சனி, 24 ஜூன், 2017

ஊசற்பருவம்.......6

                               ஊசற்பருவம்.......6

அகமொளிர்   ஆகம   அருஞ்சைவ   நெறிமுறை
                      அருளிய   குருவானாய்;
புறம்வளர்     புலைகுண   புண்ணியப்   பகைவர்கள்
                      அழிந்திட   உருவெடுத்தாய்;

அகத்தினில்    குறைதவிர்   நிறைமன   அருந்தவர்
                         அடைந்திடு   கதியானாய்;
புறத்தினில்     புனைஉரு   தரித்தவர்    புரிந்திடும்
                        பொய்மைக்கு    விதியானாய்;

அகமெலாம்    அரன்புகழ்,   அறநெறி,   அருள்வரம்,
                        அகன்றிடா    அனையானாய்;
புறமெலாம்     புகலடி    யவர்துணை   புனையெனப்
                        புதுகுணப்    பணிகொண்டாய்.

அகம்புறம்     அணியுயர்    அருஞ்சிவன்   அகிலமே!
                      ஆடுகவே    பொன்னூசல்.
வெண்மைக்   கயிலையன்    பெண்மைப்   பெருவிருந்தே!
                        பொன்னூசல்     ஆடுகவே.

                       பொருள்

      அகத்தே கொண்ட ஞானக்கடலால் ஆகமங்கள்,சைவமறைகள்,திருமுறைகள் ஆகியவற்றை
தேவர்களுக்கும்,முனிவர்களுக்கும் உபதேசித்து,அருளும் குருவாய் விளங்குபவளே!(தட்சிணா
மூர்த்தி ரூபிணி" எனப்போற்றும் லலிதா சஹஸ்ரநாம்ம்)
வெளியுலகில்,தோன்றித் தகாதன புரிந்து,தீயவழியை மேற்கொள்ளும் அரக்கர்களைத்்தீயவர்களை
அழித்து,உலகைக் காத்திட வீர மாகாளியாய்,துர்க்கையாய்த் தோன்றியவளே!
      அகத்தில் குறை தவிர்த்து,நிறைமனத்துடன் வாழும் முனிவர்களுக்கும், நல்லவர்களுக்கும்
கதியாகிக் காலடி காட்டி ஆட்கொள்பவளே!
புறத்தே வேடதாரியாகிப் பொய்யும்,புரட்டும் ஆற்றுபவர்களுக்கு,விதிப்படித் தண்டனை
அளிப்பவளே!
      மனமெல்லாம் சிவன்புகழும்,அறவழிமுறை நெறியும்,அடியவர்க்குஅருள் வரம்அருளும்
கருணையும்,கொண்டு விளங்கும் அன்னையாய் விளங்குபவளே!
தன்னை வணங்கும் அடியவர்க்குப் புகலிடமாகி,துன்ப ஆற்றைக் கடக்கவைக்கும் படகாகிக்
காக்கும் புதுகுணத்தைப் புறத்தே கொண்டவளே!
     அகத்திலும்,புறத்திலும்,அணியாக அணிந்த சிவபெருமானின் உலகமாய் விளங்குபவளே!
மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடி மகிழ்வாய்.
வெண்பனிசூழ் கயிலைமலைக்கடவுளின் மனையாளாம் அழகுக் கல்யாணி!மகிழ்வோடு
பொன்னூஞ்சல் ஆடி மகிழ்க.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக