சனி, 1 ஜூலை, 2017

ஊசற்பருவம்...10

                                ஊசற்பருவம்......10

அரவிந்த   மலர்ப்பாத,  அழகுமணிக்   கொலுசும்,
                  அருகமை    அஞ்சிலம்பும்,
விரல்நுனி   மெட்டியும்,விரியொலித்  தண்டையும்,
                  விளங்கும்   இளமகளே!

அரன்கை   உடுக்கை   உருவன்ன   சிற்றிடையில்,
                  அணிப்பொன்,  ஒட்டியாணமும்,
தரளமுத்து   மாலைதவழ்   தண்முலைமேல்   பட்டங்கியும்,
                  தண்மையாய்க்   கொண்டவளே!

நிறநீலப்  புடவையும்,  நெற்றிப்   பொட்டும்,
              நிலங்காக்கும்   நன்மொழியும்,
அறச்செவி   அணித்தோடும்,இரக்கவெழில்   பார்வையும்,
              அழகழகாய்த்   திகழ்பவளே!

வரமருள்   வண்டார்   குழலியே! கல்யாணி!
               பொன்னூசல்    ஆடியருளே.
கண்ணழல்,குளிர்சடைக் கைலாயன்   கண்மணி!
               பொன்னூசல்    ஆடியருளே.

                                    பொருள்

     குளிர்ச்சியும்,அழகும் நிறைந்த அரவிந்த மலர்ப் பாத த்தில்விளங்கும் மணியொலிக் கொலுசும்,
அதனைத் தொட்டபடி அணிந்த சிலம்பும், கால்விரலில் மங்கள மெட்டியும்,கனுக்காலில் தண்டையும் அணிந்துவிளங்கும் அழகு மகளே!
    சிவன்கையில்உள்ள உடுக்கை போல் சிறுத்த இடையில் அழகுற விளங்கும்,ஒட்டியாணமும்,
நீண்ட வைர,முத்து மாலைகள் தவழும் மார்பகத்தின் மீது சார்த்திய,மெல்லியப் பட்டு மேலாடையும்,
அழகுறக் கொண்டவளே!
     நீலநிறப் பட்டுப்புடவை உடுத்திய,அழகு மேனியும்,நெற்றியில் குங்கும்ப் பொட்டும்,உலக ஆன்மாக்களைக் காத்து,அரவணைக்கும் அருளுடைப் பேச்சும்,பொற்றும் அடியவர் அறமொழிகளைக் கேட்கும் காதில் அணிந்த தோடும்,உலக உயிர்களின் மீது இரக்க உணர்வுடன்,
அருள் பொழியும் பார்வையும்,கொண்டு,பேரானந்த ஒளியாய்,அழகு உருவமாய் விளங்குபவளே!
        வாடி வதங்குவோர்க்கு வரமளித்துக் காக்கும்,அன்னையே!வண்டுகள் சூழ்மலரணி,குழல்
உடைய கல்யாணி!பொன்னூஞ்சல் அமர்ந்து,ஆடி மகிழ்ந்து அருள்வாய்.
       நெருப்புக்கண் மூன்றும்,கங்கையணி சடையும் கொண்ட கைலாசநாதக்கடவுள் கண்மணியாம்
கல்யாணி! பொன்னூஞ்சலில் அமர்ந்து,ஆடி,மகிம்ந்து அருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக