வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

                                                    தோற்றுவாய் (தூது)

         எல்லாம் வல்ல,பரம்பொருளின் அருளினால்,ஆறுமுகன் புகழைப்
பாடும் முகத்தான் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பாரே
மணிவாசகப் பெருந்தகை,அவ்வாக்கியத்தைத் தலைமேற்கொண்டு,
முருகன் பேரருளால் முருகன் பெருமையைச் சிறப்பை,அழகை,அற்புத
அருள்காட்டும் திறத்தை,எடுத்துரைத்தும் போற்றியும்,வாழ்த்தியும்
வழி வழி வந்துலாவும் இலக்கிய வகையில்."தூது" என்னும் சிற்றிலக்கிய
அமைப்பில் வணங்க வந்துள்ளேன்.
            96 வகைப் பிரபந்த நூல்களிலே ஒன்றாய்த் திகழ்வது  "தூது: இலக்கியம்.
தலைவன் மீது தானுற்ற காதலை,எவ்வகையிலாவது தலைவனிடம்
தெரிவிக்க விரும்பும் தலைவி மனம்,நெஞ்சு,தோழி,அன்னம்,கிளி,மயில்,
போன்றவற்றில் ஒன்றின் வாயிலாகத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும்
அமைப்பே தூது இலக்கியம் ஆகும்.அவ்வாறு தூதி விடுக்கும் முடிவுற்ற
தலைவி,தூதுப் பொருளைக் கூறுவதற்குமுன் தலைவன் புகழ்,வீரம்,
ஈகை,அருள்,போன்றன போற்றி,அவன் ஊர்,செல்லும் வழி,பேசும் முறை,
எடுத்துரைக்கும் மாண்பு போன்றவற்றையும் விளக்கிப் பின்னரே தூதுப்
பொருளாய்த் தன்மன எண்ணத்தை வெளிப்படுத்தும் அமைப்பே இவ்
_விலக்கியத்தின் பெருமை ஆகும்.
          தலைவியின் மனத்துயர்,தூது செல்ல ஒன்றை,அல்லது ஒருவரைத்
தேர்ந்தெடுத்தல்,அப்பொருளைப் பாராட்டல்,போன்றனவும் விளக்கப்படும்.
தேர்ந்தெடுத்தபின் பெருமை பேசுதல்,மற்றவற்றிலிருந்து வேறுபாடும்
தன்மை,தெரிவு செய்த காரணம் ,ஆற்றவேண்டிய தூதுச் செய்தி,
காணவேண்டிய  காலம்,போன்றனவும் உரைக்கும் நூல் தூது.
      மதுரைச் சொக்கநாதக் கடவுள் மீது மையலுற்ற பெண் ஒருத்தி
தமிழையே தூதாக அனுப்பினாள்.அதுவே தமிழின் மிகச்சிறந்த நூலான
"தமிழ்விடு தூதாகும்" சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய
உமாபதி சிவத்தின் "நெஞ்சுவிடு தூது"ஆன்மிகத் தூது இலக்கியம் ஆகும்.
        அந்த அளவில் இந்நூல் கன்னியாகுடி முருகன்மீது மையல் கொண்ட
ஒருபெண் தன்மனக் காதல் எண்ணத்தை,மஞ்ஞை வாயிலாக முருகனிடம்
தெரிவிக்க அனுப்பும் அமைப்பே "கன்னியாகுடி முருகன் மஞ் ஞை விடு
தூது" என்னும் இந்நூல்.
      வெண்கலிப்பாவினால் பாடப்பட்டது இந்நூல்.கன்னியாகுடியின் பெருமை,
முருகன் அழகு,பவனி,முருகனைப் பவனியில் கண்ட பெண்மனம்,அவன்
போகும் இடமெல்லாம் போதல்,அவனது கண்பார்வைக்கு ஏங்குதல்,
பல ஊர்கள் பல்லக்குப் பின்னரே ஓடுதல்,பவனி மறைந்ததும் புலம்பல்,
தனது மன எண்ண ஓட்டத்தை,எடுத்துரைத்து அமைதி காணப் பல்வேறு
பொருள்,நாட்டல்.முடிவில் மஞ்ஞையைத் தேர்ந்தெடுத்தல்,செய்தி
உரைத்து,மாலை வாங்கிவர வேண்டுதல்  என்னும் தூதிலக்கண முறை
தழுவி அமையப்பட்டது இந்நூல்.
           கன்னியாகுடியைச் சார்ந்து இருக்கும்,சிவத்தலங்களான திருப்புன்கூர்,
பெருமங்கலம்,வைத்தீஸ்வரன் கோயில்,சீர்காழி போன்ற ஊர்களின்
பெருமையைப் பேசுகிறது இந்நூல்.
     முருகன் தோற்றம்,சரவணப்பொய்கை,அரக்கர் அழிப்பு,தெய்வயானை,
வள்ளித் திருமணங்கள்,பிரமனைச் சிறைப்படுத்தல்,தந்தைக்கே ஆசான்,
போன்ற வரலாறுகளைப் பேசுகிறது இந்நூல்.
           " பெற்ற  தாயும் பிறந்த பொன்னாடும்,
              நற்றவ வானினும் நனி சிறந்ததுவே"
என்னும் சான்றோரின் வாய் மொழிக்கிணங்க,யான் பிறந்த ஊராகிய
கன்னியாகுடியின் பெருமையைப் பேசும் முகத்தான்,"கன்னியாகுடிக்
கந்த புராண வெண்பா"கன்னியாகுடி முருகன் பிள்ளைத்தமிழ் "கன்னியாகுடிக்
கலம்பகம்"கன்னியாகுடி முருகன் பாமாலை"போன்றன படைத்த
அடியேன்,மீண்டும் எனதூர் முருகன் பெருமை பேசவே இந்நூலைப்
படைத்துள்ளேன்.
           எளிய,சிறிய கிராமமாகிய இவ்வூர் முருகனால்,முருகன் மீது
யான் பாடிய நூலால் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதே என் அவா.
ஆயினும் அது காரணமாக இந்நூலை யான் படைக்கவில்லை.தமிழ்,
முருகன்,பிரிக்க முடியாத தோற்றம்.அத்தோற்றத்தை மனதால் செயலால்
செய்யுளால் போற்றி வணங்கவே இந்நூல் எழுந்தது.
           மூச்சும்,முனகலும்,முழுவதும் முருகனே"என்று வாழும் அடியேன்
பேராசையால் பெரும்புலவர் பாடிச் சென்ற வழியில் பிதற்றி இருக்கிறேன்.
நோக்கம் முருகன் புகழ் பாடவேண்டும் என்ற எண்ணமே.குற்றம் குறை
இருப்பின் பொறுத்தருள்க,
            எப்பொழுதும் போலவே எனக்குப் பல்லாற்றானும் பரிந்துதவி
புரியும் என்குடும்பத்தாருக்கு என்றும் கட்டமைப் பட்டுள்ளேன்.முருகன்
அவர்களுக்கு நல்லருள் புரிக.
       
     இந்நூலை அச்சிட்டு,அழகிய வடிவத்தில் ஆக்கிக் கொடுத்த திரு.அருண்
அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
        எல்லாவற்றிற்கும் மேலாக,இந்நூல் வெளிவருவதற்கும்   வெளியீட்டு
விழா நடத்துவதற்கும்,எனது 75 ஆம் பிறந்த நாளை வெகுவிமரிசையாய்க்
கொண்டாடிய எனது,இரண்டு கண்மணிகளாம் தேவி சுவாமிநாதன்,
சுபாசரத்கிருஷ்ணன் , எனது பேரன்அபிஷேக், எனது பேத்திகள் அபிலாஷா,
அர்ச்சிஷா ஆகியோருக்கும் இறைவன் எல்லா நலங்களும் அருள வேண்டும்
என வேண்டி வாழ்த்துகிறேன்.
         எளியேனுக்கு,எழுதும்,ஆற்றலும்,எண்ணமும்,கருத்தும் வழங்கி,
நல்லுடல் ஆற்றலும் வழங்கி அருள்காட்டும் ஆண்டவன் ஆறுமுகக்
கடவுளை நன்றியோடு போற்றிவணங்குகிறேன்.
                                         நன்றியும்  வணக்கமும்

14.10.2017                                                                                            சுவாமி.சுப்பிரமணியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக