சனி, 27 மே, 2017

நீராடற்பருவம்.....4

                       நீராடற்பருவம்......4

மாணிக்கக்   காணிக்கை   மணிவாசகப்   பிணியறு
                     மலர்விரி   மலர்ப்பொழுது,
மான்கர   மழுவான்    கோசமங்கை   எம்பாவைத்
                     தேன்பாடல்    திளைத்தழுந்தி,

பூணணி    புதுக்கை    பூவெடுத்துப்   பூசித்ததும்,
                புனைபின்னல்    சிலந்தியும்,
காண்நனி    கஜக்காவல்,கங்கைவரு   கடுமதியம்
                கூபநீர     குளித்தெழுந்து,

வான்புகழ்   வாரணாசி    வளர்கங்கை   வரமருளும்,
                  வானவர்     வந்துநின்று,
தேனமர்    கொன்றையான்    தீப ஒளி    காட்டுகின்ற
                 திகழ்மாலை     புகுந்தெழுந்து,

நாணமுடன்  நடைபயில்   நற்பொன்னி  நதியிலும்,
                  நீராடி   மகிழ்ந்திடுக.
சோணாட்டுச்   செல்வச்    சிற்றூர்     செழுமையே!
                 நீராடி    மகிழ்ந்திடுக.

                            பொருள்
  மணிவாசகப் பெருந்தகை பிறப்பறுக்கும் திருவாசகத்தைக் காணிக்கையாக்கி,விடியற்காலை
எழுந்து இறைவன் புகழ்போற்றும்,பெண்கள் ஒன்றுகூடி,ஒருவர்,மற்றவரை எழுப்பி,நீராட
அழைக்கும் திருவெம்பாவையைஅளித்த,தாருக்கோசமங்கையிலே,அப்பாடலின தேன்சுவையில்
திளைத்து மகிழ்ந்து,திருக்குளத்தில் நீராடி,
     அணிஅணிந்த துதிக்கையால் அழகு மலர் பறித்துப் பக்துயுடன் இறைவனுக்குப் பூசனை
செய்யும் யானையும்,இறைவன்மேல் தூசு படாமல் காத்திட,அவர்தலை மேல்,வலைபின்னிக்
காக்கும் சிலந்தியும்,முக்தி பெற்ற திரு ஆனைக்காவல் கோயிலிலே,நடுப்பகல் இறை
அபிஷேகத்திற்காக்க் கிணற்றில பொங்கும் கங்கை நதிநீரில் நடுப்பகல் குளித்து,
   வானளாவிய புகழ் கொண்ட,காசியில்,வரமருள்கின்ற கங்கைக் கரையில்,விண்ணவர்கள்
பணிவோடு,சிவபெருமானைப் போற்றி,வழிபட,மாலை நேரத்தே தீப ஆரத்தி எடுப்பார்களே,
அந்த மாலைப் பொழுது,கங்கையாற்றுப் புண்ணிய நீரிலே,மூழ்கி,எழுந்து,
     நாணத்துடன் வளைந்து நெளிந்து ஓடும் காவிரி நீரிலும் நீராடி மகிழ்வாய் அம்மையே.
    செல்வ வளம் மிக்கச் சோழநாட்டின்,ஊரான கன்னியாகுடியில் வீற்றிருக்கும், அழகுக்
கல்யாணி அம்மையே! மகிழ்வுடன் நீராடி மகிம்க.
     
               



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக