புதன், 29 மார்ச், 2017

வருகைப்பருவம்.....7

                                        வருகைப்பருவம்....7

கணிக்கும்   உலகின்   கலைவாழ்    நுணுக்கமே!
                    கவியின்    கருக்கரும்பே!
கணிக்க     இயலாக்     கருத்தின்     முதிர்ச்சியே!
                    கதியாம்     கழலடியே!

பிணிக்கும்    பிறவிப்    பயனைத்    தணிப்பவளே!
                     பிழையைப்     பொறுப்பவளே!
பிணியும்       நரையும்    பிணிக்காப்   புனிதமே!
                     பிணித்த    மனத்தவளே!

அணிக்கும்   அழகாய்    மணக்கும்   அழகே!
                     அசைக்கும்     இசைக்குயிலே!
அணியாய்     அன்பும்,    அருளும்     அணிந்தவளே!
                      அணியாய்     ஆபரணமே!

மணியாய்   மலராய்    மகிழூர்    மனமாம்
                   மலைமகளே! வந்தருள்க.
மணியொலி,    அணியொளி,    நிலவொளி   நித்திலமே!
                   கல்யாணி! வந்தருள்க.

                                பொருள்
   உலகில் வாழும் கலையைக் கணிக்கும் நுண்ணிய அறிவுத்திறன் வாய்ந்தவளே! கவிஞனின்
கவிதைக் கருவிற்கு வித்திடும் இனிமையார்ந்த கரும்பே! அறிவியல் வழியே கணிக்க இயலாத
ஆன்மஞானக் கருத்துக்களின் முதிர்வடைந்த முழுமையே! முடிவில் உலகோர் சரணாகதி
அடையும் பாதங்களை உடையவளே!
    பிறவி என்னும் பிணியைப் போக்கி,வீடு என்னும் பதத்தை அளிப்பவளே! அடியவர் அறியாமல்
புரியும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவளே! நோய்,முதுமை அணுகாத புனிதம் வாய்ந்தவளே!
அடியவரோடு ( பதி..பாசப் பிணைப்பு) பக்தியால் கட்டுண்டவளே!
     சூட்டிக் கொள்ளும் ஆபரணங்களுக்கும் அழகை அளிக்கும் அழகுடையவளே! குயிலன்ன குரல்
இனிமை கொண்டவளே! அன்பு,அருள் என்னும் ஆபரணங்களை அணிந்தவளே! பொன்னாபரணங்களை விரும்பி அணியாதவளே!
     மணியாகவும்,மலராகவும்,உன்னை விரும்பிப் போற்றி மகிழும்  கன்னியாகுடி மக்களின் மனத்தமர்
மலைமகளே! கல்யாணி! வருக.வருக.
      அருள் பேச்சில் மணிஒலியும்,அழகுமுத்து,ரத்தின அணிகளால் சுடரொளியும்,காதுத் தோடு நல்கும் நிலவொளியும்கொண்ட தூய்மைக் கல்யாணி அம்மையே! வருக! வருக! அருள் தருக.

                   
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக