புதன், 5 ஏப்ரல், 2017

அம்புலிப்பருவம்....1

                                               அம்புலிப்பருவம்
 பாட்டுடைத் தலைவியைக் குழந்தையாக்கி,அத்தலைவியோடு விளையாட வருமாறு வானத்து
வெண்ணிலவை அழைத்தல்.இது.                                திங்களில் அமையும் நிகழ்ச்சி ஆகும்.

                                            அம்புலிப்பருவம்............1

தண்மையும்  மென்மையும்,பெண்மையும்    உன்குணம்.
                      தளிர்மை    உன்மேனி.
தண்மையை    உளத்தில்,    மென்மையை    அருள்வதில்,
                      தளிர்க்கரப்    பெண்மையிவள்.

வெண்மையும்    வளர்கலை    தேய்கலை    வாழ்வும்,
                       வான்வலமும்    கொண்டவன்நீ.
வெண்ணீற்றுப்    பாகமும்,     விரிவான்    கலையுணர்
                       உலகமாத்    தலைவியிவள்.

விண்ணவன்     வெய்யிலோன்    கண்சுடர்ப்   பிம்பமாய்
                        விளங்கும்      நல்லொளிநீ.
விண்ணொடு     மண்ணும்,   விரிபல   வியனுலகும்
                       வாழ்வதும்    இவளருளே.

எண்ணமதில்    திண்ணமுற்று   வண்ணமகள்   தன்னோடே
                         அம்புலி!  ஆடவாவே.
கன்னியூர்ப்    பெண்ணரசி   கல்யாணி    தன்னோடு
                         அம்புலி! ஆடவாவே.

                                  பொருள்
 குளிர்ச்சியும்,அழகுகலந்த இனிமைத் தன்மையும்,பெண்போன்ற ஈர்க்கும் மேனியழகும்,கொண்ட
இளமையான மேனியும் கொண்டவன் நீ.
 உள்ளம் முழுவதும்நிறைந்த கருணையும்,இரக்கத்துடன் அருள் கொடை வழங்குவதில்
மென்மையும்,அடியவர்களைக் காக்கும் தளிர்க் கரமும் கொண்டவள் கல்யாணி அம்மை.
   வெண்மையான வண்ணமும்,பதினைந்துநாள் தேய்ந்து,குறைந்தும்,பதினைந்து நாள்
வளர்ந்தும்,மாறி மாறிஅமையும் கலைகள் கொண்ட வாழ்வுடைய நீ வானை வலம் வருகிறாய்.
    வெண்ணீறு அணிந்த சிவனின் ஒரு பாகத்தைப்பெற்றவளாயும்,விரிந்த வானைப்போன்ற
கலைஞானம் நிரம்பியவளாகவும்,மூவேழ் உலகத்தலைவியாகி,அவைகள் சுற்றிவரும் சிறப்பைப்
பெற்றவள் கல்யாணி அம்மை.
     வானவீதியில் சுட்டெரிக்கும் ஆதவனின் ஒளிப் பிம்பமாய் அவனிடம் பெற்ற ஒளியால்
ஒளிர்பவன் நீ.
    விண்ணையும்,மண்ணையும்,பல்வேறு கோள்களையும் படைத்து,வாழவைக்கும் பேர்ருள்
கொண்டவள் கல்யாணி அம்மை.
   ஆதலின் அன்னையைப் போற்றும் மனத்துடன்,வண்ணமகளாய் விளங்கும் கல்யாணி
அம்மையோடு,நிலவே!விளையாட வருவாய்.
    கன்னியாகுடியின் பெண்ணரசி கல்யாணி அம்மையுடன் நிலவே!விளையாட விரைந்தோடி
வருவாய்.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக