செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்.....9

                          அம்புலிப்பருவம்.......9

காலக்  கோலம்,  நாளை   சாலும்:
             காலமே   கலங்கும்:
சீலம்    சிலிர்க்கும்: சூலம்   விளிக்கும்:
             சோகம்   சுகிக்கும்.

ஆலம்    காலம்    மூலம்    ஆளும்.
              ஆதுரம்   அமுதம்.
நீலம்    தூலம்:மேலணிக்  கோலம்.
              நீள்துயர்   நீங்கும்.

ஓலம்   ஞாலம்   மாலம்   மாறும்.
            உலகம்    உயர்த்தும்.
ஏலக்    குழலி   தாளை   நிலையாய்,
            ஏத்திடின்   எண்ணுக.

பாலை,வாலை   சீலை   தம்மோடு,
            அம்புலி! ஆடவாவே.
கன்னியூர்ப்   பெண்ணரசி,கல்யாணி தம்மோடு,
             அம்புலி! ஆடவாவே.

                       பொருள்

  நிலவே !வளம்மிகுந்த கால கட்டத்தில்,நீ அழகிழந்தும்,கலை குறைந்தும்,வளர்ந்தும் எனப்பல்வேறு
கோலங்களைப் பெற்றுழன்ற உன் துயர் எல்லாம் நாளையே மாறிவிடும்.கலங்கும் காலம் மறையும்;
இழந்த பண்புகள் மீண்டும் பலன் நல்கும்:சூலச் சிவனார் உன்னை அழைப்பர்:உனது துன்பம் எல்லாம் இன்பமாய் மாறும்.
     பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை,முழுமுதற் கடவுளாம் சிவன் உண்டதால் உலகம் பிழைத்தது,ஆயினும் அங்கு தோன்றிய மயக்கத்தை உனது அமுதகிரணமே மாற்றியது.நீலகண்டன்
மகிழ்ந்து உன்னைத்தலையில் அணிந்து கொண்டான்.அதனால் உனது பல்வேறு துன்பங்கள்
நீங்கின.
     உனது துன்ப ஓலங்கள்,உலகில் உனக்கு ஏற்பட்ட அவப்பெயர்,மதிமயக்கம் ஆகியன அகன்று,
உலகம் உன்னைப் போற்றிடவேண்டுமெனின்,கன்னியாகுடிவாழ் கல்யாணி அம்மையின் தாளைப்
பணிந்து போற்றலே" என்பதை மனதில் கொள்.
    மழலையாயும்,அழகுடையவளாயும்,நற்பண்புகளின் உறைவிடமாயும் விளங்கும் கல்யாணி அம்மையுடன் நிலவே! விளையாட விரைந்தோடி வருவாய்.
   கன்னியாகுடிப் பெண்ணரசி,கல்யாணி அம்மையோடு,நிலவே! விளையாட விரைந்தோடி
வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக