செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்....5

                           அம்புலிப்பருவம்......5

கறையாம்    கடுநஞ்சுப்     புகயால்  தவித்த,
                     கணதேவர்    காத்ததால்,
கறைக்கண்டன்   சிரமதில்,    கொன்றையோ   டமர்ந்ததைக்
                      கணப்பொழுது,    கொள்மனம்.

நிறைகலை   இழந்து,நீ    நிலையிலா   வாழ்வை
                      நினைந்துருகி,   அழுதாய்.
நிறைகலை   வளர்ந்தும்,    குறைந்தும், நிலைத்திட்ட,
                      நிம்மதியை    மறந்தாயோ?

குறைவெலாம்    குலைந்தே,    குணமதிக்   குளிர்மனம்
                      கொடுத்தவன்மனையன்றோ!
அறைசாபம்    அகன்றிட,    அருள்புரி    அத்தனின்
                       அருள்பொதி    அகமன்றோ!

மறைத்,திரு   முறையூர்   உறைமகள்   தன்னோடு,
                        அம்புலி!ஆடவாவே.
கன்னியூர்ப்     பெண்ணரசி    கல்யாணி    தன்னோடு,
                         அம்புலி!ஆடவாவே.

                             பொருள்
  அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த  பொழுது தோன்றிய ஆலகால விடத்தைச் சிவபெருமான் விழுங்கிய பின்னரும்,விடக்காற்று,அங்குள்ளோரை மயக்கத்தில்
ஆழ்த்தியது.அந்த நேரத்தில்,உன் அமுத கிரணப் பொழிவால் எல்லோரையும் காத்த நிலவே!
உன்னைத் தன் தலையில் சூடிக்கொண்டார் சிவபெருமான்.அந்தப் பெருமை அடைந்ததை
எண்ணிப்பார்.
     தக்கன் சாபத்தால் கலையிழந்து தவித்த பொழுது,வளர்கலை,தேய்கலை என இருபிரிவாய்
அமைத்து, உன்னை வாழ வைத்தது யார்? கல்யாணி அம்மையின் கணவரல்லவா!
   உனது குறைகளைக் களைந்து,உனக்கு அருள் வழங்கிய இறைவனின் மனைவி அல்லவா
கல்யாணி அம்மை!
      உனது சாபங்களைப் போக்கிய,அருளாளனின் கருணை நெஞ்சமே கல்யாணி அம்மைதானே!
     ஆதலின்,நான்மறைகளும்,திருமுறைகளும் ஒலிக்கும் கன்னியாகுடிக் கல்யாணி அம்மையோடு,
நிலவே! விளையாட விரைந்து வருவாய்.
     கன்னியாகுடியின் பெண்ணரசி,கல்யாணி அம்மையோடு,நிலவே! விளையாட விரைந்து வருவாய்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக