புதன், 3 மே, 2017

அம்மானைப் பருவம் ....5

                     அம்மானைப்பருவம்......5

மதுவளர் இதழ்மணப் புதுமலர் மல்லிகை,
                மனநிறை முகிழ்முல்லை,
பதுமமும் பணியெனப் பவித்திரச் சரங்களின்
                பலநிற உருண்டையை,


முதுநகர் முனைச்சுடர் வயிரமும் முத்ததுவும்,
                முல்லைநில நீலமும்,
சதுர்விதக் குணம்பொழி நவமணி பொருந்திய
                 சயந்தரு உருண்டையை,

இதந்தரு, பதந்தரு,  முதலவன் நிதமளி
                 இகசுக எழில்பொழில்
கதங்கனல் கொதிபுனல் கதிசுழல் கலையுழல்
                  கவின்புவி உருண்டையை,

பதஞ்சலி   பணிந்திடு   பரமனின் பாகமே!
                   அம்மானை   ஆடுகவே.
மண்ணிணுள் புண்ணியக்  கன்னியின்   கற்பகமே!
                    அம்மானை    ஆடுகவே.

                   பொருள்
   தேன்சிந்தும் இதழ்களில் மணம் கொண்ட மல்லிகை,மனம் நிறைந்த மகிழ்வைச் சிரிப்பால்
வெளிப்படுத்தும் முல்லை,தாமரை ஆகிய மலர்களால் பவித்திரமாகக் கட்டப் பட்ட சரங்களால்
உருட்டப் பட்ட மலருருண்டை போன்ற கழங்கெடுத்து,
          தீட்டப்பட்ட ஒளியுடைய வைரம்,முத்து,முல்லை நிலத்தே தோன்றும் நீலமணி,அறம்பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கு குணங்களைத் தன்னகத்தே கொண்ட
நவமணிகள், ஆகியவற்றால்,அழகும்,அற்புதக்கலை நயமும் மிக்க வெற்றியும்,மகிழ்வும் தரும்,
நல்ஆபரணப் பந்துருண்டைக் கழங்கெடுத்து,
         ஏற்கத்தக்க வாழ்வும், வீடு பேறும்,வழங்கும் நிலைத்தும்,நிலையில்லாமலும்,
உயிர்களின் மனமகிழ்வுகளை,எழிலாகவும்,பொழிலாகவும் வழங்கும் சிவபெருமானின் அனலும்,
அதனால் கொதிக்கும் புனலும்,இவைகளோடு விரைவாய,ச் சுழலும்,உழலும் கலையழகும் கொண்ட,
உலக உருண்டையன்ன கழங்கெடுத்து,
    பதஞ்சலி முதலிய முனிவர்கள் பணிந்து போற்றும்,பரமசிவத்தின் பாகமான கல்யாணி!
அம்மானை ஆடுக.
    நிலவுலகின் புண்ணிய ஊரான கன்னியாகுடி வாழ் கற்பகமே! அம்மானை ஆடுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக