விநாயக சதுர்த்தி வணக்கமும்,வாழ்த்தும்
ஓமெனும் உள்ளார்ந்த உருவமே ஓங்காரா!
சாம மறையொடு சதுர்மறை சாற்றிடும்
நாம நற்பொருள் அணியணி மறையாள!
தூமத் துயரிருள் போக்கிடும் தேவதேவா!
மண்ணாய். மணியாய், மஞ்சள் பொடியாய்,
விண்ணாய், வெள்ளெருக்கு வேராய் வெண்கலச்
சிலையாய்ச் சிற்பமாய்,செம்பொன் உருவாய்,
மலையாய்க் கலையாய்க் காட்சி தந்தே,
தானே தோன்றிய தத்துவப் பொருளே!
யானை முகத்துப் பானை வயிற்று
மோனத் தவத்து முறைகொள் முதல்வா!
ஞானம் செல்வம் மாப்புகழ் மங்களம்
எல்லாம் வழங்கும் பொல்லாப் பிள்ளையே!
எல்லாம் பெற்றோர் என்றே சுற்றி
நல்ல கனியை நலமுடன் பெற்றாய்!
நல்ல பாரத நன்னூல் நிலைக்க,
வல்லமை தந்தம் வளைத்து ஒடித்து,
அல்லல் அகற்றி அருநூல் படைத்தாய்!
எல்லாம் ஆன இறைமுதல் வல்லவா!
கல்வி கேள்வி கருணை கண்ணியம்
செல்வம் செழிப்பு சத்தியம் நேர்மை
நல்ல ஆட்சி மனித நேயம்
எல்லாம் அளித்தே எங்களைக் காப்பாய்!
வெல்லம் வாழை வளமிகு கனிகள்
மெல்ல வெற்றிலை மணமிகு பாக்கு,
கொப்பரைத் தேங்காய்க் கொழுமை மோதகம்,
நற்பயன் நல்கிடும் சக்கரைப் பொங்கல்
விருப்புடன் படைத்தே வணங்கிப் போற்றினோம்.
கருணைக் கணபதி காலினைத் தொழுதோம்.
பெரும்புகழ்,பல்கல்வி,பெறற்கரிய பேறெல்லாம்
அகமகிழ்ந் தளித்தே அருள்வாய்!ஆனைமுகா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக