வெள்ளி, 23 ஜூன், 2017

ஊசற்பருவம்....5

                            ஊசற்பருவம்......5

உடலெலாம்    நடமிடும்   அடர்குளிர்  வெண்பனி,
                         உருவமாய்,உளமெலாம்
விடத்தடைக்    கழுத்தவன்    சடைமுடித்   தவழ்நதி
                         விதிமுதல்   மலைத்துணையே!

இடரறு    இனிதரு    மடைவயல்    படைப்பயிர்
                 இடையிடைக்   கயல்பயில்
முடக்கிளை   முதுநாரை    முழுங்குணா    முழிபிதுங்க,
                  மருதநிலக்    கலைத்துணையே!

முடைமண    முதிர்மீன்    மணலதில்    பரப்பியே,
                      முடிச்சுடை   வலைவிரி
கடைச்சியர்   கனங்குழை   வெளுத்திடக்   கடல்காண்
                        கடல்நில,   அலைத்துணையே!

அடைமழை,   கடுங்குளிர்,   சுடுவெயில்,   அபயமே!
                       ஆடுக    பொன்னூசல்.
வெண்மைக்    கயிலையன்    பெண்மைப்     பெருவிருந்தே!
                       பொன்னூசல்     ஆடுகவே.

                                    பொருள்
உடல்முழுவதும் அடர்ந்த பனி சூழ்ந்த,உருவம் கொண்ட கயிலைமலை.அங்கு தடுக்கப்பட்ட
விடக் கழுத்தை உடையவன்,கங்கையைத் தலையிலே தாங்கியவன்,மூவர்க்கும் முதல்வனாகி,
விளங்கும் சிவபெருமானின் மனையாளான மலைமகளே!
       துயரைப்போக்கி,இனிமை நல்கும்,நீர்பாயும் மடைகள் கொண்ட வயல்களில் விளையும்
பயிர்கள்,பயிர்களின் இடையிடையே துள்ளும் மீன்கள்,வளைந்த மரக்கிளையில் அமர்ந்து,
பெரிய வாளை மீனை விழுங்க முற்பட்டுக் கண்பிதுங்கும் நாரை,இயற்கை சூழ்ந்த மருதநிலத்
தலைமகளே!
        நாற்றமடிக்கும் இறந்த மீன்களைக் கடற்கரை மணற்பரப்பிலே காயவைத்து,அதனைச்சுற்றிப்
பாதுகாப்பாகவும்,உலரவேண்டியும், உலர்த்திய வலைகளைப் பரப்பியும்,உப்புக் காற்றாலும்,வெயிலாலும்,வெளுத்த கூந்தலை வருடியபடிக் கடலுள் மீன்பிடிக்கச் சென்ற கணவன்
வருகை நோக்கிக் கடல்மேல் வைத்த கண்கொண்ட வலைச்சியர் சூழ் நெய்தல் நிலக் கடலலைத்
தலைவியே!
        பனிமழை,கடுங்குளிர்,சுடுவெயில் ஆகியவற்றிலிருந்து உயிர்களைக் காக்கும் அபயக் கரம்
கொண்ட கல்யாணி!மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடுவாய்.
     வெண்பனிசூழ் கயிலைநாதனின் உள்ளம் கவர்ந்த பெண்மைப் பேரரசி! மகிழ்வோடு
பொன்னூஞ்சல் ஆடி மகிழ்வாயாக.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக