சனி, 11 மார்ச், 2017

சப்பாணிப்பருவம்...9

                                 சப்பாணிப்பருவம்...9
அஞ்சுகிள்ளை கொஞ்சல் தவிர்த்துப் பஞ்சணை
            அறவெறுத்து மறந்தனை நிறையாடல்
அஞ்சுகுளிர் நீராடி,அஞ்செழுத்து அகமிருத்தி
            அஞ்சகவை ஆற்றினாய் அருந்தவம்.

அஞ்சியே அரக்கன் அடிபணிந்து அல்லலில்
           அமரருடன் அகிலமும் துன்புற,
அஞ்சாத மஹிஷனை அழித்திட்ட
           அழற்சூலம் ஆளுகைக்கும் அருந்தவம்.

கொஞ்சு குமரனின் பிஞ்சு கரமதில்
          கொடுத்த கூர்வேல்,கொடுமன
வஞ்சச் சூரனின் வரபலம் அழித்தே
          வையகம் காக்கவும் அருந்தவம்.

மஞ்ஞையுரு மகேசன் அடைந்திட்ட மாதவமே!
             சப்பாணி கொட்டி அருள்வாய்.
மஞ்ஞையர் இருவர் மகிழ்பணி மலைமகளே!
             சப்பாணி கொட்டி அருள்வாய்.

                               பொருள்
      கிளி,மயில் போன்ற பறவைகளுடன் கொஞ்சி மகிழ்வதைத் தவிர்த்து,பஞ்சணையில் படுத்து
உறங்குவதைத் தவிர்த்து,தோழியருடன் விளையாடுவதைத் தவிர்த்து,குளிரும் நீரில் அதிகாலையில்
குளித்து,நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை உச்சரித்த வண்ணம்,அஞ்சு வயதில் அருந்தவம் ஆற்றிய
மலைமகளே!
     அரக்கனுக்கு அஞ்சி,நடுங்கி,அவன் அடிபணிந்து,துன்புற்ற தேவர்கள்:அவரோடு உலக மக்களும்
அரக்கனால் துன்புற்று வாழ்ந்தனர்:வரபலம் மிக்க அந்த மஹிஷாசுரனை அழிக்க,தவமிருந்து,
தவத்தின் பயனாய்ப் பெற்ற சூலத்தால் அழித்த அம்மையே!
     கொடுமையான வஞ்சகக் குணம் கொண்ட,வரபலம் மிக்க,சூரபதுமனை அழித்து உலகைக்
காக்க,குழந்தை குமரனின் கையிலே நெடுநாள் தவமிருந்து பெற்ற வேலாயுதத்தை வழங்கி,
வெற்றி பெறச் செய்த தாயே!
     மயில் உரு எடுத்து,இறைவனைக் குறித்துத் தவம் ஆற்றியும்,பூசனை புரிந்தும் சிவனை அடைந்த
மாதவ மங்கையே!இருகரம் கொட்டி,ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
     மயில்போன்ற அலைமகளும்,கலைமகளும் மகிழ்வுடன் வணங்குகின்ற மலைமகள்!இருகரம்
கொட்டி,ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.

                                                         விளக்கம்
   கல்யாணி அம்மையின் தவப்பெருமை இப்பாடலில் சிறப்பிக்கப் படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக