செவ்வாய், 27 ஜூன், 2017

ஊசற்பருவம்.....7

                            ஊசற்பருவம்.......7

கன்னூஞ்சல்    ஆடினாய்,  கனகசபை   கரம்தொட்டுக்
                            கடிமணம்    கொண்டகாலை.
விண்ணூஞ்சல்    வியனரக்கர்    விரிமூன்றும்    விழுந்தழியச்
                             சிரித்தவன்     செங்கால்கள்

பண்ணூடே,    பசும்பால்   பழத்தோடு    மென்தொட்டுப்
                         பவளவிரலால்   அலம்பியே,
பொன்னூஞ்சல்   ஆட்டிடும்    பெண்களின்   நலுங்கோடு,
                          பொன்னூஞ்சல்    ஆடினாயே!

நன்னூஞ்சல்   நவரத்தின    நலக்கால்   தொட்டாட்டி,
                        நவநிதியாள்     ஒருபுறம்மும்,
கன்னல்மோழிக்    கவிபாடிக்   கலைமகள்   மறுபுறமும்
                        கழல்போற்ற    ஆடினாயே.

மண்ணூசல்,   விண்ணூசல்,  விதிகொண்டான்   கதிக்கழலே!
                        மணியூசல்    ஆடுகவே.
கண்ணழலும்,   குளிர்சடையும்,   கொண்டநாதன்   பெண்ணரசி!
                         மணியூசல்    ஆடுகவே.
 
                                  பொருள்

      கனகசபைச் சிவனை மணம் செய்துகொண்டகாலை,அவன்பாதங்களைத் தொட்டு,அருச்சித்து,அவனோடு சேர்ந்தமர்ந்து கன்னூஞ்சல் ஆடினாயே!
வானத்து ஊஞ்சலாய்த் திகழ்ந்து,மக்களைத்துன்புறுத்திய,மூன்று கோட்டை வடிவம் கொண்ட
அரக்கர்களைச் சிரிப்பினாலேயே அழித்தவன்,உனது மணாளனாக வீற்றிருந்த பொழுது,
உன்தாய் மேனையும்,பிற பெண்களும்,இறைவன் பாதகமலங்களைப் பாலால் அலம்பிப்பட்டுத்
துணியால் துடைத்து,நறுமணப் பொருட்கள் சார்த்தி,நலுங்கு பாடி,ஊஞ்சலை ஆட்ட,மகிழ்ந்து
நீயும் பொன்னூஞ்சல் ஆடினாய்.
       நவரத்தினங்கள் பதித்த,நல்ல ஊஞ்சலின்,தொங்கு சங்கிலியைப் பிடித்து,நவநிதித் தலைவி இலக்குமி ஒருபுறமும்,கரும்புபோல் இனிய மொழிப் பாடல்களைப் பாடியபடி,மறுபுறம் கலைமகள்
மறுபுறமும் ஊஞ்சலை ஆட்டியபடிப் போற்றிட நீ ஆடினாய்.
       மண்ணுலகையும்,விண்ணுலகையும் ஐந்தொழில் கொண்டு காத்துவரும் சிவனின் மனத்தகம்
உறைபவளே!மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடிடுவாய்.
      நெருப்புமிழ் கண்ணும்,கங்கைபொங்கும் சடையும் கொண்ட கைலாசநாதன் பெண்ணரசி!
கல்யாணி!மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடிடுவாய்.


                       
                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக