சனி, 29 ஏப்ரல், 2017

அம்மானைப்பருவம்....3

                          அம்மானைப்பருவம்....3

எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்ட
                 பண்வீணைப் பைங்கரத்தாள்,
எண்ணம் செயலெலாம் திண்ணம் நின்னடி,
                எனத்தொழும் அனப்பெடையே!

பொன்னும் பொருளும் மின்னும் மேனியாள்
                   பொலியும் பொற்கரத்தாள்,
நண்ணியே வணங்கி நாளும் போற்றிடும்
                    நற்றுணைக் கற்பகமே!

விண்ணவர் தொல்லிசை,மண்ணவர்ப் பண்ணிசை,

                    விரிமறை வியனிசை,
தண்ணளித் தமிழிசை,தத்துவ,அமிழிசைத்
                    தன்மையின் தலைமகளே!

பொன்னொளிர்ப் பொன்னியின் பூங்காற்று நன்மணமே!
                             ஆடிடுக அம்மானை.
மண்ணினுள் புண்ணியக் கன்னியூர்க் கோமளமே!
                              ஆடிடுக அம்மானை.

                                 பொருள்
    எண்ணும்எழுத்துமாகிய கல்வியின் தலைவி,பண்ணிசைக்கும் வீணையைக் கையில் ஏந்திய
கலைவாணி,தனது செயல்,புகழ் எல்லாம் உன் அருள:உன்னடி போற்றலே என்பணி எனப்
போற்றும்உயர்நிலை கொண்ட அழகு அன்னமாம் கல்யாணி அம்மையே!
      பொன்னும்,பொருளும் மின்னுகின்ற மேனியும்,பொற்கரமும்,கொண்ட இலக்குமி, உன்னை
அடைந்து,உன்பாதம் வணங்கிப் போற்றும் புனிதம் பெற்ற கற்பகக் கல்யாணி அம்மையே!
      வான விஞ்சையர் இசைக்கும் இசை,நிலவுலகத்தவர் பாடும் பாடல்,நான்மறைகள் ஓதும்
மனமயக்க இசை,கருணைக் குளிர்ச்சி பொங்கும் தமிழ்ப்பண்ணிசை,தத்துவமான கருத்துக்களின்
அமுதம் போன்ற இசை,ஆகிய இசைத்தன்மையில் ஐக்கியம் ஆகும் கல்யாணி அம்மையே!
     பொன்னிற ஒளி மின்னும்,காவிரியின் மென்னலை மேற்பட்டு வீசும் பூமணம் கொண்ட கல்யாணி
அம்மையே! உனது பொற்கரங்களால் அம்மானை ஆடுக.
      நிலவுலகின் புண்ணிய நன்னகர்க் கன்னியாகுடியின் அழகு கல்யாணி அம்மையே! உனது
பொற்கரங்களால் அம்மானை ஆடுக.
   
                 
                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக