வியாழன், 29 ஜூன், 2017

ஊசற்பருவம்....9

                         ஊசற்பருவம்......9

உருக்கிய    திருத்திய   பொருத்திய   நறும்பொன்
                    உருவான   நறும்பலகை,
வருத்தியே   வாணர்கள்   வடிவமை   வனப்புடை
                     வளக்கற்கள்   பொலிவூஞ்சல்.

சுருங்கிய   இடையொடி   நறுங்குடல்,பெருமுலை
                   தருமெழில்,   கருங்குயில்
தருங்குரல்   தமிழ்பொழி   தளிரிதழ்,    தயைகுரலர்
                   தாழ்ந்தசைக்கும்    தண்ணூஞ்சல்.

விருப்பொடு,   வருகென,    திருக்கரம்   அருட்கரம்
                       வணக்கமாய்   வலமிடம்
நிறுத்திட,    முனைந்தவர்   நிலத்தினில்    சரியவும்,
                      நிலைத்திடும்   நல்லூஞ்சல்.

அருந்தவ   மலைமகளே!அரன்மன   நிலைமகளே!
                  பொன்னூசல்    ஆடியருளே.
கண்ணழல்   குளிர்சடைக்   கன்னியான்   கல்யாணி!
                    பொன்னூசல்    ஆடியருளே.

                                 பொருள்

      உருக்கிய, பசும்பொன்னைத் திருத்தி, அழகுற இழைத்து,உருவாக்கிய பொன்னூஞ்சல்.
தொழில்திறனுடைய, பொற்கொல்லர்கள் பலநாள் பணியாற்றி,நவரத்தினக் கற்கள பதித்து
அழகுடன் விளங்கச்செய்த ஊஞ்சல்.
     ஒடுங்கிய இடையும்,நன்கு அமைந்த உடலும்,பெருத்த மார்பகமும்,கொண்டு,எழிலுடன்
விளங்கி,குயிலன்ன இனியகுரலில் தமிழ் மொழி பேசும் தளிரிதழ் வாயும் கொண்ட தோழிப்
பெண்கள்,மென்மையான குரலால் பாடியபடி,ஆட்டுகின்ற ஊஞ்சல்.
      பாங்கியர்கள் மகிழ்வோடு,வரவேற்று,அருள்பொழியும் திருக்கரம் தொட்டுப் பணிவோடு
இந்தப் பக்கம் அமருங்கள்!இதோ இங்கு அமர்க! என வேண்டியபடி,இங்குமங்கும் அலைய,
ஊஞ்சல் முனை தட்டி,அவர்களைக்கீழே விழவைக்கும் ஊஞ்சல்.
      நெறி தவறா மாத்தவச் செல்வி!சிவனின் மனத்து நிலையாய் இடம் உற்றவளே!இப்
பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடி அருள் புரிவாய்.
       நெருப்புமிழ் கண்ணும்,குளிர்ச்சி நல்கும் சடையும் கொண்ட கன்னியாகுடிக் கைலாச
நாதன் மனையாளாம் கல்யாணி! இப்பொன்னூஞ்சலில். அமர்ந்து ஆடி அருள். புரிவாய,்

 



                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக