வெள்ளி, 14 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்.......7

                       அம்புலிப்பருவம்.......7

மன்றலில்    மலர்மணம்,    மதுவுணும்      மதுகர
                    மனத்தினில்    மகிழ்வளிப்பதால்,
தென்றலும்   தன்துணை    வேனிலும்,   தலைவனும்,
                    தளிர்குளிர்      திளைப்பதால்,

கொன்றை    அணிசடை    நன்றெனத்    தன்தலை
                      கொண்டுபுகழ்     கொடுத்ததால்,
தொன்றுதொட்ட வம்சமென    தொன்மை   மரபிணைத்
                       தொல்பழமைத்    தூய்மையால்,

குன்றும்         கலையும்,       மென்வளர்     கலையும்,
                      குன்றுவெண்மை    கொண்டிருப்பதால்,
நன்றுநீ         ஆடிட:         நலம்நீ.    ஆடிட,
                      நன்மகள்     நினைத்தனள்.

என்றுமே      இறைசிவம்    என்னுமூர்ச்     செல்வியுடன்,
                      அம்புலி!        ஆடவாவே.
கன்னியூர்ப்    பெண்ணரசி     கல்யாணி    தம்மோடு,
                       அம்புலி! ஆடவாவே.

                                பொருள்

     சோலைகளில் மணக்கும் மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கும்,வண்டுகளின் மனத்திலே
மகிழ்வளிக்கும் கிரணப். பொழிவால், தென்றல் காற்றும்,அதன் துணையான இளவேனிற்காலமும்,
இவைகளின் தலைவனாம் மன்மதனும்,இளமைத்தளிராய்,இனிய குளிராய் விளங்கும் நிலவுப் பொழிவில் திளைத்து மகிழ்வதால்,
     கொன்றை மலரணிந்த சடையை உடைய சிவபெருமான் நல்லவனுக்கு அபயம் கொடுப்போம்"
எனத் தன் தலையில் சூடிக்கொண்டு புகழ் அளித்ததால்,தொன்றுதொட்ட பரம்பரை" எனப் புகழ்
வாய்ந்த சந்திர வம்சம்,என்னும் தூய்மையால்,
      தேய்கலையும்,வளர்கலையும் கொண்ட போதிலும்,கைலை மலைபோல் வெண்சுடர்ப் பொழிவால்,நிலவே! நல்லவனாம் உன்னோடு,விளையாட,நலம்பெறும் வாய்ப்பை நீ பெற,
உன்னோடு விளையாட விரும்புகிறாள் கல்யாணி அம்மை.
      என்றும் எங்கள் இறைவன் சிவனே" என்ற சைவசமய நல்லூரின் தலைவி,கல்யாணி
அம்மையுடன் நிலவே!விளையாட விரைந்து வருவாய்.
       கன்னியாகுடியின் பிண்ணரசி கல்யாணி அம்மையுடன் விளையாட நிலவே! விரைந்து வருவாய்.
                 
                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக