புதன், 15 நவம்பர், 2017

                                          சிவத்தவம்

1.வெண்பனி     விண்ணார்ந்த    பொன்னொளி    முன்னவன்
   கண்மூன்றான்    காட்சி    மலை .

2. தேவர்    முனிவர்    திரண்டுசூழ்    நந்திதேவன்
    காவல்     கயிலை      மலை.

3.  தக்கவேள்வி     தாக்கமுற்ற     தாட்சா    தலைகுனிவு
     தக்கயெச்சம்     நீக்கிட     நாடு.

4.  இமவான்       தவத்தின்       இயைமகள்     நீயே.
     உமையுனை      ஏற்பேன்     அறி.

5. பத்மத்      தடாகம்        பசுங்குழவி      பார்த்தனன்:
    வித்தெனக்.     கொண்டான்   மகிழ்ந்து.

6. அரக்கர்    அளிதுயர்     ஆண்டகை       காக்க:
    இரந்தனன்      இந்திரன்     தான்.

7. வினையதால்     உம்துயர் ,    விட்டிடும்     வாட்டம்
    புனை மகன்          போக்கிடுவான்    போ.

8. சனகாதி     வேண்டிட      சற்குரு     ஞானம்
    மனத்தடக்கல்   மோனம்      முயல்.

9. மன்மதன்     மட்டுமே    உள்ளிடு   நந்தியே!
    தொன்மையோர்     விட்டிடா   நில்.

10.உலகெலாம்      ஒன்றிடா     உண்சுகப்     பற்றுக்
     கலையெலாம்     காணாத்   தவம்.

                                               பொருள்
1.      வான்முட்டும்  உயர்மலை:வெண்ணிறப் பனிசூழ்ந்த மலை:பொன்னிற
ஒளியும்,மூவர்க்கும் முதலாய் விளங்கும் தன்மையும்,முக்கண்ணும்
கொண்டு விளங்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் மலை:அதுவே கயிலை மலையாகும்.
2.  விண்ணவரும்,முனிவர்களும்,பூதகணங்களும்,அடியவர்களும் இறைவனை  வணங்கக் காத்திருக்கும் மலை:நந்திதேவர் கையில்
கோலுடன் காவல் காக்கும் மலை:அதுவே கயிலை மலை.
3.   அம்மலையில் இறைவனின் துணைவி, தாக்ஷாயணி, தக்ஷனின் மகள்
என்னும் பிறவியை வெறுத்து,அதிலிருந்து விடுக்குமாறு இறைவனை
வேண்டி நின்றாள் .
                                                   விளக்கம்
    தக்ஷ எச்சம் ........   
 தக்ஷன் பிரமனின் மகன்,சிவபக்தன்,தன்  மகளை சிவனுக்கு விருப்பத்துடன் தாரை வார்த்துக் கொடுத்தான்.அதேபோல் சந்திரனுக்கும்
தனது இருபத்தேழு மகள்களை மணமுடித்துக் கொடுத்தான்.சந்திரன்
உரோகிணியோடு மட்டுமே அன்பு கொண்டதை பிற மகளிர் வாயிலாக
அறிந்து சந்திரனது கலை ,அழகெல்லாம் அழியுமாறு சபித்தான்.சந்திரனது
போற்றலில் மகிழ்ந்த சிவன் அவனைத் தன தலையில் அணிந்து கொண்டு
அவனது கலை ,வளரவும்,தேயவும் அருள்புரிந்தார்.அதனால் சினந்த தக்ஷன்
சிவனை வெறுத்தொதுக்கினான்.சிவனை அவமானப் படுத்த,சிவன் தவிர
ஏனைய தேவர்களுக்கு ஹவிஸ் கொடுக்கும் வேள்வி தொடங்கினான்.
அவ்வேள்விக்குச் சென்ற மகளையும் அவமபருவத தித்தான்.இறைவனின்
அம்சமாகிய வீரபத்திரர் வேள்வியில் தோன்றி,அவனது தலையைக்
கொய்தார்.ஆயினும் அவன் மகள் என்று சொல்வதையே விரும்பாத இறைவி,
தன்னை வேறு பிறப்பில் பிறக்கவைத்து,இறைவனே மணாளனாக வர வேண்டும்  என வரம் கேட்டாள்.
4.  இமயமலை மலைகளுக்கு அரசன்,இமவான் என்னும் பெயர் கொண்ட அவன் தனக்குப் பெண்குழந்தை வேண்டும்,எனத்தவம் இருக்கிறான்,அவன்
மகளாகத் தோன்றி,உமா என்னும் பெயரோடு விளங்கு.யாமே வந்து
உன்னை மணம் கொள்வோம்,"எனத் தன் மனையாளுக்கு  வரம் அருகினார்.

5.  இமயமலை நடுவே அமைந்துள்ள தாமரைத் தடாகம் அருகே  மெய்
மறந்து இறைவனையே எண்ணியிருந்த இமவான்,மலர்ந்த  தாமரை மலருள்
அழகிய குழந்தையைக் கண்டான்.இறைவன் தந்த அருள்" என நினைந்து
மென்மையாய்க் கையிலே எடுத்து,மகிழ்ந்து தன மனைவி மேனையிடம்
அழகுக்கு குழந்தையைக் கொடுத்தான். பருவத மன்னனின் மகள் "பார்வதி "
மலைநாட்டில் வளரத் தொடங்குகிறாள் .

6.. வரங்கள் பலம் பெற்ற  சூரபன்மன்,தாரகன்,சிங்கமுகன் போன்ற அரக்கர்
ஆட்சியிலே நாடிழந்து,நலிவடைந்த இந்திரன் முதலிய தேவர்கள் சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தனர்.

7. அவர்களுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்,"தேவர்களே!உமது துயர் விரைவில் அகலும்.எமக்குத் தோன்றும் மகன் அரக்கர்களை அழித்து உம்மைக் காப்பான்.கவலை விடுத்துச்செல்லுங்கள்"என்றார்.

8.  சனக  சனந்தன ,சனாதன,சனத்குமாரர்  களாகிய நான்கு முனிவர்களும்,
சிவபெருமானை நாடி,"ஐயனே!சரியை,கிரியை,யோகம் நன்கறிந்தோம் .எம்மை அமைதிப்  படுத்தும் ஞான பாதம் உபதேசியுங்கள் "என வேண்ட,
இறைவனும் எந்த சலனமும் இல்லாமல் மோன நிலையில் அமர்ந்திருப்பதே
ஞானத்தவம்.அதனை அமைதியோடு சும்மா இருந்து தொடங்குக.அதுவே
ஆன்ம ஞானமாம்,என்றருளினார்.

9. நந்தி தேவரை அழைத்து,"எம்மை க்  காண ,யாரையும் உள்ளே அனுப்பாதே
மன்மதன்  வருவான். அவனை மட்டும் உள்ளே அனுப்பு" என்று ஆணை
இட்டுவிட்டுத் தவத்தில் ஆழ்ந்தார்.

10. தனிமை,மோனத்தவம் உலகமே தனிமைப் பட்டது.உயிர்கள் யாவும்
இன்ப நுகர்வின்றி வாழ்ந்தன.உலகமே இறைவன்,இறைவனே உலகம்.என்னும்  நியதிக்கு இதுவே சான்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக