ஞாயிறு, 14 மே, 2017

அம்மானைப்பருவம்...7

.                         அம்மானைப்பருவம்........7

அஞ்சுகக்  கொஞ்சல்   மஞ்ஞையின்   தஞ்சம்,
                   அஞ்செழுத்து   நெஞ்சம்,
கஞ்ச   மலர்க்கை    பஞ்ஞெனக்   கந்துகம்
                    கன்னிசூழ்    ஆடுகவே!

விஞ்சையர்    வீணை    விரிவாம்    வியனிசை,
                    விண்ணவப்   பண்ணிசை,
மஞ்ஞையர்   மலர்முக  மதிசூழ்    மகிழிசை,
                    மனமொடு    ஆடுகவே!

அஞ்சிடு     கோள்கள்:   அகன்றிடு   விண்மீன்:
                   அசைந்திடு    அகிலம்:
நஞ்சிவன்,  நாரணன்,  நான்முகன்   நடுங்கிட,
                   நலம்மனை    ஆடுகவே!

குஞ்சிதச்    சேவடி,    கும்பிடும்   குலக்கொழுந்தே!
                    அம்மானை   ஆடுகவே.
மண்ணினுள்   புண்ணியக்   கன்னியூர்க்    கற்பகமே!
                     அம்மானை    ஆடுகவே.
     
                             பொருள்
    கொஞ்சும் மொழி பேசும் கிள்ளை,அருகில் அணைந்து நிற்கும் மயில்,"நமசிவய  'என்னும்
ஐந்தெழுத்து நிறைந்த நெஞ்சம்,தாமரை மலர் போன்ற கையினுள்,மென்மை வாய்ந்த கழங்கு
எடுத்துத் தோழியர் சூழ ,அம்மானை ஆடுக அம்மையே.
     வானத்து வித்யாதரர்கள் இசைக்கும் வீணை இசை,விண்ணகத் தேவர்குழாம் இசைக்கும்
மெல்லிசை,சூழ்ந்து நிற்கும் அழகுத் தோழியர் இசைக்கும் இசை,கேட்டு,மகிழ்ந்த மனத்துடன்,
அம்மையே!அம்மானை ஆடுக.
     நீ எறிந்த பூப்பந்தால் வானத்துக் கோள்கள் அஞ்சின: விண்மீன்கள் அங்கும் இங்கும் அகன்றன ;
மூவேழ் உலகமும் சற்றே அசைந்தது :சிவனும்,திருமாலும்,பிரமனும் அஞ்சி நகர்ந்தனர் :அம்மையே!
ஆடுக அம்மானை.
     கழலணி நடராசக் கால் பணியும் குலத்தில் தோன்றிய குழந்தையே! அம்மானை ஆடுக.
நிலவுலகத்தின் புண்ணியப் பதியான கன்னியாகுடியின் கற்பகமே!அம்மானை ஆடுக.

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக