புதன், 29 மார்ச், 2017

வருகைப்பருவம்....8

.                                வருகைப்பருவம்......8

கற்பனை    முற்றிலும்   வற்றாத    கற்பகம்,
                    கல்வியாம்   செல்வி,
கற்றோர்    மற்றோர்     கற்றுணர்    அற்புதக்
                    கலையரசி   வருகவே.

நற்றவ       முற்றியோர்    உற்றிடும்    நல்லவை,
                  நற்றுணை      நாயகி,
நற்றிணை   பற்றுவோர்   பொற்பதம்    முற்ற
                  நற்றிறன்      வருகவே.

பற்றிடும்    பற்றே    பற்றறு   பற்றாம்
                  பற்றிலார்    முற்றவம்,
பற்றிய      பாகத்தான்   கற்றிடு    கற்கண்டுப்
                 பசுமையகம்    வருகவே.

சுற்றம்    முற்றும்     போற்றும்    சுந்தரக்
                 கல்யாணி    வருகவே.
சுற்றம்     நற்றவம்:  எற்றும்    இன்னருள்
                கல்யாணி    வருகவே.

                         பொருள்

கற்பனை முழுவதும் நிலைத்திருக்கும் வற்றாத வரமருள் கற்பகம்,கற்றலின் தலைவி,
கற்றவர்களும்,கல்லாதவர்களும்,கல்வியாலும்,அனுபவத்தாலும் அறிந்து,உணர்ந்த நிகரில்லாக்
கலையரசி கல்யாணி அம்மை  வருக.வருக.
    தவமுற்றிய முனிவர்கள் அடையும் இடம் இறைவன் பேரவை. அவ்வவையை  அடையப்  பெரிதும்   துணை புரிபவளே !,நற்குடிப்
பிறந்தோரும்,விரும்புவோரும்,பற்றுகின்ற பொற்பாதம் காட்டி,நற்பதம் அருள்கின்ற அருளம்மை
வருக.வருக.
      ஊழ்வினைப் பயனால் பற்றற்று விளங்கும் சான்றோர் பற்றுகின்ற பற்றே( கல்யாணி அம்மையின்
திருப்பாதங்கள்) உலக ஆசைகளைக் களைந்து வீடு அளிக்கும் துணையாகும்.சிவபெருமானின்
ஒருபாகம் பற்றியதால்,இறைவனின் இனிமையாம் அருளுக்குப் பாத்திரமான பசுமை நெஞ்சம்
கொண்டவள் வருக.வருக.
       கன்னியாகுடி வாழ்வோரும்,அவர் சுற்றமும்போற்றி வணங்கும் அழகுக் கல்யாணி அம்மை
வருக வருகவே.
      அடியவரே உறவினர்: அவர் ஆற்றும் நற்செயலே நற்றவம்: என்றும் அடியவர்களுக்கு அருள்
வழங்குதலே இன்பம், என்னும் மனம் கொண்ட கல்யாணி அம்மை வருக,வருகவே.
                                                விளக்கம்
பொற்பதம்......உவமைத்தொகை
எற்றும் ............என்றும் என்பதன் வலித்தல் விகாரம்
               
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக