சுந்தரர் சிறப்பு
31.7.17 சுந்தரர் குருபூஜை நன்னாள் திருக்கடையூர் ஆலால சுந்தரர் இளைஞர் விழாவில் "சுந்தரர் சிறப்பு " என்ற தலைப்பில் சுவாமி சுப்பிரமணியன் ஆற்றிய உரை
எல்லாம் வல்ல பரம்பொருளின் நல்லருளாலும்,நல்லாசியாலும் இன்று
"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் " போற்றிப் புகழும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் , நல்லன எல்லாம் தரும் அபிராமியின் திருப்பாதங்களைப் போற்றி வணங்கி, ஆனந்த சம்ஹார மூர்த்தியாகவும்,
அருள்பொழியும் அமிர்த கடேஸ்வரராகவும் விளங்கும் எம்பெருமான்
திருப்பாதங்களை நமஸ்கரித்து, வணங்கிப் போற்றி, என்னை என்றும்
ஆட்கொள்ளும் ஆறுமுகக் கடவுளை ஆழ்மனத்தில் நிறுத்தி
வணங்கிப்போற்றி, சைவசமயக் குரவர்களாம் நால்வர் நலம் போற்றித்
தமிழ் போற்றி, அவர்களுள் இறைவன் தோழராய்த் திகழ்ந்த ஆலால
சுந்தரின் சேவடி பற்றிப்போற்றி , இன்னும் சைவநெறி காத்து வளர்த்த
சான்றோர் பெருமக்களின் பாதங்களைத் தலைமேற்கொண்டு,
சுவாதி நன்னாளில் சுந்தரத் தமிழ் பாடிய சுந்தரர் அவதாரத் திருநாளில்
அவர்தம் வரலாறு, புகழ், பணி, பெருமை பெற்ற பதம் பாடிய பாடல்கள்
போன்றவற்றை எடுத்துரைக்க வந்து நிற்கிறேன்.
சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் பெரு மடங்களினுள் தாயகமாகவும்
தலை சிறந்ததாகவும், விளங்குகின்ற தருமை ஆதீன மகாசந்நிதானம்
அவர்களையும், இளைய மகாசந்நிதானம் அவர்களையும் இந்த அருமையான
நேரத்தில் நினைந்து போற்றாமல் புகழாமல் இருத்தல் இயலுமோ?
மகாசந்நிதானங்களைப் போற்றிவணங்கித் தொடங்குகிறேன் என்மொழியை.
ஆதிசைவ குலத்து மாமணியை, அந்தமில்லான் அற்புதத் தோழனைப்
பாராட்டிப் போற்ற உருவாகியிருக்கும் ஆலால சுந்தர அவையைத் துவக்கி
சுந்தரர் பெருமை பேசிப்படைக்கும் திருக்கடையூர் ஆதிசைவ இளைஞர்கள்
பேரவை. ஆதிசைவச்சான்றோர்கள் பணியைப் பாராட்ட சொற்களே இல்லை
எனலாம். வானார்ந்த செயலாற்றும் அவையின் ஆன்ற பணியைப் பாராட்டி
வாழ்த்தித் தொடங்குகிறேன் என் மொழியை.
'இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தமில் புகழா லால சுந்தரன்
சுந்தரத் திருத்தொண் த்தொகை தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம் ''
என்னும் ஆன்றோர் வாக்கிற்கிணங்க ,தம்பிரான் தோழர் வரலாறு காண்போம்.
திருக்கயிலையிலே சிவபிரானின் அடியவர் கூட்டத்தில் ஒருவராகிய
ஆலால சுந்தரர் ,நந்தவனத்தில் மலர்பறித்து வருங்கால் அதே நந்தவனத்து மலைமகளின் சேடியர் கமலினி, அனிந்திதை என்ற இருவரும்
பூக்கொய்த காலத்தில்.கண்டு,அவர்கள் மீது,ஆசை வைத்தார் :அவர்களும்
இவர்மீது அன்பு கொண்டனர்.
ஆன்மாக்களின் மனநிலை உணர்ந்த எம்பிரான்,சுந்தர!உன்மனம் பெண்ணாசை கொண்டபடியால்.தென்னாட்டில் பிறந்து,ஆசையுற்ற
இவ்விரு பெண்களோடு இன்பம் அனுபவிப்பாய்!'என்று சொல்லப்
பதறிய சுந்தரர் யான் செய்த தவறிற்கு இதுவே தண்டனை ஆகில்,எம்பெருமான்,உலகியலில் உழன்று,உண்மை தெரியாது மயக்கத்தில்
உழல்கின்ற காலை.அடியேனைத் தடுத்தாட்கொள்ளவேண்டும்,என
வணங்கி வேண்டினார்.ஐயனும் அங்ஙனமே ஆகுக,என வரம் அளித்தார்.
புண்ணிய பாரத நாட்டின் தென்தமிழ் நாட்டில்,திருமுனைப்பாடி
என்னும் திருப்பதியுள் ஆதிசைவமரபினராம் சடையனர் என்னும்,சிவாச்சாரியாருக்கும்,அவரது மனைவி இசைஞானியார் என்பவருக்கும் மகனாய்த் திரு அவதாரம் செய்தார்.அவருக்கு 'நம்பி
ஆரூரர் 'என்னும் பெயரிட்டனர்.
விளையாட்டுப் பருவத்தில் தெருவிலே தேருருட்டி விளையாடிக்
கொண்டிருந்த குழந்தையைக் கண்டு,அவர்மீது ஆசை கொண்ட
திருமுனைவுப்படி அரசன் நரசிங்க முனையர் ,சடையனாரிடம் வேண்டி,அவரைத் தனது அபிமான புத்திரனாக வளர்த்து வந்தார்.
அரச குல இளவரசனாக விளங்கினும்,அந்தணர் குல ஒழுக்கத்தின்படி
வேதாத்தியானம்,உபநயனம் போன்றவற்றோடு ஆதிசைவராகவே
விளங்கினார்.
மணப்பருவ காலத்தே,'பந்துவாய்ப்புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
மகளை மணம் பேசி முடித்தனர். நல்ல மு கூர்த்த நாளிலே திருமணக்கோலம்
கொண்ட ஆலால சுந்தரர் குதிரைமீது அமர்ந்து சடங்காவி சிவாச்சாரியார்
வீட்டின் முன்சென்று ,இறங்கி,மண மண்டபத்துள் சென்றமர்ந்தார்.
அவரைத் தடுத்தாட் கொள்வதாக அபயம் அளித்த பரம்பொருள் ஆங்கு
ஒரு வயோதிகப் பிராம்மண வடிவத்துள் எழுந்தருளினார்.
இதனைச் சேக்கிழார்,
காதில் அணி கண்டிகை,வடிந்த குழை தவழ்
சோதி மணி மார்பின்மிசை நூலினொடு,தோளின்
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க ,
ஆதபம் மறைக்கும் குடை,அணிக்கரம் விளங்க,
மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ
அத்தகைய மூப்பென்னும் அதன் படிவமேயோ,
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ,
இத்தகைய வேடம் என ஐயம் உற எய்தி..... என்று பாடுவார். வந்தவர்
அவையோர்களைப் பார்த்து,சான்றோரே! நான் சொல்லும் ஒரு வார்த்தையைக் கேளுங்கள் ,என்று சொன்னார்.மணப்பந்தலில் வீற்றிருந்தவர்களும், நம்பி ஆரூரரும் அவரை நடுநாயகமாகக் கொண்டு,ஐயா!இப்பொழுது நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்!,என்றதும்,வந்தவர் நம்பியாரூரரைப் பார்த்து உனக்கும்,எனக்கும் ஒரு வழக்கு உள்ளது,அதை
முடித்துக் கொண்டபின் நீ திருமணம் செய்து கொள்ளலாம்,என்றார்.
அதுகேட்ட ஆரூரர்,அப்படி ஒரு வழக்கு இருக்குமாயின் அதை முடித்த பின்னரே யான் திருமணம் செய்து கொள்வேன்,உமது வழக்கைக் கூறும்,
என்றார் .
வந்தவர் இதோ இந்த ஆரூரன் வழி வழி எனக்கு அடிமை ,என்றதும்,
முகத்திலே இகழ்ச்சி தோன்ற இவர் சொல்வது மிக நன்றாக இருக்கிறது '
எனக்கூறிச்சிரித்தார்.தடுத்தாட்கொள்ள வந்த ஐயன் அவரருகே சென்று,
'அக்காலத்தில் உன் மூதாதையர் எழுதிக் கொடுத்த அடிமையோலை இது,
சான்றோடு சொல்லும் என் சொல்லக் கேட்டு நகைப்பது எவ்வாறு
நியாயம் ஆகும்?எனச்சினந்தார் .மீண்டும் நகைத்தவாறே ,ஒரு பிராம்மணருக்கு மற்றொரு பிராம்மணர் அடிமை ஆதல் என்ற தைக்
கேட்டதும் நகைப்பு வந்தது.பித்தனோ நீவிர்?என்கிறார்.
'ஆசில் அந்தணர்கள் வேறோர்
அந்தணர்க்கு அடிமை ஆதல்,
பேச இன்று உன்னைக் கேட்டோம்,
பித்தனோ மறையோய்!என்றார்
நான் பித்தனோ, பேயனோ நீ என்ன சொன்னாலும் நான் வெட்கப்பட மாட்டேன்.என்னை அறியாதவனாய் நீ இருக்கிறாய்.வீண் பேச்சு எதற்கு?எனக்கு நாளும்அ டிமைத்தொழில் செய்ய, என்னோடு புறப்படு என்றார்.
வித்தகம் பேசவேண்டா. பணிசெய வேண்டும்,என்றார்.
அவர்கையில் உள்ள ஓலையின் உண்மையை அறியவேண்டும் என
விரும்பிய ஆரூரர்,எங்கே,அந்த ஓலையைக் காட்டுங்கள்!,என்றதும்,
ஓலையை அவையினருக்குக் காண்பித்து,அவர்களின் ஒப்புதலோடு நீ
எனக்கு அடிமை ஆவதற்கே தக்கவன்,அப்படியிருக்க,உன்னிடம்,ஓலையைக்
காட்டேன் ,என்று ஐயன் சொன்னதும்,கோபம் கொண்ட ஆரூரர் அவர் கையில்
உள்ள ஓலையைப் பறிக்க முற்படுகையில் எம்பெருமான் ஓடத்தொடங்கினார்.
அவர் ஓட,இவர் ஓட,அவை ஓட,முடிவில் ஐயன்கையில் உள்ள ஓலையைப்
பற்றி,பிராம்மணருக்கு,பிராம்மணர் அடிமை ஆதல் என்ன முறை?என்று
சொல்லியபடி அதனைக் கிழித்தார்.
இறைவன் சுந்தரர் கையைப் பிடித்துக் கொண்டு, இது முறையாகுமா?
எனக்கூச்சலிட ,அவையோர் இருவரையும் விலக்கி ,'உலகத்து நடந்திராத
அடிப்படையில் வழக்காட வந்துள்ள பிராம்மணரே! நீவிர் வசிக்கும் ஊர் எது?
என வினவினர். நான் திருவெண்ணெய் நல்லூரைச் சார்ந்தவன். அது நிற்க,
இவன் அறத்திற்குப் புறம்பாக என் ஓலையைக் கிழித்ததினால் எனக்கு இவன்
அடிமை என்பதை உறுதிப் படுத்தி விட்டான்.என்றார்
உமது ஊர் திருவெண்ணெய் நல்லூராகில் அங்கேயே சென்று பேசித்
தீர்த்துக் கொள்ளலாம்,என சுந்தரர் சொல்ல.அதைக் கேட்ட ஐயன் 'ஆம்.
அங்குசென்று, அங்குள்ள அந்தணர்கள் நடுவே, ஆதியில் எழுதப்பட்ட
மூல ஓலையைக் காட்டி, நீ எனக்கடிமை என்பதை நிலை நிறுத்துவேன்'
"ஆதியில் மூல ஓலை
காட்டி நீ அடிமை ஆதல் " சாதிப்பன், என்று கூறியபடித் தண்டை ஊன்றிக்கொண்டு நடக்கலானார்.சுந்தரரும்,அந்தணர்களும் அவர்பின்
நடந்தார்கள்.
திருவெண்ணெய் நல்லூர் அடைந்து,அங்குள்ள அந்தணர் பேரவைச்
சான்றோர் முன் நின்று,பெரியோர்களே!திருநாவலூரில் இருக்கின்ற இந்த
ஆரூரன்,எனக்கு அடிமை,அதுதொடர்பான ஆவண ஓலையைப் பிடுங்கிக்
கிழித்துவிட்டு நியாயம் வேண்டி உங்கள்முன் அழைத்து வந்துள்ளான்.
நீங்கள் தான் நல்ல முடிவு சொல்லவேண்டும்.என்கிறார் ஐயன்.
அவரது வழக்கைக் கேட்ட அந்தணர்கள்,ஐயன்மீர்!ஒரு அந்தணருக்கு,
மற்றொரு அந்தணர் அடிமையாகும் வழக்கம் இவ்வுலகில் இன்றுவரை
இல்லையே,உமது கருத்து ஏற்கத்தக்கதோ?கூறும்!என்றனர்.
சான்றோரே! நான் பொய் வழக்கு தொடுக்கவில்லை.மெய்வழக்கே
கொண்டுவந்துள்ளேன்.இவன் பறித்துக் கிழித்த ஓலையில்,இவன் பாட்டன்
தானும்,தன்மரபும் எனக்கு அடிமை,என எழுதிக் கொடுத்துள்ளான்.என்று
விடையிறுத்தார் விண்ணவர் போற்றும் பிரான்.
சுந்தரரே!இவர் உம்முடைய பாட்டன் வழி வழி நாங்கள் இவருக்கு அடிமை
என எழுதிக் கொடுத்த ஓலையைப் பறித்துக் கிழித்ததால் இவ்வழக்கிலிருந்து
விடுபடல் இயலுமோ? இவரது கூற்று எல்லோரும் ஏற்கும்படி உள்ளது.
இதற்கு விடையாக யாது கூறவுள்ளீர்!சொல்லும்!என அவையினர் கேட்டனர்.
சான்றோர்களே!நான் ஆதிசைவன் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
சிவனுக்கே அடிமையான என்னை இவர் தமக்கு அடிமை என்று சொன்னால்
எப்படி ஏற்க இயலும்?இது நாம் அறியமுடியாத மாயை போல் தோன்றவில்லையா?நான் யாது சொல்வேன்?என்றார் சுந்தரர்.அதைக் கேட்ட
பேரவையினர் வயோதிகரைப் பார்த்து,இவர் உங்கள் அடிமை என்பதற்குத்
தகுந்த ஆதாரங்கள் காட்டவேண்டும்.அனுபவம்,எழுத்து,சாட்சிகள் என்ற
மூன்றில் ஒன்றையேனும் நீவிர் எண்கள் முன் காட்டவேண்டும்,என்றனர்.
ஐயன் சொன்னார்,சான்றான் ஓலையை இவன் கிழித்து விட்டான்.
ஆயினும் அது படியோலை.மூல ஓலை என்னிடம் உள்ளது.அதையும் இவன்
கிழித்து விடாமல் பாதுகாப்பது கொடுப்பீராயின் அதைக் காட்டுவேன் .
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்,என்றதும் ஐயர் ஓலையைக் கையில் எடுத்தார்.அவையின் கட்டளையை ஏற்ற கணக்குப்பிள்ளை ,அதனை வாங்கிப்
பிரித்து எல்லோரும் கேட்கும்படிப் படித்தார்.
"திருநாவலூரில் இருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான்
திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு,நானும்,என்
சந்ததியினரும்,வழி வழித் தொண்டு செய்வதற்கு,உள்ளும் புறமும் ஒப்ப
உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் .இப்படிக்கு ஆரூரன்"எனப் படித்தான்.
சாட்சிகளாய்க் கையெழுத்திட்டவர்கள் அது தங்கள் கையெழுத்து"என
ஒத்துக் கொண்டனர்.அவையினர் சுந்தரரைப் பார்த்து,இது உமது பாட்டனார்
கையெழுத்தா எனப்பார்த்துச் சொல்லும்",என்றனர்.அவர்களை இடைமறித்த
ஐயன் ,"இச்சிறுவன் அவன் பாட்டனின் கையெழுத்தை அறியும் சக்தி உள்ளவன் இல்லை.இவன் பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்து இருப்பின் அதைப் பார்த்து முடிவு செய்யுங்கள் ,என்றதும்,பாட்டனாரின் வேறு கைச்சாத்து கொண்டுவரப்பட்டு,இரண்டையும் ஒப்பு நோக்கிப் பார்த்து,
இரண்டும் ஒத்திருக்கும் தன்மையறிந்து,சுந்தரர்!நீர் தொற்றுப் போனீர்.
இன்றுமுதல் இவருக்கு நீர் அடிமை,அவர் கருத்தின்படி நடத்தல் வேண்டும்
என ஆணையிட்டான்,"விதி இதுவாகின் அதையேற்று நடப்பதே முறை.
அதன்படி நடப்பேன்"என்றார் .
அவையினர்,எம்பிரானைப் பார்த்து,முதியவர்!உமது,வீடு,நிலம்,
போன்றவற்றைக் காட்டும்,என்றதும்,உங்களில் ஒருவர் கூட என்வீட்டைக்
கண்டதில்லையா?வாருங்கள் காட்டுகிறேன்",என்று சொல்லிச்,சுந்தரரும்,
அந்தணர்களும் பின்தொடர,அவ்வூரில் இருக்கின்ற,"திருவருட்டுறை"
என்னும் கோயிலுக்குள் போனார்.பின்பு அவரைக் காணாது அவையினர்
திகைத்து நின்றனர்.
சுந்தரரோ எங்கே போனார் என்னை அடிமை கொண்டவர்?ஆலயத்துள்
நுழைந்தவர் மறைந்தது வியப்பல்லவோ?என்றபடி,அவர் மனத்தே புகுந்த
பற்றும்,பரிவும் அவரைத் தேடிட,பின் தொடர்ந்து ஓடினார்.ஐயனே!ஐயனே!
என்று அழைத்தார்.அங்கே காலை வாகனத்தில் உமையம்மையோடு
காட்சி தந்து,சுந்தரனே!கயிலையிலே நமக்குத் தொண்டனாக இருந்த நீ
பெண்ணாசை கொண்டதால்,நமது ஆணைப்படி நிலவுலகில் பிறந்தாய்.
சம்சாரபந்தங்களில் நீ சிக்கி உழலாமல் இருக்க நாமே வந்து உன்னைத்
தடுத்தாட்கொண்டோம்.எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
தாய்க்குரல் கேட்ட கன்றுபோல,அலறி,கண்ணீர் பொழிந்து,தரையில்
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.இறைவா!என்னைத்
தடுத்தாட் கொண்ட பெரியோனே!உமது கருணையே கருணை,
எனப்போற்றினார்.இறைவனும்,இவ்வுலகம்,இவன் பாடும் பாடல்களால்
நல்வழிப்பட வேண்டும்,உலகு உய்ய இவன் சொல் ஏற்றதாகும்,என
அருள்பொழியும் மனம் கொண்டு,சுந்தர!நம்மோடு வன்மையான
சொற்களைப் பேசியதால் நீ வன்தொண்டன் ஆனாய்,அன்போடு செய்யும்
அருச்சனை பண்கலந்த பாடலாகும்,ஆகாதலின் எம்மீது தமிழ்ப்பாடல்கள்
பாடு!என்றருளினார்.
கரம் குவித்துக் கண்ணீர் மல்க,தடுத்தாட்கொண்ட வள்ளலே!முதிய
வேடத்தில் வந்து மும்மலம் நீக்கிய மூர்த்தியே!உன்னை என்னசொல்லிப் பாடுவேன்?ஏதும் அறியாத நான் உன் பெருமைகளை எப்படிப் பாடுவேன்?
என நின்ற சுந்தரரைப் பார்த்த ,இறைவன் நீ தான் எண்ணெய் பித்தனென்றும்,
பேயனென்றும் பேசினாய்.அதையே முதலாகக் கொண்டு பாடுவாய்
என்றார் . "என்பெயர் பித்தன் என்றே பாடுவாய்"என்றதும்,
" பித்தா பிறைசூடி,பெருமானே அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை.
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளா இனியல்லேன் எனலாமே "
எனப்பதிகம் பாடினர்.
இப்பாடலில்
பித்தா ...என்பது அன்பின் பெருமையையும்,
பிறைசூடி........என்பது அடைந்தவர்களை ஆதரிக்கும் தன்மையையும்,
பெருமானே......என்பது பேரழகுடன் ஒளிர்தலையும்,
அருளாளா........என்பது அருள்புரியும் தன்மையைத் தனியே தனக்கே உடைய தன்மையும் புலப்படுகிறது.
இறைவன்,சுந்தர!நம் புகழ் குறித்துப் பலவகையாகப் பாடுக",எனக்கூறி
மறைந்தருளினார்.
திருமணம் நின்றதால் சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் மனதில்
சுந்தரரையே நினைத்தபடி வாழ்ந்து சிவபதம் அடைகிறார்.
சிவபெருமானைத் தமிழால் போற்றிப்பாடப் பல்வேறு தலங்களுக்குச்
சென்ற சுந்தரர் பண்ணிசைந்து பதிகம் பாடினார்.திருநாவலூர்,திருத்துறையூர் ,
சென்றவர் சிதம்பரம் செல்ல விரும்பிப் பெண்ணை ஆற்றைக் கடந்து,
திருவதிகை செல்கிறார்.திருநாவுக்கரசர் உழவாரப் பனி ஆற்றிய ஊர்,என்பதால் ,அதனைக் காலால் மிதித்தல் கூடாது,எனக்கருதி,
சித்தவடமடம்
என்னும் திருமடத்தில் இரவு தங்குகிறார்..
அங்கே வழிப்போக்க அந்தண உருவில் வந்த எம்பெருமான்,சுந்தரர் படுத்துறங்கும் பகுதியில்,தானும்
உறங்குவதுபோல் அவர் தலைமாட்டில் படுத்துத் தன்காலால் அவர் தலையைத் தொட "யாரோ தெரியாமல் மிதித்துவிட்டார் "எனக்கருதிய
சுந்தரர் வேறு திசை நோக்கிப் படுக்க,அங்கும் அதே ஸ்பர்ச தீக்ஷை நிலையில்
காலை அவர் தலைமீது வைக்க,சினத்துடன் வேறு திசையில் படுக்க,அங்கும்
இறைவன் கால்,அவர் தலையில் பதிய ,ஏனய்யா!இப்படி என்தலைமீது
கால்களை வைக்கிறீர்?களைப்பா?வெகு தூரம் கடந்து வந்தவரா ? யார்
நீங்கள்?என வினவ,ஐயன் சுந்தரா!என்னைத் தெரியவில்லையா?எனக்கேட்டபடி மறைந்ததும்,இறைவனே வந்து தனக்கு தீக்ஷை அளித்துள்ளான் என்பதை நினைந்து,வியந்து திருவதிகைக் கடவுளைப்
பாடலால் போற்றுகிறார்.திருமாணிக்குழி தரிசித்துவிட்டுச் சிதம்பரம் சென்று
ஆனந்தக்கூத்தனைப் பாதிப் பரவசம் அடைந்தகாலை "திருவாரூர் வா"
என்ற அசரீரி கேட்டு ஆரூர் கிளம்புகிறார்.கொள்ளிட நதியைக் கடந்து,
சீர்காழிக்கு அருகில் சென்றதும்,ஆளுடைய பிள்ளை அவதாரம் செய்த ஊர்
ஆதலின் அதனை மிதித்தல் முறையாகாது,என எண்ணி,அதன் புற எல்லையிலேயே நின்று வணங்க,இறைவன் காக்ஷி கொடுக்க,"கழுமல வளநகர் கண்டு கொண்டேன்"பதிகம் பாடினார்.திருக்கோலக்கா,
திருப்புன்கூர்,மயிலாடுதுறை,அம்பர் மாகாளம்,திருப்புகலூர் போன்ற
தலங்களை வழிபட்டார்.திருவாரூர் அருகே சென்றார்.
இறைவன் அருளாணையைத் தலைமேற்கொண்ட திருவாரூர் அடியவர்கள் சுந்தரரை எதிர்கொண்டு வரவேற்றனர்.வீதிவலம் வந்த சுந்தரர் "எந்தை
இருப்பது ஆரூர்,அவர் எம்மையும் ஆள்வரோ?"எனப்பதிகம் பாடியபடி,
வன்மீக நாதரை வணங்க,இறைவன்,சுந்தரர் கேட்கும்படி,"தோழமையாக
உனக்கு நம்மைத் தந்தனம் " உன்னை ஆட்கொண்ட காலத்தில் விளங்கிய
மணக்கோலத்துடன் எப்பொழுதும் நிலவுலகில் விளையாடுவாய்"என்ற அசரீரியும் எழுந்தது.இறைவன் கருணையை வியந்தபடி,அவரைப்போற்றிப்
பாடி,அடியவர்களுடன் திருமாளிகை அடைந்தார்.அன்று முதல் அடியவர்கள்
எல்லோரும் சுந்தரரை "தம்பிரான் தோழர்"என்றே அழைத்தனர்.
அழகிய திருக்கோலத்துடன் ஆரூர் இறைவனை வணங்கி வரும் நாட்களில்
கயிலையில் உமா தேவியரின் சேடி யராக விளங்கிய கமலினி,அனிந்திதை
ஆகிய இருவருள் மூத்தவளாகிய கமலினி என்பாள்,திருவாரூரில் "உருத்திர
கன்னிகை குலத்தில் பிறந்து,பரவையார் என்னும் பெயருடன் வளர்ந்து
மங்கைப் பருவம் அடைந்த அவரும் நாள்தோறும்,ஆரூராரைத் தம் தோழியரோடு வந்து வணங்கும் வழக்கம் உடையவராய் விளங்கினார்.
இருவரும் இறையருள் கூட்டிவைக்க,தமக்குள்ள மனதைப் பறிகொடுத்து,இறைவன் அருளை வேண்ட,அடியவபிகளுக்கு ஆணையிட்டு.அவ்விருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார் ஆரூரர்.
மணமகிழ்வுடன் வாழ்ந்து வந்த சுந்தரர் ஒருநாள் திருக்கோயிலை
அடைந்தபொழுது,தேவாசிரய மண்டபத்தில் குழுமி நின்ற அடியவர் கூட்டத்திற்குத் தான் ஆளாகும் நாள் எந்நாளோ?என நினைத்தவாறே இறைவனைத் தொழுதார்.அவர் மனத்தைப் புரிந்துகொண்ட இறைவன்
அவர்முன் தோன்றி,சுந்தர!நீ நம் அடியவர்களை வணங்கி,அவர்மீது பதிகம் பாடு"என்றதும்,எப்படித் தொடங்குவேன்?எனத் தொடங்கும் முதல் சொல்
அருள்க,எனலும்,தில்லை வாழ் அந்தணர் "முதல்வன் முதலடி அருள,
சுந்தரர் "திருத்தொண்டத்தொகை "என்னும் பதிகம் பாடி.அடியவர்களை
வணங்கிப் போற்றினார்.
திருவாரூர்ச் செல்வந்தர் குண்டையூர்க்கிழார் என்னும் பெருந்தகை
சுந்தரரின் வீட்டுப் பயன்பாட்டிற்காகவும்,அடியவர் அமுது செய்விக்கவும்,
திங்கள்தோறும் நெல் மூட்டைகளை சுந்தரர் வீட்டிற்கு அனுப்பி வந்தார்.
வானம் பொய்த்தது.விளைச்சல் இல்லை,இப்படிப்பட்ட காரணங்களால்
நெல் அனுப்புவதில் சுணக்கம் ஏற்பட்டது.குண்டையூர்க் கிழார் தனது
நிலையை இறைவனிடம் முறையிட்டார்.மறுநாள் காலை எழுந்து பார்த்தால்
குண்டையூர் முழுவதும் நெல் மலை .வியப்படைந்த கிழார் இறைவனை வாங்கிப் போற்றி,அச்செய்தியைச் சுந்தரரிடம் தெரிவிக்க,அவரும் நெல்மலை கண்டு,வியந்து இதனைப்பரவை வீட்டிற்கும் எடுத்துச்செல்ல,அந்தத்
திருக்கோளிலி இறைவனே உதவ வேண்டும்,எனப்பதிகம் பாடினார் .
அசரீரியாக,நாளை பூதகணங்கள் தீருவாரூர் முழுவதும் நெல்லை நிரப்புவார்,
என்ற சொல் கேட்டு மீண்டும் போற்றினார்.மறுநாட்காலை திருவாரூர் முழுவதும் நெல் மலி மலையாகக் குவிந்திருந்தது.அது கண்ட பரவையார்
வீட்டு வாசலில் உள்ள நெல்லை அவரவரே எடுத்துக் கொள்ளலாம்,எனப்
பறையறிவித்தார்.
திருநாட்டியத்தான்குடியில் வசிக்கும்,கோட்புலி நாயனார் ,சுந்தரரின் பெருமை கேட்டு ,அவரைக் காண வந்து,தனூருக்கு வருமாறு அழைப்பு
விடுத்தார்.இவரும் கோட்புலியார் வீட்டிற்கு எழுந்தருளப் பெரிய வரவேற்பும்,விருந்தும் அளித்து,வணங்கித் தம்முடைய இரு பெண்களான
சிங்கடியார்,வனப்பகையார் ஆகிய இருவரையும் வணங்கச் செய்து,
சுவாமி!தாங்கள் எனது இரு பெண்களையும் அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,எனப்பணிவோடு வேண்ட,இருவரையும்,தனது தொடையில் அமர்த்திக் கொண்ட சுந்தரர் இவ்விருவரும் எனது மகள்களாயிற்றே!எனப்
பரிசுகளையும்,ஆடைகளையும் வழங்கி ஆசியளித்தார்.
அவ்வூர் இறைவனைப் பாடிய பதிகத்தில் தன்னை "சிங்கடியப்பன்"
எனவும் குறிப்பிட்டார்.
திருவலிவலம் இறைவனை வணங்கிவிட்டுத் திருவாரூர் சேர்ந்தார்.
பரவையின் உத்திரத்திருவிழா செலவிற்காகப் பொன்வேண்டித் திருப்புகலூர்
சென்று இறைவனைப்பாடிப்போற்றியபின்,அருகில் உள்ள மடத்தில் படுத்தார்.
தலையணை போல் செங்கல்லை வைத்துக்கொண்டு தூங்கினார்.
விழித்தெழுந்ததும் தலைவைத்துப் படுத்திருந்த கற்கள் யாவும் பொற்கட்டிகளாக மாறியிருந்தன.மீண்டும் பதிகம் பாடிப்போற்றியபின்
திருப்பனையூர் சென்றார்.அங்கு இறைவன் தில்லையம்பல நடனம் ஆடிக்
காட்சி கொடுத்தார்.திருவாரூர் சென்று,அங்கிருந்து,திருநன்னிலம்,
திருவீழிமிழலை.திருவாஞ்சியம்,திருநறையூர்,அரிசிற்கரைப்புத்தூர்
திருவிடை மருதூர்,திருநாகேஸ்வரம்,சிவபுரம்,திருக்கலய நல்லூர்,
கும்பகோணம்,திருவலஞ்சுழி,திருநல்லூர்,திருச்சோற்றுத்துறை
திருக்கண்டியூர்,திருவையாறு,திருப்பூந்துருத்தி போன்ற தளங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு,திருவாலம்பொழில் என்ற ஊரிலே இறைவனைப்போற்றி விட்டு,இரவு துயிலில் ஆழ்ந்தார்.கனவிலே
எழுந்தருளிய இறைவன்,"மழபாடிக்கு வர மறந்தாயோ?"என்றதும்,
காவிரியைக்கடந்து,மழபாடி சென்று,"பொன்னார் மேனியனே"எனும்
பதிகம் பாடிப்போற்றினார்.திருவானைக்கா,போற்றி,திருப்பாச்சிலாச்சிராமம்
சென்றடைந்து,ஈசன் பொன் அளிக்காததால்,உள்ளம் புழுங்கி,"இவர்
அல்லாது இல்லையோ பிரானார்:என முடியும் பதிகம் பாடிப் பொற்குவியல்
பெற்று மகிழ்ந்தார்.பின் திருப்பைஞ்ஞீவி,திருஈங்கோய்மலை போற்றி,
திருப்பாண்டிக்கொடு என்ற தலத்தில் இறைவனது ஆனந்த நடனம் கண்டு,
சிதம்பரம் செல்லும் அவாவோடு,திருவெஞ்சமாக்கூடல்,திருக்கற்குடிமலை,திருவாரை மேற்றளி,
திருவின்னம்பர்,திருப்புறம்பயம்,தரிசித்துவிட்டு,திருக்கூடலையாற்றுக்குச்
செல்லாமல் திருமுதுகுன்றம் செல்ல முற்பட்டார்.அங்கு ஒரு பிராம்மண
வேடத்தில் வந்த எம்பெருமான்,திருமுதுகுன்றம் செல்லும் வழி கேட்டவரிடம் கூடலையாறு போகும் வழி இது,எனக்காட்டி,மறைந்துபோக,
அவரைக்காணாது,இறைவனே என உணர்ந்து,கூடலை சென்று வாங்கிப் பின்
முதுகுன்றம் சென்றார்.முதுகுன்றக்கடவுளைப் போற்றினார்.மகிழ்ந்த இறைவன் பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் அளிக்க,இறைவா!இதனை
ஆரூரில் அளிக்க வழி செய்ய வேண்டும்,என வேண்டியதும்,இறைவன்
பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்டுவிட்டு,ஆரூரின் குளத்தில்
எடுத்துக்கொள்,என்றார்.பொற்காசுகள் மச்சம் எடுத்துக்கொண்ட சுந்தரர்
அவைகளை மணிமுத்தாற்றில் இட்டுவிட்டு,இறையருளை எண்ணியபடிச்
சிதம்பரம் செல்லும் வழியில்,திருக்கடம்பூர்,சென்று,பின் ஆனந்தக்கூத்தனை
வணங்கி மகிழ்ந்தார்.
திருக்கருப்பறியலூர்,திருமண்ணிப்படிக்கரை,திருவாளொளிபுத்தூர்,
திருக்கானாட்டு முள்ளூர்,திருவெதிர்கொள்பாடி,திருவேள்விக்குடி போன்ற
ஊர்களைத்தரிசித்து விட்டுத் திருவாரூர்ப் போய் சேர்ந்தார்.
பரவையாருடன் திருவாரூர்க் குளத்தில் பொற்காசுகளைத் தேடிக் காணாது,
ஆற்றிலே இட்டுக் குளத்திலே தேடுவதா?'என்ற பரவையின் பரிகாசத்தை
ஏற்க மனமின்றி இறைவனை நோக்கிப் பதிகம் பாட,மகிழ்ந்த இறைவன்
பொற்கட்டிகளை எடுத்து,மச்சம் பார்த்து,குறை தென்பட,மீண்டும் பதிகம்
பாடி முழுமைப்பொன்னைப் பெற்றார்.
திருநள்ளாறு,திருக்கடவூர் வீரட்டம்,திருக்கடவூர் மயானம்,திருவலம்புரம்,திருச்சாய்க்காடு,திருவெண்காடு,திருநனிபள்ளி,
திருச்செம்பொன் பள்ளி,திருநின்றவூர்,திருநீடூர்,திருப்புன்கூர்,திருக்கோலக்கா,
சீர்காழி,போன்ற தலங்களை வணங்கிய சுந்தரர் திருக்குருகாவூர் செல்லும்
வழியில் பசி,தாக்கத்தால் வருந்தும்,சுந்தரரின் வாட்டம் போக்க,இறைவன்
அந்தண வடிவத்தில் வந்து,பந்தர் அமைத்து,நீர்மோர்,உணவு எல்லாம்
வழங்கிட,உண்டு மகிழ்ந்தவர்,அளித்தவரைக் காணாமல் வநதது,இறைவனே,என எண்ணிப் பதிகம் பாடிப்போற்றினார்.
மேலும்திருக்கழிப்பாலை,சிதம்பரம்,போன்ற தலங்களில் தரிசனம்
செய்தபின் திருநாவலூர் அடைந்தார்.திருக்கழுக்குன்றம்,வணங்கிவிட்டுத்
திருக்கச்சூர் சென்று இறைவனை வணங்கிப் போற்றியபின்,உணவு
சமைப்போர் வாராமையால் பசியோடு,துவண்டபடிப் பிரகாரத்தில் அமர்ந்தார்,
இறைவன் ஒரு பிராம்மண வடிவங் கொண்டு,அவர்முன் தோன்றி,ஐயா!
தங்கள் பசியால் வாடுகிறீர்கள்.சற்றே அமருங்கள்.நான் இவ்வூருள்ளே
சென்று,உமக்காக உணவை வீடுதோறும் யாசித்து வாங்கி வருகிறேன்."
இங்கேயே இரும்,"என்று சொல்லிவிட்டு,ஊரில் உள்ள அந்தணர் வீடுகளில் 'உஞ்ச விருத்தி"எடுத்து,அன்னமும்,கறியும்,பெற்றுக் கேட்டு வாங்கி வந்து,
சுந்தரரை எழுப்பி,"இதனை உண்டு பசியைப் போக்கிக் கொள்ளுங்கள்"எனக்
கூற,சுந்தரரும்,தன்பரிவாரங்களுடன் உண்டு,மகிழ்ந்து,இருக்கும் வேளை
இறைவன் மறைந்துவிட,ஏழையேனைக் காக்க,இப்படித் தெருவெல்லாம் அலைந்து யாசித்து,உணவு அளித்த வள்ளலே!எனப்போற்றி பாடினார்.
காஞ்சிபுரம்,திருமேற்றளி,திருவோணகாந்தன் தளி,திருப்பனங்காட்டூர்,திருமாற்பேறு,திருவல்லம்,திருக்காளத்தி,போன்ற
தலங்களைத் தரிசித்தவர்,வடநாட்டில் உள்ள,ஸ்ரீ பருப்பதம்,திருக்கேதாரமலை
முதலிய ஊர்களின் பெருமையைப்பாடி,திருவொற்றியூர் அடைந்தார்.
அங்கு,கயிலைமலையில் சுந்தரர் மீது ஆசை கொண்ட இருவருள் இளையவள் "அனிந்திதை"என்பாள் "ஞாயிறு"என்னும் ஊரில் ஞாயிற்றுக்
கிழவர் என்னும் வேளாளருக்கு,மகளாக அவதரித்திருந்தார்."சங்கிலியார்"
என்னும் பெயரோடு அழகும்,நற்குணங்களும் வாய்த்த அவளுக்குப் பருவ
காலம் வந்ததும் திருமணம் முடித்திட மணமகன் தேடினார்.சங்கிலியாரோ
தன தந்தையிடம் தான் சைவப்பற்று மிக்க இறையருள் பெட்ரா ஒரு சிவனடியாருக்கே உரியவள்.ஆதலின் மற்றவரை மணக்க விரும்பேன்.
இனி நான் திருவொற்றியூர் சென்று,சிவப்பணி ஆற்றுவேன்,"என்றதும்
தாய்தந்தையரும் அதற்கு இசைத்தனர்,திருப்பணி ஆற்றிக் கொண்டிருந்த
சங்கிலியாரைப் பார்த்ததும்,சுந்தரருக்கு அவர்மீது ஆசை வந்துவிட்டது.
அவரைப்பற்றி அறிந்து கொண்ட சுந்தரர் இறைவனிடம் முறையிட்டார்.
சுந்தரருக்கு மணவாக்கு அளித்த இறைவன் சங்கிலியாரின் கனவில் சுந்தரனை மணக்கக் கூறினார்.சங்கிலியாரோ,சுந்தரரின் திருவாரூர் சுக வாழ்வை எடுத்துக்கூற,இறைவன்,உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்"
என்,அவன் சத்தியம் செய்து தருவான்.நீ அவனை ஏற்றிடுக "என்றார்
சுந்தரரிடம் சென்று,நீ,அவளைவிட்டுப் பிரிய மாட்டேன்"எனச்சபதம்
செய்துகொடுத்தால் அவள் உன்னை மணப்பாள் "என்றதும்,சபதம் செய்து
கொடுத்தால் பலத்தலங்கள் செல்வது தடைப்படும்,என மனதிலே நினைந்த
சுந்தரர் ,"சுவாமி!சபதம் செய்து கொடுக்க,அவளோடு நான்,ஆலயம் வந்ததும்,
தாங்கள் மகிழ மரத்தடி சென்று விடவேண்டும்."என வேண்டினார்.மீண்டும்
சங்கிலியாரிடம் சென்ற இறைவன்,"சங்கிலியே !அவன் கோயிலுள் சபதம் செய்யலாம் என்பான்.நீயோ மகிழமரத்தடியில் சபதம் செய்யவேண்டும்"
எனச்சொல்,என்றார்.
மறுநாள் கோயிலுனுள் இருவரும் பார்த்துக் கொண்டனர்.இறைவன் ஆணைப்படிச் சபதம் செய்வேன்,கோயிலுக்குள் வாருங்கள் என அக்கூட்டத்தை அழைக்க,தோழியரும் ஒருத்தி,உள்ளே வேண்டாம்.மகிழ
மரத்தடியே சிறப்பானது,என்றதும்,வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு
"உன்னைப்பிரியேன்"எனச் சபதமும் செய்தார்..
இறைவன் கட்டளைப்படி அடியவர்களால் சுந்தரர்,சங்கிலியார் திருமணம்
நடைபெற்றது.அவ்வூரிலே வாழ்ந்து வருங்கால் ஆரூர் வன்மீக நாதர் நினைவு,
சுந்தரரை வாட்டத் திருவொற்றியூர் விட்டு அகன்றார்.சபதம் தவறிய அவரது
இரண்டு கண்களும் பார்வை இழந்தன.தனது சபதம் மீறிய செயலே ,ஆயினும்
இறைவன் போற்றிப்பாடி வேண்டுவேன்"என்றபடி அடியார்கள் வழிகாட்ட,
"அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்"என்று பாடியும் கண்
வரவில்லை.திருமுல்லை வாயில்,திருவெண்பாக்கம்,சென்று தரிசிக்கும் பொழுது இறைவன் அவருக்கு "ஊன்றுகோல்"அளித்தார்
சென்று,இறைவனைப்போற்றி,.பழையனூர்,திருவாலங்காடு,செல்ல,அங்கு இறைவன் அவருக்கு ஒருக்கண்ணில் மட்டும் பார்வையை அளித்தார்.
திருவாமாத்தூர்,திருவாவடுதுறை சென்றவர்,திருத்துருத்தி சென்று,தன்
நோயைத் தீர்க்குமாறு வேண்ட,இறைவன் ஆணைப்படித் திருக்குளத்தில்
மூழ்கி எழுந்ததும் பழைய பொலிவினைப் பெற்றார்.திருவாரூர் சென்று
தனக்கு மற்றொரு கண்ணும் வழங்குமாறு பதிகம் பாட,இறைவன் அவருக்கு மறுகண்ணையும் வழங்கினார்,மகிழ்ந்த சுந்தரர் தேவாசிரய மண்டபத்தில் அமர்ந்தார்.
சுந்தரர் கோயிலுக்குள் சென்றிருந்த காலை,பரவையார் வீட்டிற்குச் சென்ற பரிசனங்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் சங்கிலியாரை மணந்த செய்கையால் யார்சொல்லியும் சுந்தரரை ஏற்க விரும்பவில்லை,அப்படி அவர்
வந்தால் உயிர்த்தியாகம் செய்து கொள்வேன்"என்றும் கூறினாள்.
செய்வதறியாது சிவமே கதி என இறைவனை வேண்டிப்பாடினார் சுந்தரர்.
முன் தோன்றிய ஆரூரரைத் தன் மனைவியிடம் தன்னைச்சேர்த்து வைக்குமாறு அதுவும்,இந்த இரவிலேயே தூது செல்லவேண்டும்,என வேண்ட
மாலும்,பிரமனும் காணாத அடிகள் நிலந்தோய அந்நகர் வீதியிலே நடந்து,
அந்தண வேடத்தில் பரவை வீடடைந்து,சுந்தரனை ஏற்றுக்கொள்ள வேண்ட
அவள் மறுத்து விடுகிறாள்.மீண்டும் சுந்தரரிடம் அச்செய்தியைச் சொல்ல,
அவரோ,நீயோ என் தோழன்?நீயோ என்னை ஆட்கொண்டவன்?இவை
உண்மையாயின் இப்பணியை மீண்டும் தொடர், என்றதும்,சிவகணங்கள் \புடைசூழ,பரவையார் வீடு செல்ல,முன்னர் வந்த அந்தணர் இறைவனே
என்பதை உணர்ந்த பறவை,இறைவனை வரவேற்றுப் பணிந்து,தங்கள் சொல்லும் எதையும் கேட்பேன்,எனச்சொன்னதும்,அந்த மகிழ்ச்சியைச்
சுந்தரனிடம் சொல்ல,இறைவனைப் பலவாறு போற்றிய சுந்தரன் பரவையார் மாளிகை சென்று ,வரவேற்ற பரவையோடு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்.
பெருமங்கலத்தில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காமன் சுந்தரர் இறைவனைத்
தூதனுப்பிய செய்தியறிந்து,சுந்தரர் மீது அளவுகடந்த சினம் கொண்டார்,
அதனை உணர்ந்த சுந்தரர் இறைவனிடம் அதுபற்றி விண்ணப்பிக்க,இறைவன்,
கலிக்காமருக்குச் சூலை நோயைக் கொடுத்து,அதைத் தீர்க்கும் ஆற்றல்
சுந்தரருக்கே உள்ளது என்றும் செய்தி பரப்பினார்.சுந்தரர் கையால் வைத்தியம் பார்த்துக்கொள்ள கலிக்காமர் விரும்பவில்லை,சுந்தரர் நேராக அங்கு வரும் வேளைத் தன் உடைவாளால் தன்னை மாய்த்துக்கொண்டார் கலிக்காமர்,
அதறிந்த சுந்தரரும் அதே வாளால் தன்னை மாய்த்துக் கொள்ள முற்படுகையில் இறைவன் தோன்றிக் கலிக்காமருக்கு உயிர் கொடுப்ப,
இருவரும் நண்பர்களாகிப் பலகால் சைவப்பணி புரிந்தனர்.
சேர நாட்டில் கொடுங்கோளூரிலிருந்து ஆட்சிபுரிந்த சேரமான் பெருமாள்
நாயனார் சுந்தரரின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரைக்காண,திருவாரூருக்கு வர,சுந்தரர் எதிர்கொண்டழைக்க,
இருவருக்கும் நட்பு வளர்ந்தது.சுந்தரருக்குச் சேரமான் தோழர்"என்னும் பெயரும் வந்தது.கீழ்வேளூர்,வேதாரண்யம்,திருநாகைக்கோராணம்,
அகத்தியான் பள்ளி,குழகர்க்கோடி,ஆகிய தலங்களைத் தரிசித்து விட்டு,
பாண்டிய நாட்டின் திருப்புத்தூர்,மதுரை, திருப்பூவணம்,
திருவாப்பனூர்,திருவேடகம்,திருப்பரங்குன்றம் திருக்குற்றாலம்,
திருக்குறும்பலா,திருநெல்வேலி,போன்ற தலங்களை வணங்கியபடி,
இராமேஸ்வரம் சென்று,வணங்கியபின்,ஈழ நாட்டின்கண் அமைந்த
திருக்கேதீஸ்வரக் கடவுளை மனத்தால் நினைத்துப் பதிகம் பாடினார்.
திருச்சுழியல் ,கானப்பேர்,திருப்புனவாசல் வாங்கிப் போற்றியபின் திருவாரூரை இருவரும் அடைந்தனர்.
அரசரின் வேண்டுகோள் ஏற்றுச் சேரநாட்டுப் பயணத்தை மேற்கொண்டனர்.
வழியில் திருவையாற்று நாதனை மன்னன் வணங்க விரும்பினான்.
கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றைக் கடக்கமுடியாது,ஐயாற்று நாதன் மீது
பதிகம் பாடி,ஆறு வழிவிட,இறைவனைக் கண்டனர்.கொடுங்கோளூர் சென்று,தலைநகர் திருவஞ்சைக்களம் சென்றனர்.
சேரமான் கொடுத்த பெரும் பொக்கிஷங்களோடு திருவாரூர் புறப்பட்டார் சுந்தரர்.வழியில்,இறைவன் ஆணைப்படிக் கள்வர்களான பூதகணங்கள் பொருள்களைத் திருடிச்சென்றன.திருமுருகன் பூண்டியிலே பதிகம் பாடி
இழந்த செல்வத்தைப் பெற்றவர் ஆரூர் சென்று,சில திங்கள் கழிந்து,சேரனைக்காணப் பயணிக்கிறார்.வழியில் திருப்புக்கொளியூர்
என்ற ஊரில் முதலை உண்ட பிள்ளையை இறைவன் அருளினால் மீட்டுக்
கொடுத்த்தபின்,கொடுங்கோளூர் நோக்கிப் பயணிக்க,இவர் வரும் செய்தி
அறிந்து வரவேற்பு கொடுக்க ஆயத்தமாகிறான் சேரன்.பலநாட்கள்
சேரமான் பெருமாளும்,சுந்தரரும் பலப்பலத் தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.ஒருநாள் திருவஞ்சைக்களக் கோயிலில் மனமுருகி நின்ற சுந்தரர் இறைவா!இப்பிரபஞ்ச வாழ்விலிருந்து,விடுவித்துத்
தங்கள் பொன்னடிநிழல் எமக்கருளும்,"என வேண்ட,இறைவன் அவரை அழைத்துவர வெள்ளையானையைப் பூதகனங்களோடு அனுப்பிட,அதில்
அமர்ந்துகைளை நோக்கிப் பயணித்தார் சுந்தரர்.
செய்தி கேட்டுச் சுந்தரரைப் பிரிய மனமில்லாத சேரமான் பெருமாள் நாயனார் தனது குதிரையின் செவிகளில் ஐந்தெழுத்தை ஓதி,வான் வழி சென்று,
சுந்தரரின் வெள்ளையானையைச் சுற்றி வணங்கிவிட்டு முன்னே பறந்தது.
திருக்கைலாய மலையில் இறங்கிய இருவரும் பல வாயில்களைக் கடந்து,
"திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள்.அதற்குமேல் செல்லும் நிலை,
தடைப்பட்ட,சேரமான் அங்கேயே நின்றார்.சுந்தரரோ நேரே இறைவன் முன் சென்று விழுந்து,போற்றியபடி நின்றார்."சுந்தர!வந்தாயோ?"என இறைவன்
திருவாய் மலர்ந்தருள,தனது பிழையை எல்லாம் மன்னிக்கவேண்டும்
எனப் போற்றிப்புகழ்ந்த,சுந்தரர்,சுவாமி!தங்களது திருவடிகளை அடையும்
பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் வாயிலில் நிற்கின்றார்.
என்று சொன்னதும்.அவரையும் உள்ளே அழைப்பித்த இறைவன்,நீயும்
,ஆலால சுந்தரனும் நமது கணங்களுக்கெல்லாம் தலைவனாக இருங்கள்"
என்று ஆசி வழங்கினார்.
அதேபோல் பூமியில் தோன்றிய பரவையாரும் ,சங்கிலியாரும்,
உமாதேவியாருக்குப் பணிவிடை செய்யும் செட்டியார்கள் ஆகித்
திருத்தொண்டு ஆற்றினார்.
"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக