சனி, 5 ஆகஸ்ட், 2017

தாலப்பருவம் .....9

                                         தாலப்பருவம் .....9

மாங்குயில் மாவிலை  மாந்தியே மகிழுடை
                         மனமதில்  ஒன்றியே,
கூவிடும் குரலொலி குளிர்மழை குணமெனக்
                        குழல்செவி இனித்திட,

தேன்கனித் திரள்பலா திண்வயிறு வெடித்தே
                        தீஞ்சுளை சிதறிட
மான்மடி மருள்வாய் முட்டியே சுவைத்திடும்
                       மான்கன்று துள்ளிட,

வானருவி வளத்துளி வலையோசை போலொலி
                      வானெழுந்து மயக்கிட,
மோனநிலை முதுமுனி முகிழ்மறைக் கூட்டொலி
                     மும்மயக்கம் களைந்திட,

கூன்பிறை அழகொளிக்கன்னூஞ்சல் அமர்ந்தவளே!
                        தாலோ!தாலேலோ!
ஊனுருகு உயர்பக்தி ஊர்குடி கொண்டவளே!
                        தாலோ!தாலேலோ.

                                     பொருள்
  மாமரத்து,இளந்தளிர்களைச் சுவைத்த குயில்கள் மனமொன்றி,இனிமையும்,
'குளிர்ச்சியும் வாய்ந்த குரலதை எழுப்ப,இனியகுரலால் நின் செவி மகிழ,
     வேர்ப்பலாவின் கனி முற்றி  வெடித்துச் சிதற,சுளைகளெல்லாம்
நிலமெங்கும் சிதற,வாயால் முட்டி,முட்டி.மடியிலிருந்து பாலைப்பருக்கும்,
மான்குட்டிகள் துள்ளி விளையாட,
       மலைவீழ் அருவிகளின் ஒலி இனிமை மிக்க வளையொலி போல் இசைத்து, வானளாவி குளிரினிமை ஊட்ட,தவநிலை முனிவர் கூட்டம்
பயிலும் வேத ஒலி  ஆணவம்,கன்மம்,மாயை என்னும் மும்மலங்களைப்
போக்க,
          மூன்றாம் பிறைபோல் வளைந்தாடும் அழகுப் பொன்னூஞ்சல்
அமர்ந்த கல்யாணி அம்மையே!ஆடுக,அழகுடன் ஆடுக.
        ஊனும்,உயிரும் உருகும் உயர்ந்த பக்தி கொண்ட கன்னியாகுடியில்
வீற்றிருக்கும் கல்யாணி அம்மையே!பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடுக,
மகிழ்வோடு ஆடுகவே.

                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக