ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்......8

                                   அம்புலிப்பருவம்......8

மணிமகுட  அணியாக   நனிவானில்   இனிநீயும்
                    மணிப்புகழை   அடைவாயோ?
பணியிரண்டு   சனியாக ,   முனிசாபம் ,   தக்கசாபம்,
                    பிணியான    பின்னரும்தான்?

அணிந்தானே    மணிகண்டன்:   நினைந்தாயோ? வணங்கித்தான்
                           அனையவளைப்   பணிந்தாயோ?
அணிகுழலை    புனைநிலவாய்க்   கனிந்தருளால்    கணியிருள்நாள்
                           பனிச்சுடரதை    மனம்மறந்தாய்!

துணிதுன்பம்     தணிநிலைதான்   கனியவேண்டின்   அணிகிடுவாய்:
                          துணைகழலைப்    பணிந்திடுவாய்.
இனியிவளே     இனியயிறை,   எனும்மனத்தால்    நனியாடல்
                          இசைந்திடவே,   அசைநிலவே!

தணிகையவன்   தனைப்பெற்ற,   தாயவள்    தன்னோடு
                           அம்புலி!ஆடவாவே.
கனிவுபொழி    கன்னியூர்க்     கல்யாணி    தம்மோடு
                           அம்புலி! ஆடவாவே.

                            பொருள்

    இரண்டு  அணிபோல்   உன்னைத்   தொட்டுத்  துன்புறுத்தும்  சனி போல்
முனிவரது,சாபமும்,தக்கனது  சாபமும்,உன்னைத்   தொடர்ந்துவர,உன்னால்  வானவீதியில்   வானமகுடமாய்   பவனி வரல்  இனி இயலுமோ?
      உன்னை தன்  தலையில்  அணிந்தானே  சிவபெருமான்,  அவனை,
அவன் துணையை   நினைந்து  உருகி வணங்கினாயோ? அபிராமி
பட்டருக்காக,அமாவாசை  நாளன்று  வானத்து   நிலவாய்த்    தன்  காதணியை
வீசி,ஒளி பரவச்   செய்த  அம்மையின்  அருள்   திறத்தை  நீ  நினைத்தாய்
இல்லை.
       உனது  துயர்கள்  மறையவேண்டின்,  அம்மையை  அணுகிப்   போற்றிப்
புகழ்வாய்.கழலைப்  பணி :கருணை  வேண்டி,அம்மையைச் சுற்றிச்சுற்றிவந்து
ஆடு:பாடு: விளையாடு.
      முருகனைப்  பெற்றெடுத்த   அன்னையவள் தம்மோடு  நிலவே
விளையாட  ஒடி வா.
   கனிவான  அருள் பொழியும்  கன்னியாகுடி   அம்மை  கல்யாணி
என்னும்   குழந்தையோடு   விளையாட  ஓடிவா  நிலவே.
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக