வெள்ளி, 26 மே, 2017

நீராடற்பருவம்.......3

                           நீராடற்பருவம்.........3

கம்பை   கரைபுரள,  கருமுகில்    கசிந்திழிய,
               கையணைத்து மெய்பதறிக்
கருமணல்   சிவலிங்கம்    காத்தளி   காமாட்சி
               காஞ்சிக்குறி   குளிர்நீர:

செம்புயல்   சீற்றம்     செம்மைச்    சீரணை
                  செதுக்கும்    ஆளாகி,
நம்பிய     வந்திக்காய்     நல்லடி    பாண்டியன்
                நல்கிய    வைகைநீர்:

வெம்பிய   விரிமனம்   வெம்பாவ  விதிவலை
                 விதிக்கும்   வெந்துயர்,
கும்பிடும்,  குளித்திடும்,குணமாய்ப் போக்கிடும்,
                  குலக்கங்கை  நலநீர்:

மும்மை    முதிர்வாம்   முத்துப்   பழவாற்றில்,
                 முதுமகளே!   ஆடுக.
இம்மை,   மறுமைப்  புகலிடக்   கன்னியூர்
                 எழிலரசி! ஆடுகவே.

                        பொருள்

   கம்பையாற்றில்   கரைபுரண்டு   ஓடிவரும்   வெள்ளம்:வானத்தில்
மேகக்கூட்டம்   விடாது  பொழியும்  மழை:ஆற்றின்  நடுவே   மணல்  இலிங்கம்   அமைத்துச்   சிவா பூஜையில்  ஈடுபட்டிருந்த   காமாட்சியம்மை
செய்வதறியாது,கை ,கால்  பதறிட,வெள்ளத்தில்   அடித்துச்  செல்லாதவாறு
இரு   கரங்களாலும்   அணைத்தபடிக்   காத்து,இறைவனுக்கு,முலைக்குறியும்
வளைக்குறியும்  தழும்பாகத்  தந்த  காஞ்சி யாற்று நன்னீர்.
     பாய்ந்தோடிவரும்   வெள்ளநீரைத்   தடுத்து,அணைகட்டி  மதுரை    நகரைக்
  காக்கும்   பணியில்  வந்தியின்   ஆளாகப்  பங்கேற்றுப்  பாண்டிய மன்னனிடம்
பிரம்படி  பட்ட சோமசுந்தரரின்   வைகை  வளநீர் .
     துன்பம் ,கொண்டோர்,பாவநிழலில்  வருந்துவோர்,தங்களது  துயரங்களைப்
போக்கும்  கழுவாயாகக்  குளித்தும்,கும்பிட்டும்.குணமாய்ப்  போற்றியும்,
வழிபடும் குலமும் ,குணமும் வாய்ந்த   கங்கை  நீர்,
     மூன்றும்  சேர்ந்து விளங்கும்  பழவாற்றில்  அம்மை கல்யாணியே!
நீராடி  மகிழ்வாய்.
     இம்மை,மறுமைகளில்   நன்மை  பயக்கும்  கன்னியாகுடிப்    பேரரசியே!
ஆற்றில்   நீராடி  மகிழ்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக