ஞாயிறு, 18 ஜூன், 2017

ஊசற்பருவம்........1

.                             ஊசற்பருவம்







                           ஊசற்பருவம்............1


தனியொலிக்  கிண்கிணித்   தளிரிளம்   தவழ்நடை
                       தரும்வரக்    கருணையும்,
கனியிதழ்க்    கலைமொழி,    களைதுயர்ப்   பணிதொடு
                      கணக்கிலா,   குணவருளும்,

புனிதரின்     புகலிடப்    புதுமனப்   புன்னகை
                      புகன்றிடும்   பதிப்பணிவும்,
வனிதையர்    வலம்வரும்   வளநிதி   நிலைநிதி
                       வகையுடைத்   தகைமையும்,

முனிவரும்,   முகிலவன்,முளரியோன்,  முதுசுர ர்,
                     முதலெனும்   முதுமையும்,
இனிமையும்,   இரக்கமும்,  இளகிய,  இதமருள்
                      இழிபுனல்   இளமையும்,

நனியென, அணியெனக் கொண்ட,  மணிச்சுடரே!
                   நல்லூசல்    ஆடியருள்.
வெண்மைக்   கயிலையன்    பெண்மைப்  பெருவிருந்தே!
                   பொன்னூசல்     ஆடியருள்.

                             பொருள்

  மென்மையான மங்கள ஒலியை எழுப்பும் சதங்கை அணிந்த  இளம் பாதங்களை மெல்ல எடுத்து
வைத்து அழகு நடை நடந்து,அடியவருக்கு அன்புடன் அளிக்கும் வரக்கருணை கொண்ட கால்களும்,வணங்கிப் போற்றுவோரின்,துயரைக்களைந்து,கணக்கற்ற நல்வரங்களை. அளிக்கும்
கலையாய் மொழி பேசும்,கனிபோன்ற இதழ்களும்,
    சிவபெருமான் விரும்பிக் குடியமரும்,நன்னெஞ்சத்தில் தோன்றும்,கணவர் பணியும்எண்ண
அடிப்படையில் மலரும் புன்னகையும்,இலக்குமி,கலைவாணி,ஆகிய இருவரும் வணங்கி வலம் வரும்,
சங்க,பதும்நிதித் தகைமைகொண்ட சிறப்பும்,
     முனிவர்,திருமால்,பிரமன்,இந்திரன் முதலிய தேவர்கள்்முதல்வியே! ,எனப்போற்றும்,மவர்க்கும்
முதலான தன்மையும்,இனிமை,இரக்கம்,இளகும் மனத்தால் நல்லன வழங்கும்,அருவி போன்ற
குளிரிளமைத் தோற்றமும்,
     அழகாய்,அணியாய்க் கொண்ட மணியொளிச்சுடரே! கல்யாணி! பொன்னூஞ்சலில் அமர்ந்து
ஆடி மகிழ்வாய்.
    வெண்ணிறக் கயிலை நாதன் மனையாளாய் அமர்ந்து விளங்கும் கல்யாணி! பொன்னூஞ்சலில்
அமர்ந்து ஆடி மகிழ்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக