ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்....4

                                  அம்புலிப்பருவம்்.....4

அமுதக்   கிரணம்:   குமுதக்   கணவன்:
                அலைகடல்     தவிப்பு:
அமுதம்    உரோகினி: அழுகை   மகளிர்:
                அவலம்   அழிசாபம்.

அமுதம்     நாவினில்: குமுதம்   குளிர்கண்:
                  அலைகடல்,   மலைபுகழ்:
அமுதம்      இறை கா:   அழுகை   மகிழ்வினில்:
                   அவலம்     அழியரசி.

அமுதமே!    ஆனந்த    வாரிதியே!  அலகிலா
                     ஆடலுடை    அற்புதமே!
அமுதப்      பொழிவின்    அகந்தை    விடுத்து,
                       ஆடவே     வந்திடுவேன்.

அமுத      மழலையே!   அன்னையின்    அடிபணி
                அம்புலி!     ஆடவாவே.
கன்னியூர்ப்    பெண்ணரசி    கல்யாணி    தன்னோடு
                 அம்புலி!      ஆடவாவே.
                 
                             பொருள்

அமுதம் பொழிகின்ற குளிரொளி, அல்லிமலரை மலர்விக்கும் காதலன், கடலோ காலம் காலமாய்
உன்னை அடையலைக் கரம்எழும்பி,எழும்புத் தவிக்கும் தவிப்பு,அமுத உரோகினியிடம் மட்டுமே
காதல்,ஏனைய இருபத்தாறு தக்கன் மகளிர்களின் புலம்பல் அழுகை,அதனால் சாபம்,கலைகள்
பொலிவிழந்த அவலம்.   இவையாவும் கொண்டவன் நீ நிலவே.
     அமுதமே அன்னைமொழி,அல்லிமலரன்ன குளிருடைக் கண்கள்,கடல்,மலை,நிலமெல்லாம்
நிறைந்த புகழ்,நஞ்சுண்ட நாதனைக் காத்த அமுதம் அன்னையே. அடியவரின் பக்தி மேம்பாட்டு
உணர்ச்சி வெளிப்பாட்டில் தோன்றும் மகிழ்ச்சி அழுகை,துன்பம் துடைக்கும் தூயகரம் கொண்ட
அரசி.இவை யாவும் கல்யாணி அம்மை புகழ்.
    அமுதம் போன்றவளே! மகிழ்வில் மகிழ்விக்கும் மகிழ்ச்சியே! அளவில்லாத் திருவிளையாடல்கள்
புரியும் இறைவனின் அற்புதத் துணையே! அமுதக் கிரணங்கள் கொண்டவன் என்ற அகந்தையை
விட்டுவிட்டேன்,பணிவோடு,தங்களோடு விளையாட வானில் சுழல்கிறேன்.என்று கூறி,
     அமுதம்போன்ற மழலை மொழி பேசும் மழலையே! என அடிபணிவாய்.அப்படி அடிபணியும்
நிலவே! கல்யாணி அம்மையுடன் விளையாட விரைந்து வருவாய்.
    கன்னியாகுடியின் தலைவியான கல்யாணி அம்மையுடன் நிலவே! விளையாட விரைந்து வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக