திங்கள், 19 ஜூன், 2017

ஊசற்பருவம்....2

                            ஊசற்பருவம்........2

பறவைச்   சிறகொலி,  பல்லிய    மெல்லொலி,
                 பாணர்தம்   பாட்டொலி,
கறவை    மணியொலி,  கருங்குயில்   குரலொலி,
                 கலையூசல்   அலையொலியாம்.

அறவழி   அந்தணர்   அருமறை   சுரவொலி,
                 அசைந்தூசல்   ஆடுமொலி.
நறவினி   திருமுறை   நலப்பண்   முறையொலி
                 நலுங்காடும்   ஊசலொலி.

குறமகளிர்   குறையில்லாக்   குறம்பாடித்   திறம்பாடி,
                     குதித்தாடும்    குரவையில்,
பிறவியறு    பெம்மானின்    உறவுடையாள்    பெருமையைப்
                     பாடியாட்டும்    பொன்னூசல்.

சிறப்புற்று   ஆடுகவே!  சீரூர்ச்   செல்வமே!
                    சிரிப்புடன்   ஆடுகவே.
வெண்மைக்   கயிலையன்   பெண்மைப்    பெருவிருந்தே!
                    பொன்னூசல்     ஆடியருளே.

                           பொருள்
    பறவையின் சிறகு பறக்கத் துவங்கும் பொழுது எழும் ஒலிபோலவும்,பல்வேறு இசைக்கருவுகளின்
இசையொலிபோலவும்,மெய்மறந்து பாடும் பாணர்களின் பாட்டொலி போலவும்,ஆநிரைகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலி போலவும்,இனிமை மிகுந்த குயிலின் குரலொலி போலவும்,ஒலியெழுப்பியபடி ஆடுகின்ற பொன்னூஞ்சல்.
     அந்தணர் ஓதும் வேதஸ்வரங்கள் போலவும்,பண்ணோடு பாடப்படும் திருமுறைப் பாடல் பண்ணிசை போலவும் ஒலியெழுப்பியபடி அசைந்தாடும் பொன்னூஞ்சல்.
      குறவஞ்சிப் பெண்கள்,குறம் என்னும் துறைப் பாடலைக் குதித்தாடியபடிப் பாடும்,சிவபெருமான்,உமையம்மமை பெருமை போற்றும் பாடலிசை போல,இசையெழுப்பி
அசைந்தாடும் பொன்னூஞ்சல்.
       அம்மையே! பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடுக.சிறப்புமிக்க,கன்னியாகுடிச் செல்வ நாயகி!
பொன்னூஞ்சல் மகிழ்ந்து ஆடுக.
   வெண்பனிக் கயிலைநாதன் உளத்தமர் கல்யாணி அம்மையே! பொன்னூஞ்சலில் அமர்ந்து
மகிழ்வுடன் ஆடுகவே.
                                                      விளக்கம்
சுரம்.....ஸ்வரம் என்னும் வடசொல். தற்சமம்

                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக