ஞாயிறு, 26 நவம்பர், 2017

                                 காம தகனம்

1. பற்றற்றான்  பற்றுவிடு பற்றிய நற்றவம்
    வற்றிடு பற்றுசுகம்  மற்று.

2.  விண்ணவர் வேந்தன்  விரிமலரான் விந்தனும்
     நண்ணினர்  நாடினர்  ஒன்று.

3.  மன்மதன்  தண்கணை  மாற்றும் மகேசனை:
     இன்னலழி   பொன்வழி   பூண்.

4.  ஐங்கணை  வில்லாற்றல் அன்புள்ளம் இன்பவழி
     ஐக்கியம்   ஆக்கிடும்   காண்.

5,  சிவனவன்   சிந்தையான்  செய்கருமம்  எண்ணி
     அவன்தாள்   அதுவே  துணை.

6.  பனைத்துயர்   செல்வன்   பழியேற்கும்  ஏழை
     வினைச்செயல்   ஏற்றனன்   வேள்.

7.  தென்றல்  இளவேனில் தண்ணிலா  நன்மாலை
     மன்றல்   மனையாள்  மலர்ந்து.

8.  தொட்டனன்   துவண்டனன்  தூநெறி   தொன்முறை
      விட்டனன்   பற்றறு   அம்பு.

9.  கணையும்    அஞ்சியே   கல்லாலன்  நெஞ்சில்
     அணையும்   ஆங்கால்   அறு.

10.  புகைந்தனன்   பொன்னான்  பொறிக்கண்   நெருப்பால்.
       திகைத்தனள்   தேவி  விழுந்து.

                                             பொருள்
1.    பற்றே இல்லாதவன்  பற்றினை விடுத்து ,ஒரே சிந்தனையில்
     தவம் புரிய  அமர்ந்தான்.இறைவனே உலகம்.உலகமே இறைவன்,ஆதலின்
     உலக உயிர்கள் யாவும் இன்பசுகத்தை மறந்து,யோகநிலை தழுவின.
                                           விளக்கம்
   பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பார் வள்ளுவர்.பற்றே  இல்லாதவன்
  பற்று வெறுத்து ,தவம் புரிதல் உலக உயிர்களின் நலன் கருதியே.

2.  சிவபெருமானுக்கு மகன் தோன்றுவான்,நமது துயர் அகலும் என்றிருந்த
தேவர்கள்,தனிமையில் அவர் தவம் இயற்ற அமர்ந்ததும் கலங்கினர்.இந்திரன்
பிரமனை,வேண்ட,பிரமன் திருமாலை வேண்ட,எல்லோரும் கூடிய அவை
ஆற்றவேண்டிய பணி பற்றி ஆய்ந்தது.

3.திருமாலின் ஆலோசனையை ஏற்ற பிரமன் முதலிய தேவர்கள் மன்மதனின்
மலரம்பு மகேசனின் மனத்தை மாற்றும்,என்ற நிலையில்  மன்மதனை
வேண்டினர்.
                                                      விளக்கம்
மன்மதனின் மலரம்பு மனத்தில்  ஆசையை  உண்டாக்கி ,இன்பசுகத்தில்
ஈடுபட வைக்கும்,
ஐங்கணை .......அரவிந்தம்,அசோகம் ,மாம்பூ,மல்லிகை,நீலோத்பலம் என்னும்
ஐந்து மலர்களால் ஆன அம்பு.

4...ஐந்து  மலர்களால் ஆன  அம்பினைக்  கொண்ட  மன்மதன் வில்
மனங்களில் அன்பையும்,இன்பத்தையும் ஊட்டி,இன்பியல் நாட்டம்
கொண்டதாக மாற்றும் ஆற்றல் கொண்டது.அது மகேசனின் மனதில்
மாற்றத்தை உண்டு பண்ணும்.நம்வாழ்விலும்  மாற்றம்  தோற்றுவிக்கும்
குமரனது தோற்றத்திற்கு வழி வகுக்கும்.என்ற  திருமாலின் கருத்தை
அனைவரும் ஏற்றனர்.

5.    சிவன் மீது  மலர்க்கணையா?நெற்றிக்கண் பொசுக்கிவிடும்,என்றெல்லாம்
மறுத்தபோதும் பிரமனின் சாபத்திற்கு அஞ்சிய மன்மதன்,  சிவனே  துணை :
அவரது தாள்களே அபயம் :என்றபடி,அந்த ஈனச்செயல் ஆற்றப் புறப்பட்டான்.

6.செல்வமும்,ஆட்சி அமைப்பும் கொண்ட செல்வனின் மீது ஏற்படும்
பெரும் பழிக்கு,அவனிடம் பணிபுரியும் ஏழைப்   பணியாளன் பலி  ஆவதைப்
போல்,பிரமன் முதலிய தேவர்களின் குற்றத்தால் பெற்ற தணடனையை
நீக்க,மன்மதன் பலியாக்கப் படுகிறான்.
                                                          விளக்கம்
 இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணியாகும்.உவம உருபு மறைந்து நின்று
பொருள் தருவதால்  இவ்வணி ஆயிற்று.
(சிவனை அவமதித்து ,தக்கன்செய்த  வேள்வியில்  கலந்து கொண்டு ஹவிர்
பாகங்களைத் தேவர்கள் பெற்றது குற்றம்.)

7.    நல்ல மாலை நேரமும்,இளவேனிலும் .தென்றலும்,குளிர்நிலவும்,
சூழ்ந்துவரத் தன்  மனையாள் இரதி  தேவியுடன் எம்பெருமான் தவம்
புரியும்  கயிலை மலையை மன்மதன் அடைந்தான்.நந்தி  தேவனிடம்
அனுமதி பெற்று உள்ளே அவர் காட்டிய வழியில் செல்கிறான், நந்தி
தேவரும் சிவனார் இட்ட ஆணைப்படி மன்மதனை உள்ளே அனுப்புகிறார்.

8.   தொன்மை வாய்ந்த நெறியும்,தூய்மை வாய்ந்த நெறியும் தவறிய மன்மதன்  துவண்டு,நடுங்கி,அஞ்சியபடியே வில்லைத் தொட்டான்.
பற்றிலாப் பரமன்மீது,பற்றை உருவாக்கப் ,பற்றினை விட்டது வில்.
பாய்ந்தது அம்பு.

9.    அம்பும் அஞ்சி,அஞ்சிச்  சென்றது:அறத்தைத் தொட்டது:  நெஞ்சத்தைத்
தொட்டது:அந்தோ!  பற்றை விட்டு அறுந்து விழுந்தது.  விட்டவன் ?

10.     புகையாய்ப் பொடியாய்,மண்ணில் கலந்தான் மன்மதன்.சிவனாரின்
நெற்றிக்கண் பொறி எரித்தது மன்மதனை.அருகில் நின்ற கணவன் காணாது
பொடியாகிப் போன நிலைகண்டு,விழுந்து அழுது புலம்பினாள் இரதி .

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக